கணக்குவேலம்பட்டி, அரவக்குறிச்சி, மொட்டையாண்டவர் கோவில் சிற்பம் சமண தீர்த்தங்கரரா? புதிய ஆய்வுகள்.

தொல்லியல் ஆர்வலர்கள் இந்தப் புடைப்புச் சிற்பத் தொகுதியை (Bas Relief Panel) பாகுபலி என்றும் சமண தீர்த்தங்கரர் என்றும் வாதிடுகிறார்கள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கணக்குவேலம்பட்டியில் வசிக்கும் உள்ளூர் மக்களோ இந்த “மொட்டைஆண்டவரை”, முருகன் என்ற ஒரு வடிவத்தில் வணங்கி, விழா எடுத்து வழிபாடு செய்து வருகிறார்கள். தொல்லியல் ஆய்வுகள் தொடர்கின்றன.

மொட்டையாண்டவர் கோவில் என்ற நாட்டுப்புறத் தெய்வத்தின் கோவில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கணக்குவேலம்பட்டி (Kanakkuvelampatti) கிராமம் பின் கோடு 639201. இந்தக் கிராமம் புங்கம்பாடி (கிழக்கு) பஞ்சாயத்தில் இடம்பெறுகிறது. அரவக்குறிச்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகரான கரூரிலிருந்து 28 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 56 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 10° 46′ 31.3032” N அட்சரேகை 77° 54′ 32.0116” E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 156 மீட்டர் ஆகும்.

கணக்குவேலம்பட்டி புடைப்புச் சிற்பத் தொகுப்பு

இந்தக் கிராமத்தில் உள்ள குன்றில் தரையைத் தொட்டவாறு மிகப்பெரிய பாறை ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பாறை முகப்பில் சுமார் ஏழு அடி உயரத்தில் மூன்று சிலைகள் புடைப்புச் சிற்பங்கள் ஒரே தொகுப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. சுமார் 25-30 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சிற்பத் தொகுப்பைக் காண்பதற்கு 10 க்கும் மேற்பட்ட கருங்கற்படிகளைக் கடந்து செல்லவேண்டும். படிக்கட்டுகளின் இருபுறத்திலும் கிரில்லில் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டிற்கு வெள்ளை மற்றும் காவி வர்ணம் பூசியுள்ளார்கள்.

கணக்குவேலம்பட்டி மொட்டையாண்டவர் கோவில் முருகன் வழிபாடு

இப்பாறையில் செதுக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பங்களை வள்ளி தெய்வானை சமேத முருகன் என்று எண்ணி வழிபாட்டு வருகிறார்கள். இக்கோவிலுக்கு மொட்டை ஆண்டவர் கோவில் என்று பெயர். கோவிலுக்கு முன்புறம் பெரிய திடல் காணப்படுகிறது. முருகன் தண்டாயுதபாணி வடிவில் காட்சியளிப்பதாக மக்களுக்குத் தோன்றியதால் இவருக்கு மொட்டையாண்டி என்று பெயர். பங்குனி மாதம் நிகழும் பங்குனி உத்திர நட்சத்திர தினத்தன்று  மக்கள் மொட்டையாண்டவருக்குத் தீர்த்தக் காவடி எடுத்து வழிபாட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் திருவிழா இவ்வூரில் வெகு விமரிசையாக  நடைபெற்று வருகிறது.

முதற்கட்டத் தொல்லியல் ஆய்வுகள்

திரு. சுகுமார் பூமாலை அரவக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர். மொட்டையாண்டவர் கோவிலில் கண்ட புடைப்புச் சிற்பத் தொகுப்பு, சமணர் வாழ்ந்ததாகக் கருதப்படும் குகைத்தளம் ஆகியவற்றைக் கண்டறிந்தவுடன் கோவை கல்வெட்டு ஆய்வாளர் திரு.துரை.சுந்தரம் அவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். திரு.துரை.சுந்தரம் அவர்களும் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார்.

தொடரும் தொல்லியல் ஆய்வுகள்

கடந்த மார்ச்  மாதம் 25 ஆம் தேதியன்று ஆங்கில நாளிதழ்களில் இந்தச் செய்தி வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி, இந்த ஊர் மக்களின் “மொட்டை ஆண்டவர் வழிபாட்டைக்” கேள்விக்குறியாக ஆக்கிவிட்டது. தொல்லியல் ஆர்வலர்கள் இந்தச் சிலைத் தொகுப்பைப் பாகுபலி என்று வாதிடுவதே இதற்குக் காரணம். இந்தச் சிலைகள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பது தொல்லியல் ஆர்வலர்களின் கருத்து.

பாகுபலி: சமண புராணக் கதை  (ஆதிபுராணம்)

சமணர்களால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் முதலாவது தீர்த்தங்கரான ஆதிபகவன் (ஆதிநாதர் என்ற தீபநாயக சுவாமி) என்ற விருஷப தேவர் இஷவாகு வம்சத்தில் உதித்த ஓர் அரசர். இவருக்கு  நூறு புதல்வர்கள்; முதலாமவர் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி. பிராமி, சுந்தரி என்று இரண்டு மகள்களும் உள்ளனர். பாகுபலிக்கு மக்களிடம் செல்வாக்கு மிகுந்திருந்தது. விருஷப தேவர் தன் அரசை இரு மகன்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சமணத் துறவியாகி தவ வாழ்க்கை மேற்கொள்கிறார். பகுபலிக்கு அஸ்மாகா என்ற நாடும் பரதனுக்கு வினிதா (அயோத்யா) என்ற நாடும் கிடைகின்றன. பொறாமை கொண்ட பரதன் தான் மட்டும் அரசனாவதைக் கருத்தில்கொண்டு பல நாட்டு அரசர்களைப் போரில் வெல்கிறான். பரதன், பாகுபலியின் அஸ்மாகா நாட்டையும் அபகரிக்க எண்ணியும் அவரைக் கொல்லத் துணிந்தும் போருக்கு அழைக்கிறான். பாகுபலி சமாதானத்தை விரும்பி தன் தலைமுடியைத் தானே பிய்த்துக் கொண்டு சமணத் துறவியாகி விட்டார். தன் தந்தையும் சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரருமான விருஷப தேவரின் சீடராகவும் ஆனார்.

பாகுபலியின் சிற்பம்

பாகுபலியின் சிற்பம் நிர்வாணக் கோலத்தில் நின்ற நிலையில் தியானத்தில் ஆழ்ந்திருப்பது போலக் காட்டப்பட்டுள்ளது. பகுபலியின் இரண்டு பக்கங்களிலும் இவரது சகோதரிகளான பிராமி, சுந்தரி ஆகியோர் நின்றிருப்பார்கள். இவர்களுடைய தந்தை ஆதிநாதர் சொன்ன சேதியை பாகுபலியிடம் சொல்வதற்காகக் காத்து நிற்கிறார்கள் என்று ஓர் ஐதீகம் உண்டு. பாகுபலியின் தலைக்கு மேலே இரண்டு அரக்கர்களைக் காட்டுவது வழக்கம். ஓர் அரக்கன் வாய் வழியாக ஊதிப் புயலை உண்டாக்குவது போலவும், மற்றொரு அரக்கன் பெரிய பாறையைத் தூக்கிப் பாகுபலி மீது வீசுவதற்கு முயற்சிப்பது போலவும், வேறொரு அரக்கன் பாகுபலியின் காலடியில்  விழுந்து சரணடைவது போலவும் காட்டப்படுவது வழக்கம்.  மதுரையை அடுத்த கீழக்குயில்குடி பேச்சிப்பள்ளதிலும், கோயில்பட்டியை அடுத்த கழுகுமலையிலும்  இந்த 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்ககளை இன்றும் காணலாம். இது போலப் பல இடங்களில் பாகுபலியின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

சமணச் சிற்பக்கலை

சமணத் தீர்த்தங்கரர்கள் நிர்வாணக் கோலத்தில், தியான நிலையில், அமர்ந்தவாறு காட்சி தருவது போலப் பெரும்பாலான சிற்பங்கள் சித்தரிப்பது வழக்கம். இதை அடுத்து சில சமணத்  தீர்த்தங்கரர்களை நிர்வாணக் கோலத்தில், தியான நிலையில், நேராக நின்ற நிலையில், கைகள் உடலைத் தொடாமல் தொங்கவிட்டவாறும் சில சிற்பங்கள்   சித்தரிப்பது உண்டு.

மொட்டை ஆண்டவர் சிற்பம்: விவாதம்  

மொட்டை ஆண்டவர் கோவில் புடைப்புச் சிற்பத்தில் காணப்படும் தீர்த்தங்கரர் நிர்வாணக் கோலத்தில் தியான நிலையில், நேராக நின்ற நிலையில், கைகள் உடலை தொடாமல் தொங்கவிட்டவாறு, எந்தவிதமான முத்திரையும் காட்டாது காட்சி தருகிறார். இந்த நிர்வாணக் கோலத்தில் நின்ற நிலையில் காட்சி தருவதைக் “காயோத் சர்கா” (kayotsarga) என்று திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் குறிப்பிடுகிறார். சுமார் எட்டடி உயரத்தில் காட்சி தரும் இந்தப் புடைப்பச் சிற்பத்திலுள்ள தீர்த்தங்கரரின் இரு புறத்திலும் இரண்டு பெண் உருவங்கள் (சமணப் பெண் சேவகிகள்?) நின்ற நிலையில் காட்சி தருகிறார்கள். உள்ளூர் மக்கள் இந்தப் பெண் யட்சிகளை முருகனின் தேவியர்களான வள்ளி மற்றும் தெய்வானை என்று கருதுகிறார்கள்.

அண்மையில் தமிழ்நாடு தொல்லியல் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவரும், புகழ்பெற்ற கல்வெட்டு ஆய்வாளருமான திரு.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் இந்த இடத்திற்கு (site) வந்து ஆய்வு செய்துள்ளார். “இந்தக்  கிராமத்திற்கு நாங்கள் சமீபத்தில் விஜயம் செய்த போது, சுமார் 25-30 அடி உயரத்தில் அமைந்திருக்கும் புடைப்புச் சிற்பங்கள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த சமண  தீர்த்தங்கரர் என்று கண்டறிந்தோம்,” என்று திரு. எஸ். ராமச்சந்திரன் கூறினார்.

திரு.இராமச்சந்திரன் அவர்களைத் தவிர வேறு சில தொல்லியல் ஆர்வலர்கள் கூட இந்தப் புடைப்புச் சிற்பத் தொகுப்பைக் காண வந்துள்ளனர். இவர்கள் இந்தச் சிற்பங்களை ஆய்ந்த பின்பு இவை பாகுபலி என்று கருதுகின்றனர். பொதுவாகப் பாகுபலி சிற்பத்தில் காணப்படும் மூன்று அரக்கர்களின் உருவங்கள் இந்தத் தொகுப்பில் காணப்படவில்லை. பாகுபலியின் சிற்பங்களில் ஆடையற்ற அவரது உடலைச் சுற்றிக் கொடிகள் செதுக்கப்பட்டிருக்கும்.  நெடிய தவம் செய்து மோட்சம் பெற்ற இவர் உடலைச் சுற்றிக் கொடிகள் படர்ந்தது இவர் சிற்பங்களில் தவாறாமல் இடம்பெறும். இது போன்ற கொடிகள் இங்குள்ள சிற்பத்தில் காணப்படவில்லை.

சாந்தாராம் போன்ற தொல்லியல் ஆர்வலர்கள் “தீர்த்தங்கரரின் தலைக்கு மேல் அமைந்துள்ள முக்குடையைச் (the three-tier parasol) சுட்டிக்காட்டி இது பாகுபலி” என்று கருத்துக் கூறியுள்ளார். உடன் நிற்கும் இரு பெண் சிற்பங்களைப் பாகுபலியின் சகோதரிகளான பிராமி, சுந்தரி என்றும்  கருதுகிறார். திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் இதைத் தவறான அனுமானம் என்று கருதுவதாகச் சொல்கிறார். இவர், நடுவில் நிற்கும் சமணப் புடைப்புச் சிற்பத்தை ஒரு தீர்த்தங்கரர் என்றும் இருபுறமும் நிற்கும் பெண்களை யக்ஷிகள் என்றும் கருதுகிறார். பாகுபலி கேவல ஞானம் பெற்று மோட்ச நிலை அடைந்தவர். சித்த புருஷரான இவர் 24 சமணத் தீர்தங்கர்களுக்குள் ஒருவராக இடம்பெறவில்லை. தலைக்குமேல் முக்குடை காணப்படுவதால் இவர் (மொட்டை ஆண்டவர்) ஒரு தீர்த்தங்கரர் என்பது திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் கணிப்பு.

எனவே பாகுபலி என்று இந்தப் புடைப்புச் சிற்பத்தைக் கருதுவது பற்றி திரு.இராமச்சந்திரன் “தீர்த்தங்கரர்கள் மட்டுமே அவர்களின் தலைக்குமேல் முக்குடையை, மரியாதை மற்றும் புனிதத்துவத்தைக் குறிப்பிடும் வகையில், பெற்றுள்ளார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊர்மக்கள் கருத்து 

இப்பகுதியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலரான சுகுமார் பூமாலை மேற்கண்ட செய்தியினைத் தொகுத்து  வெளியிட்டுள்ளார். இந்த கிராமத்தின் தலைவரான முத்து இராமையா வள்ளல் என்பவரும் சுகுமார் பூமாலையும், “அவர்கள் (தொல்லியல் ஆர்வலர்கள்) வாதம் எதுவாக இருந்தாலும், எங்களைப் பொறுத்தவரை இவர் மொட்டை ஆண்டவர் ஆவார். இவரைப் பயபக்தியுடன் வழிபடுகிறோம்” என்று கூறியுள்ளனர்.   இங்கு பல காலமாகத் தினசரிப் பூசைகள் செய்யப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும் வருடாந்திரத்  திருவிழா சுற்றியுள்ள கிராமத்து மக்களைக் கவர்ந்திழுகிறது.

சமண குகைத்தளம்

இந்த  சமணச் சிற்பத் தொகுதியினைக் கடந்து சென்றால் சிறு குன்றுப் பாதை சற்றே மேலே ஏறிச் செல்வதைக் காணலாம். குன்றின் மேல் ஏறிச் சென்றால் சமதளமாகத் தோன்றும் பெரிய பாறைப்பரப்பைக் காணலாம். சிறிய சுனைநீர்ப் பள்ளம் ஒன்றும் இங்குக் காணப்படுகிறது. பாறைப் பரப்பிணைத் தாண்டி சிறிது மேலே சென்றதும், பெரிய குன்றுப்பாறையின் கீழ் சிறிய குகைத் தளம் அமைந்துள்ளதைக் காணலாம். இத்தளத்தில் சமணத்துறவிகள் தங்கி வாழ்ந்ததற்கு அடையாளமாகப் படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. குகைத் தளத்திற்குள்ளே  நீர் கசிந்துவிடாமல் தடுப்பதற்கும், மழைநீர் வடிந்து வெளியேறுவதற்கும் பாறையின் நெற்றியில்  உள்ள கல்லின்  விளிம்பில் வடிகால் வெட்டியிருக்கிறார்கள். இங்குக் காணப்படும் குகை அமைப்பு மிகவும் சிறியதாகும். வேறு இடங்களில் காணப்படும் சமணர் குகைத் தளங்களில் பெரும்பாலும் பாறையே கூரையாக மடிந்து இருக்கும். ஆனால் இங்கு இது போன்ற அமைப்பு இல்லை. இதுபோன்ற சிறிய குகைகளில், கூரை போன்ற செயற்கை அமைப்பு உருவாக்குவதுண்டு. இதற்கேற்றபடி, பாறையில் குழிகளைச் செதுக்குவார்கள். இங்குப் பாறையில் அத்தகைய குழிகளைக் காணலாம்.

பாறைச் சமதளத்தில் நிறையக் கல்வெட்டு வரிகள் இருந்திருக்கலாம்.  தற்போது, ஆறு எழுத்துகள் கொண்ட ஒரு வரியும் அதன்கீழ் ஒன்றன்கீழ் ஒன்றாக இரண்டு எழுத்துகளுமே கண்டறியப்பட்டுள்ளன.

இந்தக் கல்வெட்டுப் பாடம் இன்னும் முழுமையாகப் படித்தறியப்படவில்லை. இங்குக் கல்வெட்டாய்வு தொடக்க நிலையிலேயே உள்ளது. ஆய்வுகள் தொடர்கின்றன.

குறிப்புநூற்பட்டி

  1. அரவக்குறிச்சிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள் http://kongukalvettuaayvu.blogspot.in/2018/02/blog-post.html
  2. கரூர் அரவக்குறிச்சியில்
    ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம் கண்டுபிடிப்பு http://nganesan.blogspot.in/2018/02/sripurana-sculpture-near-vanji-karur.html
  3. Debate rages over ancient sculpture in TN village: is it Bahubali or not? The Hindu 25 March 2018.
  4. Is the sculpture that of Bahubali? Debate on in Tamil Nadu village. The New Indian Express. 25 March 2018.
  5. Is the sculpture that of Bahubali ? debate on in TN village. India Today. 25 March 2018.
27908282_1829770470369006_6329323499719060095_o

மொட்டையாண்டவர் புகைப்பட உதவி கரூர் போட்டோகிராபர் (https://www.facebook.com/karurphotographer/)

27625040_1829770747035645_6061476978952654602_o

மொட்டையாண்டவர் புகைப்பட உதவி கரூர் போட்டோகிராபர் (https://www.facebook.com/karurphotographer/)

27788058_1829770457035674_674262474401932700_o

மொட்டையாண்டவர் புகைப்பட உதவி கரூர் போட்டோகிராபர் (https://www.facebook.com/karurphotographer/)

27748284_1829770473702339_1019586131086568347_o

திரு.எஸ்.இராமச்சந்திரன், புகைப்பட உதவி கரூர் போட்டோகிராபர் (https://www.facebook.com/karurphotographer/)

27748155_1829773520368701_5867984372360013695_o

கண்டறியப்பட்ட கல்வெட்டு. புகைப்பட உதவி கரூர் போட்டோகிராபர் (https://www.facebook.com/karurphotographer/)

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், சமண சமயம், தமிழ்நாடு, தொல்லியல், மதம் and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to கணக்குவேலம்பட்டி, அரவக்குறிச்சி, மொட்டையாண்டவர் கோவில் சிற்பம் சமண தீர்த்தங்கரரா? புதிய ஆய்வுகள்.

  1. பாஸ்கர் சொல்கிறார்:

    அரிய விஷயங்களைப் பற்றிய பதிவு. நன்றி!

    Like

  2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    அறியாத தகவல்கள் ஐயா
    நன்றி

    Like

  3. பிங்குபாக்: கணக்குவேலம்பட்டி, அரவக்குறிச்சி, மொட்டையாண்டவர் கோவில் சிற்பம் சமண தீர்த்தங்கரரா? புதிய ஆய்வ

  4. Sasikala Devi.V சொல்கிறார்:

    அருமை ஐயா. மிக்க நன்றி

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.