தலகுண்டா பிரணவேஸ்வரா கோவில்: கடம்பர் வம்ச வரலாற்றையும், பூர்வ ஹளே கன்னட மொழியின் தொன்மையையும் அறிய உதவும் கல்வெட்டுகள்

பிரணவேஸ்வரா கோவில், கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டம், சாகர் வட்டம் தலகுண்டாவில் (English: Talagunda; Kannada: ತಾಳಗುಂದ) அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கக் கடம்ப வம்சத்தவர்களின் கோவிலாகும்.  சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரணவேஸ்வரா கோவில் தலகுண்டாவின் முதன்மையான வசீகரமிக்கக் கோவிலாகும். தலகுண்டா முன்னர் ஸ்தானகுண்டூர் என்று பெயரிடப்பட்டிருந்தது. இது ஓர் அக்ராஹரம் (வேதபாடசாலை என்னும் ஆன்மீகக் கற்றல் மையம்) ஆகும். இது கர்நாடகா மாநிலத்தில் முதன் முதலாக அங்கீகாரம் பெற்ற ஆக்ரஹரம் ஆகும்.

தலகுண்டாவில் கண்டறியப்பட்ட சில கல்வெட்டுகள் கடம்ப (கன்னடம்: ಕದಂಬರು) வம்சத்தின் (கி.பி. 345-525) தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஒரு கணிப்பைத் தருகின்றன. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட தலகுண்டா தூண் கல்வெட்டு (Talagunda Pillar Inscription) கடம்ப வம்ச தலைமுறையின் முழுக் கணிப்பைத் தருவதுடன் இவர்களுடைய அரசின் அதிகார வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. கடம்ப வம்சத்தவர்கள் சுமார் 180 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தார்கள். கடம்ப வம்சம் கி.பி. 350 ஆம் ஆண்டு மயூரவர்மனால் (கி.பி. 345–365) நிறுவப்பட்டது. கடம்ப வம்சத்தவர்கள் கன்னட மொழி பேசிய கர்நாடக மண்ணின் மைந்தர்கள் ஆவர். அவர்களது வசிப்பிடத்திற்கு அருகில் பல கடம்ப மரங்கள் இருந்ததன் காரணமாகவே கடம்பர் என்று பெயர் பெற்றார்கள்.

இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் (ஏ.எஸ்.ஐ) பாதுகாப்பிலுள்ள இக்கோவில் வளாகத்தில் சில அரிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. இக்கோவில் பாழடைந்த நிலையில் இருந்துள்ளது. ஏ.எஸ்.ஐ பணியாளர்கள் ஒவ்வொரு கல்லையும் நீக்கி அதற்கு வரையறுக்கப்பட்ட இலக்கமிட்டுள்ளார்கள். இவ்வாறு நீக்கிய போது இவ்வளாகத்தில் செப்பேடுகளையும் தங்க நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். தற்போது இக்கோவில் மறுபடியும் கட்டப்பட்டுப் பழைய வடிவத்தைப் பெற்றுள்ளது. தலகுண்டா தொல்லியல் / வரலாற்று ஆர்வலர் ஒவ்வொருவரும் அவசியம் வருகை புரிய வேண்டிய கோவிலாகும்.

தலகுண்டா கர்நாடக மாநிலம், சிமோகா (Shimoga) மாவட்டம், சாகர் (Sagar) வட்டம், ஷுண்டிகொப்ப (Shuntikoppa) பஞ்சாயத்திற்கு உட்பட்ட  தொன்மை மிக்கச் சிறு கிராமம் ஆகும். அஞ்சல் நிலையம் தலகுண்டா பின் கோடு  577401 ஆகும். இதன் அமைவிடம்  14.42°N அட்சரேகை 75.26°E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 580 மீ. ஆகும். 2011 ஆம் ஆண்டு  மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 1467 (ஆண்கள் 724 பெண்கள் 743 குடும்பங்கள் 351) ஆகும்.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொல்லியல் வரலாற்றாய்வாளரும் கல்விமானுமான பெஞ்சமின் லூயிஸ் ரைஸ் (Benjamin Lewis Rice) என்ற பி.எல்.ரைஸ், கி.பி. 1902 ஆம் ஆண்டில், முக்கியத்துவம் வாய்ந்த கடம்பர்களின் கல்வெட்டு ஒன்றை தலகுண்டாவில் கண்டறியும் வரை இந்தக் குக்கிராமதைப் பற்றி வெளி உலகிற்கு அதிகம் தெரியாது. முதலில் இந்தக் கிராமம் ஓர் அக்ராஹரமாக இருந்துள்ளது என்கிறார் ஏய்.எல்.ரைஸ். கல்வெட்டுகள் இவ்வூரை ஸ்தானகுண்டபுரா (English: Sthaanagundapura; Kannada: ಸ್ಟ್ಹಾನಗುಂಡಪುರ), ஸ்தானகுண்டூர் (English: Sthaanagundur ;Kannada: ಸ್ಟ್ಹಾನಗುಂದೂರ್) தானகுண்டூர் (English: Thaanagundur; Kannada: ಥಾನಗುಂದೂರ್) என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கடம்ப வம்சம்

கடம்ப (English: Kadamba; Kannada: ಕದಂಬಾ) வம்சம் (கி.பி. 345–525) கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் அந்தண அரச வம்சமாகும். பானவாசியைத் (English: Banavasi; Kannada: ಬನವಾಸಿ) தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததால் இவர்களுக்குப் பனவாசிக் கடம்பர்கள் என்று பெயர்.  கடம்பர்கள் சாளுக்கியர் மற்றும் இராஷ்ட்கூடர் ஆகியோரின் படைத் துணையோடு தற்போதைய உத்தர கர்நாடகா, கொங்கன் போன்ற பகுதிகளை ஆண்டு வந்தனர். பின்னாளில் கர்நாடகத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்களுள் கடம்பர்கள் மட்டுமே கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.  இதன் காரணமாகவே கடம்பர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பில் கன்னட மொழியே ஆட்சி மொழியாக இருந்து வந்துள்ளது. கன்னட மொழி வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர்கள் கடம்பர்கள் எனலாம். இதற்கு ஆதாரமாக வரலாற்றாய்வாளர்கள் கடம்ப அரசனான காகுஸ்தவர்மனின் (Kannada: ಕಾಕುಸ್ಥವರ್ಮ; English: Kakusthavarma) (கி.பி. 435–455) கி.பி. 450 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஹல்மிதி கல்வெட்டைக் குறிப்பிடுகிறார்கள். இதற்கு மற்றொரு சான்று பனவாசியில் கண்டறியப்பட்ட கடம்பர்களின் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னட எழுத்துக்களைக் கொண்டுள்ள செப்பு நாணயம் ஆகும். கடம்பர்களுக்கு முன்னால் கர்நாடகப் பகுதிகளை ஆண்ட அரசர்கள் அனைவரும் வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர்.

கடம்ப வம்சத்தை கி.பி. 345 ஆம் ஆண்டுத் தோற்றுவித்தவர் கடம்ப மன்னனும் அந்தண அறிஞருமான மயூரவர்மா  ஆவார். இவர் தலகுண்டாவை சொந்த ஊராகக் கொண்டவர். பனவாசி உத்தர கர்நாடகத்தில் (Uttara Karnataka) அமைந்துள்ள கோவில் நகரமும் உத்தர கர்நாடகம் முழுதும் ஆண்டு வந்த கடம்பர்களின் பண்டைய தலைநகரமும் ஆகும். புகழ்பெற்ற மதுகேஷ்வரா (சிவன்) கோவில் இந்நகரில் அமைந்துள்ளது.

கோவில்கள்

தலகுண்டாவில் தொன்மை மிக்கப் பல கோவில்கள் உள்ளன. பிரணவேஸ்வரா, கங்காதேஸ்வரா, திரிநேத்ரா மற்றும் வீரபத்ரா ஆகிய கோவில்கள் இவற்றுள் முக்கியமானவை.

பிரணவேஸ்வரா கோவில் சாலைக்கு மிக அருகில் சற்று தாழ்வான இடத்தில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி வேலி அமைத்து விலைமதிப்பற்ற நினைவுச் சின்னங்களை நன்கு பாதுகாக்கும் கோவில் இதுவெனலாம். இந்த இடம் மிகவும் தொன்மையான கல்வெட்டுகளால் நிறைந்துள்ளது. இங்கு இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினாரல் நிறுவப்பட்டுள்ள இரண்டு தகவல் பலகைகள் கோவிலைப் பற்றியும் கண்கவரும் தூண் கல்வெட்டு பற்றியும் பயனுள்ள செய்திகளை நமக்குத் தருகின்றன. இங்குக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் இக்கோவில் கருவரையிலுள்ள சிவலிங்கம் சாதவாகன வம்சத்தைச் சேர்ந்த சதகர்ணி அரசர்களால் வணங்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளன.  சாதவாகன ஆட்சி கிமு 1-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை இருந்ததாக இன்றைய வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். இந்தச் செய்திகள் இக்கோவிலின் தொன்மையைச் சாதவாகனர்கள் காலத்திற்குக் கொண்டு செல்கிறது. எனினும் இன்று நாம் காணும் இந்தக் கட்டுமானம் சாதவாகனர்களின் காலத்தைச் சேர்ந்ததல்ல என்று கருதப்படுகிறது. இந்த வளாகத்தில் நடத்திய அகழ்வாய்வுகள் மூலம் சிதைந்த செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

praneshwara_temple_talagunda

Pranaveshwara Temple (4th century) at Talagunda PC: Wikimedia Commons

சதுர வடிவில் சுகநாசிகையுடனும் ஓர் எளிய கருவறையுடனும் அமைந்த கட்டுமானக் கற்கோவிலாகும்.  கருவறையின் கதவு நிலை உத்தரத்தின் மேலே கஜலட்சுமி  உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கருவறையில் அமைந்துள்ள பெரிய இலிங்கம் பத்ர பீடம் என்னும் பீடத்தையும் பெற்றுள்ளது. இக்கோவில் வாசலில் காணப்படும் அழகிய வேலைப்பாடுகள் கி.பி. பதினோராம் நூற்றண்டில் செதுக்கப்பட்டவை என்றும் கருதப்படுகிறது.

தொடர்புடைய படம்

சிவலிங்கம் PC: feedyeti.com

கல்வெட்டு

வரலாற்று இடைக்காலத்தில்  (Medieval Period கி.பி. 1100 முதல் 1500) அக்ராஹரங்கள் தென்னிந்தியாவில் முன்னணிக் கல்வி நிறுவனங்களாகத் திகழ்ந்தன.  இந்த அக்ராஹரங்கள் அந்தணர் குழுவினர்களுடைய குடியேற்றங்களாகத் திகழ்ந்தன. இவர்கள் கூட்டாண்மை அமைப்பை  (corporate body) நிறுவி அதன் மூலம் கல்வி உள்ளிட்ட அனைத்து அலுவல்களையும் நிர்வாகித்துள்ளனர். தலகுண்டா என்னும் ஸ்தானகுண்டபுரா இடைக்காலக் கர்நாடகத்தில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட அக்ராஹரம் ஆகும்.

கடம்பர்களின் கல்வெட்டுகளில் ஸ்தானகுண்டபுரா என்னும் ஸ்தானகுண்டூர் (Sthana Kundra) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்தானகுண்டூர் பனவாசிக் கடம்பர்களின் சொந்த ஊராக (home town) இருந்துள்ளது. பனவாசிக் கடம்பர்கள் சூட்டு வம்சத்தவர்களை வென்று   முதல் சுதேசி கன்னட அரசை (first indigenous Kannada kingdom) கி.பி. முதல் நூற்றண்டிலேயே நிறுவியவர்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் துறை தலகுண்டாவில் 2013-14 ஆம் ஆண்டு மேற்கொண்ட அகழ்வாய்வில் முற்கால வரலாற்றுச் சான்றுகள் செங்கல் கட்டுமானங்களாக வெளிச்சத்திற்கு வந்தன. சாதவாகனர்கள் காலத்தைச் சேர்ந்த பிராகிருத மொழிக் கல்வெட்டு ஒன்று தலகுண்டாவிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாலவல்லி (English: Malavalli; Kannada: ಮಳವಳ್ಳಿ) கிராமத்தில் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. ஹரிதிபுத்ர சதகர்ணி (Haritiputra-Satakarni) இந்தக் கிராமத்தின் ஈஸ்வரர்க்கு வழங்கிய கொடை பற்றிய செய்தியினைப் பதிவு செய்துள்ளது. “மைசூரில் (கர்நாடகத்தில்) கலிங்க மன்னன் அசோகனின் பிரம்மகிரி (சித்ரதுர்கா மாவட்டம்) சாசனத்தை அடுத்து மிகவும் பழைய கல்வெட்டு” என்று பி.எல்.ரைஸ் கருதுகிறார். அசோகனின் பிரம்மகிரி சாசனம் 1891  ஆம் அண்டு பி.எல்.ரைஸால் கண்டறியப்பட்டது. தலகுண்டா பிரணவேஸ்வரா கோவில் தூண் கல்வெட்டு, மூலவர் பிரணவேஸ்வரா சதகர்ணி மற்றும் சில அரசர்களாலும் வணங்கப்பட்டுள்ளார் என்று பதிவு செய்துள்ளது..

பிரணவேஸ்வரா கோவிலின் வலது பக்கக் கதவு நிலையில் பொறிக்கப்பட்டுள்ள சமஸ்கிருத மொழிக் கல்வெட்டு இறைவன் பசுபதியை  வணங்கித் தொடங்குகிறது. ஸ்தானகுஞ்சபுரத்தை (Sthanakunjapura) வசிப்பிடமாகக் கொண்ட 30 நபர்களுக்கு உணவளிப்பதற்குத் தேவையான பணத்தைக் கடம்பர்களின் படைத்தலைவனும் (feudatory), படாரி (Bhatari) குடும்பத்தைச் சேர்ந்தவனுமாகிய காகுஸ்தா வழங்கினான் என்ற செய்தியைப் பதிவு செய்துள்ளது.

talagunda_inscription

பிரணவேஸ்வரா கோவில் பலகைக்கல் ஹளே கன்னடக் கல்வெட்டு PC: Wikimedia Commons

பிரணவேஸ்வரா கோவிலுக்கு அருகிலேயே ஒரு பலகைக்கல்லில் பொறிக்கப்பட்ட ஹளே (பழைய) கன்னட மொழிக் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இந்தப் பலகைக்கல் கல்வெட்டிற்கு முன்பு சுமார் 40 அடி தொலைவில் ஒரு தூண் கல்வெட்டு உள்ளது. சம்ஸ்கிருத மொழியில் கடம்ப வரியுருவுடன் (Kadamba Characters) பொறிக்கப்பட்ட இந்தத் தூண் கல்வெட்டு கடம்ப வம்சத்தைப் பற்றி ஒரு கணிப்பைத் தருகிறது. கடம்ப மன்னர் சாந்திவர்மாவின் காலத்தில் (கி.பி. 455-60) இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை கர்நாடகா ஆய்வின் முன்னோடியான பி.எல். ரைஸ் கண்டறிந்து எபிக்ராபியா கர்னடிகாவில் வெளியிட்டுள்ளார். கீல்ஹோர்ன் (Kielhorn) எபிகிரபியா இண்டிகாவில் மற்றொரு கல்வெட்டுப் பதிப்பை வெளியிட்டுள்ளார்.  டி.சி.சிர்கார் (D.C.Sircar), பி.ஆர்.கோபால் (B. R. Gopal) ஜி.எஸ்.கை (G. S. Gai) ஆகியோர் தங்கள் நூல்களில் இக்கல்வெட்டுப் பதிப்பைச் சேர்த்துள்ளனர்.

talagunda_pillar_inscription_28455-460_ad29_at_talagunda

Talagunda pillar inscription written in Sanskrit language PC: Wikimedia Commons

இக்கல்வெட்டு கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று பி.எல்.ரைஸ் கால அளவீடு செய்துள்ளார். இந்தத் தூண் கல்வெட்டின் பீடம் 5 அடி 4 அங்குலம் உயரமும்; 1 அடி 4 அங்குலம் பக்கங்களுடன் கூடிய சதுர வடிவில் அமைந்துள்ளது. எண்பட்டை வடிவில் அமைந்த தூணில் 7 அங்குல அகலத்தில் ஏழு பட்டைகளில் கீழிருந்து மேலாகக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தாம் நூற்றாண்டு சமஸ்கிருத மொழிக் கல்வெட்டு. சாந்திவர்மா (இவர் மயூரவர்மனின் கொள்ளுப்பேரன்) காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டு 34 செய்யுள்களைக் கொண்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் செய்யுள்களைக் கட்டமைத்து இயற்றியவர் சாந்திவர்மா அரசவையில் அரசவைப் புலவராக விளங்கிய குப்ஜா (Kubja) ஆவார்.

கல்வெட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு:

ஸ்தாணுவை (சிவன்) போற்றியவாறு தொடங்கும் இக்கல்வெட்டு தொடர்ந்து மயூரசர்மன் கடம்ப அரசை நிறுவியது பற்றி விவரிக்கிறது. மானவ்ய கோத்திரத்தைச் சேர்ந்த இந்த அந்தணக் குடும்பம் தங்கள் வீட்டருகில் இருந்த கடம்ப மரத்தின் மூலம் கடம்பர் என்று பெயர் பெற்றனர். மயூரசர்மன் தன்னுடைய ஆசிரியர் வீரசர்மாவுடன் மேற்கல்வி கற்க பல்லவேந்திரபுரி (காஞ்சிபுரம்) கடிகைக்குச் சென்றார். பல்லவ மன்னனுக்காக நடத்தப்பட்ட அஸ்வமேத யாகத்தில் சண்டை மூண்டது. அப்போது அந்தணர்கள் சத்திரியர்களால் உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை. இது கண்டு கோபமுற்ற மயூரசர்மன் வாளை உருவினார். பின்னர் ஸ்ரீபர்வதத்தில் ஒளிந்துகொண்டார். அங்கிருந்து பல்லவர் எல்லைப்படைகளுக்குத் தொல்லை கொடுத்தார். அபரார்ணவ (மேலைக் கடல்) மற்றும் பிரீஹர ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட நாட்டின் அரசனாக மயூரசர்மனை பல்லவர்கள் ஒப்புக்கொண்டனர். மயூரசர்மனின் மகன் கங்கவர்மன் “புகழ் பெற்ற போர்”  (“famous in battle”) இந்தப்பதிவில்  விவரிக்கிறார். கங்கவர்மனின் மகன் பகிரதன்; பகீரதனின் மகன் இரகு ஓர் அறிஞரும் கவிஞருமாவார். இரகுவின் சகோதரர் காகுஸ்தவர்மன் (கி.பி. 435-55) ஆவார். காகுஸ்தவர்மன் ஒரு சூரியன் தன் கதிர்களால் தாமரையை மலர வைப்பதைப் போலத் தன்னுடைய மகள்களைக் குப்தர்கள் மற்றும் பல அரச குடும்பங்களுக்கு  மணமுடித்து அவர்களிடம் நட்பு, ஆர்வம் மற்றும் அன்பைப் பெருக்கினார். ஒரு முறை வேட்டையாடுவதற்காக ஸ்தானகுண்டூரு (Sthānakundūru) சென்றபோது ஒரு மகாதேவர் (பிரணவேஸ்வரா) கோவிலைக் கண்டறிந்தார். இக்கோவில்  சதகர்ணி உள்ளிட்ட மற்றும் சிலரால் வணங்கப்பட்டுள்ளது தெரிந்தது. மகாதேவர்  (பிரணவேஸ்வரா) கோவிலுக்கு அருகே பெரிய குளம் ஒன்று இவரால் வெட்டப்பட்டது. இவருடைய மைந்தன் முப்பெரும் முடியுடைய சாந்திவர்மன் ஆவார். இக்கல்வெட்டு சாந்திவர்மனால் பொறிக்கப்பட்டது. இக்கல்வெட்டு செய்யுளை இயற்றியவர் கவிஞர் குப்ஜா ஆவார்.

Source: Talagunda pillar inscription Wikipedia

கி.பி. 1091 ஆம் ஆண்டில் தலகுண்டாவில் கண்டறியப்பட்ட பிற்காலக் கடம்பர்களின் கல்வெட்டு (எபிகிரபியா கர்நாடிகா தொகுதி 7, எண். 186, 177, 178 & 185) மயூரவர்மனின் முன்னோரான முக்கண்ணா (Mukkannaa) (திரிநேத்ரா (Trinetra) என்னும் திரிலோச்சனா (Trilochana) என்ற பெயர் கொண்ட கடம்ப குல அந்தணர் ஒருவரால் இந்தத் தலகுண்டா கிராமம் தோற்றுவிக்கப்பட்டதாம் (கி.பி. 350 ஆம் ஆண்டு). இந்த அந்தணர் 32 அந்தணக் குடும்பங்களை அஹிச்சத்ரா (English: Ahicchatra; Kannada: ಅಹಿಚಚಾತ್ರ) என்ற ஊரிலிருந்து அழைத்துச் சென்று  ஸ்தானகுண்டபுரா (வேறுபெயர்கள்: ஸ்தானகுண்டூர், தானகுண்டூர்) அருகிலுள்ள அக்ராஹரத்தில் குடியேற்றினார். பி.எல்.ரைஸ் இந்த 32 குடும்பங்களைச் சேர்ந்த அந்தணர்கள் 12000 பேர் என்று கணித்துள்ளார். வேறு சிலர் 30000 அந்தணர்கள் என்று கணித்துள்ளனர். கடம்ப மன்னர்கள் அக்ராஹரத்தில் வேதம் கற்றலை (Vedic learning) ஊக்குவிக்க வெளியிலிருந்து வேதவிற்பன்னர்களை (Scholars) அழைத்துவந்துள்ளனர். இந்த வழக்கம் பின் வந்த நூற்றாண்டுகளிலும் தொடர்ந்தது. மயூரவர்மன் இதற்காக 144 கிராமங்களைக் கொடையாக வழங்கியுள்ளார்.

கி.பி. 1150 ஆம் ஆண்டுக் கல்வெட்டு இந்த அக்ராஹரத்தைப் பற்றி மேலதிக செய்திகளைப் பதிவு செய்துள்ளன. தலகுண்டா எட்டு நூற்றாண்டுகள் வரை புகழ்பெற்ற  கல்வி மையமாகத் திகழ்ந்துள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது. இந்த வேத பாடசாலையில் எட்டு ஆசிரியர்கள் வேதங்கள், வேதாந்தம், யாப்பிலக்கணம் (Prosody உரைநடை), ரூபாவதாரா  (Grammar இலக்கணம்) மற்றும் பிரபாகரா (Philosophy தத்துவம்) ஆகிய துறைகளை நாற்பத்தி எட்டு மாணவர்களுக்குப் போதித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் அடிப்படைக் கன்னட மொழியைக் (கன்னட அக்ஷர சிக்ஷா) கற்றுத்தரவும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள், கோவில் ஊழியர்கள் ஆகியோருக்கு உடைகள் வழங்க ஏற்பாடுகள் இருந்துள்ளன. பள்ளி விடுதியில் தங்கியிருந்தோருக்கு உணவு சமைத்து வழங்க சமையல்காரர்கள் இருந்துள்ளனர்.

தலகுண்டா கன்னடக் கல்வெட்டு ஹல்மிதி கல்வெட்டைவிட பழமையானது.

தொடர்புடைய படம்

தலகுண்டாவில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு காட்சி PC: enetkannada.com

Kannada inscription at Talagunda க்கான பட முடிவு

பிரணவேஸ்வரா கோவில் வளாகம் பழைய கன்னடக் கல்வெட்டு PC: Deccan Herald Jan 12 2017

இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையினர் (ஏ.எஸ்.ஐ) தலகுண்டா பிரணவேஸ்வரா கோவில் வளாகத்தில் 2013-14 ஆம் ஆண்டுகளில் நடத்திய அகழாய்வில் பிரணவேஸ்வரா கோவிலின் வடக்குப் பக்க கைப்பிடிச் சுவரில் கண்டறியப்பட்ட பிராமி வரிவடிவக் கல்வெட்டு கி.பி. 370 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்று கால அளவீடு செய்யப்பட்டுள்ளது.

பூர்வ ஹளே கன்னட (Purva Halegannada) மொழியையும் சம்ஸ்கிருத மொழியையும் பயன்படுத்தி இந்த ஏழு வரிகளுடன் கூடிய சரிவான  பிராமி வரிவடிவ இருமொழிக் கல்வெட்டு (Bilingual Inscription in Slanting Brahmi Script) பொறிக்கப்பட்டுள்ளது. போய்கரா குடும்பத்தைச் சேர்ந்த வாஜி நாகா (Vaji Naga) என்ற படகோட்டிக்கு (boatman) புளிண்டகேயைச் சேர்ந்த ஹலாமி (Halami of Pulindage) என்பவன் வழங்கிய நிலக்கொடை பற்றி இந்தப் பூர்வ ஹளே கன்னடக் கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது. தொடக்க காலக் கல்வெட்டுப் பதிவுகளின்படி பூர்வ ஹளே கன்னடம் (Purva Halegannada) கி.பி. 5 ஆம் நூற்றண்டில் புழங்கிய மொழியாகும்.

இக்கல்வெட்டு 1936 ஆம் ஆண்டில் ஹசன் மாவட்டதில் கண்டறியப்பட்ட ஹல்மிதிக் கல்வெட்டுக்கும் முந்தையது என்றும் பூர்வ ஹளே கன்னட (Puruva-hala Kannada) மொழியின் மிகப்பழைய கல்வெட்டு என்றும் கருதப்படுகிறது. இக்கல்வெட்டு கி.பி. 450 ஆம் ஆண்டிற்கும் கி.பி. 500 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கடம்ப வம்ச மன்னன் காகுஸ்தவர்மாவால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கால அளவீடு செய்துள்ளார்கள்

தலகுண்டா செல்ல…

இவ்வூர் சாகரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும்; ஜோக் ஃபால்ஸ் 27 கி.மீ. தொலைவிலும்; ஷிகாபூர் 41 கி.மீ. தொலைவிலும்; கொல்லூர் 60 கி.மீ. தொலைவிலும்; சிர்சியிலிருந்து 64 கி.மீ. தொலைவிலும்; ஷிமோகாவிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும்; மைசூருவிலிருந்து 318 கி.மீ. தொலைவிலும்; தலைநகர் பெங்களூருவிலிருந்து 358 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மங்களூர், பெங்களூர், மைசூர் போன்ற நகரங்களிலிருந்து சிர்சிக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள இரயில் நிலையம் சாகர் ஜம்பாகாரு இரயில் நிலையம் (Sagar Jambagaru Rail Way Station) 4 கி.மீ. தொலைவிலும்; பட்கல் (Bhatkal) இரயில் நிலையம் 58 கி.மீ. தொலைவிலும்; ஹுப்ளி சந்திப்பு இரயில் நிலையம் 152 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஹூப்ளி சந்திப்பு இந்தியாவின் அனைத்து பெருநகரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஹூப்ளி உள்நாட்டு விமான நிலையம் 151 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

குறிப்புநூற்பட்டி

 1. ASI to begin trial excavation of ancient site at Talagunda https://www.business-standard.com/article/pti-stories/asi-to-begin-trial-excavation-of-ancient-site-at-talagunda-118031100463_1.html
 2. Kadambas of Banavasi Jyotsna Kamat February 20, 2005 (Updated: January 04, 2018) http://www.kamat.com/kalranga/deccan/kadamba.htm
 3. Kannada inscription at Talagunda may replace Halmidi as oldest https://www.deccanherald.com/content/591046/kannada-inscription-talagunda-may-replace.html
 4. Pranavesvara Temple, Talagunda http://asibengalurucircle.in/pranavesvara-temple-talagunda
 5. Rewriting Kannada History: Earliest Inscription Of The Language Found At Talagunda by Swarajya Staff – Jan 14 2017 https://swarajyamag.com/insta/rewriting-kannada-history-earliest-inscription-of-the-language-found-at-talagunda
 6. Rice, B L . Mysore: A Gazetteer, vol II. Archibald Constable & Company. Westminster, 1897
 7. Talagunda http://www.karnatakaholidays.com/talagunda.php
 8. Talagunda Wikipedia
 9. Talagunda – A Kadamba Bastion Saurabh Saxena October 10, 2013 http://puratattva.in/2013/10/10/talagunda-2594
 10. Talagunda pillar inscription Wikipedia https://en.wikipedia.org/wiki/Talagunda_pillar_inscription
 11. The History of Agraharas Jyotsna Kamat January 10, 2018 http://www.kamat.com/kalranga/edu/agraharas.htm
 12. The Kadamba Kula: A History of Ancient and Mediaeval Karnataka. George M. Moraes. Asian Educational Services, 1995 https://books.google.co.in/books?id=RUX8-PzWohgC&dq=talagunda+inscriptions&source=gbs_navlinks_s

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், தொல்லியல், மொழி, வரலாறு and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to தலகுண்டா பிரணவேஸ்வரா கோவில்: கடம்பர் வம்ச வரலாற்றையும், பூர்வ ஹளே கன்னட மொழியின் தொன்மையையும் அறிய உதவும் கல்வெட்டுகள்

 1. பிங்குபாக்: தலகுண்டா பிரணவேஸ்வரா கோவில்: கடம்பர் வம்ச வரலாற்றையும், பூர்வ ஹளே கன்னட மொழியின் தொன்மையையும்

 2. அரிய விடயங்கள் பல அறிந்து கொண்டேன் நண்பரே நன்றி.

  Like

 3. ஸ்ரீராம் சொல்கிறார்:

  சுவாரஸ்யமான விஷயங்கள்.

  Like

 4. Dr B Jambulingam சொல்கிறார்:

  கடம்ப வம்சத்தைப் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.

  Like

 5. yarlpavanan சொல்கிறார்:

  அருமையான தொகுப்பு
  நல்லெண்ணங்களைப் பகிரும் பதிவு

  Like

 6. பிங்குபாக்: பல்லவர்கள் பேணிக் காத்த காஞ்சிக் கடிகை | அகரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.