ஒவ்வொரு ஆண்டும் “ஏப்ரல்-18” ஆம் தேதி உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று ஏப்ரல் 18 ஆம் தேதி. உலக பாரம்பரியம் என்றால் என்ன? ஒவ்வொரு நாட்டிற்கும் பெருமையும் புகழும் சேர்ப்பது அந்த நாட்டின் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்கள் (Historical Monuments), கல்வெட்டுகள் (Inscriptions), ஓவியங்கள் (Paintings) மற்றும் சிற்பங்களே (Sculptures) ஆகும். இந்தப் பாரம்பரிய சின்னங்கள் ஓர் இனத்தையோ, காலத்தையோ, நிலப்பரப்பையோ அல்லது நாட்டின் கலாசாரத்தையோ பிரதிபலிக்கக் கூடியவையனவாகும். உலகம் முழுவதிலும் உள்ள பாரம்பரியச் சின்னங்கள் மனிதகுலம் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய செல்வங்களாகும். இந்தப் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கவும், பராமரிப்பை ஊக்குவிக்கவும் சர்வதேச அளவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி துனிசியக் குடியரசின் தலைநகரான துனிசியா நகரில் சர்வதேச மாநாடு மற்றும் நினைவுச்சின்னங்கள் (International Council for Monuments and Sites (ICOMOS) நடத்திய மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites) கொண்டாடுவதற்கான பரிந்துரையை மாநாட்டின் நிர்வாகக்குழு அங்கீகரித்தது. இந்த நிர்வாகக் குழு இந்தச் சர்வதேச நினைவிடங்கள் தினத்தைக் கொண்டாடுவதற்கான நடைமுறை ஆலோசனையையும் தேசியக் குழுக்களுக்கு (National Committees) வழங்கியது. இந்தப் பரிந்துரையை யுனெஸ்கோ நிறுவனம் (UNESCO) 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தன்னுடைய பொது மாநாட்டில் விவாதித்த பின்பு ஏற்றுகொண்டு அங்கீகரித்தது. இதன்படி உறுப்பு நாடுகள் (Member States) ஏப்ரல் 18 ஆம் தேதி உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடி வருகின்றன.
உலகப் பாரம்பரிய தினத்தன்று என்னென்ன செய்யலாம் என்றும் இந்த மாநாடு பரிந்துரைத்துள்ளது. இதன்படி இந்த நாளில்:
- வரலாற்றுச் சின்னகளின் (Historical Monuments) அருமை பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரித்தல்;
- உலகப் பாரம்பரிய தினத்தன்று கட்டணம் ஏதுவுமின்றி இலவசமாக வரலாற்றுச் சின்னகளிலும் (Historical Monuments) மற்றும் அருங்காட்சியகங்களிலும் (Museums) மக்களை அனுமதித்தல்;
- உலகப் பாரம்பரிய தினத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவித்தல்;
- பொதுவான இடங்களில் இப்பொருள் பற்றி விரிவான விவாதங்கள் நடத்துதல்;
- சிறப்புப் புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள் (Stamps), போன்றவற்றை அச்சிட்டு வெளியிடுதல்;
- பாரம்பரியத்தைக் காக்க உழைத்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புப் பரிசளித்துக் கௌரவித்தல்;
- பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நாட்டின் வரலாறு, பாரம்பரியம், வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய விழிப்புணற்சியூட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவது
என்று சில பரிந்துரைகளை ICOMOS வழங்கி உள்ளது.
உலகில் 1,052 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. இவற்றில் 814 சின்னங்கள் கலாச்சாரம் சார்ந்தவை; 203 சின்னங்கள் இயற்கை சார்ந்தவை; மீதி 35 சின்னங்கள் பொதுவானவை ஆகும். இத்தாலியில் 53 சின்னங்களும் சினாவில் 52 சின்னங்களும் உள்ளன.
இந்தியாவில் 36 நினைவுச் சின்னங்கள் பாரம்பரிய சின்னங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருதுகோளை (theme) மையமாகக் கொண்டு உலகப் பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதுண்டு. அதே போல் 2018 ஆம் ஆண்டிற்கான கருதுகோள் “தலைமுறைகளுக்கான பாரம்பரியம்” என்று தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தக் கருதுகோளின் அடிப்படையிலேயே இந்தத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உலகப் பாரம்பரிய வாரம் நவம்பர் 19 முதல் 23 வரை கொண்டாடப்படுகிறது. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில், கலங்கரை விளக்கம், ஐந்து ரதம் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை இன்று இலவசமாகப் பார்வையிடலாம்.
இன்று ஒரு நாள் மட்டும் நம் நாட்டின் வரலாற்றுச் சின்னங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதுமா? தமிழகத்தில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் கட்டுப்பாட்டில் பல நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. மாநில தொல்லியல் துறையினர் சில சின்னங்களைப் பராமரித்து வருகின்றனர். மாவட்டம் தோறும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது அரசின் கனவு. தற்போது தமிழ்நாட்டில் தொல்லியல் துறையின் சார்பில் 14 இடங்களில் மட்டுமே அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்திய அரசு தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் கல்வெட்டுப் பிரிவு 1887 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. இப்பிரிவு இன்றளவில் சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் உள்ளது. இவற்றுள் தமிழ்க் கல்வெட்டுகள் மட்டும் ஏறத்தாழ அறுபதாயிரம் என்ற அளவில் இருக்கலாம். இக்கல்வெட்டுகளைப் பற்றிய சிறு குறிப்புகள் மட்டும் (ஆங்கிலத்தில்) குறிப்பிட்ட ஆண்டுகளில் அச்சிடப்பட்டு “இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை (Annual Report on Indian Epigraphy)” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. என்றாலும் இத்தகைய ஆண்டறிக்கையில் கல்வெட்டுகளின் முழுமையான பாடங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியக் கல்வெட்டுகள் (South Indian Inscriptions (S.I.I) என்ற தலைப்பில் இதுவரை பதினெட்டுத் தொகுதிகளில் சுமார் 15,400 தமிழ்க் கல்வெட்டுகள் மட்டுமே கல்வெட்டுப் பாடங்களுடன் முழுமையாக அச்சிடப்பட்டுள்ளன. குறிப்பாக 1908 ஆம் ஆண்டு வரை இந்தியத் தொல்லியல் துறையினால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் அனைத்தும் அச்சடித்து வெளியிடப்பட்டுள்ளன. (1905 ஆம் ஆண்டுத் தொகுப்பு வெளிவரவில்லை!). 1908 ஆம் ஆண்டுக்குப் பின்பு படியெடுத்த கல்வெட்டுகளுள், மிகக் குறைந்த அளவு மட்டுமே சில தொகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுகளைக்கூட இவர்களால் இன்னும் முழுமையாக வெளியிட இயலவில்லை.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை (அரசு தொல்லியல் துறை, சென்னை), கிட்டத்தட்ட 5,000 கல்வெட்டுக்களைத் தொகுத்து பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இவற்றுள், தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுத்து வந்த சில தமிழ்நாட்டுத் தொகுப்புகளில் மறுபதிப்புபெற்றுள்ளன. அவைமட்டுமின்றி, தென்னிந்தியக் கோயில் கல்வெட்டுகள், புதுக்கோட்டைக் கல்வெட்டுகள், திருவாங்கூர் கல்வெட்டுகள் என தலைப்புகள் பல தொகுப்புகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன. வேறு சில இதழ்களிலும் பல கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. தொல்லியல் துறையினர் கண்டறிந்த 500 க்கும் மேலான செப்பேடுகளில் 200 க்கும் குறைவான செப்பேடுகளை பற்றிய பாடங்களை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக இதுவரை படியெடுக்கப்பட்ட 60,000 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில், 25000 க்கும் குறைவான கல்வெட்டுகளின் பாடம் மட்டும் (வரிவடிவங்கள்) பதிப்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 35,000 கல்வெட்டுப் படிகள் மைசூரில் உள்ள ஒரு தொல்லியல் துறை காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகளை கடந்த சில படிகள் சிதைந்து வருகிறதாம்.
ஆண்டுதோறும் உலகப் பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டாலும் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நூறு ஆண்டுகள் பழைமையான அனைத்துப் பொருட்களுமே தொல்லியல் பொருட்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. பல தொல்லியல் சின்னங்களை நாம் அலட்சியப்படுத்தி வருகிறோம். கல்வெட்டுகள், சிற்பங்களைச் சிதைத்தல், இவற்றின் அருகில் தன் பெயர் கீறுதல், மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டில்களை உடைத்துப் போட்டுவிட்டுச் செல்லல் போன்ற செயல்கள் அன்றாடம் நடந்த வண்ணம் உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பழமை வாய்ந்த பல ஈமக்காடுகள் (Megalithic Sites) ரியல் எஸ்டேட் புள்ளிகளால் வளைக்கப்பட்டு வருகின்றன. தென்மாவட்டங்களில் சமணர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் வரலாற்றுச் சின்னங்கள் அடங்கிய குன்றுகள் கல்குவாரிகளாக மாறிக் காணாமல் போய்விட்ட வரலாற்றைச் செய்தித்தாள்களில் படித்துவருகிறோம்.
இன்று உலகப் பாரம்பரிய தினம். பொதுமக்கள் நம் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதில் ஒருங்கினைந்து செயலாற்ற வேண்டியது இன்றியமையாதது. கோவில்கள், மண்டபங்கள், திருக்குளங்கள், சிற்பங்கள், வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், நடுகற்கள், ஈமச்சின்னங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம். தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு ஊருக்கும் பொறுப்பு உள்ளது. இன்று எல்லோரும் பாரம்பரியம் பேணுவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்வோமா?
குறிப்புநூற்பட்டி
- இருட்டில் கிடக்கும் தமிழக வரலாற்றுச் சான்றுகள்! மே.து.ராசுகுமார் http://www.tamilheritage.org/thfcms/index.php/2009-06-06-19-31-44/2009-06-06-19-32-59
- Did you know that 18 April is World Heritage Day? http://www.gdrc.org/heritage/world-heritage-day.html
- World Heritage Day 2017: Celebrating The Concept Of Sustainable Tourism https://www.huffingtonpost.com/entry/world-heritage-day-2017-celebrating-the-concept-of_us_58f5b51ce4b04cae050dca7c
அருமையான பதிவு ஐயா
உலகப் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்போம்
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா.
LikeLike
அருமையான வராலாற்று பதிவு , வாழ்த்துக்கள்
வணக்கம்,
http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
LikeLike
இன்றுதான் விடயம் அறிந்தேன் நண்பரே…
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா.
LikeLike