ஜோஹாரி விண்டோ மூலம் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்

ஓர் அலுவலகம் அல்லது ஒரு தொழிற்சாலையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போமா? இங்கு நீங்கள் வேலை செய்கிறீர்கள். உங்களுடைய நண்பர் அல்லது ஒரு சக பணியாளர் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுவதைப் பற்றிய கருத்தினை உங்களுக்குச் சொல்வதாக வைத்துக் கொள்வோம். இந்தச் சமயங்களில் நீங்கள் அவர்களுடன் உடன்படுவதுண்டா? சரி! அவ்வாறெனில் இது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள் உங்களுடன் அடிக்கடி நிகழ்வதுண்டா? உங்கள் நடவடிக்கைகளைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? உங்கள் நடவடிக்கை குறித்து மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்? உங்கள் அலுவலகத்திலோ தொழிற்சாலையிலோ நீங்கள் பெரும்பாலான சக ஊழியர்களைப் போல  இருந்தால், உங்கள் சக ஊழியர்களோ நண்பர்களோ உங்களைப்பற்றி உங்களுக்கு நிறையச் சொல்வதற்கு வாய்ப்புள்ளது. நீங்கள் இவற்றைச் சரி என்று ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம்.

இவ்வாறு அலுவலகம், தொழிற்சாலை போன்ற இடங்களில் ஒரு குழுவாக இணைந்து இயங்கும் தனிநபர்களிடையே சுய-விழிப்புணர்வு மற்றும் பரஸ்பரப் புரிதல் ஆகியவற்றை விளக்கவும் மேம்படுத்தவும் ஒரு மேலாண்மை உத்தியைப் (Management Technique) பயன்படுத்துகிறார்கள். இதற்கு ஜோஹாரி விண்டோ மாதிரி அல்லது ஜோஹாரி ஜன்னல் மாதிரி (Johari Window Model) என்று பெயர்.

ஜோசப் லஃப்ட் (Joseph Luft), ஹாரி இங்காம் (Harry Ingham) என்ற இரண்டு   அமெரிக்க உளவியல் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தனர். ஆய்வாளர்கள் இருவரும் 1955 ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட ஆய்வை மேற்கொண்டார்கள்.  இந்த ஆய்வு ஒரு குழு செயல்படும் விதத்தைப் பற்றியது. இந்தக் குழு செயல்படும் விதத்தைப் பற்றி விளக்குவதற்கு ஒரு வரைபடம் உருவாக்கினார்கள். இந்த வரைபடத்திற்கு இந்த இரண்டு  ஆய்வாளர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்துக்களைக் கொண்டு (JOseph Luft + HARry Ingham = JOHARI Window) ஜோஹாரி விண்டோ (ஜன்னல்)  என்று பெயரிடப்பட்டது.

ஜன்னல்: பெயரை ஏன் வைத்தார்கள்?

சரி! இதற்கு ஏன் ஜோஹாரி ஜன்னல் என்று பெயர் வைத்தார்கள்? இதற்கு விடை காண மற்றொரு கேள்வி.  வீட்டில் ஜன்னல் வைப்பது எதற்கு? வீட்டிற்குள் வெளிச்சம் வரும்; காற்றும் வருமல்லவா!  வீட்டினுள் இதமான சூழல் உருவாகும். மனமும் வீடு போலதான். ஜன்னல் வழியே மனதைப் பார்த்தால் குழப்பங்கள் தீரும். தெளிவு பிறக்கும்.

இது சரியாய் வருமா?

இது சரியாய் வருமா? ஜன்னல் வழியே என்னை மற்றவர்களும் பார்ப்பார்களே. இதை ஏன் நான் ஏற்றுக்கொள்ளவேண்டும்? என் வேலையை நான் பார்க்கிறேன். அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். நான் என்ன செய்கிறேன் என்று மற்றவர்களுக்கு ஏன் தெரியவேண்டும்? நான் என்ன செய்கிறேன் என்று தெரிந்துகொள்வதால் அவர்களுக்கு என்ன பயன்? ஒரு வேளை இவர்கள் எனக்கு இடைஞ்சலாகக் கூட இருக்கலாம் அல்லவா? வீட்டிற்குள் வெளிச்சம் வேண்டுமென்றால் மின்சார விளக்குப் போட்டுக்கொள்கிறேன். காற்று வேண்டுமென்றால் மின் விசிறி / ஏ.சி.    போட்டுக்கொள்கிறேன். மனதிற்குத் தெளிவு வேண்டுமென்றால் நான் என்னைத் தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

குடும்பம்

சரி அலுவலகத்தில் தான் இப்படி. உங்கள் வீட்டை எடுத்துக் கொள்வோம். உங்கள் மனக்கதவைப் பூட்டி வைத்துக்கொண்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ன விதமாகச் செயல்படுகிறீர்கள் என்று உங்கள் பெற்றோரோ, சகோதரர்களோ, மனைவியோ,  குழந்தைகளோ அறியாத வண்ணம் நீங்கள் செயல்பட்டால் நிலைமை என்னவாகும்? சொல்லுங்கள். நீங்கள் தனித்து இருந்துகொண்டு நீங்களே உருவாக்கிக் கொண்ட இருளில் சஞ்சரிக்கிறீர்கள் என்றுதானே பொருள். ஏன் இவர் இப்படி இருக்கிறார்? என்று குடும்பத்தினர் உங்களைப்பற்றிக் கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்கள். உறவினர்கள் என்ன ஆச்சு இவருக்கு?என்பார்கள். என் வேலை எனக்கு உன் வேலை உனக்கு என்று சொல்லிப் பாருங்கள்.  நீங்கள் உங்கள் போக்கிலே இருக்கிறீர்கள் என்று ஒதுங்கி விடுவார்கள். நண்பர்களுக்கு நீங்கள் போதிய இடம் தராமல், கருத்துக்களைப் பகிராமல் இருந்தால் “அவர் பொருட்படுத்திப் பேசவோ அல்லது பதில் சொல்லும் நிலையிலேயோ இல்லை” என்று சொல்லி அவர்களும் விலகிவிடுவார்கள்.

உங்களைப் பொறுத்த அளவில் உங்களால் இவர்களுக்குத் தொல்லை இல்லை. இவர்களாலும் உங்களுக்குத் இடைஞ்சல் இல்லை. உங்களை நீங்கள் பார்த்துக் கொள்கிறீர்கள். இவர்களை இவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாட்கள் கடந்து போகும். காலம் யாருக்காகவும் காத்திருக்காது. இதனால் யாருக்கு இழப்பு? உங்களுக்குத்தான்!

சரி! இதற்கு என்னதான் தீர்வு? ‘ஜோஹாரி விண்டோ’ எனக்கு வேண்டிய தீர்வு தருமா? என்ன?

ஜோஹாரி விண்டோ என்றால் என்ன?

ஆமாம். ஜோஹாரி விண்டோ என்றால் என்ன என்று முதலில் சொல்லிவிடுகிறேன். பிறகு எப்படி தீர்வு வரும் என்று பார்க்கலாம்.

உங்கள் செயல்கள் உங்கள் மனதின் வழியே வழிநடதப்படுகின்றன. இதனால் தான் உங்கள் மனதை அறிந்து கொள்ளுதல் மிகவும் முக்கியம். மனதைப் பார்ப்பது எளிதல்ல; கடினமானதுதான். ஜோஹாரி விண்டோ என்பது ஒரு ஜன்னல் என்று மனதில் உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஜன்னல் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கால் (quarter) பகுதியிலும் ஒரு கண்ணாடிக் கதவு பொருத்தப்பட்டுள்ளது.  ஜன்னலின் வலது மேற்புறத்தில் உள்ள கதவில் இரண்டு புறமும் பார்க்கும்படி ஒளி ஊடுருவும் வகையில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஜன்னலின் இடது மேற்புறமும் வலது கீழ்புறமும் ஒரு வழியாக மட்டும் பார்க்கும்படி கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜன்னலின் இடது கீழ்ப்புறம் ஒளி ஊடுருவ முடியாதபடி கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

johari-window

ஜோஹாரி விண்டோ 

1). திறந்த சுயம் (OPEN SELF)

முதலாவதாக நாம் பார்க்க இருப்பது  இரண்டு புறமும் பார்க்கும்படி ஒளி ஊடுருவும் வகையில் பொருத்தப்பட்ட கண்ணாடியைத்தான். இந்த ஜன்னலில் உள்ளிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளேயும் பார்க்க முடியும்.  இது போல உங்கள் மனத்தில் இருப்பதை நீங்களும் அறிந்து கொள்ளலாம். இது போல உங்களைச் சார்ந்த மற்றவர்களும் உங்களைப்பற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய பகுதியாகும். எனவே இது மனதின் திறந்த பகுதி அல்லது திறந்த அரங்கம் (open self (or arena) என்கிறது ஜோஹாரி விண்டோ. எடுத்துக் காட்டாக உங்கள் பயோ-டேட்டாவை எடுத்துக் கொள்வோம். இஃது உங்களைப் பற்றிய குறிப்பிட்ட தகவலைத் தருகிறது. உங்களுக்கும் இது பற்றி எல்லாம் தெரியும். மற்றவர்களுக்கும் உங்கள் பெயர், வயது, கல்வித் தகுதி, தெரிந்த மொழிகள், வேலைக்குத் தேவையான அறிவு, மென்திறன்கள் போன்ற எல்லாச் செய்திகளும் தெரியும். உங்களுக்கு உங்கள் பலம் என்ன பலவீனம் என்னவென்று தெரிவது போல உங்களை வேலையில் அமர்த்துவோரும் உங்கள் பலம் மற்றும் பலவீனம் பற்றித் தெரிந்து கொள்ளுவார்கள். உங்கள் பலம் பற்றிக் கருத்தில் கொண்டு நீங்கள் நேர்காணலில் தேர்வு பெற வாய்ப்புள்ளது. உங்கள் மொழிப்புலமை, மென்மையான திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளைத் திட்டமிட உங்கள் நிறுவனம் உங்கள் பயோ-டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ளும் அல்லவா? இது போல உங்கள் வருமான வரி விவர அறிக்கை (Income Tax Return), ரேஷன் அட்டை, கருத்து நேர்காணல் (Feedback Interview) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2). மறைக்கப்பட்ட சுயம் (HIDDEN SELF)

இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது ஜன்னலின் வலது கீழ்புறம் ஒரு புறம் மட்டும் பார்க்கும்படியான  வகையில் பொருத்தப்பட்ட கண்ணாடியைத்தான். இந்த ஜன்னலில் உள்ளிருந்து வெளியே பார்க்க முடியும். ஆனால் வெளியில் இருந்து உள்ளே பார்க்க முடியாது. இது போல உங்கள் மனத்தில் இருப்பதை நீங்களும் அறிந்து கொள்ளலாம். ஆனால் உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது உங்களைச் சார்ந்தவர்களுக்குத் தெரியாது. எனவே இது மனதின் மறைந்த சுயம் (முகப்பு) (“hidden self (facade)” என்கிறது ஜோஹாரி விண்டோ. உங்களுடைய பலம் உங்களுக்குத் தெரியும். சில பலவீனங்களும் தெரியும். நீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் மட்டுமே இவை மற்றவர்களுக்குத் தெரியும். எடுத்துக்காட்டாக உங்கள் அறிவு, முன் அனுபவம், செயல் திறன், உணர்வுகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், உங்கள் கருத்துகள், வெற்றிகள், தோல்விகள், ஆக்கம் என்பனவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் மட்டுமே அவர்கள் உங்கள் பலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; பலவீனத்தைப் போக்கலாம். நீங்கள் உங்கள் பகிர்தல் மூலம் உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் திறந்த சுயம் (அரங்கிற்கு) கொண்டு வரலாம்.  இந்த முயற்சியில் நீங்களே உங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் அல்லவா? வருமான வரி விவர அறிக்கை தாக்கல் செய்யும்போதோ அல்லது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அசையும் சொத்து, அசையாச் சொத்தின் முழு விவரம் அறிவிக்கும்போதோ இது  (திறந்த சுயம்) பொருந்தாமல் போகலாம்.

ஜன்னலின் இடது மேல்புறம் உள்ள மூன்றாவது கதவைப் பார்ப்பதற்கு முன்பு உங்களிடம் ஒரு வினா! கேட்கலாமா? அன்றாட வாழ்க்கையில் நீங்கள் எத்தனை விஷயங்களை – வெற்றிகள், தோல்விகள், மகிழ்ச்சி, துக்கம், இனிப்பு, கசப்பு, எதிர்பார்ப்புகள், எமற்றங்கள் ஆகிய எல்லாவற்றையும் – உங்கள் வாழ்க்கைத் துணைவரிடமோ, நண்பர்களிடமோ, சக ஊழியரிடமோ பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்? இல்லையென்றால் இப்போதாவது பகிர்ந்து கொள்ளுங்கள். தயங்கினால் நீங்களே உங்களுக்குள் சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் இவர்களுக்குத் தேவையில்லை… இதெல்லாம் இவர்களுக்குப் புரியாது… இவர்களுக்குப் புரிந்து கொள்ளும் பக்குவம் வரும்போது நானே சொல்லுவேன்.. எனக்கு எந்தவிதக் குழப்பமும் இல்லை.. நீங்கள் சொல்வது போல எனக்கு ஏதாவது நடந்தால் கடவுள் நிச்சயம் என்னைக் காப்பாற்றுவார். இப்படி எல்லாம்  நீங்கள் யோசித்தீர்கள் என்றால் பாவம் நீங்கள்.

சற்று யோசியுங்கள். ஒன்றிரண்டு நாட்கள் கூட எடுத்துகொள்ளுங்கள்.

3). குருட்டு சுயம் (BLIND SELF)

மூன்றாவதாக நாம்  பார்க்க இருப்பது  ஜன்னலின் இடது மேல்புறம் ஒரு புறம் மட்டும் பார்க்கும்படியான  வகையில் பொருத்தப்பட்ட கண்ணாடியைத்தான். இந்த ஜன்னலில் வெளியில் இருந்து உள்ளே பார்க்க முடியும்.  ஆனால் உள்ளேயிருந்து வெளியே பார்க்க முடியாது. இது சற்று ஆபத்தான கண்ணாடிக் கதவு. இந்த நிலையில் உங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களைச் சார்ந்தவர்கள் உங்கள் மேலுள்ள அக்கரையால் சற்று அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத (அல்லது ஒப்புக்கொள்ளாத) பலம் மற்றும் பலவீனம் பற்றித் தொகுத்து பட்டியலிட்டு  வைத்துள்ளார்கள். உங்களிடம் சொல்லத்தான் நினைக்கிறார்கள். ஆனால் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எனவே இதை குருட்டு சுயம் (“Blind self”) என்கிறது ஜோஹாரி விண்டோ.  உங்களைச் சார்ந்தவர்கள் உங்களுத் தெரியாததை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். நீங்களும் உங்களுக்குத் தெரியாததைப் பற்றிச் சிறிது சிறிதாகத் தெரிந்துகொள்கிறீர்கள். இப்போது உங்களுடைய திறந்த சுயம் விரிவடைகிறது. உங்கள் பலம் கூடுகின்றது. பலவீனம் குறைகிறது.

4). தெரியாத சுயம்  (Unknown Self)

நான்கவதாக நாம்  பார்க்க இருப்பது  ஜன்னலின் இடது கீழ்புறம் ஒளிபுகா கண்ணாடி பொருத்தப்பட்ட கதவைத்தான். இந்த ஜன்னலில் வெளியில் இருந்து உள்ளேயும் பார்க்க முடியாது.  அதுபோல உள்ளேயிருந்து வெளியேயும் பார்க்க முடியாது.  எனவே இதை ஒளிபுகாக் கண்ணாடி கொண்ட தெரியாத சுயம்  (Unknown Self) என்று அழைக்கப்படுகிறது. பலம் மற்றும் பலவீனங்களின் பெரிய அளவு (80%, 90% அல்லது 95% கூட) உங்களுக்கோ அல்லது உங்களைச் சார்ந்த மற்றவர்களுக்கோ தெரியாது. நீங்களோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களோ உங்களைப்பற்றிய இருண்ட பகுதியைத் தெரியாமல் தவிக்கிறார்கள். உங்கள் மனதின் மறைந்த சுயம் (Hidden Self) அல்லது குருட்டுச்  சுயம் (Blind Self) பகுதிகளில் உள்ள பலத்தைத் திறந்த சுயதிற்குக் (Open Self) கொண்டு சேர்ப்பது இதற்கு நல்ல தீர்வாக அமையும். உங்களை வெளிப்படுத்துவது (Disclosure) மற்றும் பின்னூட்டம் (Feedback) போன்ற முறைகளைப் பயன்படுத்தி இந்த நிலையை நீங்கள் அடைய முடியும்.

உங்களுக்கான தீர்வு கிடைத்ததா? உங்கள் அலுவலகத்தில் இந்த மேலாண்மை நுட்பத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் தொழிற்சாலை, மருத்துவ மனை, வங்கி, வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் போன்ற எல்லாவற்றிலும் இந்த முறையைப் பயன்படுத்தித் தீர்வு காணலாம். உங்கள் குடும்பம் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஜோஹாரி விண்டோ ஒரு வரப்பிரசாதம்.

Johari Window | Visual OD Models | Pinterest | Window, Psychology ... குறிப்புநூற்பட்டி

 1. 1 + 1 = 1.5 ? http://subbuthatha.blogspot.in/2013/04/1-1-15.html
 2. Johari Window Model and Free Diagrams https://www.businessballs.com/self-awareness/johari-window-model-and-free-diagrams-68/
 3. Management Case Studies: Johari Window in Action http://shyam.bhatawdekar.net/index.php/2010/01/23/johari-window-in-action/comment-page-1/
 4. Team Building Activities with less Pain, and more Gain http://www.tmsconsulting.com.au/team-building-activities-with-less-pain-and-more-gain-blog/
 5. The Johari Window http://peacegracelove.com/the-johari-window/

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in மேலாண்மை and tagged , , , , . Bookmark the permalink.

5 Responses to ஜோஹாரி விண்டோ மூலம் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்

 1. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  பயனுள்ள பதிவு ஐயா
  நன்றி

  Like

 2. பிங்குபாக்: ஜோஹாரி விண்டோ மூலம் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் – TamilBlogs

 3. விரிவான அலசல் பல நல்ல விடயங்களை தந்தது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.