பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 2 (தொடர்ச்சி)
பாதாமியில் முதன் முதலாவதாக அமைக்கப்பட்ட இந்த மூன்றாம் குடைவரை, தக்கணப் பகுதியில் அமைந்துள்ள இந்துக் குடைவரைகளிலேயே, மிகவும் தொன்மையானது. இங்கு காணப்படும் சாளுக்கிய மன்னன் கீர்த்திவர்மனின் கி.பி. 578 ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இந்தக் குடைவரை கி.பி. 578 – 580 ஆம் ஆண்டுகளுக்கிடையே அகழப்பட்டதாகப் பதிவு செய்கிறது. மூன்றாம் குடைவரையை அடுத்து இந்த இரண்டாம் குடைவரையும், இதன்பின் முதலாம் குடைவரையும், இறுதியில் நான்காம் குடைவரையும் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வடக்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடைவரையும் விஷ்ணுவிற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாதாமியில் உள்ள மற்ற மூன்று குடைவரைகளைக் காட்டிலும் அளவில் பெரியது. விஷ்ணுவின் அவதாரங்களான திரிவிக்கிரமா, ஆனந்தசயனா, வாசுதேவா, வராஹா, ஹரிஹரா மற்றும் நரசிம்மர் ஆகிய சிற்பத் தொகுப்புகள் இக்குடைவரையின் சுவர்களில் நேர்த்தியாகச் செதுக்கப் பட்டுள்ளன. இந்த மூன்றாம் குடைவரையில் அமைந்துள்ள சிற்பங்கள் எல்லோரா குகைகளில் காணப்படும் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடக்கு தக்காண (டெக்கான்) பாணிச் சிற்பங்களைப் போலவே உள்ளன. இந்தப் பதிவு பாதாமியின் மூன்றாம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது.

பாதாமிக் குடைவரை 3 PC: Wikimedia Commons
இரண்டாம் குடைவரையைப் பார்த்து முடித்து மூன்றாம் குடைவரைக்குச் செல்ல முயன்றபோது பள்ளி மாணவர்களின் குழு ஒன்று மூன்றாம் குகையை நோக்கிச் சென்றது. தனித்தன்மை வாய்ந்த மூன்றாம் குடைவரையைப் பார்ப்பதற்குச் சற்று அதிக நேரம் தேவைப்படலாம் என்று தோன்றவே குகைக்கு எதிரே இருந்த பரந்த திறந்தவெளியில் நின்றவாறே எட்டிப்பார்த்தோம். கீழே பாதாமியின் எழில்மிக்க பள்ளத்தாக்கு; நகரின் நெருக்கமான தெருக்களில் அமைந்த வீடுகள், பூதநாதா கோவில், பச்சை வண்ண நீருடன் அகஸ்தியா தீர்த்தக் குளம், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் (ASI) அருங்காட்சியகம் (Museum), அழகான புல்தரை (Lawn) எல்லாம் பறவைக் காட்சியாக எங்கள் கண்களில் விரிந்தது. குடைவரையின் பின்புலத்தில் செந்நிறத்தில் பாதாமிக் குன்று பளபளத்தது. சற்று நேரத் தாமதத்திற்குப் பின்னர் மூன்றாம் குடைவரையை நோக்கிச் சென்றோம். மூன்றாம் குடைவரையைச் சென்றடைய 54 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இவற்றுள் பாதிப் படிகள் பாறையைச் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளன. மீதி செயற்கையாய் அமைத்த படிகள்.
இருபது படிகளைக் கடந்த பின்பு ஒரு சிறு சமதளம் வருகிறது. சமதளத்தில் ஒரு சுவர் எழுப்பி ஒரு நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலில் புகுந்து பதினைந்து படிகளைக் கடந்து சென்றால் மிகப்பெரிய சமதளத்தை அடையலாம். இந்தச் சமதளம் தற்காலத்தில் அமைக்கப்பட்டவையாகும். சமதளத்தின் ஒரு புறம் பெரிய பாறை அமைந்துள்ளது. சமதளத்தின் மறுபுறம் செந்நிற மலைகளின் பின்புலத்தில் பாதாமியின் மூன்றாம் குடைவரை அழகாகக் காட்சியளிக்கிறது. சமதளத்தின் இடது புறம் சென்று பார்த்தால் முன்பு கண்ட வீடுகள், பூதநாதா கோவில், அகஸ்தியா தீர்த்தக் குளம் இன்னும் தெளிவான பறவைக் காட்சிகளாகக் கண்டோம்.

மூன்றாம் குடைவரையின் தளவமைப்பு (Layout) ; 1: விஷ்ணு; 2: திரிவிக்கிரமா; 3: சேஷ நாகத்தின் மீது அமர்ந்துள்ள பரவாசுதேவா (விஷ்ணு); 4: விஷ்ணுவின் வராஹ அவதாரம், பூமியைத் தாங்கிப் பிடிக்கிறார்; 5: ஹரிஹரா (பாதி சிவன், பாதி விஷ்ணு); 6: விஷ்ணு நரசிம்மர் நின்ற கோலம்; 7: கருவறை. மண்டபக் கூரையில் சிற்ப அணிகள் வேதகால மற்றும் புராண கால இந்துக் கடவுளர்கள் தேவதைகள். PC: Wikimedia Commons
மூன்றாம் குடைவரை மற்ற எல்லாக் குடைவரையைவிடப் பெரியது. மூன்றாம் குடைவரையின் தரைத் தளவமைப்பு (floor plan) மேலேயுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. வடக்குத் திசையை நோக்கி அமைந்துள்ள இக்குடைவரை முகப்பு (Facade), செவ்வக வடிவிலான மகாமண்டபம், முகமண்டபம் சதுர வடிவிலான கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. குடைவரைக்கு முன்னால் அமைந்துள்ள சமதளத்திலிருந்து குடைவரையை அடைய, இரு புறமும் கைபிடிச்சுவருடன் கூடிய, எட்டுப் படிகள் உதவுகின்றன. தாங்குதளத்தின் (Plinth) உறுப்புகளை அடையாளம் காண முடியவில்லை. தாங்குதளத்தில் நடனமாடும் குள்ளவடிவக் கணங்கள் (frieze of dancing ganas) செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கணங்கள் தொடர்ச்சியாக ஒரே வரிசையில் தொடர்ச்சியாகச் செதுக்கப்பட்டுள்ளதைப் பாதாமியின் முதலிரண்டு குடைவரைகளில் நாம் கண்டோம். இங்கு இரண்டு கணங்கள் கொண்ட சிறு சிறு குழுக்களாக இணைத்து தாங்குதளத்தின் மாடக்குழிகளில் (niches) செதுக்கப்பட்டுள்ளன.
“எல்” வடிவில் அமைந்துள்ள மூன்றாம் குடைவரை முகப்பின் (Facade) மொத்த அகலம் 70 அடி (21 மீ) ஆகும்; உட்பகுதி தரைவழி அகலம் (interior carpet width) 65 அடி (20 மீ) ஆகும். இந்த முகப்பு இந்தியாவில் உள்ள குடைவரை முகப்புகளிலேயே மிகவும் விரிவானது. எல்லோராவின் கைலாசா குடைவரை முகப்பு இதைவிடச் சற்று விரிவானது. முகப்பிலிருந்து மலையினுள்ளே 48 அடி (15 மீ) ஆழம்வரை இக்குடைவரையின் மகா மண்டபமும், முகமண்டபமும் அகழப்பட்டுள்ளன (excavated). இம்மண்டபங்களைத் தாண்டி 12 அடி (3.7 மீ) அளவில் ஒரு சதுரக் கருவறை அகழப்பட்டுள்ளது.
மற்ற குடைவரையில் காணப்படுவதைப் போலவே இங்கும் மூன்றுவிதமான பாணிகளில் அமைந்துள்ள தூண்களைக் காணலாம். இந்த முகப்பை ஆறு நான்முக முழுத்தூண்களும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு நான்முக அரைத்தூண்களும் தாங்குகின்றன. முகப்பில் ஐந்து அங்கணங்கள் (Inter-pillar space) உண்டு. நடு அங்கணம் குடைவரையின் நுழைவாயிலாகப் பயன்படுகிறது. தூண் மற்றும் அரைத்தூண் ஒவ்வொன்றும் அகன்ற, ஆழமான அடித்தளம் கொண்டுள்ளது. அடித்தளத்திற்குச் சற்று மேலே தூண் முகப்பில் பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
தூண் தலைப்பின் (Capital) மூன்று புறத்திலும் போதிகைகளுக்கு மேல் அமைந்துள்ள உத்தரத்தின் உதைகால்களின் (Strut) மேல் சிலையுருவத்தூண்களாக (Caryatid) பலவிதத் தோரணைகளில் (postures) மிதுன இணைகள் (muthuna couples) மரத்திற்குக் கீழே நிற்பதுபோலக் காட்டப்பட்டுள்ளது.
ஒரு மிதுன இணையில் பெண் தன்னுடைய காலைத் தன் ஆண் இணையுடைய காலில் கோர்த்துக்கொண்டு, தன் கையை ஆணின் மார்பில் பதித்துள்ளார்.
மற்றொரு இணையில் பெண் தன் ஆண் இணையின் மார்பில் சாய்ந்தவாறு தன் இடுப்பை வளைத்துத் தன் இரு கால்களையும் ஸ்வஸ்திக வடிவில் ஊன்றியுள்ளார். முழு எடையையும் கால்களில் சரிந்துள்ளது. ஒரு கையில் ஆண் தோளைப் பற்றியும் மறு கையில் ஒரு கயிற்றைப் பிடித்தவாறும் நின்றுள்ளார்.
வேறொரு இணையில் பெண் ஒரு புறம் தன் உடலின் வளைவுகளை இடுப்பில் இருத்தியும் உடலின் எடையைக் ஒரு காலில் தாங்கியும் நிற்கிறார். மடக்கிய கைகளை ஆணின் கைளுடன் கோர்த்துள்ளார். ஆண் தன் கைகளால் பெண்ணை இழுத்துப் பிடித்தாலும் பெண் சரிந்து விலக முயற்சித்தவாறு ஆணைக் காமத்துடன் பார்க்கிறார். பிரிதொரு இணையில் பெண் ஒயிலாகச் சாய்ந்து தன் மெலிந்த மென்மையான உடலைக் காட்டியவாறு நிற்கிறார். நீளமான கால்கள்; தரையைப் பார்க்கும் கண்கள்; கைகள் ஒரு கோலை ஏந்தியுள்ளன. பின்னங்கால்களில் நிற்கும் ஒரு குழந்தை உருவமும் அருகில் காணப்படுகிறது. ஒரு புறமிருந்து பார்த்தால் குழந்தையாகவும் மறு புறமிருந்து பார்த்தால் குரங்காகவும் இந்த உருவம் தெரிவது வியப்பு.
உத்தரத்திலிருந்து கூரை உறுப்புகள் ஆரம்பமாகின்றன. கூரையின் நீட்சி சாய்வான கபோதமாக (sloping cornice) காணப்படுகிறது. கபோதம் முதல் குடைவரையில் உள்ளது போலன்றிக் கனமாகக் (heavy) காணப்படுகிறது. கபோதத்தின் உட்புறம் கூரையுடன் இணையும் பரப்பில் மரச்சட்டங்ககளைப் போலச் செதுக்கப்பட்டுள்ளது. குறுக்கு உத்திரச் சட்டங்கள் கிடைமட்டத்தில் பிரித்துச் சதுரவடிவச் சட்டகங்களை (panels) அமைத்துள்ளார்கள். நுழைவாயிலுக்கு மேலே கபோதத்தில் இரண்டு கைகளுடன் கருடனின் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் பாம்பை ஏந்திய கருடனின் இருமருங்கிலும் ஆண் கந்தர்வர்கள் உடைவாளுடன் காட்டப்பட்டுள்ளனர்.
மகாமண்டபம்
மகாமண்டபத்தில் அமைப்பட்டுள்ள நான்கு உட்புறத் தூண்களின் அடிப்பகுதி பல்கோண (Polygonal) வடிவிலும் மேற்பகுதி வரியுடன் (fluted) கூடிய உருள் வடிவிலும் (cylindrical), தலைப்பு (pin cushion capital) குமிழ்வான (bulbous) உருள் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. தூணின் தலைப்பகுதிக்கு மேலே அமைந்துள்ள பட்டைகளுடன் கூடிய விரிகோணத் தரங்கப் போதிகைகள் (Ribbed Potikas with Median Bands) (தரங்கப் போதிகை = அலைகளுக்கு அலை அலையான மேற்பரப்புடன் நடுவில் சிறிய பட்டையையும் கொண்டிருக்கும்). போதிகைக்கு மேல் அமைந்துள்ள கூரை உறுப்புகளில் உத்திரம், வாஜனம், வாலபி போன்றவை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் கூரை குறுக்கு உத்தரங்களால் பத்திகளாகப் (Coffers) பிரித்தமைக்கப்பட்டுள்ளன. கூரையில் அமைக்கப்பட்டுள்ள சட்டகங்களில் அக்னி. இந்திரன் மற்றும் வருணன் போன்ற வேதகாலக் கடவுளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
முகமண்டபம்
முகமண்டபத்தைப் பதினான்கு சதுரத் தூண்களும், ஆறு அரைத் தூண்களும் தாங்குகின்றன. முகமண்டபத்தின் கூரையில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட பதக்கங்களில் (medallions) குறுஞ்சிற்ப வரிகளைக் (friezes) காணலாம். ஒரு கூரைப் பதக்கத்தின் நடுவில் கருட வாஹனத்தில் ஊர்ந்தவாறு விஷ்ணு காட்சி தருகிறார். இவரைச் சுற்றியுள்ள சட்டகங்களில் (Panels) எட்டுத் திக்பாலகர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கருவறை
குடைவரையின் பின்புறம் உள்ள குடைவரைச் சுவரில் ஒரு சதுர வடிவக் கருவறை அகழப்பட்டுள்ளது. பின் குடைவரைச் சுவரிலிருந்து பிதுக்கமாகச் சற்று முன்னோக்கி இழுக்கப்பட்டுள்ளது. முகமண்டபத்திலிருந்து கருவறையை அடைய நான்கு படிகள் உதவுகின்றன. இப்படிகளைத் தாய்ப் பாறையைச் செதுக்கி அமைத்துள்ளனர். கருவறைக் கதவு நிலையின் விட்டத்தில் தலைச் சிற்பமாகக் கஜலட்சுமியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
சிற்பத் தொகுதிகள்
இக்குடைவரையில் 1. விஷ்ணு; 2. திரிவிக்கிரமா; 3. சேஷ நாகத்தின் மீது அமர்ந்துள்ள பரவாசுதேவா (விஷ்ணு); 4. பூமி தேவியைத் தாங்கிப் பிடிக்கும் விஷ்ணுவின் வராஹ அவதாரம்; 5. ஹரிஹரா (பாதிச் சிவன், பாதி விஷ்ணு); 6. நரசிம்மர் (விஷ்ணு) நின்ற கோலம் ஆகிய ஆறு சிற்பத் தொகுதிகள் செதுக்கப்பட்டுள்ளன.
திரிவிக்கிரமன் சிற்பத் தொகுதி
திரிவிக்கிரமன் சிற்பத் தொகுதி மூன்றாம் குடைவரை முகப்பின் இடது பக்கச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பத் தொகுதியில் திரிவிக்ரமன் எட்டுக்கைகளுடன், வலது காலை நிலத்தில் ஊன்றியவாறு இடக் காலால் வையத்தை அளந்தபடி காட்சி தருகிறார். மேல் வலக் கையில் சக்கரமும், கீழ் வலக் கைகளில் அம்பும், கதையும், வாளும், மேல் இடக் கையில் சங்கமும், கீழ் இடக் கைகளில் வில்லும், கேடயமும் ஏந்தியுள்ளார். ஒரு இடக்கையால் தன் தொடையின் மேல் அமைந்துள்ள இடுப்பு ஆடையின் முடிச்சைப் பற்றியுள்ளார். இந்த விஷ்ணுவை டி.ஏ.கோபிநாத ராவ் “வைகுந்தநாதா” என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஒரு புறம் மகாபலி திரிவிக்ரமனின் வலது காலைப் பற்றியவாறு மன்றாடுவது போலவும் ,மறுபுறம் மகாபலி திரிவிக்ரமனின் இடது காலுக்குக் கீழே சாபவிமோசனம் பெற்றுத் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் பாதாள உலகத்திற்குச் செல்லுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.
திரிவிக்ரமன் சிற்பதிற்குக் கீழே இடப்புறம் வாமணன் மகாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தானமாகப் பெரும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. வாமணின் உருவம் சிதைக்கப்பட்டுள்ளது. மகாபலிச் சக்ரவர்த்தி தன் அரசியுடன் நின்றவாறு நீர் வார்த்துத் தானம் அளிக்கும் நிகழ்வும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .இந்தச் சிற்பத்தின் மேல்புற மூலையில் ஆறு கந்தர்வ இணைகள் பறப்பது போல காட்டப்பட்டுள்ளது. ஒரு சிங்க உருவம் நான்கு கால்களுடன் காணப்படுகிறது. பாகவத புராணத்தில் 21 ஆம் அத்யாயத்தின் எட்டாம் ஸ்கந்தத்தில் இந்த நிகழ்வு வியாவ்ரிக்கப்பட்டுள்ளது. (பாதாமி இரண்டாம் குடைவரையில் அமைந்துள்ள திரிவிக்கிரமன் சிற்பம், ஒப்பீடு, புராணம் பற்றிய மேலதிகச் செய்திகளை இங்கு காணலாம்)
விஷ்ணுவின் சிற்பத் தொகுதி
முகப்பின் வலதுபுறச் சுவரில் நின்ற கோலத்தில் காட்சிதரும் விஷ்ணுவின் சிற்பத் தொகுதியைக் காணலாம். எட்டுக் கைகளுடன் காட்சி தரும் விஷ்ணு தன் மேல் இடது கையில் சங்கும், மேல் வலது கையில் சக்கரமும் ஏந்தியுள்ளார். கீழ் வலது கை வாளையும் (வாள் உடைந்துள்ளது) நடு வலது கை கதையையும் ஏந்தியுள்ளன. நடு இடது கை வில்லையும், கீழ் இடது கை கேடயத்தையும் ஏந்தியுள்ளன. விஷ்ணுவின் இந்தப் போர்க்கோலத் தோற்றம், இந்தக் குகையைச் சாளுக்கிய அரசர்கள் விஷ்ணுவிற்கு அர்ப்பணித்தது பொருத்தமானதுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.
பரவாசுதேவர் (விஷ்ணு) சிற்பத் தொகுதி
குடைவரையின் இடப்புற முகப்புச் சுவரில் விஷ்ணு, ஐந்து தலை அனந்தசேஷ நாகத்தின் சுருண்ட உடலின் மேல் மகாராஜலீலாசனத்தில் அமர்ந்துள்ளார். விஷ்ணுவின் தலைக்குமேல் ஐந்து தலை நாகம் படமெடுத்துக் குடையமைத்துள்ளது. விஷ்ணு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் இடக்கை சக்கரத்தையும் மேல் வலக்கை சங்கையும் ஏந்தியுள்ளன. கீழ் இடக்கை இனம்காண முடியாத ஒரு பொருளைப் பற்றியுள்ளது. கீழ் வலக்கை தொடையில் வைக்கப்பட்டுள்ளது. டி.ஏ.கோபிநாதராவ் இந்த வடிவை விஷ்ணுவின் “போகாசன மூர்த்தி” என்று அடையாளம் காண்கிறார். தென்னிந்தியாவிலும் வடவிந்தியாவிலும் அரிதாகக் காணப்படும் உருவம் இது. விஷ்ணுவின் இருபுறமும் இரண்டு நாகினிகள் ஒயிலாக நின்றவாறு காட்சி தருகிறார்கள். சிற்பத்தின் இடது மூலையில் கருடன் நாகச் சுருளில் சாய்ந்தவாறு காட்சி தருகிறார். சிற்பத் தொகுப்பின் கீழே பதினேழு கணங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோரணையைக் காட்டியுள்ளார்கள். இத்தொகுப்பு 7′ 8″ நீளத்திலும் 12′ 9″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.

பரவாசுதேவா (விஷ்ணு) PC: Wikimedia Commons
வராஹர் சிற்பத் தொகுதி
பரவாசுதேவர் (விஷ்ணு) சிற்பத் தொகுதியை ஒட்டி இடப்புறம்அமைந்துள்ள சுவரில் வராஹர் சிற்பத் தொகுதி அமைந்துள்ளது. வராஹரின் புராணக்கதை பாதாமியின் இரண்டாம் குடைவரையில் அமைந்துள்ள வராஹர் சிற்பத் தொகுதியுடன் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது (இங்கு காண்க). வராஹர் நின்ற நிலையில் பிரதிஅலிதாசன நிலையில் (posture) தன் இடது காலைத் தரையில் ஊன்றியும், வலது காலை மடக்கி முன்புறத்தில் உள்ள நாகத்தின் மீது வைத்தவாறும் காட்சி தருகிறார். இவர் நான்கு கரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். தலையில் கிரீடம் அணிந்துள்ளார். மேல் வலது கையில் சக்கரத்தையும், கீழ் வலது கையில் கதையையும், தன் மேல் இடது கையில் சங்கையும் ஏந்தியுள்ளார். தன் கீழ் இடது கையால் பூதேவியைத் தூக்கிப் பிடித்துள்ளார். ஒல்லியான தேக அமைப்புடன் காட்டப்பட்டுள்ள பூதேவி தன் உடலை வராஹரை நோக்கி வளைத்துள்ளார். பூதேவியின் வலது கை வராஹரின் மூக்கைத் தொட்டவாறு காட்டப்பட்டுள்ளது. வராஹரின் காலடியில் சேஷ நாகத்தின் மார்பளவு மனித உருவம் வணங்கிய நிலையிலும் மார்பிற்குக் கீழே பாம்பின் உருவம் சுருளாகவும் காட்டப்பட்டுள்ளது. மற்றொரு நாக உருவம், மார்பளவில், தன் இடது கையில் மாலையை ஏந்தியவாறு காட்டப்பட்டுள்ளது. வராஹருக்குப் பின்புறம் ஒரு பணிப்பெண் இடக்கையில் சாமரம் ஏந்தியுள்ளாள். சிற்பத் தொகுப்பின் கீழே எட்டுக் கணங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோரணையைக் காட்டியுள்ளார்கள். இத்தொகுப்பு 6′ 9″ நீளத்திலும் 12′ 8″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.
ஹரிஹரர் சிற்பத் தொகுதி
பின்புறச் சுவரின் வலப்புறத்தில், இரண்டு அரைத் தூண்களுக்கு இடையே நின்ற நிலையில் ஹரிஹரர் சிற்பத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. சங்கன் என்ற அரசன் சிவன் மீது பற்றும், பதுமன் என்ற அரசன் திருமால் மீது பற்றும் கொண்டு யார் உயர்ந்தவர் என்று வாதிட்டனர். வாதம் முற்றி அம்பாளிடம் முறையிட்ட போது ஹரியும் (திருமால்) ஹரனும் (சிவன்) ஒன்றே என்று உணர்த்த எடுத்த வடிவமே ஹரிஹரன் வடிவமாகும். ஹரியர்த்த மூர்த்தி மற்றும் சங்கரநாராயணர் என்ற இரண்டு பெயர்களாலும் இந்தக் கடவுள் வணங்கப்படுகிறார். சிவன் இடப்புறமும் விஷ்ணு வலப்புறமும் இணைந்து ஒரே உருவமாகக் காட்டப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் ஹரிஹரர் காட்சி தருகிறார். இடது மேல் கையில் மழுவும் நாகமும் ஏந்தியும் வலது மேல் கையில் சங்கும் ஏந்தியும் காட்சி தருகிறார். கீழ் இடக்கை இனம்காண முடியாத பொருளை ஏந்தியும், கீழ் வலக்கையைத் தொடை மேல் இருத்தியும் உள்ளார். இவ்வடிவத்தில் தலையின் ஒருபாதியில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி போன்றவையும் மற்றொரு பாதியில் கிரீடமகுடமும் காட்டப்பட்டுவது மரபு. நெற்றியில் நெற்றிக்கண், திருநீறு வலப்புறமும் திருநாமம் இடப்புறமும் காட்டப்பட்டுள்ளன. இடுப்பில் ஒரு புறம் தோலாடை மறுபுறம் பட்டாடை; கழுத்தில் சரப்பளி; வயிற்றில் உதரபந்தம்; மார்பில் உபவீதமாக யஞ்யோபவிதம்; வலது புஜத்தில் நாகமும், இடது புஜத்தில் கைவளை, தோள்வளை எல்லாம் அணிந்து காட்சி தருகிறார். இந்தச் சிற்பத் தொகுதியில் பீடம் அமைக்கப்படவில்லை. இத்தொகுப்பு 7′ 0″ நீளத்திலும் 12′ 11″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஹரிஹரர் சிற்பத்தொகுதி முதல் குடைவரையில் காணப்படுகிறது.
நரசிம்மர் சிற்பத் தொகுதி
மகாமண்டபத்தின் இறுதியில் உள்ள சிறிய சுவற்றில் நரசிம்மரின் அருமையான சிற்பத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. மனித உருவும் சிங்கத் தலையும் கொண்டமைந்த நரசிம்மர் நின்ற நிலையில் வலது காலை சற்று முன் வைத்தவாறு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் காட்சி தரும் நரசிம்மர், வலக்கையில் இனங்காண முடியாத பொருளையும், மேல் இடக்கையில் நீண்ட முடியையும் (long hair), கீழ் இடக்கையில் கதையையும் ஏந்தியுள்ளார். கதை உடைந்துள்ளது. தலைக்கு மேல் கைகளையொட்டி ஒரு குள்ள உருவம் பறந்த நிலையில் உள்ளது. இரு புற மேல் மூலைகளிலும் கந்தர்வ இணைகள் பறந்தபடி காட்டப்பட்டுள்ளனர். நரசிம்மரின் வலது காலுக்கு அருகே காமதேவதையின் உருவம் வலக்கையில் இனம் காண முடியாத பொருளை ஏந்தியுள்ளது. கருடன் கிரீடம் சூடியவாறு நரசிம்மரின் இடது காலுக்குக் கீழே நின்ற நிலையில் காணப்படுகிறார். இத்தொகுப்பு 7′ 1″ நீளத்திலும் 12′ 9″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது குடைவரையின் மற்றோரு சிறப்பம்சம் என்னவென்றால் குடைவரையின் சுவர்கள் முழுவதும் சித்திர ஓவியங்களைக் கொண்டிருந்ததுதான். தற்போது சில சித்திர ஓவியங்கள் மட்டும் எஞ்சியுள்ளன. இவை: ஹம்ச வாகனத்தில் ஊர்ந்தவாறு தோன்றும் பிரம்மா; சிவன் – பார்வதி திருமணக் காட்சி; தேவர்களும் முனிவர்களும் திருமணத்தைக் கண்டு மகிழ்கிறார்கள். பிரம்மாவின் ஓவியத்திற்குக் கீழே தரையில் தாமரைப் பதக்கம் செதுக்கப்பட்டுள்ளது.
குடைவரை முகப்பின் தரையில் ஒரு விளையாட்டுப் பலகை அமைக்கப்பட்டு இரு வரிசையில் 24 கட்டங்களில் முட்டை வடிவக் குமிழ்கள் காட்டப்பட்டுள்ளன. இந்த விளையாட்டை மால்காம் ஜே. வாட்கின்ஸ் (Malcolm J. Watkins) மான்காலாவின் (Mancala) மாறுபாட்ட விளையாட்டாக அடையாளம் காட்டியுள்ளார். இஃது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் விளையாடிய மிகப் பழமையான விளையாட்டு ஆகும், இந்த விளையாட்டின் விதிகளின்படி, விதைகள் அல்லது கூழங்கற்களை ஒருவரின் சொந்தப் பலகையில் (board) வைப்பது மற்றும் எதிரிகளின் குழுவில் உள்ளவர்களைப் பல்வேறு விதிகளின் படி கைப்பற்றுவது ஆகும். இது வண்ணம் கலக்கப் பயன்பட்ட ஓவியர்களின் வண்ணத் தட்டு என்றும் சிலர் சொல்கிறார்கள்.

பாதாமி மூன்றாம் குடைவரை: விளையாட்டுப் பலகை PC: Wikimedia Commons
துரதிருஷ்டவசமாக, போதிய பாதுகாப்பு இல்லாமையால் இந்தச் சித்திர ஓவியங்கள் மறைந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இந்தக் குடைவரையைக் கண்டறிந்த நாட்களில் சுவர்களைச் சுத்தம் செய்வதற்கு இரசாயனங்களைப் பயன்படுத்திக் கழுவியுள்ளார்கள். இந்த விஞ்ஞானபூர்வமற்ற சுத்திகரிப்பு முறைகளால் இங்குள்ள சித்திர ஓவியங்கள் அழிந்து போய்விட்டனவாம். இந்தச் சித்திரங்கள் இன்று இருந்திருந்தால் இந்த மூன்றாம் குடைவரை கண்டிப்பாக உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். கலைப்பிரியர்களுக்கு இந்த இழப்பு ஏமாற்றமளிக்கிறது. இன்றும் சில சிற்பத் தொகுதிகளில் வண்ணங்களின் சில தடயங்களைக் காணலாம்.
மங்களேசன் கல்வெட்டு

பாதாமி மூன்றாம் குடைவரைக் கல்வெட்டு மங்களேசன் (கி.பி.598-610) கி.பி. 578 PC: Wikimedia Commons

பாதாமி மூன்றாம் குடைவரைக் கல்வெட்டு கி.பி. 578 PC: இதிகாஸ் அகாதெமி
கன்னட மொழியில் காணப்படும் கல்வெட்டுகளிலேயே மிகவும் தொன்மையானது பழைய கன்னட வரிவடிவில் (Pre Old Kannada Script) ஹல்மீதியில் பொறிக்கப்பட்ட கடம்பர்களின் 5 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். இதுவே புகழ்பெற்ற ஹல்மீதிக் கல்வெட்டாகும் (Halmidi inscription). இதே 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடம்ப மன்னன் ம்ருகேஸ்வர்மனின் கல்வெட்டும் தொன்மையானதே. இந்தத் தொன்மை மிகுந்த கல்வெட்டுகளின் வரிசையில் மூன்றாம் குடைவரை முன்பு காணப்படும் முதலாம் கீர்திவர்மனின் பாதாமிக் கல்வெட்டும் அடங்கும். கன்னட வரிவடிவ எழுத்துக்கள் சற்று தேய்ந்த நிலையில் தோன்றும் இக்கல்வெட்டின் நீளம் 25 அங்குலம், உயரம் 45 அங்குலம் ஆகும். இந்தியன் ஆண்டிகுவாரி (indian antiquary) தொகுதி மூன்றில் இக்கல்வெட்டின் பாடம் (வரிகள்) பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பதிப்பித்தவர் பேராசிரியர் எக்லிங் ஆவார்.
இந்தப் பாதாமிக் குடைவரைக் கல்வெட்டு சாளுக்கிய மன்னன் முதலாம் கீர்த்திவர்மனின் 12 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வெட்டுக் குறிப்புகளின்படி சக வருஷம் 500 கார்த்திகா பவுர்ணமி (கி.பி. 578 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 / நவம்பர் மாதம் 1 ஆம் தேதி) அன்று பொறிக்கப்பட்டுள்ளது. முதலாம் கீர்த்திவர்மனின் தம்பியான மங்களேசன் விஷ்ணுவிற்கு இந்தக் குடைவரையை எடுத்து மதிலமைத்த செய்திக்குறிப்பு இக்கல்வெட்டில் காணப்படுகிறது. குடைவரையில் விஷ்ணுவின் திருவுருவத்தை நிறுவிய தருவாயில், நாராயண பலிக்காகவும், 16 அந்தணர்களுக்குத் தினந்தோறும் நிவந்தமாகக் கொடுத்து மீதிப்பங்கை துறவியருக்குப் போகமாக அளிப்பதற்காகவும் நிபன்மலிங்கேஸ்வரா என்ற கிராமம் நிலக்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமம் தற்போது பாதாமி வட்டம், மகாகூடா நகரின் அருகே அமைந்துள்ள நந்திகேஸ்வரா கிராமம் ஆகும். (Karnataka Inscriptions Vol. 5, No. Karnataka Research Institute Dharwad.)
(குறிப்பு: கர்நாடகக் கல்வெட்டுகளில் தேதியை சக வருஷம் என்று குறிப்பிடுவார்கள். இந்தச் சக வருஷம் (சாலிவாகன வருஷம்) கி.மு. 78 ஆம் ஆண்டு துவக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள சக வருஷத்தைச் கிருத்தவ வருஷமாக மாற்றுவதற்குக் குறிப்பிட்ட வருஷத்துடன் 78 ஐ சேர்த்துக் கூட்டவேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள சக வருஷம் 500 க்கு இணையான கிருத்தவ வருஷம் 500 + 78 = கி.பி. 578 ஆகும்.)
மூன்றாம் குடைவரையின் இரண்டு பக்கங்களிலும், அருகிலிருக்கும் பாறாங்கற்களிலும் சிற்பிகளின் பெயர்களைப் பொறித்த கல்வெட்டுகளைக் காணலாம். மூன்றாம் குடைவரையின் வெளியே உள்ள வலப்புறப் பாறையில் காணப்படும் ஒரு கல்வெட்டு “ரூபசேகரா” என்று படிக்கப்பட்டுள்ளது. “சிற்பிகளில் சிறந்தவன்” என்பது இதன் பொருள். இங்கு காணப்படும் வேறுபெயர்கள்: கோட்டலம் (Kottalam), ஸ்ரீ கொண்டைமஞ்சி (Sri Kondaimanchi), ஸ்ரீ வாசுதேவ (Sri Vasudeva), ஸ்ரீ சகுலா அய்யா (Sri Shakula Ayya), ஸ்ரீ பஞ்சனன் சோழ தேவராயா (Sri Panchanan Chola Devaraya), ஸ்ரீ குணபால் (Sri Gunapal), ஸ்ரீ அஜு (sri Aju), அச்சார் சித்தி (Achar siddhi), அய்யா சட்டி (Ayya Chatti), ஸ்ரீ ஜெயகீர்த்தி கொட்டிலா (Sri Jayakirthi Kottila), ஸ்ரீ காந்தி மஞ்சி (Sri Kanti Manchi), ஸ்ரீ சமிச்சந்தன் (Sri Samichandan), பிஜாயா (Bijaya), ஸ்ரீ கண்ணன் (Sri Kannan), ஓவாஜா (Ovaja), பிஜாயா ஓவாஜன் (Bijaya Ovajan), ஸ்ரீ பிரசன்னா புத்தி (Sri Prasanna Buddhi), ஸ்ரீ அரிக்கே (Sri Arikke), ஸ்ரீ பதாதுக்கெ (Sri Badhadukke), ஸ்ரீ கெய்யான் (Sri Geyyan), ஸ்ரீ அனத்தமஞ்சின் (Sri Anattamanchin) மற்றும் பலர். (Pattar, Sheealkanth (2014). The architects and sculptures of Early Chalukya. Art Shilpa Publication Badami, p.13.)
மாமல்லபுரம் குடைவரைகளில் பாதாமி குடைகளின் தாக்கம்
மாமல்லபுரத்தின் குடைவரைக் கட்டமைப்புகளில் (rock-cut structures), பாதாமிக் குடைவரை கோவில்களின் தாக்கத்தைக் (inflence) காண முடிகிறது. புனித. எச். ஹீராஸ் பாதிரியார் தன்னுடைய “பல்லவர் வரலாறு” (Studies in Pallava History. Rev. H. Heras S.J., Director, Indian Historical Research Institute, St. Xavier’s College, Bombay. Published by B.G. Paul and Co, Madras. 1933) என்ற நூலில் மாமல்லபுரம் மற்றும் பாதாமி குடைவரைகளில் காணப்படும் சிலை மற்றும் சிற்பங்களின் குறிப்பிட்ட சில அம்சங்களை ஒப்பிட்டு விரிவாக விவாதிக்கிறார். முதலாம் நரசிம்மன் (ஆட்சியாண்டு: கி.பி. 630-668) ஆட்சியில் அமர்ந்தவுடன், சாளுக்கியர்களிடம் பகைதீர்க்க, வாதாபியின் மீது படையெடுத்து வெற்றி காண்கிறான். வாதாபியில் மிக நேர்த்தியாக அகழப்பட்ட குடைவரைகளை, குறிப்பாக மூன்றாம் குடைவரையை, வியந்து காண்கிறான்.
“சாளுக்கிய பாணி குடைவரைக் கட்டடக்கலைக் கூறுகள் (architectural elements) மற்றும் அலங்கார அணிகளின் (motifs of ornamentation) வடிவமைப்புகளைப் பல்லவ மன்னன் ஆய்வு செய்த” நிகழ்வை புனித. ஹீராஸ் பாதிரியார் உறுதிப்படுத்துகிறார். “நரசிம்மன் குடைவரை பற்றிய தன்னுடைய பார்வையை விரிவாக்கிக் கொண்டான். தன்னுடைய பகைவனாகிய சாளுக்கியனின் கட்டடக்கலை சாதனைகளைப் பின்பற்றுவதற்கான புதிய திட்டங்களைத் தன் மனதில் வளர்த்துக் கொண்டான்.” (Studies in Pallava History. Rev. H. Heras S.J., Director, Indian Historical Research Institute, St. Xavier’s College, Bombay. Published by B.G. Paul and Co, Madras. 1933)
மாமல்லபுரத்தின் வராஹ மண்டபம், பாதாமியின் முதலாம் குடைவரை மண்டபம் ஆகியவற்றின் தூண்களிடையே உள்ள ஒற்றுமையை ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார். “அதே பட்டகத்தன்மையுடைய தோற்றம் (prismatic appearance); குமிழ் வடிவிலான (bulbous) தாமரை மலர் போன்ற தூண் தலைப்பு (Pillar Capital); தூணில் இடையிடையே செதுக்கப்பட்ட அதே வரிவடிவ நுட்பமான அலங்கார வேலைப்பாடு (fluting by a band of filigree work); ஜெபமாலை (Rosary) போன்ற மாலஸ்தானம்.”
பாதாமிக் குடைவரையின் பக்கச் சுவர்களில், அலங்காரமாகச் செதுக்கப்பட்ட பெரிய சிற்பத் தொகுதிகள் (sculptural panels) காட்டும் நுட்பமான வடிவங்கள் கொண்ட பாதாமிப் பாணியை (Badami style) மாமல்லன் தன் குடைவரையில் பின்பற்றியுள்ளார். எடுத்துக்காட்டாகப் பாதாமி குடைவரை இரண்டு மற்றும் மூன்றில் உள்ள வராஹர், வாமணர், கஜலெட்சுமி, துர்க்கை ஆகிய சிற்பத் தொகுதிகளில் காணப்படும் உருவங்கள் மாமல்லபுரம் குடைவரையில் பின்பற்றப்பட்டுள்ளன என்று ஹீராஸ் கருதுகிறார். “மாமல்லபுரம் சிலைகள் மற்றும் சிற்பங்கள் பாதாமியை விட மிகவும் எளிமையாக (plainer) உள்ளன. இங்கு அபரிமிதமான நகைகளையோ, நுணுக்கங்களையோ காண முடியவில்லை. ஆனால் மாமல்லபுரத்து உருவங்கள், பாதாமியின் வளமையிலுள்ள சிற்பத் தொகுதிகளில் (conventional panels) காணப்படாத, ‘இயல்பான தன்மையும் (naturalness), புதுமைத்தன்மையும் (freshness)’ மிகுந்துள்ளதாகத் தெரிகிறது” என்கிறார் ஹீராஸ்.
போதிசத்வ பத்மபாணி குகை
பாதாமியின் இரண்டாம் குடைவரைக்கும் மூன்றாம் குடைவரைக்கும் இடையே ஓர் இயற்கைக் குகைத்தளம் (Natural Cave) காணப்படுகிறது. இக்குகையில் அவலோகிதேஸ்வரா (Avalokiteswara) என்னும் போதிசத்வா பத்மபாணி Bodhisattva Padmapani) இன் புடைப்புச் சிற்பம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. போதிசத்வ பத்மபாணி மகாயான புத்த (Mahayana Buddha) மதத்தின் ஞானோதயம் பெற்ற துறவி (Enlightened monk) ஆவார். பத்மபாணி என்றால் தாமரையை ஏந்தியவர் என்பது பொருள். தாமரையை ஏந்திய போதிசத்வர் இவர். போதிசத்வர் என்றால் போதி என்னும் பெளத்த ஞானத்தை அடைந்தவர் இந்திய தத்துவத்தில் ஞானோதயம் என்பது பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபட்டு வீடுபேறடைவது. ஆனால் போதிசத்வ பத்மபாணியோ இந்த உலகில் உயிர்கள் உள்ளளவும் மீண்டும் மீண்டும் பிறந்து உயிர்களுக்குத் தொண்டு செய்ய உறுதி பூண்டுள்ள புத்த ஞானி. இது புத்த ஞானத்தின் புரட்சிகரமான கருத்தாகும். அஜந்தா முதலாம் குடைவரையில் போதிசத்வ பத்மபாணியின் ஓவியத்தைக் காணலாம்.
சிற்பத்தின் பிரதான உருவத்தின் அருகே இடப்புறம் ஓர் ஆண் உருவம் காணப்படுகிறது. வலப்புறம் ஒரு பெண் தன் தலையில் விரைத்து நிற்கும் முடியுடன் காணப்படுகிறது. இவளின் கீழே இரண்டு ஆண் உருவங்கள் ஒன்றின் கீழ் ஒன்றாகக் காணப்படுகின்றன. இருபுறமும் பல சிற்றுருவங்களையும் (figurines) காணலாம். இதன் கீழே நரகம் காட்டப்பட்டுள்ளது. இடப்புறம் பாம்பும் வலப்புறம் ஒரு மனிதன் கூம்புவடிவக் குழலிருந்து வெளிப்படுவதாகவும் காட்டப்பட்டுள்ளது. இதற்கும் கீழே கூம்புவடிவக் குழலின் அடிப்புறத்தில் இரண்டு மனித உருவங்கள் கைகளை உயர்த்திக் கதறியபடி கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரைக்குள் விழுகிறார்கள். இதற்கு மேலே ஓர் ஆண் ஒரு பெண் மற்றும் குழந்தையுடன் காணப்படுகிறார்கள். ஆண் நிற்பது போலவும் பெண் வணங்குவது போலவும் காட்டப்பட்டுள்ளது. பெண்ணுக்குப் பக்கத்தில் ஒரு வில்வீரன் உள்ளான். இந்தச் சிற்பத் தொகுதி 3′ 4″ அகலத்திலும் 5′ 8″ உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் குடைவரையையும் போதிசத்வ பத்மபாணி இயற்கைக் குகையையும் சுற்றிப் பார்த்தோம். குடைவரையில் பல சிற்பத் தொகுப்புகளையும் கண்டோம். நேர்த்தியான செதுக்கல்களையும் கண்டோம். அடுத்த குடைவரைக்குச் செல்வோமா? நான்காம் குடைவரை சமண தீர்த்தங்கர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
குறிப்புநூற்பட்டி
- முதலாம் கீர்த்தி வர்மனின் பாதாமி குடைவரைக் கல்வெட்டு சங்கரநாராயணன் சரஸ்வதம் 08 பிப்ரவரி 2016 http://sarasvatam.in/ta/2016/02/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9/
- Badami Cave Temples- A guide for the sculptures http://www.pickpackgo.in/2016/08/badami-cave-temples-guide-for-sculptures.html
- Memoirs of the Archaeological Survey of India No 25: Basreliefs of Badami. Banerji R.D. 1928. 42p http://asi.nic.in/asi_books/21933.pdf
- Rocky tryst with history. Kalpana Sunder. The Hindu. November 19, 2010 http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/Rocky-tryst-with-history/article15694579.ece
- Studies in Pallava History. Rev. H. Heras S.J., Director, Indian Historical Research Institute, St. Xavier’s College, Bombay. Published by B.G. Paul and Co, Madras. 1933
- The Legacy of Chitrasutra- Three – Badami https://sreenivasaraos.com/tag/paintings-at-badami/
- World Heritage Monuments and Related Edifices in India. Ali Javid, ʻAlī Jāvīd, Tabassum Javeed. Algora Publishing, 2008. 309 p. https://books.google.co.in/books?id=54XBlIF9LFgC&pg=PA119&lpg=PA119&dq=badami+cave+3&source=bl&ots=9OQZutFhoL&sig=t_zkt5FObHN522hcoWqEfHky_fM&hl=ta&sa=X&ved=0ahUKEwjGzZCMxcbaAhVCqo8KHS33D_U4HhDoAQhcMAc#v=onepage&q=badami%20cave%203&f=false
படங்களும் பகிர்வும் வியக்க வைக்கின்றன ஐயா
அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் அவசியம் காண வேண்டிய இடம்
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா..
LikeLike
பாதாமி குடைவரை தொகுப்புகள் அற்புதமாக உள்ளன…ஒரு பயனத்தின் அனுபவம் கிடைத்துள்ளது..வாழ்த்துகள்
LikeLike
தங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.
LikeLike