இந்தியத் திருநாட்டின் முதிர்ந்த இராஜதந்திரியும் (Statesman), திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்டநாள் (50 ஆண்டுகள்) தலைவரும், ஐந்து முறை தமிழ் நாட்டை ஆண்ட முதலமைச்சருமான கலைஞர் முத்துவேல் கருணாநிதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 07 தேதி செவ்வாய்கிழமையன்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இவர் பிறந்த நாளும் செவ்வாய்கிழமைதான். கடந்த ஜூன் மாதம் 03 தேதியன்று 94 வயதை நிறைவு செய்த இவர் அதே ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஐம்பதாவது ஆண்டு விழாவையும் நிறைவு செய்தார். தமிழக அரசியலில் இரண்டு நூற்றாண்டுகளாக மாபெரும் சக்தியாக விளங்கியவர் கலைஞர்.
“கலைஞர்” என்று தொண்டர்களாலும் மக்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட “கலைஞர் கருணாநிதியின் வாழ்வின் ஒவ்வொரு துளியும் போராட்டத்தால் செதுக்கப்பட்டது.” கருணாநிதிக்கு நடிகவேள் எம்.ஆர். ராதா ‘தூக்குமேடை’ நாடகத்தின்போது ‘கலைஞர்’ என்ற இந்தப் பட்டம் அளித்தார்.
கலைஞர் கருணாநிதி , நாகபட்டிணம் மாவட்டம், திருக்குவளை வட்டம் திருக்குவளை கிராமத்தில், 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி 10.40 மணிக்கு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். சண்முகசுந்தரம்மாள், பெரியநாயகி ஆகியோர் இவரின் மூத்த சகோதரிகள். ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த கலைஞர் இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலாக வளர்ந்தது பேரதிசயம் என்கிறார் கவிஞர் வைரமுத்து.
தனது பள்ளிப் பருவத்திலேயே தமிழ் இலக்கியம், கவிதை, பேச்சு, நாடகம், ஆகிய துறைகளில் மிக்க ஆர்வம் கொண்டவர். பட்டுக்கோட்டை அழகிரி என்ற் நீதிக்கட்சியின் பேச்சாளரின் பேச்சாற்றலால் மிகவும் ஈர்க்கப்பட்டார். இளைஞர் மறுமலர்ச்சி என்ற சக இளைஞர்களின் கூட்டமைப்பைத் தோற்றுவித்ததன் வாயிலாக இந்த இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொண்டனர். மாணவர்களைச் சமூகப்பணியில் ஈடுபடுத்த இதுபோன்ற மாணவர்களின் அமைப்புகள் பெரிதும் உதவின. பிற்காலத்தில் திராவிட இயக்கத்தில் மாணவர்கள் பங்களிக்கவும் இந்த நிகழ்வுகள் உதவின. மாணவப் பருவத்தில் இவர் பங்கேற்ற இந்தி எதிர்ப்புபோரில் இவரின் போர்குணம் செம்மைப்பட்டது. “ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது.”
கலைஞர் கருணாநிதி PC: Wikipedia
1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று சென்னை ராபின்சன் பூங்காவிலே கொட்டும் மழையிலே பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை 70 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்டிக்காத்தவர் கலைஞர்.
1957-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று சட்டப் பேரவை உறுப்பினராக ஆனது முதல் இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். இவர் இதுவரை ஒரு தேர்தலில்கூடத் தோல்வியடைந்ததில்லை. தனது 33 ஆம் வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரான கலைஞர் கருணாநிதி. 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றியவர். 1967 முதல் 1969 வரை அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். தன்னுடைய 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்ற கலைஞர் அதன் பின்னர் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் திகழ்ந்தவர். தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்கட்சி துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்த ஒரே தலைவர் கலைஞர். கருணாநிதி.
பெரியார் எந்தச் சமூக நீதியைக் காக்கவும் எந்த ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக போராட்டங்களை முன்னெடுத்தாரோ அந்த மக்களுக்கான பல நல்ல சமூக நீதித் திட்டங்களை எல்லாம் கலைஞர் ஆட்சிபீடத்தில் அமர்ந்தவுடனே நிறைவேற்றினார். குடிசை மாற்று வாரியம், கை ரிக் ஷா ஒழிப்புத் திட்டம், கலப்புத் திருமண ஆதரவு மற்றும் அரசு ஊக்கத்தொகை, கைம்பெண்களின் மறுமணம் ஊக்குவிப்பு, ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பெண்கள் சுய உதவிக் குழுக்கள், சமத்துவபுரத் திட்டம், உழவர் சந்தை, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம், சமசீர் கல்வி, பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இலாகா, பிற்படுத்தப்பட்ட (31 சதவீதம்), தாழ்த்தப்பட்ட (18 சதவீதம்) மக்களுக்கு இடஒதுக்கீடு, கண்ணொளித் திட்டம், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து, செம்மொழி மாநாடு, உலகத்தமிழ் மாநாடு, தமிழ் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை எனக் கலைஞரின் சாதனைகள் பலவுண்டு.
இந்த அரசியல் சாணக்கியர், மூதறிஞர் ராஜாஜி தொடங்கி , டி பிரகாசம் , ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.இராமச்சந்திரன், ஜானகி இராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய பதினோரு முதல்வர்களின் ஆட்சிக்காலங்களில், தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்து, சிறந்த அரசியல்வாதியாகவும் முதிர்சியடைந்த தலைவராகவும், அசைக்க முடியாத ஒரு சக்தியாகவும் விளங்கினார்.
பன்முகத்தன்மை வாய்ந்த மாபெரும் ஆளுமையுடைய கலைஞர் பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், கட்சித் தலைவர், எதிர்கட்சித் தலைவர், அமைச்சர், முதலமைச்சர், “உறங்காத படைப்பாளி, ஓயாத போராளி என்று எத்துறை தொட்டாலும் அத்துறையில் வித்தகம் காட்டிய வித்தகர்.”
இவருக்குப் பதினெட்டு வயதாகும்போதே 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10 ஆம் தேதி “முரசொலி” இதழை வாரப்பத்திரிக்கையாகத் தொடங்கியவர். இவ்வேடு முதலில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்தது. முரசொலி நாளிதழுக்கு இன்றுவரை இவரே அப்போதே நாடகங்களை எழுதவும் முயன்றுள்ளார். பரப்பிரம்மம், காகிதப்பூ, ரத்தக்கண்ணீர், திருவாளர் தேசியம்பிள்ளை ஆகியவை இவரது நாடகங்களில் புகழ்பெற்றவை. தமது 25 ஆம் வயதிலேயே சேலம் மாடர்ன் தியேட்டரில் எழுத்தாளராகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். சுமார் 75 திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதிப் புகழ்பெற்றவர்.
தமிழ் இலக்கியத்தில் கலைஞர் தனக்கென ஒரு படைப்பாற்றலை உருவாக்கிக் கொண்டார். திருக்குறள் மற்றும் தொல்காப்பியம் ஆகிய நூல்களுக்கு இவர் எழுதிய உரை எளிமையும் இனிமையும் வாய்ந்தது. சங்கத்தமிழ் மற்றொரு நல்ல படைப்பு. ‘தென்பாண்டிச்சிங்கம்”பொன்னர் சங்கர்’ ஆகிய வரலாற்றுத் தொடர்கள் பலராலும் பாராட்டப் பெற்றவை. ‘சிறையில் பூத்த சின்னச்சிறு மலர்கள்’ கட்டுரையும் பாராட்டை அள்ளியது. இவருடைய சுயசரிதை நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக வெளிவந்தது.
இவை எல்லாவறிற்கும் மேலாக ஐந்து முறை முதல்வராகப் பணியாற்றியிருந்தாலும் மற்ற மாநில முதல்வர்களை ஒப்பிடும்போது எளிமையான வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார். மக்கள் தலைவரான இவரைச் சந்திப்பது எளிது. மக்கள் பிரச்சனைகளைக் கேட்டறிந்து இவற்றிற்கு உடனுக்குடன் தீர்வு கண்டவர். இவர் வகுத்த பல நலத் திட்டங்கள் ஏழை எளியவர்களுக்குப் பலனளித்தன.
பெரியார் மற்றும் இராஜாஜிக்குப் பிறகு 94 வயதிற்குமேல் புகழோடு வாழ்ந்து மறைந்த அகில இந்தியத் தலைவர் ஆவார். பெரியார் விரும்பாத ஆட்சிப்பொறுப்பு (அமைச்சர், முதலமைச்சர் பதவி) இவருக்குக் கிடைத்தது. மூதறிஞர் ராஜாஜிக்கு கிடைக்காத உயிரினும் மேலான கட்சித் தொண்டர்களின் படை இவருக்குக் கிடைத்தது. பெருந்தலைவர் காமராஜருக்கும், செல்வி ஜெயலலிதாவிற்கும் அமையாத திருமண வாழ்க்கையும் பெரிய கூட்டுக் குடும்பமும் இவருக்குக் கிடைத்தது. பேரறிஞர் அண்ணவிற்குக் காலத்தால் மறுக்கப்பட்ட நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் இவருக்குக் கிடைத்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குக் கிடைக்காத மக்கட்பேறு (3 மகன்கள், 2 மகள்கள்) இவருக்குக் கிடைத்தது. இது மட்டுமல்ல தமிழகதில் எந்தவொரு முதலமைச்சருக்கும் கிடைக்காத விமர்சனங்களும்கூட இவருக்குத்தான் கிடைத்தது. பெரியார் மறுத்த ஆட்சிப் பொறுப்பும், அண்ணவிற்குக் காலம் மறுத்த ஆயுளும் கலைஞருக்கு ஒருங்கே வாய்த்தது. இதன் மூலம் பெரியார் மற்றும் அண்ணா என்ற சமூக நீதித் தத்துவங்கள் தமிழர்களுக்கான நலதிட்டங்களாகப் பரிணமித்தன.
இவ்வாறு கலைஞர் கட்சி, உயிரினும் மேலான தொண்டர்கள், அரசு பதவி, அரசியல் செல்வாக்கு, நல்ல குடும்பம், அன்புகொண்ட குழந்தைகள், நீண்ட ஆயுள் ஆரோக்கியம் என்று அத்தனை நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்தபின்பு அமைதியான இறப்பையும் பெற்று விட்டார். நிறைவான வாழ்க்கைக்குப் பின்பு கலைஞர் மேற்கொண்டது இறுதிப் பயணமல்ல, ஓர் இனிய பயணம் என்று தமிழ் தொலைகாட்சிகள் புகழாரம் சூட்டின.
கலைஞரின் சுயசரிதையான நெஞ்சுக்கு நீதி நூலின் முதல் பாகம் வெளியான சமயம் கலைஞருக்கு ஓய்வெடுக்கும் காலம் வந்துவிட்டது என்று சிலர் விமர்சித்தனர். இதற்குப் பதிலளித்த கலைஞர்:
“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வுகொண்டிருக்கிறான்”
என்று என் கல்லறையின் மீதுதான் எழுதப்படும் என்று குறிப்பிட்டார். இந்த வாக்கியம் நெஞ்சுக்கு நீதி நூலின் ஆறாவது பாகத்தின் முன்னுரையிலும் குறிப்பிதப்பட்டுள்ளது. கலைஞர் விரும்பிய வண்ணம் அவரது உடல் இருத்தப்பட்ட சந்தனப் பேழையின் மீது இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்டன.
அறிஞர் அண்ணா மறைந்தபோது பலரும் அஞ்சலி செலுத்தினாலும் கலைஞர் எழுதிய கவிதை அனைவரையும் உருக வைத்தது:
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் – அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?’
அண்ணாவின் அன்புத்தம்பி இப்போது, அந்த அண்ணன் துயில் கொள்ளும் கல்லறை வளாகத்தில் நிரந்தரமாக ஓய்வெடுக்க வந்து, அண்ணாவிடமிருந்து இரவலாகப்பெற்ற இதயத்தைக் கையோடு கொண்டுவந்து அண்ணனின் கால்மலரில் வைத்துள்ளார்.
கலைஞரின் மீது குறைபாடுகள் இல்லாமல் இல்லை. இவர் மேல் பல்லாயிரம் விமர்சனங்கள் உண்டு. இதை அவரும் நன்கு அறிந்திருந்தார். “ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஒடுக்கப்பட்டோரின் நன்றி என்றென்றும் கலைஞரின் கல்லறையைச் சுற்றி வரும்.”
கலைஞரின் வாழ்க்கை இளைஞர்களுக்குச் சிறந்த பாடமாக அமையும். இவருடைய வாழ்க்கை உழைப்புக்கு ஒரு பாடம், எளிமைக்கு ஒரு பாடம், தமிழ் பற்றுக்கு ஒரு பாடம், ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகச் சமூக நீதி காத்ததும் ஒரு பாடம்.
மற்ற தலைவர்களுக்குக் கிடைக்காத என்னென்ன இவருக்குக் கிடைத்தது என்கிற விவரங்கள் சுவாரஸ்யம். சந்தனப்பேழை என்று சொன்னாலும் அது தேக்கு மரத்தால் செய்ததாம்.
அண்ணாவின் இதயத்தை அவரிடம் கலைஞரால் இப்போது திருப்பிக் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஸ்டாலின் அதை இப்போது கடன் கேட்டிருக்கிறார்.
LikeLike
சந்தனப்பேழை இல்லை என்பது உங்களுக்கும் தெரியும் போலிருக்கிறது. கலைஞர் அண்ணாவின் இதயத்தைத் திருப்பித் தரவில்லையா? ஒரு வேளை கலைஞரின் இதயத்தைக் கடன் கேட்டிருப்பாரோ? கருத்திற்கு நன்றி.
LikeLike
ஆழ்ந்த அனுதாபங்கள்.
LikeLike
கருத்திற்கு மிக்க நன்றி ஐயா
LikeLike
நிறைவான வாழ்க்கையே…
உறங்கட்டும்… உறங்கட்டும்…
விரிவான விடயங்கள்.
LikeLike
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா..
LikeLike
ஓய்வின்றி உழைத்தவர்
ஓய்வெடுக்கட்டும்
LikeLike
கருத்திற்கு மிக்க நன்றி ஐயா..
LikeLike
பிங்குபாக்: சூரியன் கிழக்கில் மறைந்தது: கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி – TamilBlogs