நான் உங்கள் கல்லீரல்: மிக உண்மையுள்ள ஊழியன், உங்களுக்குச் சேவை செய்ய எனக்கு உதவுங்கள்

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் கல்லீரல் பேசுகிறேன். உங்கள் வயிற்றுப் பகுதியின் வலது பக்கத்தைத் தொட்டுபாருங்கள். வலது விலா எலும்புக் கூடு இருப்பதைத் தொட்டுப் பார்தீர்களா? இந்த விலா எலும்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். உங்கள் வயிற்று அறைக்கு வலது மேல் பக்கத்திலும் நெஞ்சறையையும் வயிற்றறையும் பிரிக்கும் இடைத்திரைக்குக் கீழாகவும் பார்த்தால் நான் இருப்பது தெரியும். ஆப்பு வடிவத்தில் (wedge shaped) அமைந்துள்ள எனக்குக் கீழே உங்கள் பித்தப்பை (gall bladder) இருப்பது தெரிகிறதா? இடதுபுறம் உங்கள் இரைப்பை (stomach) இருப்பதையும் பாருங்கள்.சரி..! என்னைத் தொட்டுப்பார்த்து உணர முடிகிறதா?

உங்கள் உடலில் நான் ஓர் ஆச்சரியமான உறுப்பு என்று கூடச் சொல்லலாம். ஏன் தெரியுமா? உங்கள் உடலின் முக்கியமான 500 வேலைகளைச் நானே செய்கிறேன்! நான் இல்லை என்றால் நீங்கள் ஸ்தம்பித்துப் போய் விடுவீர்கள்!!நான் இல்லாமல் உங்களாலே வாழவே முடியாதுங்க!!!

anatomy_abdomen_tiesworks

Anatomy of the human abdomen, by Ties van Brussel / tiesworks.nl Wikimedia Commons

anatomy_of_liver_and_gall_bladder

Anatomy of the biliary tree, liver and gall bladder Jiju Kurian Punnoose – Own work  PC: Wikimedia Commons

ஒருவேளை நீங்கள் மஞ்சள் காமாலை (jaundice), கல்லீரல் அழற்சி (hepatitis), கல்லீரல் வீக்கம் (Hepatomegaly) போன்ற நாள்பட்ட வியாதிகளால் (chronic ailments) பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் மருத்துவர் ஸ்பரிச பரிசோதனை (palpation) செய்து என்னுடைய நிலைமையைக் கண்டறிவதுண்டு. மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும், நீங்கள் அதிமாக உட்கொள்ளும் மது (alcohol) அல்லது ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவற்றைப் பற்றி எப்போதும் உங்களை எச்சரித்த வண்ணம் உள்ளனர். நான் உங்களுடைய மிகவும் இன்றியமையாத உறுப்பு என்பதில் எள்ளளவுகூட ஐயமில்லை!

இன்று பல கோடி மனிதர்கள் கல்லீரல் நோயினால் இறந்துபோய் விடுகிறார்கள். ஆண்டுதோறும் ஏப்ரல் 19 ஆம் நாள் உலகக்  கல்லீரல் தினமாகக் கொண்டாடுகிறீர்கள் அல்லவா! உங்ககளிடையே என்னைப் பற்றிய விழிப்புணர்ச்சி உருவாக்கவும், உங்களுடைய அற்புத உறுப்பாகிய என்னைக் காப்பாற்றவுமே  இந்த தினத்தைக் கொண்டாடுகிறீர்கள். அப்படித்தானே?

நான் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறேன்?

என்னை எப்படி அடையாளம் காண்பீர்கள்? உற்றுப் பாருங்கள். நீங்கள் என்னுடைய கருஞ்சிவப்பு வண்ணத் தோற்றத்தைக் கண்டிப்பாகத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் வயிற்றின் பெரும்பகுதியை அடைத்துக்கொண்டு கொழுக் மொழுக்கென்று இருக்கிறேன். வேறுபட்ட அளவிலும், சமமற்ற வடிவிலுமான நான்கு மடல்களைப் பாருங்கள். என்னுடைய வலது பகுதி, இடது பகுதியைவிடப் பெரியது.

என்னை இப்போது அடையாளம் கண்டு கொண்டீர்கள் அல்லவா!  என்னுடைய எடை எவ்வளவு இருக்குமென்று நினைக்கிறீர்கள்? எனது எடை சுமார் 1.4 முதல் 1.6 கிலோ வரை இருக்கும். உங்கள் உடலில் நான் மிகப்பெரிய சுரப்பி உறுப்பு (largest glandular organ) என்று  கருதப்படுவதால் நீங்கள் என்னை மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.

நான் பல்லாயிரக் கணக்கான கல்லீரல் செல்கள் (hepatic lobules) என்று அழைக்கப்படும் திசுக் கொத்துக்களால் (cell clusters) உருவாக்கப்பட்டுள்ளேன். இந்தக் கல்லீரல் செல்கள் மூலம் என்னால் கல்லீரல் வளர்சிதைமையைப் (liver metabolism) பணியை ஆற்ற முடியும்.

2423_microscopic_anatomy_of_liver

Lobules of liver. Wikimedia Commons

உங்கள் கல்லீரல் தமனி (hepatic artery) மற்றும் போர்ட்டல் சிரை (portal vein) வழியாக நான் உங்கள் இரத்த சுழற்சி மண்டலத்துடன் (blood circulation system) இணைக்கப்பட்டுள்ளேன். இந்த இரண்டு இரத்த நாளங்களும் (blood vessels) என்னுள் மிகச் சிறிய  இரத்த தந்துகிகளாகப் (tiny capillaries) பிரிந்து பரவி கல்லீரல் செல்களில் முடிவுறுகின்றன (terminated).

நான் எப்படி செயல்படுகிறேன்?

உங்கள் கல்லீரல் தமனி (hepatic artery) ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1.5 லிட்டர் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை (oxygen-rich blood) கொண்டுவருகிறது.  இந்த ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் என்னுடைய உள்ளுறுப்புகளைச் சுத்திகரிக்க (purifying my internal organs) உதவுகிறது.  உங்களுடைய போர்ட்டல் சிரை (portal vein), உங்கள் சிறு குடலில் (small intestine) இருந்து செரிமானம் ஆன உணவு உள்ளடக்கிய இரத்தத்தைக் (blood comprising digested food) கொண்டு வருகிறது.

நான் உங்கள் உடலின் சக்தி மையம் (powerhouse) அல்லது ஆற்றல் வங்கியாக (energy bank) விளங்கிறேன். இதனாலேயே உங்கள் மருத்துவர் என் மீது அதீத மரியாதை காட்டுகிறார். வியப்பாய் இருக்கிறதா? ஆமாம்.. உங்கள் ஜீரணத்திற்கு நான் ஆற்றும் உதவி மிகவும் இன்றியமையாதது ஆகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் நான் அதிகப்படியான சர்க்கரையை மாற்றுகிறேன்

மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்)

நான் உங்கள் ஆற்றல் சேமிப்பு வங்கி ஆவேன். என்னை உங்கள் பேட்டரி என்றும் சிலர் கூறுவதுண்டு! எப்படி என்று கேட்கிறீர்களா? நான், அதிகப்படியான சர்க்கரையை, அதாவது கிளைக்கோஜனின் வடிவத்தில் உறிஞ்சப்பட்ட அதிகப்படியான ஸ்டார்ச் பொருளை,  மாற்றி  அதை ஆற்றல் வங்கியில் (energy bank) சேமித்தும்  வைக்கிறேன்! எப்போதெல்லாம் உங்கள் இரத்த குளுக்கோஸ் நிலைகள் (blood glucose levels) கீழே இறங்குகிறதோ அப்போதெல்லாம் நான் கிளைக்கோஜனை குளுக்கோஸாக (glycogen into glucose) மாற்றி உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறேன். எப்படி? நான் உங்கள் ஆற்றல் வாங்கி தானே!

புரதங்கள்

உங்கள் அமினோ அமிலங்களுடன் மற்றொரு வங்கியையும் நான் நடத்துகிறேன் தெரியுமா? அமினோ அமிலங்களை நீங்கள் சேமிக்க முடியாது.  எனவே, இந்த வங்கியை உங்கள் நடப்புக் கணக்கு (current account) என்று நீங்கள் அழைக்கலாம் அல்லவா! நீங்கள் உண்ட புரதப்பொருட்களை நான் பெற்று, அமினோ அமிலங்கள் (amino acids) எனப்படும் மிகச் சிறிய ஆற்றல்மிக்க அலகுகளாகச் (tiny energizing units) சிதைக்கிறேன் (disintegrate). இந்த அமினோ அமிலங்களே உங்கள் உடலில் நிகழும் உடலியங்கியல் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கின்றன. யூரியா மற்றும் நைட்ரஜன் வடிவில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதற்கான பொறுப்பும் என்னிடம்தான் உள்ளது.

கொழுப்புகள்

நீங்கள் உண்ட கொழுப்புகளை எளிமையான வடிவில் மாற்றுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். இவ்வாறு மாற்றப்பட்ட எளிய வடிவ கொழுப்பு சக்தியை, உங்கள் உடலுக்கு அதிகச் சக்தி தேவைப்படும்போது, பயன்படுத்தவும் நான் உதவுகிறேன். உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் (C27H46O) என்ற ஒரு வகை கொழுப்புப் பொருளை உற்பத்தி செய்வதும் நானே. உங்கள் உடலில்  80% கொலஸ்ட்ரால் கொழுப்பை மட்டுமே நான் உற்பத்தி செய்கிறேன்.

வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள்

இரும்பு இருப்பு (iron reserves), வைட்டமின்கள் (வைட்டமின்கள் A, D, K மற்றும் B12) மற்றும் உங்கள் உடலில் உள்ள தாதுக்கள் ஆகியவற்றைச் சேமிப்பதில் நானும் பொறுப்பாக இருக்கிறேன்.

உயிர் வேதியியல் ஆலை

நான் 500 க்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்து, 1000 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய என்சைம்களை (நொதிகளை) (essential enzymes) உற்பத்தி செய்கிறேன். உங்கள் உயிர் வேதியியல் ஆலை (bio-chemical plant) என என்னை நீங்கள் அழைக்கலாம். சரியா? பல இரசாயன திரவங்கள் (chemical fluids) ஒருங்கிணைக்கப்படுவதற்கும் (synthesis) சுரப்பதற்கும்  (secretion) நானே பொறுப்பாவேன். என்சைம்கள் மற்றும்  ஹார்மோன்கள் என்று நீங்கள் இவற்றை அழைக்கலாம்.

பைல் (bile) என்று அழைக்கப்படும் மஞ்சள் நிறமியைப் (yellow pigment) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இது என்னிடமிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்படுகிறது. இந்தப் பைல் (பித்த நீர்) (bile) முக்கிய பங்காற்றி நீங்கள் உண்ட கொழுப்பை ஜீரணம் செய்வதற்கு உதவுகிறது. இதற்காக நான் அதிகம் உழைக்கிறேன். என்னுடைய உழைப்பை மனதில் நினைத்துப் பாருங்கள். இந்தப் பைல் உங்கள் சிறுநீருக்கும் மலத்திற்கும் இயல்பான நிறம் தருகிறது.

என்னிடம் உள்ள இரத்தத்தை உறைய வைக்கும் சில திரவங்கள் (blood clotting fluids), உங்கள் உடலில் காயம்பட்டால், அந்தக் காயமடைந்த இடத்திற்கு விரைந்து   சென்று இரத்தம் வழிவதை உடனே தடுத்துகின்றது.

தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள், ஆல்கஹால், மருந்துகள் மற்றும் ஊசி மூலம் செலுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு என்னிடத்தில் உள்ளது. நான் உங்களுடைய பாதுகாப்பு அலுவலமாக உள்ளேன். இந்தத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உங்கள் உடலில் புகுந்து என்னிடம் வரும்போது  நான் ஒரு பாதுகாப்புப் பணிப்பாளராகச் செயல்பட்டு உடல் சோதனை செய்து அவற்றைக் கண்டறிகிறேன். நான் உங்களை இந்தத் தீங்கு விளைவிக்கும் பொருட்களிடமிருந்து பாதுகாக்காவிட்டால், இவைகள் தங்கள் குணாதிசயப்படி செயல்பட்டு உங்கள் முக்கிய உறுப்புகளைச்  சேதப்படுத்துவது திண்ணம்.

ஆல்கஹால் மற்றும் அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் போன்ற நச்சுப் பொருட்களிடமிருந்து இருந்து உங்கள் இரத்த நாளங்கள், இதயம், சிறுநீரகம் மற்றும் மூளை போன்ற உறுப்புகளைப்  பாதுகாப்பதில் எனக்குப் பெரும் பொறுப்பு உள்ளது. இந்த உறுப்புகளை எவ்வாறு பாதுகாக்கிறேன் என்று தெரிந்துகொள்ள ஆவலா? சுருக்கமாகச் சொல்கிறேன். முதலில் இவற்றை வடிகட்டுகிறேன். பின்பு இந்த நச்சுப் பொருட்களை அதிகம் தீங்கு செய்யாத வேதிப்போருளாக மாற்றி உங்கள் உடலிலிருந்து வெளியேற்றி விடுவேன்.

என்னுடைய பலம்

என்னை நானே வலுப்படுத்திக் கொள்ளும் என்னுடைய திறனைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். ஆமாம். என்னுடைய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான அசாதாரணத் திறன் என்னிடம் உள்ளது. என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? சரி சற்று விளக்கமாகச் சொல்கிறேனே.. உங்களுடைய ஒவ்வாத உணவு (toxins through your food), மது மற்றும் போதைப்பொருட்களின் மூலம் விளையும் நச்சுக்கள் (toxins through alcohol and drugs) என்னுடைய உடல்நலத்திற்குச் சிரமம் தருவது உண்டு. என்றாலும் என்னுடைய பணி, இந்த நச்சுப் பொருட்கள் அல்லது வேதியியல் எதிர்விளைவுகள் மூலம் உங்கள் உடல் உற்பத்தி செய்யும் கழிவுகள் ஆகியவற்றைத்  தொடர்ந்து எதிர்த்து நிற்பதாகும். என் கடன் பணி செய்து கிடப்பதே!

நீங்கள் சற்றும் எதிர்பாராத வகையில், மீண்டும்,  மீண்டும் வளரும் தன்மை எனக்கு உண்டு. இதனை “மீள் வளர்ச்சி” என்பர். சற்று விளக்கமாகவே சொல்கிறேனே. என்னுடைய அங்கத்தில் 80 சதவிகிதம் பகுதியினை ஏதோவொரு காரணத்திற்காக வெட்டி எடுத்துவிட்டாலும் கூட, வரும் 15 முதல் 20 நாட்களுக்குள் பழைய அளவிற்கே வளர்ந்து விடுவேன். அ..ப்ப்ப்..பா! இந்தத் துரிதகதி வளர்ச்சி உங்களுக்கு வியப்பாய் இருக்கிறதல்லவா?

என்னுடைய பலவீனம்

சில நேரங்களில் வில்சன் நோய் (Wilson’s disease) அல்லது ஹெபடோலெண்டிகுலர் சீர்கேடு (hepatolenticular degeneration)  என்று அழைக்கப்படும் மரபணு கோளாறுகள் (genetic disorder) காரணமாக நான் மிகவும் பாதிப்பு அடைவதுண்டு. இது போன்ற நிலைமைகளால்  என் திசுக்களில் தாமிரம் (copper) திரண்டுவிடுகிறது. இந்த நிலைமையால் தோன்றும் வீக்கம் என்னை மென்மேலும் பாதிப்படையச் செய்கிறது.

இந்தியாவில் குறைந்தபட்சம் 30% ஆண்கள், 5% பெண்கள் தொடர்ந்து மது அருந்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மது எந்த அளவுக்கு என்னைப் (கல்லீரலை) பாதிக்கும் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தானே! மதுபானம் அதை அருந்துபவருக்கு எந்தப் பலனையாவது அளிக்கிறதோ இல்லையோ, முதலில் எனக்கு (கல்லீரலுக்கு) வேண்டிய அளவு கெடுதலை மட்டும் அளித்துவிடுகிறது. எவ்வாறு நான் பதிப்படைகிறேன் தெரியுமா? உங்களுடைய  நாள்பட்ட மதுப்பழக்கம் (alcohol consumption over longer periods of time) என்னுடைய (கல்லீரலின்) வளர்சிதை மாற்றத்தையே (metabolism) மாற்றியமைத்து விடுகிறது. இதனால் என்னுடைய இயல்பான செயல்பாடுகள் (normal functions) பாதிக்கும் அளவிற்குச் சீரழிவினை ஏற்படுத்தும். மதுப்பழக்கத்தை நிறுத்திய சிலர் முன்பைவிட உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

ஹெபடைடிஸ் என்ற கல்லீரல் அழற்சி நோய்

ஹெபடைடிஸ் என்ற கல்லீரல் அழற்சி நோய்க்குக் காரணமான ஐந்து வகை வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஐந்து வகை வைரஸ்களில் என்னை (கல்லீரலை) மிகவும் பாதிக்கும் இரண்டு வைரஸ்கள் முக்கியமானவை. இவற்றிற்கு  ஹெபடைடிஸ் பி (Hepatitis B) மற்றும் ஹெபடைடிஸ் சி (Hepatitis C) என்று பெயர். ஒரு எச்சரிக்கை! இவை, எய்ட்ஸ் வைரஸைவிட,  வேகமாகத் தாக்கும் ஆற்றல் கொண்டவை. தாயிடமிருந்து குழந்தைக்கு, இரத்த மாற்றம் (blood transfusion), நோய் நுண்மங்களை அகற்றாமல் ஊசி போடுதல் (unsterilised injection), பாதுகாப்பற்ற உடலுறவு (unprotected sex) போன்ற காரணங்களால் இவை தொற்றிக் கொள்வதுண்டு. உஷார்..

hbv

The structure of hepatitis B virus Wikimedia Commons

ஹெபடைடிஸ் தொற்று நோய் என்னிடத்தில் (கல்லீரலில்) அழற்சியை உண்டு பண்ணி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் என்னுடைய இயல்பான செயல்பாடுகள் தடைப்படுகின்றன. இதனால் என் அங்கத்தில் (கல்லீரலில்) வடுக்கள் (scar) தோன்றுகின்றன. நாள்பட்ட வடுக்கள் நிரந்தரமாக என் அங்கத்தில் பதிந்து விடுகின்றன. தொடர்ந்து அழற்சியும் தோன்றிவிடுகிறது. முற்றிய நிலையில் கல்லீரல் வடுக்கள், கல்லீரல் கரணை நோயாகவும் (cirrhosis) வளர்ந்துவிடுகிறது. இதனால் நான் அடையும் சேதம் மிக அதிகம். எனது செயல்பாடுகளில் பெருந்தோல்வி என்பது விரும்பத் தகாத நிலைமையாகும்.

உலக ஜனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 200 கோடிக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு இந்நோய் பாதித்திருப்பதே தெரிவதில்லை, தெரியுமா? அமைதியான ஆட்கொல்லி நோய் என்று அறியப்படும் இந்த வைரஸ் தொற்று நோய் அதற்குரிய இரத்தப் பரிசோதனை செய்துகொண்டால் மட்டுமே நோயின் தாக்கத்தைக் கண்டறிய முடியும். இவர்களில் பெரும்பாலானோர் குறுகிய காலத்திற்குள் குணமாகியுள்ளனர். வேறு சிலர், அதாவது சுமார் 35 கோடி பேர் குணமடையவில்லை. இந்தத் தொற்று  நாள்பட்ட நோயாக மாறிவிட்டது. முற்றிய நிலையில் கல்லீரல் கரணை நோயோ (cirrhosis) கல்லீரல் புற்றுநோயோ ஏற்பட்டு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது இந்த நோய்.

liver_cirrhosis

Liver cirrhosis.BruceBlaus – Own work Wikimedia Commons

கல்லீரல் புற்றுநோய்

உங்கள் உடலில் உள்ள எந்த உறுப்பும் புற்று நோயால் பாதிப்படைவதுபோல நானும் இந்தப் புற்று நோயால் பாதிப்படைவது உண்டு. கல்லீரல் புற்றுநோய் என்னுடைய செயல்பாட்டைப் பாதிக்கும் பல முக்கியக்  காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது உங்கள் உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கலாம். கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள்: உங்கள் சிறுநீர் கருமையான மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தில் காணப்படும். சிறுநீரில் நாற்றம் ஏற்படும். காரணம் உங்கள் இரத்தத்தில் பித்த செம்பசை அதிகரித்துள்ளபடியால் இஃது உங்கள்  சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. உடல் எடை குறையும். உடலில் அரிப்பு உண்டாகும். குமட்டலும் வாந்தியும் கூடக் கல்லீரல் புற்றுநோயின் முதல் கட்ட அறிகுறிகளாகும்.

இவ்வாறு பல பாதிப்புகளுக்கு உள்ளாவதுண்டு. இவ்வாறு பாதிப்புகளுக்கு நான் உள்ளாகும்போது  என்னுள் ஓர் அசாதரணமான பாதுகாப்பு அமைப்பு (extraordinary defense mechanism) செயல்பட்டு இந்தப் பாதிப்புகளிலிருந்து என்னை விடுவிக்கிறது. என்னுடைய அங்கத்தில் 80 சதவிகிதம் செல்கள் சேதமடைந்தாலும் கூட என்னுடைய பணிகளைத் தொய்வில்லாமல் செய்வேன். இவ்வாறு தீங்கு விளைவிக்கும் பொருட்களாலோ அல்லது தீங்கு விளைவிக்கும் வைரஸ் தொற்று காரணமாகவோ சேதமடைந்த என் செல்களை மறுபடியும் உற்பத்தி (regenerate the cells) செய்யும் திறன் எனக்கு உள்ளது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன் தானே!

உங்களுக்கு சிறந்த சேவையை வழங்க எனக்கு உதவுங்கள்

என் முக்கியத்துவம் பற்றிக் கனிவுடன் சிந்தித்துப் பாருங்களேன். நான் ஆரோக்கியமாக இல்லையென்றால் உங்கள் உடல்நிலை பாதிப்பிற்குள்ளாகும். உடல் உடலில் வளர்சிதைமாற்றம் (body metabolism) நிகழாது. என்னுடைய சுகவீனத்தால், நீங்கள் உட்கொள்ளும் மருந்து அல்லது ஆல்கஹால் (drug or alcohol) வடிவில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மூலம் விளையும் தீங்கிலிருந்து, உங்களுக்குப் பாதுகாக்கப்பட்ட வாழ்க்கை இல்லை. உங்கள் உடலில் கிளைகோஜென் அல்லது அமினோ அமிலங்கள் அல்லது கொழுப்புச் சேமிப்பு நிகழாது. சரியான கவனிப்பு இல்லாத நிலையில், நான் மோசமாகப் பாதிக்கப்படுகிறேன். என் அளவு மற்றும் வடிவம் (size and shape) சுருங்கிப்போய் (shrinking) விடுகிறது.  என்னுடைய தோற்றம் வெளிரிப்போய்  (pale) மஞ்சள் நிறமாகவும் (yellow) மாறிவிடும். காலப்போக்கில் நான் (கல்லீரல்) மிக மெதுவாக இறந்து போவேன். உங்கள் வாழ்க்கையில் இந்த அளவிற்குத் தவறாக அல்லது மோசமாக விதி விளையாட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்களோ, நானோ (கல்லீரல்) இத்தகைய பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்படவேண்டுமா?

காலதாமதமின்றி என்னை (கல்லீரலை) குறித்த காலக்கெடுவில் மருத்துவ சோதனை (periodical check-up) மற்றும்  மருத்துவ ஆய்வுகளுக்கு (medical review) உட்படுத்துமாறு நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மற்ற முக்கிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் போல,  எனக்கும் குறிப்பிட்ட காலக்கெடுவில் மருத்துவ சோதனை மற்றும் சிகிச்சை (periodical check up and treatment) இன்றியமையாத தேவை அல்லவா! உங்கள் மருத்துவரிடம் சென்று என்னை (கல்லீரலை) சோதித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

என் நிலைமையைத் துல்லியமாகக் கண்டறிய (diagnose precisely) ‘இரத்த ஸ்கிரீனிங் சோதனைகள்’ (‘Blood screening tests’) மேற்கொள்ளுமாறு அவர் உங்களுக்கு ஆலோசனை கூறுவார். மருத்துவச் சோதனையில் நான் மென்மையாகவும் வழுவழுப்பாகவும் (soft and smooth) இருந்தால் என் ஆரோக்கிய நிலையில் அவர் திருப்தியடையக்கூடும். மாறாக நான் சற்று கடினமாகவும் வீங்கியும் இருந்தால் (rough and inflated) என்னிடம் சில தொந்தரவுகள் உள்ளன என்று முடிவு செய்து கவலையுடன் எடுத்துச் சொல்வார். தொடர்ந்து அல்ட்ரா சவுண்டு மற்றும் சி.டி ஸ்கேன்கள் ( ultra sound and CT scans) போன்ற சில மருத்துவ ஆய்வகப் பரிசோதனைகளைப் (certain laboratory tests) இவர் பரிந்துரைக்கக் கூடும். இந்தப் பரிசோதனைகள் என்னுடைய நிலை பற்றித் துல்லியமாகக் கண்டறிய உதவும். போதிய சிகிச்சைக்குப் பிறகு என்னை மீண்டும் என்னுடைய இயல்புநிலைக்கு மாற்றி, உங்களுக்கு என் சேவையைத் தொடர உங்கள் மருத்துவர் வழிவகுப்பார்.

இப்போது என்னுடைய சேவையையும் உங்கள் நலனில் என்னுடைய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அடக்கம் கருதி நான் சில தகவல் கூறுகளை (points) மட்டுமே விவாதித்துள்ளேன். நான் உன் உங்கள் உண்மையுள்ள வேலைக்காரன். உங்கள் வாழ்வின் இன்றியமையாத பங்குதாரர் (life partner). நான் உங்கள் உடலில் குறிப்பிட்ட விதத்தில் குறிப்பிட்ட சேவைகளைச் செய்வதற்குக் கடவுளால் உருவாக்கப்பட்ட ஒர் இயற்கை உறுப்பாவேன். நான் உங்களுக்கு இன்றியமையாத ஆதாரமாக இருக்கிறேன். எனக்கு மாற்று இல்லை. என் இயல்பான சேவை உங்களுக்கு உறுதியாகக் கிடைக்கும். இதற்கு நான் உன்னிடமிருந்து எதிர்பார்ப்பது மென்மையான அன்பான கவனிப்பு மட்டுமே! வாழ்க வளமுடன்!!

நான் அமைகிறேன்,

மிக்க நன்றி ஐயா,

தங்கள் உண்மையுள்ள ஊழியன்,

தேதி: 27 ஆம் நாள் மார்ச் 2018                                                                  உங்கள் கல்லீரல்

குறிப்புநூற்பட்டி

  1. இன்று உலக கல்லீரல் தினம்..! ஜெயசித்ரா தமிழ் ஒன்இந்தியா ஏப்ரல் 19, 2013 https://tamil.oneindia.com/art-culture/essays/2013/world-liver-day-173774.html
  2. காக்க காக்க கல்லீரல் காக்க! #WorldLiverDay பாலு சத்யா 19/04/2017https://www.vikatan.com/news/health/86851-this-article-about-world-liver-day.html
  3. மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுதல் http://tamil.whiteswanfoundation.org/article/getting-over-an-alcohol-addiction/
  4. MamasHealth.com – Liver
    Mountain Herbz – Did you know who I am? –
    Health Properties of Chanca Piedra or Bhumyamalaki or Phyllanthus Amarus / Niruri by Muthusamy R
  5. Wikipedia – Liver – http://en.wikipedia.org/wiki/Liver
    Wikipedia – Wilson’s Disease – http://en.wikipedia.org/wiki/Wilson’s_disease

குறிப்பு :
இந்தக் கட்டுரை இரா, முத்துசாமியால்  Associated Content இல் Oct 6, 2008 ஆம் தேதி வெளியிடப்பட்டது.. சில காலத்திற்கு முன்புவரை இந்த URL இல் இருந்தது Yahoo Voices (http://voices.yahoo.com/i-am-liver-most-faithful-servant-2004163.html) தற்போது இல்லை!

இந்தப் பதிவில் குறை நிறை இருந்தால் உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் சொல்ல வேண்டுகிறேன் 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in உடல் நலம் and tagged , , , , . Bookmark the permalink.

9 Responses to நான் உங்கள் கல்லீரல்: மிக உண்மையுள்ள ஊழியன், உங்களுக்குச் சேவை செய்ய எனக்கு உதவுங்கள்

  1. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய
    உணர்ந்து கொள்ள வேண்டியப் பதிவு ஐயா
    நன்றி

    Like

  2. பிங்குபாக்: நான் உங்கள் கல்லீரல்: மிக உண்மையுள்ள ஊழியன், உங்களுக்குச் சேவை செய்ய எனக்கு உதவுங்கள் – TamilBlogs

  3. குமார் சொல்கிறார்:

    உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள்

    Like

  4. கமலா ஹரிஹரன் சொல்கிறார்:

    வணக்கம் சகோதரரே

    கல்லீரல் பற்றி நன்கு அருமையாக விவரித்திருக்கிறீர்கள். இந்த பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படிக்கப்படிக்க செய்திகள் வியப்பானவையாக இருக்கிறது. மிகவும் அருமை. நல்ல உபயோகமான பதிவை விரிவாக முழுமையாக தந்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    Like

  5. கருணாகரன் சொல்கிறார்:

    மிக அருமையாக கல்லீரலைப் பற்றி கூறியிருக்கிறீர்கள்…நன்றி அய்யா…..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.