குழந்தைகளுக்கு ஏன் கதை சொல்ல வேண்டும்?

நாம் எல்லோருக்கும் கதை கேட்க விருப்பம் உண்டு. குழந்தைகளுக்குக் கதை கேட்க மிகவும் பிடிக்கும். நாம் குழந்தைகளாக இருந்தபோது நம் பெற்றோர்கள் நமக்குக் கதை சொல்லுவதைத் தொன்றுதொட்டுக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் ஏராளமான நீதிக்கதைகளையும்  கேட்டு வளர்ந்துள்ளோம். உங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்ல முயற்சித்தது உண்டா? இதற்கான உங்கள் பதில் குழந்தைகளுக்கு அபூர்வமாகக் கதை சொல்வதாகவோ அல்லது கதை சொல்வதில்லை என்றோ இருக்கலாம். சரி உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கதை சொல்லாமல் போனது ஏன்?

இஃது இயந்திர யுகம். காலமாற்றத்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் வாழ்க்கை எளிதாகி வருகிறது.  கூட்டுக் குடும்ப வாழ்க்கை மாறி நியூக்ளியார் என்ற தனிக்குடும்பங்கள் மிகுந்த  ஆசைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் தத்தளித்து வருகின்றன. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் தாங்கமுடியாத வேலைச்சுமை குடும்பங்களை நெரிக்கிறது. வீடு, அலுவலகம், உறவுகள், சமூகம் போன்றவற்றிற்குப்  போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை. இந்த நவீன வாழ்க்கை கொடுக்கக் கூடிய அழுத்தத்தால் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. இதனால் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கம் நம்மிடையே  அருகி விட்டது. 

ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு வீடு தான் பள்ளிக்கூடம். காலங்காலமாக நம் வீடுகளில் கதை சொல்வதன் மூலமாகத்தான் குழந்தைகளுக்குக் கல்வி  புகட்டப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கூட்டுக் குடும்பங்களின் வரமான  தாத்தாவும் பாட்டியும் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும்போது கதைகளையும் சேர்த்து ஊட்டினார்கள். அப்பாவும், அம்மாவும், அத்தையும், மாமாவும் நமக்குக் கதை சொன்னார்கள். இரவில் படுக்கையில் நம்மை உறங்கவைப்பதற்காக நீட்டி முழக்கி இவர்கள் சொன்ன கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. அப்படிதானே?

சற்று வளர்ந்த பின்பு நம்மைப் போன்ற வாண்டுகளை வட்டமாக உட்காரவைத்து நம் அக்காக்களும் அண்ணன்களும் கதை சொன்னார்கள். விடுகதை போட்டார்கள். இந்தச் செயல்கள் நம்முடைய மூளையின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக்கியது. நம் கற்பனைத் திறனை வளர்த்தது.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு – அறுபது எழுபதுகளில் – பள்ளிகளில் இப்போது உள்ளது போலப் பாடச்சுமை இல்லை. நீதி போதனை (Moral Class) வகுப்புகள் பள்ளிகளில் இருந்தன. இந்த வகுப்பில் நாம் ஏராளமான நீதிபோதனைக் கதைகளைக் கற்றுக்கொண்டோம். நம் ஆசிரியர்கள்  நமக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாகவும் நல்லாசிரியனாகவும் இருந்தார்கள். இந்த நெருக்கம் மூலம் நம் ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறன்களும் (Teaching skills) மேம்பட்டது.

இன்று கூட்டுக் குடும்ப அமைப்புகள் வழக்கொழிந்து போய்விட்டன. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, ஆகிய கதை சொல்லிகளை நாமும், நம் குடும்பங்களும் இழந்துவிட்டது உண்மை. இரண்டு தலைமுறைகள் கடந்துபோன பின்பு கதை சொல்லுதலும்  நீதிபோதனைகளும் பள்ளி சிலபஸ்ஸில் இருந்து காணாமல் போய்விட்டன. தமிழ் மொழி பயிலுதல், தமிழ் வழியில் பயிலுதல் போன்றவை அருகி வருகின்றன. இன்று பள்ளிக் குழந்தைகளைக் கட் ஆஃப் மார்க்கும், போட்டித் தேர்வுகளும் வெகுவாக மாற்றிவிட்டன.

வீட்டில் குழந்தைகளை  டி.வி. இல் கிரிக்கெட் மேட்சும், சினிமாவும் கட்டிப்போட்டுள்ளன. குழந்தைகளின் கற்பனைத்திறன் குன்றி வருகிறது. இயல்பாகவே கேள்வி கேட்கும் திறன் மிக்க குழந்தைகள் இன்று வெட்கப்பட்டு பேசவே அஞ்சுகிறார்கள்.

குழந்தைப் பருவத்தின் முதல் எட்டு வருடங்கள் (Infant கைக்குழந்தை இரண்டு வயது வரை); Toddler நடைகுழந்தை 18 மாதம் முதல் 3 வயது வரை); Pre-Schooler பள்ளிக்கு முன் பருவம்  3 வயது முதல் 6 வயது வரை; School Going பள்ளிப் பருவம் 6 வயது முதல் 12 வயது வரை) மிகவும் முக்கியத்தும் உடையது. குறிப்பாகக் குழந்தையின் மனவளர்ச்சியானது, ஆறு வயது வரை மிக விரைவாக நடைபெறுவதாகக் குழந்தை உளவியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். முதல் மூன்று வருடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.  அன்பு, அரவணைப்பு, கவனிப்பு, ஊக்கப்படுத்துதல், மனரீதியாக உந்தப்படுதல் போன்ற பராமரிப்புகளால் குழந்தைகளின் வளர்ச்சி சீராக நிகழ்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் இவர்களின் கிரகிக்கும் திறன் படிப்படியாக மட்டுப்படுகிறது.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுச் செல்கின்றனர். வீடு திரும்பியதும் இவர்களுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிடுவதில்லை.  இந்தப் பருவங்களில் குழந்தைகளைத் நெடுநேரம் தனியாக இருக்கவிடக்கூடாது. இந்தச் சமயங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக உணருவதில்லை. இஃது அவர்களது உடல், மனரீதியான வளர்ச்சியைப் பாதிக்கும். பாதுகாப்பை உணருகிற குழந்தைகள், நன்கு கல்வி கற்பதோடு, வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை எளிதில் மேற்கொள்ளவும் செய்கின்றனர்.

குழந்தைகள் நம் வீட்டுப் பெரியவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். தானும் அது போலச் செய்து பார்க்க விரும்புகிறார்கள். நாம் குழந்தைகளிடம் பேசும்பொழுதும், தாலாட்டும் பொழுதும், அன்புடன் தொடும் பொழுதும் அவர்கள் மனரீதியாக உந்தப்படுகிறார்கள். நம் குழந்தைகளிடம் நம் தாய்மொழியிலேயே பேசி, பாடி, கதைசொல்லி மகிழும்போது  இவர்கள் மிக விரைவாகக் கிரகித்துக் கொள்கிறார்கள்.  சொற்கள் புரியாவிட்டலும்கூடத்  தொடர்ந்து பேசவேண்டும். பாடல்கள், குடும்பக்கதைகள், விளையாட்டுகள், ரைம்ஸ் போன்றவைகள் மூலம் குழந்தைகள் விரைவாக மொழியைக் கற்கின்றனர். இஃது இவர்களின் சிந்திக்கும் ஆற்றலையும், கவனிப்புத் திறனையும் (Listening Skills), உரையாடல் திறனையும் (Conversational Skill),  மொழித் திறனையும் (Language Skills), சமூகம் மற்றும் உணர்வுசார் திறனையும் (Social and Emotional Skills) மேம்படுத்தும். சுருக்கமாகக் கதை சொல்லுதல் மூலம் நம் குழந்தையின் ஒட்டுமொத்த ஆளுமையையும் (overall personality) மேம்படுத்தலாம் என்பதில் ஐயமில்லை.

குழந்தைகளுக்குக் கதை சொல்லுதல், அவர்களை  கதை சொல்லச் சொல்லி  கேட்டல் ஆகிய இரண்டும் மிகவும் இன்றியமையாதது. குழந்தையின் கற்பனைத்திறன் (Imaginative Skills) மற்றும் கவனிப்புத்திறன் (Listening Skills) போன்ற திறன்களை மேம்படுத்த கதை சொல்லுதல் உதவும். நேர்மை (Honesty), உண்மை பேசுதல், உதவும் மனப்பான்மை (Helping Attitude), விடாமுயற்சி (Perseverance), தோல்வி கண்டு துவளாமை போன்ற வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தலாம்.  கதை சொல்லுதல் மூலம் குழந்தைகளின் கேள்வி கேட்கும் திறன் (Questioning Ability) வளர்கிறது. கதைகள் கற்பனை வளத்தைத் தூண்ட  வல்லவை. எதிர்காலத்தில் சிக்கலான பிரச்சினைகளைக் கையாளும் திறன் எளிதாகி விடுவதாக உளவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்குக்  கதை சொல்லுதல்  அந்த நாட்டின் நூலகங்களோடு  தொடர்புடையது என்கிறார் சுகுமாரன் (குழந்தை இலக்கியத்தில் கதை சொல்லிகள்).  குழந்தைகளுக்கான நூலகச் சேவை சங்கம் (Association for Library Service to Children ALSC) உலகின் மிகப் பெரிய அமைப்பாகும். இந்த அமைப்புக் குழந்தைகளுக்கான நூலகச் சேவையினை ஆதரித்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்புடையது.  குழந்தைகள் நூலகமென்பதால் இங்குக் கதை நேரம் ( storytime) என்ற சேவை அளிக்கப்படுகிறது. தேசிய கதை சொல்லிகள் பிணையம் (National Storytelling Network (NSN) என்பது அமெரிக்காவில் உறுப்பினர்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பாகும். இந்த அமைப்பு தொழில்முறை கதைசொல்லிகளுக்கான சான்றிதழ் தொகுப்புகளை (set of credentials) பல்வேறு அளவுகோல்களுடன் (variety of criteria) நிறுவி வருகிறது.

நியூ ஜெர்சி கதை சொல்லிகள் பிணையம் (New Jersey Storytelling Network (NJSN) என்பது அமெரிக்க நகரான நியூ ஜெர்சியில் இலாப நோக்கற்ற அமைப்பாக பிப்ரவரி 2002 இல் நிறுவப்பட்டது. இந்தப் பிணையத்தின் நோக்கம் நியூ ஜெர்சியிலும் மற்றும் பிற இடங்களிலும் கதை சொல்லுதலை ஊக்குவித்தலும் மேம்படுத்துதலும் ஆகும்.

நூலகங்களில் கதை சொல்வதெற்கென்று பல அறைகளை ஒதுக்கியுள்ளார்கள். கதை அறை  (story room) என்று பெயர்கொண்ட இவ்வறைகளில் வயது வாரியாகக் குழந்தைகளைப் பிரித்து அமரவைத்து தொழில்ரீதியான கதை சொல்லிகள் (story tellers) மூலம் கதை சொல்கிறார்களாம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாம். என்.ஆர்.ஐ இந்தியர்கள் கூட இந்த வகுப்புகளுக்குத்  தங்கள் குழந்தைகளைத்  தவறாது கொண்டுபோய் விடுகிறார்களாம். ஜப்பானில் கூடப் பள்ளிகளில், சமூகத்தில் எப்படிப் பழகுவது, பெரியோரை எவ்வாறு மதிப்பது என்றெல்லாம் ஆரம்பப்பள்ளிகளில்  கற்றுத் தருகிறார்களாம்.

திருமதி. கீதா இராமனுஜம் என்பவர் 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் (சுமார் 18-20 ஆண்டுகளுக்கு முன்பு),  பெங்களூரில் கதாலயாவை (Kathalaya) நிறுவினார். இந்தியாவில் முதன் முதலாகத் தோன்றிய இந்த அமைப்பு  கதைசொல்லல் மறுமலர்ச்சிக்காக (Revival of Storytelling) அர்ப்பணிக்கப்பட்டது.

இந்திய கதைசொல்லிகள் பிணையம் (Indian Storytelling Network (ISK) என்பது கீதா இராமனுஜம் (இயக்குனர் கதாலயா, கதைசொல்லல் கலைக்கழகம் (Academy of Storytelling), பெங்களூரு) மற்றும் எரிக் மில்லர் (இயக்குனர், உலக கதைசொல்லல் நிறுவனம் (World Storytelling Institute), வழிநடத்துனர் சென்னை கதைசொல்லல்  கலைக்கழகம் (Chennai Storytelling Association) என்போரால் 2011  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறுவப்பட்டது.

சென்னையில் கதைசொல்லல் களம் விரைவாக உருவாகி வருகிறது. சென்னை கதைசொல்லல்  கலைக்கழகத்தில் (Chennai Storytelling Association (CSA) சுமார் 250 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள். சென்னையைச் சார்ந்த கதைசொல்லிகளைக் கொண்ட இக்குழு கதைசொல்வதில் தங்களுக்கு உள்ள தீவிர ஆர்வத்தை நிரூபித்து வருகிறார்கள்.

சென்னையில் இந்திய கதை சொல்லிகளின் பிணையம் (Indian Storytelling Network Chennai) என்ற அமைப்பு பல இடங்களில் நிகழும் கதை சொல்லும் செயல்பாடுகள் (Ongoing Storytelling Activities in Chennai) மற்றும் கதை சொல்லும் அமைப்புகளை (Storytelling Organisations) ஒருங்கிணைத்து வருகின்றனர். இவர்களின் வலைத்தளம் பல தகவல்களைத் தருகின்றது.

kadhai1.jpg (483×387)

பல்வேறு துறைகளில் பணிபுரியம் பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து “கதை சொல்றோம் வாங்க” என்ற அமைப்பினை நிறுவி பள்ளிக் குழந்தைகளுக்குக் கதை சொல்லுவதை ஒரு சேவையாகச் செய்து வருகிறார்கள். குக்கிராமத்துக் குழந்தைகளின் கதை கேட்கும் திறனை மேம்படுத்துவதே இவர்கள்  குறிக்கோள் ஆகும்.

ஈரோட்டில் வசிக்கும் வனிதாமணி தன் வீட்டில் ‘பட்டாம்பூச்சி’ என்ற குழந்தைகள் நூலகத்தை நடத்தி வருகிறார். அத்துடன், ‘கதைக்களம்’ என்ற பெயரில் கதைசொல்லியாகவும் இயங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிறுகளில் இவரது வீட்டிலேயே ‘கதைக்களம்’ நிகழ்வு நடைபெறும். கட்டணம் ஏதுமில்லா இந்தக் கதைக்கள முகாமில் ஒவ்வொரு வாரமும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

Jeeva raghunath storyteller jpg க்கான பட முடிவு

Jeeva Raghunath PC: The Hindu August 12, 2015

ஜீவா ரகுநாத் ஒரு தொழில்ரீதியான கதை சொல்லி. 12 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மழலையர்களுக்கான ஆசிரியையாய் கதை சொன்னார். தற்போது கதை சொல்லுதல் இவர் முழுநேரத் தொழில். 17 சர்வதேச கதை சொல்லும் திருவிழாக்களில் (International Story Telling Festivals) இந்தியாவின் பிரதிநிதியாய் கலந்து கொண்டுள்ளார்.  சுமார் 25,000 மழலையர்கள் (toddlers) மற்றும் வளர்ந்த குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.

குழந்தைகள் வளர்ச்சிக்கு கதை கேட்டல் மிக அவசியம். “மழலையர் கல்வியில் கதை சொல்லல், கதை கேட்டல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும், பணியிடத்திலும். கதை சொல்லுதல் பகுப்பாய்வுத் திறன், நினைவுத் திறன், கற்பனைத் திறன், காட்சிப்படுத்தல் திறன், மொழித் திறன், உள்ளுணர்வு திறன், கேட்கும் திறன் என பல ஆதார உளவியல் திறன்களைக் கூர்மைபடுத்துகிறது.” இளைஞர்களைக் கதை சொல்லிகளாக வளர்க்கலாம். இவர்களை ஊக்கப்படுத்தித் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தால் இவர்கள் சிறந்த கதை சொல்லிகளாக மாறலாம். பள்ளிகளில் தொழில்ரீதியான கதை சொல்லிகள் கோடை வகுப்புகள் மூலம் கதை சொல்கிறார்கள். என்றாலும் கதை சொல்லுதல் பள்ளியின் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டியது அவசியம்.

குறிப்பு:- உலகின் எந்த நாட்டிலிருந்தும் கீழ்காணும் பல்வேறு வழிகளில்  இணைந்து தினமும்  கதைகளைப் பெற வசதிசெய்யப்பட்டுள்ளது . 

Facebook     : https://www.facebook.com/groups/1615103265251672/
Whatsapp    : https://chat.whatsapp.com/LMpjpws626n7YYbMQMTzD1
Telegram     : https://t.me/joinchat/GyYScEjBsAtRIzBNdyQXgQ
Google Group : https://groups.google.com/forum/#!forum/kidsstories
Yahoo Group : https://groups.yahoo.com/group/TamilKidsStory

கதைசொல்லி குழுமங்களில் வரும் சிந்தனைகள், கருத்துகளை ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்த  ஏற்பாடு செய்து www.valaitamil.com/kids_kids-stories_vizhiyan பகுதியில் தொகுக்கப்படுகிறது.

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in குழந்தைகள் and tagged , , , . Bookmark the permalink.

5 Responses to குழந்தைகளுக்கு ஏன் கதை சொல்ல வேண்டும்?

  1. பிங்குபாக்: குழந்தைகளுக்கு ஏன் கதை சொல்ல வேண்டும்? – TamilBlogs

  2. அருமையான உளவியல் கட்டுரை நண்பரே…

    இனிவரும் காலங்களில் தாத்தா, பாட்டி உறவுமுறைகள்கூட குழந்தைகளுக்கு அரிய விடயமாகி விம்.

    Liked by 1 person

  3. Gowtham சொல்கிறார்:

    நல்ல தகவல்! பெற்றோர்கள் படிக்கவேண்டிய தகவல்!

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.