மண்ணெ பெங்களூரு ஊரகப் பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஆகும். ஒரு காலத்தில் இந்தக் கிராமம் மண்யபுர என்ற பெயருடன் மேலைக் கங்க வம்சத்தினரின் தலைநகரமாகத் திகழ்ந்தது. கி.பி. 350 ஆம் ஆண்டு தொடங்கிப் பத்தாம் நூற்றாண்டு வரை மேலைக் கங்க வம்சத்தினர் பண்டைய தென்-கர்னாடகத்தின் கணிசமான பகுதிகளை (மைசூர், ஹாசன் சாமராஜநகர், தும்கூர், கோலார், மாண்டியா மற்றும் பெங்களூரு பகுதிகளை) கங்கவாடி என்ற பெயரில் ஆண்டுவந்தனர். குவலாலபுரா என்றும் கோலாகலபுரா என்றும் அழைக்கப்பட்ட பண்டைய நகரம் இவர்களின் முதலாவது தலைநகரம் ஆகும். இஃது இன்றைய கோலார் நகராமாகும் (அமைவிடம் 13.13°N அட்சரேகை 78.13°E தீர்க்கரேகை). கோலார் தலைநகராக சுமார் 20 ஆண்டுகள்வரை இருந்துள்ளது. தொடர்ந்து சில காலம் மண்யபுர இவர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. இறுதியாக மைசூர் மாவட்டத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள தலக்காடு (அமைவிடம் 12.22°N அட்சரேகை 77.03°E தீர்க்கரேகை) இவர்களுடைய தலைநகரானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான தலைநகராக விளங்கிய மண்யபுர இன்று மண்ணெ என்ற பெயருடன் ஒரு குக்கிராமமாகச் சுருங்கிவிட்டது. மேலைக் கங்கர்களால் கட்டப்பட்ட பல்வேறு கோவில் கட்டமைப்புகள் இன்று முற்றிலும் சிதைந்து போதிய பராமரிப்பின்றி இடிபாடுகளுடன் காணப்படுவது வேதனைக்குரியது. மேலைக் கங்கர்களின் இந்தத் தலைநகரத்தைச் சரித்திரம் மறந்துவிட்டது.
மேலைக் கங்கர்களின் தலைநகரமும் நினைவுச் சின்னமும் ஆன மண்யபுர (English: Manyapura; Kannada: ಮಣ್ಯಪುರ) என்ற மண்ணெ (ஆங்கிலம்: Manne; கன்னடம்: ಮಣ್ಣೇ) கிராமம், கர்நாடக மாநிலம், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் (Rural district) நெலமங்களா வட்டம், பின் கோடு 562132 நகரத்தில் அமைந்துள்ளது. மண்ணெ கிராமம் ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆகும். தும்கூர், நெலமங்கலா, தபஸ்பேட், மகாடி, மதுகிரி ஆகியவை அருகிலுள்ள நகரங்களாகும். இதன் அமைவிடம் 13°5’14.71″N அட்சரேகை 77°24’39.62″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து உயரம் 875.25 மீ, (2871.57 அடி) ஆகும். மண்ணெயிலிருந்து 22 கி.மீ நெலமங்களா தொலைவிலும்; பெங்களூரு 48 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. நெலமங்களாவிலிருந்து மண்ணெவிற்குச் சாலை இணைப்பு உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி மண்ணெவின் மொத்த மக்கள் தொகை 1543 ஆகும். ஆண்கள் 751 பேர் மற்றும் பெண்கள் 792 பேர் 379 வீடுகளில் வசிக்கின்றனர். மண்ணெவின் நிலப்பரப்பு 454.31 ஹெக்டேர் ஆகும்.
வரலாறு
கங்கர் வம்சத்தவர் இரு பிரிவினராக அறியப்படுகிறார்கள். இவர்கள் மேலைக் கங்கர்கள் (Western Gangas) மற்றும் கீழைக் கங்கர்கள் (Eastern Gangas) ஆவர். மேலைக் கங்கர் வம்சம் சுமார் கி.பி. 350 இல் ஆட்சிக்கு வந்தது. பண்டைய கர்நாடக வரலாற்றில் மேலைக் கங்கர்கள் சிறப்பான இடம் பெற்றுள்ளனர். இப்பகுதியை கி.பி 350 முதல் கி.பி. 1000 வரை ஆட்சிசெய்துள்ளனர். மேலைக் கங்கப் பேரரசின் தன்னாட்சி கி.பி. 350 முதல் கி.பி. 550 ஆம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் இவர்கள் மேலைச் சாளுக்கியர்களுக்கும் இராஷ்ட்ரகூடர்களுக்கும் கட்டுப்பட்டுக் கீழமை அரசாக கி.பி. 1000 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தனர்.
கி.பி. நான்காம் நூற்றாண்டில் இவர்களின் முதல் தலைநகரம் குவலாலபுரா என்றும் கோலாகலபுரா என்றும் அழைக்கப்பட்ட இன்றைய கோலாரில் அமைந்திருந்தது. இவர்களின் கங்கவாடி 96,000 (Gangavadi 96,000) அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இன்றைய பெங்களூரு ஊரக மாவட்டம் (Bangalore Rural District) விளங்கியது. கங்கவாடிப் பகுதியில் 96,000 கிராமங்கள் இருந்தனவாம். சென்னப்பட்டணா தாலுக்காவில் அமைந்துள்ள ஹொங்கனுர் (Honganur) இந்த உட்பிரிவின் தலைமையிடமாகச் சிக்க கங்கவாடி என்ற பெயரில் புகழ்பெற்று விளங்கியது.
ஏழாம் நூற்றண்டில் மான்குந்த் (Mankund) முக்கிய நகராகவும் கங்க மன்னர்களான பூவிக்ரமா (கி.பி. 654-679) மற்றும் ஷிவமாறா (கி.பி. (679-726) ஆகியோரின் மாளிகையாகவும் விளங்கியது. இராஷ்ட்ரகூடர்கள் படியெடுப்புகாளால் கங்கர்களுக்கு பின்னடைவு ஏற்படவே, எட்டாம் நூற்றண்டில் கங்க மன்னர் ஸ்ரீ புருஷா (கி.பி. 726 – 788) மண்யபுரவில் தன் அரச மாளிகையை அமைத்துக் கொண்டார்.
பின்னர் இவர்களின் தலைநகரம் காவிரிக் கரையில் அமைந்திருந்த தலக்காட்டிலிருந்து (Talakad) மண்யபுரவிற்கு மாற்றப்பட்டது. மணலால் மூடப்பட்டு வரும் தலக்காடு மைசூர் மாவட்டத்தில் காவிரிக்கரையில் அமைந்துள்ளது. சுமார் 62 ஆண்டுக் காலத்திற்கு மேல் அரசாண்ட ஸ்ரீ புருஷா பாண்டியர்களிடம் கொங்கு தேசத்தை இழந்து அவர்களுடைய மேலாளுமையை (Overlordship) ஏற்றுக்கொண்டார். கி.பி. 731 ஆம் ஆண்டில் விலண்டே (Vilande) என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனைக் கொன்றார். இவர் காலத்தில் கங்கவாடியின் மீது இராஷ்ட்ரகூடர்களின் படையெடுப்பு அடிக்கடி நிகழ்ந்தது. நொளம்பவாடி நொளம்பர்கள் கங்கர்களின் மேலாளுமையை ஏற்றுக்கொண்டனர். இவர் “பெர்மானடி” என்ற விருதையும் பெற்றார். “நீதிமார்க்க பெர்மானடி” (English: Neethimarga Permanadi Inscription; Kannada: ನೀತಿಮಾರ್ಗ ಪೆರ್ಮಾನಡಿ ಶಾಸನ) என்ற கல்வெட்டும் கங்க அரசரால் பொறிக்கப்பட்டுள்ளது பற்றி இங்குக் குறிப்பிட்ட வேண்டும். ஸ்ரீ புருஷா சமஸ்கிருதத்தில் இயற்றிய நூலுக்கு “கஜசாஸ்த்ரா” என்பது தலைப்பாகும். காட்டு யானைகளைப் பழக்கும் கலை (taming of wild elephants) பற்றி இந்நூல் விவரிக்கிறது. ஸ்ரீ புருஷா “கொங்கிணி ராஜாதிராஜா பரமேஸ்வரா” போன்ற பல விருதுகளைப் பெற்றிருந்தார். கங்கவாடி ஸ்ரீ ராஜ்யம் என்ற பெயரையும் பெற்றிருந்தது.
இராஷ்ட்ரகூடர்கள் ஆட்சியில் மண்யபுர முக்கிய நகரமாக விளங்கியது. மண்ணெ என்ற மண்ணெகடகம் (Mannekadakam), கம்பரசா என்னும் இராஷ்ட்ரகூட ஆளுநரின் தலைமையகமாக விளங்கியதாகத் தமிழ் ஆவணங்கள் சான்றளிக்கின்றன. இம்மாவட்டதின் கிழக்குப் பகுதியை நொளம்பா – பல்லவர்கள் சில காலம் கைப்பற்றி வைத்திருந்தனர்.
மேலை கங்கர் வம்சம் தென் கர்நாடகாவின் கணிசமான பகுதிகளை கி.பி. 350 முதல் பத்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை ஆட்சி செய்தது. கி.பி. நாலாம் நூற்றாண்டுக்கு முந்தைய மேலைக் கங்கர்களின் குலமரபு பெருமளவில் புனைவுகளிலும் (legends) மற்றும் பழங்கதைகளிலும் மறைந்துள்ளன. கன்னட மொழியில் இயற்றப்பட்டுள்ள சவுண்டராயபுராணம், பிராகிருத மொழியில் இயற்றப்பட்டுள்ள லோகவிபாகா, மைசூரு, பெங்களூரு, கோலார் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் (சீமந்தரா) கிடைத்த பல கல்வெட்டுகள் மேலைக் கங்கர்களுடைய வரலாறைத் தெளிவுபடுத்துகின்றன. சில சமயங்களில் தனிப் பேரரசாகவும் (independent monarch), மற்ற சமயங்களில் பாதாமி சாளுக்கியர்கள் (Badami Chalukyas), மான்யகேதா இராஷ்ட்ரகூடர்கள் (Rashtrakutas of Manyakheta) போன்ற பேரரசுகளுக்குக் கட்டுப்பட்ட கீழமை அரசாகவும் (subordinate state) விளங்கிய மேலைக் கங்கர்கள், ஆட்சி அமைப்பு (Polity), பண்பாடு (culture) மற்றும் இலக்கிய மேம்பாட்டிற்கு மிக முக்கியமான பங்காற்றியுள்ளார்கள். இவர்கள் கன்னடம் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கு அளித்த ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்தது. புகழ்பெற்ற ஒற்றைக்கல் சிலையான கோமேதேஷ்வர், தென் கர்நாடகத்தின் இந்துக் கோவில்கள், ஷ்ராவனபெளகொளா மற்றும் கம்பனஹள்ளி போன்ற இடங்களில் உள்ள சமணப் ப³ஸதி³கள் (Jain Basadis) போன்றவை கங்கர்கள் கட்டடக்கலையில் படைத்த சாதனைகளைப் பறைசாற்றுவனவாகும்.
(Manne, once the seat of dynastic power, lies in shambles in our backyard By Chetan R, Bangalore Mirror Bureau, June 8, 2015)
மேலைக் கங்கர்களின் கட்டடக்கலை
மண்ணெ கிராமத்திற்குள் நீங்கள் நுழையும்போது கன்னட மொழியில் எழுதப்பட்ட ஒரு வளைவு (Arch) நிறுவப்பட்டு அந்த வளைந்த பலகையில் “கங்கர்களின் பழைய தலைநகரான மண்யபுரவிற்கு வரவேற்பு” (” Welcome to the Capital of the Gangas – Manyapura “) என்று பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

மண்ணெ வரவேற்பு வளைவு PC: நவீன் தேவ் மண்ணெ
இந்தக் கிராமத்தில் கங்கர்களால் கட்டப்பட்ட பல கோவில்கள் அமைந்துள்ளன. இங்குள்ள சோமேஷ்வரா மற்றும் கபிலேஷ்வரா கோவில்கள் மணற்கற்களால் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளரான பி.எல்.ரைஸ் (B L Rice) உள்ளிட்ட பல வரலாற்று ஆய்வாளர்கள் இவ்வூரின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளனர்.
மண்ணெயில் உள்ள நீர் வற்றிப்போன சிக்கக் கேரே ஏரிக்கரைக்கு (English: Chikka kere bund; Kannada: ಚಿಕಾ ಕೆರೆ ಬಂಡ್) அருகில் உள்ள அழகிய சப்த மாதர்கள் (கன்னிமார்) சிற்பங்கள் காணப்படுகின்றன.

சப்தமாதர் சிலைகள் PC: தாமஸ் அலெக்சாண்டர்
வரவேற்பு வளைவிலிருந்து ஒரு கி.மீ. பயணித்தால் சிக்கக் கேரே ஏரிக்கரையில் (Chikka kere bund) அமைந்துள்ள கபிலேஷ்வரா கோவிலைக் காணலாம். சாலையை ஒட்டி அமைந்துள்ள கபிலேஸ்வரா கோவில், மேலைக் கங்கர்கள் இப்பகுதியை ஆண்டபோது கட்டப்பட்டதாகும். இக்கோவில் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிதைந்த நிலையிலும் இக்கோவில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
உயரமான அடித்தளம் (plinth) கொண்டு அமைக்கப்பட்ட இக்கோவிலின் நுழைவாயிலில் கம்பீரமாக நின்ற நிலையில் காணப்படும் ஆளுயர துவாரபாலகர்களைக் காணலாம். துவார என்பது “வாயில்” என்றும், பால என்பது “காப்போன்” என்றும் பொருள்படும். சண்டன், பிரசண்டன் என்ற அசுரர்கள், சிவனின் அருள்பெற்று இந்தப் பதவியை அடைந்தனர். இவர்கள் சிவனுடைய ஆயுதங்களைத் தாங்கிய சிவ-துவாரபாலகர்கள் ஆவர். நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர்கள் ஒரு காலைத் தரையில் ஊன்றியும் மற்றொரு காலை ஸ்வஸ்திக வடிவில் தூக்கியவாறு நின்ற நிலையில் காட்சி தருகிறார்கள். பாம்பு சுற்றிய தடியை துவரபாலகரின் கை பற்றியுள்ளது. தலையில் ஜடாபாரம், இடையில் ஆடை மற்றும் இடுப்புப் பட்டை அணிந்துள்ளார். கனத்த இடுப்பு ஆபரணங்கள், உபவீதமாக யஞ்யோபவிதம், உதரபந்தம், சரப்பளி, கைவளை, தோள்வளை, பத்ரகுண்டலம், வலது கை விரலில் மோதிரம் எல்லாம் அணிந்துள்ளார்.
நுழைவாயிலுள்ள கதவு நிலையில் (Door jamb) காணப்படும் நுண்ணிய வேலைப்பாடுகளைக் கங்கர்களின் கலைப்பாணி என்று குறிப்பிடலாம். துவாரபாலகர்களைத் தவிர இக்கோவிலில் எங்கு தேடினாலும் ஒரு சிலையைக்கூடக் காணமுடியவில்லை. பழமைமிக்க இக்கோவிலில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட மேலைக் கங்கர்பாணித் தூண்களுடன் கூடிய மண்டபம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இரு பக்கமும் கல்லால் அழகுறச் செதுக்கப்பட்ட பலகணித் (Jali = ஜாலி) தொகுப்பின் கொள்ளை கொள்ளும் அழகு பற்றி நிறையப் பேசலாம்.

கபிலேஷ்வரா கோவில் PC: தாமஸ் அலெக்சாண்டர்

கபிலேஷ்வரா கோவில் PC: தாமஸ் அலெக்சாண்டர்

கபிலேஷ்வரா கோவில் PC: தாமஸ் அலெக்சாண்டர்

துவாரபாலகர், கபிலேஷ்வரா கோவில் PC: தாமஸ் அலெக்சாண்டர்

பலகணி, கபிலேஷ்வரா கோவில் PC: தாமஸ் அலெக்சாண்டர்

பின்புறத் தோற்றம், கபிலேஷ்வரா கோவில் PC: தாமஸ் அலெக்சாண்டர்
நந்தி கோவில்
சாலையின் மறுபுறத்தில் புதர்களுக்கிடையே நந்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய கற்கோவிலைக் காணலாம். இக்கோவிலை அடையச் சற்று மேடு ஏறினால் புதர் மண்டிய கோவில் நுழைவாயில் தென்படுகிறது. மூன்று புறமும் சுவர் எழுப்பிக் கிழக்குப் பக்க நுழை வாயிலில் தலை உடைந்த நந்தி சிலையைக் காணலாம். இருபுறமும் வாயில்களுடன் கூடிய இக்கோவில் பழுது பார்த்துப் புதுப்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.

வழிபட்டிலுள்ள பண்டைய சிவாலயம் PC: Thomas Alexandar
சோமேஷ்வரா கோவில் சாலையின் இடப்புறம் அமைந்துள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நேர்த்தியான இந்தக் கற்கோவில் கங்கர்கள் காலத்தில் மிக மேன்மையுடன் சிறப்புற்று இருந்திருக்க வேண்டும் என்பதைக் கோவிலின் கட்டமைப்பு சுட்டிக் காட்டுகிறது. சிவலிங்கத்தின் மேல் பெய்த திருமுழுக்காட்டு நீர் வெளியே செல்ல நீர்த்தாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து வருவது கண்கூடு. நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட தூண்கள், நுணுக்க வேலைப்பாடுகளுடன் அமைந்த பத்திகள் எல்லாம் கங்கர்களின் கட்டடக்கலையைப் பறைசாற்றுகின்றன. கி.பி. 9 – 10 ஆம் நூற்றண்டில் மண்யபுரவில் சோமேஸ்வரா கோவில் சிறப்புற்று விளங்கியது.
மண்ணெயில் “மண்ணெம்மா கோவில்” ஒரு முக்கியக் கோவிலாகும். பெங்களூரூவின் கிராமதேவதையான அன்னம்மா, மண்ணெம்மாவின் சகோதரி என்று சொல்கிறார்கள்.

ஸ்ரீ விஜய ப³ஸதி³ (சூளே குடி) அழிவின் விளிம்பில் PC: தாமஸ் அலெக்சாண்டர்
தாமஸ் அலெக்சாண்டர் புகைப்படங்கள்: நன்றி
இந்து சமயக் கோவில்கள் தவிர இங்குள்ள சுவாரஸ்யம் மிக்க கட்டுமானத்தைச் சூளே குடி என்று அழைக்கிறார்கள். சூளே குடி என்றால் இது தேவதாசியால் கட்டப்பட்ட கோவில் என்று கன்னடத்தில் விளக்கம் சொல்கிறார்கள். இது ஒரு சமணப் ப³ஸதி³ (Jain Basadi = சமணக் கோவில்) ஆகும்.
பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொல்லியல் ஆர்வலரான திரு.தாமஸ் அலெக்சாண்டர் அவர்கள் கங்கர்கள், சோழர்கள் மற்றும் ஹோய்சாளர்கள் மற்றும் தென்னகம், ஸ்ரீ லங்கா, பாங்காக் நாடுகளில் சமணத்தின் செல்வாக்குப் பற்றியெல்லாம் 2010 ஆம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகிறார். இந்தச் சமணப் ப³ஸதி³யைத் தேடி வந்து இங்குள்ள மக்களிடம் திரு.தாமஸ் அலெக்சாண்டர் கேட்டபோது இவர்களுக்கு இதுபற்றித் தெரியவில்லை. மாறாக அங்குள்ள கட்டுமானத்தைச் சூளே குடி (தமிழ்: தேவதாசி கோவில்) என்றும் சொல்லியுள்ளார்கள். அலெக்சாண்டர் தேடிச்சென்ற இந்தச் சமணக் கட்டுமானத்தை இன்று சூளே குடி என்று அறியப்படுவது வேதனைக்குரிய செய்தியாகும். மேலைக் கங்கர்களின் தலைநகரிலுள்ள கோவில்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாத காரணத்தாலேயே இவை புறக்கப்பட்டுள்ளன என்பது தாமஸ் அலெக்சாண்டரின் கருத்து.
இந்தப் ப³ஸதி³யை அழகிய 17 தூண்கள் தாங்குகின்றன. மற்ற ப³ஸதி³களிலிருந்து இந்த ஸ்ரீ விஜயா ப³ஸதி³யின் கட்டுமானம் மாறுபட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். . இது சில காலத்திற்கு முன்பு மாட்டுத் தொழுவமாகப் பயன்படுத்தப்பட்டது என்பது வேதனைக்குரிய செய்தியாகும். இதன் உயர்ந்த கூரை குறைந்தபட்சம் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குறையுடைய / சரிந்த கூரையின் அடிப்படையில் இந்த ப³ஸதி³ மிகப்பெரிய கட்டுமானமாக விளங்கியிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. ப³ஸதி³யின் கூரையில் தரனேந்திர யக்சன் மற்றும் பத்மாவதி யக்ஷியின் புடைப்புச் சிற்பங்களை ஒருங்கே காணமுடிகிறது. பத்மாவதியும் அம்பிகாவும் சமணச் சமயத்தின் இயக்கிகளாகக் கட்டப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த அறிகுறியாகும். இந்த மண்டபம் இடிந்து, நிலைகுலைந்து, அழிந்து வருவது பரிதாபத்திற்குரியது. ஒவ்வொரு தூணையும் ஆய்வு செய்வது அவசியம். இன்று இவை மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
மண்ணெவில் உள்ள மரபுசார் கட்டமைப்புகளில் ஒன்று கி.பி. எட்டாம் நூற்றாண்டு காலத்திய சமணச் சமய பெயர் விளக்கப் பொறிப்பு (imprint) பெற்றுள்ளது. இந்தச் சமயத்தில்தான் மேலைக் கங்கர்கள் சென்னபட்னா வட்டத்தில் அமைந்திருந்த தங்கள் வசிப்பிடமும் தலைநகருமான மகுந்தாவை (Makunda) மண்யபுரவிற்கு மாற்றியுள்ளனர்.
சமணத் தீர்தங்கர் ஒருவரின் தலை ஒன்று ஸ்ரீ விஜய ப³ஸதி³யில் ஆகழ்வாய்வு நிகழ்த்தியபோது கண்டறியப்பட்டது. இந்தத் தலை மண்ணெ அரசு உயர்நிலைப் பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளரான பி.எல்.ரைஸ் (B L Rice) என்பவர் ஒரு செப்பேட்டின் அடிப்படையில் இந்தப் ப³ஸதி³யை உருவாக்கியவர் கங்கர் படைதலைவரான ஸ்ரீ விஜயா என்று குறிப்பிடுகிறார். இச்செப்பேடு மாண்யநகரா என்னும் மண்யபுரவில் ஸ்ரீ விஜயா இந்த ஜீனக் கோவிலைக் கட்டியதாகச் சொல்கிறது. கங்க மன்னன் ஸ்ரீ புருஷா இக்கோவிலைக் கட்டுவதற்கு க்ரு-வேக்குர் (Kru-Vekkur) (இதன் தற்போதைய பெயர் மண்ணெயிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குருவெல்லூரு கிராமம் ஆகும்) என்ற கிராமத்தை படைத்தலைவர் ஸ்ரீ விஜயாவிற்குக் கொடையாக வழங்கியதாகச் சொல்கிறது. இக்கோவிலின் மதகுரு, சமணக் கணங்களுக்குத் தலைமை ஏற்ற புஷ்பனந்தியின் சீடரான பிரபச்சந்த்ரா ஆவார். செப்பேட்டுத் தகடுகளில் (Plates) பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மண்ணெயிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பொறித்தவர் விஸ்வகர்மாச்சாரியா (Visvakarmmacharyya) என்னும் அரசு பொறிப்பாளர் (Royal Engraver) ஆவார். இந்த செப்பேட்டுக் கல்வெட்டின் காலம் கி.பி. 797 ஆகும்.
மேலைக் கங்கர்களின் தலைநகரம் என்ற சிறப்பைப் பெற்ற இந்த மிகச் சிறிய கிராமம் தன் வரலாற்றின் சுவடுகளைச் சிறிது சிறிதாக இழந்து வருகிறது. பரபரப்பான தலைநகரமாக விளங்கிய மண்யபுரவில் புகழ்பெற்றுத் திகழ்ந்த சோமேஸ்வரா கோவில் இன்று பாழ்பட்டுக் காணப்படுகிறது. அழிவின் விளிம்பில் நிற்கும் இக்கோவிலும் இக்கிராமத்திலுள்ள மற்ற கோவில்களும் கல்வெட்டுகளும் கர்நாடக அரசின் மாநில நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறையின் கவனம் வேண்டி நிற்பது வேதனைக்குரிய செய்தி. சம்பந்தப்பட்டவர்கள் உடனே விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மரபுசார் ஆர்வலர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
தனித்தன்மை வாய்ந்த ஸ்ரீ விஜய ப³ஸதி³ அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த ப³ஸதி³யில் வைக்கோல், விறகு போன்றவற்றைச் சேமித்து வைக்கவும் மாட்டுத் தொழுவமாகவும் பயன்பட்டுள்ளது. இந்தப் ப³ஸதி³யை கவனித்துக் காப்பாற்ற யாருமேயில்லை. இது விரைவில் இடிந்து விழவும்கூடும். இப்படிப்பட்ட அரிய சமணப் ப³ஸதி³க் கட்டுமானத்தை நாம் இழக்கும் தருவாயில் உள்ளோம் என்பது வருத்தத்திற்கு உரியது.
இன்றைய தினம் மண்ணெ சிதைந்தும், புறக்கணிக்கப்பட்டும், மறந்துபோன ஒரு கிராமம் ஆகும். குடியிருப்பு வளாகங்களுடனும், தொழிற்துறை மையங்களுடனும் பெருகிவரும் இந்த கிராமம் தற்போது ஒரு ரியல் எஸ்டேட் மையமாகவும் மாறி வருகிறது.
மண்ணெ செல்ல …
இவ்வூருக்குச் செல்ல நேரடியாக பஸ் வசதி இல்லை. கே.எஸ்.ஆர்.டி.சி. எண் 258 பெங்களூரு மெஜஸ்டிக்கிலிருந்து தியாமகொன்ட்லு (Kannada: ಥೈಮಾಗೋಂಡ್ಲು) வரை சென்று வருகிறது. தியாமகொன்ட்லுவிலிருந்து ஆட்டோரிக்ஷா கிடைக்கும். இரயிலில் செல்வதற்கு பெங்களூரு சிட்டி ஜங்ஷனிலிருந்து முத்தலிங்கனஹள்ளி ஸ்டேஷன் வரை செல்லலாம். முத்தலிங்கனஹள்ளியிலிருந்து மண்ணெ 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தனியார் வாகனத்தில் செல்ல பெங்களூருவிலிருந்து தும்கூர் (என்.எச். 4) வழியாக போனால் நெலமங்களாவை அடையலாம். டி.பேகுருக்கு எதிரில் இடப்புறமாகத் திரும்பிச் சென்றால் தியாமகொன்ட்லு வழியாக சென்றால் முத்தலிங்கனஹள்ளி இரயில் நிலையம். இங்கிருந்து மண்ணெ 3 கி.மீ. தொலைவில் உள்ளது. மண்ணெ நல்ல தங்கும் விடுதியோ உணவகங்களோ இல்லை. உங்கள் உணவை கையோடு கொண்டு செல்வது நல்லது.
குறிப்புநூற்பட்டி
- Epigraphia Carnatica – Vol. IX (1905), Page No. 3, Nelamangala, Copper Plate Inscription No. 60.
- Kapilesvara temple – Manyapura Thomas Alexander https://www.facebook.com/thomas.alexander.948/posts/815527718520655
- Manne. Onefivenine. http://www.onefivenine.com/india/villages/Bangalore-Rural/Nelamangala/Manne
- Manne, once the seat of dynastic power, lies in shambles in our backyard By Chetan R, Bangalore Mirror Bureau, June 8, 2015
- Manne’s Ancient Jain Ruins https://www.jainheritagecentres.com/mannes-ancient-jain-ruins/
- Manne’s Jain temple ruins Thomas Alexander https://www.facebook.com/photo.phpfbid=815811561825604&set=a.495328787207218.1073741844.100001903047895&type=3&theater
- Manyapura or ‘Manne! By naveenamohanrao. Gallery Oct 06, 2012
- Off beat places to visit – Karnataka Naveenamohanrao. India Mike Oct 25th, 2011.
- The lost capital of the Gangas 28 January 2013 http://ramubangalore.blogspot.com/2013/01/the-lost-capital-of-gangas.html
பிங்குபாக்: மாண்யபுரா என்ற மண்ணே: அழிவின் விளிம்பில் மேலைக் கங்கர்களின் தலைநகரம் – TamilBlogs
படங்களுடன் அருமையான தகவல்
பாராட்டுகள்
LikeLike
கருத்திற்கு மிக்க நன்றி ஐயா..
LikeLike
அருமை
LikeLike
வணக்கம் சகோதரரே
சிறு வயதில் படித்ததை நினைவு படுத்தியமைக்கு மிகவும் நன்றி. சரித்திர கால வரலாற்றைச் சொல்லும் அருமையான பதிவு. மிகவும் ரசித்துப் படித்து தெரிந்து கொண்டேன். மேலை கங்கர்களின் ஆட்சி முறையைப்பற்றியும், அவர்களின் கட்டிடக் கலை, சிற்ப நுணுக்கங்கள் பற்றி விவரித்தமைக்கு மிக்க நன்றி. மிகவும் அழகாக, அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி…
LikeLike