பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 4

பாதாமியின் நான்காம் குடைவரை, மூன்றாம் குடைவரையை அடுத்து, கிழக்குத் திசையில் சுமார் பத்து அடி தாழ்வாக அமைந்துள்ளது. பாதாமியின் நான்கு குடைவரைகளுக்குள் இதுவே மிகவும் சிறியது. இது சமண சமயத்தின் ஞான நிலையை அடைந்த மனிதர்களும் ஆன்மீக சமய குருவுமான சமணத் தீர்தங்கர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கருவறையில் மகாவீரர் சிற்பம் இடம்பெற்றுள்ள காரணத்தால் இக்குடைவரை மகாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது எனலாம். ஞான நிலையை அடைந்த இந்தத் தீர்த்தங்கரர்கள் சமணர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றனர். இவர்கள் தனது வாழ்நாட்களைக் கழித்த பின் தீர்த்தங்கரர்கள் பிறவிப் பெருங்கடல் என்னும் பிறப்பு – இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று முக்தி நிலை பெறுகிறார்கள்.

கி.பி. எழாம் நூற்றாண்டின் இறுதியில், பாதாமியின் மூன்று குடைவரைகளை அகழ்ந்த பிறகு, நான்காவதாக அகழப்பட்டுள்ளது. இக்குடைவரை இந்து சாளுக்கிய மன்னர்களால் சமணத் தீர்த்தங்கரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சில அறிஞர்கள் இக்குடைவரை கி.பி. எட்டாம் நூற்றண்டில் அகழப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். மற்ற குடைவரைகளைப் போலவே, நான்காம் குடைவரை விரிவான செதுக்கல்களையும் பல்வேறு அழகணிகளையும் பெற்றுள்ளன. சில அழகணிகள் (embellishments) கி.பி. 11 அல்லது 12 நூற்றாண்டுகளில் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சமணத் தீர்தங்கர்களான பாகுபலி, பார்சுவநாதர் மற்றும் மகாவீரர் உடன் மற்ற தீர்த்தங்கரர்கள் குறியீட்டுக் காட்சியாகச் சிற்பத் தொகுப்புகளில் காட்டப்பட்டுள்ளனர். இந்தப் பதிவு பாதாமியின் நான்காம் குடைவரையைப் பற்றி விவரிக்கிறது.

cave_no-_4_badami_cave_temples

இக்குடைவரை முகப்பு (Facade), செவ்வக வடிவிலான மகாமண்டபம், முகமண்டபம் செவ்வக வடிவிலான கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. குடைவரைக்கு முன்னால் அமைந்துள்ள சமதளத்திலிருந்து குடைவரையை அடைய ஆறு படிகளுடன் கூடிய இரண்டு தனித் தனிப் படிக்கட்டுகள் உதவுகின்றன. உறுப்பு வேறுபாடற்ற தாங்குதளம் சீராகச் செதுக்கப்படவில்லை. முகப்பை நான்கு நான்முகத் தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் தாங்குகின்றன. தூண் மற்றும் அரைத்தூண் ஒவ்வொன்றும் அகன்ற, ஆழமான அடித்தளம் கொண்டுள்ளது. தூண்களின் தலைப்புகள் (Capitals) நன்கு அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேல்  பட்டையுடன் கூடிய தரங்கப்போதிகைகள் உத்தரம் தாங்குகின்றன. ஐந்து அங்கணங்கள் கொண்ட முகப்பில் நடு அங்கணம் நுழைவாயிலாகப் பயன்படுகிறது. போதிகையை அடுத்து உத்தரத்திலிருந்து கூரை உறுப்புகள் ஆரம்பமாகின்றன.  கூரையின் நீட்சி சாய்வான கபோதமாக (sloping cornice) காணப்படுகிறது. கபோதம் கனமாகவும் (heavy) கடினத்தன்மையுடனும் (rough) காணப்படுகிறது.

குடைவரை முகப்பு (Facade) மொத்த நீளமும் 31 அடி (9.4 மீ),  6.5 அடி (2.0 மீ) அகலமும் உடையது. முகப்பிலிருந்து மலையினுள்ளே 16 அடி (4.9 மீ) ஆழம்வரை இக்குடைவரையின் மகாமண்டபம் அகழப்பட்டுள்ளது (excavated). மகாமண்டபத்தைத் தாண்டி 25.5 அடி (7.8 மீ) அகலமும் 6 அடி (1.8 மீ) ஆழமும் கொண்ட செவ்வகக் கருவறை அகழப்பட்டுள்ளது.  முகமண்டபத்திலிருந்து கருவறையை அடைய கைபிடிச் சுவர்களுடன் அமைக்கப்பட்ட நான்கு படிகள் உதவுகின்றன. முதற்படி அரைச்சந்திர வடிவில் அமைந்துள்ளது.

badami8_1024

பாதாமி நான்காம் (சமணக்) குடைவரை மகாமண்டபம், கருவறை உட்புற வடிவமைப்பு PC: Gopan G Nair GOPS Photography

முகப்பை அடுத்து இரண்டு தனித்தனி தூண்களும், இரண்டு இணைந்த தூண்களும் தாங்கும் ஒரு மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தூண்களின் அடிப்பகுதி நான்முக வடிவிலும், மேற்பகுதி கும்பம் (pin cushion capital) குமிழ்வான (bulbous) நான்முக வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களின் மேற்புறத்தில் மேல்பூச்சு பூசப்பட்டு இதன் மீது அழகணிகள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் முகங்களில் (Column faces) தீர்தங்கர்களின் உருவங்களும், பதக்கங்களும் (Medallion) செதுக்கப்பட்டுள்ளன. தூணின் தலைப்பகுதிக்கு மேலே அமைந்துள்ள பட்டைகளுடன் கூடிய விரிகோணத் தரங்கப் போதிகைகள்  (Ribbed Potikas with Median Bands) (தரங்கப் போதிகை = அலைகளுக்கு அலை அலையான மேற்பரப்புடன் நடுவில் சிறிய பட்டையையும்  கொண்டிருக்கும்) உத்தரம் தாங்குகின்றன. போதிகைக்கு மேல் அமைந்துள்ள கூரை உறுப்புகளில் உத்திரம், வாஜனம் போன்றவை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் கூரை குறுக்கு உத்தரங்களால் பத்திகளாகப் (Coffers) பிரித்தமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பத்திகள் வெறுமையாகக் காட்டப்பட்டுள்ளன.

badami5_1024

பாதாமி நான்காம் (சமணக்) குடைவரை பாகுபலி சிற்பத் தொகுதி மகாமண்டபம், தூண்கள் உட்புற வடிவமைப்பு PC: Gopan G Nair GOPS Photography

தூண் முகத்தில் செதுக்கப்பட்டுள்ள அழகணி. 44 தீர்த்தங்கரர்கள் சிற்றுருக்களாகக் (figurines) காட்டப்பட்டுள்ளனர். நடுவே காட்டப்பட்டுள்ள தீர்த்தங்கரர் முக்குடையின் கீழே பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. பீடத்தில் காட்டப்பட்டுள்ள தீர்த்தங்கரரின் இலச்சினையைக் கண்டறிய இயலவில்லை.

wall_relief1_in_the_jain_cave_temple_no-_4_in_badami

குடைவரை முகப்பின் வலப்புறச் சுவரில் பாகுபலி (கோமதேஸ்வரர்) கயோட்சர்கா (Kayotsarga) என்னும் தியான தோரணையில் (Meditating Posture) மாதவிக் கொடிகள் (vines) கால்களில் படர்ந்த நிலையில் நின்றவாறு காட்சிதருகிறார். தலையில் அடர்ந்த மயிரிழைகள் காணப்படுகின்றன. நீண்டகாலம் தியானம் இயற்றியதால் இந்த மாதவிக் கொடிகள் இவர் மீது படர்ந்துள்ளன. சிரவணபெளகொலாவில் காணப்படுவது போல இவரது கால்களையொட்டி பாம்புகள் காட்டப்பட்டுள்ளன.

பாகுபலி: சமண புராணக் கதை (ஆதிபுராணம்)

சமணர்களால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் முதலாவது தீர்த்தங்கரான ஆதிபகவன் (ஆதிநாதர் என்ற தீபநாயக சுவாமி) என்ற விருஷப தேவர் இஷவாகு வம்சத்தில் உதித்த ஓர் அரசர். இவருக்கு நூறு புதல்வர்கள்; மூத்தமகன் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி. பிராமி, சுந்தரி என்று இரண்டு மகள்களும் உள்ளனர். பாகுபலிக்கு மக்களிடம் செல்வாக்கு மிகுந்திருந்தது. விருஷப தேவர் தன் அரசை இரு மகன்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சமணத் துறவியாகி தவ வாழ்க்கை மேற்கொள்கிறார். பாகுபலிக்கு அஸ்மாகா என்ற நாடும் பரதனுக்கு வினிதா (அயோத்யா) என்ற நாடும் பாத்யதையாகக் கிடைகின்றன. பொறாமை கொண்ட பரதன் தான் மட்டும் அரசனாவதைக் கருத்தில்கொண்டு பல நாட்டு அரசர்களைப் போரில் வெல்கிறான். பரதன், பாகுபலியின் அஸ்மாகா நாட்டையும் அபகரிக்க எண்ணியும் அவரைக் கொல்லத் துணிந்தும் போருக்கு அழைக்கிறான். பாகுபலி சமாதானத்தை விரும்பி தன் தலைமுடியைத் தானே பிய்த்துக் கொண்டு சமணத் துறவியாகி விட்டார். தன் தந்தையும் சமணச் சமயத்தின் முதல் தீர்த்தங்கரருமான விருஷப தேவரின் சீடராகவும் ஆனார்.

relief_of_jain_tirthankara_parshvanath_in_the_badami_cave_temple_no-4

பார்சுவநாதர் சிற்பத் தொகுதி

சமணச் சமயத்தில் 23 வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர் ஆவார். இவர் குடைவரை முகப்பின் இடது பக்கச் சுவரில் முக்குடையின் கீழ் நின்ற நிலையில் காட்சி தருகிறார். இவரது தலைக்கு மேலே படம் எடுத்தநிலையில் குடைபிடிக்கும் ஐந்துதலை நாகம் காட்டப்பட்டுள்ளது. இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தொங்கவிட்டுள்ளார். இயக்கி பத்மாவதியும் இயக்கன் தர்நேந்திரனும் இவருக்குப் பாதுகாவலர்களாகவும் சாசனா தெய்வங்களாகவும் விளங்குகிறார்கள். பார்சுவநாதரை, கமடன் என்னும் அசுரன் பாறையைக் கொண்டு தாக்குகிறான். அவரை காக்க தர்நேந்திரன் ஐந்து தலை நாகமாகப் படமெடுத்து மேலிருந்து காக்கின்றான். பார்சுவநாதரின் வலப்புறமாக நின்றவாறு இருவரையும், பத்மாவதி இயக்கி தன்னுடைய வஜ்ர குடையால் (Parasol) காக்கின்றாள். பார்சுவநாதரின் காலடியில் ஒரு சமண அடியார் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இச்சிற்பத் தொகுதி கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசல் சிற்பம் என்று கருதப்படுகிறது.

இவர் இஷ்வாகு குலத்தில், காசி நாட்டு அரசன் அஸ்வசேனா – இராணி வாமா தேவிக்கு வாரணாசியில் பிறந்தவர். முப்பது வயதில் துறவறம் பூண்டார். தொடர்ந்து 84 நாட்கள் கடுமையாகத் தவம் செய்து கேவல ஞானம் பெற்றார். தன்னுடைய 100 ஆவது வயதில் முக்தியடைந்தார்.

தீர்த்தங்கர்களின் சிற்பத் தொகுதி

அடையாளம் காண இயலாத சமணத் தீர்தங்கர்களின் புடைப்புச் சிற்பத் தொகுதி மண்டபத்தின் இடது பக்கச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் மிசேல் (George Michell) எழுதிய The Blue Guide to Southern India நூலில் இந்தச் சிற்பத் தொகுதி, இக்குடைவரையில் காணப்படும் முக்கியச் சிற்பத் தொகுதிகளுக்குப் பிந்தைய காலத்தில் செதுக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

7th_-_12th_century_mahavira_flanked_by_24_tirthankaras_in_cave_42c_badami_jain_cave_temple_karnataka

இந்திரபூதி கௌதமர் சிற்பத் தொகுதி

இந்திரபூதி கௌதமர் மகாவீரரின் சீடராவார்.  இவர் நான்கு பாம்புகளுடன் காட்சி தருகிறார். இவருடன் சுந்தரி பிராமி ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர். மகாவீரர் வீடுபேறு அடைந்த பின்பு இவருடைய ஒன்பது சீடர்கள் கேவல ஞானம் வாய்க்கப் பெற்று மகாவீரர் காலத்திலேயே இராசக்கிருக நகரில் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனை நோன்பிருந்து வீடுபேறடைந்தனர். கௌதம இந்திரபூதி, சுதர்மர் என்னும் இரண்டு சுணாதரர்கள், மகாவீரர் வீடுபேறடைந்த பின்னரும் உயிர் வாழ்ந்திருந்தார்கள். மகாவீரர் வீடுபேறடையும் வரையில் தாமே சமணச் சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின்னர், அவர் சீடர் கௌதம இந்திரபூதி என்பவர் சமயத் தலைவராக இருந்தார்.

ஜீனர் (மகாவீரர் ?) சிற்பத் தொகுதி

Cave 4

தீர்த்தங்கரர் (மகாவீரர்?) சிற்பத் தொகுதி

கருவறையில் மகாவீரர் சிங்காசனத்தில் அமர்ந்துள்ளது போலக் காட்டப்பட்டுள்ளார்.  இந்தப் பீடத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கல்வெட்டு ஒன்று ஜக்கவே (Jakkave) என்பவரின் மரணத்தைக் குறிக்கிறது. இவருடைய இலச்சினைகள் நன்கு புலப்படவில்லை. எனவே சில அறிஞர்கள் இந்தச் சிற்பத்தை அமர்ந்த நிலையில் காணப்படும் ஒரு தீர்த்தங்கரர் என்று மட்டும் அடையாளப்படுத்தியுள்ளனர். இந்த ஜீனரின் சிற்பத்திற்கு மேல் ஒளிவட்டம் (halo) காணப்படுகிறது. ஜீனரின் இருபுறமும் யட்சிகள் புடைப்புச் சிற்பமாகச் சௌரி ஏந்தியவாறு காட்சி தருகிறார்கள். யாளியும் மகரத் தலையும் கொண்ட உருவங்கள் பறந்த நிலையில் சிற்பத்தின் மேல் இரு மூலைகளில் காட்டப்பட்டுள்ளனர்.

வர்த்தமானர் சித்தார்த்தர் – திரிசலா ஆகியோருக்கு கி.மு. 599 ஆம் ஆண்டு பீகார் மாநிலம் வைசாலி அருகில் குந்த கிராமத்தில் பிறந்தார். மனைவி பெயர் யசோதா. மகள் பெயர் அனுஜா பிரியதர்சினி. இவர் தன்னுடைய 28 ஆம் வயதில் குடும்ப வாழ்க்கை விட்டு வெளியேறினார். 12 ஆண்டுகள் உண்மையைத் தேடி அலைந்தார். தன்னுடைய 42 ஆம் வயதில் கேவல ஞானம் பெற்றார். இவர் மகாவீரர் (சிறந்த வீரர் என்று பொருள்) என்று பெயர் பெற்றார். கி.மு.527 ஆம் ஆண்டுத் தன்னுடைய 72 ஆம் வயதில் பவபுரி என்னுமிடத்தில் மரணமடைந்தார். மகாவீரர் போதித்த மூன்று அடிப்படை கருத்துக்கள் – திரி-ரத்தினங்கள் என்று அறியப்படுகின்றன. இவை: 1. நல்ல நம்பிக்கை; 2. நல்ல அறிவு; 3. நல்ல நடத்தை ஆகும். இவர் அகிம்சைக்கு முக்கியத்துவம் அளித்தார்.

பாதாமியின் நான்காம் குடைவரையில் காணப்படும் அழகணிகளும் சமயச் சின்னங்களும், ஐஹோளேயின் சமணக் குடைவரை மற்றும் மகாராஷ்டிராவின் எல்லோராக் குடைவரையில் அமைந்துள்ள அழகணிகளையும் சமயச் சின்னங்களையும் போலவே உள்ளன என்று லிசா ஓவன்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

குறிப்புநூற்பட்டி

  1. Badami : Magnicient Caves of Ancient India http://gops.org/?p=973
  2. Badami, Aihole & Pattadakal and off the beaten track https://www.indiamike.com/india/car-motorbike-and-bike-photologues-f166/badami-aihole-and-pattadakal-and-off-the-beaten-track-t153469/
  3. Badami cave temples Wikipedia
  4. Cave 4, Badami: Jain Tirthankarasaccess. art-and-archaeology.com, Princeton University. 21 October 2015.
  5. Lisa Owen (2012). Carving Devotion in the Jain Caves at Ellora. BRILL Academic.
  6. The Remarkable Cave Temples of Southern India. George Michell.https://www.smithsonianmag.com/travel/remarkable-cave-temples-architecture-nagara-dravidian-southern-india-deccan-chalukya-180957971/
  7. World Heritage Monuments and Related Edifices in India. Ali Javid, ʻAlī Jāvīd, Tabassum Javeed. Algora Publishing, 2008. 309 p.

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in சமண சமயம், தொல்லியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 4

  1. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    படங்களும் பதிவும் தொடர்ந்து வியப்பை வாரி வழங்குகின்றன ஐயா
    நன்றி

    Like

  2. பிங்குபாக்: பாதாமி குடைவரைக் கோவில்கள் : குடைவரை 4 – TamilBlogs

  3. படங்களும், விடயங்களும் பிரமிப்பூட்டுகின்றன நண்பரே

    Like

  4. குமார் சொல்கிறார்:

    முதுகலை சரித்திரம் பயில வேண்டும் என்ற ஆவலை தங்கள் கட்டுரை மேலும் தூண்டுகிறது

    Like

  5. Dr J.R.SIVARAMAKARISHNAN சொல்கிறார்:

    .

    Like

  6. kalairajan சொல்கிறார்:

    மிகவும் தெளிவான படங்களுடன் அருமையான விளங்கங்கள் அடங்கிய கட்டுரை. நன்றி ஐயா.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.