மதுகேஸ்வரா கோவில், கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடகம், சிர்சி மாவட்டம், பனவாசி வட்டம், பெல்காம் வட்டாரம், பனவாசி (English: Banavasi; Kannada: ಬನವಾಸಿ) பின் கோடு 581318 கிராமத்தில் அமைந்துள்ள, கடம்ப வம்சதவர்களின் கட்டடக் கலைபாணியைப் பறைசாற்றும், கோவிலாகும். கடம்பர் காலத்திய கட்டடக் கலையின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் இக்கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கடம்ப மன்னர்களால் கட்டப்பட்டது. ஒரே கல்லாலான கல் மஞ்சமும், திரைலோக மண்டபமும் இந்தக் கோவிலின் உன்னதக் கலைப்படைப்பு ஆகும். இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற இக்கோவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாதலமாகவும் விளங்குகிறது.
கடம்ப வம்சம்
மயூரவர்மனால் (கி.பி. 345–365) கி.பி. 345 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட கடம்ப வம்சம் (English: Kadamba; Kannada: ಕದಂಬಾ) வம்சம் (கி.பி. 345–525) பனவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்கள். இவர் பெயரை மயூரசர்மன் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
கடம்பன் என்னும் சொல் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நால்வகைத் தமிழ் முதுகுடிகளில் ஒன்று என்று புறநானுறு குறிப்பிடுகிறது.
‘’துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கல்லது குடியும் இல்லை’’— புறம்.335 (மாங்குடிக் கிழார்)
கடம்பர்கள் கடம்ப (Anthocephalus indicus, Anthocephalus Cadamba) மரத்தை குலமரபாக வழிபட்டு (Totemic Worship) வந்துள்ளதையும், முருகனை வழிபாட்டு வந்துள்ளதையும் தமிழ் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
கடம்பு அமர் நெடுவேள் அன்ன (பெரும்பாணாற்றுப்படை 75)
கடம்ப மரத்தடியில் வீற்றிருக்கும் முருகக் கடவுள்
கார் மலர்க் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணி …. (மதுரைக்காஞ்சி 614 – 615)
மூர்க்கமாகத் தோன்றும் முருகனின் பூசாரியான வேலன் கார்காலத்தில் பூத்த குறிஞ்சி மலர் மாலையணிந்து கொண்டு, கடம்ப மலர் மாலைசூடியவாறு காட்சி தரும் முருகனை வணங்கினான். (நச்சினார்க்கினியர் உரை: ‘கார்காலத்தான் மலர்தலையுடைய குறிஞ்சிப் பூவினைச் சூட்டிக் கடப்ப மரத்தின்கண்ணே புகழ்மிக்க செவ்வேளாகிய முருகனை வழிபடுதலாலே’
உருகெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇக்
கடம்பும் களிறும் பாடி நுடங்குபு (அகநானூறு 10 – 11)
அற்புதமான முருகக் கடவுளை வெறியாடும் வேலன் (பூசாரி) மூலமாக நம் வீட்டிற்கு அழைத்து வந்து அவனுடைய கடம்ப மரத்தையும் ஆண் யானையையும் பாடும் சடங்கு பற்றி அகநானூறு பேசுகிறது.
சங்க இலக்கியம் காட்டும் கடம்பர்கள் தான் கடம்ப வம்சத்தவரா என்ற விவாதம் ஆராய்ச்சிக்கு உரியது. எனினும் கடம்பர்கள் கன்னட வம்சாவளியினர்தான் என்றும் இவர்கள் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் பலர் கருதுகிறார்கள். கடம்ப வம்சத்தைச் சேர்ந்த 10 அரசர்கள் 180 ஆண்டுகள் அரசாண்டுள்ளனர்.
காகுஸ்தவர்மன் (கி.பி. 435-455) கடம்ப வம்சத்தின் வலிமை மிக்க அரசரும் நிர்வாகியுமாவார். இவர் கங்கர்கள் மற்றும் குப்த வம்சத்தினரிடம் திருமண உறவுகளை மேற்கொண்டார். இவர் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட எல்லையையும் விரிவுபடுத்திக் கொண்டார்.
பனவாசிக் கடம்பர்களின் ஆட்சி கி.பி. ஆறாம் நூற்றண்டில் நலிவுற்றது. பத்தாம் நூற்றண்டில் கடம்பர்கள் குறுநில மன்னர்களாக விளங்கினார்கள். மேலைச்சாளுக்கிய வம்சத்தின் ஆளுகைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களாக ஹங்கல் கடம்பர்கள் திகழ்ந்தார்கள். இது போல கோவா கடம்பர்களும் கோவா மற்றும் கொண்கன் பகுதிகளைக் குறுநில மன்னர்களாகவே ஆண்டு வந்தனர். இது போல மற்றும் சில கடம்பர் பிரிவுகளும் தோன்றி கி.பி. 14 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டுவந்தனர்.
மண்ணின் மைந்தர்களான பனவாசிக் கடம்பர்கள் கன்னட மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்திய செய்தியினை ஹல்மிதி கல்வெட்டு மூலமாகவும் ஐந்தாம் நூற்றாண்டச் சார்ந்த செப்பு நாணயங்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ள முடிகிறது. கடம்பர்கள் சமணர்கள் ஆவர். எனவே தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு சமணப் பாசாதிகளை நிறுவியுள்ளனர். தனித்துவமான கட்டடக் கலைப்பாணியைக் கொண்ட பல இந்துக் கோவில்களையும் இவர்கள் நிறுவியுள்ளனர். பனவாசியில் அமைந்திருக்கும் மதுகேஸ்வரா கோவில் கடம்பர்களின் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுதுக்காட்டாகும்.
அமைவிடம்
பணவாசியின் அமைவிடம் 14.5341°N அட்சரேகை 75.0177°E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 576 மீ. ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 6783 (ஆண்கள் 3423 பெண்கள் 3360 குடும்பங்கள் 1584) ஆகும்.
பனவாசி
பன (வன) என்றால் வனம் (காடு) என்றும் வாசி என்றால் வசந்தம் என்றும் பொருள். பனவாசி என்றால் வனவசந்தம் என்று பொருள். இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் இந்நகரம் ‘வனவாசகா‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் புலிகேசியின் அய்ஹோளே கல்வெட்டு இவ்வூரை ஜலதுர்க்கா (ஜலக்கோட்டை) என்று குறிப்பிடுகிறது. விஜயநகரப் பேரரசின் கி.பி. 1552 ஆம் ஆண்டுக் கல்வெட்டு இவ்வூரை கனகவதி என்று அழைக்கிறது. பல நூற்றாண்டுகளாக, பல வம்சத்தவர்கள் இவ்வூரை அழைத்து வந்துள்ளனர். கடம்பர்களின் ஆளுகைக்கு முன்பு இவ்வூரை சாதவாகனர்கள், சூட்டு வம்சத்தவர் மற்றும் பல்லவர்கள் ஆண்டு வந்துள்ளனர். இவ்வூர் வனவாசிகா, ஜெயந்திபுரா, கொண்கனபுரா, நந்தனவனா, கனகவதி, ஜலதுர்கா, சஞ்சயந்தி என்று பல பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன.
யட்சகானம் கர்நாடகாவில் நடைபெறும் ஒரு வகை நாட்டிய நாடகம் ஆகும். நீண்ட காலமாக பனவாசி, யட்சகானம் கலை வடிவத்தின் கலாச்சார மையமாக விளங்குகிறது. யட்சகான நடனம், இசை, படகு திட்டு பாணியில் (Badagu Thittu style) தோல் இசைக்கருவிகள் வாசித்தல் ஆகியவை இந்தப் பகுதியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் ‘கடம்போத்ஸதவா’ என்ற கலாச்சாரத் திருவிழா புகழ்பெற்றது. இவ்விழா கர்நாடக அரசால் வரலாற்றுப் புகழ்பெற்ற கடம்ப வம்ச அரசை நினைவுகூரும் வகையில் நடத்தப்படுகிறது. இசைக்குழுக்கள், கிராமிய நாட்டியக் குழுக்கள் போன்ற குழுக்கள் ஒன்று சேர்ந்து ஊர்வலம் போவதுண்டு. பல கண்காட்சி வண்டிகளும் (Tableu) இதில் இடம்பெறுவதுண்டு. இவ்விழாவில் இடம்பெறும் யட்சகானம் முதலிய மரபு சார்ந்த கலைநிகழ்சிகள் மாநில அரசின் ஆதரவுடன் நடைபெறும்.
பனவாசி வரலாறு
பனவாசி கடம்ப வம்சதவர்களின் முதல் தலைநகரம் ஆகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளுக்கு நடுவே வரதா நதிக்கரையோரம் அமைந்துள்ளது. நகரைச் சுற்றி உருக்குலைந்த கோட்டைச் சுவர்களைக் காண இயலும். குந்தளா பகுதியை (இந்நாள் கர்நாடகாவின் சிமோகா, உத்தர கன்னடம், தார்வாட் மாவட்டங்கள்) இந்தப் பண்டைய அரச வம்சம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் 6 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்துள்ளனர். கன்னட மொழியின் முதல் கவிஞரான ‘ஆதிகவி பம்பா’ பனவாசியில் கி.பி. 902 ஆம் ஆண்டு பிறந்தவராவார். பணவாசியைக் குறித்துப் பல காப்பியங்களை இவர் எழுதியுள்ளார்.
பனவாசி, அனைத்து காலத்திற்கும் பிரிவுகளுக்கும் மதங்களுக்கும் ஏற்ற ஒரு கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கை மையமாகவும் விளங்குகிறது. சமணம், பௌத்தம் மற்றும் இந்து மத அறிஞர்கள் இங்கு வாழ்ந்து மதப்பணியாற்றியுள்ளார்கள். இதற்கு சமண, பெளத்த சமயங்களின் வரலாற்று எச்சங்களே சான்று. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க-ரோமானிய அறிஞர் தாலமி, பாரசீக அறிஞர் அல்பெருணி, காளிதாசன் (இவர் இயற்றிய காவியமான சாமரச) மற்றும் பலருடைய எழுத்துக்களில் இந்த நகரத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மகாநாம தேரர் இயற்றிய பெளத்த மத புனித நூலான மகாவம்சம், சக்ரவர்த்தி அசோகன் பனவாசிக்கு பெளத்த சமய பிரசாரகர்களை அனுப்பிய செய்தி இடம்பெற்றுள்ளது. குப்தர்களின் நல்லெண்ண தூதுவராக காளிதாசன் பணவாசிக்கு வந்துள்ளார். காளிதாசனின் மேகதூதம் பனவாசி பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது.
சீனப் பயணியும் துறவியுமான ஹுவாங் சுவாங் கி.பி. 630-644 ஆண்டுகளுக்கிடையே இந்தியாவில் இருந்துள்ளார். இவர் கொண்கன்புராவிற்கு (பனவாசிக்கு) வருகைபுரிந்துள்ளார். சீன எழுத்துக்களில் கொண்கனபுலோ என்று குறித்துள்ளார். ஹீனயாணம் மற்றும் மகாயாணப் பிரிவுகளைச் சேர்ந்த 10,000 புத்த பிட்சுக்கள் இங்கு இருந்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரவண சித்தாவுக்கும் (புத்தர்) மற்றும் மைத்ரேயாவிற்கும் (மிகப்பெரிய சந்தன சிலை) அர்ப்பணிக்கப்பட்ட பெளத்த மடாலயம் பற்றியும் பதிவு செய்துள்ளார்.
மதுகேஷ்வரா கோவில்

மதுகேஸ்வரா கோவில் PC: Wikimedia Commons
மதுகேஸ்வரா மூலக் கோவிலைக் கடம்பர்கள் கட்டியுள்ளார்கள். மேலைச்சாளுக்கியர் காலம் தொடங்கிச் சோண்டா தலைவர் (Sonda Chief) (கி.பி. 1570–80) ஸ்ரீ வாடிராஜர்கள் வரை இக்கோவிலில் கணிசமான அளவில் பல திருத்தங்களும் (Renovation) புதிய கட்டுமானங்களும் (New Constructions) இடம் பெற்றுள்ளன. சோண்டா தலைவர்கள் வம்சம் விஜயநகரப் பேரரசின் ஒரு கிளை வம்சம் ஆகும். நகரின் மையப்புள்ளியாக அமைந்துள்ள இக்கோவிலைச் சுற்றியே இந்நகரம் வளர்ந்துள்ளது.
தொடக்கத்தில் மதுகேஸ்வரா கோவில் விஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒன்றான மாதவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. நவரங்க மண்டபத்தின் சுகனாசியை ஒட்டி இரண்டு மாடக் கோட்டங்கள் அல்லது மடக்குழிகள் (niches) இடம்பெற்றுள்ளன. இந்த மாடக் கோட்டம் ஒன்றில் ஆதி மாதவானின் சிலை இடம்பெறுள்ளது. பலர் இச்சிலையைக் கோவிலின் மூல உருவச் சிலையாகக் கருதுகிறார்கள். இந்தச் சிலையின் சிற்ப பாணி மற்றும் சிறப்புகளை ஆய்ந்து நோக்கும்போது இது கடம்பர்கள் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தற்போது இக்கோவில் மதுகேஸ்வராவிற்கு (சிவனுக்கு) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவலிங்கமே இக்கோவில் கருவறையில் இடம் பெற்றுள்ளது. சிவலிங்கத்தின் நிறம் தேனின் நிறம் போல இருந்தமையால் இக்கோவில் மூலவர் மதுகேஸ்வரா (மது = தேன்; ஈஸ்வரா = சிவன்) என்று அழைக்கப்படுகிறார். இந்த சிவலிங்கம் பிற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இக்கோவிலின் அமைப்பில் ஒரு சதுரக் கருவறை, ஒரு சிறிய சுகனாசி மற்றும் தூண்களுடன்கூடிய நவரங்கா (மண்டபம்), ஆகிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. திரைலோக்கிய மண்டபத்தை மாதிரியாகக் என்றும் கருதலாம்.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள மூலவர் கோவில் நன்கு வரையறுக்கப்பட்ட வெளிப்பிரகாரத்திற்கு நடுவே அமைந்துள்ளது. இது உயரமான சுற்று மதிற்சுவர் சூழ்ந்த வெளிப் பிரகரத்தைச் சுற்றி அமைந்துள்ளது. வெளிப்பிரகாரம் பல துணைக்கோவில்களைக் கொண்டுள்ளது. பிரகாரச்சுவர் மற்றும் பல துணைக் கோவில்கள் எல்லாம் சோண்டர்களின் காலமான (Sonda period) கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கால அளவீடு செய்துள்ளார்கள். சுற்று மதிற்சுவரில் இரண்டு நுழைவாயில்கள் – பிரதான நுழைவாயில் கிழக்கிலும், மற்றொன்று வடக்கிலும் – அமைந்துள்ளன.

யானை சிலை PC: Wikimedia Commons
கிழக்கு நுழைவாயிலில் எட்டுத் தூண்கள் தாங்கும் மண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தின் முன்புறம் பக்கத்திற்கொன்றாக இரண்டு அற்புத யானைகளின் சிற்பங்கள் பக்கத்திற்கு ஒன்றாகத் தனிப்பட்ட பீடத்தில் நிறுவப்பட்டுள்ளன. நுழைவாயில் மண்டபத்தைத் தாண்டி பிரகரதிற்குள் நுழைந்தால் உயரமான விளக்குத்தூண் (தீபஸ்தம்பம்) மற்றும் கொடிமரம் (துவஜஸ்தம்பம்) ஆகியவற்றைக் காணலாம்.
திரைலோக்கிய மண்டபம்
திரைலோக்கிய மண்டபம் ஒரு மாதிரி மண்டபமாகும் (Model Mandapa). இம்மண்டபம் கி.பி. பதினாறாம் நூற்றண்டில் சோண்டா தலைவர் சதாசிவராஜேந்திராவால் நன்கொடையாக வழங்கப்பட்டது. கல்லில் மிக அழகாக செதுக்கப்பட்டு வேலைப்பாடுகளுடன் காணப்படும் இந்த மண்டப மாதிரி நவரங்காவில் வைக்கப்படுள்ளது.

மதுகேஸ்வரா மண்டபம் தூண்கள் PC: Flickr.com
நவரங்கா
நவரங்கா என்பது மையத்தில் நான்கு தூண்களும் அவற்றைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட மைய இடைவெளி (central bay); வெளிச்சுற்றில் (periphery) மேலும் பன்னிரெண்டு தூண்கள், மையத் தூண்களுடன் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டதால் உருவான எட்டு இடைவெளிகள் (bays) அமைவதுண்டு. மைய இடைவெளியைச் சுற்றி அமைக்கப்பட்ட எட்டு இடைவெளிகளையும் சேர்த்தல் ஒன்பது இடைவெளிகள் வரும். நவரங்கா (மண்டபம்) கடம்பர், சாளுக்கியர், ஹொய்சாளர் கலைபாணி கோவில்களில் இடம்பெறுவதுண்டு. கி.பி. 11 அல்லது 12 ஆம் நூற்றண்டில் கல்யாணி சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்டது இந்த மதுகேஸ்வரா நவரங்கா ஆகும்.
நவரங்கா மண்டபத்தின் நுழைவாயிலில் சாளுக்கிய பாணியில் அமைக்கப்பட்ட இரண்டு அரைத்தூண்களைக் (kudyastambha) காணலாம். நவரங்கா சுகனாசியை ஒட்டி இரண்டு மாடக்கோட்டங்கள் (niches) இடம்பெற்றுள்ளன. இந்த கோட்டங்களுள் ஒன்றில் ஆதி மாதவனின் சிலை இடம்பெறுள்ளது. பலர் இச்சிலையைக் கோவிலின் மூல உருவச்சிலையாகக் கருதுகிறார்கள். இந்தச் சிலையின் சிற்ப பாணி மற்றும் சிறப்புகளை ஆய்ந்து நோக்கும்போது இது கடம்பர்கள் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். மற்றொரு கோட்டத்தில் கணபதி காட்சிதருகிறார். இந்தக் கோட்டம் மகரதோரண அணி அலங்கரிப்புப் பெற்றுள்ளது.
நவரங்கா மண்டபத்தில் லேத்தில் (lathe) கடையப்பட்ட அலங்காரத் தூண்கள் இடம்பெற்றுள்ளன. தூண்களின் பாதம் சதுரமாகவும், உடல் பகுதி இந்திரகாந்தம் (பன்முகம்) அல்லது விஷ்ணுகாந்தம் (எண்முகம்) அல்லது ருத்ரகாந்தம் (உருளை) வடிவமாகவும், அதன் மீது கும்பம், பாலி, பலகை, போதிகை, உத்தரம் ஆகிய கூறுகள் காணப்பெறுகின்றன. இங்குக் காணப்படும் பெரும்பாலான தூண்கள் மலர் அணிகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளன. விஷ்ணுகாந்த (எண்முக) வகைத் தூண்கள் முத்திரைகள் (imprints) மற்றும் அரச இலை வெட்டு வேலைகளைக் (Cut Work of Peepal leaf) கொண்டுள்ளன. மண்டபத்தின் கூரை அலங்கரிப்பு இல்லாமல் வெறுமையாக உள்ளது.
இம்மண்டப நுழைவாயிலில் இடம்பெற்றுள்ள நந்தி மண்டபத்தில் ஒரே கல்லாலான பெரிய நந்தியின் கற்சிலை இடம்பெற்றுள்ளது. இந்த நந்தியின் திரும்பிய தலை பற்றிச் சில வியப்பான செய்திகள் உள்ளன. ஒரு கண்ணால் சிவலிங்கத்தையும் மறு கண்ணால் அம்பாளையும் பார்த்தவாறு உள்ள நந்தி ஒரு வியப்புத்தானே. அதிக மழைப்பொழிவு பெரும் சிர்சி பகுதியின் தட்பவெப்ப நிலைகேற்ப இம்மண்டபத்தின் கூரை சரிவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சரிந்த கூரை மேற்குத் தொடர்ச்சி மலைப் (Western Ghats) பகுதிகளில் பரவிக்கிடக்கும் பல கல்யாணி சாளுக்கிய கட்டுமானங்களை நமக்கு நினைவு படுத்துகின்றன.

கடம்பா விஷ்ணு PC: Puratattva.in
மண்டபத்தின் உட்புறம் சற்றுப் பழமையானதாகக் காணப்படுகிறது. இந்த உட்புற மண்டப அமைப்பு முற்காலச் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தது என்று தெரிகிறது. எல்லாத் தூண்களும் சதுர வடிவில் எளிமையான தனிவடிவம் பெற்றுள்ளது. இங்குள்ள மலர் அணிகளின் தொகுப்பு (floral composition) பட்டாடக்கல் குழு கோவில்களுடன் (Pattadakal Group of Temples) ஒப்பிடத்தக்கது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்தத் தூண்கள் மற்றும் மலர் அணிகள் 23 மற்றும் 24 ஆம் எண் கொண்ட அஜந்தா குடைவரைகளின் வெளிமண்டபங்களுடன் ஒப்பிடலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கருவறை
சாந்தார விமானம்
சாந்தார விமான அமைப்பில் இடம் பெற்றுள்ள இந்த சதுர வடிவக் கருவறையைச் சுற்றிலும் நடைவெளியுடன் வலம் வரும் வண்ணம் உட்பிரகாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவறை மற்றும் உட்பிரகாரத்தின் மீது விமானத்தின் மேற்கட்டுமானம் அமைந்துள்ளது.
கருவறையின் வாயிலின் மேல் அமைந்துள்ள லாலட பிம்பம் (Lalata Bimba = Crest Figure) பூமிஜா சிகரம் செதுக்கப்ப்டுள்ளது. பூமிஜா வகை சிகரம் மத்திய இந்தியா மற்றும் வட மகாராஷ்டிரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில் காணப்படுகிறது.
கடம்ப நாகர சிகரம்

கடம்ப நாகர சிகரம் PC: puratattva.in
கர்நாடகத்தின் கட்டடக்கலை பாரம்பரியத்திற்குக் கடம்பர்கள் ஆற்றிய பங்களிப்பு இன்றியமையாததாகும். சாளுக்கியர் மற்றும் பல்லவ பாணிகளின் சில அம்சங்களைப் பொதுவாகக் கொண்டுள்ள கடம்ப பாணியை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். கடம்பர் கட்டிடக்கலையின் மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான அம்சம் கடம்ப நாகர சிகரம் (Kadamba Nagara Shikara) என்றழைக்கப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சிகரம் ஆகும்.
கடம்ப சிகரம் படிப்படியாக பிரமிடு வடிவில் உயர்கிறது. கடம்ப சிகரத்தின் உச்சியில் ஸ்தூபி / கலசம் அமைக்கப்படும். கடம்பர்களின் கோவில் விமானம் பொதுவாக சதுர வடிவில் வடிவமைக்கப்படும். பிரமிடு வடிவ சிகரத்தில் கிடைமட்டத்தில் படிநிலைகளுடனும் (series of horizontal step stages) ஒரேவிதமான நாற்கர செங்குத்து முன்னீட்சிச் தொடர்களுடனும் அலங்கரிக்கப்படிருக்கும் (decorated with uniform series of quadrangular vertical projections). சிகரத்தின் உயரம் குறைக்கப்பட்ட எண்ணற்ற படிநிலைகளில் நாகமண்டல அலங்கரிப்புகள் காணப்படுகின்றன. வழக்கமாக சிகரத்தின் உச்சியில் அமைக்கப்படும் கலசத்தின் அடியில் பத்ம பீடம் அமைவதுண்டு; ஆனால் இந்த சிகரத்தில் மராத்தா வகை குவிமுக அணி (Maratha Type Dome Decoration) அமைக்கப்பட்டுள்ளது.
கடம்பர்களின் இத்தகைய கட்டடக்கலையே சாளுக்கிய – ஹோய்சாள பாணிக் கட்டடக்கலைக்கு (Chalukya-Hoysala style architecture) வழி வகுத்தது என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்கூட, தொட்டகட்டவல்லியில் உள்ள ஹோய்சாளர்கள் கோவிலிலும் ஹம்பியில் உள்ள ஹேமகூடா கோவில் தொகுப்புகளிலும் (Hemakuta Group of Temples) கடம்பர் பாணி சிகரம் அமைக்கப்பட்டுள்ளது.
மதுகேஸ்வரா கோவில் மூலவர் கருவறைக்கு மேல் உள்ள விமானத்தின் மேற்கட்டுமானம் (Super structure) பிற்கால விஜயநகர அரசர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சிகரம் அமைப்பு கடம்பர்களின் குறிப்பிடத்தக்க படிப்படியான சிகர பாணியைக் (Typical stepped shikhara style of Kadambas) கொண்டுள்ளது.

கல்லில் செதுக்கப்பட்ட கட்டில் PC: puratattva.in
இங்குள்ள பார்வதி கோவில் கி.பி. பதினாறாம் நூற்றண்டில் சோண்டா தலைவர் சதாசிவராஜேந்திராவால் கட்டப்பட்டது. மூலவருக்கு வலப்புறம் அமைந்துள்ள வீரபத்ரர் கோவில் சோடே நாயக்கர்களின் ஆட்சியின்போது (Sode Nayaka rule) நாகப்பா என்பவரால் கட்டப்பட்டுள்ளது. நுட்பமான கைவினை வேலைப்பாடுகளுடன் கல்லில் செதுக்கப்பட்ட கட்டில் ஒன்று கம்பீரமான தோற்றத்துடன் இங்கு காணக்கிடைக்கிறது. இந்தக் கட்டிலையும் சோடே தலைவர் இரகுநாத நாயகா பரிசாக வழங்கியுள்ளார். பார்வதி மற்றும் நரசிம்மர் கோவில்களுக்கான அரங்கமண்டபங்கள் கி.பி. 1552 ஆம் ஆண்டு விஜயநகர அரசர்களின் ஆட்சியின்போது கட்டப்பட்டுள்ளது.
திக்பாலர்கள், அர்த்த கணபதி, இரண்டு கைகளுடன் காட்சிதரும் நரசிம்மர் ஆகிய தெய்வங்களுக்கு பல சிறு சன்னதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தனித்துவம் வாய்ந்த அர்த்த கணபதி சிலை, இரண்டு பகுதிகளாக செங்குத்தாக வெட்டப்பட்டு, பதியளவிற்கே நிறைவு பெற்றுள்ளது. இந்த மணமாகாத கணபதி மனைவியின்றிக் காட்சி தருகிறார். இரு கைகளுடன் காட்சிதரும் நரசிம்மரின் கண்கள், புராணங்கள் குறிப்பிடுவது போல, வெவ்வேறு வேளைகளில் வெவ்வேறு விதமாகக் காட்சி தருகின்றன. நரசிம்மர் இங்கு சாந்த நரசிம்மராகக் காட்சி தருகிறார்.
கிழக்கு நுழைவாயிலின் அருகே இடப்புறம் சில சிற்பங்கள் மற்றும் சில கண்டுபிடிப்புகள் சிறிய அளவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு சிறிய அளவிலான அருங்காட்சியகம் அமைக்கும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குட்நாபூர் இடிபாடுகள் (Ruins of Gudnapur)
பனவாசி 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியான குட்நாபூர் கிராமத்தில் காணப்படும் மறந்துபோன இடிபாடுகளுள் ஒரு கோவில், ஒரு அரண்மனை போன்ற இல்லம், அந்தப்புரம் ஒரு ஜோடி நாட்டிய மண்டபங்கள் ஆகியவற்றைக் காணலாம். .மேலே குறிப்பிட்ட பண்டைய வாழ்விடங்களின் அடித்தளங்களை (plinths) வரலாற்று எச்சங்களாகக் காணலாம். குட்நாபூர் ஏரியைப் பார்த்தவாறு அமைந்துள்ள கோவிலில் அழகுற செதுக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் காணப்படுகின்றன. குட்நாபூரின் மற்றொரு முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்பு கடம்ப அரசன் ரவிவர்மனின் (கி.பி. 480-515) தூண் கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டில் கடம்ப வம்சத்தின் தோற்றம் மற்றும் பாரம்பரியம் (origin and genealogy) பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகழ்வாய்வுகள்
இங்கு இந்நாள் வரை ஒரேயொரு அகழ்வாய்வு மட்டும் பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. மைசூர் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டமேற்படிப்பு மற்றும் ஆய்வுத் துறையைச் சேர்ந்த டாக்டர்.எம்.சேஷாத்ரி சார்பில் மூன்று காலகட்டங்களில் (seasons), 1969-70 ஆண்டு முதல் 1971-72 வரை, இந்த அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட மிக முக்கியமான தொல்பொருட்கள்:
கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கால அளவீடு செய்யப்பட பிராமி எழுத்துக்கள் பொறித்த மட்பாண்டம்.
கர்நாடகாவின் கிடைத்ததிலேயே மிகப் பெரிய அளவிலான, சாதவாகனர்கள் காலத்தைச் சேர்ந்த, இரண்டு கஜபிருஷ்ட வடிவிலான. செங்கல் கட்டுமானங்கள். இந்தக் கட்டுமானங்கள் பெளத்தம் அல்லது இந்துக் கட்டுமானங்கள்தானா என்று அறுதியிட்டுக் கூற போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.
கல்லாலான ஸ்கந்தன் சிற்பம் இந்தக் கட்டுமானம் ஒன்றிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் இந்து மதச் சார்பை அறிவுறுத்துகிறது. எனினும் இது பிற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பனவாசி செல்ல…
இவ்வூர் சிர்சியிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும்; கார்வாரிலிருந்து 117 கி.மீ. தொலைவிலும்; தலைநகர் பெங்களூருவிலிருந்து 383 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மங்களூர், பெங்களூர், மைசூர் போன்ற நகரங்களிலிருந்து சிர்சிக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள இரயில் நிலையம் சிர்சி இரயில் நிலையம் 23 கி.மீ. தொலைவிலும்; தலகுப்பா இரயில் நிலையம் 53 கி.மீ. தொலைவிலும்; ஹவேரி இரயில் நிலையம் 68 கி.மீ. தொலைவிலும்; குமட்ட 84 கி.மீ. தொலைவிலும்; ரானேபென்னூர் 100 கி.மீ. தொலைவிலும்; கோகர்ணா 102 கி.மீ. தொலைவிலும்; ஹுப்ளி சந்திப்பு இரயில் நிலையம் 103 கி.மீ. தொலைவிலும்; சிமோகா 112 கி.மீ. தொலைவிலும்; முர்தேஷ்வேர் 130 கி.மீ. தொலைவிலும்; ஹம்பி 233 கி.மீ. தொலைவிலும்; மைசூரு 353 கி.மீ. தொலைவிலும்; பெங்களூரு 401 கி.மீ. தொலைவிலும்; அமைந்துள்ளது. ஹூப்ளி சந்திப்பு இந்தியாவின் அனைத்து பெருநகரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஹூப்ளி உள்நாட்டு விமான நிலையம் 112 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
குறிப்புநூற்பட்டி
- Ancient City of Banavasi Jyotsna Kamat January 01, 2006 http://www.kamat.com/kalranga/archaeology/banavasi.htm
- Banavasi City History-Importance-Origin-Architecture http://www.hoparoundindia.com/karnataka/history-of-banavasi.aspx
- Banavasi: The Oldest Town in Karnataka https://www.nativeplanet.com/travel-guide/banavasi-karnataka-001719-pg1.html
- Banavasi – The First Kannada Capital Chapter 1 Past References and Political History http://puratattva.in/2013/09/30/banavasi-2529
- Banavasi – The First Kannada Capital Chapter II Inscriptions http://puratattva.in/2013/09/30/banavasi-3-2536
- Banavasi – The First Kannada Capital Chapter III Monuments http://puratattva.in/2013/09/30/banavasi-2-2561
- Banavasi Wikipedia
- Kadamba-era pillar inscription in Gudnapur gets a roof Rajiv Ajjibal July 25, 2015.https://www.thehindu.com/news/national/karnataka/kadambaera-pillar-inscription-in-gudnapur-gets-a-roof/article7462793.ece
- Kadamba Temple, Gudnapura in Karnataka http://www.talkativeman.com/kadamba-temple-gudnapura/
பிங்குபாக்: பனவாசி மதுகேஸ்வரா கோவில்: கடம்பர்களின் அற்புதக் கலைப்படைப்பு – TamilBlogs
மதுகேஷ்வரா கோவில் மிகவும் பழமையாகக் காட்சி அளித்து, பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.
பிரமிட் வடிவ கோபுரம் – ஆம், தெரிகிறது. அதன் சக்தியை நம்மவர்களும் உணந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இந்த இடத்திற்குச் செல்லும் ஆவல் வருகிறது.
LikeLike
வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி ஐயா…
LikeLike
விடயங்கள் பிரமிக்க வைக்கிறது. கல்லில் செதுக்கிய கட்டில் எத்தனை அழகு.
நவீனம் தோன்றாத காலத்தில் கைகளால் மட்டுமே செதுக்கியது.
LikeLike
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி ஐயா..
LikeLike
தூண்களின் அமைப்பையும், கட்டுமானத்தின் சில வடிவத்தையும் பார்த்தபோது பேலூர், ஹலேபேட், சோம்நாத்பூர் நினைவிற்கு வந்தன.
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா…
LikeLike
கடம்ப மரத்தடியில் வீற்றிருக்கும் முருகக் கடவுள் – அப்படியான அமைவில் என்னூரிலும் கோவில் உண்டு.
அருமையான பதிவு
LikeLike
நன்றி
LikeLike
வரலாற்றின் மடியில் துயில்வது பேரின்பம்… வியப்பு..
LikeLike
தங்கள் மேலான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
LikeLike
அருமை
LikeLike
மிக்க நன்றி ஐயா
LikeLike