பென்னேஸ்வரமடம் கோவில் கல்வெட்டு: ஹோய்சாள மன்னர் வீர ராமநாதன் எவ்வாறு ஊழலைக் கட்டுப்படுத்தினார்?

அருள்மிகு வேதநாயகி சமேத பென்னேஸ்வர நாயனார் கோவில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் வட்டாரம் (Block),  பென்னேஸ்வரமடம் (Panneswaramadam), பின் கோடு 635112 (காவேரிபட்டிணம் அஞ்சல் நிலையம்), பென்னேஸ்வரமடம் – அகரம் சாலையில்,  தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 40 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் ஹோய்சாள மன்னன் வீர ராமநாதன் பொறித்த கல்வெட்டு ஒன்று இலஞ்சம் வாங்குவதோ கொடுப்பதோ குற்றம் என்று கருதி, லஞ்சம் வாங்கிய அல்லது கொடுத்த நபருக்கும், அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிக்கும் மரண தண்டனை வழங்க ஆணை பிறப்பித்துள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

பென்னேஸ்வரமடத்தின் அமைவிடம் 13° 5′ 38.0382” N அட்சரேகை 80° 17′ 32.4816” E  தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 533 மீ. (1748.6 அடி) ஆகும்.  இவ்வூர் காவேரிப்பட்டிணத்திற்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவிலும்; கிருஷ்ணகிரிக்குத் தெற்கே 21 கி.மீ. தொலைவிலும்; தர்மபுரியிலிருந்து 43 கி.மீ. தொலைவிலும்; சேலத்திலிருந்து 104 கி.மீ. தொலைவிலும்; பெங்களூருவிலிருந்து 109 கி.மீ. தொலைவிலும்; கோயம்புத்தூரிலிருந்து 265 கி.மீ. தொலைவிலும்; சென்னையிலிருந்து 268 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் பங்காரபேட் இரயில் நிலையம் 82 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள பெங்களூரு, கெம்பகவுடா பன்னாட்டு விமான நிலையம் 140 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 2686 (ஆண் 1352 பெண் 1334); மொத்த வீடுகள் 663 ஆகும்.

கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப் பிற்காலச் சோழர்பாணிக் கோவில் மூலவர் பெண்ணைநாதருக்கு (சிவன்) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அம்பாள் வேதநாயகி என்னும் வேதவல்லி அம்மன் ஆவார். இக்கோவில் விமானம், அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய உறுப்புகளைப் பெற்றுள்ளது. ஒரு தள விமானம் அதிஷ்டானம், பாதம், பிரஸ்தாரம், சிகரம், கிரிவம் ஸ்தூபி ஆகிய அங்கங்களைப் பெற்றுள்ளன. அர்த்தமண்டபம் மற்றும் முகமண்டபங்களை உருளை வடிவத் தூண்கள் (Vratta Sthamba) தாங்குகின்றன. மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஏழு நிலை இராஜகோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

விமானத்தைச் சுற்றி திருச்சுற்று மாளிகை / மண்டம் (cloister mandapam) நான்குபுறமும் அமைந்துள்ளது. இக்கோவிலில் வேதநாயகி அம்மன் வடமேற்கு மூலையில் தனிச் சன்னதி கொண்டுள்ளார். விநாயகர், சப்தமாதர்கள், சூர்யன், சந்திரன் ஆகியோருக்குத் துணைச் சன்னதிகள் உண்டு. மேற்குப்புறத்தில் இராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோருக்கு ஒரு சன்னதி உள்ளது.

இக்கோவிலைக் கட்டியது இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133-1150) ஆவார். இம்மன்னனின் சிலையும் ஆலயத்தை நிர்மாணித்த சிற்பியின் சிலையும் இக்கோவில் வளாகத்தில் உள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவில் சமண மடமாக இருந்துள்ளது. அருகே ஜைனூர் என்ற ஊர் உள்ளதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. சமணனாக இருந்த குலோத்துங்க சோழன் பின்பு சைவ சமயத்தைத் தழுவியுள்ளார். சமணர்களை அழித்து, அவர்களின் மடத்தைக் கைப்பற்றி அங்குப் பெண்ணைநாதருக்கு இந்தக் கோவிலை கட்டியதாகச் சொல்லப்படுகிறது.

penneswaramadam temple க்கான பட முடிவு

பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் இங்குள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வருகிறார்கள். கிரிவலப்பாதையில் பல நடுகற்கள் மஞ்சள் பூசி குங்குமம் திலகத்துடன் வழிபடப்பட்டு வருகின்றன. கிரிவலப்பாதையில் மேலும் பல சிலைகளும் சிதறிக் கிடைக்கின்றன.

கிருஷ்ணகிரிப் பகுதி

இன்றைய கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டப் பகுதிகள் “அதியமான் நாடு ” என்று அறியப்பட்டது. பிறகு பல்லவர்கள், கங்கர்கள், நுளம்பர்கள், சோழர்கள், விஜயநகர அரசு, பீஜப்பூர் சுல்தான்கள், மைசூர் உடையார்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோரால் ஆளப்பட்டது. கிருஷ்ணகிரி, ஹோசூர் மற்றும் உத்தங்கரைப் பகுதிகள் முறையே எயில் நாடு, முரசு நாடு, கோவூர் நாடு என்று அழைக்கப்பட்டன. சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இப்பகுதி “நிகரிலி சோழ மண்டலம்” “விடுகாதழகி நல்லூர்” என்ற பெயர்களில் அழைக்கப்பட்டன. நுளம்பர்கள் ஆட்சியில் இது நுளம்பாடி என்று அழைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி தமிழ்நாட்டின் நுழைவாயிலாக விளங்கியது. பகை அரசர்கள் வடமேற்குத் திசைவழியாக நுழைய முடியாத அரணாக கிருஷ்ணகிரிப் பகுதி விளங்கியது. பன்னிரெண்டு கோட்டைகளை உள்ளடக்கிய இப்பகுதி பாரா மகால் (ஹிந்தி: பாராஹ் = பன்னிரெண்டு; மகால் = கோட்டை) என்று அழைக்கப்பட்டது.

ஹோய்சாள வம்சம்

ஹோய்சாள வம்சத்தின் 14 அரசர்கள் 346 ஆண்டுகள் அரசாண்டனர். ஹோய்சாள அரசு தெற்கே மதுரை முதல் வடக்கே லக்குண்டி வரை பரவியிருந்தது. ஹோய்சாளர்களின் தலைநகரம் முதலில் வேலபுரியாகவும் பின்னர்த் துவாரசமுத்திரமாகவும் விளங்கியது. துவார சமுத்திரம் என்னும் தோர சமுத்திரம் கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாலிக் கபூரால் இருமுறை தாக்கப்பட்டதால் இந்நகரம் தலைநகராகத் தொடர முடியவில்லை.. இன்று இவ்வூர் ஹளேபீடு (தமிழில் பழையவீடு) என்று அழைக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் அமைந்துள்ள கண்ணனூர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு முதல் ஹோய்சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது.   கண்ணனூர் ஸ்ரீரங்கத்திற்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் விக்கிரமபுரம் என்ற பெயரில் ஹோய்சாளர்களின் தலைநகராக விளங்கியது. ஹொய்சாள மன்னர்கள் “புலிகடிமால்“ என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர். சமயபுரம் மாரியம்மனை ஹொய்சளர்கள் குலதெய்வமாக ஏற்று வணங்கி வந்துள்ளனர்.

வீர சோமேஸ்வரன்

ஹோய்சாள மன்னன் வீர சோமேஸ்வரன் (கி.பி. 1235 – 1263) தமிழ்நாட்டுப் பகுதிகளின் தலைநகரான கண்ணனூரில் வளர்க்கப்பட்டுள்ளார். கி.பி. 1233 ஆம் ஆண்டிலேயே இளவரசனாகப் பொறுப்பேற்றுப் பின்னர் கி.பி. 1235 ஆம் ஆண்டு அரசனாகப் பட்டமேற்றார். திருச்சி, திருவனைக்காவல் ஜம்புகேஸ்வரர் ,கோவில் வீர சோமேஸ்வரனால் விரிவுபடுத்தப்பட்டது. இக்கோவிலில் உள்ள வீர சோமேஸ்வரனின் கல்வெட்டு ஒன்றில் பொய்சளேஸ்வரருக்கு  கண்ணனூரில் கோவில் அமைக்கப்பட்ட செய்தி பதிவாகி உள்ளது.

வீர ராமநாதன்

கி.பி. 1254 ஆம் ஆண்டு வீர சோமேஸ்வரன் தன்னுடைய அரசின் பகுதிகளைத் தன் இரண்டு மகன்களான மூன்றாம் நரசிம்மன் மற்றும் வீர ராமநாதன் ஆகியோருக்குப் பிரித்து அளித்தார். வீர ராமநாதன், சாளுக்கிய இளவரசி தேவாலா – வீர சோமேஸ்வரன் இணைக்குப் பிறந்த வாரிசு ஆவார். இவருடைய (ஒன்றுவிட்ட) அண்ணன் மூன்றாம் நரசிம்மன் ஆவார். மூன்றாம் நரசிம்மனுக்கு (கி.பி. 1253 – 1292) துவாரசமுத்திரத்தைத் (Dorasamudra) தலைநகராகக் கொண்டு அமைந்த கர்நாடகாவின் பகுதிகளையும், வீர ராமநாதனுக்கு (கி.பி. 1253 – 1295) கண்ணனூர் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அமைந்த தமிழ்நாட்டின் பகுதிகளையும் பிரித்து அளித்தார். வீர சோமேஸ்வரன் தன் மகன் வீர ராமநாதனுடன் கண்ணனூரிலேயே தங்கிவிட்டார். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், வீர சோமேஸ்வரனை ஒரு போரில் தோற்கடித்துக் கொன்றார்.

வீர ராமநாதன் கி.பி. 1255 ஆம் ஆண்டில் தமிழ் மாவட்டங்களின் அரசராய் முடிசூட்டிக்கொண்டார். இவருடைய 12 (கி.பி.1267), 15 (கி.பி.1270) மற்றும் 17 (கி.பி.1271) ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள்  ஸ்ரீரங்கம் மற்றும் கண்ணனூர்க் கோவில்களில் காணப்படுகின்றன. மேலும் பல கல்வெட்டுகள் திருச்சி ஜம்புகேஸ்வரம், திருவாச்சி, இரத்தினகிரி, திருமழவாடி ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன. இம்மன்னர் வருவாய்க் கணக்கைத் தணிக்கை செய்வதற்குத் தன்னுடைய 4 ஆம் ஆட்சியாண்டில் திருச்சி மாவட்டம், திருவெள்ளரைக்கு வந்துள்ளார். இவருடைய 8 ஆம் ஆட்சியாண்டில், வணிகன் கேணியைச், (நாலு மூலைக் கேணி என்ற பெயரில் இன்று அறியப்படும் ஸ்வஸ்திக வடிவக் கேணி) சீர் செய்ய பொது மராமத்துப் பணிகள் (Communal Repair) நடந்த போதும் இங்கு வந்துள்ளார். இந்த நான்கு சுவர்களும் பலத்த மழையால் புதைந்து போயின. இதையொட்டி திருமழவாடியின் உப்பு வணிகர்கள் உப்பிற்கு வரிவிலக்குப் பெற்றனர். இவர் ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு விலைமதிப்பற்ற கற்களுடன் கூடிய தங்க கிரீடம், தங்கப் பிடியுடன் கூடிய சாமரம் மற்றும் வெற்றிலைக் குடம் ஆகியவற்றைக் கொடையாக வழங்கியுள்ளார்.

கண்ணனூர் போஜேஸ்வரர் கோவிலில் தெற்குச் சுவரில் உள்ள வீர இராமநாத தேவரின் கல்வெட்டு ஒன்று இக்கோவிலை பொய்சளேஸ்வரர் கோவில் என்று அழைக்கிறது. போஜேஸ்வரர் என்ற பெயர் தான் பொய்சளேஸ்வரர் ஆயிற்று. கண்ணனூரில் புள்ளம்பாடி கால்வாய் என்னுமிடத்தில் தொல்லியல் துறையினரால் அகழாய்வு நடத்தப்பட்டது.

முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி. 1279 ஆம் ஆண்டு வீர ராமநாதனிடமிருந்து கணிசமான தமிழ்நாட்டு நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். இதனால் வடக்கு நோக்கித் தள்ளப்பட்ட வீர ராமநாதன் இவருடைய சகோதரன் மூன்றாம் நரசிம்மனிடமிருந்த சில கர்நாடகப் பகுதிகளைக் கைப்பற்ற முனைந்து பெங்களூரு பகுதிகளில் சில மாவட்டங்களை மட்டுமே கைப்பற்றிக்கொண்டார். வீர ராமநாதன் ஹோய்சாளர்களின் தலைநகரைக் குந்தாணியாக (Kundani) (இன்றைய ஹோசூர்) மாற்றிச் சில காலம் அரசாண்டார். வீர ராமநாதனின் மரணம் 19, டிசம்பர் 1295 ஆம் தேதி குந்தாணியில் நிகழ்ந்தது.

கல்வெட்டுகள்

பென்னேஸ்வரமடம் பென்னேஸ்வரநாயனார் கோவிலில் 40 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள் ஹோய்சளர், சோழர், விஜயநகர அரசு வம்ச அரசர்களால் பொறிக்கப்பட்டவை ஆகும். பென்னேஸ்வரமடம் பென்னேஸ்வரநாயனார் கோவிலில் குடி கொண்டுள்ள பென்னேஸ்வரநாயனாருக்குத் தங்கம், வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலம் மற்றும் பல பொருட்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ள செய்திகள் கல்வெட்டுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீர நரசிம்மனின் கல்வெட்டு, மதுராந்தக வீரநுளம்பன் வைரவன் விமலன் என்பவன் பெண்ணை நாயனாருக்கு அளித்த நிலக்கொடை பற்றிப் பதிவு செய்துள்ளது. இந்த நிலம் பெருமான் கோயில் கொல்லை, தட்டான்குட்டை, மகாதேவன் கொல்லை, சிறுக்கன் கொல்லை, புளியமடை ஆகிய எல்லைகளுக்கு உட்பட்டு அமைந்துள்ளது.

வீர ராமநாதன் ஆட்சியில் கோவில்களில் ஊழல்

வீர ராமநாதன் தேவரசரின் 46 ஆம் ஆட்சியாண்டில் பென்னேஸ்வரநாயனார் கோவில் சுவரில் பொறிக்கப்பட்ட தமிழ் கிரந்தக் கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டு ஹோய்சாள அரசர் வீர ராமநாதன் வழங்கிய அரசாணையைப் பதிவு செய்துள்ளது.

கல்வெட்டு பாடம்

“ஸ்ரீ வீரராமந்நாத தேவரீஸர்க்கு யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார் பெண்ணையாண்டார் மடத்தி லும் பெண்ணை நாயனார் தேவதானமான ஊர்களிலும் ஒரு அதிகாரியாதல் கணக்கர் காரியஞ் செய்வார்களாதல் கூசராதல் ஆரேனுமொருவர் வந்து விட்டது விடாமல் சோறு வேண்டுதல் மற்றேதேனும் நலிவுகள் செய்குதல் செய்தாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலையைஅறுத்துவிடவும் அப்படி செய்திலர் களாதல் தங்கள் தலைகளோடே போமென்னும்படிறெயப்புத்த பண்ணி இதுவே சாதனமாகக் கொண்டு ஆங்கு வந்து நலிந்தவர் களைத் தாங்களே ஆஞ்ஞை பண்ணிக் கொள்ளவும் சீ காரியமாகத்தாங்க . . . த. . . போதும் போன அமுதுபடிக் குடலாக ஸர்வ மானிய மாகக் குடுத்தோம். அனைத் தாயமு விட்டுக்கு . . .கூசர் உள்ளிட்டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம். இப்படியாதே இதுக்கு விலங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவைக் கொன்றான் பாவத்தைக் கொள்வான்”

பின்புலம்: வீர ராமநாதன் ஆட்சியில் கோவில்களில் மிக மோசமான ஊழல் பழக்கவழக்கங்கள் நிலவியுள்ளது. ஊழல் பழக்க வழக்கங்கள் குறித்து இம்மன்னன் கொஞ்சம் கூடச் சகிப்புத் தன்மை காட்டவில்லை. பென்னேஸ்வரமடம் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள ஹோய்சாள மன்னன் வீர ராமநாதனின் 46 ஆம் ஆட்சி ஆண்டுக் தமிழ் கிரந்தக் கல்வெட்டு முக்கியதுவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இக்கல்வெட்டு ஊழல் குறித்தும் ஒழுக்க நெறிமுறைகளை மீறுபவர்கள் குறித்தும் வீர ராமநாதன் எவ்வளவு சகிப்புத் தன்மையற்றவராக இருந்துள்ளார் என்று காட்டுகிறது. தன்னுடைய மக்களை ஊழலிலிருந்து காக்க இம்மன்னர் என்னென்ன நடவடிக்கை எடுத்தார் என்று இக்கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது.

பொருள்: பென்னையாண்டார் மடம் மற்றும் பெண்ணை நாயனாருக்குத் தேவதானமான (கொடையாக அளிக்கப்பட்ட) ஊர்களிலும்  யார் ஒருவர் சமைத்த உணவு கேட்டாலோ அல்லது ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அவருடைய தலை கொய்யப்படும். கணக்கர் மற்றும் அதிகாரிகள் போன்றோர் இந்த ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்க மறுப்பார்களாயின் அவர்களும் இதுபோன்ற தண்டனைகளைச் சந்திக்க நேரிடும். நலிந்தவர்களுக்கு உணவளிக்க நிலக்கொடை வரிவிலக்களித்துக் (ஸர்வ மானிய மாகக்) கொடுத்தோம். இந்த ஆணை கறாராக அமுல்படுத்தப்பட்டது. அரசனால் வெளியிடப்பட்ட இந்த நீதி மிகுந்த அரசாணையை மீறுவோர் கங்கை நதிக்கரையில் குராற் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர்.

தமிழ் கிரந்த வரிவடிவில் உள்ள இக்கல்வெட்டின் மொழிபெயர்ப்பு டாக்டர்.எஸ். இராஜகோபால் மற்றும் திரு, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை, ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சார்பிலா தொல்பொருள் ஆய்வாளரும் (freelance archaeologist), அரசு பள்ளி ஆசிரியருமான திரு. சுகவனமுருகன் (மனோன்மணி புத்தெழுத்து), மாவட்ட தொல்லியல் மையம், காவேரிபட்டிணம், கிருஷ்ணகிரி மாவட்டம் கூறினார்.

குறிப்புநூற்பட்டி

 1. History of Krishnagiri District http://www.krishnagiri.tn.nic.in/history.htm
 2. Hoyala Dynasty. Indian Mirror.com http://www.indianmirror.com/dynasty/hoysaladynasty.html
 3. Madras is not alien by Suganthy Krishnamachary. The Hindu August 21, 2014
 4. Penneswaramadam Temple Inscription: How the Vira Ramanatha, Hoysala Ruler kept corruption at bay? http://muthusamyphotostream.blogspot.com/2015/09/penneswaramadam-temple-inscription-how.html
 5. Perils of corruption: a note from Hoysala ruler by PV Srividya. The Hindu October 11, 2014 https://www.thehindu.com/news/national/tamil-nadu/perils-of-corruption-a-note-from-hoysala-ruler/article6489954.ece
 6. லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மரண தண்டனை விதித்த மன்னன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல். எஸ்.கே.ரமேஷ். தி இந்து அக்டோபர் 10, 2014

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to பென்னேஸ்வரமடம் கோவில் கல்வெட்டு: ஹோய்சாள மன்னர் வீர ராமநாதன் எவ்வாறு ஊழலைக் கட்டுப்படுத்தினார்?

 1. பதிவில் தாங்கள் கொடுத்திருக்கும் புள்ளி விபர விடயங்கள் பிரமிக்க வைக்கிறது நண்பரே…

  Like

 2. பிங்குபாக்: பென்னேஸ்வரமடம் கோவில் கல்வெட்டு: ஹோய்சாள மன்னர் வீர ராமநாதன் எவ்வாறு ஊழலைக் கட்டுப்படுத்தின

 3. Shutterbug Iyer சொல்கிறார்:

  Very detailed and interesting information. Astonished to know the governance measures against bribe and corruption even in that era.

  Like

 4. Dr B Jambulingam சொல்கிறார்:

  நம்மவர்கள் தொடாத துறையே இல்லை என்று கூறுமளவு உள்ளது. வியக்க வைத்த பதிவு.

  Like

 5. ஸ்ரீராம் சொல்கிறார்:

  நுண்ணிய விவரங்கள் தந்துள்ளர்கள். எங்கிருந்து இவற்றை சேகரம் செய்தீர்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சமீபத்தில் ஹளபேடு கோவில் கட்டிடக்கலை புகைப்படங்களை எங்கள் குடும்ப க்ரூப்பில் பகிர்ந்து கொண்டபோது அங்கு செல்லு ஆசை வந்தது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.