வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம்: கூரம் செப்பேடு தெரிவிக்கும் பரமேஸ்வரவர்மனின் பல்லவ நிவந்தம்

வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம் (विद्यावीनीतपल्लवपरमेश्वरगृहे = வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர க்ருஹே) என்னும் பல்லவர் காலத்துக் கற்றளி காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டாரம், கூரம் (कूरम्) பின் கோடு 631502 கிராமத்தில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 610 – 685),  ‘பரமேசுவர மங்கலம்’ (இன்றைய கூரம்) என்று தன்னுடைய பெயரைக்கொண்டு நிவந்தமாக அளிக்கப்பட்ட நகரில்  இந்த வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம் என்ற கற்றளியை கி.பி. 679 ஆம் ஆண்டு கட்டுவித்து வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வரருக்கு (சிவனுக்கு) அர்ப்பணித்தார். வித்யா வீனீதன் என்பது பரமேஸ்வரவர்மனின் சிறப்புப் பெயர் ஆகும். வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வரரான மூலவர் சதுரவடிவ கூடிய ஆவுடையுடன் கூடிய சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.  இதுவே தமிழகத்தின் முதல் கற்றளியாகக் கருதப்படுகிறது. இந்தக் கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.  பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனால் வெளியிடப்பட்ட கூரம் செப்பேடு முதுபெரும் தொல்லியல் அறிஞர் ஹூல்ஷால் (Hultz) கூரம் கோவில் தர்மகர்தாவிடமிருந்து பெறப்பட்டது.   இவ்வறிஞர் இக்கல்வெட்டை படியெடுத்து ஆய்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து South Indian Inscriptions PART-IV, No. 151 A Pallava Grant from Kuram வெளியிட்டுள்ளார்.

இதன் அமைவிடம் 12° 54′ 27.5076” N அட்சரேகை 79° 39′ 20.6352” E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து 85 மீ (279 அடி) உயரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 2177 (ஆண்கள் 1079;  பெண்கள் 1098; மொத்த வீடுகள் 547) ஆகும். இவ்வூர் திருப்புட்குழி (4 கி.மீ.), மீனாட்சி மருத்துவக் கல்லூரி (NH 48) (10.0 கி.மீ), காஞ்சிபுரம் (15.6 கி.மீ), பிரம்மதேசம் (சக்கரமல்லூர் வழி 26.8 கி.மீ.), தக்கோலம் (23.8 கி.மீ), மகேந்திரவாடி (24.8 கி.மீ.), அரக்கோணம் (25.7 கி.மீ), திருத்தணி (38.2) திருவலங்காடு (40.7 கி.மீ) நகரங்களுக்கு அருகே அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் திருமால்பூர் (10.0 கி,மீ); காஞ்சிபுரம் (11.6 கி.மீ)  ஆகியவையாகும்.

வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம்

வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வரர் திருக்கோவில் ஒரு கற்றளியாகும். கற்றளி கற்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோவிலாகும். கற்றளிகள் கட்டும் மரபு கி.பி ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பல்லவர்களால் தொடங்கப் பெற்றது. இக்கற்றளி திருச்சுற்றுப் பிரகாரம் (Cloister Mandapa), மகாமண்டபம் அா்த்தமண்டபம், கருவறை ஆகிய அங்கங்களைக் கொண்டுள்ளது.

மூலவர் வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வரர் ஆவர். மூலவர் மேற்கு நோக்கிய தூங்கானை மாடம் என்னும் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அமைக்கப்பட்ட கருவறையில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவலிங்கம் உயர்ந்த பாணமும் சதுரவடிவ ஆவுடையும் (பீடமும்) பெற்றுள்ளது. தினமும் சூரியன் அஸ்தமனமாகும் மாலை நேரத்தில் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும் வண்ணம் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூலவர் இராமரால் வணங்கப்பட்டவர் என்ற புராணக்கதையும் உள்ளது. கருவறையின் நுழைவாயிலில் இடப்புறம் விநாயகரும் வலப்புறம் முருகனும் கோஷ்டங்களில் காட்சி தருகிறார்கள்.

தொடர்புடைய படம்

தமிழகத்தின் முதல் தூங்கானை மாடம் என்ற கஜ (ஹஸ்தி) பிருஷ்ட விமானம். பாழடைந்த பல்லவர் கால கட்டமைப்பு – தொல்லியல் துறையால் மறுகட்டுமானம் PC: சக்தி விகடன்

இக்கோவில் மூலவர்  கருவறை விமானம் தரையிலிருந்து கருவறையுடன் சேர்த்துக் கட்டப்பட்ட தூங்கானை மாடம் என்னும் கஜபிருஷ்ட விமானம் அல்லது ஹஸ்திபிருஷ்ட விமானம் ஆகும். அதாவது யானையின் பின்புறம் போல் அமைப்புக் கொண்ட விமானம் அமைந்துள்ள கோவில்களில் முதன்மையான கோவில் என்று  கருதலாம். இங்கு கீழ் கட்டுமானமான (Sub- structure) அதிஷ்டானம் மட்டும் கருங்கல்லால் தூங்கானை மாட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

பல்லவ காலத்திய மூலக் கருவறை (கோவில்) தெற்கில் ஒரு நுழைவாயில் கொண்ட மண்டபத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. கருவறை கிழக்கு நோக்கி இருந்துள்ளது. இந்த மூலக்கோவில் கருங்கற் பாறைகளால் தூங்கானை மாட (கஜபிருஷ்டம்) வடிவில் கட்டப்பட்டிருந்தது. உட்சுவரில் அதிஷ்டானதிற்கு மேலே காணப்படும் உட்பகுதி வடிவமைப்புகள்  காணாமல் போய்விட்டது. எனவே பிற்காலத்தில் செங்கல்லைக் கொண்டு மேற்கட்டுமானம் தட்டையான கூரையுடன் (Flat Roof) கட்டப்பட்டது.

தற்போது நாம் காணும் இந்தக் கட்டுமானம் செங்கல் அடித்தளத்தின் மீது தட்டையான பலகைக் கற்களைக் கொண்டு உபானம், ஜகதி, திரிபட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை ஆகிய அதிஷ்டான (Plinth) உறுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலே உள்ள சுவர்கள் செங்குத்து மற்றும் கிடைமட்ட பலகைகளைக் கொண்டு ஒன்றுவிட்டு ஒன்று மாற்றிக் (alternating series of vertical and horizontal slabs) கட்டப்பட்டுள்ளது. இதற்கு மேல் செங்குத்துப் பலகைகளைக் குறுக்காகவும் நெடுக்காகவும் அடுக்கி பெட்டியைப்போன்ற குழிவை (cavity) உருவாக்கி அதில் செங்கல் கட்டுமானம் கட்டியுள்ளனர். அதிஷ்டானத்தின் மேல் அமைக்கப்பட்ட பாதம் (சுவர்) செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையால் அமைக்கப்பட்ட கட்டுமானம்  ஆகும். உட்சுவரைத் தாங்குவதற்காக உதைகால்கள் (struts) அமைக்கப்பட்டுள்ளன.

கருவறைக்கு மேலே வழக்கமாகக் காணப்படும் பிரஸ்தாரம், சிகரம், கிரீவம் (கண்டம்) மற்றும் ஸ்தூபி ஆகிய மேல்கட்டுமான (organs of super-structure) உறுப்புகள் காணப்படவில்லை. கர்நாடக மாநிலம் ஐஹோளே (Aihole) வளாகத்தில் அமைந்துள்ள துர்கா கோவிலின் (கற்றளி) (Durga Temple) கீழ்க் கட்டுமானம் (Sub-structure) மட்டும் தூங்கானை மாட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சில கோவில்களில் விமானத்தின் மேல் கட்டுமானம் (super-structure) மட்டும் தூங்கானை மாட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.

விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிருஷ்டம், கேசரம் ஆகிய ஏழு வகை விமானங்களைப் பற்றிச் சிற்ப நூல்களும் ஆகமங்களும் கூறுகின்றன. திருநாவுக்கரசர் கூறிய ஆலக்கோவில் என்பது ஆனைக்கோவில் என்பதன் மரூஉ என்ற கருத்தும் உள்ளது (யானைக்கோவில் – மயிலை சீனி.வேங்கடசாமி). திருவானைக்கா, திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள பக்தவத்சல ஈசுவரர் கோவில், திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு, ஆகியவை ஆலக்கோயில்கள் ஆகும்.

இப்போது நன்னிலையில் உள்ள பல்லவர் காலத்து யானைக்கோவில்கள், நாம் அறிந்தவரையில் நான்கே. அவை மாமல்லபுரத்துச் “சகாதேவரதம்” எனப்படுகிற யானைக்கோவிலும், ஓரகடத்து   வாடாமல்லிச்சுரர் கோவிலும், குடிமல்லத்துப் பரசுராமேச்சுரக் கோவிலும், திருத்தணிகை வீராட்டாநேச்சுரர் கோவிலும் ஆகும். (யானைக்கோவில் – மயிலை சீனி. வேங்கடசாமி).

“தூங்கானை மாட விமானம் மற்றும் கருவறைகள் “பெரும்பாலும் வட தமிழ் நாட்டில் உள்ளன. தொண்டை நாட்டிற்கே உரியது எனக்கூறும் அளவிற்கு மிக அதிகமாகத் தமிழகத்தின் வடபகுதியில் காணப்படுகின்றது” என்று நூ.த.லோக சுந்தரம், நரசிங்கபுரத்தான் கருதுகிறார். இத்தலைப்பில் திரு.  நூ.த.லோக சுந்தரம் அவர்கள் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

தொடர்புடைய படம்

வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம்

மூலவர் வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வரர் கருவறை. எதிரே நந்தி, பாணலிங்கம், பலிபீடம் PC: Munnurramesh

கருவறைக்கு எதிரே நந்தியும்   பாணலிங்கமும், பலிபீடமும் அமைந்துள்ளது. இஃது இக்கோவிலின் சிறப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது. மகா மண்டபதிற்குள் நுழைவதற்குத் தென்புறம் ஒரு நுழை வாயில் உள்ளது. இக்கோவில் மகா மண்டபத்தில் பொய்யாமொழி விநாயகருக்கும், சுப்ரமணியருக்கும் சன்னதிகள் உள்ளன. நான்கு கரங்களுடன் காட்சி தரும் சுப்பிரமணியர் தன் மேல் இரு கைகளில் அக்கமாலையும் கமண்டலமும் ஏந்தி காட்சி தருகிறார். இவரைப் பிரம்ம சாஸ்தா வடிவமாகப் பல்லவர்கள் அமைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. சுப்பிரமணியர் பிரம்மனை சிறையில் அடைத்த பின் அவரது படைப்புத் தொழிலை ஏற்று நடத்தியுள்ளாராம். அந்தச் சமயத்தில் காட்சி தந்தது இந்தக் கோலத்தில் தானாம்.   கோவில் தல விருட்சம் வில்வம் ஆகும்.

ஊர்த்துவ நடராஜர் வெண்கலப் படிமம் 

32978819_2162100144020011_6858484870977421312_n

ஊர்த்துவ நடராஜர் சென்னை மியூசியம்

கூரம் பரமேஸ்வரத்தில் சற்று மாறுபட்ட அமைப்புடன் கூடிய நடராஜரின் வெண்கலப் படிமம் ஒன்று பூமியின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்தப் படிமம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெய்வப் படிமத்தைச் சுற்றிலும் வழக்கமாக அமைக்கப்படும் திருவாச்சி என்ற  உலோக வளைவினைக் காணவில்லை. இப்படிமத்தில் நான்கு கரங்ககளுடன் தோன்றும் நடராஜரின் இடது மேற்கரம், வழக்கமாக ஏந்தும் அனல் கலையத்திற்குப் பதிலாக, பாம்பினைப் பற்றியுள்ளது. சிவனின் விரிசடைகளுக்கு இடையே நாம் வழக்கமாகக் கண்ணுறும்  கங்கை இப்படிமத்தில் இல்லை. சிலம்பணிந்த வலக்காலை முயலகன் மீது ஊன்றியவாறு இடக்காலை தூக்கி ஊர்த்துவ தண்டவமாடும் நடராஜ மூர்த்தியின் அரிய படிமம்  தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தின் வெண்கலக் காட்சிக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கூரம் செப்பேடு

பிரிட்டிஷ் இந்திய அரசின் ஆட்சியின்போது கி.பி. 1886 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்  சென்னை அரசாங்கம் ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியவியலாளரும் கல்வெட்டு ஆய்வாளருமான ஹூல்ஷ் (29 மார்ச் 1857 – 16 ஜனவரி 1927) என்பவரைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது.  இவர், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறைக்காக (Archaeological Survey of India (A.S.I), 1886 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தென்னிந்தியக் கல்வெட்டுகளை (South Indian Inscription) முறையாகச் சேகரிக்கத் தொடங்கினார். இவர் தென்னிந்தியக் கல்வெட்டுகள் நான்காம் தொகுதியில் கூரம் செப்பேடு குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார். கூரம் கொடைபற்றி வெளியிடப்பட்ட செப்பேடுகளின் மூலம்  (Original) காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள கூரம் கிராமத்தின் கோவில் தர்மகர்தாவிடமிருந்து அன்றைய பிரிட்டிஷ் அரசு பெற்றுக்கொண்டது.

கூரம் கொடை பற்றி  ஏழு செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தச் செப்பேடுகள் ஒவ்வொன்றும் 10 1/8 x 3 ¼ அங்குலங்கள் அளவு கொண்டவை. இந்தச் செப்பேடுகள் மிக மோசமான பாதுகாப்பில்  இருந்த காரணத்தால் இவற்றைப் படித்து விளங்கிக் கொள்வது சற்றுக் கடினமாக இருந்தது என்று ஹுல்ஷ் கூறியுள்ளார். ஐந்து மற்றும் ஆறாம் செப்பேட்டு இதழ் மிகவும் தேய்ந்து பாதிப்பு அடைந்துள்ளது. ஏழாம் செப்பேட்டில் ஒரு பாதி முழுவதும் சிதைந்து போயுள்ளது.

3/8 அங்குலம் கனமும் 4 x 4 ¾ அங்குலம் விட்டமும் கொண்ட நீள்வட்ட வளையம், இடது பக்க மார்ஜினில் ஒட்டையிடப்பட்ட செப்பேடுகளை, ஒன்றாக இணைக்க உதவுகிறது. நீள்வட்ட வளையத்தின் 2 ½ அங்குலம் விட்டமுள்ள முத்திரையில் பீடத்தில் இடப்புறம் நோக்கி அமர்ந்த நிலையில் நந்தி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. சந்திரன் மற்றும் இலிங்க உருவங்களும் மேற்பகுதியில் காட்டப்பட்டுள்ளன. மேலும் சில சொற்கள் அழிந்து போயுள்ளன.

செப்பேட்டின் முதல் நான்கரைப் பக்கங்கள் சமஸ்கிருத மொழியிலும் – அதாவது செய்யுள் மற்றும் உரைநடையிலும்; மீதி தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்று வாழ்த்துச் செய்யுள்களுடன் (three benedictory verses) சமஸ்கிருத பகுதி தொடங்குகிறது. இரண்டு செய்யுள்கள் சிவனைப் போற்றியும் மூன்றாவது செய்யுள் பல்லவர்களின் இனம் பற்றியும் இயற்றப்பட்டுள்ளது.  பல்லவரின் தெய்வீக புராண மரபு வழக்கம்போல விவரிக்கப்பட்டுள்ளது. பிரம்மன், அங்கிராஸ், பிரகஸ்பதி, பரத்வாஜா, துரோணர், அசுவத்தாமன் போன்ற புராண நாயகர்கள் பல்லவர்களின் முன்னோர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். அசுவத்தாமன் பல்லவனாகப் பிறப்பெடுத்து இவரிடமிருந்தே பல்லவர் குலம் தோன்றியதாக இச்செப்பேடு குறிப்பிடுகிறது.

இந்தச் செப்பேட்டின் வரலாற்றுப் பகுதி, முதலாம் பரமேஸ்வரவர்மன்,  இவருடையை தந்தை இரண்டாம் மகேந்திரவர்மன் (கிபி 668 – 672), பாட்டனார் முதலாம் நரசிம்மவர்மன் (மாமல்லன்) (கிபி 630 – 668) ஆகிய மூன்று பல்லவ மன்னர்களைப் பற்றி விவரிக்கிறது. முதலாம் நரசிம்மவர்மன் “சேர, சோழ, பாண்டிய, களப்பிரரை மீண்டும் மீண்டும் போரில் முறியடித்தவன்; பல போர்கள் புரிந்தவன். அப்பெருமகன் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புலிகேசியைத் தோற்று ஓடச் செய்தவன். அவன் புறமுதுகிட்டு ஓடிய பொழுது ‘வெற்றி’ என்னும் சொல்லை. அவனது முதுகாகிய பட்டயத்தில் எழுதியவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மகேந்திரவர்மன் பற்றி எந்த வரலாற்று தகவலும் கொடுக்கப்படவில்லை. பரமேஸ்வரவர்மனின் பார்வையில் மகேந்திரவர்மன் அவ்வளவு சிறப்பில்லாத ஆட்சியாளராகத்  தோன்றுவதாகவே தெரிகிறது. மாமல்லனின் மகன் பரமேஸ்வரவர்மனின் நற்பண்புகளையும் செயல்களையும் பாராட்டுவதற்கு, இரண்டு செப்பேடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நீண்ட, கடினமான பத்தியில் வரலாற்று உண்மைகள் அடங்கியுள்ளன. அந்தக் கொடூரமான போரில் முதலாம் பரமேஸ்வரவா்மன், பல லட்சம் படைவீரர்கள் உள்ளிட்ட படை கொண்ட, விக்ரமாதித்தியனை போரில் வென்று இடுப்பில் சுற்றிய கந்தல் துணியுடன் ஓடவிட்டார். உதயசந்திர மங்கலம் செப்பேடும் வேலூர்ப் பாளையம் செப்பேடும் இந்த வெற்றியை உறுதி செய்கிறது.

பல்லவர்களின் படை மேலாண்மை

முதலாம் பரமேஸ்வரவர்மனுக்கும் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தியனுக்கும் நடைபெற்ற பெருவளநல்லூர் போர் குறித்துக் கூரம் செப்பேட்டின் செய்யுள்கள் விவரிக்கின்றன. யானை, குதிரை மற்றும் காலாட்படைகளைப் பற்றி விரிவாக வர்ணிக்கப்படுகிறது. இந்தப் போரில் யானைப் படைகளின் பங்களிப்பு முக்கிய இடம்பெற்றது. முதலாம் பரமேஸ்வரவர்மனின் பட்டத்து யானையின் பெயர் ‘அறிவரணா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவரணா (Arivarana meaning ‘warding off enemies’) என்ற இந்தப் பட்டத்து யானையின் மீது பரமேஸ்வரவர்மன் அமர்வதற்காக விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட தங்க சேணம் பூட்டிய ஓர் அம்பாரம் அமைக்கப்பட்டது. இது பற்றிய வருணனைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. கூரம் செப்பேடு இப்போரில் குதிரையின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடுகிறது. இப்போரில் பரமேஸ்வரவர்மன் அளவற்ற குதிரைப் படையினையும் பயன்படுதினானாம். பரமேஸ்வரவர்மன் பயன்படுத்திய, உன்னதமான இனப்பெருக்கத்தில் பிறந்த, “அதிசயம்” (Atisaya i.e, ‘eminence’) என்ற பெயருடைய குதிரையும் கற்கள் பதித்த சேணம் பொருத்தப்பட்டு  போரில் பங்கேற்றது.

ஊற்றுக்காட்டுக்  கோட்டம் (Urrukkattukkotta) நீா்வேளூா் (Nirvelur) என்ற மன்யவாந்தர ராஷ்டிரத்தில் (Manyavantara-rashtra) பரமேஸ்வரமங்கலம் (கூரம்) என்ற கிராமத்தில் “வித்யா வீனீத பல்லவாதிராஜன்” தன் பெயரால் எழுப்பிய “வித்யா வீனீத பல்லவ கிருஹத்தில்” எழுந்தருளி அருளும் ஈசன் “பினாகபானியின் (சிவன்) கூரத்துத் தளிக்கு பூஜை, நீர்முழுக்காட்டு (ஸ்நபனம்), மலர்கள், வாசனை திரவியங்கள் (கந்தம்), தூபம், தீபம், ஹவிஸ் உபஹாரம், பலிசங்கம், படஹம் ஆகியவற்றிற்கும் தண்ணீருக்கும் அக்னிக்கும் கோவிலில் பாரதம் வாசிப்போருக்கும் ஆன நிவந்தமாக  “பரமேஸ்வரமங்கலம்” எனும் கிராமத்தை பிரம்மதேயமாக வழங்கிய செய்தியை இந்தக் கூரம் செப்பேடு பதிவு செய்துள்ளது. “கூரத்துத் தளிக்கு, தேவகர்ம நவகர்ம செய்வதாகவும் கூரத்து மண்டகத்துக்குத் தண்ணீருக்கும் தீக்கும் ஒருபங்காகவும் இம்மண்டகத்துப் பாரதம் வாசிப்பாருக்கு ஒரு பங்காகவும்” என்று குறிப்பிடுகிறது.

இந்தக் கிராமத்தில் நான்கு வேதங்களையும் கற்ற 108 குடும்பங்கள் இருந்தன. இவர்களுக்கு இக்கிராமம் பிரம்மதேயமாக அளிக்கப்பட்டது. இப்போது பெரிய சிவன் கோவில்களில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் பரமேஸ்வரவர்மன் காலத்திலேயே நடந்து வந்ததாகக் கூரம் செப்பேடு பதிவு செய்துள்ளது. இம்மன்னனின் காலத்தில் இக்கோவிலில் மகாபாரதம் வாசிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாணிகாவைச் சேர்ந்த மகாசேனதத்தா (Mahasenadatta of Uttarakaranika) என்ற ஆணத்தி இந்த நிவந்தத்தின்  நிறைவேற்றுனர் (executor) அஃதாவது ஆக்ஞாபதி ஆவார்.

வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருகத்தில் நித்திய பூசைக் கடமைகள் (தேவகர்மம்) மட்டுமின்றிக் கோவிலைப் பழுதுபார்க்கும்  திருப்பணியும் (நவகர்மம்) வேதம் ஓதும் சிவாச்சாரியர்களான கூரத்து ஆச்சாரியார் (Kuratt-acharya) மகன் ஆனந்த சிவாச்சரியாரும் (Anatasiva-acharya), புல்ல சர்மாவும் (Phullasarma) ,இவர்களது மகன்களும், பேரன்களும் பரம்பரை பரம்பரையாக மேற்கொள்வார்கள். என்று இந்தச் செப்பேடு  குறிப்பிடுகிறது.

பரமேஸ்வரமங்கலம் கோவில்  மண்டபத்தில் நீர் விட்டுக் கழுவிச் சுத்தம் செய்யவும் விளக்குகள் எரிக்கவும் செய்த ஏற்பாடுகள்  பற்றியும் இந்தச் செப்பேடு பதிவு செய்துள்ளது. கோவிலில் நித்திய பூஜை செய்யும் சிவாச்சாரியார்களுக்கு நிலங்களும் வீட்டு மனையும் இறையிலியாக அளிக்கப்பட்ட செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“பரமேஸ்வரமங்கலத்தைப் பொலிவுறு நகராக வடிவமைப்ப தற்காக 6300 (98.44 ஏக்கர்) குழி நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டது. இந்த நகரை உருவாக்கும் பொறுப்பு உத்தரகாணிகா மகா சேசன் தத்தன் என்ற ஆணத்தியிடம் தரப்பட்டது. பொலிவுறு நகரில் முதலில் பரமேஸ்வர தடாகம் என்ற ஏரி வெட்டப்பட்டது. அதற்கு தேவையான நீர் இருப்புக்காகப் பாலாற்றில் இருந்து பெரும்பிடுகு என்ற கால்வாய் வெட்டப்பட்டது. இங்கு தண்ணீரைப் பயன்ப டுத்தும் பகிர்மான உரிமைகள் அனைத்தும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டதால் தண்ணீர் தாவாக்கள் தவிர்க்கப்பட்டன. கட்டுமானங்களுக்குத் தேவையான செங்கற்களை உற்பத்தி செய்வ தற்காகவே சூளைமேட்டுப்பட்டி என்ற பகுதி உருவாக்கப்பட்டது. ஆன்மிகத் திருவிழாக்கள் மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதால் பொலிவுறு நகரில் முதலில் கோயில் எழுப்பப்பட்டது. ஊருக்கு நடுவில், பாரதம் வாசிக்கும் மண்டபம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இது நீதிக் கதைகளைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் இடமாகவும் அரசின் ஆணைகள், சட்டதிட்டங்களை மக்களுக்குச் சொல்லும் ஊடக மையமாகவும் செயல்பட்டன. வணிகர்கள், பொற்கொல்லர்கள், அறிவுசார் பெருமக்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நகரின் முக்கியப் பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டது. உலக வணிகர்கள் வர்த்தகம் செய்வதற்கான பாது காப்பான வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டன.” (Source: கூரம் செப்பேடுகள் http://tamildigitallibrary.in/copper-plate-details.php?)

கல்வெட்டுகள்

பரமேஸ்வரமங்கலம் கோவில் வளாகத்தில் கண்டறியப்பட்டுப் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் எண்ணிக்கை ஒன்பது. இவற்றுள் இரண்டாம் நந்திவா்மன், நிருபதுங்கன் மற்றும் இராஜராஜ சோழன் ஆகிய அரசர்களின் கல்வெட்டுகளை இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இங்கு  பராந்தகன், பாா்த்திவேந்திரவா்மன், விக்ரம சோழன் கல்வெட்டுகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. சில தெலுங்குக் கல்வெட்டுகளும் இந்தக் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள் இத்தலத்தின் மூலவருக்குத் தினசரி பூஜைகள் செய்வதற்கும் விளக்கு எரிப்பதற்கும் வேண்டி அளித்த கொடைகள் பற்றிப் பதிவு செய்துள்ளன.  (Source: A.R.E. 32-35 of 1900, A.R.E. 105-10 of 1923, A.R.E. 36-39 of 1900, A.R.E. 54 of 1956-57)

“பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனால் கட்டப்பட்ட கோயில்களுக்குப் பரமேஸ்வர மஹாவராக விஷ்ணுகிருஹம் என்றும், பரமேஸ்வர விண்ணகரம் என்றும் பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.” மாமல்லபுரத்தில் ஒற்றைக் கல்லால் ஆன கணேச இரதத்தையும் (கற்றளி), தருமராஜர் இரதத்தின்  மூன்றாம் தளத்தையும் நிர்மாணித்தான். தர்மராஜ இரதத்தின் மூன்றாம் தளத்தில் இம்மன்னன் ‘ரணசயன் (ரண ரசிகனானா விக்கிரமாதித்தனை வென்றவன்) என்றும் ‘அத்யந்தகாமப் பல்லவேசுவர க்ருகம்’ என்றும் கல்வெட்டுகளை வெட்டினான். கணேச இரதத்தில் இம்மன்னன் பொறித்த பதினோரு வடமொழிச் செய்யுள்கள்,  மன்னன் மற்றும் சிவன் ஆகிய இருவருக்கும் பொருந்தி வரும்படி சிலேடையாக இயற்றப்பட்டுள்ளது.

குறிப்புநூற்பட்டி

 1. 1,400 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டீஸ்: பல்லவர்களின் கூரம் செப்பேடு தரும் அரிய தகவல்கள்  குள.சண்முகசுந்தரம் தமிழ் இந்து 26 May 2016
 2. கூரம் செப்பேடுகள் http://tamildigitallibrary.in/copper-plate-details.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZty
 3. தூங்கானை மாடம். நூ.த.லோக சுந்தரம், நரசிங்கபுரத்தான், மின்தமிழ் மேடை http://mymintamil.blogspot.com/2017/12/Thoonganai-Madam.html
 4. பல்லவன் வழிபட்ட பரமேஸ்வரன்! மஹேந்திரவாடி உமாசங்கரன் சக்தி விகடன் மார்ச் 29, 2016
 5. வித்ய வினீத பல்லவ பரமேஸ்வர கிருஹம்−கூரம்!

 6. South Indian Inscriptions Part-IV Addenda I A Pallava Grant from Kuram, No.151 A Pallava Grant from Kuram. http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_1/kuram.html

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம்: கூரம் செப்பேடு தெரிவிக்கும் பரமேஸ்வரவர்மனின் பல்லவ நிவந்தம்

 1. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த ஆய்வுக்கட்டுரை
  பாராட்டுகள்

  Like

 2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  அறியாத செய்திகளை அள்ளித் தருகிறீர்கள் ஐயா
  நன்றி

  Like

 3. Dr B Jambulingam சொல்கிறார்:

  தமிழகத்தின் முதல் கற்றளியாக கருதப்படுகின்ற வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹத்தைப் பற்றி அரிய செய்திகளுடன் அருமையான ஆய்வுக்கட்டுரை. நன்றி.

  Like

 4. பிங்குபாக்: வித்யா வீனீத பல்லவ பரமேஸ்வர கிருஹம்: கூரம் செப்பேடு தெரிவிக்கும் பரமேஸ்வரவர்மனின் பல்லவ நிவந

 5. pattairaman.t.r. சொல்கிறார்:

  நம் முன்னோர்கள் மிகவும் முன்னேறிய சமூகம் என்பதை. உங்கள் பதிவுகள் தெரிவிக்கின்றன. தற்கால இளைஞர்களிடம் இந்த செய்திகள் போய் சேர்ந்தால் நன்மை பயக்கும். ஆனால் அதற்கு இந்த அரசியல் வியாதிகள் அனுமதிக்கமாட்டார்கள்.

  Like

 6. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  சமஸ்கிருதத்தில் விதாவீனீத என்று போட்டிருக்கிறிகள், வித்யாவினீத என்பதற்குப் பதிலாக…

  பதிவு மிகவும் சிறப்பு.

  Like

  • முத்துசாமி இரா சொல்கிறார்:

   ஏற்கனவே அக்ஷரமுக (http://www.virtualvinodh.com/wp/aksharamukha/) என்ற செயலியில் சோதித்த பின்தன் இந்த வாக்கியத்தைப் பதிவு செய்தேன். இன்றும் विद्यावीनीतपल्लवपरमेश्वरगृहे என்ற வாக்கியத்தை உள்ளிட்டுச் சோதித்தேன். விடை : विद्यावीनीतपल्लवपरमेश्वरगृहे = வித்யாவீனீதபல்லவபரமேஸ்வரக்ருஹே
   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..

   Like

   • நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

    நன்றி சார். विध्याविनीत இதுதான் சரியான வார்த்தை. த், யா என்று இரண்டு எழுத்துக்கள் இருக்கணும். உங்களின் வார்த்தையில் ‘யா’ என்பது இல்லை. அதனால் பெரிய பாதகமில்லை (ஆனாலும் படிக்கத் தெரிந்தவர்கள் இந்தக் குறையைக் காண்பார்கள்).
    மற்றபடி கட்டுரையை அட்டஹாசமாக எழுதியிருக்கீங்க, மிகுந்த முயற்சி எடுத்திருக்கீங்க என்பதையும் பதிவு பண்ணிடறேன்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.