பென்னேஸ்வர மடம் கல்வெட்டுக் குறிப்பிடும் ‘மாதரசன்பட்டணம்’ எனும் மதராசப்பட்டணம் 651 ஆண்டுகள் பழைமையானதா?

பென்னேஸ்வர மடம் கிராமம் பெண்ணையாற்றங்கரையில் உள்ள பெரிய பாறையின் சரிவில் விஜயநகரப் பேரரசின் மன்னன் கம்பண உடையர், தம் ஆட்சியாண்டு சகம்  1291 ஆம் ஆண்டுப் பிலவங்க வருஷம் பூர்வபட்சம் ரோகிணி நட்சத்திரத்திற்கு நிகரான வரலாற்று ஆண்டு    1367 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று பொறித்த கல்வெட்டில் மாதரசன்பட்டணம் (‘Maadarasanpattanam’) (சென்னை) குறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வரிகளில் அமைந்த இக்கல்வெட்டுத் தமிழ் மொழியில் தமிழ் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தானைத் தலைவனான சோமப்ப தெண்ணாயக்கர் மகன் கூளிமாராய நாயக்கர் கண்ட வெற்றிகளைத் தொகுத்துச் சொல்லும் இந்தக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மாதரசன்பட்டணம் பற்றிய பதிவின்படி 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று மதராசப்பட்டணம் (சென்னை) நகரின் வயது 651 ஆண்டுகள் என்று நிச்சயமாகக் கூறுகிறார் முனைவர் எஸ்.இராஜவேலு. சென்னை வரலாற்று ஆசிரியர்களின் (Chennai Historians) கணிப்பின்படி சென்னையின் வயது 379 ஆண்டுகள் என்பது தவறான சித்தரிப்பு என்றும் இராஜவேலு கருதுகிறார். இந்தக் கணிப்பு புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஒருவேளை பொருந்தலாம். 

பென்னேஸ்வர மடம் பறைக்கல்வெட்டு PC: சோழன்
@thiruneeru 

பென்னேஸ்வரமடத்தின் அமைவிடம் 13° 5′ 38.0382” N அட்சரேகை 80° 17′ 32.4816” E  தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 533 மீ. (1748.6 அடி) ஆகும்.  இவ்வூர் காவேரிப்பட்டிணத்திற்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவிலும்; கிருஷ்ணகிரிக்குத் தெற்கே 21 கி.மீ. தொலைவிலும்; தர்மபுரியிலிருந்து 43 கி.மீ. தொலைவிலும்; சேலத்திலிருந்து 104 கி.மீ. தொலைவிலும்; பெங்களூருவிலிருந்து 109 கி.மீ. தொலைவிலும்; கோயம்புத்தூரிலிருந்து 265 கி.மீ. தொலைவிலும்; சென்னையிலிருந்து 268 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் பங்காரபேட் இரயில் நிலையம் 82 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள பெங்களூரு, கெம்பகவுடா பன்னாட்டு விமான நிலையம் 140 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 2686 (ஆண் 1352 பெண் 1334); மொத்த வீடுகள் 663 ஆகும்.

இந்தக் கல்வெட்டை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் படியெடுத்து ஆய்வு செய்து பதிவு எண் 77B/ 1973 உடன் கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2007 என்ற நூலில்   116 -118 ஆம் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தக் கல்வெட்டு 77B / 1973 எண்,  77A / 197எண் கல்வெட்டுடன் தொடர்புள்ளது. தமிழகத் தொல்லியல் கழகத்தின் 26-வது கருத்தரங்கம் காவேரிப்பட்டணத்தில் நடந்த சமயம் முனைவர் எஸ்.ராஜவேல் மற்றும் முனைவர் ஒய். சுப்பராயலு ஆகியோர் இக்கல்வெட்டினை மீண்டும் படியெடுத்து மீளாய்வு செய்துள்ளனர். தொடர்ந்து இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறைக்காக விஜயநகரப் பேரரசின் கல்வெட்டுக்களை இந்தத் தொல்லியல் ஆய்வறிஞர்கள் தொகுத்து Inscriptions of the Vijayanagara Rulers (“விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள்”) Volume V, Part I (Tamil Inscriptions) என்ற தலைப்பிட்டு இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றம் (Indian Council of Historical Research (ICHR), Southern Region Centre, Bangalore மூலம் வெளியிட்டனர். இவர்களது இந்த  நூலில்  கல்வெட்டு ஆய்வு குறித்த செய்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

image

இக்கல்வெட்டு விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் வீர கம்பண உடையார் (Vira-Kampana-Udaiyar) என்னும் இரண்டாம் குமார கம்பண்ணா (Kumara Kampanna II) முளபா³கி³லு (English: Mulabagilu (ಮುಳಬಾಗಿಲು) மண்டலேஸ்வரனாக (ஆளுநராக) இருந்து ஆண்டுவந்த போது பென்னேஸ்வர மடம் கிராமத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இவர் சங்கம வம்சத்தைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசர் முதலாம் புக்க இராயரின் (Bukka Raya I) ((ஆட்சியாண்டு கி.பி. 1356–1377) இரண்டாவது மகன் ஆவார்.

வீர கம்பண உடையாரின் பட்டத்தரசியே கங்காதேவி ஆவார். மதுராவிஜயம் (Madura Vijaya) (மதுரையின் வெற்றி ‘The Conquest of Madurai’) அல்லது வீர கம்பராயச் சரிதம் (‘Vira Kamparaya Charitha’) என்னும் தலைப்பில் கங்காதேவி இயற்றிய சம்ஸ்கிருத வரலாற்றுக் காவியம்  (Sanskrit historical poem) ஆகும். மதுரை சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தவர் கம்பண உடையார் ஆவார். இவர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து மதுரை சுல்தானகத்தை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றுவதை இந்நூல் விவரிக்கிறது.

இந்தக் குறிப்பில் மாதரசன்பட்டணம் 1367 ஆம் ஆண்டிற்கு முன்பே ஒரு துறைமுகமாக விளங்கியுள்ளது. பின்னாளில் ஆங்கிலேயரால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்படுவதற்கு முன்பே, நகருக்கு வடக்கே இஃது அமைந்திருந்தது என்று  இந்த வரலாற்றாய்வாளர்கள் கருதி வந்துள்ளார்கள். கம்பணரின் கல்வெட்டு இவர்களது கருத்திற்குச் சான்றாகவும் ஆதரவாகவும்  அமைந்துள்ளது.

விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இருந்து இப் பகுதியை ஆட்சி செய்த தாமர்ல வெங்கடாத்திரி நாயக்கர், சந்திரகிரிக் கோட்டை இராஜா மகால் தர்பார் மண்டபத்தில் இருந்து,  கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தன் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று சதுரமைல்  பரப்பளவுள்ள ஒரு நிலத்துண்டினை வர்த்தகத்திற்காகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதியான ஃபிரான்சிஸ் டே (Francis Day) (கி.பி.1605–1673) க்கு சட்டப்படி குத்தகைக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி சென்னை நகரத்தின் நிறுவன நாளாகக் கருதப்பட்டு 2004 ஆம் ஆண்டு முதல் சென்னை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. “சென்னையின் வரலாற்றாசிரியர்கள் என அழைக்கப்படுபவர்கள், சென்னை நகரம் ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்டது என்ற தவறான கருத்தைச் சித்தரிக்க முயன்று வருகிறார்கள் என்பது முனைவர்.எஸ்.இராஜவேலுவின் கருத்தாகும் .

இந்தக் கல்வெட்டின்படி, ஆங்கிலேயர்கள் சென்னைக்கு வருவதற்குப் பல நூற்றண்டுகளுக்கு முன்பே, அதாவது விஜயநகரப் பேரரசின் காலத்திலேயோ அல்லது அதற்கும் முன்போ, இந்த மாதரசன்பட்டணம் துறைமுகம் இருந்துள்ளது. சென்னை மற்றும் இதன் சுற்றுப் பகுதிகளில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் இப்பகுதி வளம் கொழிக்கும் வணிகத் துறைமுகமாக விளங்கியுள்ளது (flourishing trade port) பற்றியும் சான்று பகர்கின்றன” என்றும் முனைவர் எஸ்.இராஜவேலு கருதுகிறார். எனவே சென்னை வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பில் சென்னையின் வயது 379 ஆண்டுகள் ஆகும். பென்னேஸ்வரமடம் கம்பணர் கல்வெட்டின்படி மாதரசன்பட்டணம் என்னும் மதராசப்பட்டணத்திற்கு (இன்றைய சென்னைக்கு) வயது 651 ஆண்டுகள் ஆகும்.

dr..s.rajavelu on inscription க்கான பட முடிவு

Dr.S.Rajavelu PC: Nirappirikai

 

 

இக்கல்வெட்டு பற்றி முனைவர் எஸ்.இராஜவேலு பல சுவையான தகவல்களை வழங்கியுள்ளார். கம்பண்ண உடையார் பல வெற்றிகளைப் பெறக் காரணமாக இருந்தவர் இவரது தளபதியும் நாயக்கர் மகாபிரதாணியுமான  சோமப்ப தண்டநாயக்கரின் (Somayappa-dandanayakkar) மகன் தண்ட கூளிமாராய நாயக்கர் (Maraya-naayakkar)  ஆவார். முளபா³கி³லு ஆளுநர் குமாரகம்பண்ண உடையாரின் படைத்தளபதி கூளிமாரய நாயக்கரின் வீரதீரச் செயல்களை விளக்குவதற்கும், கண்டர் வெளி பெருவாய்க்கால் என்னும் வாய்க்காலை வெட்டியதற்காகவும் 31 வரிகளில்  பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் 16 மற்றும் 17 ஆம் வரிகளில் குறிப்பிடப்படும்:

 “…ரானபட்டணம், புதுப்பட்டணம், மாதரசன் பட்டணம் சத்திக்குவரிய …பட்டணம், நீலாங்கரையான்பட்டணம், கோவளம் (வரி 16)

மற்றுள்ள பல பட்டணங்களும், கரையும், துறையும் உட்படக் கொண்டு இராசாவின் கைய்யிலே காட்டிக்குடுத்து இராசபதமாந தாந’’ (வரி 17)

சந்திராணபட்டணம் (இன்றைய சதுரங்கபட்டணம் எனும் சத்ராஸ் (Sadras). டச்சுக் கோட்டை ஒன்று இங்குள்ளது. அமைவிடம் 12°31′30″N அட்சரேகை 80°9′44″E தீர்க்கரேகை), புதுப்பட்டணம் (இன்று இதே பெயருடன் கல்பாக்கம் அருகே உள்ளது அமைவிடம் 12° 30′ 6.8328” அட்சரேகை N 80° 8′ 56.2992” E தீர்க்கரேகை), மாதரசன் பட்டணம் (மதராசபட்டணம் என்ற மதராஸ்) நீலாங்கரையான்பட்டணம் (இன்றைய நீலாங்கரை அமைவிடம் 12° 56′ 57.4152” N அட்சரேகை 80° 15′ 18.0468” E தீர்க்கரேகை), கோவளம் (அமைவிடம் 12°47’13.21″N அட்சரேகை 80°15’1.6″E தீர்க்கரேகை)  போன்ற துறைமுகங்கள் கூளிமாரய நாயக்கரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நீலாங்கரையன் என்பவன் சோழர் காலத்த்தில் குறுநில மன்னனாக இருந்துள்ளான். இவன் சென்னையைச் சுற்றியுள்ள கோவில்களுக்குக் கொடையளித்துள்ளான். கூளிமாரய நாயக்கர் பெண்ணையாற்றில் கண்டர் வெளி பெருவாய்க்கால் என்னும் வாய்க்காலை பெண்ணையாற்றுக்கும் பெண்ணைநாயினார் கோவிலுக்கும் இடையே வெட்டியுள்ளதை முன்னிட்டும் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறிப்பிடுகிறது.

இந்தக் கல்வெட்டு கூறும் மாதரசன்பட்டணம் துறைமுகம் சென்னை இராயபுரம் அருகே செயல்பட்டிருக்க வேண்டும் என்பது இராஜவேலு கருத்து. இராய என்ற பின்னொட்டு விஜயநகர அரசர்களைக் குறிப்பதாக இவர் எண்ணுகிறார்.

மாதரசன்பட்டணம் என்ற சொல் மதராசபட்டணம் என்று மருவி மென்மேலும் சிதைவுற்று முடிவில் மெட்ராஸ் என்று வழங்கலாயிற்று. இந்த அடிப்படையில் மாதரசன்பட்டணம் என்பது இன்றைய சென்னைப் பெருநகரை உள்ளடக்கியிருந்தது. எனவே இன்றைய சென்னை மாநகரின் வயது 379 ஆண்டுகள் அல்ல மாறாக மாதரசன்பட்டணத்தின் வயது 651 ஆண்டுகள் ஆகும் என்பது இக்கல்வெட்டு மூலம் அறியப்படும் செய்தியாகும்.

குறிப்புநூற்பட்டி

 1. கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள். தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை. 2007. பக்: 116  – 118.
 2. பழமையான நகரம் ‘மாதரசன்பட்டணம்’ எனும் சென்னை: 651 வயதைக் கடந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தகவல் தமிழ் இந்து 26 Jul 2018 https://tamil.thehindu.com/tamilnadu/article24517746.ece
 3. நம் சென்னை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமையுடைய நகரம் என்பது தெரியுமா? ரங்கராஜ் ஜூலை 22, 2018 https://inmathi.com/2018/07/22/8228/?lang=ta
 4. மாதரசன் பட்டணம், சதிரானபட்டணம், புதுப்பட்டணம், நீலகங்கரையன் பட்டணம் – இதெல்லாம் எங்கே இருக்கு? இரா.செந்தில் குமார் 07/09/2017 https://www.vikatan.com/news/coverstory/101592-the-oldest-name-of-the-places-in-chennai-city.html
 5. Madras is not alien. Suganthy Krishnamachari The Hindu August 21, 2014 https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/madras-is-not-alien/article6338551.ece

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in சென்னை, தொல்லியல், வரலாறு, விழாக்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

13 Responses to பென்னேஸ்வர மடம் கல்வெட்டுக் குறிப்பிடும் ‘மாதரசன்பட்டணம்’ எனும் மதராசப்பட்டணம் 651 ஆண்டுகள் பழைமையானதா?

 1. ஸ்ரீராம் சொல்கிறார்:

  மிகவும் சுவாரஸ்யமான கட்டுரை. மாதராசன் பட்டணத்தின் வயது பற்றிய தகவல்களும் சுவாரஸ்யம். ஏன் இந்த வரலாற்றுக்கு குறிப்பை அதிகாரபூர்வமாக ஏற்க மறுக்கிறார்கள்? எத்தனை சான்றுகள்?

  மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை ஏகப்பட்ட புள்ளி விவரங்களுடன் தருகிறீர்கள். அருமை.

  Like

 2. பிங்குபாக்: பென்னேஸ்வர மடம் கல்வெட்டுக் குறிப்பிடும் ‘மாதரசன்பட்டணம்’ எனும் மதராசப்பட்டணம் 651 ஆண்டுகள் ப

 3. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  அருமையான ஆய்வுக் கட்டுரை ஐயா
  நன்றி

  Like

 4. ச.பிந்துசாரன். சொல்கிறார்:

  நாம் வரலாறு இழந்த இனமாக உள்ளோம்என் மனதில் எழுந்த வினாவிற்கு விடை கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. மாதரசன் – மதராச- மதராஸ் – மெட்ராஸ் என மருவியது என்பதை நன்கு உணரமுடிகின்றது.

  Like

 5. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  ஆர்வத்தைத் தூண்டும் தகவல். நிறைந்த விளக்கங்களுடன் அருமையான இடுகை. பாராட்டுகள். அந்தக் கல்வெட்டின் படியையும் (கல்வெட்டையே) போட்டிருக்கலாம். இதைத் தொடர்ந்தே பல ஆராய்ச்சிகளையும் செய்யமுடியும்.

  முனைவர் ராஜவேலு அவர்களின் உழைப்பு தெரிகிறது.

  Like

 6. yarlpavanan சொல்கிறார்:

  பயன்மிக்க ஆய்வுக்கட்டுரை

  Like

 7. Ramesh R சொல்கிறார்:

  அருமையான கட்டுரை. மதராஸ் பொருத்தமான பெயர்தான் என்பது புரிகிறது. பகிர்ந்ததற்க்கு நன்றி அய்யா

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.