புள்ளலூர்: காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் 2

பல்லவ சாளுக்கியப் போர் நடந்த அதே புள்ளலூர் கிராமத்தில் 1,161 ஆண்டுகளுக்குப் பின்பு மைசூர் சுல்தானகத்திற்கும்  (Sultanate of Mysore) பிரிட்டானிய கிழக்கு இந்தியக் கம்பெனிக்கும் இடையே கி.பி. 1780 ஆம் ஆண்டிலும் கி.பி. 1781 ஆண்டிலும் ஆக இரண்டு காலகட்டங்களில் நடந்த போர் இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் என்று பெயர் பெற்றது.

மேஜர் ஜெனரல் சர் ஹெக்டர் மன்றோவின் தலைமையில் ஓர் ஆங்கிலேயப்படை மதராசிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி முன்னேறியது. கர்னல் வில்லியம் பெய்லியின் தலைமையில் ஒரு கூடுதல் படை, ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்றது. 1780 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி புள்ளலூரில் கர்னல் பெய்லியின் படையை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் தங்கள் படைகளுடன் வழிமறித்து இரு வேறு பிரிவாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலால் ஆங்கிலேயப்படை நிலைகுலைந்து பலத்த சேதத்திற்கு உள்ளானது. கர்னல் பெய்லி சிறைப்பிடிக்கப்பட்டு ஸ்ரீரங்கப்பட்டணம் நிலவறைச் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டு மரணித்தார்.

இன்று ஆகஸ்டு 27, 2018 செவ்வாய்க்கிழமை. இன்றைக்குச் சரியாக 237 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1781 ஆம் ஆண்டு இதே ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதியன்று, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியும் மைசூர் சுல்தானகப் படையும் புள்ளலூரில் இரண்டாம் கட்டமாக (ஆங்கிலேய மைசூர்) போரில் ஈடுபட்டனர். இப்போரில் வீரமரணம் எய்திய இரண்டு ஆங்கிலேய அதிகாரிகளின் (கேப்டன் ஜேம்ஸ் ஹிஸ்லப் மற்றும் லெப்ட். கர்னல் ஜார்ஜ் பிரௌன்) நினைவைப் போற்றும் வகையில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி புள்ளலூரில் இரண்டு சதுரக்கூம்பகத் தூண்களை (TWO OBELISKS) நிறுவியது. இப்பகுதியை உள்ளூர் மக்கள் கோரித்தோப்பு என்றும் நினைவிடத்தைக் கோரிமேடு என்றும் அழைக்கின்றனர். இத்தலைப்பில் முதலாம் பதிவைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பதிவு புள்ளலூரில் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர்களைப் பற்றி விவரிக்கிறது.

ஹைதர் அலி – மைசூர் சுல்தான்  

மைசூர் சுல்தானகத்தின் சுல்தான் ஹைதர் அலி மைசூர் இராணுவத்தில் ஒரு சிப்பாயாக வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆவார். உடையாரின் ஆட்சியில் திண்டுக்கல் இராணுவப் பகுதியின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். கி.பி. 1759 ஆம் ஆண்டு மராத்தியர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் வெற்றிபெற்று ஸ்ரீரங்கபட்டணத்தைக் காப்பாற்றிய ஹைதரின் வீரத்தை மெச்சி உடையார் அரசு ஃபடே ஹைதர் பகதூர் (Fateh Haider Bahadur) (Brave Victorious Lion) என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டியது.

ஹைதர் அலி, மைசூர் அரசின் நிர்வாகத்தைக் கைப்பற்றிய போதிலும், கிருஷ்ணராஜ உடையாரே மைசூர் அரசின் தலைவர் என்று ஏற்றுக்கொண்டார். கூர்க், மலபார், பெல்லாரி, குத்தி, கடப்பா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மைசூர் அரசு மாபெரும் மைசூர் சுல்தானகமாக உருவானது. ஹைதரின் நிர்வாகச் சீரமைப்புகள் மைசூரை வலிமை மிக்க அரசாக மாற்றியது. இவருடைய புதல்வர், மைசூர் புலி என்று சிறப்புப் பெயர் பெற்ற, திப்பு சுல்தான் ஆவார். தன்னுடைய 15 ஆம் வயதிலேயே ஒரு குதிரைப் படைக்குத் தலைமை தாங்கினார். இராணுவ யுக்தியில் இவரை யாரும் மிஞ்ச இயலாது.

ஆங்கிலேய மைசூர் போர்கள்

ஹைதர் அலி ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவிற்குக் கப்பம் கட்டிப் பணிய மறுத்தார். இதன் காரணமாகவே கி.பி. 1766 ஆம் ஆண்டு தொடங்கி 1782 வரை (அதாவது ஹைதர் அலியின் மரணம் வரை)  கிழக்கிந்தியக் கம்பெனிப் படையுடன்  போரிட்டார். ஹைதர் அலியின் காலத்தில் முதல் மற்றும் இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்கள் நடைபெற்றன.

1767 – 1769 ஆம் ஆண்டுகளில் முதல் ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்றது. திப்பு சுல்தானும் இப்போரில் பங்குபெற்று தன் வீரத்தை வெளிப்படுத்தினார். போர் முடிவிற்கு வந்தபின் சென்னை உடன்படிக்கை கையெழுத்தானது.

1780 – 1784 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரில் தன் தந்தை ஹைதருடன் இணைந்து ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தார். இந்தப் போரில் திப்பு சுல்தான் முதன்முதலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இராக்கட்டுகளைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மங்களூர் உடன்படிக்கையின் மூலம் போர் முடிவுக்கு வந்தது.

1790 – 1792 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரின்போது திப்பு சுல்தான்,  ஃபிரெஞ்ச் படைகளுடைய உதவியை நம்பி, திருவாங்கூரின் (திருவனந்தபுரத்தின்) மீது படையெடுத்தார். ஃபிரெஞ்ச் படையின் உதவி சரிவரக் கிடைக்காத காரணத்தால் தோல்வியைத் தழுவினார்.

1798 – 1799 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நான்காம் ஆங்கிலேய மைசூர் போரின்போது ஆங்கிலேயர்கள் நிஜாம், மராத்தா மற்றும் திருவாங்கூர் படைகளின் உதவியுடன் மைசூரைத் தாக்கினர். 1799 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடைபெற்ற போரில் திப்பு சுல்தான் தோல்வியுற்றார். மிர் சாதிக் என்ற  மைசூர் சுல்தானகத் தளபதியின் சூழ்ச்சியால் திப்பு சுல்தான் மரணத்தைத் தழுவினார். இத்துடன் மைசூரில் சுல்தான்களின் ஆட்சி முடிவிற்கு வந்தது.

இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர்

1780: ஹைதர் அலியின் படை இந்தியாவின் மிகப்பெரிய படைகளில் ஒன்றாகும். ஹைதர் அலி ஹைதராபாத் நிஜாம் மற்றும் மராத்தா  ஆகியோருடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தில் இந்த இரண்டு அரசுகளும் ஹைதர் அலிக்கோ அல்லது ஆங்கிலேயர்களுக்கோ எதிராக போரில் ஈடுபடக்கூடாது என்பதாகும்.

ஹைதரின் மைசூர் படையினர் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளைக் கைப்பற்றி அங்கிருந்த கிராமங்களைத் தீக்கிரையாக்கினர். இராணுவ புலனறிவு (Military Intelligence) இல்லாத காரணத்தால் ஆங்கிலேயர்கள் இந்த எதிர்பாராத தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து ஹைதர் வேலூர் அருகிலிருந்த ஆற்காட்டை முற்றுகையிட்டார். தன்னுடைய மகன் கரீமை சிதம்பரம் அருகிலிருந்த போர்டோ-நோவோவிற்கு அனுப்பினார்.

ஆற்காட்டு முற்றுகை விலக்குவதற்காக ஆங்கிலேய அரசு, மேஜர் ஜெனரல் சர் ஹெக்டர் மன்றோவின் (Maj. Gen. Sir Hector Munro) தலைமையில், ஓர் ஆங்கிலேயப்படையை  மதராசிலிருந்து அணிவகுத்துச் செலுத்தியது. ஆங்கிலேயப் படையின் அணிவகுப்பை எதிர் நோக்கியிருந்த ஹைதர் அலி அதனை எதிர்கொள்ளவும் தயாரானார்.

இதற்கிடையில் கர்னல் வில்லியம் பெய்லியின் (Colonel William Baillie) தலைமையில் 4000 – 7000 வீரர்களுடன் ஒரு கூடுதல் படை, ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி, அணிவகுத்த செய்தி ஹைதர் அலியின் இராணுவப் புலனாய்வுத் துருப்பிற்கு (Military Intelligence Troop) எட்டியது. குண்டூர் – காஞ்சிபுரம் இடையே உள்ள தொலைவு 475 கி.மீ. ஆகும். கர்னல் வில்லியம் பெய்லி, மேஜர் ஜெனரல் சர் ஹெக்டர் மன்றோவுடன் காஞ்சிபுரத்தில் இணைந்து கொள்வதற்கான திட்டம் இது. கர்னல் வில்லியம் பெய்லியின் படை 1780 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06 ஆம் தேதி புள்ளலூர் (பொள்ளிலூர்) வந்தடைந்தது. இங்கிருந்து காஞ்சிபுரம் 17 கி.மீ. மட்டுமே.

ஹைதர் அலி இந்தச் சமயத்தில் ஒரு சிறந்த போர் வியூகத்தை மேற்கொண்டார். மைசூர் படையை இரண்டாகப் பிரித்து அமைத்தார். திப்பு சுல்தான் தலைமையில் 2000 – 3000 வீரர்கள், குதிரைப்படை, இராக்கெட் படை மற்றும் 18 பீரங்கிகளுடன் கூடிய படை கர்னல் பெய்லியை புள்ளலூரில் வழிமறித்து. பெய்லியின் இந்தப்படை காஞ்சிபுரத்தைச் சென்றடைந்து ஜெனரல் சர் ஹெக்டர் மன்றோவுடன் சேர்ந்துகொள்வதுதான் திட்டம். மற்றொரு மைசூர் படை ஹைதரின் தலைமையில் அணிவகுத்து கர்னல் பிரெய்த் வைட்டின் (Col. Braithwaite) மற்றொரு ஆங்கிலேயப் படையை வழிமறித்தது.

மேஜர் ஜெனரல் சர் ஹெக்டர் மன்றோவிடம் சேர்வதற்காக, 5209  இந்திய வீரர்கள் அடங்கிய ஒரு படைபிரிவு (Native Troop),   ஐரோப்பிய வீரர்கள் கொண்ட கம்பெனியின் படைப்பிரிவு  (Battalion of the Company’s European Troops), எறிகுண்டு படையினர் (Grenadiers) மற்றும் 800 ஹைலாண்டர்கள் (ஸ்காட்லாந்தின் வடமேட்டு நிலத்துக்கு உரியவர்) கொண்ட பெரும்படை மதராஸ், செயின்ட் தாமஸ் மௌண்ட்டிலிருந்து (St.Thomas Mount) காஞ்சிபுரம் நோக்கி அணிவகுத்தது.

புள்ளலூர்: இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் – 1780

battle_of_pollilur

Mural of the Battle of Pollilur on the walls of Tipu’s summer palace PC: Wikipedia

புள்ளலூர் போர் (The Battle of Pollilur (Pullalur) புள்ளலூரில் 1780 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 தேதியன்று நடைபெற்றது. இஃது இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இந்தப் புள்ளலூர்ப் போரில் கர்னல் பெய்லியின் படைக்கு திப்பு சுல்தானின்  படையால் பெருத்த சேதம் ஏற்பட்டது. இப்போரில் ஏராளமான படைவீரர்கள் கொல்லப்பட்டனர். மேஜர் ஜெனரல் சர் ஹெக்டர் மன்றோவின் படையும் கர்னல் பெய்லியின் படையும் அருகருகே இருந்தாலும் இந்த இரண்டு படைகளும் இணைவதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து கர்னல்.பெய்லி,  மேஜர் ஜெனரல் மன்றோவிற்கு. அனுப்பிய குறிப்பில் தன் படை, தலைமைப் படையுடன் இணைவதற்காக, முன்னேறிச் செல்லவிடாமல்  எதிரிப்படை வழிமறிப்பதாக அறிவித்தார்.

ஆங்கிலப் படையின் மோசமான வியூகம் மற்றும் அணிவகுத்து நடத்துங்கலை (poor strategy and logistics) காரணமாக மூன்று நாட்கள் கழித்து மேஜர் ஜெனரல் மன்றோ, 73 ஆம் ஹைலாண்டர்கள் (73rd Highlanders) படை, கேப்டன் டேவிட் பேய்ர்ட் (Captain David Baird) மேன்மைதாங்கிய ஜான் லிண்ட்சே (Honorable John Lindsay) ஆகியோர்  தலைமையிலும்,   ஐரோப்பிய எறிகுண்டு வீரர்களின் இரண்டு கம்பெனிகள் (2 companies of European grenadiers), சிப்பாய்களின் 11 கம்பெனிகள் (11 companies of sepoys) ஆகிய படைகளை கர்னல்.ஃபிளெட்சர் (Col Fletcher) தலைமையில், அனுப்பிவைத்தார். மேஜர் ஜெனரல் மன்றோ அனுப்பிய இந்த வலுவூட்டும் படைபிரிவுகள் (reinforcement troops) கர்னல் பெய்லியின் படைப்பிரிவை பலப்படுத்துவதற்காகச்  சுற்றுப்பாதை வழியாகத் தாமதமாக வந்து சேர்ந்தன.  ஒன்றிணைந்த படை, மேஜர் ஜெனரல் மன்றோவின் படையுடன் இணைவதற்காக, 1780 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 ஆம் தேதியன்று முன்னேறியது. ஒரு மைல் கூட முன்னேற முடியாத நிலையில் ஹைதர் அலியின் படை ஒன்று ஒருங்கிணைந்த படையை வழிமறித்தது.

திப்பு சுல்தான் PC: Wikipedia

rocket_warfare

The Battle of Pollilur, where the forces of Hyder Ali effectively used Mysorean rockets and rocket artillery against closely massed British forces. PC: Wikipedia

மைசூர் படையின் இராக்கெட் படைப்பிரிவு திப்புவின் “மைசூர் இராக்கெட்டை” ‘Mysore rockets’ (sword and blade thrust rockets) கர்னல். வில்லியம் பெய்லியின் (Colonel William Baillie) படைக்கும் வெடிமருந்து பண்டகசாலைகளுக்கும் (ammunition stores) எதிராகப் பயன்படுத்தியது. திப்புவின் இராக்கெட்டின் தாக்குதல்களால் வெடிமருந்து பண்டகசாலை வெடித்துச்  சிதறியது.

வாள் போன்ற துடுப்பு நிலைப்படுத்தியுடன்  (like fin stabilizer) இணைக்கப்பட்ட மைசூர் இராக்கெட்டுகள் சீர்வேகத்தில் பறத்தல் பாதை வழியாக பல மீட்டர்கள் (cruised several meters through the the flight path) எதிரியின் இலக்கைச் சென்று தாக்கியது.  இந்த மைசூர் இராக்கெட்டில், 8 அங்குலம் (20 செ.மீ.) நீளம் x 1.5 – 3 அங்குலம் (3.8 – 7.6 செ.மீ.) விட்டம் ஆகிய அளவுகளில் சுத்தியால் அடித்து சீராக்கப்பட்ட இரும்பு குழாய் (ஒரு பக்கம் மூடப்பட்டது), ஒன்று பயன்படுத்தப்பட்டது. இந்த இரும்புக் குழலுடன் நாலு அடி (ஒரு மீட்டர்) அளவுள்ள மூங்கில் குச்சி (அம்பு) ஒன்று இணைக்கப்பட்டது. இந்த இரும்புக் குழாயில் வெடிமருந்து (black powder) பயன்படுத்தப்பட்டது. இந்த வெடி மருந்து திட உந்துபொருளாக (solid propellant) பயன்பட்டு இராக்கெட்டுக்குத் தேவையான எரி சக்தியையும் (adequate combustion power) எறியியலையும்   (ballistics) அளிக்கிறது. இதன் மூலம் இராக்கெட் சீர்வேகத்தில் (cruise) சென்று இலக்காகிய இறுதி முனையைத்  (terminal end or target) தாக்க இயலும். இரும்புக் குழல் மற்றும் திட உந்துபொருள் ஆகிய இரண்டும் இராக்கெட்டுக்குத் தேவையான அதிக உந்து சக்தி (higher thrust) மற்றும் நீளமான வீச்சு எல்லை (long range) போன்றவற்றை அளிக்கின்றன. இந்த வீச்சு எல்லை இரண்டு கி.மீ. வரை கூட இருந்தது. இந்த மைசூர் இராக்கெட் இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவானதுதான் என்று டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் காலாம் தக்க சான்றுகளுடன் நிரூபித்தார். இந்த மைசூர் இராக்கெட்டே, பிரிட்டிஷ் இராக்கெட் வளர்ச்சித் திட்டத்தின் (British rocket development project) கான்கிரீவ் இராக்கெட்டிற்கு  (Congreve rocket), அடிப்படை மாதிரியாக (base model) அமைந்தது. இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய இராக்கெட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கர்னல். பெய்லி தொந்தரவு எதுவுமின்றி அதே இடத்தில் தங்கி முழு இரவையும் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார். மறுநாள் கர்னல்.பெய்லி மேலும் இரண்டு மைல் தூரம் முன்னேறி ஒரு காட்டிற்குள் புகுந்தார். ஹைதர் அலியின் மூன்று படைப் பிரிவுகள் (army of 3 batteries) திரண்டு அந்தக் காட்டிற்குள் கர்னல்.பெய்லிக்காகக் காத்திருந்தனர். ஒரு படை மையமாகவும் மற்ற இரண்டு படைகள் இரு பக்கங்களிலும் அணிவகுத்து நின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் கள பீரங்கிப் படையின் (field artillery) 57 பீரங்கிகள் ஆங்கிலப் படைகளை நோக்கி குண்டு மழை (covering fire) பொழிந்தன. கர்னல்.பெய்லியின் ஆங்கிலப் படை சதுர வடிவில் அணிவகுத்து வந்தது. அணிவகுப்பின் நடுவே நோயுற்றோர், மூட்டை முடிச்சுகள் (kit baggages), போர்த்தளவாடங்கள் (ammunition) போன்றவை இடம்பெற்றன. இந்த மையப் பகுதி பீரங்கிப் படையால் குறிவைத்துத் தாக்கப்பட்டது. மூன்று மணிநேர கடும் சண்டைக்குப் பிறகு, வீரம் மிக்க ஆங்கிலப் படை  பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. ஹைதர் அலியின் படையும் பின்வாங்கியது.

மைசூர் படையின் உதவிக்காக வந்த ஃபிரெஞ்ச் படைக்குத் தலைமை தாங்கிய கர்னல். லாலி  (Col. Lally), அவருடைய படை வீரர்களை வெளியில் இழுத்து, குதிரைப்படையைக் கொண்டு, பின்வாங்கிக்கொண்டிருந்த ஆங்கிலப் படையை மறிக்குமாறு பணிக்கப்பட்டார். இதற்கிடையே இரண்டுமுறை பலத்த அதிர்வெடிச் சத்தம் கேட்டது. இந்த அதிர்வெடிகள் ஆங்கிலப் படையின் முன்னே வெடித்து அவர்களின் பீரங்கிகளைத் தகர்த்தன. இதன் காரணமாக ஆங்கிலப்படை மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகியது.

இதனால் உற்சாகமடைந்த ஹைதர் அலி அவருடைய குதிரைப்படை, துப்பாக்கி ஏந்திய காலாட்படை ஆகிய எல்லாவற்றையும் தாக்குதலில் ஈடுபடுத்தினார். பெய்லியின் படையும் திரும்பித் தாக்கினர். பெய்லியின் படையின் வீரர்கள் 400 என்று எண்ணிக்கையில் சுருங்கினர். மீண்டும் மீண்டும் துப்பாக்கியால் பல சுற்றுகள் சுட்டதால் பெய்லியின் வீரர்கள் செயலிழந்தனர். ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் குறைந்தது.

இன்னும் சில ஆங்கில அதிகாரிகளும்  துப்பாக்கி ஏந்திய வீரர்களும் 13 சுற்றுகள் சுட்டனர். மின்னல் வேகத்தில் ஹைதர் அலியின் குதிரைப்படையும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது. எஞ்சியுள்ள சில வீரர்களையாவது காப்பற்றும் நோக்கில் கர்னல் பெய்லி சமரசக் கொடியை அசைத்தார். இவ்வாறு கர்னல் வில்லியம் பெய்லி மைசூர் சுல்தானகப் படையிடம் சரணடைய நேரிட்டது. இந்தச் செய்தி அறிந்த மேஜர் ஜெனரல் சர்  ஹெக்டர் மன்றோ தன் பீரங்கிகள் மற்றும் மூட்டை முடிச்சுகளை (Baggage) காஞ்சிபுரம் அருகேயுள்ள ஒரு குளத்தில் (Tank) போட்டுவிட்டு தன் படையுடன் மதராசை நோக்கிப் பின் வாங்கினார்.

File:Surrender of Baillie to Hyder Ali.jpg

Surrender of Baillie to Hyder Ali, 1780, illustration from ‘Cassell’s Illustrated History of England’ (20th century) PC: Wikipedia

கர்னல் பெய்லி மற்றும் சில தப்பிப் பிழைத்த ஆங்கிலேய அதிகாரிளையும் சிப்பாய்களையும் மைசூர் படை சிறைப்பிடித்துப் போர் அகதிகளாக ஸ்ரீரங்கப்பட்டணம் கொண்டு சென்றது. இந்தப் போர் அகதிகள் ஒரு நிலவறையில் (dungeon) அடைக்கப்பட்டுக் கொடுமைப் படுத்தப்பட்டனர். ஸ்ரீரங்கப்பட்டணம் நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில், அரங்கநாத சுவாமி கோவிலின் வடபுறம் லால் மகால் அரண்மனைக்கு அருகில்  அமைந்துள்ள இந்த நிலவறையை இன்றும் காணலாம். செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்ட இந்த நிலவறை 30.5 மீ. நீளம் x 12.2 மீ. அகலமும் கொண்டது. திப்பு சுல்தான் இந்த நிலவறையில் போர்க்கைதிகளைச் சிறைப்படுத்தினார். நிலவறையின் வடபுறத்தில் கிழக்கு மேற்காக அமைக்கப்பட்ட கல் பலகையில் போர்க் கைதிகள் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தனர். இந்த நிலவறையின் பாதி உயரத்திற்குத் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. இந்த நிலவறைக்கு கர்னல் பெய்லியின் டன்ஜன் (Colonel Baillie’s Dungeon) என்று பெயர். ஏனெனில் இந்த வீரமிக்க அதிகாரி இந்த நிலவறையிலேயே 1782 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி மரணமடைந்தார்.

Col. Baillie’s Dungeon & Memorial @ Srirangapatna (Near Mysore)

பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் எதிர்வினை (Reaction by British Government in India)

புள்ளலூர் போர் (1780) நடந்து முடிந்தபின் ஹைதர் அலி ஆற்காட்டு முற்றுகையைப் புதிய பலத்துடன் மேலும் வலுப்படுத்தினார். ஆங்கிலேயப் படைகள், மைசூர் படைகளிடம் சந்தித்த படுதோல்வி, பிரிட்டானிய கிழக்கிந்திய கம்பெனியின்  ஃபோர்ட் வில்லியம் (வங்கம்) மாகாணத்தின் முதல் ஆளுநரான வாரன் ஹேஸ்டிங்ஸிடம் எதிரொலித்தது.   இவர் இந்தியாவின் முதல் அலுவல்முறை கவர்னர் ஜெனரல் (கி.பி. 1773 to 1785) (the first de facto Governor-General of India) ஆவார். ஆங்கிலேய-மைசூர் போர் முடிவுக்கு வந்தவுடன் ஹேஸ்டிங்ஸ் மதராஸ் வந்தடைந்தார்.

ஹைதரை எதிர்கொள்ள லெப்ட்.ஜெனரல் அயர் கூட்டின் (General Eyre Coote) தலைமையில் ஒரு புதிய படைப்பிரிவு வங்கத்திலிருந்து மதராஸிற்குப் புறப்பட்டது. லெப்ட்.ஜெனரல் அயர் கூட் மதராஸ் வந்து ஜெனரல் சர் ஹெக்டர் மன்றோவிடமிருந்து தலைமைப் படைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். லெப்ட்.ஜெனரல் அயர் கூட் கர்னாடிக்கை நோக்கிப் படை நடத்திச் சென்று கடலூரை ஆக்கிரமித்தார். ஆங்கிலேயப் படை போர்டோ நோவோவில் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டது. ஹைதர் இந்த ஆங்கிலேயப் படையைத் தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை.

புள்ளலூர் போர் (கி.பி. 1781)

NPG 124; Sir Eyre Coote attributed to Henry Robert Morland

லெப்ட்.ஜெனரல் அயர் கூட்

ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியும் மைசூர் சுல்தானகப் படையும் புள்ளலூரில் (பொள்ளிலூரில்)  1781 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 தேதியன்று மற்றொரு ஆங்கிலேய மைசூர் போரில் ஈடுபட்டனர். இந்தப் போரில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கு லெப்ட்.ஜெனரல் அயர் கூட் தலைமையேற்று வழிநடத்தினார். போர் நடந்த இடம் கர்னல்.பெய்லியின் படை தோல்வியைத் தழுவிக் கொல்லப்பட்டோ அல்லது சிறைபிடிக்கப்பட்ட அதே இடம். வழக்கம்போல லெப்ட்.ஜெனரல் கூட்டின் ஒரு பகுதி படை திப்புவையும் மற்றொரு பகுதிப் படை ஹைதரையும் எதிர்கொண்டனர். எட்டு மணி நேரம் மட்டும் நீடித்த இந்தப் போரில் ஹைதரின் படை பெரும் உயிர்ச் சேதத்தைச் சந்தித்தது. எனவே இப்படை காஞ்சிபுரம் நோக்கிப் பின் வாங்கியது. உணவுப்பொருள் பற்றாக்குறையால் லெப்ட்.ஜெனரல். கூட்டின் படை திருப்பாசூர் (திருவள்ளூர் மாவட்டம்) கிராமம் வரை பின்வாங்கியது. ஹைதர் தோற்றாலும் போர் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றதாகக் கருதப்பட்டது.

இரண்டு சதுரக்கூம்பகத் தூண்கள் (Two Obelisks)

இந்திய கிழக்கிந்தியக் கம்பெனி இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரில் (1781 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 தேதி) மரணம் எய்திய இரண்டு ஆங்கில அதிகாரிகளின் நினைவைப் போற்றும் வகையில் புள்ளலூரில் இரண்டு சதுரக்கூம்பகத் தூண்களை (TWO OBELISKS) நிறுவியது. முதல் அதிகாரி கேப்டன் ஜேம்ஸ் ஹிஸ்லப் (Captain JAMES HISLOP) ஓர் அதிக உறுதி வாய்ந்த அதிகாரியாவார். இரண்டாம் அதிகாரி லெப்ட். கர்னல் ஜார்ஜ் பிரௌன் (Lieutenant Colonel GEORGE BROWN), ஒரு தகுதி மற்றும் அனுபவமுள்ள அதிகாரியாவார். இந்தப் போரில் பிரிகேடியர் ஜெனரல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட்டும் (Brigadier-General James Stuart) கர்னல் ஜார்ஜ் பிரௌனும் (Colonel George Brown) ஒரே பீரங்கிக் குண்டால் தாக்கப்பட்டு ஒரு காலை இழந்தனர். ஒரு காலை இழந்த ஜார்ஜ் பிரௌன் இந்த இடத்திலேயே மரணமடைந்தார். உள்ளூர் மக்கள் இந்தச் சதுரக் கூம்பக நினைவிடங்களைக் “கோரி” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இவ்விடம் “கோரிமேடு” என்றும் இந்தப் பகுதி “கோரித்தோப்பு” என்றும் உள்ளூர் மக்களால் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.

British soldiers' memorial_2008

இரண்டு சதுரக்கூம்பகங்கள் (TWO OBELISKS) PC: Wikipedia

Cap James Hislop_dates damaged

கேப்டன் ஜேம்ஸ் ஹிஸ்லப் (தகவல் பலகை) PC: Wikimedia Commons

Sacred to the memory of Captain James Hislop
who was killed by a Cannon Ball from the Enemy near this Spot,
The Field of Battle, 27th August 1781 while serving as Aid de Camp to
Lieut. General Sir Eyre Coote kbe, Commander in Chief
——————
His professional Abilities and private Virtues,
Were felt and acknowledged by all his Contemporaries.

Lieu Col George Brown_more visible text

லெப்ட். கர்னல் ஜார்ஜ் பிரௌன் PC: Wikipedia

Sacred to the Memory of Lieutenant Colonel George Brown
When Lieutenant of Grenadiers in ??? Regiment
he lost his Right Arm on the storm of Conjevearam Pagoda occupied by Ye French
on the 18th of April ???? and fell in a general Action fought on this Field between the English
Forces and the Troops of Hyder Ally??? Bahaduer on the 27th of August 1781
esteemed by every Rank a gallant Soldier, an able Officer, and ???? ??? an Honest Man ???

இன்று 27 ஆம் தேதி ஆகஸ்டு மாதம் 2018. இன்றைக்குச் சரியாக 237 ஆண்டுகளுக்கு முன்பு புள்ளலூர் போரில் வீர மரணமடைந்த இரு ஆங்கிலேய அதிகாரிகளுக்கு என் வீரவணக்கங்கள்.

குறிப்புநூற்பட்டி

  1. Battle of Pollilur (1781) (Wikipedia)
  2. Colonel Baillie’s Dungeon — Srirangapattana. Casey. diksoochi blogspot 13 January, 2008.
  3. In a forgotten land. Pradeep Chakravarthy. The Hindu February 27, 20115
    Pullalur (Wikipedia)
  4. The Battle of Pullalur and the Naturalization of the British on the Subcontinent. UC Press E-book collection, 1982 – 2004. University of California.
  5.   “The story of two obelisks”. Muthiah, Ramanathan, 16 October 2009 http://www.madrasmusings.com.

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தமிழ்நாடு, தொல்லியல், வரலாறு, Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to புள்ளலூர்: காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் 2

  1. பிங்குபாக்: புள்ளலூர்: காஞ்சிபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போ

  2. ஸ்ரீராம் சொல்கிறார்:

    திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட்டுகள் சமீபத்தில் பூமியைத் தோண்டும்போது கிடைத்ததாகப் படித்த நினைவு.

    போர்க்காட்சிகள் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கின்றன. சாண்டில்யனின் சரித்திரக்கதை படிக்கும் உணர்வு.

    Like

  3. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    நண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்தினை வழிமொழிகின்றேன் ஐயா

    Like

  4. Dr B Jambulingam சொல்கிறார்:

    ராக்கெட் நுட்பம் வியக்கவைத்தது. அண்மையில் ஸ்ரீரங்கப்பட்டினம் சென்றபோது Baillie’s Dungeon நிலவறையினைக் கண்டோம்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.