பல்லவர்கள் பேணிக் காத்த காஞ்சிக் கடிகை

தென்னிந்தியாவில் கடிகைகள் வடமொழிக் கல்விச் சங்கங்களாகத் (Academy) திகழ்ந்தன. கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து காஞ்சிக் கடிகை பல்லவர்களின் முடியாட்சி (Monarchy), இறைமாட்சி, ஆட்சி அமைப்பு முறை (Polity), அரசியல் (Politics), அமைச்சு (Ministry), படையியல் (Military), குடியியல் (Civics) போன்ற துறைகளில் செல்வாக்குப் பெற்றிருந்தது. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் என்று குறள் கூறும் நெறிகளுக்கேற்ப பல்லவ மன்னர்களின் அவையில் இடம்பெற்றிருந்த  கடிகையார் மிகவும் இன்றிமையாத தருணங்களில், அரசின் சிக்கல்களுக்குத் தீர்வளிக்கும் அங்கமாக இருந்தனர். காஞ்சிபுரம், கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல், தட்சஷீலா (கி.மு. 5 – கி.பி. 5 நூற்றாண்டு, பஞ்சாப், பாகிஸ்தான்) , நாளந்தா (கி.பி. 5 – கி.பி. 12, நூற்றாண்டு, பீகார்), விக்ரமஷிலா (கி.பி. 8 – 13 நூற்றாண்டு, பீகார்),   போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைப் போலவே, ஒரு வேதாகமப் பல்கலைக்கழகமாகவும் புகழ் பெற்றிருந்தது. காஞ்சிக் கடிகை காஞ்சிபுரத்தின் மேம்பட்ட வேதக் கல்வி மையம் (Advanced Vedic Education Centre) என்று பரவலாக மதிக்கப்பட்டது. இஃது இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்களைத் தன்பால் ஈர்த்தது. நாளந்தாவில் இருந்த புத்தமத அறிஞரும் துறவியுமானர் தர்மபால காஞ்சியில் இருந்து வந்தவர் ஆவார்.

காஞ்சிபுரம்

கல்வியில் கரையில்லாத காஞ்சி என்று திருநாவுக்கரசரும் நகரேஷூ காஞ்சி என்று மகாகவி காளிதாசனும் புகழ்ந்து போற்றும் காஞ்சி மாநகரம் ஒரு பழைமையும் பெருமையும் வாய்ந்த நகரம் ஆகும். வாரணாசி, அயோத்தி, காஞ்சிபுரம், மதுரா, துவாரகை, உஜ்ஜைனி, ஹரிதுவார் ஆகியவை முக்தி தரும் ஏழு நகரங்கள் என்று கருதப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் காஞ்சியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடலிலும், பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையிலும் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரை ஆட்சி செய்தது விவரிக்கப்பட்டுள்ளது. மகரிஷி பதஞ்சலி முனிவர் (கி.மு. 150) தான் இயற்றிய மகாபாஷ்யம் என்ற நூலில் காஞ்சி மாநகரைக் குறிப்பிட்டுள்ளார். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையும் காஞ்சியைப் பற்றிப் பேசுகிறது. சிம்மவிஷ்ணுவின் (கி.பி. 575) காலத்திலிருந்து இந்நகரம் பல்லவர்களின் தலைநகராகத் திகழ்ந்துள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.640) சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இவ்வூருக்குப் பயணம் மேற்கொண்டாராம். இவர் ஆறு மைல் சுற்றளவிற்குக் காஞ்சி பரந்து விரிந்திருந்தது என்றும் கௌதம புத்தர் காஞ்சி நகருக்கு வருகை புரிந்தார் என்றும் தன் குறிப்பில் எழுதியுள்ளார்..

கடிகா: சொல்லும் பொருளும்

கடிகா (घटिका) என்ற சம்ஸ்கிருதச் சொல்  பண்டைய கால நேர அளவைக் குறிக்கிறது.  கடிகை என்பது 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவாகும். ஒரு திதிக்கு (நாளுக்கு) 60 கடிகைகள். பௌத்தர்களின் பாலி மொழியில் கடிகா என்றால் கிண்ணம் (Bowl) என்று பொருள். காஞ்சிபுரத்தில் கி.பி. 4 ஆம் நூற்றண்டில் கடிகா என்ற வடமொழிக் கல்வி நிறுவனம் செயல்பட்டுள்ளது. கடிகா (Ghatika) என்ற வடமொழிச் சொல் தமிழில் கடிகை என்று தற்சமமாக வந்துள்ளது. கடிகை என்றால் “ஆழ்ந்து அறிவு பெற முயலும் இடம்” என்று பொருள் கொள்ளலாம்.

சமணத் துறவிகள் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்திச் சமயத் தொண்டு ஆற்றினர். சமணத் துறவிகளின் சங்கம், சமண சமயக் கொள்கைகளோடு தமிழ், கலை, இலக்கியம் ஆகியவற்றையும் வளர்க்கத் தொடங்கியது. இதைப் போலவே கடிகைகள் வேதம், வேதாந்தம், உபநிடதம், வடமொழி இலக்கணம், இலக்கியம், புராணம் ஆகியவற்றைப் பயிற்றுவதற்காக நிறுவப்பட்டன. தட்சஷீலா பல்கலைக் கழகத்தில் சாணக்கியர், சந்திரகுப்தர், சரகர் ஆகியோர் பயின்றுள்ளனர். இங்கு வில்வித்தை, மிருகங்களை வேட்டையாடுதல், யானைப்பயிற்சி, சட்டம், மருத்துவம், இராணுவ அறிவியல் போன்ற 18 கலைகள் கற்பிக்கப்பட்டனவாம். இங்கு வேதக்கல்வி மட்டுமின்றி பௌத்தக் கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டது. மகாயான பெளத்த சிந்தனை இங்கேதான் தோன்றியது.

கடிகை என்றால் என்ன? மதம் சம்பந்தமான சபை அல்லது மன்றம் (Religious Assembly) என்ற பொருளில் வாத்ஸ்யாயனர் இந்தச் சொல்லைக் கையாளுகிறார். முதுபெரும் தொல்லியல் அறிஞர் கீல்ஹோர்ன் (Kielhorn) கடிகா என்பதைக் குழு என்ற பொருளுடன் தொடர்புபடுத்துகிறார். கற்றறிந்த புனிதமான அந்தணர்கள் கூட்டம் என்று புரிந்துகொள்கிறார். இவர்கள் கூடும் இடம் சபை என்றும் அறியப்பட்டது. கற்றறிந்தோர் மற்றும் புனிதமான அறிஞர்கள் கூடும் இடம் அல்லது சபை என்றும் கடிகே (Ghatige) என்னும் கலிகே (Ghalige) என்ற சொற்கள் இந்தச் சபையோடு தொடர்புடையது என்று கீழ்த்திசை நாடுகள் மற்றும் மொழிகளைக் கற்றவரான எல்.டி.பார்னெட் (L.D.Barnett) கருதுகிறார். கடிகை என்பது ஒரு சமய மையம் (Religious Centre) என்று மொழிபெயர்க்கிறார் வி.எஸ். பதக் (V.S.Pathak). கடிகை என்பது கல்விமான்களும் மாணவர்களும் முயன்று அறிவை வளர்த்துக்கொள்ளும் இடம் அல்லது சபை  என்று டாக்டர்.சி.மீனாட்சி நினைக்கிறார். பல கல்வெட்டுகளில் அடிக்கடி இடம்பெறும் கடிகை என்னும் இந்தச் சொல்லுக்குப் பலவிதமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

வித்யாசாலைகளிலும் நம்முடைய வேத சாஸ்திரங்களை மட்டுமோ அல்லது அவற்றோடு இதர கலைகளையும் அந்தக் கால ஸயன்ஸ்களையும் சேர்த்தோ போதித்தவற்றுக்குத்தான் கடிகா ஸ்தானம் என்று பேர். … ஒரிஜினலாக வேதப்யாஸத்தை மையமாகக் கொண்டவற்றுக்கே இந்தப் பெயர். ‘கடிகை’ என்று தமிழில் சுருக்கிக் குறிப்பிடுவார்கள். குருகுலமாக இல்லாமல், பல வாத்யார்கள் ஏராளமான மாணாக்கர்களுக்கு வேதம், அல்லது வேதத்தோடு ‘ஸெக்யுலர் எஜூகேஷன்’ (உலகியல் படிப்பு) சொல்லிக்கொடுத்த கலாசாலைகளும் இருந்தன… காஞ்சி மண்டலத்தில் இருந்ததாக நான் சொன்ன கல்வி நிலையங்கள் இப்படிப்பட்ட கடிகா ஸ்தானங்களே.
தெய்வத்தின் குரல். என் ரிஸர்ச்’: கடிகை பற்றி. டிசம்பர் 29, 2014 காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள்

பாகவத பேரரசர்கள்

பல்லவர்கள் தங்களை “பரம பாகவதர்” என்று அழைத்துக் கொண்டதைச் செப்பேடுகளில் காணலாம். “ஜிதம் பாகவதா” என்ற சொற்றொடரையும் செப்பேடுகள் கொண்டுள்ளன. இவர்கள் பரம பாகவத மரபில் (Supreme Bhagavatha Traditions) உதித்தவர்கள். பல்லவர் கால வைணவத்தில் பாகவத இறையியல் (Bhagavatha Theology) முதன்மை பெற்றிருந்தது என்கிறார் டென்னிஸ் ஹட்சன். மக்களின் அரசனான நரேந்திரன் முடிசூட்டியபின் பாகவதப் பேரரசன் ஆகிறான். இரண்டாம் நந்திவர்மனை பாகவத பேரரசன் (Bhagavatha Emperor) என்றே ஹட்சன் தம் நூல்களில் குறிப்பிடுகிறார். (The Vaikunta Perumal Temple at Kanchipuram D. Dennis Hudson Mapin Publishing).

காஞ்சிக் கடிகை: ஒரு வேதாகமக் கல்லூரி 

காஞ்சிக் கடிகையில் இருந்த அந்தணர்கள் வைதிகத்திற்கு (வேதம் -> வைதிகம்) பொறுப்பெற்றிருந்தனர். பல்லவ மன்னனின் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக இராஜசூய யாகத்தை நடத்தும் பொறுப்பும் இவர்களிடமே இருந்துள்ளது. கடிகையின் ஆகம அந்தணர்கள் (Agamic Brahmins) புதிதாக பிறந்த நரேந்திரனுக்கு (மக்களின் அரசனுக்கு) ஆச்சார்யர்களை  நியமித்தனர். அரசனின் கோவில்களுக்கான கட்டடங்களுக்கு  வழிகாட்டினர். மன்னனின் பக்தியை வளர்த்துப் பாதுகாத்தனர். பல்லவ அரசனின் ஆட்சி செழிக்க வேதத்தையும் ஆகமத்தையும் இணைத்து வைதீக சடங்குகளைச் செய்தனர். வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் இடையேயான செயல்பாடுகளைக் கவனிப்பதற்கு இரண்டு வேறுபட்டு தர்மங்களுடன் இரண்டு அந்தணர் குழுக்கள்  இருந்திருக்கலாம். இந்த இரண்டு குழுக்களும் கடிகையிலேயே இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கிடையான வேறுபாடுகள் வரையறை உடையது.  எடுத்துக்காட்டாக வைதிகர்கள், சடங்குகள் செய்வதற்குரிய வர்க்க பேதம் காரணமாக, அரசனுக்காக இராஜசூய யாகம் செய்ய இயலாது. சுருக்கமாக காஞ்சிக் கடிகை ஒரு வேதாகமக் கல்லூரி என்று புரிந்துகொள்ளலாம்.

இங்கு வேதங்கள், வேதாந்த சாஸ்திரங்கள், வேதாங்கங்கள், உபவேதங்களான ஆயுர்வேதம் (அதர்வணம்), சில்பவேதம், தனுர்வேதம் (ரிக்), கந்தர்வவேதம் (சாம), இதிகாசம், புராணம், யோகம், தர்க்கம், சோதிடம், வானவியல், அரசியல், அரச-தந்திரங்கள், இராணுவ தந்திரங்கள் ஆகிய பாடங்கள்  போதிக்கப்பட்டுள்ளன. தனுர்வேதம் போர்க்கலைகள் மற்றும் ஆயுதங்களைக் கையாளும் கலைகளைப் பற்றிச்  சொல்கிறது. சத்திரியர்களுக்கு அந்தண ஆசிரியர்களே போர்க்கலையைக் கற்றுத் தந்தாகப் புராணங்கள் பதிவு செய்துள்ளன.

கடிகை என்ற சொல் தோன்றிய கதை

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரில பட்டர் (Kumarila Bhaṭṭa) என்னும் அறிஞர், பூர்வ மீமாம்சை குறித்த  “மீமாம்சா சுலோக வார்த்திகம்” என்ற நூலை எழுதியவர் ஆவார். சோமேஸ்வர பட்டர் என்பவர் இந்த நூலுக்கு “தந்த்ரவார்த்திகம்” என்ற தலைப்பில் உரை எழுதியுள்ளார். குமரில பட்டர் எழுதிய நூலில் கடிகா ஸ்தானம் என்ற சொல்லாட்சிக்கான பொருளை காஞ்சி மகான் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கண்டறிந்துள்ளார்.

வேத பாடசாலையின் வேத பண்டிதர்கள், தம்முடைய மாணவர்கள்  வேதத்தில் பெற்ற  திறனை (ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறமையை) சோதனை செய்யவேண்டியிருந்தது. இதற்காக மனப்பாடம் செய்ய வேண்டிய வேதபாகத்தின்  ஸ்லோகங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்து அமைத்துக் கொள்வார்களாம். இவ்வாறு பிரித்த வேதபாகங்களின் தலைப்பை ஓலை நறுக்குகளில் எழுதி ஒரு சிறு பானையில் (பானை என்றால் கடிகை என்று பொருள் உண்டு) போட்டு குலுக்கி எடுப்பார்களாம். யாருக்கு எந்த ஸ்லோகப் பகுதி வருகிறதோ அந்த மாணவர் அதை ஒப்பிக்க வேண்டும். குலுக்கிப் போட பயன்பட்ட பானையின் பெயராலேயே இந்த வேதக் கல்வி நிறுவனம் கடிகா ஸ்தானம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது குமாரில பட்டரின் நூல் மூலம் புர்ந்துகொண்டதாகத் தெரிகிறது. (சான்று: இரா.கணபதி எழுதிய தெய்வத்தின் குரல் பாகம் நான்கு)

தலகுண்டா கல்வெட்டில் காஞ்சிக் கடிகை

அந்தண குடியிற் பிறந்த மயூரவர்மன் (கி.பி. 345 – 370) என்பவன் கடம்ப குலத்தைப் பாணவாசியில் நிறுவி ஆண்டுவந்தான். காகுஸ்தவர்மன் இவனுடைய கொள்ளுப் பேரனாவான். கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டம்,  தலகுண்டா கிராமத்தில் உள்ள பிரணவேஸ்வரா கோவில்  வளாகத்தில் சம்ஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ள இந்த மன்னனின் கல்வெட்டிற்கு  தலகுண்டா தூண் கல்வெட்டு என்று பெயர். இந்தக் கல்வெட்டே கடிகையைப் பற்றி முதலில் பதிவு செய்த கல்வெட்டு என்று கருதப்படுகிறது. (பார்வை: எபிகிராபியா இண்டிகா தொகுதி VIII எண். 5 பக். 24). இக்கல்வெட்டு கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று பி.எல்.ரைஸ் கால அளவீடு செய்துள்ளார். இக்கல்வெட்டு காஞ்சியில் செயல்பட்ட கடிகையைப் பற்றிப் பதிவு செய்துள்ளது.

“யஹ் ப்ரயாய பல்லவவெந்த்ர புரீம் குருனா சமம் வீர சர்மனா, அத்ஹீஜிக் ஹாம்சுஹ ப்ரவகனம் நிக்ஹிலம் விவேலாய தர்க்குகஹ”

மயூரசர்மன், தன்னுடைய ஆசிரியர் வீரசர்மனுடன், பல்லவேந்திரபுரி (காஞ்சிபுரம்) நகருக்குச் சென்று சமய அறிவை எல்லாம் கற்றறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டதால், அங்கு இருந்த கல்லூரியான கடிகாவில் மாணவனாக இடம் பெற்று விட்டான் என்று பதிவு செய்துள்ளது.

talagunda_pillar_inscription_28455-460_ad29_at_talagunda

தலகுண்டா தூண் கல்வெட்டு

மயூரசர்மனும் அவனுடைய ஆசிரியர் வீரசர்மனும்  வேத சாஸ்திரங்களில் புலமை உடையவர்கள். என்றாலும் காஞ்சிக் கடிகையில் இடம் பெற்றிருந்த சதுர்வேத பண்டிதர்களிடம் கற்ற பிறகே ஒருவரின் வேத சாஸ்திரக் கல்வி முழுமை பெற்றதாகக் கருதப்பட்டதாகத் தெரிகிறது.  மயூரசர்மன் யாசகனாக (தர்க்குகஹ), அஃதாவது அறிவினை யாசிப்பதற்காகக், காஞ்சிக் கடிகைக்குச் சென்றான். தன்னுடன் தன்னுடைய ஆசிரியனான வீரசர்மனுடன் சென்றான். வேதம் முழுவதையும் பிரவசனம் (Expound) செய்து  கற்றுக்கொள்ளும் நோக்கில் இவர்கள் காஞ்சிக் கடிகைக்குச் சென்றுள்ளனர். பிரவசனம் என்றால் மிகுந்த கவனத்துடன் ஆழ்ந்து ஆராய்ந்து கற்றல் என்று பொருள் கொள்ளலாம். இந்த நிகழ்வு கி.பி. 4 ஆம் நூற்றண்டில் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பல்லவமல்லனாகிய இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடி செப்பேடு காஞ்சி கடிகையைப் பற்றியும் இக்கடிகையில் அந்தணர்களுக்கு நான்கு வேதங்கள் கற்பிக்கப்பட்ட செய்தியையும் பதிவு செய்துள்ளது. எனவே காஞ்சிக் கடிகையில் வேத ஆராய்ச்சிக் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது தெளிவு.

காஞ்சிக் கடிகைக்குப் பல்லவர்கள் புரவலர்களாகத் திகழ்ந்தார்கள், பேணிக் காத்தார்கள்.   கடிகையார்களும் பல்லவ மன்னனுக்காக அஸ்வமேத யாகம் நடத்தினர். ஒரு சமயம் மயூரசர்மனுக்கும் பல்லவர்களுடைய குதிரைச் சேவகனுக்கும் வாக்குவாதம் முற்றிச் சண்டை மூண்டது. இந்தச் சண்டை, சேவகன் அந்தணரை ஏளனமாகப் பேசியதால் மூண்ட சண்டை ஆகும். அந்தணர்கள் சத்திரியர்களால் உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை என்று கருதிய மயூரசர்மன் கோபமுற்று தன் ஒளி பொருந்திய வாளை ஏந்தினான். பல்லவரின் காவலர்களை வெற்றிகொண்டு காஞ்சியை விட்டகன்று ஸ்ரீபர்வதம் வரை பரவியிருந்த அடர்காட்டில் புகுந்தான்.

வேலூர்ப்பாளையம் செப்பேடு

மூன்றாம் நந்திவர்மனால் பொறிக்கப்பட்ட வேலூர்ப்பாளையம் செப்பேட்டின் 7 ஆம் செய்யுள்  (சம்ஸ்கிருத மொழி பகுதி) வானத்தில் உள்ள நிலவைப் போன்ற ஸ்கந்தசிஷ்யன் (Skandasishya) என்ற பல்லவ குல மன்னன்,  சத்யசேணன் (Satyasena) என்ற (ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த) குறுநில மன்னனிடமிருந்து காஞ்சியையும் கடிகையையும் கைப்பற்றியதாகப் பதிவு செய்துள்ளது. (S.I.I. Vol. II, Part V, p. 508, 112 – 113). காஞ்சிக் கடிகையை கி.பி. 4 ஆம் நூற்றண்டில் பல்லவர்களிடமிருந்து சிற்றரசர்கள் கைப்பற்றி நிர்வாகித்து வந்ததையும் அதைப் பல்லவர்கள் மீட்டெடுத்தனர் என்பதும் இக்கல்வெட்டின் மூலம் தெளிவாகிறது. இந்த ஸ்கந்தசிஷ்யனே சிவஸ்கந்தவர்மன் என்பது டாக்டர்.சி.மீனாட்சியின் கருத்தாகும்.

பல்லவர்களில் பலர் சிறந்த வடமொழியறிஞர்களாக விளங்கினர். வடமொழியே பல்லவ அரசின் ஆட்சி மொழியாகவும் அறிஞர் மொழியாகவும் விளங்கியுள்ளது. பல்லவர்கள் 32 செப்பேடுகளை வெளியிட்டு உள்ளனர். பிராகிருதம் மற்றும் பிராமி எழுத்துக்களைக் கொண்ட செப்பேடுகளையும், வடமொழி கிரந்த லிபி அல்லது தெலுங்கு, கன்னட லிபிகளில் பொறிக்கப்பட்ட செப்பேடுகளையுமே முற்காலப் பல்லவர்களும், இடைக்காலப் பல்லவர்களும் வெளியிட்டனர். சிம்மவிஷ்ணுவின் ஆட்சிக்குப் பிறகுதான் (கி.பி. 550) பல்லவர் செப்பேடுகளில் வடமொழியுடன் தமிழும் இடம்பெற்றது. லோக விபாகம், அவந்தி சுந்தரி கதை, காவியதர்சம் முதலான நூல்கள் வடமொழியில் இயற்றப்பட்டன. சிம்மவிஷ்ணுவின் ஆட்சியின் போது பாரவி  என்ற சம்ஸ்கிருத அறிஞர் காஞ்சிபுரத்தில் பல்லவர் அவையில் இடம்பெற்றிருந்தார்.

 இரண்டாம் விக்ரமாதித்தன் கல்வெட்டு

இரண்டாம் பரமேஸ்வரவர்மன் காலத்தில் மேலைக் கங்க மரபின் இளவரசன் இரேயப்பாவின் துணையுடன் இரண்டாம் விக்ரமாதித்தியன் கி.பி. 730 ஆம் ஆண்டு படைஎடுத்தான். போரில் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் மரணமடைந்தான். காஞ்சியைச் சாளுக்கியர் கைப்பற்றுகிறார்கள். சாளுக்கியர் படை முதன்முதலாகக் காஞ்சி நகருக்குள் நுழைகிறது. வாதாபியை எரியூட்டியதற்காகக் காஞ்சி நகரம் அழிக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். காஞ்சியின் கோவில்களில் மனதைப் பறிகொடுத்த சாளுக்கிய அரசன் விக்ரமாதித்தன் காஞ்சியை அழிக்காமல் விட்டது மட்டுமல்லாமல் காஞ்சிக் கோவில்களுக்கு நிறையப் பொன்னும் பொருளும் வழங்கிச் சிறப்பித்தனர். இந்தச் செய்தி காஞ்சி கைலாசநாதர் கோவிலில் உள்ள இரண்டாம்  விக்ரமாதித்தன் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரமதித்ய சத்யஸ்ரேயா காஞ்சியை வென்ற பின்பு இராஜசிம்மேஸ்வரம் கோவிலின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யாமல் சிவனுக்கே இக்கோவிலை திரும்பவும் அர்ப்பணித்தார்.  மேலும் ஏராளமான பொன்னையும் பொருளையும் கொடையாக அளித்தார்.

“இதனை (விக்கிரமதித்யனின் இக்கல்வெட்டை) அழிப்பவர்களும் இம்மன்னனால் அளிக்கப்பட்ட  தர்மத்தை நிலைகுலையச் செய்பவர்களும் சபையில் (கடிகையில்) உள்ள அறிஞர்களான அந்தணர்களைக் கொன்றவர் புகும் உலகில் புகுக.”

என்று பொருள்தரும் வடமொழி வரிகள் கல்வெட்டின் ஓம்படைக்கிளவியில் (Imprecation) இடம்பெற்றுள்ளது. தமிழ் கல்வெட்டுகளில் சபை (சபா = சம்ஸ்கிருதம்) என்று குறிப்பிடும் சொல் “கடிகே” (கன்னடம்) (கடிகா = சம்ஸ்கிருதம்) என்ற கன்னடச் சொல்லுடன் தொடர்புடையது என்று இக்கல்வெட்டைத் தொகுத்த   ஹூல்ஷ் அடிக்குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் நந்திவர்மனுக்கு முடிசூட்ட கடிகை ஆற்றிய பணிகள்

இரண்டாம் நந்திவர்மன் (கி.பி. 731 – 769) எழுப்பிய பரமேஸ்வர விண்ணகரம் என்னும் காஞ்சி வைகுந்த பெருமாள் கோவில் பல்லவர்களின் கலைப்பாணிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். இந்தக் கோவில் விஷ்ணுவிற்காக, இரண்டாம் நந்திவர்மனால்,  இரண்டாம் பரமேஸ்வரவர்மன் பெயரில் கட்டப்பட்டுள்ளது. சில  அறிஞர்கள் இக்கோவில் கி.பி. எட்டாம் நூற்றண்டில் கட்டப்பட்டதாகக் கருதுகிறார்கள்.

பரமேஸ்வர விண்ணகரம் முதன் முதலில் பல்லவர்களால் கட்டுவிக்கப்பட்ட அஷ்டாங்க விமானம் ஆகும். இங்கு விஷ்ணு அஷ்டாங்க விமானச் சன்னதிகளில் நின்றான் (நின்ற கோலம்), இருந்தான் (அமர்ந்த கோலம்), கிடந்தான் (சயன கோலம்) என்று மூன்று கோலங்களில் சேவை சாதிக்கிறார்.

இக்கோவிலில் பஞ்சராத்ர ஆகம வழிபாட்டு முறையும் ஸ்ரீ பாகவத சாஸ்திரமும் (இறையியலும்) (Bhagavatha Theology) பின்பற்றப்படுகின்றன.  இந்த விமான அமைப்பு பாகவத புராணத்தைச் சித்தரிக்கிறது என்கிறார் டென்னிஸ் ஹட்சன். பல்லவ மன்னன் (நரேந்திரா = மக்களின் மன்னன் Indra of men) என்ற நிலையிலிருந்து பாகவத பேரரசன் (“Bhagavata Emperor.”) என்ற நிலைக்கு உயர்ந்ததைக் கொண்டாடும் விதமாகப் பல்லவன் இக்கோவிலைக் கட்டினான். பல்லவ மன்னரின் மீது ஸ்ரீபகவதத்தின் செல்வாக்கு எவ்வாறு இந்த அஷ்டாங்க விமான அமைப்பின் மூலம் வெளிப்பட்டுள்ளது என்பதை டென்னிஸ் ஹட்சன் விளக்கியுள்ளார்.

இந்தக் கோவில் தெற்குப் பிரகாரச் சுற்றுச் சுவர்களில் ஒன்பது வரிசைகளில் அமைந்துள்ள எழுத்துப் பொறிப்புப் பெற்ற சிற்பங்கள், இரண்டாம் நந்திவர்மனுக்கு எவ்வாறு முடிசூட்டப்பட்டது என்பது பற்றி விளக்குகின்றன. இரண்டாம் நந்திவர்மன் ஆட்சியில் இந்தச் சிற்பத்தொகுதிகளும் கல்வெட்டுகளும் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத் தொகுதிகள் மற்றும் கல்வெட்டு விவரங்கள் சிம்மவிஷ்ணு தொடங்கி இரண்டாம் நந்திவர்மனின் முடிசூட்டுவிழா வரையிலான செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தன்னுடைய “A History of South India” பக். 139. என்ற நூலில் கூறியுள்ளார். இந்திய தொல்லியல் அளவீட்டுத்துறை வெளியிட்ட The Historical Sculptures of the Vaikunthaperumal temple, Kanchi, C. Minakshi, (1941, reprint 1999) Memoir no. 63 என்ற நூல் வைகுந்தப்பெருமாள் கோவில் சிற்பத்தொகுதிகள் பற்றி விவரிக்கிறது.

முதல் சிற்பத்தொகுதியும் செய்தியும்

பரமேஸ்வரவர்ம போத்தரையர் விண்ணுலகம் எய்துகிறார். (கங்க நாட்டின் மீது படையெடுத்துச் சென்றபோது அங்கு உயிரிழந்தாக ஒரு செய்தி உள்ளது.)  பரமேஸ்வரவர்மனுக்கு வாரிசு இல்லை. எனவே பல்லவ நாட்டில் வாரிசின்றிக் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் சாளுக்கிய மன்னன் இரண்டாம்  விக்ரமாதித்யன் பல்லவர்களை அடக்கிப் பணியவைத்தார். இந்த வெற்றிக்குப் பிறகு இரண்டாம்  விக்ரமாதித்யன்  தன் விருப்பத்திற்கேற்ப ஓர் அரசப் பிரதிநிதியை (வைஸ்ராயை) காஞ்சியின் சிங்காசனத்தில் அமர்த்தினார். இந்த அரசப் பிரதிநிதி மூன்றாம் மகேந்திரவர்மனின் மகன்களில் ஒருவராக இருக்கலாம். இந்த ஏற்பாடு வேண்டுமானால் இரண்டாம்  விக்ரமாதித்யனுக்கு ஏற்புடைத்ததாக இருந்திருக்கலாம். ஆனால் பல்லவ அரசவையினர், மந்திரிகள் (Mattras), கடிகையார்கள் (Ghatikayars) மற்றும் மூலப்பிரகிருதிகள் (Mulaprakrtis) ஆகியோருக்கு இந்த அரசப் பிரதிநிதி ஏற்பாடு ஏற்புடைத்ததாக  இல்லை. இவர்கள் எல்லோருமே தூய தாய் வழி மற்றும் தந்தை வழியில் பிறந்த பரம பாகவத மரபில் வந்த வாரிசையே பல்லவ மன்னனாகத் தேர்ந்தெடுத்து முடிசூட்ட விரும்பினர்.

எனவே இவர்கள் அரசர் ஹிரண்யவர்மனை அணுகி ஆலோசித்தனர். ஹிரண்யவர்மன், பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மனின் கால் வழியில் நான்காவதாக வந்த வழித்தோன்றல் ஆவார். இவருடைய பரம பாகவத மரபு இதுவாகும்:- பீமவர்மன் -> புத்தவர்மன் -> ஆதித்தியவர்மன் -> ஹிரண்யவர்மன். ஹிரண்யவர்மனுக்கு ஸ்ரீமல்லன், ரனமல்லன், சங்கிரமமல்லன் மற்றும் பல்லவமல்லன் என்று நான்கு மகன்கள். இந்தச் சகோதரர்களின் “மல்லன்” என்ற பட்டம் (Title) இவர்களுடைய மல்யுத்த திறனுக்குச் சான்றுரைக்கிறது. ஹிரண்யவர்மன் நாட்டின் எந்தப்பகுதியை ஆட்சி செய்தார் என்பது இன்னும் விவாதத்திற்கு உரிய பொருளாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் காம்போஜ தேசத்தை ஆண்டதாகச் சில அறிஞர்களும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு வடக்கே இருந்த பகுதிகளை ஆண்டதாகச் சில அறிஞர்களும் கருதுகின்றனர்.

இரண்டாம் சிற்பத்தொகுதியும் செய்தியும்

இந்தக்குழு ஹிரண்யவர்மனை சந்திக்கிறது. இக்குழுவினரின் வருகைக்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக அவர்களை நோக்கி ஹிரண்யவர்மன் வினா எழுப்புகிறார். பரமேஸ்வரவர்மனின் மறைவால் நாட்டில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதால், தகுதி வாய்ந்த ஒருவருக்கு  பல்லவப் பேரரசராக முடிசூட்ட வேண்டியதன் அவசியம் பற்றிக் கூறிய பதில் இங்குச் சித்தரிக்கபட்டுள்ளது.

மூன்றாம் சிற்பத்தொகுதியும் செய்தியும்

பல்லவர் குழுவின் வேண்டுகோளை செவிமடுத்த ஹிரண்யவர்மன்,  வயது முதிர்வின் காரணமாக,  இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தார். என்றாலும் இது பற்றி முதலில் அவருடைய குலமல்லர்களைக் கலந்தாலோசித்தார். பிறகு இவருடைய மகன்களான ஸ்ரீமல்லன், ரனமல்லன், சங்கிரமமல்லன் மற்றும் பல்லவமல்லன் ஆகியோருடன் ஆலோசித்தார். இவர்களில் யாருக்காவது ஆட்சிப் பொறுப்பேற்க ஆவல் உள்ளதா?  என்று கேட்டறிந்தார். முதல் மூன்று பேரும் மறுத்துவிட்டனர். நான்காம் புதல்வனான பல்லவமல்லன் மட்டும் சம்மதித்தார்.

நான்காம் சிற்பத்தொகுதியும் செய்தியும்

அப்போது பல்லவமல்லனுக்குப் பன்னிரெண்டு வயது மட்டுமே நிறைந்திருந்தது. இளம் வயதில் தன் மகன் பல்லவ அரசின் மன்னனாய் பொறுப்பேற்க  முடியுமா என்று ஹிரண்யவர்மன் அஞ்சினார். மிகவும் சந்தேகித்தார். காஞ்சிக் கடிகையின் ஆகம குருவான தரண்டிகொண்ட போசர் “உங்களுடைய மகன் பல்லவமல்லன் முற்பிறவியில் விஷ்ணுவை நோக்கித் தவமியற்றியவன் எனவே இவன் பல்லவ நாட்டை அரசாள்வதே விதி” என்று எடுத்துரைத்தார்.

ஐந்து மற்றும் ஆறாம் சிற்பத்தொகுதிகளும் செய்தியும்

ஐந்து மற்றும் ஆறாம் சிற்பத்தொகுதிகள் சேதமுற்றுள்ளன. தரண்டிகொண்ட போசர் கரிய யானையின் தலை போல உள்ள ஒரு பொருளைச் சுட்டிக்காட்டி மணிமுடி என்றும் அரசுச் சின்னமென்றும் கூறுவதை அனுமானிக்க இயலுகிறது.

ஏழாம் சிற்பத்தொகுதியும் செய்தியும்

ஹிரண்யவர்மனும் இணங்கினார். பல்லவமல்லன் காஞ்சியிலிருந்து வந்த குழுவினருடன் இணைந்து காஞ்சிக்குப் பயணமானார். பல்லவ மல்லன் சிவிகை ஏறுமுன் ஹிரன்யவர்மனை வணங்கி விடைபெறுவது சித்தரிக்கப்பட்டுள்ளது.

எட்டாம் சிற்பத்தொகுதியும் செய்தியும்

பல்லவமல்லனுக்குத் தொடர்ந்து சேவை செய்யும் நோக்கில் உதயச்சந்திரனும் இவருடன் சேர்ந்து  பயணமானான். பல மலைகள், நதிகள், காடுகள் எல்லாம் கடந்து காஞ்சியின் எல்லையை இவர்கள் சென்றடைந்தவுடன் பல்லவாதி அரையர் வரவேற்றார். பல்லவமல்லனை ஒரு யானையின் மீது அமரவைத்து காஞ்சி நகரத்திற்குள் அழைத்துச் சென்றார்.

ஒன்பதாம் சிற்பத்தொகுதியும் செய்தியும்

பல்லவ அரசவையினர், மகாசாமந்தர், நகரத்தார் மற்றும் பல்லவ அவையின் மூலபிரகிருதிகள், காடக முத்தரையர்  ஆகிய எல்லோரும் காஞ்சியில் பல்லவ இளவரசனை வரவேற்றனர்.

பத்தாம் சிற்பத்தொகுதியும் செய்தியும்

பின்பு பல்லவமல்லனை அரண்மனைக்குள் அழைத்துச் செல்கிறார்கள். பரம பாகவத பல்லவ அரசர்களுக்கு அபிஷேகம் செய்து பல்லவ சிங்காதனத்தில் அமரவைக்கும் பொறுப்பு கடிகையார்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மகாமண்டலத்தாரும் மகாசாமந்தர்களும் உபயகணத்தாரும் கடிகையாரும் இணைந்து பல்லவமல்லனுக்கு அபிஷேகம் செய்து பல்லவ சிங்காதனத்தில் அமரவைத்தனர். நந்திவர்மன் என்னும் அபிஷேகப் பெயரிட்டு முடிசூட்டினர். பல்லவ மன்னனின் தேருக்கான காரியை என்ற வெண்கொற்றக் குடை, கட்வங்கம் என்ற கொடி, ரிஷப இலச்சினை, சமுத்திரகோஷம் என்ற சங்கு ஆகிய எல்லாம் நந்திவர்மனுக்கு அளிக்கப்பட்டது. அன்று முதல் பல்லவமல்லன் இரண்டாம் நந்திவர்மன் என்று அறியப்பட்டார். பல்லவமல்லன் இரண்டாம் நந்திவர்மனாகப் பதவி ஏற்றது கி.பி. 731 ஆம் ஆண்டு ஆகும். (S.I.I.  Vol. IV, எண். 135)

பரமேஸ்வர விண்ணகரம் இரண்டாம் நந்திவர்மனுக்கு முடிசூட்டும் நிகழ்வுகள் PC: Manfred Sommer Flickr

பரமேஸ்வர விண்ணகரம் இரண்டாம் நந்திவர்மனுக்கு முடிசூட்டும் நிகழ்வுகள் PC: Manfred Sommer Flickr

அந்த நேரத்தில் பல்லவ அரசப் பிரதிநிதியாக அமர்ந்திருந்த சித்திரமாயனுக்குச் சாளுக்கிய மன்னன் இரண்டாம்  விக்ரமாதித்யன் உதவினான். இதனால் இரண்டாம் நந்திவர்மனுக்குத் தொல்லை ஏற்பட்டது.  சிறிது காலம் காஞ்சிபுரத்தை விட்டகன்று பாதுகாப்பான இடத்தில் மறைந்து வாழ்ந்த இரண்டாம் நந்திவர்மனுக்கு, இராஷ்டிரகூட மன்னன் தந்திதுர்கனின் ஆதரவு கிடைக்கவே, இம்மன்னனின் உதவியுடன் சித்திரமாயனைத் துரத்தியடித்துவிட்டுக் காஞ்சிபுரம் சென்று மீண்டும் பதவியில் அமர முடிந்தது.

காஞ்சிக் கடிகை அந்தணர்கள் நிறுவனம்

இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடி செப்பேடு “அந்தணர்களை உடையது கடிகை” என்று பதிவு செய்துள்ளது. மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் செப்பேடு “இருபிறப்பாளர் கடிகை” என்று பதிவு செய்துள்ளது.

 திருவலம் கல்வெட்டு: “கடிகை  ஏழா இருவரையும்”

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம், திருவலத்தில் (பின் கோடு 632515) ஸ்ரீ தானுமத்யாம்பாள் சமேத ஸ்ரீவில்வநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 12°59’4″N அட்சரேகை  79°15’59″E தீர்க்கரேகை ஆகும். இவ்வூருக்குள் ‘நிவா’ நதி பாய்கிறது; இந்த நதியின் கரையிலேயே கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இரண்டாம் நந்திவர்மனின் 62 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (S.I.I. vol. III, Part. I, Page 91) ஒன்று கண்டறியப்பட்டுப் படியெடுக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் ஓம்படைக்கிளவியில் (Imprecation) “இது அழித்தான் கடிகை ஏழா இருவரையும் கொன்ற பாவத்தில் படுவான்” என்று பதிவு செய்துள்ளது. “ஏழா இருவர்” என்ற சொற்றொடரை “ஏழாயிறவர்” என்று படிக்கலாம். கடிகை என்று குறிப்பிட்டது “காஞ்சிக் கடிகை” ஆகும். இக்கடிகையில் ஏழாயிரம் பேர் கல்வி கற்றுள்ளனர். இக்கடிகையாளருக்கு அஹூதம் விளைவிப்பது (கொல்வது) அந்தணரைக் கொல்வதைவிடப் பாவம் மிக்கது என்பது செய்தி.

தண்டியின் பாடலும் கடிகையின் இருப்பிடமும்

தண்டி என்னும் புலவர் பல்லவர் ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்தார்.

ஏரி யிரண்டும் சிறகா எயில் வயிறாக்
காருடை பீலி கடிகாவா – நீர்வண்ணன்
அத்தியூர் வாயா  அணிமயிலே போன்றதே
பொற்றேரான் கச்சிப் பொலிவு

“காஞ்சி நகரம் ஓர் அழகிய மயில் போன்றது. எயில் அம் மயிலின் உடல்; ஏரி அதன் சிறகு; அத்தியூர் அதன் வாய்; அடர்ந்த காடு அதன் தோகை’ என்பது அப் பாட்டின் கருத்து.” தண்டி காஞ்சிபுரத்தை மயிலுக்கு ஒப்பிட்டுக் கூறிகிறார். கடிகாவா என்று கூறியது கஞ்சிக் கடிகை என்று பலர் கருதுகின்றனர். கடி – கா என்பது நறுமணமிக்கப் பூங்கா என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர். கடிகை காஞ்சிபுரத்தின் மேற்கில் இருந்ததாகத் தண்டி குறிப்பிடுகிறார்.  அத்தியூர் என்று குறிப்பிட்டது காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் ஆகும். இது காஞ்சியின் கிழக்கெல்லையாகும்.

கடிகாசலம் – கடிகை 

வேலூர் மாவட்டம் சோளிங்கர் நகரில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் சோழலிங்கபுரம் என்றும் கடிகாசலம் என்றும் முற்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. கடிகா என்பது நாழிகை சலம் என்பது மலை. இங்கு ஒரு நாழிகை (24 நிமிடம்) இம்மலையில் தங்கி நரசிம்மரை வணங்கினாலே தீமை விலகி நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை.

இரண்டாம் நந்திவர்மனின் 61 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு “திரைர்யுவ கடிகா மத்யஸ்தன் (Trairjyua ghatika madhyasthan)” என்று ஒரு நடுவரை (An Arbitrator) வட ஆற்காடு மாவட்டத்தின் (தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு) அமைந்துள்ள பிரம்மதேசத்தில் உள்ள பார்த்திவேந்திரபதியின் மூன்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. (A.R.E nos.194, 195, 197 of 1915). பல்லவர்களின் தலைநகரான காஞ்சியில் புகழ்பெற்று விளங்கிய காஞ்சிக் கடிகை வேறு இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் கடிகை வேறு. இது சோளிங்கர் மலையில் செயல்பட்ட கடிகாசலமாக இருக்கலாம். இரண்டாம் நந்திவர்மனின் சமகாலத்தவரான திருமங்கை ஆழ்வார் தான் இயற்றிய சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமொழி ஆகிய பிரபங்களில் “கடிகை” என்று இத்தலத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனவே இத்தலம் நன்கு அறியப்பட்ட வடமொழி கல்வி நிலையமாகவும் வைணவத்தின் கோட்டையாகவும் திகழ்துள்ளது. துறைதேர்ந்த வைணவ அந்தணர்கள் கடிகாசலத்தில் கடிகையை நிறுவி ஆய்வுகளை மேற்கண்ட போது இத்தலத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மகேந்திரவாடி பல்லவமல்லன் ஆட்சியில் ஒரு வைணவத் தலமாகத் திகழ்ந்துள்ளது.

காந்தளூர்ச்சாலையும் பார்த்திவசேகரபுரம் சாலையும் கடிகைகளே.

ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர் ” முதலாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி

காந்தளூர்ச்சாலை கலமறுத்தளி’ என்ற சொற்றொடர் முதலாம் இராஜராஜனின் மெய்கீர்த்தியில் இடம்பெறுகிறது. இத்தொடர் இராஜராஜனின் நான்காம் ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) மெய்கீர்த்திகளில் இடம்பெற்றுள்ளது. இந்தக் காந்தளூர்ச்சாலை பற்றி கல்வெட்டு அறிஞர்களிடையே நீண்ட விவாதம் நடைபெற்று வருகிறது. இராஜராஜன் சேரநாட்டில் பெற்றது  பெரும் வெற்றி என்பதால் காந்தளூர் சாலைக்கு மிகுந்த  முக்கியத்துவம் உள்ளது. இஃது ஒரு சேர நாட்டுத் துறைமுகம் என்றும் கலம் என்பது கப்பல்கள் என்றும் பொருள் கொள்ளப்பட்டது. விழிஞம் துறைமுகத்தை இராஜராஜன் வென்ற காரணத்தால் காந்தளூர் சாலை துறைமுகம் அல்ல என்று கருதப்பட்டது. திருவனந்தபுரம் அருகில் கடற்கரையில் காந்தளூர்ச்சாலை இருந்திருக்க வேண்டுமென்ற கருத்தே இன்றுவரை பெரும்பாலோரால் ஏற்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திருநாவாய்க்கு அருகிலுள்ள “காந்தளூர்” தான் “காந்தளூர்ச்சாலை” என்று கல்வெட்டறிஞர் எஸ்.இராமச்சந்திரன் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.

காந்தளூரில் உள்ள சாலையை மாதிரியாகக் கொண்டு அதைப் போலவே மற்றொரு சாலையை பார்த்திவசேகரபுரம் என்னும் இடத்தில் ஆய்குல வேந்தன் கருநந்தடக்கன் நிறுவினான் என்று இவ்வரசன் வெளியிட்ட செப்பேடு (T. A. S. I. P. 1-14.) பதிவு செய்துள்ளது. கருநந்தடக்கனின் இச்செப்பேடு தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், மூஞ்சிறைக்கு அருகில் அமைந்துள்ள பார்த்திவசேகரபுரம் என்ற ஊரில்  (கி.பி.864) கண்டறியப்பட்டுள்ளது.

காந்தளூர்ச்சாலையும் பார்த்திவசேகரபுரம் சாலையும் கடிகைகளாகும். இக்கடிகைகள் பரசுராமர் வழி வந்த அந்தணர்களால் நடத்தப்பட்டது. இந்த அந்தணர்கள் வேதப் பயிற்சி அளித்தது மட்டுமின்றி சத்திரியர்கள் போல  தம் மாணவர்களுக்கு களரி போன்ற போர்க்கலைகளிலும் பயிற்சி அளித்தனர்.

குறிப்புநூற்பட்டி

  1. கடிகையில் தமிழும் கற்பிக்கப்பெற்றதா . . . Sankara Narayanan 17/7/2015 Sarasvatam
  2. தலகுண்டா பிரணவேஸ்வரா கோவில்: கடம்பர் வம்ச வரலாற்றையும், பூர்வ ஹளே கன்னட மொழியின் தொன்மையையும் அறிய உதவும் கல்வெட்டுகள் அகரம்
  3. தெய்வத்தின் குரல்: கடிகை: ஏழாயிரம் மாணவர்கள் தமிழ் இந்து 26 Nov 2015
  4. Educational Institutions under the Pallavas Wikisource
  5. From Cambodia to Kanchipuram? The Hindu March 16, 2007 https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-youngworld/from-cambodia-to-kanchipuram/article2268521.ece
  6. Temple architecture and the Agamas. K.V.Raman.The Hindu Apr 15, 2002.https://www.thehindu.com/thehindu/mp/2002/04/15/stories/2002041500130300.htm
  7. The Body of God: An Emperor’s Palace for Krishna in Eighth-Century Kanchipuram. D Dennis Hudson. Oxford University Press, USA, 25-Sep-2008 – Religion – 660 pages. 
  8. The Ghatika – An Educational Institution of Medieval Karnataka. Jyotsna Burde Indica  Vol. II No. 2, 1965
  9. The Historical Sculptures of the Vaikunthaperumal temple, Kanchi, C. Minakshi, (1941, reprint 1999) Memoir no. 63
  10. Thoughts of the Spritual Wisdom. Krishnamurthy, V. Notion Press 2018

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கற்பிக்கும் கலை, கல்வி, சமஸ்கிருதம், தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to பல்லவர்கள் பேணிக் காத்த காஞ்சிக் கடிகை

  1. அரிய பல விடயங்கள் அறிந்தேன். பிரமிப்பான பதிவு.

    Like

  2. ஸ்ரீராம் சொல்கிறார்:

    எத்தனை விவரங்கள்…… படித்துத் தெரிந்து கொண்டேன்.

    Like

  3. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    கடிகை
    அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன் ஐயா
    காணொலிகள் அருமை
    நன்றி ஐயா

    Like

  4. Dr B Jambulingam சொல்கிறார்:

    அருமையான ஆய்வுக்கட்டுரையை சான்றுகளுடன் படித்தேன். வியந்தேன். நன்றி.

    Like

  5. valipokken சொல்கிறார்:

    அறியாத தகவல்கள்…அறிந்து கொண்டேன் அய்யா…….

    Like

  6. vakula varadarajan சொல்கிறார்:

    Fantastic article

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.