இந்தியாவின் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சகம் (Union Ministry for Culture, Government of India), மலையாள மொழியை இதன் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செம்மொழி (Classical language) என்று வகைப்படுத்த வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. இந்த வல்லுநர் குழு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 19 நாளன்று அளித்த பரிந்துரையை பண்பாட்டுத் துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. மத்திய அமைச்சரவை இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு 2013 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாளன்று மலையாள மொழியைச் செம்மொழி (Classical language) என்று, வகைப்படுத்தித் தகுதி வழங்கியுள்ளது. வாழப்பள்ளி செப்பேடு வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட ஓர் இன்றியமையாத ஆவணம். வாழப்பள்ளி மகாதேவர் கோவில் பற்றிய ஒரு தீர்ப்பாணையும் (decree), திருவாற்றுவையைச் சேர்ந்த சிலரிடையே ஏற்பட்ட உடன்படிக்கையும் ஆகும். இந்தத் தீர்ப்பனையை இரண்டாம் சேரப் பேரரசின் / குலசேகரப் பேரரசின் அரசரான இராஜசேகர வர்மா வெளியிட்டுள்ளார். இந்தச் செப்பேடு எவ்வாறு மலையாளம் செம்மொழி தகுதி பெற உதவியது என்பது பற்றி இந்தப்பதிவு விவரிக்கிறது.
நீண்ட நாட்களாக மலையாளம் மட்டுமே செம்மொழியாக வகைப்படுத்தப்படாமல் இருந்தது. மலையாளம் செம்மொழித் தகுதி பெற்றதால் இந்தக் குறை நீங்கியுள்ளது. யுனெஸ்கோவின் மொழி அட்டவணையில் மலையாள மொழி, சார்பற்ற வரிவடிவம் மற்றும் இலக்கியங்களின்படி, 26 ஆம் இடத்தில் உள்ளது. தென்னிந்தியாவில் மூன்றரைக் கோடி மக்களால் பேசப்படும் மொழி மலையாள மொழியாகும். மக்கள்தொகை அடிப்படையில் மலையாளம் நான்காவது இடத்தில் உள்ளது. திராவிட மொழிகளின் குடும்பத்திற்குச் சொந்தமான, மலையாளம் 1,500 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
யு.சி. பெர்க்லியின் மொழியறிஞர் திரு. ஜார்ஜ் எல். ஹார்ட்டின் (George L. Hart, UC Berkeley linguist) கூற்றுப்படி “செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளைச் சாராதிருத்தலும் வேண்டும்.” இவ்வாறு முதன் முதலில் 12.10.2004 ஆம் நாள் அன்று இந்திய அரசு செம்மொழி எனும் தகுதியைத் தமிழ் மொழிக்கு வழங்கியது. தமிழ் மொழியைத் தொடர்ந்து சமஸ்கிருதத்திற்கு 2005 ஆம் ஆண்டிலும், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு 2008 ஆண்டிலும், மலையாள மொழிக்கு 2013 ஆம் ஆண்டிலும், ஒடியா மொழிக்கு 2014 ஆம் ஆண்டிலும் செம்மொழித் தகுதியினை இந்த அமைச்சகம் வழங்கியது.
“செம்மொழி” என மொழியின் தகுதியை வகைப்படுத்தித் தீர்மானிப்பதற்கு இந்தியா அரசாங்கம் தற்போது பின்வரும் அடிப்படைகளை பின்பற்றுகிறது.
- ஒரு மொழியானது 1,500 முதல் 2,000 ஆண்டுகள் வரையிலான வரலாறு மற்றும் பழைமையான இலக்கியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். (High antiquity of its early texts/ recorded history over a period of 1500-2000 years.)
- ஒரு மொழியின் தொடக்ககால இலக்கியங்கள் / நூல்களைப் பல தலைமுறைகளாக அம்மொழியைப் பேசிவருவோர் தங்களது மதிப்புமிக்க பாரம்பரியமாகக் கருத வேண்டும். (A body of ancient literature/ texts, which is considered a valuable heritage by generations of speakers.)
- இலக்கியப் பாரம்பரியம் அசலாக இருக்கவேண்டும். மற்றொரு பேச்சுச் சமூதாயத்தில் இருந்து இரவல் பெற்றதாக இருக்கக்கூடாது. (The literary tradition be original and not borrowed from another speech community.)
- செம்மொழியும், இலக்கியமும் நவீன மொழியிலிருந்து வேறுபட்டுத் தனித்தன்மையுடன் இருக்கவேண்டும். செம்மொழிக்கும் இதன் பிற்கால வடிவங்களுக்கும் அல்லது இதன் கிளை மொழிகளுக்கும் இடையே தொடர்பில்லாமலும் இருக்கலாம். (The classical language and literature being distinct from modern, there may also be a discontinuity between the classical language and its later forms or its offshoots.)
சேரர் வரலாறு
முதலாம் சேரப் பேரரசின் வலிமை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் குன்றியது. இரண்டாம் சேரப் பேரரசு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தலையெடுத்தது. இரண்டாம் சேரப் பேரரசை சேரன் செங்குட்டுவன் வழித் தோன்றல்களாக வந்த 13 குலசேகர அரசர்கள் (சேரமான் பெருமாள் அரசர்கள்?) (கி.பி. 800 – 1102) தொடர்ந்தனர். இம்மன்னர்கள் பெருமாள் வம்சம் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். இந்தப் பெருமாள் வம்சத்தார் சேரநாட்டை மகோதயபுரத்தைத் (கொடுங்களூர் (Crangore), முசிரிப்பட்டிணம் (Muziris) தலைமையகமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். குலசேகரப் பேரரசின் இராஜசேகர வர்மா (ஆட்சியாண்டு கி.பி. 800—844), குலசேகரப் பெருமாளைத் (குலசேகர ஆழ்வாரைத்) தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் ஆவார். கொல்லம் சகாப்தத்தின் (Kollam Era) முன்னோடியும் இவரே. கொல்லம் ஆண்டு (Kollam Calendar) இவருடைய ஆட்சியில் – கி.பி. 825 ஆம் வருடம் ஜூலை மாதம் 25 ஆம் தேதி – புழக்கத்திற்கு வந்தது. இராஜசேகர வர்மாவை அடுத்து ஸ்தாணு ரவி வர்மன் (ஆட்சியாண்டு கி.பி. 844-55) ஆட்சிக்கு வந்தார். குலசேகர வம்சத்தின் இறுதி அரசர் ராம வர்மா குலசேகரா (ஆட்சியாண்டு கி.பி. 1090-1102) ஆவார். இவர் சோழர்களின் தாக்குதலையடுத்து சேரப்பேரரசின் தலைநகரை மகோதயபுரத்திலிருந்து கொல்லத்திற்கு மாற்றினார்.
வட்டெழுத்து
வட்டெழுத்து என்பது தென்னிந்தியாவில் சுமார் கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வழங்கத்திலிருந்த ஒரு வகை எழுத்தாகும். தெக்கன் மலையாளம், நாநாமோன, கோலெழுத்து என்பன இதன் பிற பெயர்களாகும். வட்ட வடிவமாக எழுதப் பெற்றதால் இவை வட்டெழுத்துக்கள் எனப் பெயர் பெற்றன. தமிழ்-பிராமி எழுத்திலிருந்து வட்டெழுத்து தோன்றியது என்பது அறிஞர்கள் கருத்து. அறச்சலூர், பூலாங்குறிச்சி, இந்தளூர், அரசலாபுரம், பெருமுக்கல், அம்மன் கோயில்பட்டி ஆகிய ஊர்களில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இந்தக் கருத்திற்குச் சான்று பகர்கின்றன.
தமிழகத்தில் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வட்டெழுத்து தனது செல்வாக்கை முற்றிலும் இழந்தது. இருப்பினும் கேரளத்தில் தொடர்ந்து இவ்வட்டெழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. கேரளாவில் வடமொழிச் சொற்களை அதிகமாகப் பயன்படுத்தியதன் காரணமாக வட்டெழுத்துடன் கிரந்தத்தின் பயன்பாடும் அதிகரித்தது. பின்னர் இவ்விரு எழுத்துக்களும் இணைந்து மலையாளம் என்ற புதிய வரிவடிவம் உருவானது. (வட்டெழுத்து மா.பவானி. தமிழ் இணையக் கல்விக்கழக்கம்).
மலையாள மொழியின் தொன்மை
கலிங்கச் சக்ரவர்த்தி அசோகரின் கல்வெட்டுச் சாசனமே ‘கேரளம்’ என்ற சொல்லைக் குறிப்பிடும் பழமையான பதிவு ஆகும். கி.மு. 300 மற்றும் 270 ஆண்டுகளுக்கிடையே பொறிக்கப்பட்ட அசோகரின் சாசனம் ஒன்றில் இடம்பெறும் ‘கேரளபுத்ர’ என்ற சொல் கேரளத்தைக் குறிக்கிறது. கேரளபுத்ர மற்றும் சேரமான் ஆகியவற்றின் பொருள் ஒன்று தான். கேரளாவின் எடக்கல் குகையில் ஐந்து தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. எடக்கல் கல்வெட்டில் பயன்பட்ட “ஐ பழமா” என்ற மொழி மலையாளம் என்று சில மலையாள கல்வெட்டு அறிஞர்கள் கருதுகிறார்கள். எர்ணாகுளம் மாவட்டத்தில் பட்டணம் என்ற ஊரில் “அ ம நா” என்று தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட , பானை வளையம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பொறிப்பின் பொருள் ஒரு சமணன் என்பது ஆகும்.
எடக்கல் குகைக் கல்வெட்டுகள், பட்டணம் கல்வெட்டுகள், நீலம்பூரில் உள்ள நெடும்காயம் கல்வெட்டுகள், வாழப்பள்ளி செப்பேடு (கி.பி. 830), தரிசப்பள்ளி செப்பேடு (கி.பி. 849), ஸ்ரீமூலவாசம் செப்பேடு (கி.பி. 929), கோதா ரவிவர்மனின் சொக்கூர் கல்வெட்டு (கி.பி. 932), மாம்பள்ளிச் செப்பேடு (கி.பி. 974), பாஸ்கர ரவிவர்மனின் திரிக்கொடித்தானம் கல்வெட்டு (கி.பி. 976), பாஸ்கர ரவிவர்மனின் யூதர் செப்பேடு (கி.பி. 1000), மடயிபள்ளி கல்வெட்டு (கி.பி. 1124) ஆகிய ஆவணங்கள் மலையாள மொழியின் 1500 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளதாக வாதிடப்பட்டது. சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் 45 பேர் சேரநாட்டைச் (இன்றைய கேரளத்தை) சேர்ந்தவர்கள் என்பது மற்றொரு வாதம். சங்க இலக்கியத்தில் பல மலைநாட்டுச் சொற்கள் இடம்பெற்றுள்ளதாகப் பாத்யதை கொண்டாடுகிறார்கள். பல சங்க இலக்கியச் சொற்கள் தமிழிலும் மலையாளத்திலும் வேர்ச்சொற்களாக அமைந்துள்ளன என்றும் இந்த வேர்சொற்களிளிருந்தே நவீன மலையாள மொழி தோன்றியது என்றும் பாத்யதை கொண்டாடப்படுகிறது.
வாழப்பள்ளி செப்பேடு
வாழப்பள்ளி செப்பேடு Vazhappally Copperplate (வாழப்பள்ளி சாசனம் (Vazhappally Saasanam) கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி தாலுகா, வாழப்பள்ளி தலமணா இல்லம் செல்லும் வழியில், மேச்சேரி இல்லம் என்னும் இடத்தில் கண்டறியப்பட்டது. (டி.ஏ. கோபிநாத ராவ், திருவாங்கூர் ஆர்கியாலஜிகல் சீரிஸ். வால்யூம் 2. 1908. திருவனந்தபுரம். பக்கம். 13-14 )
வாழப்பள்ளி (വാഴപ്പള്ളി) மகாதேவர் (மகா சிவன்) கோவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், தென் கேரளக் கோட்டம், மடப்பள்ளிப் பஞ்சாயத்துத் தொகுதி, சங்கனாச்சேரி நகரில் பின் கோடு 686103 அமைந்துள்ள கிராம ஷேத்திரம் ஆகும். இதன் அமைவிடம் 9° 27′ 23.4” N அட்சரேகை 76° 31′ 37.56” E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 11 மீ. ஆகும். இவ்வூர் மடப்பள்ளியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கோட்டயத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 137 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருவல்லா, கோட்டயம், செங்கன்னூர் ஆகியவை அருகிலுள்ள நகரங்கள் ஆகும். அருகிலுள்ள இரயில் நிலையம் சங்கனாச்சேரி 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் கொச்சி விமான நிலையம்.
இந்தச் செப்பேடு இராஜசேகர வர்மாவின் தீர்ப்பாணையும் (decree), திருவாற்றுவையைச் சேர்ந்த சிலரிடையே ஏற்பட்ட உடன்படிக்கையும் ஆகும். இந்தச் செப்பேட்டு ஆணை இராஜசேகர வர்மாவின் பன்னிரெண்டாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 830 ஆம் ஆண்டு) வெளியிடப்பட்டது. இந்தச் செப்பேடு) கி.பி. 832 ஆம் ஆண்டு மலையாளத்தில் எழுதப்பட்ட சேரர்களின் (மகோதயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த குலசேகரப் பெருமாள் அரசர்களின்) முதல் ஆவணமாகக் கருதப்படுகிறது.
வாழப்பள்ளி சாசனம் ராஜசேகார வர்மாவின் (ஆட்சியாண்டு கி.பி. 800—844) இராஜ்ய ஆணை ஆணை ஆகும். இவர் பெரிய புராணம் கூறும் கழற்றறிவார் என்னும் சேரமான் பெருமான் நாயனார் என்ற பெயரில் நன்கு அறியப்படுவதாக பெரும்பாலோர் கருதுகிறார்கள். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராகப் பெரிய புராணம் காட்டுகிறது. இவரும் தேவார மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சமகாலத்தவர்கள் என்றும் கருதப்படுகிறது.
இருவரும் சோழ, பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுக்கு எல்லாம் செல்கிறார்கள். சேரமான் பெருமாள் நாடு திரும்பிய பின் பல ஆண்டுகள் சிவநெறி வழுவாமல் அரசு செலுத்திய பிறகு சுந்தரமூர்த்தி நாயனாருடன் கைலாயம் சென்றார் என்று முடிகிறது சேரமான் பெருமான் நாயனாரின் பெரியபுராணக் கதை. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத் தொண்டத் தொகையில் ஓர் இடத்தில் மட்டுமே கழற்றறிவார் பற்றி “மேகம் போன்ற கொடைத்திறம் கொண்ட கழறிற்றறிவார் தம் அடியார்க்கும் அடியேன்” ஒரே ஒரு வரி வருகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய தேவாரம் ஏழாம் திருமுறையில் கழற்றறிவார் பற்றி ஒரு சொல்கூட இடம்பெறவில்லை. இது போல சேரமான் பெருமான் நாயனார் இயற்றியதாகச் சொல்லப்படும் மூன்று நூல்களிலும் எந்த இடத்திலும் சுந்தரர் இடம்பெறவேயில்லை. சுந்தரருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்வந்த நம்பியாண்டார் நம்பிதான் கழறிற்றறிவாரின் இடத்தில் சேரனைப் பொருத்துகிறார். நம்பியாண்டார் நம்பியால் சேரனாக்கப்பட்ட கழறிற்றறிவாரை சேரமான் பெருமாளாக்கியவர் சேக்கிழார்தான். (அடியார் அரசனாக்கப்பட்ட கதை – ஜெயமோகனுக்கு மறுப்பு . இரா.முருகவேள். கீற்று http://www.keetru.com/literature/essays/murugavel.php)
வாழப்பள்ளி செப்பேடு

வாழப்பள்ளி சாசனம் (செப்பேடு) PC: Wikimedia Commons
இராஜசேகர வர்மாவின் பன்னிரெண்டாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 830 ஆம் ஆண்டு) வெளியிடப்பட்ட வாழப்பள்ளி செப்பேடு ஒரு தீர்ப்பாணையும் (decree), திருவாற்றுவையைச் சேர்ந்த சிலரிடையே ஏற்பட்ட உடன்படிக்கையும் ஆகும். இந்தச் சாசனம் “ஸ்வஸ்திஸ்ரீ” வழக்கமாகத் தொடங்கும் சொல்லுக்குப் பதிலாக “நமசிவாய” என்று தொடங்குவது புதுமை. இதன் மூலம் குலசேகரப் பேரரசின் (இரண்டாம் சேர வம்சத்தின்) கடவுள் சிவன் என்பது தெளிவாகிறது என்கிறார் எம்.ஜி.எஸ். நாராயணன். (MGS Narayanan. Perumals of Kerala. Calicut. 1996. p.24). “ஸ்ரீராஜ ராஜாதிராஜ பரமேஸ்வர பட்டாராக ஸ்ரீராஜசேகர தேவர்” என்று தொடங்கும் இக்கல்வெட்டு திருவாற்றுவைக் கோவிலில் இடைவிடாது (uninterrupted) நடைபெற வேண்டிய தினசரி பூஜை (முட்டப்பலி) பற்றிய உடன்படிக்கையாகும். இச்செப்பேட்டில் “திருவாற்றுவையின் பதினெட்டு நாட்டார்” என்று குறிப்பிடப்படுவோர் திருவாற்றுவையின் பதினெட்டு நாட்டைச் சேர்ந்தோர் ஆவர். இஃது உயர் அங்கீகாரமும் ஆணையுரிமையும் பெற்ற நாட்டார் மற்றும் ஊரார் இடையே ஏற்பட்ட இணக்கமும் உடன்படிக்கையுமாகும். இந்த ஆவணம் இந்தக் கோவிலை நிர்வாகிக்க இவர்களிடையே நிலவிய பரந்த அளவிலான உறவுகளையும் (broad spectrum of relationships) நடைமுறைகளையும் (provision procedures) பற்றிச் சுட்டுகிறது. பூசைப் பொருட்கள் நில உரிமையாளர் அல்லது உற்பத்தி செய்வோரிடமிருந்து கோவிலை நிர்வாகிக்கும் அலுவலர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கான செயல்படு-முறைகளைப் பற்றிச் செப்பேட்டில் தெரிந்துகொள்ள முடிகிறது.
வாழப்பள்ளி மகாதேவர் கோவில்
இங்குள்ள மகாதேவர் மூலவர் சிலை விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. கடவுளின் சொந்த நாடான கேரளத்தை (‘Gods own Country’) உருவாக்கியவரும் இவரே. பரசுராமர் நிறுவிய 108 சிவன் கோவில்களில் வாழப்பள்ளி மகாதேவர் கோவிலும் ஒன்று என்பது கேரளத்தில் நிலவும் நம்பிக்கை. இக்கோவில் “தட்சிண கைலாசம்” என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலைப் பராமரிப்பது திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆகும்.
வட்ட வடிவ ஸ்ரீகோவிலில் (விமானம்) பல நூறாண்டுகள் பழைமை வாய்ந்த இலிங்கம் (மூலவர்) கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் பார்வதி சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தக்ஷிணாமூர்த்தியும், மகா கணபதியும் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளனர். சுப்பிரமணியருக்கும், சாஸ்தவிற்கும், பரசுராமருக்கும், பிரம்ம ராட்சசனுக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு. நாகராஜா, நாக-யக்ஷி, நந்திகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு.
இக்கோவிலில் சிவன், மகா கணபதி ஆகிய இரண்டு சன்னதிகளில், ஒவ்வொரு சன்னதிக்கும் ஒரு கொடிமரம் அமைந்திருப்பது சிறப்பு. கணேசன் இங்குச் சிறப்பாக வழிபடப்படும் கடவுள் ஆவார். கி.பி. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சில சிற்ப வேலைப்பாடுகள் (தாருசில்பாஸ் = Daarusilpas) இதிகாசங்களில் இருந்து சிறு சிலைகளைச் சித்தரிக்கின்றன. இக்கோவிலில் வடக்குப்பகுதியின் அடித்தளத்தில் காணப்படும் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு கி.பி. 1665 ஆம் ஆண்டு (கொல்லம் சகாப்தம் 840 ஆம் ஆண்டு) சில மராமத்துப் பணிகள் நிறைவு பெற்றதாகப் பதிவு செய்கிறது.
வருடாந்திர உத்சவம் மீனம் (பங்குனி = மார்ச்-ஏப்ரல்) மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறுகிறது. சதய நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கித் திருவாதிரை நட்சதிரத்தன்று ஆராட்டுடன் நிறைவடைகிறது. விநாயக சதுர்த்தி முக்கியமான பண்டிகையாகும்.

சங்கனாச்சேரி புறநகரில் அமைந்துள்ள வாழப்பாடி மகாதேவர் கோவில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வரை திராவிட மரபில் அமைந்த புத்தர் கோவிலாக விளங்கியது. வாழப்பள்ளி என்ற ஊர்ப்பெயரில் உள்ள “பள்ளி” என்ற விகுதி புத்த விகாரை அல்லது புத்தப் பள்ளியையே குறிக்கும். இந்துமத மறுமலர்ச்சி வாழப்பள்ளி, பெருன்னை, உம்பிழி போன்ற நகரின் பகுதிகளை பிராமணர்கள் ஆக்கிரமிக்க வழிவகுத்தது. புத்த வழிபாடு கேரளத்தில் வெகுவாகக் குறைந்துபோன காரணத்தால் குலசேகர சேரர்கள் காலத்தில் இது இந்துக் கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. இது பற்றி அஜய் சேகரின் “Buddhism in Kerala” என்ற கட்டுரையில் காணப்படும் சில கருத்துகள் இங்கு
கேரளாவிலுள்ள அனைத்து தற்போதைய சவர்ணா இந்து கோவில்களும் (Savarna Hindu temples) பிராமணீயம் மற்றும் இவர்களுக்குக் கட்டுப்பட்டு கீழ்படிந்த padaja ஆகியோரால் மாற்றம் செய்யப்பட்ட பௌத்தம் அல்லது சமணக் கோவில்களே. கி.பி. எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் ….. பிராமணீய ஆதரவாளர்களால் பௌத்த பிக்குகளும் சந்நியாசினிகளும் (Buddhist monks/nuns) மிருகத்தனமாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர்….
இந்து சமய அறிஞர்கள் மற்ற சமய அறிஞர்களிடம் வாதிட்டு, அவர்களை வாய்மொழியாகத் தோற்கடித்து, அவர்கள் மற்றும் அவர்களுடைய மதத்தை நிரந்தரமாகவே அழித்துவிட்டனர். விரமில பட்டர் (Vramila Bhatta) போன்றவர்களும் இவர்களைப் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களும் ஏவலர்களும் தோற்றவர்களுடைய பீடத்தை இந்து பிராமணீயக் கோவிலாக மாற்றி ஆளும் வர்க்கத்திற்குத் தங்கள் ஆதரவை நல்கினர். அவர் ப்ரச்சன்னா (போலி) புத்தர் (Prachanna (pseudo) Buddha) என்றும் அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் புத்தமதத்தின் சூன்யவாதம் என்னும் பகுத்தறிவுக் கோட்பாட்டை (Buddha’s Sunyavada (rational theory) பிராமணீய சுயம் (Brahmanic self) என்னும் அத்வைதக் கோட்பாடாக மாற்றியமைத்து உருமாற்றினார். இவர், இந்தக் கோட்பாட்டால் சாதிப் பிரிவு மற்றும் ஏற்றதாழ்வுகள் ஆகியவற்றை வலியுறுத்தி பரிபூரண ஒற்றுமை என்ற போர்வையில் மக்களை ஏமாற்றினர்.
திருமுல்லா வரம் (Thirumulla Varam), தொட்டப்பள்ளி (Thottappally), போடியில் மாலா (Podiyil Mala), சபரிமலை (Sabarimala), கொடுங்களூர் (Kodungallur), திரிச்சூர் (Thrissur), கோட்டக்கல் (Kottakkal), மடப்பள்ளி (Madappally) மற்றும் பேக்கல் (Bekal) ஆகியவை உலகின் புகழ்பெற்ற பௌத்த வழிபாட்டு ஆலயங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் இயற்கையைப் பேணும் மையங்கள் ஆகும். கி.பி. முதலாம் நூற்றாண்டில் கேரளாவில் மதிலகம் கிளிரூர் போன்ற இடங்களில் பெளத்தம் மற்றும் சமண மதப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி மையங்களும் கூட இருந்தன. இவை உலகெங்கிலுமுள்ள அறிவுஜீவிகளையும் மாணவர்களையும் கவர்ந்திழுத்தன. (Buddhism in Kerala, Ajaysekar, January 3, 2010 http://ajaysekher.net/2010/01/03/buddhism-kerala/)
குறிப்புநூற்பட்டி
- அடியார் அரசனாக்கப்பட்ட கதை – ஜெயமோகனுக்கு மறுப்பு . இரா.முருகவேள். கீற்று http://www.keetru.com/literature/essays/murugavel.php
- செம்மொழி Wikipedia
- சைவப்புரட்டு – ஹாஜி சேரமான் பெருமான் http://keetru.com/index.php/1208-2010-08-05-16-18-31/08-sp-468/11407-2010-11-16-10-01-20
- പെരുന്തച്ചന് പണിതീര്ത്ത് പരശുരാമന് പ്രതിഷ്ഠ നടത്തിയ ക്ഷേത്രം
https://malayalam.nativeplanet.com/travel-guide/legends-vazhappally-sree-mahadeva-temple-malayalam-001950.html - Ancient inscription throws new light on Chera history Abdul Latheef Naha The Hindu February 11, 2011 http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/Ancient-inscription-throws-new-light-on-Chera-history/article15293183.ece
- Buddhism in Kerala, Ajaysekar, January 3, 2010 http://ajaysekher.net/2010/01/03/buddhism-kerala/
- Changanacherry http://my-kottayam.blogspot.in/2010/12/changanacherry_15.html
- Classical languages of India https://www.gktoday.in/gk/classical-languages-of-india/
- Etymology http://my-kottayam.blogspot.in/2010/12/changanacherry_15.html
- Kerala History http://www.gokeralatour.com/history.html
- Medieval Indian Literature: Surveys and selections. Ayyappappanikkar. Sahitya Akademi, 1997. 924 pages
- Origin and development of Malayalam language A book by Mr EVN Namboothiry http://pgpanikkar.blogspot.in/2014/10/origin-and-development-of-malayalam.html
- Rajashekara Varman https://en.wikipedia.org/wiki/Rajashekhara_Varman
- The Tiruvarruvai Inscriptions http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/7061/11/11_chapter%204.pdf
- Vazhappally Inscription http://keralaculture.org/vazhapalli-plates/321
- Vazhappally Maha Siva Temple https://wikivisually.com/wiki/Vazhappally_Maha_Siva_Temple
- Vazhappally Temple http://indiaz.com/vazhappally-temple.html
அருமை
தங்களின் ஒவ்வொரு பதிவும் ஆய்வுக் கட்டுரையாய் விரிகிறது ஐயா
நன்றி
LikeLike
தங்கள் மேலான வருகைக்கும் மனமுவந்து பாராட்டியமைக்கும் நன்றி ஐயா..
LikeLike
வழக்கம்போல நிறைய அரிய விடயங்கள் அறிந்தேன் நண்பரே நன்றி.
LikeLike
தங்கள் வருகைக்கும் உளங்கனிந்த பாராட்டிற்கும் நன்றி ஐயா..
LikeLike
இவ்வளவு தகவல்கள் பெற நீங்கள் நிச்சயம் கடுமையாக உழைதிருக்க்க வேண்டும்
LikeLike
தங்கள் வருகைக்கும் மனங்கனிந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா..
LikeLike
அருமை…கேரள வரலாற்றில் தகவல்கள் மிக தெளிவாக அறிந்து கொள்ள முடிந்த்து.மகிழ்ச்சி… வாழ்த்துகள்.
LikeLike