பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1

பாதாமி குடைவரைகள், கர்நாடகா மாநிலம், பகால்கோடு மாவட்டம், பாதாமி வட்டம், பாதாமி (Badami) (Kannada (ಬಾದಾಮಿ) பின் கோடு 587201 என்னும் நகரில் அமைந்துள்ளது. இயற்கை அரணாக மணற்கற் குன்றுகளால் சூழப்பட்டுள்ள பாதாமிப் பள்ளத்தாக்கை மலப்பிராபா நதி பாய்ந்து செழுமைப்படுத்துகிறது. கி.பி. ஆறாம் நூற்றண்டில் பாதாமி சாளுக்கிய வம்சத்தின் தலைநகராக உயர்ந்த இந்த நகரத்தில் சாளுக்கிய மன்னர்கள் தங்கள் கலைத் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளக் குடைவரைக் கோவில்களையும் கட்டுமானக் கோவில்களையும் அமைத்தனர். முதலாம் புலிகேசியால் ஒரு கோட்டையும் அமைக்கப்பட்டது. பாதாமியை ஆண்டுவந்த முதலாம் கீர்த்திவர்மன், முதலாம் மங்களேசன் ஆகிய மன்னர்கள் நான்கு குடைவரைகளை இங்குள்ள உயர்ந்த மணற்குன்றுகளில் அகழ்ந்தனர். இந்தப் பதிவு சாளுக்கிய வரலாறு, முதலாம் குடைவரை பற்றி விவரிக்கிறது.

பாதாமி என்ற பெயர் அதன் பாறைகளின் பாதாம் (Almond) நிறத்தில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூர் முன்னால் வாதாபி என்று அழைக்கப்பட்டுள்ளது. “வாதாபி கணபதிம் பஜே” என்ற கர்நாடக இசைப் பாடல் கணபதி கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தக் கணபதி சிலை வாதாபியிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்ததாக ஒரு வரலாற்றுச் செய்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பல்வேறு புவியியல் மற்றும் கலாச்சாரம் கொண்ட ஒரு நிலமாகும் – “ஒரே மாநிலம், பல உலகங்கள்” (“One state, Many Worlds”) என்று குறிப்பிடுவர். பாதாமி பாகல்கோட்டிற்குத் தெற்கே 34 கி.மீ. தொலைவிலும்; ஐஹொளேயிலிருந்து 24 கிமீ. தொலைவிலும்; பட்டாடக்கல்லிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும்; மஹாகூடாவிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும்; தார்வாரிலிருந்து 89 கி.மீ. தொலைவிலும்; ஹோஸ்பேட்டிலிருந்து 102 கி.மீ. தொலைவிலும்; பெங்களூருவிலிருந்து 385 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 15°55′12″N அட்சரேகை (லாட்டிட்யூட்) மற்றும் 75°40′49″E தீர்க்கரேகை (லாங்கிட்யூட்) ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 586 மீட்டர் (1923 அடி) ஆகும். இந்தப் பண்டைய நகரம் சீரற்ற வரியுடன் கூடிய சிவப்பு மணற்கற் பாறைக் குன்றின் அடிவாரத்தில் ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளத்தாக்கின் நடுவில் பச்சைநிற நீர் நிறைந்த அகஸ்தியா தீர்த்தக்குளம் உள்ளது.  பாதாமியின் கோடைகால வெப்பநிலை 23 டிகிரி முதல் 45 டிகிரி வரை இருக்கும். குளிர்காலத்தில் இது 15 முதல் 29 டிகிரி வரை இருக்கும். இந்த பகுதி 50 சென்டிமீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது. இந்த நகரம் 4.23 கி.மீ பரப்பளவுடையது. 1921 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 25851 ஆகும்.

கிருஷ்ணா நதியின் துணைநதியான (tributary) மலபிரபா ஆறு (Malaprabha river) ஒரு சிறிய பள்ளத்தாக்கில் வளைந்து நெளிந்து பாய்கிறது. இந்தப் பள்ளத்தாக்கு இரு புறமும் தாழ்ந்த தட்டையான மேற்பரப்புடைய  மணற்பாறைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளது.  இந்த மலபிரபா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பாதாமி நகரம், பாதாமிச் சாளுக்கியர்களின் தலைநகராக கி.பி. 540 முதல் 757 ஆண்டு வரை தலைநகராக விளங்கியது.

சிவப்பு மணற்கற் பாறை

பெரும்பாலான மணற்கற்கள் குவார்ட்ஸ் (quartz) மற்றும் / அல்லது ஃபெல்ட்ஸ்பார் (feldspar) போன்ற மிகவும் பொதுவான தாதுக்களைக் கொண்டுள்ளது. மணற்கல் எந்த வண்ணதிலும் காணப்படலாம்.  என்றாலும் மிகவும் பொதுவான நிறங்கள்: பழுப்பு, மஞ்சள், சிவப்பு, சாம்பல், இளஞ்சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகியனவாகும். சிவப்பு மணற்கல் (சில நேரங்களில் அரினைட் (arenite) என்றும் அறியப்பட்டவை) என்பது முக்கியமாக மணல் அளவிலான கனிமங்கள் அல்லது பாறை வரிகளைக் (rock grains) கொண்டு வண்டலாகப் படிந்துருவான பாறைகள் (setimentary rock) ஆகும்.

பாதாமி சாளுக்கியர்கள் தங்கள் குடைவரைப் பணிகளுக்கு, நேர்த்தியான வரியினையுடையதும்  (finely-grained),  கிடைமட்ட அடுக்காக அமைந்ததுமான, செங்குத்தான மணற்கற் குன்றுகளையே (horizontally-stratified sandstone cliffs) தேர்ந்தெடுத்தனர். மென்மையான இந்தச் சிவப்பு மணற்கற் குன்றுகள் இவர்களின் குடைவரைக் கட்டடக்கலைப் பணியை மிகவும் எளிதாக்கிவிட்டது.  இந்தக் சிவப்பு மணற்கற் குன்றிலேயே நான்கு பெரிய குடைவரைக் கோவில்களையும் நேர்த்தியான புடைப்புச் சிற்பங்களையும்  அருமையான செதுக்கல்களையும் அமைத்துள்ளனர்.

பாதாமி மணற்கற் பாறை, குடைவரைக் கோவில்களுக்கும், கட்டுமானக் கோவில்களுக்கும் புகழ் பெற்றது. இந்த நகரம் பல்லாயிரக் கணக்கான உள்நாட்டு / வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும், வரலாற்றாசிரியர்களையும், தொல்லியல் ஆய்வாளர்களையும்  ஈர்க்கிறது.

சாளுக்கிய வம்சத்தினர் வரலாறு

சாளுக்கிய வம்சம் ஒரு சக்திவாய்ந்த இந்திய அரச வம்சமாகும். சாளுக்கியர்களின் ஆட்சி தென்னிந்திய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் எனலாம். இவர்கள் ஆட்சி கர்நாடகா வரலாற்றில் ஒரு பொற்காலம் என்று குறிப்பிடப்படுகிறது. பாதாமி சாளுக்கியர்கள். தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் (தக்காணம்) பெரும்பான்மையான பகுதிகளை  இரண்டு நூற்றாண்டுகளாக அதாவது கி.பி. 540 முதல் 757 வரை ஆண்டு வந்துள்ளனர். முதலாம் புலிகேசியின் பாட்டனான ஜெயசிம்மா பட்டாக்கால் பகுதியில் கி.பி. 500-520 ஆண்டுகளுக்கிடையே சாளுக்கிய ஆட்சியைத் தொடங்கியதாகக்  கார்ல் ஜே ஸ்மித் (Karl J. Schmidt) கூறியுள்ளார். முதலாம் புலிகேசி பட்டாடக்கல்லில் ஒரு குறுநிலத் தலைவனாகப் (Chieftain) பணியாற்றியவன் ஆவான்.

சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்பு, கடம்ப வம்சத்தவரை வெற்றிகொண்ட முதலாம் புலிகேசி (கி.பி. 543–566) சாளுக்கியப் பேரரசை நிறுவினான். கி.பி. 543 ஆம் ஆண்டு முதலாம் புலிகேசியின் ஆட்சியில் சாளுக்கிய நாட்டின் தலைநகர் பாதாமி ஆயிற்று. மலப்பிரபா ஆற்றையும் செங்குத்தான மலைப்பாறையையும் அரணாகக் கொண்ட பாதாமி நகரில் இம்மன்னன் ஒரு மலைக்கோட்டையையும் அமைத்துக்கொண்டான். இவனது சக ஆண்டு 565 (கி.பி. 543) வாதாபிக் கல்வெட்டு இவன் இயற்றிய அசுவமேத யாகம், இரண்யகர்பம்,  அக்னிஸ்தமா, பவுஷ்யுவர்ணா, பவுண்டரிகா போன்ற யாகங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

முதலாம் புலிகேசியைத் தொடர்ந்து முதலாம் கீர்த்திவர்மன் (Kirtivarma I) (ஆட்சிக்காலம் கி.பி. 566-597) சாளுக்கிய மன்னனாகத் தொடர்ந்தான். கீர்த்திவர்மன் கி.பி. 597 ஆம் ஆண்டு மறைந்தபோது இவனது மகன் இரண்டாம் புலிகேசி சிறுவனாக இருந்த காரணத்தால் இவனது தம்பி மங்களேசன் (Mangalesa) (ஆட்சிக்காலம் கி.பி.596 – 610) அரசாட்சியை ஏற்றான்.

இந்த நான்கு பாதாமி குடைவரைக் கோவில்களை  முதலாம் கீர்த்திவர்மனும் மங்களேசனும் கட்டியுள்ளனர். இந்த நான்கு குகைகளும் கி.பி. 575 ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குள் அகழப்பட்டிருக்கலாம். முதல் குகை கி.பி. 575 ஆம் ஆண்டு செதுக்கப்பட்ட பழமையான குடைவரையாகும்.

முதலாம் புலிகேசியின் மகனான கீர்த்தி வர்மனும் (கி.பி. 567-598) அவன் தம்பி மங்களேசனும் (கி.பி. 598-610) பாதாமிக் குடைவரைக் கோவிலைக் கட்டியுள்ளனர். இரண்டாம் புலிகேசியின் (கி.பி 609 – 642) ஆட்சியின் போது இப்பேரரசு தக்காணத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக முன்னணி பெற்றுச் சிறந்து விளங்கியது. இவன் ஹர்ஷவர்தனனை வென்று, நர்மதை ஆற்றைத் தாண்டி ஹர்ஷவர்தனனின் ஆட்சி பரவாமல் தடுத்த செயல் வரலாற்று ஆசிரியர்களால் புகழப்படுகிறது. இது மட்டுமல்லாமல்   பானவாசிக் கடம்பர்கள், தலைக்காடுக் கங்கர்கள், கொங்கண் மண்டலத்தை ஆண்ட மயிலர்கள் முதலியோரையும் தோற்கடித்தான். முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில்,  இவன் பல்லவர் மீது படையெடுத்துச் சென்று காஞ்சிபுரத்தை முற்றுகையிட்டான். இப்போரில் பல்லவர் படை தோற்கடிக்கப்பட்டது.

இந்தத் தோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக முதலாம் நரசிம்மவர்மன் கி.பி.642 ஆம் ஆண்டு பாதாமி நகர் மீது படையெடுத்தான். பல்லவர் படை வாதாபி நகரை எரித்துத் தீக்கிரையாக்கிப் பல்லவ குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கியது. இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டதாக ஊர்ஜிதமற்ற தகவல் உண்டு. இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன் வாதாபிக்கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.

பாதாமி குடைவரைகள்

பாதாமி நகரிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குறுகலான தெருக்களில் பெரிய வாகனங்கள் செல்வதற்குச் சற்றுத் தாமதமாகலாம். பாதாமிக் கோட்டையின் வடபுறம் அமைந்துள்ள  கோட்டை அடிவாரத்தில் இந்தியாத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

badami-cave-temple

பாதாமிக்  கோட்டையின் தென் பகுதியில் அமைந்துள்ள குன்றில்  இந்த நான்கு குகைகளும் அகழப்பட்டுள்ளன. பாதாமி குடைவரைகள் வடக்கில் இருந்து துவங்குகின்றன. மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நான்கு குடைவரைகளும் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. முதல் குடைவரை குறைந்த உயரத்தில் தொடங்குகிறது. நான்காம் குடைவரை மலை உச்சியில் அமைந்துள்ளது.

பாதாமிக் குடைவரைகள் முகப்பு (Facade), செவ்வக வடிவிலான மகாமண்டபம், அர்த்தமண்டபம் மற்றும் சதுர வடிவக் கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளன. இக்குடைவரைகளைக் காண்பதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மலையின் அடிவாரத்தில் கார் பார்க்கிங் வசதி உள்ளது. வாகனம் ஒன்றிற்கு ரூ. 20/- மட்டும் கட்டணம் வசூலிக்கிறார்கள். கேமிராவிற்குக் கட்டணம் கிடையாது. ஆனால் விடியோ இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. காலையில் வெய்யிலிற்கு முன் மலையேறிப் பார்த்துவிடுவது நல்லது.

வேலை நேரம்:- – திறந்திருக்கும் நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை: காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை. நுழைவுக் கட்டணம்: இந்திய குடிமக்கள் மற்றும் சார்க் நாடுகளின் பார்வையாளர்களுக்கு நபர் ஒன்றுக்கு ரூ. 15/- மட்டும். மற்றவர்களுக்கு நபர் ஒன்றுக்கு ரூ. 200/- சிறுவர்களுக்குக் கட்டணமில்லை.

தென்னிந்தியக்  கட்டடப்பாணி (திராவிடக் கட்டடப்பாணி) மற்றும் வடஇந்தியக் கட்டடப்பாணியின் (இந்திய-ஆரிய நாகரா கட்டடப்பாணி) ஆகியவற்றின் தாக்கங்களைக் கொண்டிருக்கும் இந்தக் குடைவரைகள் மெல்லிய மணற்பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கின்றன.

பாதாமியின் முதல் குடைவரை 

வடமேற்குப் பகுதியில் தொடங்கிச் சுமார் 25 படிகள் ஏறினால் இந்தக் குன்றின் முதல் நிலையை அடையலாம். தரைமட்டத்திலிருந்து 59 அடி  (18 மீட்டர்) உயரத்தில் இந்தக் குடைவரை அமைந்துள்ளது.

badami

பாதாமி முதல் குடைவரை PC: Wikimedia Commons

இங்கே நீங்கள் காண்பது பாதாமியின் முதல் குடைவரையாகும். முதல் குடைவரைக் கோவில்  சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்தக் குடைவரைக்கு முன்னால் அமைந்துள்ள சமதளத்திலிருந்து குடைவரையை அடைய எட்டுப் படிகள் உதவுகின்றன.  இந்தச் சமதளம் தற்காலத்தில் அமைக்கப்பட்டவையாகும். உபானம், ஜகதி, குமுதம், கண்டம் போன்ற உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளத்தில் நடனமாடும் குள்ளவடிவக் கணங்கள் (frieze of dancing ganas) செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

cave_no-_1_badami_cave_temples

பாதாமி முதல் குடைவரை PC: Wikimedia Commons

இக்குடைவரை முகப்பு (Facade), செவ்வக வடிவிலான மகாமண்டபம், அர்த்தமண்டபம் சதுர வடிவிலான கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. குடைவரையின் முகப்பு 70 அடி (21 மீட்டர்) x 65 அடி (20 மீட்டர்) அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளது. பாறைத்தளம் நன்கு சமன்படுத்தப்பட்டுள்ளது. முகப்பில் பட்டிகையை அடுத்து நான்கு முழு நான்முகத் தூண்களையும் (பிரம்மகாந்தத்தூண்) இரண்டு புறமும் இரண்டு நான்முக அரைத் தூண்களையும் காணலாம். மொத்தம் ஐந்து அங்கணங்களையும்  (தூண் இடைவெளிகள்) காணலாம். தூண்களுக்கு மேல் விரிகோணப் போதிகைகள் உத்தரம் தாங்குகின்றன. உத்தரத்திலிருந்து கூரை உறுப்புகள் ஆரம்பமாகின்றன. உத்தரத்திற்கு மேலே வாஜனம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.  கூரையின் நீட்சி வடிவமைக்கப்படாத கபோதமாக நன்கு சமன்படுத்தப்பட்டுள்ளது.

நடனமாடும் சிவன் புடைப்புச் சிற்பத் தொகுதி

குடைவரையின் முகப்பில் வடகிழக்குச் சுவரில் நடனமாடும் சிவன் (சிவ தாண்டவம்) புடைப்புச் சிற்பத்தொகுதி செதுக்கப்பட்டுள்ளது. சுமார்  5 அடி (1.5 மீ) உயரத்தில் அமைந்துள்ள இத்தொகுப்பில் சிவன் 18  கைகளுடன் நாட்டிய முத்திரைகளைக் காட்டியும் சில கைகளில் தமருகம் (உடுக்கை), அக்னி, நாகம், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களை ஏந்தியும் காட்சி தருகிறார். சிவனின் நடனம் வடிவியல் அமைப்பில் (geometric pattern) காட்டப்பட்டுள்ளது. சுவிஸ் கலை  வரலாற்றாசிரியரும் இந்தியவியலாளருமான  ஆலிஸ் போனர் (Alice Boner) சிவ தாண்டவத்தை “நேரப் பிரிவினைக் காட்டும் பிரபஞ்சச் சக்கரம்” (time division symbolizing the cosmic wheel) என்று வருணித்துள்ளார். இத்தொகுப்பில் கணேசன் மற்றும் நந்தி ஆகியோரையும் காணலாம். இத்தொகுப்பின் கீழே தாங்குதளத்தில் சிவகணங்களின் வரிசை செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

9841987336_e2ddd3ab32_z

வாயிற்காவலர் சிற்பத் தொகுதி

குடைவரையின் முகப்பில் தென்மேற்குச் சுவரில் சிவ துவாரபாலகர் என்னும் வாயிற்காவலர் இரு கைகளுடன் வலது கையில் திரிசூலம் ஏந்தியவாறு காட்சி தருகிறார். இச்சிற்பதிற்குக் கீழே ரிஷபகுஞ்சர சிற்பம் (காளை மற்றும் யானை உருவங்களின் தலைகள் ஒரே உருவாக இணைந்துள்ளது) தனியாகச் சட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது.  இடப்புறமிருந்து பார்த்தல் ஒரு யானையின் உருவும், வலப்புறமிருந்து பார்த்தால் காளையின் உருவும் தெரியும்.

55f62fd53c1d87edaa2f97d512171061

சிவ துவாரபாலகா PC: Rajusinh Chauhan Pinterest

முதலாம் பாதாமிக் குகையில் உள்ள ஹரிஹரா, அர்த்தநாரிஸ்வரா, மகிஷாசுரமர்த்தினி ஆகியவை புகழ் பெற்ற சிற்பத் தொகுதிகளாகும்.

மகாமண்டபம்

குடைவரையின் முகப்பை அடுத்து அமைந்துள்ள செவ்வக வடிவிலான மகாமண்டபத்தை இரண்டு முழுத்தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் தாங்குகின்றன. இந்தத் தூண்கள் ஒரு கூட்டு வடிவ (compound geometry) வடிவத்தில் அமைந்துள்ளன. தூண்களின் கீழ்ப்பகுதி நான்முக வடிவுடனும் மேற்பகுதி  வரியுடன் கூடிய  வட்ட வடிவத்துடனும்  (fluted round shaped) செதுக்கப்பட்டுள்ளன.  தூணின் தலைப்பகுதி (capital) பின் குஷன் (Pin Cushion) (Bulbous பெல்லாரி வெங்காயம் போன்ற குமிழ் வடிவில்) வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தூணின் தலைப்பகுதிக்கு மேலே அமைந்துள்ள பட்டைகளுடன் கூடிய விரிகோண தரங்கப் போதிகைகள்  (Ribbed Potikas with Median Bands) (தரங்கப் போதிகை = அலைகளுக்கு அலை அலையான மேற்பரப்புடன் நடுவில் சிறிய பட்டையையும்  கொண்டிருக்கும்). போதிகைக்கு மேல் அமைந்துள்ள கூரை உறுப்புகளில் உத்திரம், வாஜனம், வாலபி போன்றவை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

ஹரிஹரன் புடைப்புச் சிற்பத் தொகுதி

ஹரிஹரன் புடைப்புச் சிற்பத் தொகுதி குடைவரையின் வலப்புறச் சுவரில் அமைக்கப்பட்டுள்ளது. சங்கன் என்ற அரசன் சிவன் மீது பற்றும், பதுமன் என்ற அரசன் திருமால் மீது பற்றும் கொண்டு யார் உயர்ந்தவர் என்று வாதிட்டனர். வாதம் முற்றி அம்பாளிடம் முறையிட்ட போது ஹரியும் (திருமால்) ஹரனும் (சிவன்) ஒன்றே என்று உணர்த்த எடுத்த வடிவமே ஹரிஹரன் வடிவமாகும். ஹரியர்த்த மூர்த்தி மற்றும் சங்கரனாராயனர் என்ற பெயர்களாலும் இந்தக் கடவுள் வணங்கப்படுகிறார். இவ்வடிவத்தில் தலையின் ஒருபாதியில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி போன்றவையும் மற்றொரு பாதியில் கிரீடமகுடமும் காட்டப்பட்டுவது மரபு. நெற்றியில் நெற்றிக்கண், திருநீறு வலப்புறமும் திருநாமம் இடப்புறமும் காட்டப்பபட்டுள்ளன. இவர் வலது காதில் சர்ப்ப குண்டலமும் இடது காதில் மகரகுண்டலமும் அணிந்துள்ளார். நான்கு கைகளுடன் காட்சி தரும் ஹரிஹரர் வலது மேற் கையில் நாகமும் இடது மேற் கையில் சங்கும் ஏந்தியுள்ளார். கீழ் வலது கை முத்திரை காட்டாமலும் கீழ் இடது கை இடையில் இருத்தியவாரும் உள்ளன. இடுப்பில் ஒரு புறம் தோலாடை மறுபுறம் பட்டாடை; கழுத்தில் சரப்பளி; வயிற்றில் உதரபந்தம்; மார்பில் உபவீதமாக யஞ்யோபவிதம்; வலது புஜத்தில் நாகமும், இடது புஜத்தில் கைவளை, தோள்வளை எல்லாம் அணிந்து காட்சி தருகிறார். ஹரிஹரனின் வலப்புறம் பார்வதியும், நந்தியும் இடப்புறம் இலட்சுமியும், கருடனும் நின்றவாறு காட்சி தருகின்றனர். மேற்புறம் தேவதைகள் காட்டப்பட்டுள்ளனர்.

the-multipillared-hall-or-the-mantapa-verandah-badami-cave-no-1

6th_century_cave_1_harihara_28left_half_shiva2c_right_half_vishnu29_with_parvati_left2c_lakshmi_right2c_badami_hindu_cave_temple_karnataka_2

Badami Cave I: Harihara (fused equal Shiva-Vishnu) Wikimedia Commons

அர்த்தநாரீஸ்வரர் சிற்பத் தொகுதி

ஒரு சமயம் கைலாயத்தில் பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கினார். வேறொரு சமயம் பிருங்கி முனிவர் வந்தபோது பார்வதி சிவனை விட்டுப் பிரியாமல் நெருங்கி அமர்ந்து கொண்டார். முனிவரும் வண்டு வடிவில் சிவனின் திருமுடியை மட்டும் வலம் வந்து வணங்கினார். கோபமுற்ற பார்வதியோ, பிருங்கி முனிவரை வலுவிழக்குமாறு சபிக்கிறார்.. வலுவிழந்த பிருங்கி முனிவர் நடக்கமுடியாத நிலையிலும், தன் நிலையிலிருந்து மாறவில்லை. தன் பக்தனை ஆசிர்வதித்த சிவனும், பிருங்கிக்கு மூன்றாவது காலை அருளினார்.

பின்பு பார்வதி சிவனிடம் முனிவர் தன்னை ஒதுக்கிவிட்டதாக முறையிட்டார். முனிவர் உலக இன்பங்களை விரும்பி இருந்தால் தேவியை வணங்கி இருப்பார். ஆனால் அவர் மோட்சத்தைக் கருதியதால் என்னை மட்டும் வணங்கி இருப்பார் போலும் என்று பதிலுரைத்தார். ஈசனின் பதிலில் சமாதானம் அடையாத அன்னை ஈசன் திருமேனியில் தாமும் இடம்பெற எண்ணி வேதாரண்யத்தை அடுத்த எட்டி வனத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து கேதாரீஸ்வரர் விரதம் மேற்கொண்டார். அன்னையின் தவத்தால் மகிழ்ந்த சிவன் தமது திருமேனியில் இடப்பாகத்தைத் தேவிக்கு அளித்தார். இந்தத் திருவுருவமே அர்த்தநாரீஸ்வரர் ஆவார்.

ஒருபுறம் ஜடாபாரம், மறுபுறம் கரண்ட மகுடம். ஒரு காதில் சர்ப்ப குண்டலம், மறு காதில் மகரகுண்டலம். பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் மூன்று அல்லது நான்கு கரங்களுடன் வடிக்கப்படுவார். இந்தச் சிற்பத்தில் நான்கு கரங்களுடன் வலது மேற்கரங்களில் மழுவும், இடது மேற்கரத்தில் மலரும் ஏந்தியுள்ளார். கீழேயுள்ள கரங்களில் வீணை ஏந்தியுள்ளார். ஒரு புறம் தோலாடை மறுபுறம் மேகலை; கழுத்தில் சரப்பளி; வயிற்றில் உதரபந்தம்; மார்பில் உபவீதமாக யஞ்யோபவிதம்; வலது புஜத்தில் நாகமும், இடது புஜத்தில் கைவளை, தோள்வளை எல்லாம் அணிந்து காட்சி தருகிறார். இந்தச் சிற்பத்தில் நந்தி இடம்பெறுகிறது. ஒரு சில தலங்களில் அபூர்வமாய் நந்தி இல்லாமல் வடிப்பதும் உண்டு. பிருங்கி முனிவர் எலும்பும் தோலுமாக அர்த்தநாரீஸ்வரரை வணங்குவது போலக் காட்டப்பட்டுள்ளது. அர்த்தநாரீஸ்வரருக்கு இடப்புறம் காட்சிதரும் பெண் பார்வதி என்று ஒரு சாராரும் பணிப்பெண் என்று மற்றொரு சாரரும் கருதுகின்றனர். இந்தத் தொகுதியில் மேற்புறம் தேவதைகள் காட்டப்பட்டுள்ளனர்.

6th_century_ardhanarishvara_28left_half_shiva2c_right_half_parvati29_with_skeletal_bhringi2c_nandi2c_female_attendant_28cave_1292c_badami_hindu_cave_temple_karnataka_2

Badami Cave I: Ardhanarishvara Panel PC: Wikimedia Commons

நடனமாடும் சிவனுக்கு வலதுபுறம் உள்ள சிற்பத்தொகுதி எருமைத் தலை அரக்கனைக் கொன்ற துர்கா தேவியான மஹிஷசூரமர்தினி ஆகும். ஐஹோளே ராவணபாடி குடைவரையில் மகிஷாசுரமர்த்தினியின் மாறுபட்ட புடைப்புச் சிறபம் காட்டப்பட்டுள்ளது. இது போல ஒரு சிற்பத் தொகுதியை ஐஹோளே துர்கா கோவிலிலும் காணலாம். பட்டாடக்கல் மல்லிகர்ஜுணா கோவிலுள்ள மகிஷாசுரமர்தினியின் உருவம் மாமல்லபுரத்து மகிஷாசுரமர்தினியை நினைவு படுத்துகிறது.

durgamahishasura-mardhini-the-slayer-of-mahishasura-badami-cave-no-1

இந்தக் குகையினுள்ளே சாளுக்கியர்களின் குலதெய்வமான கார்த்திகேயன் மயில்வாகனத்தில் ஊர்ந்தபடி காட்சி தருகிறார்.

kartikeya-badami-cave-no-1

முதலாம் குடைவரையின் மகாமண்டபக் கூரையில் ஐந்து சிற்பத் தொகுப்புகள் செதுக்கப்பட்டுள்ளன. மையமாக அமைக்கப்பட்டுள்ள தொகுப்பில் நாகராஜன் உருவம் மார்பளவு மனித வடிவத்திலும் உடல் பாம்பு வடிவத்திலும் காட்டப்பட்டுள்ளது. நாகராஜனின் மார்பளவு மனித வடிவம் நன்றாகக் காட்டப்பட்டுள்ளது. பாம்பின் உடல் சுருண்டுள்ளது. இந்தத் தொகுப்பின் இருபுறத்திலும் பறக்கும் காதல் தேவதைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுப்பில் 2,5 விட்டம் கொண்ட ஒரு புடைப்புச் சிற்பத்தில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் காட்டப்பட்டுள்ளனர். ஆண் ஒரு வாளை ஏந்தியபடி தோன்றும் யட்சன் ஆவான். பெண் பறக்கும் முக்காட்டுடன் தோன்றும் அப்சரா ஆவாள். அடுத்து உள்ள தொகுப்பில் இரண்டு சிறிய நபர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இறுதியில் காணப்படும் தொகுப்புகளில் தாமரையின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குடைவரையின் கூரையில் வித்யாதரத் தம்பதியினரின் உருவங்களும் பாலுணர்வுடன் இணையும் நிலையில் மிதுனத் தம்பதிகளும் காட்சி தருகிறார்கள்.

தொகுப்பில் காட்டப்பட்டுள்ள அனைத்து உருவங்களும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சுற்றி விலங்குகள் மற்றும் பறவைகள் காட்டப்பட்டுள்ளன. தொகுப்புகள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டுள்ளன.

the-five-hooded-nagaraja-the-king-of-serpents-carved-in-the-mantapas-ceiling-badami-cave-no-1

குடைவரையின் பின்புறம் உள்ள சுவரில் ஒரு சதுர வடிவக் கருவறை அகழப்பட்டுள்ளது. கருவறையில் சதுர வடிவ ஆவுடையுடன் ஒரு சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. கருவறைக்கு நேர் எதிரில் மண்டபத்தில் ஒரு நந்திசிலை கருவறையை நோக்கி அமர்தப்பட்டுள்ளது. நந்தியின் தலை சிதைந்துள்ளது.

முதலாம் குடைவரையைச் சுற்றிப் பார்த்தோம். குடைவரையில் பல சிற்பத் தொகுப்புகளைக் கண்டோம். நேர்த்தியான செதுக்கல்களையும் கண்டோம். அடுத்த குடைவரைக்குச் செல்வோமா? குடைவரை இரண்டும் குடைவரை மூன்றும் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

குறிப்புநூற்பட்டி

 1. மகேசுவரமூர்த்தங்கள் 13 / 25 ஹரிஹர்த்தர் http://areshtanaymi.in/?p=61
 2. Badami: Chalukyans’ magical transformation Deccan Herald July 26, 2005 https://web.archive.org/web/20061007040120/http://www.deccanherald.com/deccanherald/jul262005/spectrum1422512005725.asp
 3. Badami Cave Temples – Four Ancient Rock cut Temples http://www.wondermondo.com/Countries/As/India/Karnataka/Badami.htm
 4. Rich slice of history Suganthy Krishnamachari The Hindu MAY 17, 2013 http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/rich-slice-of-history/article4722499.ece
 5. The Remarkable Cave Temples of Southern India. George Michell. https://www.smithsonianmag.com/travel/remarkable-cave-temples-architecture-nagara-dravidian-southern-india-deccan-chalukya-180957971/

 

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தொல்லியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

10 Responses to பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1

 1. பிங்குபாக்: பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 1 – TamilBlogs

 2. அழகிய புகைப்படங்களும், விரிவான தகவல்களும் அருமை நண்பரே…

  Like

 3. Aekaanthan சொல்கிறார்:

  நேற்று இரவு க்ரிக்கெட்டுக்குப்பின் படுத்துவிட்டேன் காலையில் நியூஸைக் குடைந்துகொண்டிருந்தேன். இப்போதுதான் ஒரு கப் காப்பியுடன் உங்கள் பக்கத்திற்கு வருகிறேன். க்ரிக்கெட் மேட்ச்சிற்குப்பின் முடிந்தால் என் வலைப்பக்கத்துக்கு வாருங்களேன் என்று நீங்கள் எழுதியிருந்ததில், நீங்களும் ஐபிஎல்-பற்றி ஏதோ எழுதியிருக்கிறீர்களோ என நினைத்தேன்.

  கர்னாடகாவின் பதாமி குடைவரைக் கோவில்கள், சிற்பங்கள் பற்றி மிகவிரிவாக, நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இப்போதுதான் இதுபற்றி அறிகிறேன். கூடவே சாளுக்கியர்களின் சரித்திரமும் வருகிறது உங்கள் பக்கத்தில். (எப்போதோ சிறுவயதில் சாளுக்கியர்கள் பற்றி சரித்திரப்பாடத்தில் படித்தது-இரண்டாம் புலிகேசி நினைவிலுள்ளான்!). இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் அழகுசேர்க்கின்றன. அர்த்தநாரீஸ்வரரும், சிவனும், கார்த்திகேயனும் அழகுற அமைக்கப்பட்டிருக்கவேண்டும் அந்தக்காலத்தில். காலப்போக்கில், போர்கள் ஏற்படுத்திய அழிவுகளினாலும், நமது மக்களின் பொறுப்பற்றதன்மையினாலும் இவை சிதைந்து காணப்படுவது நம் துர்பாக்கியம்.

  குடைவரைகள் இரண்டும், மூன்றும் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதா! எழுதுங்கள் . நிதானமாகப் படிக்கிறேன்.

  நீங்கள் புதுக்கோட்டைக்காரர், காரைக்குடி/சென்னையில் படித்தவர், டிஆர்டிஓ-வில் பணி.இலக்கியம், வரலாறென ஈடுபாடு. .சுவாரஸ்யம். நானும் புதுக்கோட்டைக்காரன் தான். ஹிஸ் ஹைனஸ் தி ராஜாஸ் காலேஜில் (அப்போது H.H.The Raja’s College -இப்போதைய மன்னர் கல்லூரி) படித்தவன். வெளியுறவுத்துறையில் பணிபுரிந்ததால் உலகம் சுற்றியவன்..தொடர்பிலிருப்போம்.

  Like

  • முத்துசாமி இரா சொல்கிறார்:

   தங்கள் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி. மிக விளக்கமான கருத்துகள். மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி மாணவர் என்று அறிந்து மகிழ்ச்சி. எந்த ஆண்டு?தங்கள் விரிவான பதிவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி.

   Like

 4. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  வாழ்வில் ஒருமுறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆவலைத் தங்களின் பதிவு தூண்டிவிட்டுவிட்டது ஐயா
  அவசியம் காண வேண்டிய இடம்
  நன்றி

  Like

 5. பிங்குபாக்: பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 2 | அகரம்

 6. பிங்குபாக்: பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 2 – TamilBlogs

 7. பிங்குபாக்: பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 3 | அகரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.