தலக்காடு, கர்நாடகா: மணலில் புதையுண்ட கோவில்களின் நகரம்

தலக்காடு (கன்னடம்: ತಲಕಾಡ್), ஒரு வரலாற்று நகரம். இந்த நகரம் கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம், திருமகுடல்-நர்சிபூர் வட்டம், தலக்காடு போஸ்ட் ஆபிஸ் பின் கோடு 571122 இல் அமைந்துள்ளது. காவேரி நதியின் இடது கரையில் அமைந்திருக்கும் இந்த நகரத்தைக் காண்பது வரலாற்றில் ஆர்வம் மிக்கவர்களுக்கு ஒரு விருந்தெனலாம். கி.பி. 14 ஆம் நூற்றண்டில் இந்த நகரம் 30 க்கும் மேற்பட்ட கோவில்களைக் கொண்டு விளங்கியது. இந்த அழகிய நகரத்தின் பண்டைய கட்டமைப்பு மணலில் மூழ்கியது கொடுமையான நிகழ்வாகும். மைசூர் உடையார்களின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள் இந்த அழிவுக்கு வழி வகுத்தன என்று வரலாறு சொன்னாலும் புராணக்கதைகள் வேறு வேறு கதைகளைச் சொல்லி வருகின்றன. இந்தப் பதிவு இந்நகரிலுள்ள பஞ்சலிங்க ஆலயங்கள் பற்றியும், வரலாறு மற்றும் புராணக் கதைகள் பற்றியும் விவரிக்கிறது.

இதன் அமைவிடம் 12.22°N அட்சரேகை, 77.03°E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 700 மீ (2,300 அடி) ஆகும். இந்த நகரம் தாலுகா தலைநகர் திருமகுடல்-நர்சிபூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகரான மைசூருக்குக் கிழக்கே 50 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான பெங்களூருவிலிருந்து 124 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தலக்காட்டுப் பகுதியைச் சுற்றிக் காவிரி ஒரு பூமாலை போல ஓடுகிறது. நதியில் வெள்ளம் மிகும்போதேல்லாம் பெருமணல் அடித்துவரப்பட்டு இப்பகுதியை மண் மூடிவிட்டது.  எழுத்தாளர் தி.ஜானகிராமன் சிட்டியுடன் (பெ.கோ.சுந்தரராஜன்) இணைந்து எழுதிய “நடந்தாய் வாழி காவேரி” (காலச் சுவடு பதிப்பகம், 2007. 287 பக்கம்) என்ற நூலில் “மாபெரும் மணல் மேடுகள், அதில் ஒரே ஒரு கோவிலின் மேல்நுனி மட்டும் தெரிகிறது. மேலும் பல கோவில்கள் மணலில் மூழ்கிக் கிடக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது ஒரு தொன்மமாக மட்டுமே கூட இருக்கலாம்” என்று தலக்காடு பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

1911 ஆம் ஆண்டிலேயே  ஏறக்குறைய அனைத்துக் கோவில்களும் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டன. தலக்காட்டில் உள்ள கோவில்கள் தரை மட்டத்தில் இருந்து சுமார் முப்பதடி ஆழத்தில் அமைந்துள்ளதை இன்றும் காணலாம். தொல்லியல் துறையினர் மிகுந்த சிரமத்திற்கிடையில் இக்கோவில்களை மீட்டெடுத்து புனரமைத்துள்ளார்கள். எனினும் மழைக் காலங்களில் இக்கோவில்கள் மீண்டும் பாதி அளவு மணலில் மூழ்கி விடுவதுண்டு. மீண்டும் இவற்றைத் அகழ்ந்தெடுக்கிறார்கள்.

புராணக்கதை

இந்த நகரத்தின் பண்டைக்கால வரலாற்றைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் ஒரு புராணக்கதை கிராத மரபைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களின் பெயரை இந்த நகரின் பெயரோடு தொடர்பு படுத்துகிறது. தல மற்றும் காடா என்று பெயர்கொண்ட இரு வேட்டுவ சகோதரர்கள் ஒரு வனத்தில் வசித்து வந்தனர். அந்தப் பகுதியில் ஒரு குளம் இருந்துள்ளது. சில காட்டு யானைகள் இந்தக் குளத்திலிருந்து நீரைத் தன் தும்பிக்கையில் உறிஞ்சிப் பக்கத்திலுள்ள சால்பரீ மரத்தருகே சென்று நீர் சொரிந்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தன.  இதனை நோட்டம் விட்ட வேட்டுவ சகோதரர்கள், யானைகள் இல்லாத நேரம் பார்த்து இந்த சால்பரீ மரத்தை வெட்டிச் சாய்க்க எண்ணி வெட்டினர். மரத்தினுள் ஒரு சிவலிங்கம் இருந்ததையும் கண்டறிந்தனர். சற்று நேரத்திலேயே அங்கு வந்த யானைகள் தவமுனிவர்களாக மாறிவிட்டனர். வெட்டப்பட்டுக் கீழே கிடந்த மரம் நிமிர்ந்து பூமியில் திரும்பவும் பதிந்து கொண்டது. முனிவர்கள் மோட்சம் பெற்றனர். இந்த வனம் தலக்காடு என்று பெயர் பெற்றது. சமஸ்கிருதத்தில் தலவனம் (Dala-vana) என்று இதற்குப் பெயர். தன்னுடைய காயத்திற்குத் தானே மருந்து கூறிக் கொண்டதனால் இங்கு கண்ட சிவன் வைத்தியநாதேஸ்வரா என்று பெயர் பெற்றார். பின்னாளில் ஏற்பட்ட வைத்தியநாத சுவாமி கோவிலின் எதிரே இரண்டு கற்சிலைகள், இந்த தல-காடா சகோதரர்கள் நினைவாக, நிறுவப்பட்டன. பிற்காலத்தில் ஸ்ரீராமர், ஸ்ரீலங்கா செல்லும் வழியில், இங்கு தங்கிச் சென்றாராம்.

வரலாறு

கி.பி. 350 ஆம் ஆண்டிற்கு முன்பே சமுத்திரகுப்தர் தென்னிந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்ததனால் விளைந்த குழப்பத்தைக் கங்கர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கர்நாடக மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கிய மைசூர், ஹாசன் சாமராஜநகர், தும்கூர், கோலார், மாண்டியா மற்றும் பெங்களூரு போன்றவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இப்பகுதி கங்கவாடி என்று அழைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் கொங்குப் பகுதிகளையும் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் பகுதிகளையும் பின்பு இணைத்துக் கொண்டனர். கங்க மன்னர்களின் முந்தைய தலைநகரம் ஈரோட்டுக்கு அருகே இருக்கும் கஜல்ஹட்டி என்னும் ஊரில் அமைந்திருந்தது. மோயாறுக்கும் பவானிக்கும் நடுவே உள்ளது அன்று அவ்வூரின் பெயர் ஸ்கந்தபுரா.

கி.பி. 350 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கோலார் நகரைத் தலைநகராகக் கொண்டு சுமார் 20 ஆண்டுகள்வரை ஆண்டு வந்துள்ளனர். கடம்பர்கள் கொடுத்து வந்த தொல்லையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காகத் தலைநகர் கோலாரை வேறு பகுதிக்கு மாற்றுவது பற்றிப் பரிசிலிக்கப்பட்டது.  கி.பி. 390 ஆண்டுவாக்கில் மேலைக் கங்க மன்னர் ஹர்வர்மன் (கி.பி. 390 – 410) இப்பகுதியை ஒன்றிணைத்து தலக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தார்.

கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலைக் கங்கர்களிடமிருந்து தலக்காட்டைச் சோழர்கள் கைப்பற்றிக் கொண்டனர். தலக்காடு இராஜராஜபுரம் என்று பெயர் மாற்றப்பட்டது. சுமார் நூறு வருடங்களுக்குப் பிறகு தலக்காட்டை ஹோய்சாள மன்னன் விஷ்ணுவர்தனன் (கி.பி. 1108 – 1152) கைப்பற்றிக்கொண்டான். இவன் சோழர்களை மைசூரு பகுதியைவிட்டே துரத்தியடித்தான். இதன் பிறகு தலக்காடு ஏழு நகரங்களையும் ஐந்து மடங்களையும் உள்ளடக்கிய நகரமாக இருந்தது. ஆற்றுக்கு அந்தப்பக்கம் அமைந்திருந்த நகரம் மயிலங்கி அல்லது மலிங்கி என்றழைக்கப்பட்டது. இது ஜனநாதபுரம் என்றும் அறியப்பட்டது. இப்பகுதி கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை ஹோய்சாளர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பிறகு இப்பகுதியினை விஜயநகரப் பேரரசு வென்றது.

சாபம் பெற்ற கதை

வரலாற்றில் இந்த நகரம் பிரபலமானதிற்குப் பல காரணங்கள் உண்டு. இந்த நகரத்தில் ஒரு காலத்தில் 30 கோவில்கள் இருந்தனவாம். இவற்றில் பெரும்பாலானவை மணலில் புதையுண்டு போயின. வளர்ந்து வந்த இந்த நகரத்தை ஒரு சாபமே சுமார் 15 மீட்டர் உயரமுள்ள மணற் குன்றுகள் நிறைந்த நதிக்கரை மணலில் மூழ்கச் செய்ததே மிக முக்கிய காரணம் எனலாம்.

திருமல தேவ ராயாவின் (Tirumala Deva Raya) (கி.பி. 1565–1572) மகனும் விஜயநகரப் பேரரசைப் பெனுகொண்டாவிலிருந்து அரசாண்டவருமான ஸ்ரீரங்க தேவ ராயா என்ற முதலாம் ஸ்ரீரங்கா (கி.பி. 1572–1586) அரவிடு வம்சத்தைச் (Aravidu dynasty) சேர்ந்தவர் ஆவார். இம்மன்னரின் மனைவி இராணி அலமேலம்மா ஆவார்.  மைசூரின் ஆட்சியாளராகிய உடையார் வம்சத்தைச் சேர்ந்தோர் விஜயநகர அரசர்களுக்குக் கீழே சிற்றரசர்களாக இருந்தனர். முதுகில் உண்டான ராஜபிளவைக் கட்டியால் வந்து அவதிப்பட்டுவந்த மன்னர் ஸ்ரீரங்க தேவ ராயா, அரசாங்கப் பொறுப்புகளை தன்னுடைய மனைவியும் பட்டத்து இராணியுமான அலமேலம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு, தலக்காட்டிலுள்ள வைத்தீஸ்வரன் (சிவன்) கோவிலுக்குச் சென்றார்.

தன்னுடைய கணவரும் மன்னருமான ஸ்ரீரங்க தேவ ராயா பெரும் நோயுற்று உயிருக்குப் போராடி வருவதைக் கேள்வியுற்ற இராணி அலமேலம்மா, மைசூரின் ராஜா  உடையாரிடம் அரச பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, தலக்காட்டிற்குச் சென்றார்.  தீய எண்ணங் கொண்ட மைசூர் ராஜா அரசியின் நகைகளையும் விஜயநகர அரசையும் கைப்பற்றும் எண்ணத்துடன் அரசிக்கு எதிராக ஒரு படையை தலக்காட்டிற்கு அனுப்பினார். படையைக் கண்ட இராணி அலமேலம்மா தன் நகைகளைக் கைப்பற்றித் தன்னுடன் வைத்துக்கொண்டு காவிரி ஆற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இவ்வாறு ஆற்றில் குதிக்கும் முன்பு தலக்காடு நகரம் மணலில் மூழ்கி அழியட்டும் என்றும் மைசூர் அரசர்களுக்கு வாரிசில்லாமல் போகட்டும் சாபமிட்டபடியே குதித்தாராம். இந்த சாபம் இன்று வரை தொடர்ந்து வந்து இந்நகரை மூழ்கச் செய்துவருகிறது. மைசூரை ஆண்ட அரசவம்சத்திலிருந்து அன்று முதல் இன்று வரை 29 பேர் அரசாண்டுள்ளனர். இவர்களில் வெகு சிலருக்கே குழந்தைகள் இருந்துள்ளன. தற்போது உள்ள மன்னருக்கும் குழந்தை இல்லை என்று தெரிகிறது.

பஞ்சலிங்க தரிசனம் திருவிழா

இங்குள்ள வைத்தியேஷ்வரா கோவிலில் சிவன் பஞ்சலிங்க தரிசனம் கொடுத்தாராம். இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் வைத்தியநாதேஸ்வரனுக்கு விசாக நட்சத்திரமும், விருச்சக இராசியும், அமாவாசையும் சேர்ந்துவரும் நன்னாளில் தலக்காட்டில் பஞ்சலிங்க தரிசனம் விழா நடைபெறுகிறது. இந்த பஞ்சலிங்க தரிசனத்தைக் காண இலட்சக் கணக்கில் பக்தர்கள் குவிகிறார்கள். வைத்தியநாதேஸ்வரனுக்கு கோகர்ண சரோவரிலிருந்து ஐந்து கலசங்களில் நீர் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் நடைபெறுகிறது.

பஞ்சலிங்கங்கள்

சரி! பஞ்சலிங்கங்கள் எவை எவை? வைத்தியேஷ்வரா கோவில், வாசுகீஸ்வரா என்ற பாதாலீஸ்வரா கோவில், சைகதேஸ்வரா என்ற மருளீஷ்வரா கோவில் மற்றும் மல்லிகார்ஜுனா கோவில் ஆகிய ஐந்து கோவில்களும் பஞ்சலிங்கங்கள் என்று அழைக்கிறார்கள். இந்த ஐந்து லிங்கங்களும் சிவனின் ஐந்து முகங்களைக் குறிப்பிடுகின்றன. பாதாளேஷ்வரா சிவலிங்கம் பகலில் தன்னுடைய நிறத்தை மூன்று முறை மாற்றிக்கொள்கின்றது. கலையில் சிவந்த நிறத்திலும், மதியம் கருப்பு நிறத்திலும், மாலையில் வெள்ளை நிறத்திலும் காட்சி தருகிறது.

வைத்தியேஷ்வரா கோவில்

vaidyeshvara_temple_281000_ad29_at_talakad

Vaideshvara Temple, Talakadu. Wikimedia Commons

view_of_shrine_and_porch_with_ornate_pillars_in_vaidyeshwara_temple_at_talakad

Vaidyeshvara Temple, Elevation, Wikimedia Commons

வைத்தியேஷ்வரா கோவில் திராவிட கட்டடக்கலை மரபில் கட்டப்பட்டுள்ள கருங்கற்றளி.  இக்கோவிலுள்ள பெரும்பாலான கட்டுமானங்கள் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசின் கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டுள்ளது. சில ஹோய்சாள கலை அம்சங்களையும் இங்கு காண முடிகிறது. முன் மண்டபத்தின் கிழக்கு முகம் மிக அழகான சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மாபெரும் துவாரபாலகர்கள் முகப்பை அலங்கரிக்கிறார்கள். வலப்புறம் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்தவாறு விநாயகர் வித்தியாசமாகக் காட்சி தருகிறார். இந்த முன் மண்டபத்தைக் கட்டியது இராஜேந்திரசோழன் என்று தெரிகிறது. நடராஜர், துர்க்கை, பத்திரகாளி, காளிகாம்பாள் ஆகிய துணைத் தெய்வங்கள் இங்கு குடிக்கொண்டுள்ளனர். திராவிட விமானத்தின் கீழ் அமைந்த கருவறையில் இலிங்க வடிவில் வைத்திநாதேஸ்வரர் காட்சி தருகிறார். கருவறையின் முன்புறத்து கோஷ்டங்களில் இடப்புறம் முருகனும் வலப்புறம் கணபதியும் அருள்பாலிக்கிறார்கள். வேறொரு இடத்தில், புராணக்கதையில் இடம்பெற்ற, இரு வேட்டுவ சகோதரர்களும் சிலைவடிவில் காட்சி தருகிறார்கள்.

பாதாளீஸ்வரர் ஆலயத்தில் சிவன் வாசுகீஸ்வரர் என்ற பெயரில் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், வீரபத்திரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. பாதாளீஸ்வரர் கோவிலுக்கு மேற்கில் மருளீஸ்வரர் கோவில் உள்ளது. கருவறையில் பெரிய அளவில் சிவலிங்கம் காணப்படுகிறது. பிரம்மா தன் சாபம் நீங்குவதற்கு இந்த இலிங்ககத்தை நிறுவியதாக ஒரு புராணக்கதை சொல்லுகிறது. மருளீஸ்வரர் கோவிலில் இருந்து கிழக்கில் சென்றால் அர்க்கேஸ்வரர் கோவிலை அடையலாம். வைத்தேஷ்வரா கோவிலிலிருந்து அர்க்கேஸ்வரர் கோவில் சுமார் நான்கு கி.மீ. தொலைவில் தனித்து அமைந்துள்ளது. முடுக்குத்துறை குன்றின் அருகில் மல்லிகார்ஜுனா கோவில் அமைந்துள்ளது. மல்லிகார்ஜுனர் சிறிய இலிங்க வடிவில் காட்சி தருகிறார். இலிங்கத்தின் மீது காமதேனுவின் கால்தடம் பட்டதற்கான தடயத்தைக் காட்டுகிறார் குருக்கள். எதிரே பெரியே நந்திசிலை அமைந்துள்ளது. இங்கு தாயார் பிரமராம்பிகை, தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். பாதாளேஸ்வரர் கோவிலுக்கு அருகே நடக்கும் தூரத்தில் கீர்த்தி நாராயணர் கோவில் அமைந்துள்ளது. கருடபீடத்தில் ஒன்பது அடி உயரம் கொண்ட கீர்த்தி நாராயணர்  ஆஜாபகுவாகக் காட்சி தருகிறார். தாயார் மற்றும் நம்மாழ்வார் ஆகியோரும் காட்சி தருகிறார்கள். இராமானுஜர் கட்டிய ஐந்து நாராயணர் கோவில்களில் இந்தக் கோவிலும் ஒன்று. இந்தக் கோவில் 1911 ஆம் ஆண்டில்தான் ஆகழாய்வாரய்ச்சி மூலம்  அகழ்ந்தெடுக்கப்பட்டது.

talakadu_temple

Kirthinarayana Temple, Talakadu

keerthinarayana_temple2c_talakadu_-_panoramio

Kirtinarayana Temple, Talakadu, Wikimedia Commons

தலக்காடு செல்ல..

கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து உண்டு. டாக்சி மூலமாகவும் செல்லலாம். முதலில் மைசூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டி.நரசிபுரா (தாலுகா தலைமையிடம்) என்ற இடத்தை அடையலாம். டி.நரசிபுராவிலிருந்து ஹெம்மிகே வழியாக தலக்காட்டை அடையலாம். ஹெம்மிகேவிலிருந்து தலக்காடு 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மைசூரிலிருந்து  சோம்நாத்பூர் சென்றுவிட்டு இங்கு வர விரும்பினாலும் அதற்கு வழி உள்ளது.  டி.நரசிபுராவிலிருந்து சோம்நாத்பூர் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கிராமம் என்பதால் தங்குவதற்கு ஹோட்டல்கள் இல்லை. நாலு கி.மீ. தொலைவில் உள்ள முடுகுதோர் என்னுமிடத்தில் ரிசார்ட்டுகள் உள்ளன.

தலக்காட்டுக் கோவில்களில் புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு. இங்கு நுழைவுக்கட்டணம் இல்லை. வாகனங்களுக்கு டோல்கேட் வரி விதிக்கிறார்கள்.

இரயில் மூலம் செல்ல: தலக்காட்டிற்கு  அருகே 10 கி.மீ. சுற்றளவில் இரயில் நிலையம் இல்லை. மாண்டியா இரயில் நிலையம், எலியூர் (Yeliyur) இரயில் நிலையம் ஆகியவை அருகில் உள்ள இரயில் நிலையங்கள் ஆகும். மைசூர் ஜங்க்ஷன் இரயில் நிலையம் 48 கிமீ. தொலைவில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூரு 195 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

குறிப்புநூற்பட்டி

 1. தலக்காடு: மண்ணில் புதையுண்ட கோயில்களின் ஸ்தலம். https://tamil.nativeplanet.com/talakadu/#attractions 
 2. பாக்கியம் தரும் பஞ்சலிங்க தரிசனம். அமானுஷ்யம். http://news-amanushyam.blogspot.in/2013/01/blog-post_4851.html
 3. மாமங்கலையின் மலை-2 http://www.jeyamohan.in/94973#.WrPBSSycHIU

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், சுற்றுலா, தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to தலக்காடு, கர்நாடகா: மணலில் புதையுண்ட கோவில்களின் நகரம்

 1. பிங்குபாக்: தலக்காடு, கர்நாடகா: மணலில் புதையுண்ட கோவில்களின் நகரம் – TamilBlogs

 2. அடேங்கப்பா எவ்வளவு விடயங்கள் பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே

  Like

 3. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  தகவல்களும் படங்களும் அற்புதம் ஐயா

  Like

 4. கமலா ஹரிஹரன் சொல்கிறார்:

  வணக்கம் சகோதரரே

  தலக்காடு கோவிலைப் பற்றி ஸ்தல வரலாறு அருமையாய் விவரிதிருக்கிறீர்கள். பதிவு மிகவும் அருமையாக இருந்தது. படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாக, காட்சிகள் கண் முன்னே வியாபித்தது. கோவிலின் பெயர் காரணம், மற்ற தகவல்கள் பற்றி அறிந்து கொண்டேன். கோவிலுக்கு செல்லும் தகவல்கள் சொன்னதற்கும் நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  Like

 5. kaveripak சொல்கிறார்:

  Superbly written. You have taken great pains to explain the background and the narration is very good

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.