பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வு: அரிய கற்காலக் கருவிகள், ரோமானிய ரௌலட் மண்கலன்கள் கண்டுபிடிப்பு

பட்டறைப்பெரும்புதூர் கிராமத்தில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழ்வாய்வில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கண்டறிந்துள்ளனர். இங்கு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு கற்கருவிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ரோமானியர்களுடன் தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்பைச் சுட்டிக்காட்டும் ரோமானிய ரௌலட் மட்பாண்ட வகைகள் இங்குக் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. சங்ககாலத்தில் இந்த இடம் ரோமானியர்களுடன் வர்த்தகம் மேற்கொண்ட வணிகமையமாகவும் திகழ்ந்திருக்கக்கூடும் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், பூண்டி வட்டாரத்தில் பட்டறைப்பெரும்புதூர் பின் கோடு 602001 (மணவாளநகர் அஞ்சல் நிலையம்) கிராமம் அமைந்துள்ளது. ஒரு சிறிய கிராமம் ஆகும். இதன் அமைவிடம் 13° 9′ 16.5258” N அட்சரேகை 79° 49′ 31.6996” E  தீர்க்கரேகை ஆகும். இவ்வூர் ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆகும். இவ்வூரின் மக்கள் தொகை 5090 (ஆண்கள் 2524 பெண்கள் 2566); மொத்த வீடுகள் 1322 ஆகும். திருவள்ளூர், அரக்கோணம், திருநின்றவூர், திருத்தணி ஆகியவை அருகிலுள்ள நகரங்களாகும். இவ்வூர் திருவள்ளூருக்கு மேற்கில் 10 கி,மீ. தொலைவிலும், பூண்டியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. எஸ்.பணம்பக்கம் மற்றும் மானூர் ஆகிய இரயில் நிலையங்கள் அருகில் உள்ளன.

திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் என்.எச். 716 நெடுஞ்சாலையில் 12 கி. மீ. தொலைவில், கொற்றலை ஆறு என்னும் கொசஸ்தலை  (Kosasthalaiyar) ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தொலைவில் உள்ள பட்டறைப்பெரும்புதூரில் இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.  இந்த ஆய்விற்காக ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய இடங்களில் மொத்தம் 12 ஆய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இப்பகுதியில் முதன்மை ஆய்வு (Primary exploration) 2014-15 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இந்த அகவாய்விற்கு மாநில அரசு 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியது. 2016 ஆம் ஆண்டில் பட்டறைப்பெரும்புதூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முழுமையான அகழாய்வு (Full-fledged excavation) நடைபெற்றது. தொல்பொருள் துறை இயக்குனர் டி.கார்த்திகேயன், துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், களப்பணியாளர்கள் ஜெ.பாஸ்கர், ரஞ்சித், பாஸ்கர் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்தனர்.

இந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ள தொல்பொருட்கள் (artefacts) தமிழ்நாட்டில் கிடைத்துள்ள தொல்பொருட்களிலேயே மிக அரிதான கற்காலத்தைச் சேர்ந்தவையாகும். இந்தத் தொல்பொருட்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில்  பட்டறைப்பெரும்புதூர் பகுதியில் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தொடர்ந்து மனித இனம் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அகழ்வாய்ளர்கள் கருதுகின்றனர்.

இந்த அகழவாய்வில் பெரிய அளவில் கண்டறியப்பட்டுள்ள அரிய தொல்பொருட்கள் இவை: பெருங்கற்காலத்தைச் (Megalithic Period) சேர்ந்த கைக்கோடரி, கத்தி, சுரண்டி (scrapper) போன்ற கற்கருவிகள்; நுண்கற்காலத்தைச் (Microlithic Period) சேர்ந்த சுரண்டி (scrapper), துளைப்பான் (borer) போன்ற கற்கருவிகள்; புதிய கற்காலத்தைச் (Neolithic Period) சேர்ந்த கருங்கல் (basalt) மற்றும் டாலிரைட் கற்களிலான மூன்று கற்கோடரிக் கருவிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். இப்பகுதியில் இரும்புக்கால நாகரிகம் (Iron Age Civilization) நிலவியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. பெருங்கற்காலக் குறியீடுகளுடன் மட்பாண்டச் சில்லுகள் (potsherds), கல்மணிகள் (beads), கண்ணாடி வளையல் துண்டுகள், எடைக்கற்கள், சக்கரம், மத்தியதரைக்கடல் மட்பாண்டங்கள் (Mediterranean pottery), ரௌலட் வகை மட்பாண்டங்களின் ஓடுகள், வளைந்த கூரை ஓடுகள் (grooved roofing tiles), 23 உறைகளைக் கொண்ட டெரகோட்டா உறை கிணறு (Terracota ring well) போன்றவையும் இவற்றுள் அடங்கும். தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த மட்பாண்டச் சில்லுகள் கண்டறியப்பட்டது மிக்க வியப்பை ஏற்படுத்தியது. இந்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் கொண்டு ஒரு கண்காட்சி 04 ஜூலை 2016 தேதி அன்று பட்டறைபெரும்புதூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தொடர்புடைய படம்

உறை கிணறு PC: Vimarisanam.wordpress

பட்டறைபெரும்புதூர் அகழாய்வு க்கான பட முடிவு

தொடர்புடைய படம்

பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வு ஓடுகள் PC: The Hindu

குடியம் குகைகள் (அமைவிடம் 13°11′8.73″N அட்சரேகை 79°51′27.6″E தீர்க்கரேகை) மற்றும் அத்திரம்பாக்கம் (அமைவிடம் 13°13′50″N அட்சரேகை 79°53′20″E தீர்க்கரேகை) போன்ற வரலாற்றுக்கு முந்தைய தளங்களால் (pre-historic sites) சூழப்பட்டுள்ள பட்டறைப்பெரும்புதூரில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளபடியால் நம்பிக்கைக்குரிய தளமாக மாறிவருவது  கண்கூடு. “கற்காலம் (கி.மு. 30,000 – கி.மு. 10,000) முதல் மனிதர்கள் வாழ்ந்ததற்கான மண் அடுக்கச் சான்றுகளும், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்கக் காலம் ஆகியவற்றின் எச்சங்களும் இங்கே கிடைத்திருப்பதால், கற்காலத்தில் துவங்கித் தற்போதுவரை இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மனிதர்கள் வந்தததாகக் கொள்ள முடியும்” என்று  தமிழகத் தொல்லியல் துறையின் துணை இயக்குனர் முனைவர். ஆர். சிவானந்தம் கூறியுள்ளார்.

பண்டைய ரோமானியர்களுக்கு, கிழக்குக் கடற்கரையில் உள்ள சென்னை மற்றொரு வர்த்தகத் துறைமுக நகரமாக  மட்டுமாக இல்லாமல் தங்கள் வர்த்தகத்தைச் செயல்படுத்தும் ஒரு முக்கியப் போக்குவரத்து மையமாக (a key transit hub) இருந்துள்ளது.

தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையின் தொல்பொருள் ஆய்வாளர்கள் ரோமானிய அரச குடும்பத்தினர் பயன்படுத்திய ரௌலட் வகை மட்கலனின் (broken pieces of roulette ware) உடைந்த சில்லுகளைச் சென்னைக்கு மேற்கே 55 கி.மீ. தொலைவில் பட்டறைப்பெரும்புதூர் அருகே உள்ள கொற்றலை ஆற்றுப் படுகையில்  நடந்த அகழாய்வில் கண்டறிந்துள்ளனர். ரௌலட் வகை மட்கலன்கள் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் கண்டறியப்பட்டது இந்த அகழ்வாய்வில் ஒரு முக்கியமான திருப்பம் ஆகும். இதன் மூலம் ரோமானியர்கள்  கடலோரப் பகுதிகளைக் கடந்தும் வணிகம் செய்துள்ளார்கள் என்ற கருத்து வலுப்பெறுகிறது என்றும் திரு.ஆர்.சிவானந்தம் கருதுகிறார்.

பட்டறைப்பெரும்புதூர் “பல்லவர் காலத்தில் பெருமூர் என்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் சிம்மலாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டிருப்பதாகக் கல்வெட்டுகளை மேற்கோள்காட்டி மாநில தொல்லியல் துறை கூறுகிறது.”

பட்டறைப்பெரும்புதூரை ஒட்டி முற்காலத்தில் காஞ்சிபுரத்தில் தொடங்கி வட இந்தியாவிற்கு ஒரு பெருவழி சென்றிருக்கலாம் என்ற கருத்தும் பெருவழியைப் பயன்படுத்திய ரோமானியர்களும் மற்ற  வர்த்தகர்களும் இப்பகுதிகளில் தங்கிச் சென்றிருக்கலாம் என்ற கருத்தும் இந்த அகழ்வாய்வின் மூலம் வலுப்பெறுகிறது.

முதலாம்கட்ட அகழ்வாய்வினைத் தொடர்ந்து 2016 – 2017 ஆண்டுக்கான இரண்டாம்கட்ட அகழாய்வுகளைப் பட்டறைப்பெரும்புதுரில் தொடரத் தமிழ் நாடு மாநில தொல்லியல் துறை முடிவு செய்தது.   தொல்லியல் துறைக்கான மத்திய ஆலோசனை வாரியம் (Central Advisory Board for Archaeology (CABA) இந்த அகழாய்விற்குப் பிப்ரவரி 2018 இல் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு 20 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியது. இரண்டாம்கட்ட அகழாய்விற்கான முதன்மை ஆய்வு (Primary exploration), எல்லைக் கோட்டாய்வு (Contour Survey), இடத்தேர்வு போன்ற பணிகள் முடிந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டாம் கட்ட அகழாய்விற்குத் திரு.ஜே.பாஸ்கரை அகழாய்வு இயக்குனாராக மாநில தொல்லியல் துறை நியமித்துள்ளது.

குறிப்புநூற்பட்டி

 1. அகழாய்வுகள் 2015-2016 பகுதி – 1 விகாஸ்பீடியா
 2. சென்னை அருகே 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த இடம் http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/humans-lived-place-of-30-thousand-years-at-near-chennai-116070700046_1.html
 3. பட்டறைப்பெரும்புதூரில் அகழ்வாராய்ச்சி : கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிப்பு. தினகரன் 05 ஜூலை 2016. http://www.dinakaran.com/News_detail.asp?Nid=228942
 4. Ancient Roman artefacts unearthed in Tiruvallur district to be on display D. Madhavan The Hind, November 09, 2016 http://www.thehindu.com/news/cities/chennai/Ancient-Roman-artefacts-unearthed-in-Tiruvallur-district-to-be-on-display/article16440731.ece
 5. Department of Archaeology Policy Note 2017-2018 http://cms.tn.gov.in/sites/default/files/documents/arch_museum_e_pn_2017_18.pdf
 6. Past presented in potsherds D. Madhavan The Hindu, March 16, 2016 http://www.thehindu.com/news/cities/chennai/past-presented-in-potsherds/article8358545.ece
 7. Tamil Nadu Archaeology department gets Centre’s nod to dig at Pattaraiperumbudur site http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/mar/15/tamil-nadu-archaeology-department-gets-centres-nod-to-dig-at-pattaraiperumbudur-site-1787434.html

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to பட்டறைப்பெரும்புதூர் அகழாய்வு: அரிய கற்காலக் கருவிகள், ரோமானிய ரௌலட் மண்கலன்கள் கண்டுபிடிப்பு

 1. பிரமிக்கும்படியாக சொல்லிச் செல்லும் விடயங்கள் இருக்கிறது நன்றி நண்பரே…

  Like

 2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  படிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது ஐயா
  கீழடிக்கு நேரில் சென்று பார்த்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன

  Like

  • முத்துசாமி இரா சொல்கிறார்:

   கீழடிக்கு இணையான அகழாய்வோ என்று கருதுமளவிற்கு தொல்பொருட்கள் கிடைத்து வருவது வியப்பானது. ரௌலட் மட்கலன்கள் இங்கு கிடைத்திருப்பது மற்றொரு வியப்பு. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..

   Like

 3. குமார் சொல்கிறார்:

  மிகவும் அருமையான தகவல்கள் ஐய்யா.

  Like

 4. ஸ்ரீராம் சொல்கிறார்:

  ரௌலட் வகை மட்கலன் ஈன்றாள் என்ன? அந்த மட்கலனில் என்ன விசேஷம்?

  ரொம்ப சுவாரஸ்யமான தகவல்கள்.

  Like

  • முத்துசாமி இரா சொல்கிறார்:

   வருகைக்கு நன்றி. தங்கள் கேள்வி நல்ல கேள்வி. சற்று விரிவான பதில் தரலாமா ஐயா.

   சர் ராபர்ட் எரிக் மோர்டிமர் வீலர் புகழ்பெற்ற முதுபெரும் தொல்லியலாளர். 1940 ஆம் ஆண்டுகளில் மோர்டிமர் வீலரால் அகழாய்வுகள் நடந்த இடம் தான் அரிக்கமேடு. சோழப்பேரரசிற்கும், ரோமானிய பேரரசிற்கும் இடையே வாணிபம் நடைபெற காரணமாக இருந்த முக்கிய துறைமுக நகரமாக அரிக்கமேடு விளங்கியது. அரிக்கமேட்டில் அகழ்ந்து கண்டறியப்பட்ட ரோமானிய மட்பாண்டங்களில் ரோமானிய நாகரிகத்தின் சான்றுகள் கிடைத்துள்ளன. ரோமானிய பேரரசின் கலைநயத்தை விளக்கும் மட்பாண்டங்கள் பெருமளவில் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன.

   மோர்டிமர் வீலர் மூன்று விதமான இறக்குமதி செய்யப்பட்ட .ரோமன் மட்பாண்டங்களைக் கண்டறிந்தார். இந்த மட்பாண்டங்கள் இவருக்கு தெளிவான காலவரிசையை தெளிவாக நிறுவ உதவியது:

   (1). அரிடைன் .(Arretine) வகை மட்கலன்கள். டெர்ரா சிகிலடா Terra Sigillata) என்னும் முத்திரையிடப்பட்ட மட்கலன் வகையைச் சேர்ந்ததாகும். இது கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மட்கல வகை. இவை கி.பி. 50 களில் வழக்கொழிந்து போயிற்று. (2). ஆம்ஃபோரா (Amphora) வகை கலன்கள் உயர்ந்த கழுத்துடனும் கைபிடியுடனும் கூடிய ஜாடிகள் ஆகும், ரோமானியர்கள் ஒயின் அல்லது ஆலிவ் எண்ணெய் ஊற்றி வைக்கும் ஜாடிகளாகப் இவற்றைப் பயன்படுத்தினர். இந்த ஜாடியின் சில்லுகள் பல்வேறு அகழ்வாய்வுகளில் பல்வேறு படிநிலைகளில் ( strata) கிடைத்துள்ளன. (3). ரௌலட் வகை கலன்கள் உட்புறம் வளைந்த விளிம்புள்ளதும் மூக்குடன் கூடியதுமான வட்டில் (a dish with an incurved and beaked rim). இந்த வகை கலன்களின் உள்ளே இரண்டு அல்லது மூன்று வளைந்த ரௌலட் பட்டைகள் காணப்படும். இந்தக் கலன்கள் கருப்பிலிருந்து சாம்பல் நிறம் கொண்டவை. ரௌலட் ஓடுகளின் கால அளவீடு பற்றி அறிஞர்களிடையே பல்வேறு மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.