இராமர் பாலம் என்னும் ஆடம்ஸ் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா?

இராமர் பாலம் = Rama’s Bridge  (இராமர் சேது (Rama Setu) என்னும் ஆடம்ஸ் (ஆதாமின்) பாலம் (Adam’s Bridge), மனிதனால் உருவாக்கப்பட்ட, நமது நாகரீகத்தின் மிகப்பழைய, பாலம் ஆகும். இப்பாலம் குடிமுறைப்  பொறியியலின் ஒரு வியப்பு (a Civil Engineering Marvel) என்று கருதப்படுகிறது. இராமர் பாலம் மற்றும் ஆடம்ஸ் பாலம் ஆகிய பெயர்கள் முறையே இந்து மற்றும் இஸ்லாமிய புராணங்களில் இருந்து பெறப்பட்ட பெயர்களாகும். இராமர் பாலம் என்னும் பெயர் இந்து இதிகாசமான இராமாயணத்திலிருந்து பெறப்பட்டது. இராமன் கடத்தப்பட்ட தன் மனைவியான சீதாவை மீட்க இலங்கை செல்வதற்காகக் வானரசேனைகளின் உதவியுடன் கட்டிய அணைக்கு இராமர் பாலம் (இராம சேது) என்று பெயர். இதன் காரணமாகவே இராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் கடல்கூட “சேதுசமுத்திரம்” என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்தப் பாலம் ஸ்ரீராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என வால்மிகியின் ஸ்ரீமத்ராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இஸ்லாமிய புராணத்தின்படி ஆதாம் (Adam), இலங்கையில் ஆதாமின் சிகரத்தை (Adam’s Peak) அடைவதற்கு இந்தப் பாலத்தைப் பயன்படுத்தினார், அங்கு 1,000 ஆண்டுகளுக்கு மனந்திரும்பி நின்றார் (stood in repentance).

பாலம், அல்லது சேது என்பது தற்போது ஒரு தொடர்ச்சியற்ற சங்கிலி மணற்திட்டுகளாகக் காணப்படுகிறது. இந்தப் பாலமானது இந்தியாவின் பாம்பன் (ராமேஸ்வரம்) தீவின் தென்கிழக்கு முனைக்கும், வடமேற்கு இலங்கையில் உள்ள தலைமன்னருக்கும் இடையே கிழக்கு-மேற்கு திசையில் 30 கி.மீ. நீளத்தில் அமைந்திருந்தது. இந்தப் பாலம் பால்க் வளைகுடாவிற்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையே ஒரு புவியியல் பிளவினை உருவாக்கியுள்ளது.

இஃது ஒரு பாலம் அல்ல வெறும் மணல் திட்டுகளே. அலைகளின் சுழற்சியால் இந்தத் திட்டுகள் உருவாக்கி இருக்கலாம் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. இராமர் சேது என்பது கட்டுக்கதை என்றும் இராமன் என்ன பொறியியல் வல்லுனரா? அவர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்றெல்லாம் திரு. மு.கருணாநிதி வாதிட்டார். இராமர் சேது மனிதர்களால் கட்டப்பட்ட பாலம் தான் என்று நாசா விஞ்ஞானிகள் உள்ளிட்ட பல அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்தப் பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை என்றும் அமெரிக்க சயின்ஸ் சேனல் தெரிவித்துள்ளது. மணல் திட்டுகள் உருவாகியுள்ளது உண்மை என்றாலும் இவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியிருக்கலாம் என்றும் இத்திட்டுகளின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான் என்றும் அமெரிக்க சயின்ஸ் சேனல் கருதுகிறது. இந்தப் பதிவு இது குறித்து விவாதிக்கிறது.

இராமர் பாலம் அமைவிடம்

இந்தியாவின் பாம்பன் (இராமேஸ்வரம்) தீவில் அமைந்துள்ள தனுஷ்கோடிக்கும் (அமைவிடம் 9° 11′ 0″ N 79° 24′ 0″ E கடல் மட்டத்திலிருந்து உயரம் 0 மீ) ஸ்ரீலங்காவின் மன்னார் வளைகுடாவில் (Gulf of Mannar) அமைந்துள்ள தலைமன்னாருக்கும் (அமைவிடம் 9°06′00″N 79°43′00″E கடல் மட்டத்திலிருந்து உயரம் 0 மீ) இடையே, சுமார் 30 கி.மீ. நீளமும் 3 கி.மீ. அகலமும் கொண்டு, அமைந்த இராமர் பாலம் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு அமைந்த ஆழமற்ற (கடல் ஆழம் சுமார் 3 முதல் 30 அடி மட்டுமே) மேடாகும். தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடல் மட்டத்திற்கு மேல் 13 மணல் திட்டுகள் காணப்படுகின்றன. இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் கடலானது “சேதுசமுத்திரம்” என்று அழைக்கப்படுகிறது.  “பாலத்தின் கடல்” (“Sea of the Bridge”) என்பது இதன் பொருள்.

சேதுக்கரை

கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள சேதுக்கரை கோயில் படித்துறை PC: The Hindu 6 Jun 2017

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டத்தில் சேதுக்கரைக் கிராமம் பின்கோடு  623504 அமைந்துள்ளது. திருப்புல்லாணியிலிருந்து  5 கி.மீ. தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து 17 தொலைவிலும், சென்னையிலிருந்து 527 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சேதுக்கரையில் உள்ள கடலுக்கு இரத்தினாகரத் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சீதையை மீட்க ராமர் தனது வானர சேனைகளுடன் தென்கடற்கரையான சேதுக்கரைக்கு வருகிறார். அங்கு 7 நாள்கள் தங்கி கடல் அரசனான வருணணை வழிபட்டார் என்பது சேதுக்கரையின் தல வரலாறு.

ஸ்ரீராமர் இந்த இடத்திலிருந்துதான் ஸ்ரீராமர் நள சேது அமைக்கத் தீர்மானித்த இடம் என்று கருதப்படுகிறது. இந்த இடத்தை ஸ்ரீராமர் “பரமம் பவித்ரம்”  என்று குறிப்பிடுகிறார். வடமொழியில் “சேது” என்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட கரை (“manmade bund”) என்று பொருள். வைணவர்கள் சேதுவை “திரு அணை” என்று வழங்குகிறார்கள். எனவே கடல்மேல் கட்டப்பட்ட இந்த அணை நள சேது என்று பெயர்பெற்றது. இந்த அணை ஸ்ரீராமர் மேற்பார்வையில் கட்டப்பட்டதால் இராமர் சேது என்றும் பெயர்பெற்றது. அணை கட்டிய நிகழ்வு சேது பந்தனம் என்று பெயர் பெற்றது. சேதுக்கரைக் கடற்கரையில் சேது பந்தன ஆஞ்சநேயருக்கு ஒரு கோவில் உள்ளது. இவர், இலங்கையைப் பார்த்தபடி, காட்சி தருகிறார். சேதுக்கரைக் கடலில் சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை கால்கள் மட்டும் நனையும் அளவிற்குக் கடல் தண்ணீர் உள்ளது. இந்தக் கடலின் உள்ளே படகில் இரண்டு கி.மீ. பயணித்தால் மிதக்கும் பறைகளைக்கொண்டு  அமைக்கப்பட்ட இராமர் பாலத்தின் எச்சங்களைக் காணலாம்.

இந்தப் பாலமானது இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையில் ஒரு முன்னாள் நிலப்பகுதி எனப் புவியியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆடம்ஸ் பாலம் கி.பி. 1480 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு சூறாவளியால் உடையும் வரை கடல் மட்டத்திற்கு மேலாகக் காணப்பட்டதாக இராமேஸ்வரம் தீவுகளின் கோவில் பதிவுகள் சான்று பகர்கின்றன.

adams_bridge_aerial

Adam’s Bridge as seen from the air, looking West PC: Wikimedia Commons

adams_bridge_map

இராமாயணப் பின்னணி

வால்மீகி இயற்றிய பண்டைய இந்திய சமஸ்கிருத இதிகாசமான ஶ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் இந்தப் பாலம் முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய இதிகாச புராணமான இராமாயணத்தில் இராமர் கடலைக் கடந்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக மண், மிதக்கும் வகைக் கல் மற்றும் மரங்களைக் கொண்டு  வானரங்கள் கட்டிய பாலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. நளன் என்ற தலைமை வானரத்தின் கட்டுமானத் திட்டத்தின்படி கோடிக் கணக்கான வானரங்களின் உதவியுடன் வெறும் மூன்று (ஐந்து?) நாட்களில் கட்டிமுடிக்கப்பட்ட பாலம் இதுவென்று இராமாயணம் குறிப்பிடுகிறது. அந்தப் பாலம் இதுவாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இராமர் பாலம் கட்டுமானத்தின் போது பின்பற்றப்பட்ட செயல்முறைகள் வியப்பை அளிக்கின்றன. இவை 1. மதிப்பாய்வு (Survey),  2. திட்டமிடல் (Planning), 3. செயல்படுத்தல் (Execution),  4. பணி நிறைவிற்குப்பின் (Post Completion) ஆகிய நாலு கட்டங்களில் நிறைவேற்றப்பட்டன.

இது பற்றி ஶ்ரீமத் வால்மீகி இராமாயணம் என்ன சொல்கிறது என்று காண்போமா?

ஶ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் 22ஆம் அத்தியாயத்தில் 78 ஆம் ஸ்லோகத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

கடலை எப்படித் தாண்டுவது (தரணம்) என்று ஆலோசித்தனர். அப்போது கடல் அரசனை (சமுத்திர இராஜனை) வழிபடுவதே (உபாஸிப்பதே) நல்லதென்று விபீஷணர் கூறினார். உடனே ஸ்ரீராமர் கடற்கரையில் வலது கையில் தலையைத் தாங்கியவாறு தர்ப்பைப் புல்லைப் பரப்பி அதன் மீது படுத்தவாறு  நியமத்தில் (அஷ்டாங்க யோகத்தில் இரண்டாம் படி) ஆழ்ந்தார். (வால்மீகி ராமாயணம் – யுத்தகாண்டம் -21 -9, 10). “வானர வெள்ளத்தினிடையே வீரசயனம் கொண்ட பெருமாளே” என்று நிகந்தமா தேசிகன் ஒரு பாசுரத்தில் இராமரைப் போற்றியுள்ளார்.

இவ்வாறு மூன்று இரவுகள் நியமத்தில் ஆழ்ந்து இருந்த போதிலும் கடல் அரசன் மனமிரங்கவில்லை. இதனால் ஸ்ரீராமர் கோபம் மிகுந்து வில்லேந்தி கடலின் மீது அம்பு எய்தார். கடல் கலங்கி ஆரவாரித்தது. சற்றும் தாமதியாமல் கடல் அரசன் ஸ்ரீராமர் முன் தோன்றினார். “நீரின் உருவில் (ஜலஸ்வரூபன்) வாழும் என்னை விலகி நில் என்றால் எப்படி முடியும்? வேண்டுமானால் என்னைத் தாண்டிப் போவதற்கு வழி சொல்லுகிறேன்” என்று கூறினான். ஸ்ரீராமரும் இந்த ஆலோசனையை ஏற்றார். வானர மன்னர் சுக்கிரீவனின் படைத்தலைவர்களில் ஒருவரான நளன் தலைமையில், மற்றொரு படையின் தலைவனான நீலனின் துணையுடன் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை அணை கட்டும்படி கடலரசன் சொன்னார். இதன்படி நளனும் நீலனும் அணைகட்டத் தொடங்கலாம் என்று ஸ்ரீராமரால் அறிவுறுத்தப்பட்டது.

நளன் கூற்று

நான் விஸ்வகர்மாவின் வழித்தோன்றல். நான் விச்வகர்மாவிற்குச் சமமானவன். கடலின் நடுவே அணை கட்டுவதற்கு என்னால் முடியும். எனவே வானரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அணைகட்ட முன்வாருங்கள். (வால்மீகி ராமாயணம் – யுத்தகாண்டம் – 06 – 22 -50 72)

அணை கட்டுதல்

அந்த வனாரர்கள், சாலா மற்றும் அஸ்வகர்ணா, தாவா மற்றும் மூங்கில், குடஜா, அர்ஜுனா, பனை, திலகா, டினிஸா, வில்வம், சப்தபர்ணா, மலர்ந்த கர்னிகா, மாமரம் மற்றும் அசோகா போன்ற மரங்களை வெட்டி வீழ்த்தி கடலை நிரப்பினர். உடல்வலிமை வாய்ந்த வானரர்கள் யானை போன்ற அளவுகளில் உள்ள பாறைகளைத் மலையிலிருந்து பெயர்த்தெடுத்து இயந்திரப் பொறியின் உதவியுடன் இடம்பெயர்த்தனர். அனைத்துப் பக்கங்களிலும் பாறைகள் நிறைந்து கிடந்தன. வேறு சில வானரங்கள் நூறு யோசனை நீளமுள்ள கயிற்றை இழுத்துப் பிடித்துப் பாறைகளை ஒரே நேர்கோட்டில் அடுக்குவதற்கு வழிசெய்தனர்.

கம்பராமாயணம், யுத்தகாண்டம், சேதுபந்தனப் படலம்

சேதுக்கரை கட்டியது பற்றிக் கம்பராமாயணம் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்வோமா? கம்பன் “சேதுபந்தனப் படலம்” என்று ஒரு படலத்தில் 72 பாடல்கள் மூலம் சேதுக்கரை கட்டியது பற்றி விவரிக்கிறார்.

‘நன்று, இது புரிதும் அன்றே; நளிகடல் பெருமை நம்மால்
இன்று இது தீரும் என்னின், எளிவரும் பூதம் எல்லாம்;
குன்று கொண்டு அடுக்கி, சேது குயிற்றுதிர்’ என்று கூறிச்
சென்றனன் இருக்கை நோக்கி; வருணனும் அருளின் சென்றான
(யுத்தகாண்டம் வருணனை வழி வேண்டு படலம் 6.6.85 (6802)

வானரர்களுக்கு “குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர்” என்று இராமன் கட்டளை பிறப்பித்த பாடல். கடல்மீது அணைகட்டுவோமானால், நம்மால் இந்தக் குளிர்ந்த கடலுக்குள்ள பெருமை நாம் அணைகட்டிக் கடந்து செல்வதால் தீருமாயின் குன்றுகளைக் கொண்டு வந்து அடுக்கிக் கடலின் மீது அணைகட்டுங்கள் என்று வானர வீரர்களுக்குப் பணித்து விட்டுத் தனது இருப்பிடம் செல்லலானான்.

ராமாயணம்

PC: Vikatan.com

பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க நின்று
ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின;
தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று
ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின.
(யுத்தகாண்டம் சேதுபந்தனப் படலம் 6.7.6 (6808)

சில வானரங்கள் மலைகளைப் பெயர்த்தன; சிலவானரங்கள் பெயர்க்கப் பெயர்க்க அம் மலைகளை இழுக்கலாயின; சில வானரங்கள் மலைகளைத் தலைகளில் தாங்கின; சில வானரங்கள் மலைகளைக் கொண்டு கடலைத் தூர்த்தன; சில வானரங்கள் மலைகளைக் கடலில் தூர்க்கத் தூர்க்க ஆரவாரம் செய்தன; சில குரங்குகள் மகிழ்ச்சியால் ஆடின சில குரங்குகள் இராமனது புகழைப் பாடின. இந்தப் பாடல் கம்பனின் கவிச்சுவை நிறைந்த பாடல்.

மேக மண்டலம் வரை உயர்ந்து திகழும் மலைகளைப் பெரிய  குரங்குகள்  விரைந்து  எடுத்து வந்து எறிய, தான் கற்றிருந்த  அற்புத   வித்தை  வன்மையால்   நளன்   மலைகளை லாவகமாகப் பிடித்துத் தாங்கினான். இதற்குக் கம்பர் காட்டும் உவமை என்னவென்றால் திரு வெண்ணய் நல்லூரில்  வாழ்ந்த சடையப்ப வள்ளல் தஞ்சம் என்று தன்னை நாடி வந்தவர்களைத் தாங்கி ஆதரிக்கும் தன்மையைப் போல (நளன் மலைகளைத் தாங்கினான்).

“மஞ்சினில் திகழ் தரும் மலையை, மாக்குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே, நளன்
விஞ்சையில் தாங்கினன் – சடையன் வெண்ணெயில்
‘தஞ்சம்!’ என்றோர்களைத் தாங்கும் தன்மை போல்”                             (கம்பராமாயணம், யுத்தகாண்டம், சேதுபந்தனப் படலம், பாடல் 6682)

கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை இங்குக் புகழ்ந்து கூறியது செய்நன்றி மறவாத   பண்பெனப் பொருள் கொள்ளலாம். நளன் பற்றிக்  கூறிய உயர்வு  நவிற்சிக்குச்  சடையப்பர் வள்ளன்மை உவமையாயிற்று. இங்கு உவமேயத்தைவிட உவமையே உயர்ந்து காணப்படுகிறது.

விண்ணை முட்டும்படி உயர்ந்துள்ள பெரிய மலைகளை அடியோடு பேர்த்து எடுத்துக்கொண்டு உடல்வருந்தும்படி வானர வீரர் கடலில் குவிப்பதாலே கடல் வலிய நிலமாக மாறியது கடல் செல்லுவதால் தரைகடலாக மாறி மறைந்தது.

சேதுவின் பெருமைக்கு இணை செப்ப, ஓர்
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்கொலோ-
தூதன் இட்ட மலையின் துவலையால்,
மீது விட்டு-உலகு உற்றது, மீன் குலம்?
(யுத்தகாண்டம் சேதுபந்தனப் படலம் 6.7.37 (6710)

சேதுவின் பெருமைக்கு இணையாகச் சொல்ல ஒரு காரணம் வேண்டும் என்று நினைப்பது எதற்காக? இராம தூதனாகிய அனுமன் கடலில் எறிந்த மலையால் எழுந்த நீர்த்திவலைகளோடு அக்கடலில் வாழுகின்ற மீன் கூட்டங்களும் மேலானதாகிய வீட்டுலகை அடைந்தது.

அணை நன்றாக அமையும் படி சிந்தித்துப் பார்த்த தன்மையை உடையவனாகிய நளன் கற்களைச் சமமாக உடைத்து நன்கு பொருந்தும்படி சேர்த்து மலைகளை நேராக, சமமாக இருக்கும்படி அடுக்கி இடையிலே மணலைப் பரப்பித் தன் அகன்ற கைகளால் சிகரங்கள் சமமாயிருக்கும்படி தடவுவான்.

ஆயிரம் கோடி பேராகிய வானரக் கூட்டத்தினர் தமது கைகளால் தழுவித் தாங்கிக் கொண்டு வந்து தந்த மலைக் கூட்டங்களை நளன் தனது தூண் போன்ற கைகளில் ஏற்றுக் கொண்ட போது முறிந்து இடையிலே தவறி வீழ்வனவற்றைக் கால்களால் தடுத்து நிறுத்தி எடுத்துக் கொள்வான் (கிரிக்கெட் பந்தை பந்து வீச்சாளர் காலால் தடுத்துப் பெற்றுக் கொள்வது நினைவிற்கு வருகிறது!)

வால்மீகி ராமாயணம்

PC: Vikatan.com

திரிகூட மலையிலிருக்கும் இலங்கையை அடைய மூன்று நாட்களிலேயே (!!!) அணை தகுந்ததாயிற்று. அணைகட்டி முற்றுப் பெற்றவுடன் வானரங்களின் ஆரவார முழக்கத்தால் வானமே இரண்டாகப் பிளந்து போயிற்று. இப்போதுள்ள இந்த வானம் புதிதாக உண்டான வேறு ஒருவானம்தானோ!

எல்லாவுயிர்களுக்கும் தலைவனான இராமபிரான் பூவிதழ்களைச் சூடிய கூந்தலை உடைய சீதாபிராட்டியின் துயரத்தைத் தீர்ப்பதற்கு அப்பெருமானுக்கு ஏவல் பூண்டொழுகும் நான் இருக்க வேறு ஒன்றினை ஏன் அவன் நாடவேண்டும் எனது முதுகின் மீது அடியிட்டு இராமபிரான் விரைந்து செல்லட்டும் என்று கடலின்மீது உயர்ந்து விளங்கிய ஆதிசேடனைப் போல அந்த அணை பொலிவு பெற்று விளங்கியது.

வானரக் கூட்டத்தின் தலைவனான சுக்கிரீவனும், இலங்கை அரசனான வீடணனும், மற்றுமுள்ள அனுமன், சாம்பவந்தன், அங்கதன் நீலன், முதலான வானரப்படையின் தலைவர்களும் இராமபிரானிடம் சென்று அடைந்தனர். உலகத்தின் நாயகனாகிய அந்தப் பெருமானது திருவடிகளைத் தொழுது நூறு யோசனை நீளம் உடையதாகவும் பத்து யோசனை அகலம் கொண்டதாகவும் அமைந்ததாக அணை கட்டி முடிக்கப்பட்டது என்ற செய்தியை இராமபிரானிடம் சொன்னார்கள்.

இராமன் படையொடு அணைவழிக் கடல் கடந்து போதல்: (படையின்) முன் முனையில் அரக்கர் மன்னனாகிய வீடணன் செல்லவும், நிறைந்த சிறப்புற்ற நூல்களைக் கற்றுத் தெளிந்து உணர்ந்த அநுமன் சேனையின் பின் முனையிற் செல்லவும், தனக்கு வரும் வெற்றியையே தன் அணியாகக் கொள்ளும் தம்பியாகிய இலக்குவன் தனக்குப் பின்பு ஒரு பக்கமாகச் செல்லவும், வீரம் மிக்க அழகிய திரண்ட கைகளையுடைய கரிய நிறம் பெற்ற ஆண்யானை போன்றவனான இராமபிரான் சென்றான்.

அணை கட்டிய விவரம்

இவ்வாறு நேரியல் சீரமைப்புடன் (Linear alignment) ஒரு நேர்கோட்டில் சேது அணை திட்டமிட்டுக் கட்டப்பட்டது. முதல் நாள் 14 யோஜனை தூரமும், இரண்டாவது நாள் 20 யோஜனை தூரமும், மூன்றாவது நாள் 21 யோஜனை தூரமும், நான்காவது நாள் 22 யோஜனை தூரமும், ஐந்தாவது நாள் 23 யோஜனை தூரமும் அணை கட்டினார்கள். ஐந்தாம் நாள் முடிவில் 100 யோஜனை தூரத்திற்கும், 10 யோசனை அகலத்திற்கும் (1:10 விகிதாச்சாரத்தில்) சேது அணையைக் கட்டி முடித்துவிட்டனர். (வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம் 22 – 68 -73). இராமாயணத்தில் நீட்டல் அளவுகள் எல்லாமே யோஜனைக் கணக்கில்தான் இருக்கும். சேதுக்கரையில் தனித்தன்மையுடன் காணப்படும் வளைந்த நிலையைக் (Curvature) கருத்தில் கொண்டு இது மனிதனால் அமைக்கப்பட்ட அணைதான் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

ஆடம்ஸ் பாலம் – பெயர்க்காரணம்

ஆங்கிலேயர் ஆட்சியில் (British Raj) சென்னை மாகாணத்தில் (Madras Presidency) தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் (Saraswathi Mahal Library) உள்ள 1803 ஆம் ஆண்டு அரசிதழில் (Gezette) இடம்பெற்ற சொற்களஞ்சியம் (glossary) ஆடம்ஸ் பாலத்தை இவ்வாறு வரையறை (define) செய்கிறது:

ஆதாம் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இங்கு வந்தார். இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி இலங்கை சென்றார். இதன் பிறகு முகம்மதியர்கள் இந்தப்பாலத்தை ஆடம்ஸ் பாலம் என்று அழைத்தனர். (Mohammedans called this bridge after Adam, who came down here after being expelled from the heaven and went Ceylon using this bridge.).

இராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? அது இயற்கையாக உருவானதா? என்ற வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சேதுசமுத்திரம் கால்வாய் திட்டம்: குறுக்குவழியா அல்லது கலாசாரப் பிளவா?

1205_070513palk

சேதுசமுத்திரம் கால்வாய் திட்டமானது, மன்னார் வளைகுடாவில் இருந்து 152.2 கி.மீ தொலைவில், பால்க் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்தி வழியாக வங்காள விரிகுடாவிற்குப் பயணிக்க உதவும் நோக்கம் உடையது. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்பொழுது இந்தக் கால்வாய் வழியாகச் சென்றால் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றிச் செல்லாமல் சேதுக் கால்வாய் வழியாகப் புகுந்து வங்கக் கடலை அடைய முடியும். இதற்காக பாக் ஜலசந்தி மற்றும் இராமர் பாலம் (ஆடம்ஸ் பாலம், Adam’s Bridge) பகுதிகளை ஆழப்படுத்திக் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றியமைக்கும் திட்டமே சேது சமுத்திரக் (கப்பல்) கால்வாய்த் திட்டம் ஆகும்.

ஜூலை 2, 2005 அன்று பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்தத் திட்டம், பல தரப்புகளிலிருந்து விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் ஆளாகியுள்ளது. சேதுசமுத்திரம் கால்வாய் திட்டம் பற்றி நடக்கும் விவாதங்களில் ஒன்று, ஆடம்ஸ் பாலம் என்று அழைக்கப்படும் இராமர் சேது என்ற தீவுகளின் சங்கிலி (chain of islets), இலங்கையுடன் இந்தியாவை இணைக்கும் போது அழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

சேது கால்வாய்த் திட்டத்திற்காக இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறியும் இராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் இந்து முன்னணி உள்படப் பல்வேறு இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

அமெரிக்க விஞ்ஞானிகள் `இராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். இது கட்டுக்கதையல்ல’ என்ற முடிவை வெளியிட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகம் ஆகிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் கள ஆய்வுகள் இராமர் பாலம் மனிதர்களால் அமைக்கப்பட்ட பாலமே என்று சான்று பகர்கின்றனவாம். இம்முடிவு குறித்துச் செல்சியா ரோஸ், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர்  கூறிய கருத்து இங்கே தரப்பட்டுள்ளது:

“இராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் கடலுக்கு அடியில் காணப்படும் மணல் திட்டுகள் இயற்கையாக உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளது. மணல் திட்டுகள் தவிர அங்குக் காணப்படும் சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். இவை சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை” என்பது இவர் கருத்து.

இராமர் பாலம் உண்மையா, பொய்யா என்ற நீண்ட விவாதத்திற்கு ஓர் அமெரிக்க டிவி சேனல் விடையளித்துள்ளது. இந்த சயின்ஸ் சேனல்’ இந்த ஆய்வு குறித்து வெளியிட்ட ப்ரமோ வீடியோ (Promo Video) வில் இராமர் சேது பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாலம், மனிதர்களால்தான் கட்டப்பட்டுள்ளது என்றும் இந்தப் பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை என்றும் தெரிவித்துள்ளது. இங்கு மணல் திட்டுங்கள் அமைந்துள்ளது மிகவும் உண்மையான தகவல். என்றாலும் இவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த மணல் திட்டுக்கள் சுமார் 4000 ஆண்டுகள் மட்டுமே பழைமையானவை என்கிறது இந்தச் சேனல்.

இது குறித்து அகழ்வாராய்ச்சியாளர்கள் “இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம்” என்று  தெரிவித்த கருத்தும் இங்குக் குறிப்பிடத்தக்கது. கி.பி. 1480  ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி போன்ற பேரிடரால் இராம சேது அழிந்துபோய் விட்டதாகவும் இவர்கள் கருதுகின்றனர். இதனால்  கி.பி. 1480  ஆம் ஆண்டு நிகழ்ந்த பேரழிவிற்கு முன்பு வரை இராமர் சேது புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்று கருதவும் வாய்ப்புள்ளது.

திரேதாயுகம் முடியும் தருவாயில் இராமாயணம் நிகழ்ந்துள்ளாதாக ஒரு கணக்கினை முன் வைக்கிறார்கள்.   திரேதாயுகத்தின் இறுதியிலேயே இந்த இராமர் பாலமும் கட்டப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டு கி.பி. 1480 ஆண்டுகளில் இலங்கை மன்னன் ஒருவன் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கான பாலை  குதிரைவீரர்கள் மூலம் தினமும் அனுப்பிய செய்தியைப் பதிவு செய்துள்ளதாக ஒரு தகவல் உள்ளது. சிலர்  இது மரபுவழி செய்தி என்றும் கருகின்றனர்.

“நமது பாரத தேசத்தை விவரிக்கப் புராணங்கள் “ஆஸேதுஹிமாசல்” என்கிறது – அதாவது தெற்கே சேதுவிலிருந்து வடக்கே ஹிமாசலம் வரை விரிந்து இருக்கும் பூமி பாரத தேசம் என்பதாகும்.”

இபின் கோர்டாட்பே (Ibn Khordadbeh) ஒரு பெர்சிய புவியியல் வல்லுநரும் (geographer) அதிகாரியும் (bureaucrat) ஆவார். கி.பி. 846-847 ஆண்டுகளில் இவர் எழுதி வெளியிட்ட நூல் கிதாப் அல் மசாலிக் வால் மமாலிக் (Kitāb al Masālik w’al Mamālik = The Book of Roads and Kingdoms) (சாலைகள் மற்றும் அரசுகளின் புத்தகம்) ஆகும். கி.பி. 885 ஆம் ஆண்டு இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த நூலில் இபின் கோர்டாட்பே “சேத் பந்தாய்” (Set Bandhai) அல்லது கடல் பாலம் (“Bridge of the Sea”) என்று இப்பாலத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இரானிய அறிஞரும், வரலாற்றாய்வாளரும், காலவரிசையாளரும், மொழியறிஞரும், இந்தியவியலின் (Indology) தந்தையுமான அபு ரெய்ஹன் அல்-பிருணி (கி.பி. 973 – 1048) தனது குறிப்புகளில் ஆடம்ஸ் பாலம் என்ற பெயரால் முதன்முதலில் குறிப்பிட்டு இப்பாலத்தைப் பற்றி விவரித்துள்ளார்.

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் 1747 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு டச்சு நிலப்படவியலாளர் (Cartographer) தயாரித்த வரைபடங்கள் இப்பகுதியை இராமன்கோயில் என்று காட்டுகின்றன. பேச்சுத் தமிழில் இராமன்கோயில் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.

கி.பி. 1788 ஆம் ஆண்டில் ஜே. ரென்னல் தயாரித்த முகலாய இந்தியாவின் மற்றொரு வரைபடம் இதே சரஸ்வதி மஹால் நூலகத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்த வரைபடம் கூட இந்தப்பகுதியை “ராமர் கோவில் பகுதி” என்று அழைத்துள்ளது. மார்கோ போலோவின் பயண நூல்கள்கூட இப்பகுதியை “சேதுபந்தா” மற்றும் “சேதுபந்த ராமேஸ்வரம்” போன்ற பல்வேறு பெயர்களால் அழைத்துள்ளன.

பிரிட்டிஷ் நிலப்படவியலாளர் (British cartographer) ஒருவர் கி.பி. 1804 ஆம் ஆண்டு உருவாக்கிய வரைபடத்தில்தான் முதன்முதலாக ஆடம்ஸ் பாலம் (Adams Bridge) என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சில தொடக்ககால இஸ்லாமிய ஆதாரங்கள் (early Islamic sources) ஸ்ரீலங்காவில் ஆடம்ஸ் சிகரம் (Adam’s Peak) என்று அழைக்கப்பட்ட மலையைக் குறிப்பிடுகின்றன.  ஆடம் இங்குதான் பூமியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு இந்தப்பாலம் வழியாகச் சென்றதால் இஃது ஆடம்ஸ் பாலம் ஆயிற்று.

உலகப் புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ் கல்யாணராமன் “ஆடம்ஸ் பாலம் தான் உண்மையில் இராமர் சேது பாலம் என்று எடுத்துக்காட்ட தொல்லியல் (archaeological), அறிவியல் (scientific), வரைபடம் (cartographic) மற்றும் நூல்கள் (texts) போன்ற ஆதாரங்கள் உதவுகின்றன” என்று கூறியுள்ளார். இஃது ஓர் உலகப் பாரம்பரியத் தளமாகும் (world heritage site).

“ஒரு NASA செயற்கைக்கோள் படம் (satellite picture), இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே பால்க் ஜலசந்தியில் (Palk Strait) ஒரு நிலப் பாலம், நிலத்தின் நீட்சியாக (stretch of land bridge) இருப்பதைக் காட்டுகிறது” என்கிறார் கல்யாணராமன்.

NASA வலைதளத்திலிருந்து கல்யாணராமன் இந்தக் கருத்தை எடுத்துக் காட்டுகிறார்: “1960 களில் ஜெமினி மிஷனால் (Gemini mission) எடுக்கப்பட்ட புகைப்படம், “(ஆடம்ஸ்) பாலத்தின்” வெளிப்புறத்தைத் தெளிவாகக் காணும்படியாகக் காட்டுகிறது.”

adam27s_bridge_rama_setu_image_by_landsat_7

Landsat 7 Imagery of Adam’s Bridge (Rama Setu). Image taken form NASA’s w:World Wind software. PC: Wikimedia Commons

rama27s_bridge

Landsat 5 image of Adam’s Bridge PC: Wikimedia Commons

ஆசியாடிக் சொசைட்டியின் 1799 ஆம் ஆண்டு  வெளியீடு மூன்று இடங்களில் உடைந்த பாலத்தைக் குறிக்கிறது. இதனைப் பாலம் என்று மக்கள் அழைப்பதாக இந்த வெளியீடு குறிப்பிடுகிறது. இந்தப் பாலத்தில் தாவரங்கள் முளைத்திருப்பதாகவும் உயிரினங்களும் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

“அகநானூறு என்னும் சங்க இலக்கியத்தில் சேது பற்றிய ஒரு குறிப்பு உள்ளது, இராமர் பற்றிய நூற்றுக்கணக்கான குறிப்புகள் இதில் உள்ளதாக”  கல்யாணராமன் கூறினார்.

“சேதுவின் பாதுகாவலர்களாக  இராமநாதபுரம் சமஸ்தான  அரசர்கள் அறியப்பட்டதால் இவர்கள் சேதுபதிகள்  என்று அழைக்கப்படுகிறார்கள்.”

இவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஸ்வார்ட்ஸ்பெர்க்கும் சிகாகோ பல்கலைக் கழகமும் “ஸ்வார்ட்ஸ்பெர்க் நிலப்பட ஏடு” என்ற நூற்றுக்கும் மேற்பட்ட நிலப்பட ஏட்டை (Schwartzberg Atlas) உருவாக்கியுள்ளார்கள். இந்த வரைபடத்தில் “சேது” என்றும் அடைப்புக்குறிக்குள் “ஆடம்ஸ் பாலம்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடங்கள் ஏழு மற்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகும்.

கி.பி. 1788 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் தாவரவியல் ஆராய்ச்சியாளரான ஜோசப் பார்க்ஸ், ராமரின் பாலம் எனும் கட்டமைப்பைக் குறிக்கிறார். 1804 ஆம் ஆண்டின் நில அளவை இந்தியாவின் வரைபடத்தில் (Survey of India map) ஆடம்ஸ் பாலம் (Adam’s Bridge) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் கல்யாணராமன் ஆயிரக்கணக்கான செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைப் பற்றிப் பேசுகிறார். இவை பன்னிரெண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரை வெளியிடப்பட்டுள்ளன.

பராந்தக சோழரின் பத்தாம் நூற்றாண்டில் வெளியிட்ட செப்பேடுகளில் அபராஜிதவர்மன் சேதுதீர்த்திற்குச் சென்றதாகக் குறிப்பிடுகிறார்.

“கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு ஒன்று விஜயநகரப் பேரரசு சேதுவிலிருந்து விஜயநகரம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறது.”

இராமரோ அல்லது வேறு கதாபாத்திரங்களோ அல்லது இராமயணத்தில் வர்ணிக்கப்படும் சம்பவங்களோ இருந்ததை / நடந்ததை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று இந்தியத் தொல்லியல் அளவீட்டுதுறை (Archaeological Survey of India) என்று தெரிவித்துள்ளது.

கால அளவீட்டு ஆய்வுகள்

“திட்டம் ராமேஸ்வரத்தின்” (“Project Rameswaram”) கீழ் இந்தியாவின் புவியியல் அளவீட்டுத் துறை (ஜிஎஸ்ஐ) (Geological Survey of India (GSI) மேற்கொண்ட பவளப்பாறைக் கால அளவீட்டு (dating of corals) ஆய்வுகள், 125,000 ஆண்டுகளுக்கு முன்னால் இராமேஸ்வரம் தீவு உருவானதாகச் சுட்டிக்காட்டுகின்றன.

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கு இடைப்பட்ட பகுதி 7,000 மற்றும் 18,000 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று ரேடியோ கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகள் அறிவுறுத்துகின்றன.

இந்தியாவின் புவியியல் ஆய்வு மையத்தால் தேர்மோலூமினெஸென்ஸ் முறையில் மேற்கொள்ளப்பட்ட கால அளவீட்டு ஆய்வுகள் (Thermoluminescence dating) தனுஷ்கோடிக்கும் ஆடம்ஸ் பாலத்திற்கும் இடையே காணப்படும் மணல் குன்றுகள் (sand dunes) சுமார் 500-600 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாக முடிவுசெய்கின்றன.

பேராசிரியர் எஸ். எம். ராமசாமி தலைமையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூர உணர்திறன் மையம் (சி.ஆர்.எஸ்) (Centre for Remote Sensing (CRS), மேற்கொண்ட ஆய்வில் இந்த அமைப்பின் (பாலத்தின்) கால அளவிட்டு வயது 3500 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கின்றனர்.

குறிப்புநூற்பட்டி

  1. சேது கால்வாய்த் திட்டம் http://ennathulikal.blogspot.in/2008/11/blog-post_10.html
  2. சேது பந்தன ஶ்ரீ ஜய வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், சேதுக்கரை, ராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு. ஜி.கே.கௌசிக் http://anumar.vayusutha.in/kovil124.html
  3. ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானதாம்.. அண்ணா, சென்னை பல்கலை மாணவர்கள் ஆய்வில் தகவல்!https://tamil.oneindia.com/news/tamilnadu/the-ramar-palam-is-18-400-years-old-madras-university-anna-university-students-research-310000.html
  4. ராமசேது: ஆன்மிகத்தின் சீடனாக அறிவியல்! http://vijayabharatham.org/3215/
  5. Bridge of Rama: Traces of an Ancient Advanced Civilization http://www.themysteriousindia.net/bridge-rama-traces-ancient-advanced-civilization/
  6. By withdrawing the ASI affidavit before the Supreme Court, the government has in effect adopted the Sangh Parivar line of scoffing at science. http://www.frontline.in/static/html/fl2419/stories/20071005500500400.htm
  7. Elliot, Hist.Ind., i 66; Reinaud, M’im gur l’Inde;D’Herbelot, Biblo, Orientale – vide ch.X
  8. Ram Setu: Real truth behind the floating stones https://www.speakingtree.in/allslides/science-behind-the-floating-stones-of-ram-setu
  9. Rama Setu (Adam’s Bridge) Scientific explanation with proof https://www.youtube.com/watch?v=rMeAw-gZ1PQ
  10. Ramar Sethu, a world heritage centre? http://www.rediff.com/news/2007/jul/04spec.htm
  11. Sethu Bandhanam – What is the meaning to Sethubandhanam? https://in.answers.yahoo.com/question/index?qid=20110522074045AAfftSt

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in சுற்றுலா, தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

14 Responses to இராமர் பாலம் என்னும் ஆடம்ஸ் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா?

 1. yarlpavanan சொல்கிறார்:

  இராமர் பாலம் என்பதே சரி
  மனிதரால் கட்டப்பட்டதே உண்மை!

  Liked by 1 person

 2. ஸ்ரீராம் சொல்கிறார்:

  ​மிக சுவாரஸ்யமான பதிவு.

  Liked by 1 person

 3. Dr B Jambulingam சொல்கிறார்:

  இராமர் பாலத்தைப் பற்றிய, அருமையான செய்திகளைக் கொண்ட, உரிய மேற்கோள்களுடனான இப்பதிவு மூலம் பல அரிய செய்திகளை அறிந்தோம். அறிவியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து தற்போது இதனை அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது வேதனையே. நன்றி.

  Liked by 1 person

 4. பிங்குபாக்: இராமர் பாலம் என்னும் ஆடம்ஸ் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா? – TamilBlogs

 5. குமார் சொல்கிறார்:

  Eஎழுத்தாளர் சான்டில்யனை போல் ஆதாரத்துடன் அழகாய் எழுதுகிறீர்கள்

  Liked by 1 person

 6. கமலா ஹரிஹரன் சொல்கிறார்:

  வணக்கம் சகோதரரே

  விளக்கமான சான்றுகளுடன் இராமர் பாலம் பற்றிய உண்மைச் செய்திகள் விரிவாக தந்தமைக்கு மிக்க நன்றி. படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. இராமாயண காலத்திற்கே என்னை அழைத்துச் சென்று விட்டீர்கள். அந்த அளவுக்கு விரிவாக கூறிய சான்றுகளுடன் பதிவு மிக அருமையாக இருந்தது. நிறைய விசயங்கள் தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். இராமர் இருந்தது உண்மை என நம்புவோருக்கு பாலமும் உண்மையான ஒரு விஷயந்தானே… பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  Liked by 1 person

 7. பிரமிப்பான விடயங்கள் நண்பரே… எவ்வளவு விசயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி.

  தற்போது வாட்ஸ்-அப்பில் உங்களது இணைப்பை கொடுப்பதில்லையா?

  Liked by 1 person

 8. Gowtham சொல்கிறார்:

  அற்புதம்!

  Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.