மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள்: நாகரா பாணி குடைவரைக் கோவில் வளாகம்

இமயமலையின் தௌலதார் மலைத்தொடரின் பியாஸ் நதி பாயும் நிலப்பரப்பில் உள்ள ஓர் அழகிய குன்றின் உச்சியில் மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள் என்னும் வகையிலான குடைவரைக் கோவில்கள் (Masrur Monolithic Rock-cut Temples, also known as Masroor Monolithic Rock-cut Temples) அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரைக் கோவில் ஒற்றைக்கல்லில் அகழப்பட்ட கோவில் தொகுதி ஆகும். இக்கோவில் அருமை அழகுடன் உங்களைக் கவர்ந்திழுக்கும் ஓர் இடமாகும். இஃது இமயமலையின் பிரமிடு என்று, இப்பகுதி மக்களால், அன்புடன் அழைக்கப்படுகிறது.

இக்கோவில்கள் இந்தோ-ஆரிய கலைப்பாணியில் (Indo-Aryan Style), நாகரா கட்டடக்கலை மரபில் (Nagara Architectural Tradition) அகழப்பட்ட 15 குடைவரைக் கோவில்களின் தொகுதி (Group of 15 Rock-cut Temples) ஆகும். இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் மிகவும் அறியப்படாத கோவில்களில் ஒன்றான இது, தனித்துவம் மிக்க ஒற்றைக்கல் கட்டுமானம் ஆகும். இஃது இந்தியாவின் முக்கியமான குடைவரைக் கோவில்களில் ஒன்றாக எண்ணப்படுகிறது. மாமல்லபுரத்தின் ஐந்து இரதங்கள் (ஒற்றைக்கல் மண்டபங்கள்), இராஷ்டிரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணனால் அகழப்பட்ட எல்லோரா 16 ஆம் குகை எண் கொண்ட கைலாசநாதர் கோவில், தர்மநாத் கோவில், தம்மர் (Dharmanath temple at Dhammar) (இராஜஸ்தான்) போன்ற குடைவரைக் கோவில்களுக்கு இணையாக மஸ்ரூர் கோவில் தொகுதி   எண்ணப்படுகிறது.

இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரே ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி இதுவாகும். இக்கோவில் தொகுதி மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட அணி அலங்காரங்களைக் கொண்டுள்ளது. ஓர் ஒற்றை மலைக்குன்றைக் குடைந்து, குறுக்கும் நெடுக்கும் வெட்டி, நுணுக்கமாகச் செதுக்கி இந்த ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு திசையை நோக்கியவாறு அமைக்கப்பட்ட இக்குடைவரைக் கோவில் தொகுதக்கு எதிரே பனிபடர்ந்த தௌலாதார் மலைத்தொடர் கம்பீரமாய்க் காட்சி தருகிறது.

இக்கோவில் தொகுதி சிவன், விஷ்ணு, தேவி மற்றும் இந்து மதத்தின் சௌரா மரபுகளுக்கு (Saura traditions of Hinduism) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் தொகுதியில் இடம்பெற்றுள்ள படிமங்கள் பல கடவுள்களில் ஒரு கடவுளை வணங்கும் (Henotheistic) படிமவியல் (Iconography) கோட்பாட்டின்படி அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் அகழப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு பூகம்பத்தைத் தொடர்ந்து தற்போதுள்ள நிலையிலேயே இக்கோவில் எஞ்சியுள்ளது. கட்டடக் கலைஞர்களும் பிற கலைஞர்களும் இக்கோவில் பற்றி பெரும் இலட்சியங்களுடன் கூடிய விரிவான திட்டத்தைக் கொண்டிருந்தனர். என்றாலும் இக்கோவில் வளாகம் முற்றுப் பெறாமல் உள்ளது. இக்கோவிலின் சிற்பங்களும் புடைப்புச் சிற்பங்களும் காணாமல் போய்விட்டன. பூகம்பத்தாலும் சேதமடைந்துள்ளன.

அமைவிடம் 

மஸ்ரூர் ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி இமாச்சல பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டம், நாகாரோ சூரியன் வட்டம்,  மஸ்ரூர்  பின் கோடு 176026 (லுஞ் (Lunj) தபால் நிலையம்)  கிராமத்தில் அமைந்துள்ளது. வெளிப்புற இமயமலை அல்லது சின்ன இமயமலை (sub-Himalaya) என்று அழைக்கப்படும் தௌலாதார் மலைத்தொடர் (The Dhauladhar Hill range), அட்சரேகை 32°29′10″N தீர்க்கரேகை 76°05′50″E, கடல் மட்டத்திலிருந்து 3500 மீ முதல் 6000மீ வரையான உயரத்தில் அமைந்துள்ளது. இந்த தௌலாதர் மலைத் தொடரில், பியாஸ் நதிக்கரையோரம் இயற்கை வனப்புடைய நிலப்பகுதியில் மஸ்ரூர்  கிராமம் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 32°04′21.2″N அட்சரேகை 76°08′13.5″E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 762 மீ (2500 அடி) ஆகும். சிம்லா – தரம்சாலா சாலையில் தரம்சாலாவுக்கு 40 கி.மீ முன்னதாக இவ்வூர் அமைந்துள்ளது. இந்தச் சாலையிலிருந்து உள்ளே 10 கி.மீ. செல்ல வேண்டும். இவ்வூர் காங்கரா கோட்டையிலிருந்து (Kangra Fort) 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பதான்கோட் இவ்வூரிலிருந்து 85 கி.மீ. தொலைவிலும், ஜலந்தர் இவ்வூரிலிருந்து 150 கி.மீ. தொலைவிலும், மாநில தலைநகர் சிம்லா இவ்வூரிலிருந்து 228 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அருகில் உள்ள கிராமங்கள் பச்ச (Bassa) விலிருந்து 1 கி.மீ. தொலைவிலும், சக்ரி (Sakri) 2 கி.மீ. தொலைவிலும், நாகாரோ சூரியனிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஸ்பாயில் (Spail) 3 கி.மீ. தொலைவிலும், காதொலி (Katholi) 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 395 (ஆண்கள் 224; பெண்கள் 171; மொத்த வீடுகள் 100) ஆகும்.

குடைவரைக் கோவில் கட்டடக்கலை வரலாறு

குடைவரைகள்

கி.மு. 2 – 3 நூற்றாண்டுகளில் பெளத்த மதம் பெற்ற செல்வக்கினைத் தொடர்ந்து குடைவரைகள் அகழப்பட்டன. தனிக் குன்றுகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள், கோவில் கட்டுமானத் தொழில் நுட்பத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கின. முற்காலத்திய குடைவரைக் கோவில்கள் மலையைக் குடைந்து செதுக்கி உருவாக்கிய வடிவங்கள் ஆகும்.  மிகவும் பழைமையான குடைவரைக் கட்டமைப்புப் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள பராபர் குகைகள் (Barabar Caves) ஆகும். வளைவுடன் கூடிய நுழைவாயில் (arched opening) மற்றும் இரண்டு அறைகளைக் கொண்ட இந்தக் குகைகள் அசோகர் காலத்து புத்தமதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இவை கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இவை தொடக்ககாலக் குடைவரைக் கோவில் கலைக்குச் சான்றாகக் கருதப்படுகின்றன. மேற்கு தக்காணத்தில் கண்டறியப்பட்ட பௌத்த ஆலயங்களும் மடாலயங்களும் கி.மு. 100 மற்றும் கி.பி. 170 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜா குகைகள் (the Bhaja Caves), கார்லா குகைகள் (the Karla Caves), பெட்ஸ் குகைகள் (the Bedse Caves), மற்றும் கானேரி குகைகள் (the Kanheri Caves) ஆகிய குகைகளும் தொடக்க காலக் குகைக் கோவில்கள் ஆகும்.

பிற்காலத்தில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பல இந்துமதத்தைச் சார்ந்த பல அரசர்கள் இந்துக் கடவுளர்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பல குகைக் கோவில்களை உருவாக்கினார்கள். குடைவரைக் கோவில் கட்டடக்கலையின் ஒப்பளவு கி.பி. 5 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே அகழப்பட்ட அஜந்தா எல்லோரா குடைவரைக் கோவில்களால் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கி.பி. 5 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதாமி, ஐஹோளே மற்றும் எலிஃபண்டா குடைவரைகளை மேம்படுத்தப்பட்ட குடைவரைக் கட்டமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.

தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் வம்சத்து மன்னர்களே குடைவரைக் கோவில்களை கட்டமைத்துள்ளனர் பிள்ளையார்பட்டியில் பாண்டியன் செழியன் சேந்தனால் அகழப்பட்ட குடைவரையும், மலையடிக்குறிச்சிக் குடைவரையுமே தமிழகக் குடைவரைகளில் தொன்மையானது என்று ஒரு பிரிவினரும், முதலாம் மகேந்திரவர்ம பல்லவனால் அகழப்பட்ட மண்டகப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) குடைவரையே தொன்மையானது என்று வேறொரு பிரிவினரும்  கருதுகின்றனர். மகேந்திரவர்ம பல்லவன்  மாமண்டூர், பல்லாவரம், திருகோகர்ணம், திருச்சிராப்பள்ளி, சீயமங்கலம், திருக்கழுக்குன்றம், சிங்காவரம், மகேந்திரவாடி ஆகிய ஊர்களில் குடைவரைகளை 7 ஆம் நூற்றாண்டில் அமைத்துள்ளான். பாண்டிய மன்னர்கள் 30 குடைவரைகளுக்கும் மேலாக அகழ்ந்துள்ளனர்.

ஒற்றைக்கற்றளிகள்

மாமல்லபுரத்தில் ஐந்து இரதங்கள் என்று அறியப்படும் ஒற்றைக்கல் மண்டபங்கள் அல்லது ஒற்றைக் கற்றளிகள் அடங்கிய (குடைவரைக்) கோவில் வளாகம் இக்கலைக்கான சிறந்த முன்னுதாரணம் ஆகும். ஒரு பாறையை வெளிப்புறமாக மேலிருந்து கீழாகக் குடைந்து அமைக்கப்படும் கோவில்கள் ஒற்றைக் கற்றளி (ஒற்றைக்கல் + தளி) என்று அழைக்கப்பட்டன. மாமல்லபுரத்தில் ஒரே பாறையைப் வெளிப்புறமாக மேலிருந்து கீழாகக் அகழ்ந்து இரதங்கள் போன்ற அமைப்பில் ஐந்து (மண்டபங்கள்) கற்றளிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் கணேச இரதம், வலையான் குட்டை இரதம், தெற்குப் பிடாரி இரதம், வடக்குப் பிடாரி இரதம் ஆகிய இரதங்களும் இந்த முறையில் அகழப்பட்டவை ஆகும். கழுகுமலை வெட்டுவான் கோவில் கி.பி. 800 ஆம் நூற்றண்டில் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒற்றைக்கல் கற்றளிகளாகும். இக்கோவில் முற்றுப் பெறவில்லை.

இந்தியாவில்1500 க்கும் மேலான குடைவரைகள் உள்ளனவாம். இவற்றுள் பல குடைவரைகள் உலகளாவிய முக்கியத்துவம் கொண்ட கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளன. பல குடைவரைகளில் மிக அழகிய கற்சிற்பங்களும் சில குடைவரைகளில் சுவரோவியங்களும் (Frescos) அலங்கரிக்கின்றன. பண்டைய மற்றும் இடைக்காலக் குடைவரைக் கட்டமைப்புகள், கட்டமைப்புப் பொறியியல் (structural engineering) மற்றும் கைவினைத்திறன் (craftsmanship) ஆகிய துறைகளில் படைத்த சாதனைகளைப் பிரதிபலிக்கின்றன.

இந்து கட்டுமானக் கோவில் கட்டடக்கலை (Hindu Structured Temple Architecture)

குடைவரைக் கோவில்களைத் தொடர்ந்து கட்டுமானக் கோவில்கள் (Freestanding Structured Temple) இந்திய நாடெங்கும் கட்டப்பட்டன. கட்டுமானக் கோவில் கட்டடக்கலையில் (Structured Temple Architecture) மூன்று முக்கியப் பாணிகள் பின்பற்றப்பட்டன. வட இந்தியாவில் (இமயமலை முதல் விந்திய மலை வரை) நாகரா அல்லது வடக்கு பாணியிலும் (Nagara or the Northern style), தென்னிந்தியாவில் திராவிடம் அல்லது தெற்கு பாணியிலும் (Dravida or the Southern style), தக்காணம் மற்றும் மத்திய இந்தியாவில் வேசரா அல்லது (நாகரா மற்றும் திராவிட பாணிகள் இணைந்த) கலவையான பாணியிலும் (Vesara Style) கட்டுமானக் கோவில்கள் கட்டப்பட்டன. திராவிட பாணியில் கட்டப்பட்ட தென்னிந்திய கோவில்களில் விமானங்கள் (vimana) இடம்பெறுவது மரபு. நாகரா  பாணியில் கட்டப்பட்ட வட இந்திய கோவில்களில் சிகரங்கள் (Shikara) இடம்பெறுவது மரபு. விமானங்களும் சிகரங்களும் இந்த இரண்டு மரபுக் கோவில்களில் தனித்துவம் பெற்ற அமைப்புகளாகும்.

நாகரா பாணியில் அமைக்கப்பட்ட கோவில்கள் 1. உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைக்கப்படும். 2. இக்கோவிலைச் சுற்றி விரிவான சுற்றுச் சுவர்களும் நுழைவாயிலும் அமைக்கப்படும். 3. தொடக்ககால நாகரா பாணிக் கோவில்களில் ஒற்றைச் சிகரம் (Single Shikara) மட்டும் இருந்தது. பிற்காலக் கோவில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிகரங்கள் (Multiple Shikaras) இடம்பெறுவது மரபு. 4. கருவறை மிக உயரமான சிகரத்தின் அடியில் அமைக்கப்படும். 5. சிகரத்தின் உச்சியில் அமலகா பொருத்தப்பட்டிருக்கும். அமலகா என்பது வட்டு வடிவில் (Disc shaped) அல்லது நெல்லிக்காய் வடிவில் (Gooseberry / Amla shaped) செதுக்கப்பட்ட அமைப்பு ஆகும்.

நாகரா பாணி கட்டடக்கலை திராவிட பாணிக் கட்டடக் கலையில் இருந்தும் குகைக்கோவில் கட்டைமைப்பில் இருந்தும் மாறுபட்டனவாகும். மஸ்ரூர் கோவில்கள் நாகரா கட்டடக்கலை பாணியில் அமைக்கப்பட்ட ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் தொகுதி ஆகும்.

மஸ்ரூர்: நாகரா பாணி ஒற்றைக்கல் குடைவரைக் கோவில்கள்

குறிப்பாக இமாசலபிரதேசப் பகுதிகளில் கோவில்கள் ஸ்தூபிப் (Pagoda) பாணியில்  கூரைகள் அமைக்கப்பட்டிருக்கும். காஷ்மீரிலிருந்து வடிவம் பெற்ற இந்த ஸ்தூபிக்  கலைப்பாணி கோவில்களை கல் மற்றும் மரம் ஆகிய பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்படுவது மரபு. இக்கோவில்கள் சதுர வடிவமும் ஸ்தூபி (Pagoda) வடிவக் கட்டமைப்பும் பெற்றிருக்கும். இந்த இமாசலப் பிரதேசப் பகுதியில் நாகரா சிகரத்துடன் கூடிய குடைவரைக் கோவில் தொகுதி எவ்வாறு அமைக்கப்பட்டது. இது பெரிய புதிராகவே உள்ளது.

நாகரா  பாணியில் கட்டுமானக் கோவில்களாக (masonry construction) மட்டுமே அமைப்பது மரபு. ஒற்றைக் கற்றளிகளை நாகரா பணியில் அமைப்பது மரபல்ல. வட இந்தியப் பகுதிகளில் குடைவரைக் கோவில்களை அதிகமாகக் காண இயலாது. ஆனால் மஸ்ரூர் கோவில்களோ  நாகரா பாணியில் கட்டமைக்கப்பட்ட தனித்துவமான கற்றளிகள் ஆகும். இந்தக் ஒற்றைக் கற்றளி கள் குடைவரைக் கோவில்களுக்கான விதிவிலக்குடன் நாகரா பணியில் காணப்படுகின்றன. இது மட்டுமே இமயமலைப் பகுதியில் நாகரா பணியில் அமைந்துள்ள ஒரே ஒற்றைக் கற்றளிகளின் தொகுதி ஆகும்.   எனவே மஸ்ரூர் கோவில்கள் வடிவம் மற்றும் கட்டுமான முறையின் தனிப்பட்ட நிலைமாற்றத்துடன் (unique permutation of form and construction method) காணப்படுகின்றன.

மஸ்ரூர் கோவில்களின் வரலாறு 

மஸ்ரூர் ஒற்றைக்கல் குடைவரைக் கோவில்கள் கி.பி. 1875 ஆம் ஆண்டு ஐரோப்பிய தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. இக்கோவில்களைப் பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தை மேற்கொண்டபோது அகழ்ந்ததாக உள்ளூர் புராணத்தில் (Temple Legend) சொல்லப்பட்டுள்ளது. வரலாற்று ஆசிரியர்களுக்கும் தொல்லியலாளர்களுக்கும் மஸ்ரூர் கோவில்கள் ஒரு மாபெரும் புதிராகும்.

ஏனெனில் இது கட்டப்பட்ட காலத்தை நிர்ணயிக்கும் வண்ணம்  கல்வெட்டு போன்ற எந்த நம்பகமான சான்றும் இதுவரை கிடைக்கவில்லை. எந்தக் கல்வெட்டும் இக்கோவில் கட்டப்பட்ட காலத்தையோ அல்லது இதன் புரவலர் பெயரையோ குறிப்பிடவில்லை. எனவே இக்கோவில் எப்போது கட்டப்பட்டது என்ற வரலாற்றுத் தகவல் கிடைக்கவில்லை.

மார்தாண்ட சூரியன் கோயிலை கார்கோட பேரரசின் மூன்றாம் மன்னர் லலிதாத்தியன் (Lalitaditya) (ஆட்சியாண்டு: கி.பி. 724 – 760) கி பி எட்டாம் நூற்றாண்டில் கட்டினார். இக்கோவில் கி.பி. 725-756 காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கோவில் மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகளின் தொகுதிக்கு அருகில் உள்ளது. மார்தாண்ட சூரியன் கோயில் அதிகம் சிதைந்துள்ளது. என்றாலும் வரலாற்று அறிஞர்கள் இவ்விரு கோவில் சிற்பங்களிலும் சில ஒற்றுமைகளைக் கண்டுள்ளனர். லலிதாத்தியன் ஒரு வைணவன் என்று வரலாறு கூறுகிறது. எனவே மஸ்ரூர் கற்றளிகள் சைவ சமயத்தைச் சார்ந்த மன்னன் ஒருவனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர் என்.கே.சிங் கருதுகிறார்.

மஸ்ரூர் கோவில் வளாகத்தைச் சுற்றி அமைந்துள்ள குகைகள் மற்றும் சிதைவுகள் எல்லாம், இந்த வளாகத்தைச் சுற்றி முக்கியத்துவம் பெற்ற குடியிருப்புப் பகுதிகள் இருந்திருக்கலாம் என்று அறிவுறுத்துகின்றன. நவீன பஞ்சாபின் சமவெளிகளை ஆண்ட பண்டைய ஜலந்தரா சாம்ராஜ்யத்தின் அறியப்படாத ஆட்சியாளர்களுடன் இந்தக் கோவிலை வரலாற்று அறிஞர்கள் தொடர்புபடுத்துகின்றனர். நாகரா கலைப்பாணி சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைப் பகுதிகளுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம். என்றாலும் இக்கருத்துடன் ஜலந்தரா சாம்ராஜ்யத்தை இணைப்பதற்கான நம்பகமான தகவல் இல்லை.

கலைப்பாணி மற்றும் கட்டுமானம் ஆகியவற்றின் அடிப்படையில், மொத்தப் பகுதிக்கும், இந்தக் கோவில் வளாகம் தனித்துவமான சான்றாகத் திகழ்ந்தாலும், வரலாற்றை நிறுவுவதில் மென்மேலும் குழப்பங்களே நீடிக்கின்றன. இவ்வூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காங்க்ரா கோட்டையின் தொடக்ககாலக் கட்டடக்கலை பாணிக்கும் மஸ்ரூர் கோவில் கட்டடக்கலை பாணிக்கும் சில ஒற்றுமை காணப்படுகிறன. என்றாலும் இந்த ஒற்றுமை, வரலாற்றை நிருவுவதற்கோ அல்லது இப்பகுதியில் ஜலந்தரா அரசின் விரிவாக்கத்தைக் குறிப்பிடவோ, போதுமானதல்ல.

கலைப்பாணியின் அடிப்படையில் இந்தக் கோவில் பண்டைய குப்தர்களின் உன்னதக் காலத்தைச்  (the period of Gupta classicism) சேர்ந்ததாகவும் கருதப்படுகிறது. இது கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் கருதப்படுகிறது. மற்றொரு புதிரான அம்சம் இக்கோவிலுக்கும் அங்கோர்வாட் கோவிலுக்கும் இடையிலான அதிர்ச்சிகரமான ஒற்றுமையாகும். இந்த வடிவமைப்பு ஒற்றுமையை இரண்டு கட்டமைப்புகளுக்கிடையே காணலாம். எனினும் இரண்டு கட்டமைப்புகளுக்கும் இடையே  அளவு மற்றும் தளவமைப்பில் வேறுபாடுகள் உள்ளன. இது பற்றி மேலும் பல ஆய்வுகள் தேவை.

இக்கோவில் வளாகம் தாகூர்வடா (Thakurwada) என்று வைணவக் கோவில்களைக் குறிக்கும் சொல்லால் அறியப்படுகிறது. முதன்மைக் கருவறையில் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோரின் படிமங்கள் நிறுவப்பட்டுள்ளன. என்றாலும் இஃது ஒரு சிவன் கோவில் என்பதை முதன்மைக் கருவறைக் கதவு நிலைக்கு மேல் உள்ள விட்டம் மற்றும் சில பகுதிகளில் பொறிக்கப்பட்ட சிவனின் உருவங்கள் சான்று பகர்கின்றன. பிற்காலத்தில் இந்தச் சிவன் கோவில்கள் வைணவக் கோவில்களாக மாற்றப்பட்டிருக்கலாம். 

இந்த வளாகம் கி.பி. 1905 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தால்   பலத்த சேதமுற்றது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை கி.பி. 1914 ஆம் ஆண்டில் இந்த வளாகத்தைத் தன்னுடைய பாதுகாப்பில் எடுத்துக்கொண்டது.

கோவில் வளாகம்: திட்டவியல்  (Planning)

இந்த ஒற்றைக் கற்றளிகளின் வளாகம் மஸ்ரூர் கிராமத்தின் உள்ள குன்றின் உச்சியில் உயர்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு இக்கோவிலிற்கு முந்தைய காலத்திய நிலவிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இக்கோவில் வளாகம் குடியிருப்பின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது.  கோவில் வளாகத்தினை அடுத்துக் கீழக்குத் திசையில் செவ்வக வடிவில் ஒரு தண்ணீர்க் குளம் அகழப்பட்டுள்ளது.

masrur_rockcut_temple

மஸ்ரூர் குடைவரைக் கோவில்கள் PC: Akashdeep83 Wikipedia

கோவில் வளாகம் வட இந்தியாவில் நிலவிய நாகரா கலைப்பாணியில் அமைந்துள்ளது. குடைவரைக் கோவிலின் மேற்கட்டுமானம் சமச்சீரான சிலுவை வடிவ  (symmetrical and elaborate cruciform) அமைப்பில்  உள்ளது. மொத்தம் ஒன்பது சிகரங்கள் உள்ளன. சிகரங்கள் படிநிலை அளவில் (hierarchical scale) அமைக்கப்பட்டுள்ளன. சிகரங்களில் மிகப்பெரிய முதன்மையான சிகரம் மையத்தில் உள்ள கருவறையின் மேல் அமைந்துள்ளது. முதன்மையான சிகரம் ஒன்பது நிலைகளுடன் அமைந்துள்ளது. சிகரத்தின் உச்சியில் ஒரு முக்கிய அமலகா அலங்கரிகிறது. தற்போது இந்த அமலகா சிகரத்திலிருந்து கீழே விழுந்து தரையில் கிடக்கிறது.

ஒற்றைக்கல்லை அகழ்ந்து கோவில் மையத்தில் சதுர வடிவில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை கிழக்கு நோக்கி குளத்தைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. கருவறையில் கடவுள் சிலைகளை வைப்பதற்காக உயர்ந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தைச் சுற்றிவர பிரகாரம் போன்று இடம் விடப்பட்டுள்ளது. முகமண்டபம், மண்டபம், அந்தராளம் வழியாகக் கருவறைக்குள் நுழையலாம். மண்டபத்தின் இருமருங்கிலும் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் கோவிலின் உச்சிக்குச் செல்ல உதவுகின்றன.

சர்வதோபத்ரா என்ற அமைப்பில் கருவறைக்கு எல்லாப்புறத்திலிருந்தும் வழி காணப்படுகிறது. கருவறையை ஒட்டி வடக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் இரண்டு அறைகள் காணப்படுகின்றன. இவை இரண்டும் துணைக் கருவறைகளா அல்லது மற்ற நடைமுறை சார்ந்த இடைவெளிகளா (other functional spaces) என்று தெளிவாகத் தெரியவில்லை. முதன்மைக் கருவறையின் இரண்டு முன்னறைகளாகவும் (vestibules) இவற்றைக் கருதலாம். இந்த அறைகள் மற்ற தெய்வங்களுக்கான கருவறைகளாக இருந்திருக்க வாய்ப்புள்ளன. மண்டபத்தின் இருமருங்கிலும் திறந்த வெளி அமைந்துள்ளது. இந்தத் திறந்த வெளி சடங்குகள் நடத்தப் (ritualistic gathering) பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரிய தண்ணீர் குளம் இந்த வளாகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. மதச் சடங்கிற்கான ஓர் அங்கமாக இந்தத் தண்ணீர்க் குளம் விளங்கியுள்ளது. குடியிருப்பிற்குத் தேவையான நீர்நிலையாகவும் திகழ்ந்துள்ளது.

8th_century_iconography_at_masrur_hindu_temple

The Masrur rock-cut temple presents a diversity of iconography, likely reflecting ecumenism or henotheism in 8th-century Hinduism. Above: Incomplete iconography locations. PC: Ms Sarah Welch Wikipedia

8th_century_rock_cut_masrur_hindu_temple2c_himachal_pradesh_india2c_1913_sketch_annotated

Some structures and the plan at Masrur temple (1913 sketch, incomplete). Ms Sarah Welch Wikipedia

ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் கட்டுமானம்

மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள் மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு குன்றை அகழ்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏழு சிகரங்களும் ஒற்றைக்கல் குன்றின் பகுதிகளாக அமைந்துள்ளன. இரண்டு சிகரங்கள் குன்றின் ஒரு பகுதியாக அல்லாமல் குன்றிலிருந்து பிரிந்து நிற்கின்றன. இரண்டு கருவறைகளுக்கு மேல் அமைக்கப்பட்ட இந்த இரண்டு சிகரங்களும் மண்டபத்தின் இருமருங்கிலும் அமைந்துள்ளன.

மண்டபத்தின் தூண்கள் குன்றின் முதன்மைக் கட்டுமானப் பகுதியாக (Main Structural Component) அல்லாமல் மண்டபத்தின் துணைக் கட்டமைப்புகளாக (Supporting Structure) இணைக்கப்பட்டுள்ளன. தூண்களின் தண்டுப் (Shaft) பகுதிகள்  5 மீ. உயரம் மற்றும் 60 செ.மீ. விட்டம் கொண்டு உருளை வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களின் அடிப்பகுதி (Base) மற்றும் தலைப்பு (Capital) எல்லாம் மலர் வடிவங்களால் (Floral Patterns) அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த உருளை வடிவத் தூண்கள் பிற்கால இணைப்பாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் இக்கோவில் மண்டபத்தின் அசல் தூண்கள் இடிந்து விழுந்து துண்டுதுண்டாக உடைந்துபோனதால் புதிய தூண்கள் மண்டபத்துடன் இணைக்கப்பட்டன.

பூகம்பத்தால் மண்டபத்தின் கூரை சேதமானது பற்றி எந்த ஆதாரத்தையும் கண்டறிய முடியவில்லை. மண்டபத் தூண்களின் அளவை வைத்துப் பார்க்கும்போது இந்த மண்டபம் கூரையால் மூடப்பட்டிருந்திருக்கலாம். உள்ளூரில் கிடைத்த மரத்தால்கூட மண்டபத்தின் கூரை அமைந்திருக்க வாய்ப்புள்ளது. முதன்மைக் கருவறையின் நுழைவாயில் கதவு நிலைகள்  (Door Jambs) மற்றும் வாயில் விட்டங்கள்  (Lintels) எல்லாம் ஒற்றைக் கல்துண்டில் செதுக்கப்பட்டுள்ளன. குடைவரைக் கோவில் பாறைப் படுக்கையைச் செதுக்கி சமமான மேற்பரப்புக் கொண்ட தரைத்தளமாக (sculpting a plain surface on the bed of the rock) அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைதளம் சில இடங்களில் சுண்ணாம்புக் காரை கொண்டு பூசப்பட்டுள்ளது.

carvings_on_rock_at_masroor_rock-cut_temple

கருவறை நுழைவாயிலில் அழகணிகள் PC: Karthik Gupta Wikipedia

deity_idols_in_sanctum_sanctorum

மஸ்ரூர் குடைவரை கோவில் முதன்மைக் கருவறையின் மேடையில்  தெய்வச் சிலைகள் PC: Karthik Gupta Wikipedia

அழகணிகள்

மஸ்ரூர் ஒற்றைக்கல் குடைவரைக் கோவில் பல உருவங்கள் (Figures) மற்றும் மலர் வடிவங்களால் (Floral Patterns) அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடவுள்கள் மற்றும் தேவியர்களின் (Gods and Goddesses) உருவங்கள் கோவில் சுவர்களிலும் சிகரத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. சிவன் மற்றும் பார்வதி சிற்பங்கள் எடுப்பாகப் பலவிதத் தோற்றங்களில் காட்டப்பட்டுள்ளன. இலக்குமி மற்றும் சரஸ்வதி ஆகியோர் உருவங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

தூண்களின் அடிப்பகுதி மற்றும் தலைப்புகள் மலர் அணிகளால் (Floral Patterns) அலங்கரிக்கப்பட்டுள்ளன. முதன்மைக் கருவறையின் நுழைவாயில் கதவு நிலைகள்  மற்றும் வாயில் விட்டங்கள்  எல்லாம் வைர அழகணிகளால் (Diamond Motifs) அலங்கரிக்கப்பட்டுள்ளன. கூரை தாமரை வடிவ (Lotus Motifs) அழகணிகளால் விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிகரம் பலவித (Multiple Motifs) அழகணிகளால் விரிவாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கோவில் வளாகம் 1905 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பூகம்பத்தால் சேதப்பட்டுள்ளது. கோவிலின் பெரும்பகுதி சேதமுற்றது பற்றி இங்குத் தரையில் கிடக்கும் துண்டுகளைப்  பார்த்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. கோவில் குடையப்பட்ட பாறைக்குன்று மணல் கல்லால் ஆனது. பறைக்குன்றில் அடர்த்தியான வரிவடிவங்கள் (Grains) காணப்படுகின்றன.

சுற்றுலாத் தகவல்

கோவில் நேரம்

மஸ்ரூர் கோவில் காலை 06.00 மணி முதல் மாலை 06.00 வரை திறந்திருக்கும்.

சுற்றிப் பார்க்க சிறந்த பருவம் எது?

ஆண்டுமுழுவதும்க் இந்தக் கோவிலுக்குப் போய் வரலாம், என்றாலும் மார்ச் மற்றும் அக்டோபருக்கு இடையே அமைந்துள்ள பருவம் சிறப்பானது. எனவே இப்பருவத்தில் வருகை தரலாம்.

போக்குவரத்து வசதி

அமிர்தசரஸ், சண்டிகார், சிம்லா, தில்லி, குர்கான், மணாலி போன்ற நகரங்கள் காங்க்ரா நகருடன் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளன. தில்லி மற்றும் சண்டிகாரில் இருந்து பஸ் வசதி உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம் நாகாரோ சூரியன் ஆகும். பதான்கோட் 87 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கக்கல் (Gaggal) விமான நிலையம் காங்க்ராவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அமிர்தசரஸ் விமானநிலையம் 142 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

எப்படி மஸ்ரூர் செல்வது?

காங்க்ரா அல்லது தர்மஷாலாவிலிருந்து இருந்து ஒரு டாக்ஸியை அமர்த்திக் கொண்டு மஸ்ரூர் வந்து திரும்பலாம். காங்க்ராவிலிருந்து மஸ்ரூர் சென்று திரும்ப டாக்ஸிக் கட்டணம் ரூ. 1200 – 1500 ஆகலாம். மாற்றாக, காங்க்ரா அல்லது தர்மஷாலாவிலிருந்து லஞ் (Lunj) வரை பஸ்ஸில் செல்லலாம். லஞ்சிலிருந்து டாக்ஸி அமர்த்திக் கொண்டு மஸ்ரூர் சென்று வரலாம்.

எங்கே தங்கலாம்?

கோவிலில் விடுதி வசதிகள் இல்லை. காங்க்ராவில் பல குறைந்த கட்டணத்துடனோ  நடுத்தரத்திலோ விடுதி வசதிகள் உள்ளன. காங்க்ரா பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான விருந்தினர் இல்லங்கள், நல்ல வசதிகளையும் அற்புதமான காட்சிகளையும் வழங்குகின்றன.

சாப்பிடுவது எங்கே?

கோவில் வளாகத்திற்கு அருகே சாப்பிட எந்த இடமும் இல்லை. உணவு மற்றும் நீர் கொண்டு செல்லுதல் நல்லது.

குறிப்புநூற்பட்டி

  1. Architecture of the Rock-Cut Temples of Masroor. Nisar Khan https://www.researchgate.net/publication/302292981_Architecture_of_the_Rock-Cut_Temples_of_Masroor
  2. Have you heard about this Pyramid in Himachal Pradesh?! Take a tour through the Himalayan Pyramid Vineeth Mohan April 18, 2018
    https://www.nativeplanet.com/travel-guide/masroor-rock-cut-temple-himachal-pradesh-002875.html
  3. Indian rock-cut architecture Wikipedia
  4. Masroor rock temple http://www.india.com/travel/kangra/places-to-visit/temples-masroor-rock-temple/?utm_source=Happytrips&utm_medium=referral&utm_campaign=HappytripsLinkOuts
  5. Masroor Rock Cut Temples (Masrur Temples) https://www.wondermondo.com/masroor-rock-cut-temples/
  6. Masrur Masroor Himachal Pradesh: Monolithic Rock Cut Temples Albert Fernando Flickr https://www.flickr.com/photos/albert8/2444415787/in/photostream/
  7. Masroor Rock Cut Temple, Kangra https://www.tourmyindia.com/states/himachal/masroor-rock-cut-temple-kangra.html
  8. The Rock Cut Temples of Masroor http://www.mysteryofindia.com/2015/12/rock-cut-temples-masroor.html

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in குடைவரைக் கோவில், கோவில், சுற்றுலா, படிமக்கலை and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to மஸ்ரூர் ஒற்றைக் கற்றளிகள்: நாகரா பாணி குடைவரைக் கோவில் வளாகம்

  1. ஸ்ரீராம் சொல்கிறார்:

    வழக்கம் போலவே சுவாரஸ்யமான தகவல்கள், அழகிய படங்கள்.

    Like

  2. பிரமிப்பான பதிவு, நிறைய தகவல்கள்.

    Like

  3. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    ஏழு சிகரங்கள் ஒற்றைக் கல்லில்
    படிக்கப் படிக்க வியப்புதான் ஏற்படுகிறது ஐயா
    நன்றி

    Like

  4. Dr B Jambulingam சொல்கிறார்:

    இதுவரை அறிந்திராத கோயில். பிரமிப்பை உண்டாக்கிய பதிவு. வாழ்த்துகள்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.