குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவில்: உலகின் மிகப் பழைமையான சிவலிங்கம்

மூன்று சிவலிங்கங்கள் படிமக் கலை வரலாற்றில் காலத்தால் முற்பட்டனவாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் ஒன்று ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம்,  ரேணிகுண்டா – பாப்பாநாயுடுபேட் அருகே குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவிலின் கருவறையில் நிறுவப்பட்டுள்ளது. இது சாதவாகனர் காலத்தைச் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச்) சேர்ந்தது ஆகும். இன்று வரை வழிபாட்டில் இருந்துவரும் சிவலிங்கமும் இதுவாகும். மற்ற இரண்டு சிவலிங்கங்களும்  குஷானர் காலத்தைச் (கி.பி. முதலாம் நூற்றாண்டைச்) சேர்ந்தனவாகும். இந்த இலிங்கங்களின் வடிவமைப்பு மற்றும் வழிபாடு போன்றவை படைப்பற்றல் சின்னமாகிய விரைகுறி வழிபாட்டுடன் (phallic worship) தொடர்புபடுத்தப்படுகின்றன. இவை வழிபாட்டில் இல்லை மாறாக அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

1. உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் அருகே பிடா (Bhita) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏகமுக இலிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.
2. உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே கங்கலி திலா (Kankali Tila) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள (பதிவு. எண் 83.3).பஞ்சமுக லிங்கம் ஆகும். இது சிவப்புக் கல்லால் ஆனது.

இந்தப் பதிவு குடிமங்கலம் சிவலிங்கப் படிமக்கலை பற்றியும் பரசுராமேஸ்வரர் கோவில் கட்டடக்கலை பற்றியும் விவரிக்கிறது. 

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டம், எர்பேடு மண்டல் பின் கோட் 517526 இல் அமைந்துள்ள குடிமல்லம் (గుడిమల్లం) ஓர் அசாதாரணக் கிராமமாகும். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், பித்தாபுரம் மண்டலில் அமைந்துள்ள மல்லம் கிராமத்தையோ அல்லது எஸ்.பி.எஸ்.ஆர். நெல்லூர் மாவட்டம், சித்தாமூர் மண்டலில் அமைந்துள்ள மல்லம் (நெல்லூர்) கிராமத்தையோ குடிமல்லம் கிராமத்துடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். இவ்வூர் இராயலசீமா பகுதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 13.5736°N அட்சரேகை 79.5403°E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 80 மீ. ஆகும். பாப்பாநாயுடுபேட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், ஏர்பேடு கிராமத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், ரேணிகுண்டாவிலிருந்து 8.3 கி.மீ. தொலைவிலும், புத்தூரிலிருந்து 17.8 கி.மீ. தொலைவிலும், திருச்சானூர் 18.9 கி.மீ. தொலைவிலும், நாரயணவனத்திலிருந்து 20.1 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து 20.8 கி.மீ. தொலைவிலும், காளஹஸ்தியிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருத்தணியிலிருந்து 54.4 கி.மீ. தொலைவிலும், சித்தூரிலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 137 கி.மீ. தொலைவிலும், பாண்டிசேரியிலிருந்து 186.7 கி.மீ. தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 228.3 கி.மீ. தொலைவிலும், ஹைதராபாத்திலிருந்து 438.5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 2071 (ஆண்கள்  1025, பெண்கள் 1046, மொத்த வீடுகள் 552) ஆகும்.

திருப்பதியிலிருந்து எப்போதாவது இவ்வூருக்குப் பஸ்கள் சென்று வருவதுண்டு. ரேணிகுண்டா இரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ ரிக்ஷா அமர்த்திக் கொள்ளலாம். சுவர்ணமுகி நதியின் கரைவழியாக வளைந்து நெளிந்து செல்லும் மண் சாலை வழியே பயணம் செய்தால் வரண்ட சுவர்ணமுகி நதிப் படுகை, பசுமை நிறைந்த வயல்கள், சிறிய வீடுகள் அடங்கிய கிராமங்கள் வழியே சென்றால் குடிமல்லம் கிராமத்தை அடையலாம். இக்கோவில் வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ளது. கோவில் நுழைவாயில் மொட்டைக் கோபுரமாகக் காணப்படுகிறது. எப்போதாவது வரும் பக்தர்களைத் தவிர கோவில் ஆளரவமற்றுக் காணப்படுகிறது.

கட்டிடக்கலை 

பழங்காலத்துக் கோவிலான பரமேஸ்வரர் (சிவன்) கோவில் குடிமல்லத்தில் அமைந்துள்ளதால், இவ்வூர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராக விளங்குகிறது. 1954 ஆம் ஆண்டு முதல் இக்கோவில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ளது.  இக்கோவிலின் மூலவரான பரசுராமேஸ்வரர் உலகிலேயே தொடர்ந்து வழிபடப்பட்டுவரும்  சிவலிங்கம் என்றும் பரசுரமேஸ்வரர் கோவில் 2200 ஆண்டுகள் பழையானது என்றும் கற்றறிந்த வரலாற்று அறிஞர்கள், சில சான்றுகளின் அடிப்படையில், கருதுகிறார்கள்.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள மூலவர் விமானம் தூங்கானை மாடம் என்னும் கஜபிருஷ்ட / ஹஸ்திபிருஷ்ட விமான வகையைச் சேர்ந்தது. கஜபிருஷ்டம், ஹஸ்திபிருஷ்டம் ஆகிய இரண்டு சம்ஸ்கிருதச் சொற்களும் யானையின் பின்புறம் போன்ற அமைப்பினைக் குறிக்கின்றன. அதாவது விமானத்தின் பின்புறம் அரைவட்ட வடிவில் அமைந்துள்ளது. இந்த விமானச் சுவற்றின் நடுவில் வெற்றிடம் உள்ளது.

பல நூறு ஆண்டுகள் பழைமையான இந்த விமானத்தின் பிரஸ்தாரம், சிகரம், கிரீவம் (கண்டம்) மற்றும் ஸ்தூபி ஆகிய மேல்கட்டுமான (organs of super-structure) உறுப்புகள் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டுச் சுதை உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் அதிஷ்டானத்திலிருந்து பிரஸ்தாரம் வரை கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது .  பிரதிவரிபந்த வகையைச் சார்ந்த இந்த விமானத்தின் தளத்தை உபானம், ஜகதி, உருள் குமுதம் ஆகிய உறுப்புகள் அலங்கரிக்கின்றன. விமானத்தின் வெளிப்புறச் சுவர்களை அரைத் தூண்களின் உதவி கொண்டு பத்திகளாகப் பிரித்து அமைத்துள்ளனர். சுவரின் பத்திகளின் தெற்கு, மேற்கு, வடக்குத் திசைகளில் அமைக்கப்பட்ட தேவகோஷ்டங்களில் விநாயகர், விஷ்ணு, பிரம்மா ஆகிய கோஷ்ட தெய்வ சன்னதிகளைக் காணலாம். செங்கல் மற்றும் சுதையால் கட்டப்பட்ட ஏகதள விமானத்தின் மேல்கட்டுமானத்தில் ஆரச்சுவர்களுடன் கஜபிருஷ்ட சால சிகரம் இடம் பெற்றுள்ளது.  சிகரத்திற்கு மேலே மூன்று வெண்கல ஸ்தூபிகள் அழகு செய்கின்றன.

இந்த வகை விமான வடிவமைப்பு பெளத்த சைத்திய வடிவமைப்பிலிருந்து பெறப்பட்டதாகச் சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த வடிவமைப்பு பான் இந்தியப் பாரம்பரியத்திலிருந்து (Pan- Indian Tradition) உருவெடுத்ததாகவும் ஒரு சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். கஜபிருஷ்ட  வடிவில் அமைந்துள்ள சாஞ்சியில் அமைந்துள்ள 18 ஆம் பெளத்த விகாரை கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தற்போது இவ்வடிவில் அமைந்த தூண்கள் மட்டுமே நமக்குக் காணக் கிடைக்கின்றன. நாகார்ஜுனகொண்டா பெளத்த (விகாரை) சைத்யாவும் இவ்வடிவில் அமைந்துள்ளது. துர்கா கோவில், ஐஹோளே, நகுல-சகாதேவ இரதம், மாமல்லபுரம், கபோதேஸ்வரர் கோவில், சேஜர்லா, வித்யா வீனீத பல்லவேஸ்வர கிருகம், கூரம், வீராட்டனேஸ்வரர் கோவில், திருத்தணி, வாடாமல்லீஸ்வரர் கோவில், ஓரகடம் ஆகிய பழம்பெரும் கோவில்களில் இத்தகைய விமான அமைப்பைக் காணலாம். தொண்டை நாட்டில் கஜபிருஷ்ட வடிவில் அமைக்கப்பட்ட சோழர் கால விமானங்களைப் பல கோவில்களில் காணலாம். குடிமல்லம் பரமேஸ்வரர் கோவில் விமானமும் கஜபிருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. எனினும்  இந்த விமானம் ஒரு சிவலிங்க வடிவில் காணப்படுவதால் இவ்வகைக்கு லிங்கக்ருதி (Lingakriti) விமானம் என்று பெயர்.

விமானத்தைச் சுற்றித் திருச்சுற்று மண்டபம் (peristylar cloister mandapa) அமைந்துள்ளது. கருவறைக்குச் செல்ல மகாமண்டபத்தின் தெற்குப்பக்கதில் ஒரு வாயில் உள்ளது. கிழக்குப்புறம் மகாமண்டப சுவரில் மூலவர் சன்னதிக்கு நேரே ஒரு சாளரம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பக்கத்தில் உள்ள வெளிப்பிரகாரத்தில்  கொடிமரமும் பலிபீடமும். சன்னதியை நோக்கி நிறுவப்பட்டுள்ளன.

இக்கோவிலின் மூலவர், பானப் பீடத்துடன் சிவலிங்க வடிவில்,  ஒரு மரத்திற்குக் கீழே இருந்ததாக நம்பப்படுகிறது. பல்லவர்கள், சோழர்கள், பாணர்கள், மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்தில் இக்கோவிலின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கஜபிருஷ்ட விமானம் பல்லவர்களின் கட்டுமானமாக நம்பப்படுகிறது. அந்தராளா மற்றும் முகமண்டபம் ஆகிய தரைத்தளங்களை விட கருவறைத் தளம் மிகவும் தாழ்ந்து காணப்படுகிறது. அந்தராளத்திலிருந்து கருவறைத் தளத்திற்கு இறங்கிச் செல்ல படிக்கட்டுகள் உதவுகின்றன.

குடிமல்லம் சிவலிங்கத்தின் படிமவியல் 

சவேதிக இலிங்கம் ((Savedika Linga) என்ற வகையைச் சேர்ந்த எழு பட்டைகளுடன் கூடிய சிவலிங்க வடிவில் பரசுராமேஸ்வரர் கருவறையில் காட்சி தருகிறார். இது லிங்கோத்பவ வடிவம் ஆகும். மூலவர் கருவறையில் பிரமாண்டமாக நிறுவப்பட்டுள்ள இந்த இலிங்கத்தின் உயரம் 5 அடி (1.35 மீ) மற்றும் விட்டம் 1 அடி ஆகும். சிவலிங்கம் என்பது இந்துக் கடவுளர்களான மும்மூர்த்திகளின் வடிவாகக் கருதப்படுகிறது. இலிங்கத்தின் அடிப்பகுதி பிரம்மனுக்குரியது; நடுப்பகுதி விஷ்ணுவிற்குரியது; பானம் என்னும் மேற்பகுதி சிவனுக்குரியது. குடிமல்லம் சிவலிங்கத்தின் பானம் உயரமாகவும் அகன்றும் காணப்படுவது சிறப்பு.

இந்த இலிங்கம் சதுரமான அடித்தளத்தின் மீது திறந்த நிலையில் நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சதுர அடிதளத்தைச் சுற்றி பலகைக் கற்களை மூன்று வரிசைகளாக அமைத்துக் கட்டிய ஒரு கட்டமைப்பு உள்ளது. இந்தக் கட்டமைப்பின் மேல் வரிசை பலகைக் கற்கள் சேதமுற்றதால் புதிய பலகைக் கற்களைப் பயன்படுத்திப் புதுப்பித்துள்ளார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த இலிங்கத்தின் பீடம் மற்றும் பானம் மட்டும் மிகப்பழமையானவை ஆகும். இதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்கள் மற்றும் இணைப்புகள் எல்லாம் பின்னல் வந்த அரச வம்சத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டவை ஆகும்.

this_lingam

ஏழு பட்டைகள் கொண்ட பரசுராமேஸ்வரரின் இலிங்க பானத்தின் முன்புறம் சாய்வாக ஓர் ஆழ்ந்த காடி  (deep slanted groove) வெட்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளத்தில் சிற்பிகள் மிகவும் கவனம் செலுத்தி ஒரு வேடனின் உருவத்தைப் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கி உள்ளார்கள். இந்தச் சிற்பத்தில் நாம் காணும் வேடனின் உருவம் சரியான உடற்கூறியல் விகிதங்களின்படியான அங்க அளவுகளைத் துல்லியமாகக் காட்டுகிறது. இவ்வேடனின் வயிறும் மார்பும், காளைமாட்டின் தலையைப் போல,  அடிப்பகுதி குறுகியும் மேற்பகுதி விரிந்தும் -பரந்த தோள்பட்டை, குறுகிய இடுப்பு, ஒட்டியமைந்த வலுவான வயிற்றுத் தசைகள், இறுக்கமான பிருஷ்டம் ஆகியவற்றுடன் – காணப்படுகிறது.

இரு கால்களையும் பரப்பிக் கால்களைப் பலமாக ஊன்றியவாறு நின்ற நிலையில் (sthanaka posture) காணப்படும் வேடனின் உருவம் அளப்பிடற்கரிய தேஜசையையும் சக்தியையும் பரப்புகிறது. வேடனின் பாதங்கள் அமரபுருஷனின் (வளைந்து கொடுத்த நிலையில் காணப்படும் குள்ள யட்சன்) (crouching dwarf yaksha) தோள்களில் ஊன்றியுள்ளன. முகம் அமைதியாகவும் சலனமற்றும் காணப்படுகிறது. வேடனின் இரு கைகள் தளர்வாகத் தொங்குகின்றன. இவர் ஓர் இறந்த வெள்ளாட்டின் பின்னங் கால்களை வலது கையால் பற்றித் தூக்கியவாறும், இடது கையால் கமண்டலத்தைப் பற்றியவாறும், நீளமான போர்க் கோடரி (பரசு) ஒன்றை இடது தோளில் சாய்த்து ஏந்தியவாறும் காணப்படுகிறார். பரசு என்னும் கோடரியே பரசுராமரின் ஆயுதமாகும். வேதகாலம் (Vedic period) மற்றும் புராண காலத்திற்கு  (proto puranic) முந்தைய உருத்திரனை இந்த வேடனின் உருவம் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

வேடனின் தலைமுடி, அதிக எண்ணிக்கையிலான அடர்ந்த தலைமுடிக் கற்றைகள் நெருக்கமாகப் பின்னிக்கொண்ட சடைகளின் சுமையுடன், ஜடபரமாக அமைக்கப்பட்டுள்ளது. நீண்டு வளர்ந்த காது மடல்களை வளைந்த குண்டலங்கள் (ring shaped kundalas) அலங்கரிக்கின்றன. வளர்ந்த காது மடல்கள் அதிகார வலிமை மற்றும் செல்வாக்கின் அடையாளங்கள் ஆகும். கழுத்தில் சரபளி (sarapali),  விலாவில் உதரபந்தம் (udarabandha), தோள்களில் தோள்வளை (tholvalai), மேற்கைகளில் கேயூரம் (keyura), முழங்கையில் கங்கணம் (kangana), மணிக்கட்டில் கடக வளை (kataka valai), வளையல்கள்,   இடுப்பைச் சுற்றி மடிப்புகளுடன் (fleets) கூடிய மெல்லிய இடுப்பு ஆடை, இடுப்பில் ஆடையை இறுக்கிக் கட்டும் கடிபந்தம் (katibandha) ஆகிய அணிகலன்களுடன் காட்சி தருகிறார். வேடர்கள் பூணூல் (யக்ஞோபவிதம்) அணிவதில்லை.

அமரபுருஷன் முழங்காலில் முட்டிபோட்டவாறு அமர்ந்துள்ளான். இவனுடைய உடல் குறுகிச் சுருங்கியபடி காணப்படுகிறது.  வலியால் பற்களை இறுகக் கடித்த நிலையில் முகம் காணப்படுகிறது. வேடனை தோள்களில் சுமந்தவாறு முட்டியிட்டு அமர்ந்திருப்பதனால் உண்டான வலியால் பற்களை இறுகக் கடித்திருக்கலாம். காது மடல்கள் இலையைப் போல வளர்ந்துள்ளன. மூலவர் பரசுரமேஸ்வரரின் இந்த வடிவம் கி.மு. மூன்றாம் நூற்றண்டிலேயே ஆந்திரப் பிரதேசத்தில் சிவ வழிபாடு  நடந்ததற்கான வலுவான சான்றாகும்.

இங்கு 1973 ஆம் ஆண்டில் டாக்டர் ஐ.கே.சர்மா, இயக்குனர், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை, தலைமையில் நடைபெற்ற அகழ்வாய்வில் 2 – 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கருப்பு மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள்  கிடைத்துள்ளன. பானை ஓடுகள் மற்றும் பெரிய அளவுகளில் செங்கற்கள் (42 x 21 x 6 cm) ஆகிய சான்றுகளின் அடிப்படையில் இக்கோவில் சாதவாகனர்களின் (Satavahana) (கி.மு. முதல் நூற்றாண்டு) காலத்தைச் சேர்ந்தாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை இந்தச் சிவலிங்கத்தை இந்தியாவின் மிகப் பழமையான சிவலிங்கம் என்று கணித்துள்ளது.

பரந்து விரிந்த கோவில் வளாகத்தைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் அமைந்துள்ளன. கோவிலின் நுழைவாயிலில் இராஜகோபுரம் காணப்படவில்லை. ஆனந்தவல்லித் தாயாருக்கான (அம்மாவரு) தனிச் சன்னதி கோவில் வளாகத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. வள்ளி-தேவசேன சமேதராகக் காட்சிதரும் சண்முகன், சூர்யநாராயணன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் இவ்வளாகத்தில் தனிச் சன்னதிகள் உள்ளன.

புராணக்கதை

குடிமல்லம் கோவில் புராணம், பரசுராம முனிவரின் புராணத்தைப் பற்றிப் பேசுகிறது. பரசுராமர் தன் தந்தையின் கட்டளையை ஏற்றுத் தன் தாயின் தலையை வெட்டியவர் ஆவார். தனது சொந்தத் தாயைக் கொன்ற பாவத்தைக் கழுவ  வேண்டிய வழிமுறைகள் பற்றிப் பரசுராமர் தனது குருவிடம் அறிவுரை கேட்டார். குருவோ ஒரு சிவலிங்கத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தவமியற்றுவதுதான் இதற்குப் பரிகாரமாகும் என்று உரைத்தார்.

பரசுராம முனிவர், மிகுந்த முயற்சிக்குப் பிறகு, குடிமல்லத்தில் சிவலிங்கத்தைக் கண்டறிந்தார். அருகே ஒரு குளத்தை வெட்டினார் . தவமியற்றத் திட்டமிட்டார். இக்குளத்தில் தினமும் புனிதமான ஒற்றை மலர்  மலர்வதை முனிவர் கண்டார். இந்த மலரைப் பறித்துக் குடிமல்லம் சிவலிங்கத்தின் பாதத்தில் வைத்துப் பணிந்தார். சிவலிங்கத்தை அசுரர்களிடமிருந்து காப்பதற்காக மலருடன் சித்திரசேனை என்ற யட்சியை அமர்த்தினார். இவள் காவல் புரிவதற்கான வெகுமதியாகக் கள்ளையும், வேட்டையாடிய விலங்கின் இறைச்சியையும் பெற்றாள். ஒரு நாள்  சித்திரசேனை மலர் ஒன்றை சிவனின் பாதத்தில் வைப்பதற்குப் பதிலாகத் தானே சூடிக்கொண்டாள். பரசுராம முனிவர் சினம் கொண்டு கோடரியால் யட்சியைத் தாக்கினார். யாட்சியும் திரும்பத் தாக்கினாள். இந்தச் சண்டை 14 நாட்கள் நீடித்ததாம். இதனால் இங்கு பெரிய பள்ளம் உருவாயிற்று. அப்போதிலிருந்து இக்கோவில் குடிபள்ளம் (குடி=கோவில்; பள்ளம் = குழி) என்று வழங்கலாயிற்று. நாளடைவில் இக்கோவில் குடிமல்லம் என்று மருவி வழங்கப்படுகிறது.

புதிர்

குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவில் கருவறை,  ஒவ்வொரு 60 வருட இடைவெளியிலும், வெள்ள நீரால் பதிக்கப்படுவதுண்டு.  ஒரு சிறிய நிலத்தடி தொட்டி, இந்தத் தொட்டியை சிவலிங்கத்துடன் இணைக்கும் கால்வாய் (duct) ஆகியவற்றை இன்றும் இக்கருவறையில் காணலாம். வழக்கமாக மிகவும் உலர்ந்து காணப்படும் கருவறையில் 60 வருடம் நிறைவுறும் சமயம் குறிப்பிட்ட சமயத்தில் வெள்ளம் பீரிட்டு வருவதுண்டு. நீர்மட்டம் உயர்ந்து இலிங்கத்தின் பானம் வரை எட்டுவதுண்டு. உடனடியாக வெள்ளம் வடிந்து விடுவது வியப்பான நிகழ்வு. சென்ற முறை 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  4 ஆம் தேதியன்று கருவறையில் வெள்ளம் உயர்ந்து வடிந்தது. சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த நிகழ்வை கோவில் உதவியாளர் ஒருவர் கோவில் பதிவேட்டில் ஒரு குறிப்பாகப் பதிவு செய்துள்ளார்.  நீர் மட்டம் உடனடியாக வடிந்து, 6  அங்குல உயரத்தில் 4 மணி நேரம் நீடித்தது. பின் நீர் சூழ்ந்த சுவடே தெரியாமல் வடிந்து உலர்ந்து போனது. இவ்வ்வூரில் வசிக்கும் வயதில் மூத்தோர் 1945 ஆம் ஆண்டு இது போல கருவறையில் நீர்மட்டம் உயர்ந்ததை நினைவுகூர்கின்றனர்.

இப்பகுதியில் கருவறையில் வெள்ளம் உயரும் தருணங்களில் நிலத்தடி நீர்மட்டம் (water table) 300 – 320 அடி இருந்ததாக இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் கண்டறிந்துள்ளனர். எனவே இந்த நிகழ்வு பற்றித் தெளிவான விளக்கம் இல்லை. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காக காசியிலிருந்து நீர் பொங்கி வருகிறது என்று பக்தர்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது.

குறிப்பிட்டுச் சொல்லும்படியான மற்றொரு நிகழ்வு உள்ளது. சோல்ஸ்டைஸ் (Solstice) என்பது சூரியன் கடக ரேகை அல்லது மகர ரேகைக் கோட்டுக்கு நேர் மேலே வந்துவிட்டுத் திசைமாறிச் செல்லும் நாள். இந்த நிகழ்வு ஜூன் 20 அல்லது 21 (உத்தராயணம்); டிசம்பர் 21 அல்லது 22 (தட்சிணாயணம்) ஆகிய தேதிகளில் மட்டும் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டிருக்கிறது. இவ்விரு நாட்களிலும் சூரிய உதயத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள சாளரம் வழியாகப் புகுந்து சிவலிங்கத்தின் நெற்றியின் மீது விழுவது வியப்பு.

கல்வெட்டு 

இக்கோவிலில் 25 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு, படியெடுக்கப்பட்டுத் தென்னிந்திய கல்வெட்டுகள் South Indian inscriptions (S.I.I) தொகுதி VIII எண் 503 முதல் 528 வரை (பக்கம்: 251 முதல் 266 வரை) பதிவாகியுள்ளது. கோவிலின் உள்ளேயும் மற்றும் கோவில் வளாகத்திலேயும் இந்தக் கல்வெட்டுகளைக் காணலாம். இக்கோவிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல்லவர்கள், கங்கப் பல்லவர்கள், பாணர்கள், மற்றும் சோழ மன்னர்கள் அளித்த நிலையான கொடைகளைப் (perpetual gifts) பதிவு செய்துள்ளன. இக்கோவிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளிலேயே பழமையானது மூன்றாம் நந்திவர்மனின் 23 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 802)  ஆகும். நிருபதுங்கவர்மனின் 24 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு வானவித்யாதர மகாபலி வானவராயனின் கொடையைப் பற்றிப் பதிவு செய்துள்ளது. தந்திவர்மனின் 49 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 778 – 829) ,பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாண மன்னன் ஜெயனந்திவர்மனின் மகன் முதலாம் விரமாதித்தியன் (கி.பி. 796 – 835) இக்கோவிலுக்கு அளித்த கொடையினைப் பற்றிப் பதிவு செய்துள்ளது. பெரும்பாணப்பாடி பாண மன்னர்களின் கால்வழி மரபு (Geneology) குடிமல்லம் (பாணர்) மற்றும் உதயேந்திரம் (பல்லவர்) செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் கல்வெட்டுகளிலேயே மிகவும் அண்மையானது யாதவ தேவராயனின் (கி.பி. 1346) கல்வெட்டாகும். குடிமல்லம் மற்றும் கோலார் ஆகிய நகரங்கள் பாணர் வம்சத்தவர்களின் தலைநகராகவும் திகழ்ந்துள்ளது. விக்கிரம சோழனின் கல்வெட்டு, கி.பி. 1126 ஆம் ஆண்டில்  இக்கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ள செய்தியினைப் பதிவு செய்துள்ளது.

கல்வெட்டுகள் கோவில் மூலவரை பரசிராமேசுரமுடைய நாயனார் என்றும் திருவேங்கடக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவிற்பெரும்பெட்டு ஆளுடையார் ஸ்ரீ பரமேசுரமுடையர்    என்றும் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பெரும்பாணப்பாடி திருவேங்கடக் கோட்டத்து திருவிற்பெரும்பெட்டு மகாதேவர் பரசுராமேசுரமுடையர் என்றும் இக்கோவில் மூலவரைக் குறிப்பிடுகின்றன. இவற்றுள் ஒரு கல்வெட்டு கூட இக்கோவிலின் பெயரை குடிமல்லம் என்று குறிப்பிடவில்லை. ,மாறாக இவ்வூர் விப்ரபீடம் (பிராமண அக்ராகரம்) என்ற பெயரிலேயே பதிவு  செய்யப்பட்டுள்ளது.

கி.பி. மூன்றாம் நூற்றண்டில் உஜ்ஜைனியில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்களில் குடிமல்லம் இலங்கத்தை ஒத்த உருவம் காணப்படுகிறது. மதுரா அருங்காட்சியகத்தில் உள்ள முதலாம் நூற்றண்டைச் சேர்ந்த சிற்பம் ஒன்று குடிமல்லம் சிவலிங்க வடிவினைக் கொண்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் சந்திரகிரி அருங்காட்சியகத்தில் கிரானைட்டினாலான குடிமல்லம் சிவலிங்கத்தின் மாதிரி வடிவம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 06.00 முதல் மாலை 08.00 வரை.

தொலைபேசி: 08578288280

குறிப்புநூற்பட்டி

  1. Gudimallam http://travel.egway.co.in/south-india/tirupati/gudimallam
  2. Gudimallam (Wikipedia)
  3. Gudimallam. Papanaidupeta, Kalahasti, Tirupathi .(http://www.krishnababug.com/2009/03/gudimallam-papanaidupeta-kaala-hasti.html)
  4. Gudimallam Linga – Satavahana Style. (http://indiatemple.blogspot.in/2004/12/gudimallam-linga-satavahana-style.html)
  5. Mysterious saga of a 2,200 year old lingam. (http://www.megalithic.co.uk/article.php?sid=2146413274)

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில், தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

15 Responses to குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவில்: உலகின் மிகப் பழைமையான சிவலிங்கம்

  1. kaveripak சொல்கிறார்:

    மற்றுமொரு அருமையான பதிவு. பாராட்டுக்கள். உங்களுடைய சரித்திர ஆய்வுகள் பிரமாதம்

    Like

  2. Venkat சொல்கிறார்:

    இதுவரை அறிந்திராத கோவில். வித்தியாசமான சிவலிங்கம் காணக் கிடைத்தது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    Like

  3. பிங்குபாக்: குடிமல்லம் பரசுராமேஸ்வரர் கோவில்: உலகின் மிகப் பழைமையான சிவலிங்கம் – TamilBlogs

  4. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    அருமையான ஆய்வு பதிவு ஐயா
    சிலை மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது
    மிகவும் தொன்மையானச் சிலையைத் தங்களால் இன்று கண்டேன்
    நன்றி ஐயா

    Like

  5. இவ்வளவு தகவல்கள் எப்படித்தான் சேகரிக்கின்றீர்களோ… அருமை நண்பரே.

    Like

  6. ஸ்ரீராம் சொல்கிறார்:

    விளக்கமான படங்களுடன் சுவாரஸ்யமான பதிவு.

    விவரங்கள் அறிந்தேன்.

    Like

  7. Dr B Jambulingam சொல்கிறார்:

    குடிமல்லம் பற்றி படித்துள்ளேன். சிற்பத்தைப் பார்த்துள்ளேன். உங்கள் பதிவு மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். நன்றி.

    Like

  8. சிம்மம் மோகனா சொல்கிறார்:

    பழைமையான இந்த சிவன் கோயிலை தரிசித்தது மாபெறும் பாக்கியமே. தொன்மை சிறப்புமிக்க இவ்வாலயத்தை நாம் அனைவருமே சென்று ரிசிக்க வேண்டும்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.