திருப்பத்தூருக்கு அருகே ஏலகிரி (Yelagiri) மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டுரெட்டியூர் (Gundureddiyur) கிராமத்தில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) (Sacred Hearts College (Autonomous) தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் சில சுய ஆர்வலர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பழங்கால மக்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும், “தொழிற்சாலை குடியிருப்பு (வாழ்வியல்) மேட்டைக்” (Industrial settlement Mound) கண்டறிந்துள்ளனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Hearts College (Autonomous) தமிழ்த்துறை பேராசிரியர்கள் தலைமையில் சுயஆர்வலர்கள் இடம்பெற்ற தொல்லியல் குழுவினர் குண்டுரெட்டியூர் கிராமப் பகுதிகளையொட்டி வழக்கமான களப்பணி மேற்கொண்டபோது இந்தத் தொல்பழங்கால மனிதர்களின் வாழ்வியல் மேடு கண்டறியப்பட்டது. இது பற்றிய விரிவான செய்தியினைத் தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், ஆண்டியப்பனூர் பஞ்சாயத்தில் குண்டுரெட்டியூர் பின் கோடு 635710 கிராமம் அமைந்துள்ளது. குண்டுரெட்டியூர் ஏலகிரி மலையின் பின் பக்கச் சரிவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருப்பத்தூரிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருந்து 72 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 208 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் திருப்பத்தூர் இரயில் நிலையம் 25. கி.மீ. தொலைவிலும், காட்பாடி சந்திப்பு இரயில் நிலையம் 75.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ஏலகிரி மலை வேலூர் மாவட்டம் வாணியம்பாடி – திருப்பத்தூர் சாலையில் நான்கு மலைகளால் சூழப்பட்ட மலைத் தொடர் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 1,048 மீ உயரத்தில் அமைந்துள்ள இம்மலை அமைதியான சூழலில் அமைந்துள்ளது. ஏலகிரி மலை 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வேலூர், சோலையார் பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு பேருந்துகள் சென்றுவருகின்றன. ஜோலார்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து ஏலகிரிக்குச் செல்லலாம்.
குண்டுரெட்டியூர் மலையடிவார கிராமத்தில், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Hearts College (Autonomous) தமிழ்த்துறை பேராசிரியர்களான முனைவர். ஆ.பிரபு, முனைவர். சு.சிவசந்திரகுமார், மற்றும் சமூக ஆர்வலர்களான திருவாளர்கள் முத்தமிழ், இராதாகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கள ஆய்வை மேற்கொண்டனர் இந்தக் கள ஆய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த தொழிற்சாலை மற்றும் குடியிருப்புப் பகுதி மேடு (Industrial / Human Settlement Mound) கண்டறியப்பட்டது. இந்தப் பேராசிரியர்கள் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பல களப்பணிகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர். (செய்தித்தாள் கத்தரிப்புகள். திருப்பத்தூர் வட்டாரத் தொல்லியில் களங்கள் பகுதி 2)
இந்தக் குழுவினர் குண்டுரெட்டியூர் கிராமத்தில் கி.பி. 10 – 11 நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஐந்து நடுகற்களை ஆய்வு செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டனர். நான்கு நடுகற்கள் பற்றிய ஆய்வு முடிவடைந்த நிலையில் ஐந்தாம் நடுகல்லை ஆய்வு செய்ய இக்கிராமத்திற்குச் சென்ற போது எதேச்சையாகச் சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் மண்பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். மண்பானை ஓடுகளைச் சேகரித்து வந்து சுத்தம் செய்து ஆய்ந்துள்ளனர். ஆய்வில் அவை பழையான மண்பானை ஓடுகள் என்று தெரிந்ததால் அப்பகுதியில் மேலும் சில நாட்கள் கள ஆய்வினைத் தொடர்ந்தனர்.

PC: தஞ்சை ஆ மாதவன்
இவ்வாறு தொடர்ந்து எட்டு நாட்கள் மேற்கொண்ட கள ஆய்வில் இப்பகுதியில் பல அரிய தொல்போருட்களைச் சேகரித்தனர். இவ்வாறு நிலத்தின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்ட சுடுமண் ஊதுகுழாய்கள், கருப்பு மற்றும் சிவப்புப் பானை ஓடுகள், தடிமனான சிவப்புப் பானை ஓடுகள், சிவப்பு வண்ணப்பூச்சுக் கொண்ட சிவப்புப் பானை ஓடுகள், உடைந்த கெண்டிகள், இரும்புத் தாதுக்கள், கழுத்தணியில் இணைக்கப்பட்டிருந்த மணி, புதிய கற்காலக் கருவிகள், எலும்புத் துண்டுகள், பெரிய சுட்ட செங்கலின் பகுதிகள் எல்லாம் தங்களை வியப்பில் ஆழ்த்தியதாகப் பேராசிரியர் ஆ, பிரபு நாளிதழ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் வாழத் தகுந்த சூழல் கொண்ட பல இயற்கையில் அமைந்த கற்குகைகள் இருந்தமையும் இந்தக் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இது போன்ற இரண்டு குகைகளை இக்குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இக்குகைகளுள் ஒன்று மலையடிவாரத்தின் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் இக்குகையினை “கெலிக் கல்” என்று அழைக்கின்றனர். கெலி என்றால் பள்ளம் என்று ஆய்வாளர்கள் பொருள் கொள்கிறார்கள். இந்தக் குகையை ஆய்வு செய்ததில் இக்குகை பத்துப்பேர் வசிக்கத் தக்கதாக அமைந்திருந்தது. குகை நுழைவாயிலின் புருவம் (Lintel) நன்கு செதுக்கப்பட்டு அதன் மேல் தமிழ் பிராமி எழுத்துக்களைப் போன்ற அமைப்பிலான குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. குகையின் முன்புறப் பகுதியில் உள்ள கல்லில் உணவுப் பொருட்களை அரைத்ததற்கான தடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கெலிக் கல் குகைக்குச் சற்று தள்ளி அமைந்துள்ள பாறையில் விளையாடுவதற்கான விளையாட்டுக் கட்டம் (Game Board) கீறலாக வரையப்பட்டுள்ளது. குகையை அடுத்து அமைந்துள்ள மிகப்பெரிய நீர் நிலைக்கு “எகிலேரி” என்று பெயர் உள்ளது. ஏலகிரி மலையில் உற்பத்தியாகும் காட்டாறுகள் இந்த நீர்நிலைக்கு வந்து சேர்கின்றன. குகையின் அருகே அமைந்துள்ள மேடான பகுதியில் இரும்பை உருக்குவதற்கான உலை இருந்துள்ளமை பற்றிய உறுதியான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இரும்புத்தாது மூலப்பொருட்கள் அதிகம் கிடைக்கும் இடங்களிலேயே தொழிற்சாலைகள் அமைவது இயற்கை. இந்த மேட்டினைச் சுற்றி இரும்புத் தாதுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இரும்பை உருக்குவதற்குப் பயன்பட்ட மொத்தம் ஏழு சுடுமண் ஊதுகுழாய்கள் இக்குழுவினரால் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த சுடுமண் ஊதுகுழாய்களில் இரும்பின் தடயங்கள் காணப்படுகின்றன. குண்டுரெட்டியூரை ஒட்டிய மலையடிவாரத்தில் மட்டும் பத்து புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நான்கு குத்துக் கற்களும், ஐந்து அரவைக் கற்களும் ஒரு கற்கோடரியின் மேற்பகுதியும் அடங்கும். இப்பகுதியில் சிவப்பு நிறம்கொண்ட மணி ஒன்றும் கிடைத்துள்ளது.
இங்கு சேகரிக்கப்பட்ட தொல்பொருட்கள் பல மூத்த தொல்லியில் ஆய்வாளர்களிடம் காட்டப்பட்டுக் கருத்துக் கேட்கப்பட்டதாம். இந்தத் தொல்லியில் பொருட்கள் யாவும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த தொல்பழங்கால மக்களின் நாகரிக வாழ்வோடு தொடர்புடையதாக இந்த ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
நிலத்தின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த தொல்பழங்கால மக்களின் நாகரிக வாழ்வோடு தொடர்புடையதாக இருக்கும்போது, இப்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டால் எத்தகைய தொல்பொருட்கள் கிடைக்கும்? அவற்றைக் கொண்டு அப்பகுதியை வட தமிழக மாவட்டங்களின் மிகவும் இன்றியமையாத நாகரிக வாழ்வின் மையம் என்று நிரூபிக்க இயலும் என்று இந்தக் களப்பணியாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இங்கு கிடைத்த தொல்பொருட்களை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிக் காலக்கணிப்பு (Dating) செய்வதற்கான முயற்சியையும் இக்களப்பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியில் முறையான அகழ்வாய்வு நடத்துவதற்கான வேண்டுகளை வைத்து தொல்லியல் துறையினருக்குக் கடிதம் எழுதவும் இக்குழுவினர் எண்ணியுள்ளனர்.
குறிப்புநூற்பட்டி
- ஏலகிரி மலை அருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்த வாழ்வியல் மேடு கண்டெடுப்பு. தினமணி 08 அக்டோபர் 2018
- தஞ்சை ஆ மாதவன் டிவிட்டர் https://twitter.com/ThanjaiMadhavan/status/1049328836796604416
வியப்பூட்டும் தகவல்கள்.
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..
LikeLike
மிகவும் அரிதான தகவல்கள் ஐயா
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
LikeLike
தகவல்கள் அருமை நண்பரே.
LikeLike
தங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..
LikeLike