மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் நிகழ்ந்துள்ள இடம் என்பதற்கான அறிகுறி சற்றும் இல்லாமல் அமைதியாகக் காட்சியளிக்கிறது புள்ளலூர் என்ற பொள்ளிலூர் கிராமம். இரத்தமும் இரணமும் தோய்ந்த இந்த மண் பல்லவர் காலத்துப் புகழ்பெற்ற போர்க்களமாகும். பல்லவ சாளுக்கியப் போர் நடந்த இதே குக்கிராமத்தில் 1,161 ஆண்டுகளுக்குப் பிறகு மைசூர் சுல்தானகத்திற்கும் (Sultanate of Mysore) கிழக்கு இந்திய கம்பெனிக்கும் இடையே கி.பி. 1780 ஆம் ஆண்டிலும் கி.பி. 1781 ஆம் ஆண்டிலும் ஆக இரண்டு காலகட்டங்களில் நடந்த போர் இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் என்று பெயர் பெற்றது. புள்ளலூர் கிராமத்தில் கைலாசநாதர் கோவிலும் இராகவப் பெருமாள் கோவிலும் புகழ் பெற்றவை. இங்கு சில கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பெருமாள் கோவில் விமானத்தின் செங்கற் கட்டுமானம் சிதைவுற்று சரிந்து இடிந்து போனது. தற்போது புதிய கோவில் வழிபாட்டில் உள்ளது. இந்தப் பதிவு கி.பி. 619 ஆம் ஆண்டு இதே புள்ளலூர் கிராமத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் மேலைச்சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே நடைபெற்ற பல்லவ சாளுக்கியப் போர் பற்றியும் புள்ளலூர் கோவில்களைப் பற்றியும் விவரிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாரத்தில் புள்ளலூர் என்னும் பொள்ளிலூர் பின் கோடு 631502 கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 12° 58’N அட்சரேகை 79°42′E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 64 மீ. (210 அடி) ஆகும். 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 2843 (ஆண்கள் 1315, பெண்கள் 1431, மொத்த வீடுகள் 708) ஆகும். இவ்வூர் கோவிந்தவாடியிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருமால்பூரிலிருந்து 4.7 கி.மீ. தொலைவிலும், கூரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திற்கு வடமேற்கில் 17 கி.மீ. தொலைவிலும், வாலாஜாபாத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்திலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், ஸ்ரீ பெரும்புதூரிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 71 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருமால்பூர் தக்கோலம் ஆகியவை அருகிலுள்ள இரயில் நிலையங்கள் ஆகும். காஞ்சிபுரம் இரயில் நிலையம் 18 கி.மீ. தொலைவிலுள்ளது.
பல்லவர்கள்
களப்பிரர்கள் ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் உருவான பேரரசுகள் இரண்டு. ஒன்று பல்லவபேரரசு மற்றொன்று பாண்டியபேரரசு. இவர்களுக்கிடையே தொடர்ந்து போர்கள் நடைபெற்ற வந்துள்ளது. பல்லவர்களுக்கு மேலைச் சாளுக்கியர்கள் ஒரு பெரும் சவாலாக விளங்கினர். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட செப்பேடுகள் பிராகிருத மொழியிலும், இடைக்காலப் பல்லவர்கள் வெளியிட்ட செப்பேடுகள் சமஸ்கிருத மொழியிலும், பிற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட செப்பேடுகள் (கி.பி. 550 ஆம் ஆண்டிற்குப்பின்) தமிழ் மற்றும் சம்ஸ்கிருதமொழியிலும் பொறிக்கப்பட்டன. முற்காலப் பல்லவர் செப்பேடுகள் யாவும் ஆந்திர மாநிலத்திலேயே கிடைத்துள்ளன. பல்லவ சமஸ்கிருதச் செப்பேடுகளில் 16 பல்லவ மன்னரின் பெயர்கள் காணப்படுகின்றன. பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேடும் இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடி, உதயேந்திரம் செப்பேடுகளும் பல்லவர் வரலாற்றை அறிய உதவுகின்றன. சமுத்திரகுப்தனின் அலகாபாத் கல்வெட்டும் இரண்டாம் புலிகேசியின் ஐஹோளே மேகுட்டி கல்வெட்டும், விக்கிரமாதித்தியனின் கட்வால் செப்பேடும் பல்லவர் வரலாற்றை ஒப்பிட்டு அறிய உதவும் சமகாலச் சான்றுகள் எனலாம்.
முதலாம் மகேந்திர வர்மன்
முதலாம் மகேந்திர வர்மன் (கி.பி. 615 – 630) களப்பிரரை அடக்கி மீண்டும் பல்லவ பேரரசை நிறுவிய சிம்மவிஷ்ணுவின்மகன். இவனுடைய ஆட்சியாண்டு குறித்து பல்வேறு கருத்து வேறுபாடு உள்ளது. இவன் பதவிக்கு வந்த ஆண்டு கி.பி. 600, கி.பி. 610, கி.பி. 615 என்று பலவிதமாகக் குறிப்பிடப்படுகிறது. நெல்லூர் குண்டூர் மாவட்டங்களில் தொடங்கி தெற்கே குடிமியன்மலை வரை இவருடைய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கி.பி. 642 ஆம் ஆண்டு தேதியிட்ட முதலாம் நரசிம்மவர்மனின் பாதாமிக் கல்வெட்டு, தன்னுடைய பதின்மூன்றாம் ஆண்டில் அவர் பாதாமியை வெற்றிபெற்றதாக பதிவு செய்துள்ளது. எனவே நரசிம்மவர்மன் கி.பி. 629 ஆம் ஆண்டு பதிவியேற்றார் என்று பொருள் கொள்ளலாம். கி.பி. 629 ஆம் ஆண்டே முதலாம் மகேந்திரவர்மனின் இறுதி ஆண்டாகலாம். இவ்வரசர் கி.பி. 600 ஆண்டு முதல் கி.பி. 629 ஆண்டுவரை ஆட்சியில் இருந்திருக்கலாம். டி.வி.மகாலிங்கம் இம்மன்னனின் ஆட்சியாண்டு கி.பி. 610-630 என்று கருதுகிறார். கே.ஆர்.ஸ்ரீநிவாசனோ இமன்னனின் ஆட்சியாண்டை கி.பி. 580-630 என்று குறிப்பிடுகிறார்.
பல்லவ சாளுக்கியப் போர்கள்
பல்லவர்களுக்கும் மேலைச் சாளுக்கியர்களுக்கிடையே பல போர்கள் நடைபெற்றன. இம்மன்னனின் காலத்தில் தான் பல்லவர்-சாளுக்கியர் போர் உச்சநிலையை அடைந்தது என்கிறார் மா.இராசமாணிக்கனார். இந்தப் பகைமையும் போரும் இம்மன்னனுக்குபின் சுமார் 150 ஆண்டுகள் வரை ஓயவில்லை.
புள்ளலூர் போர் பல்லவ – சாளுக்கிய போர்களில் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்தப் போர் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் மேலைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் (கி.பி. 610 – 642) இடையில் புள்ளலூர் (பொள்ளிலூர்) கிராமத்தில் கி.பி. 619 ஆம் ஆண்டு நடைபெற்றது.
பல்லவ சாளுக்கியப் போர்களுக்கான முக்கியக் காரணம் விஷ்ணுகுந்தின் பேரரசு ஆகும். விஷ்ணுகுந்தின் அரசு காஞ்சிப் பல்லவர்களின் நேச நாடு ஆகும். சாளுக்கியர்கள் தங்கள் பேரரசை விரைவாக விரிவாக்க எண்ணியதன் விளைவு விஷ்ணுகுந்தின் பேரரசை சாளுக்கிய நாட்டுடன் இணைத்துக் கொண்டனர்.
இரண்டாம் புலிகேசி
இதனால் மனக்கசப்படைந்த பல்லவர்கள் சாளுக்கியர்களுடன் பகை பாராட்டினர். இந்த மனக்கசப்பே ஏராளமான பல்லவ – சாளுக்கியப் போர்களுக்குக் காரணமாயின. கி.பி. 617-18 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் புலிகேசி படையெடுத்துச் சென்று வேங்கிநாட்டை (ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களின் மண்டல்களை உள்ளடக்கிய பகுதி) தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான். வேங்கிநாட்டை வென்ற புலிகேசி தெற்கு நோக்கித் தன் படைகளைத் திருப்பினான்.
சான்றுகள்
புலிகேசியின் அரசவைக்கவிஞரும், அறிஞரும், படைத் தலைவருமான இரவிகீர்த்தி ஐஹோளேயின் மேகுட்டி கோவிலில் பொறித்த கல்வெட்டும் (கி.பி. 634-635) மற்றொரு உறுதிப்படுத்தும் சான்றான இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடிச் செப்பேடும் புள்ளலூர்ப் போரைப்பற்றி விரிவாக வர்ணிக்கின்றன.
காசாக்குடி செப்பேடு
மகேந்திரவர்மன் என்று அழைக்கப்பட்ட மன்னரால் இந்தப் பூமி ஆட்சி செய்யப்பட்டது. இவருடைய மகிமை மகேந்திரனின் மகிமையை ஒத்திருந்தது. அவருடைய கட்டளைகள் (அனைவராலும்) மதிக்கப்பட்டன. புள்ளலூராவில் அவரது முதன்மையான எதிரிகளை அழித்தார். (இரண்டாம் நந்திவர்மனின் காசக்குடி செப்பேடு சம்ஸ்கிருத செய்யுள் எண் 21)
காசாக்குடிப் பட்டயம் சாளுக்கியர் பெயரைக் குறிப்பிடவில்லை. என்றாலும் பல்லவர்களின் ‘இயற்கை எதிரிகள்’ என்று கருதப்படும் சாளுக்கியர்களையே (இங்கு) ‘முதன்மை எதிரிகள்’ எனக் குறிப்பிட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். எனவே, காசகுடிப்பட்டயத்தில் கூறியுள்ள செய்தி முதலாம் மகேந்திரவர்மன் – இரண்டாம் புலிகேசி ஆகியோரிடையே நடைபெற்ற போரேயாகும் என்பதில் ஐயமில்லை.
சாளுக்கிய படையெடுப்பைச் சற்றும் எதிர்பாராத முதலாம் மகேந்திரவர்மன் பதிலடி கொடுப்பதற்கு முன்பே சாளுக்கியப்படை பல்லவ நாட்டின் ஆட்சிக்குடப்பட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்தது.
மேகுட்டி (ஐஹோளே) கல்வெட்டு
செய்யுள்.29 “பரம்பரை பட்டாளங்களும் மீதமுள்ளவர்களும் அடங்கிய அவரது ஆறு மடங்கான படைகள், தூய சௌரிகளையும் (chowries), நூற்றுக்கணக்கான பதாகைகளையும், குடைகளையும் உயர்த்தினார்கள். வீர உணர்வும் ஆற்றலும் மிக்க எதிரிகளின் படைகளைச் சுழற்றினார்கள். தன்னுடைய வல்லரசின் எழுச்சியை எதிர்த்த பல்லவ அரசர்களின் மகத்துவத்தை அவருடைய படைகளின் புழுதியால் காஞ்சிபுரத்தின் மதிற்சுவர்களின் பின்னால் மறையச் செய்தார்.”
செய்யுள்.30 “உடனடியாக அவர் சோழர்களைக் கைப்பற்ற முயன்றபோது, துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி சாளுக்கியனது யானைகளின் மதநீர் விழுந்ததால் ஒட்டம் தடைப்பட்டுக் கடலிற்கலக்க இயலாதாயிற்று. அவர் மதநீர் சுரந்து ஒழுகும் யானைகள் நீர்ப்பாலம் அமைத்துத் தடுத்ததன் மூலம், கடலுடன் கொண்ட தொடர்பை விலக்கினார்.”
“துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனது யானைகளின் மதநீர் விழுந்ததால் ஒட்டம் தடைப்பட்டுக் கடலிற்கலக்க இயலாதாயிற்று. புலிகேசியும் பல்லவப் பணியைப் போக்கும் கடுங் கதிரவனாய்ச் சேர சோழ பாண்டியரைக் களிப்புறச் செய்தான்”
செய்யுள்.31 “வெண்பனி போன்ற பல்லவப் படைகளுக்கு காய்கதிர்ச் செல்வனாக விளங்கியதால் அங்கு சேர சோழ பாண்டியரைக் களிப்புறச் செய்தான்.”
என்று இரண்டாம் புலிகேசியின் மேகுட்டி கல்வெட்டு சான்று பகர்கிறது.
மகேந்திரவர்மன், தற்காப்பிற்காகவோ போர்த்தந்திரமாகவோ, காஞ்சிபுரம் கோட்டைக்குள் சென்று மறைந்துகொண்டார். இரண்டாம் புலிகேசியினது கல்வெட்டில், ‘பல்லவ அரசன் ஒளிந்துகொண்டான்’ என்பது கூறப்பட்டுள்ளதே அன்றி, அவன் தோற்றது அல்லது காஞ்சியைச் சாளுக்கியர் கைப்பற்றியது குறிக்கப்படவில்லை.
உடனடியாகப் போர்புரிய முடியாத முதலாம் மகேந்திரவர்மன் காஞ்சிபுரம் கோட்டைக்குள் ஒளிந்துகொண்ட செய்தி பல்லவர்களின் பகைவர்களான மூவேந்தர்களை மகிழ்விக்கச் செய்தது என்பது இக்கல்வெட்டின் செய்தியாகும். இதனால் சாளுக்கியர் பல்லவரைத் தோற்கடித்ததாக இக்கல்வெட்டு குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.
இரண்டாம் புலிகேசியும், கங்க அரசன் துர்விநீதனும் உறவினர்கள். பல்லவ-சாளுக்கிய போரில் இரண்டாம் புலிகேசிக்குத் துர்விநீதன் உதவினான். துர்விநீதன் கல்வெட்டு (Epigraphia Carnataca, Vol.VIII, No.35.) அவ்ன அந்தரி, ஆலத்தூர், போலுளரே (புள்ளலூர்), பேர்நகர (பெருநகரம்) ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களில் வென்றான் என்று பதிவு செய்துள்ளது.
காவிரிக்கரை வரை சென்றுவிட்டுச் சாளுக்கியப்படை காஞ்சிபுரம் வழியாகத் தங்கள் நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் முதலாம் மகேந்திரவர்மன் புள்ளலூரில் எதிர்கொண்டு தாக்கியிருக்கலாம். பல்லவரின் இந்தக் கடும் தாக்குதலை சிறிதும் எதிர்பாராத சாளுக்கிய படைகள் எதிர் தாக்குதல் நடத்திய போதும் பெரும் சேதத்தைச் சந்திக்க வேண்டியதாயிற்று. மகிழ்வோடு நாடு திரும்பிக்கொண்டிருந்த சாளுக்கியப்படை பின்வாங்க வேண்டியதாயிற்று.
‘புள்ளலூரில் மகேந்திரன் தன் முதன்மைப் பகைவர்களை அழித்தான்,’ (Mahendra annihilated his chief enemies at Pullalura) என்று இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் காசாக்குடிச் செப்பேடு பதிவு செய்துள்ளது. சாளுக்கியப் படையைத் தன் நாட்டில் வெகு தொலைவு முன்னேறவிட்ட பின்பு அவர்கள் வெளியில் செல்லாத வண்ணம் பல்லவர் படை சுற்றிவளைத்துத் தாக்கியிருக்க வேண்டும். காவிரிக்கரை வரை சென்று சாளுக்கியர் படை திரும்பவும் காஞ்சிபுரம் வழியாகத் திரும்பும் சமயம்வரை காஞ்சிபுரம் கோட்டைக்குள் ஒளிந்துகொண்டது ஒரு போர் வியூகமே என்று மா.இராசமாணிக்கனார் கருதுகிறார். புள்ளலூர் என்னும் பரந்த நிலப்பரப்பில் மகேந்திரவர்மனின் படை தன் முதன்மையான பகைவர்களான சாளுக்கியர்களைப் போரிட்டு அழித்தது. இந்தச் செய்தியினையே காசாக்குடி செப்பேடு விவரிக்கின்றது. மேகுட்டி கல்வெட்டும் பல்லவர்கள் தோற்றதாகக் குறிப்பிடவில்லை. இந்த இரண்டு சாசனங்களுமே தங்கள் அரசரின் புகழ்பாடுகின்றன.
உதயேந்திரம் செப்பேடு நரசிம்மவர்மன் வல்லபராஜாவை (இரண்டாம் புலிகேசியை) பரியளம், மணிமங்கலம், சூரமாரம் ஆகிய போர்க்களங்களில் எதிர்கொண்டு முறியடித்தான் என்று பதிவு செய்துள்ளது. பல்லவ சாளுக்கிய போர்கள் நடைபெற்ற சூரமாரம், பரியளம் ஆகிய ஊர்கள் எங்குள்ளன என்று தெரியவில்லை.
முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் புள்ளலூரில் தொடங்கிய பல்லவ-சாளுக்கியப் போர் முதலாம் நரசிம்மவர்மன் (மாமல்லன்) (கி.பி 630 – 668) காலத்திலும் தொடர்ந்தது. இரண்டாம் புலிகேசி முதலாம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் முறையாகப் படையெடுத்து வந்தான். மணிமங்கலத்தில் நடந்த போரில் பல்லவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இம்மன்னனுடைய படைதலைவராக பரஞ்சோதி (சிறுதொண்டர் நாயனார்) விளங்கினார். சாளுக்கியர் படை தோற்று ஓடியது. நரசிம்மவர்மன் அவனுடைய அரசாட்சியை முடிவிற்குக் கொண்டுவர எண்ணி அவனை வாதாபிவரை துரத்திச் செல்கிறார்.
வாதாபி நகரில் நடந்த போரில் இந்த நகரம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்படுகிறது. அகஸ்தியர் வாதாபி என்னும் அரக்கனை அழித்ததுபோல, முதலாம் நரசிம்மவர்மன் வாதாபி நகரை அழித்தார் என்று கூரம், உதயேந்திரம், காசாக்குடி மற்றும் வேலுர்ப்பாளையம் செப்பேடுகள் பதிவு செய்துள்ளன. இதன்பின்பு வாதாபி தலைநகரம் ஆகவில்லை. நரசிம்மவர்மன் தன்னுடைய 13 ஆம் ஆட்சியாண்டில் பாதமியை வென்றார் என்று இம்மன்னரின் பாதாமிக் கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது. வாதாபியைக் கைப்பற்றிய பல்லவர்கள் இந்நகரை பதின்மூன்று ஆண்டுகள் வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
வாதாபியை வென்ற பின்பு “வாதாபி கொண்டான்” என்ற பட்டத்தை இம்மன்னர் சூட்டிக்கொண்டார். வாதாபி நகரின் மையத்தில் வெற்றித் தூண் நாட்டிய நரசிம்மவர்மன் தன்னை உபேந்திரனுடன் (விஷ்ணுவுடன்) ஒப்பிட்டுக்கொண்டார் என்று வேலுர்ப்பாளையம் செப்பேடு பதிவு செய்துள்ளது. வாதாபிப் போரில் இரண்டாம் புலிகேசி மடிந்தானா அல்லது உயிர் பிழைத்திருந்தானா என்பதற்குத் தெளிவான ஆதாரம் இல்லை. வாதாபிப் போருக்குப் பின்னர் இம்மன்னனின் கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இம்மன்னன் இப்போரில் மடிந்தான் என்று கொள்ளலாம். புலிகேசியின் இறுதி ஆண்டு கி.பி. 642 என்றும் கருதலாம்.
முதலாம் நரசிம்மவர்மனின் மகன் இரண்டாம் மகேந்திரவர்மன் (கி.பி. 668 – 670) சிலகாலம் மட்டுமே ஆட்சியிலிருந்துள்ளார். சாளுக்கியர்களின் படையெடுப்பு தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. இதனையடுத்துப் பதவிக்கு வந்த முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 670 – 691 or 695) சாளுக்கியர்களுடன் பல போர்க்களங்கள் கண்டான். இவற்றில் சிலவற்றில் வெற்றியும் சிலவற்றில் தோல்வியும் கண்டான்.
சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தியனின் கர்நூல் செப்பேடு மூன்று கூட்டரசரைத் (பல்லவரைத்) தம் வலிமையால் வென்றான் என்று பதிவு செய்துள்ளது. விக்கிரமாதித்தியன் பல்லவ மன்னர்களான இரண்டாம் நரசிம்மவர்மனின் பெருமையை அழித்தான் என்றும், இரண்டாம் மகேந்திரவர்மனின் செல்வாக்கை அழித்தான் என்றும் மற்றும் ஈஸ்வரப் போத்தரசரை (பரமேஸ்வரவர்மன்) வென்றான் எனவும் காஞ்சிபுரத்தை வென்றான் எனவும் கி.பி. 674 ஆம் ஆண்டில் மேலைச் சாளுக்கியர்களால் வெளியிடப்பட்ட கட்வால் செப்பேடு பதிவு செய்துள்ளது.
விக்கிரமாதித்தியனின் படை காஞ்சிபுரத்தை நோக்கி நகருகிறது. பரமேஸ்வரவர்மன் தன் படையுடன் உறையூரை நோக்கி விரைகிறார். விக்கிரமாதித்தியன் படை பல்லவ மன்னனை விரட்டியவாறு உறையூர் சென்று பல்லவர் படையினை உறையூர் அருகே பெருவளநல்லூர் என்னுமிடத்தில் எதிர்கொள்கிறது. சாளுக்கிய – பாண்டியர் கூட்டணியை எதிர்த்துப் போரிட்ட பல்லவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இப்போரில் விக்கிரமாதித்தியன் படுதோல்வியடைந்து கந்தைத் துணியுடன் உயிர்தப்பி ஓடினான் என்று கூரம் செப்பேடு பதிவு செய்துள்ளது.
இரண்டாம் விக்ரமாதித்தன், பல்லவர்கள் மீது பல போர்களை நடத்தினான். இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 705 – 710) காலத்தில் மேலைக் கங்க மரபின் இளவரசன் இரேயப்பாவின் துணையுடன் இரண்டாம் விக்ரமாதித்தன் கி.பி. 730 ஆம் ஆண்டு படைஎடுத்தான். போரில் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் மரணமடைந்தான். காஞ்சியைச் சாளுக்கியர் கைப்பற்றுகிறார்கள். சாளுக்கியர் படை முதன்முதலாகக் காஞ்சி நகருக்குள் நுழைகிறது. வாதாபியை எரியூட்டியதற்காகக் காஞ்சி நகரம் அழிக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். காஞ்சியின் கோவில்களில் மனதைப் பறிகொடுத்த சாளுக்கிய அரசன் விக்ரமாதித்தன் காஞ்சியை அழிக்காமல் விட்டது மட்டுமல்லாமல் காஞ்சிக் கோவில்களுக்கு நிறையப் பொன்னும் பொருளும் வழங்கிச் சிறப்பித்தனர். இந்தச் செய்தி காஞ்சி கைலாசநாதர் கோவிலில் உள்ள இரண்டாம் விக்ரமாதித்தன் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புள்ளலூர் கோவில்கள்
புள்ளலூர் கிராமத்தில் கைலாசநாதர் கோவிலும் இராகவப் பெருமாள் கோவிலும் உள்ளன. சிதைந்த நிலையில் பல்லவர் காலத்து மூலக் கோவிலான இராகவப் பெருமாள் கோவில் விமானம் மட்டும் சுமார் 60 உயரத்தில் கம்பீரமாக உயர்ந்தோங்கி நிற்கிறது.. இந்த விமானத்தின் ஆறு தளங்கள் மற்றும் சிகரத்துடன் அமைக்கப்பட்ட விமானம் மட்டுமே எஞ்சியுள்ளது. விமானத்தின் மேல்கட்டுமானம் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறம் சுண்ணாம்பு பூச்சில்லாமல் சுதை வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. விமானத்தின் கீழே கருவறையைச் சுற்றிப் புதராய் செடிகள் முளைத்துள்ளன. விமானத்தின் உட்புறச் சுவரில் கலைநயமிக்க ஓவியங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகிறன . 2017 ஆம் ஆண்டில் இந்தக் கோபுரத்தின் முகப்புப் பகுதியின் செங்கல் கட்டுமானம் இடிந்து சரிந்து விழுந்துவிட்டது.

சிதைந்த விமானம் PC: Kannan SRIRAM

இராகவப் பெருமாள் கோவில் PC: Kannan SRIRAM
இராகவப் பெருமாள் கோவில் கருவறை மூலவர் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கோவில் கருவறையில் எழிலாகக் காட்சி தருகிறார். காமாட்சி அம்மன் பெருமாளுக்கு இணையாகத் தனிச் சன்னதி கொண்டுள்ளார். தாயார் சன்னதி மட்டுமின்றி ஆஞ்சநேயர் போன்ற பரிவாரமூர்த்திகளுக்கும் சன்னதி உள்ளது. கைலாசநாதர் கோவில் நரசிம்மப் பல்லவன் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. மூலவர் கைலாசநாதர். அம்பாள் காமாட்சி அம்மன். விநாயகர் முருகன் பைரவர் ஆகியோருக்குச் சன்னதிகள் உள்ளன.

கையாலாசநாதர் கோவில்
பெருமாள் கோவிலில் ஐந்து கல்வெட்டுகளும் கைலாசநாதர் கோவில் காமாட்சி அம்மன் சன்னதியில் இரண்டு கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுப் படியெடுக்கப்பட்டுள்ளன. ஜெயங்கொண்ட சோழ மண்டலம், எயிற்கோட்டம் புல்வேலூர் என்று புள்ளலூரையும், திருமேற்றளி மகாதேவர் என்று கைலாசநாதரையும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
கைலாசநாதர் கோவில் காமாட்சியம்மன் சன்னதியில் பராந்தகச் சோழன் காலம் தொடங்கிப் பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. கி.பி. 941 ஆம் ஆண்டுக் கல்வெட்டின் வாயிலாக எயிற்கோட்டம் புல்வேலூரில் உள்ள திருவயோத்திப் பெருமாள் கோவிலுக்கு அரசியார் ஜெயபுவனி சுந்தரமணியார் விளக்கு வைப்பதற்கு 10 கழஞ்சு பொன் அளித்துள்ள செய்தி புலனாகிறது.
கி.பி. 990 மற்றும் கி.பி. 991 ஆம் ஆண்டுகளில் பொறிக்கப்பட்ட முதலாம் இராஜராஜ சோழன் கல்வெட்டுகள் கோவில் நிர்வாகம் பற்றிக் குறிப்பிடுகின்றன. கோவில் சிவபிராமணர்கள் சரிவர வழிபாடுகள் செய்யாவிடில் இவர்களிடமிருந்து தண்டம் வசூலிக்கலாம் என்ற சபையின் முடிவு கி.பி. 990 ஆம் ஆண்டுக் கல்வெட்டும் சரியாக விளக்கு எரிக்காத சிவபிராமணர்களுக்குக் கால் கழஞ்சு தண்டம் விதிக்கப்பட்ட செய்தியை கி.பி. 991 ஆம் ஆண்டுக் கல்வெட்டும் பதிவு செய்துள்ளன. இவ்வூரின் சபை மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று இரண்டு கல்வெட்டுக்களுமே குறிப்பிடுகின்றன. இரண்டாம் இராஜேந்திரன் காலத்துக் கல்வெட்டு ஒன்று பாரதவிருத்தி என்ற பெயரில் உபன்யாசம் செய்தவருக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையை ஆவணப்படுத்தியுள்ளது.
திருவயோத்திப் பெருமாள் கோவில் மற்றும் தண்டலத்துப் பெருமாள் கோவில் ஆகிய இரண்டிற்கும் விளக்கு வைப்பதற்கு ஆறு கழஞ்சு நிவந்தமாக வழங்கப்பட்ட செய்தியும் கி.பி. 970 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட பார்த்திவேந்திர பல்லவன் கல்வெட்டில் பதிவாகியுள்ளது. முதலாம் இராஜராஜன் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுத் துர்க்கை பெருமாள் ஆகிய தெய்வங்களின் வழிபாட்டிற்கும் திருப்பணிக்குமாக வழங்கப்பட்ட கொடைகளைக் குறிப்பிடுகின்றன.
குறிப்புநூற்பட்டி
-
கி.பி 600 முதல் 900 வரை தென்னக வரலாறு மூன்று பேரரசுகளின் வரலாறாக இருந்தது. சாளுக்கியர், பல்லவர் மற்றும் பாண்டியர். https://groups.google.com/forum/#!topic/vallamai/VNxrqr6TpqQ
- பண்டைத் தமிழக வரலாறு: கொங்குநாடு – பல்லவர் – இலங்கை வரலாறு மயிலை சீனி.வேங்கடசாமி பக். 245. http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=294&pno=245#
- பல்லவர் செய்த போர்கள் http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312224.htm
- பல்லவர் வரலாறு மா.இராசமாணிக்கனார். திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். 1944 பக் 107 - பின்புலங்கள் http://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412221.htm
- மேகுட்டி சமணக் கோவிலும் இரண்டாம் புலிகேசியின் ஐஹொளே கல்வெட்டும் அகரம் டிசம்பர் 12, 2017
- A crumbling treasure in Pullalur http://conserveheritage.org/index.php/tours/temple-visits/pullalur-temple/
- Dictionary of Battles and Sieges: P-Z Tony Jaques. Greenwood Publishing Group, 2007 – Battles – 1354 pages
- Heritage Trail: Thiruvallam, Melpadi, Mahendravadi and Pullalur 5 http://know-your-heritage.blogspot.com/2015/10/heritage-trail-thiruvallam-melpadi.html
- Pullalur Temples http://remoteoldtemples.blogspot.com/2013/08/pullalur-temples.html
- The Battle of Pullalur Sreekanth Gandikota http://www.indiancontents.com/2017/05/the-battle-of-pullalur.html
- Battle Of Pullalur Manimangala And Vatapi https://www.studyiq.com/blog/battle-of-pullalur-manimangala-and-vatapi/
அருமையான கட்டுரை ஐயா. காஞ்சிபுரம் அருகிளுள்ள காவேரிபாக்கத்திலும் போர் நடந்துள்ளது (ஆங்கிலேயர் ஆட்சி காலம் என் நினைக்கிறேன்).
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..
LikeLike
பிங்குபாக்: புள்ளலூர்: காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போ
வரலாற்று சிறப்புமிக்க இப்போர்களைப் பற்றி தங்கள் பதிவு மூலமாகத் தான் முதன்முதலாக அறிகிறேன். நன்றி.
LikeLike
கருத்திற்கு மிக்க நன்றி ஐயா.
LikeLike
தொடர்ந்து தங்களின் பிரமிப்பும்.. மகிழ்ச்சியும் அளிக்கும் பதிவுகளை பெற்று ..மகிழ்வில் திளைக்கிறேன்.. நன்றி அய்யா👌👏🙏
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..
LikeLike
தொடர்ந்து தங்களின் பிரமிப்பும்.. மகிழ்ச்சியும் அளிக்கும் பதிவுகளை பெற்று ..மகிழ்வில் திளைக்கிறேன்.. நன்றி அய்யா
LikeLike
வரலாற்றிற்குப் பெருமை சேர்க்கும், நம் பழங்கால வாழ்வியலுக்கு வலுசேர்க்கும், புள்ளலூர் போன்ற இடங்களில் அகழாய்வு நடத்தி, ஆழப்புதைந்து கிடைக்கும் வரலாற்று உண்மைகள் வெளிக்கொணரப் படவேண்டும் ஐயா
சீரீய கட்டுரையினை வழங்கியமைக்கு நன்றி ஐயா
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
LikeLike
சிறப்பான வரலாற்றுக் குறிப்புகள்.
LikeLike
பல்லவ, சாளுக்கிய யுத்தம் பற்றி கல்கி அவர்கள் எழுதிய சிவகாமியின் சபதத்தில் படித்த கற்பனை தகவல்கள்தான் தெரியும். உண்மை சரித்திர சம்பவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.
LikeLike
இப்படி ஒரு நிகழ்வை எங்களுக்கு தெரிய வைத்த தங்களுக்கு நன்றி
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..
LikeLike
அற்புதம் தொடரட்டும் தங்கள் ஆய்வு பணி
LikeLike
அகரம் தளத்திற்கு நல்வரவு. தங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா
LikeLike