புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடி கிராமத்தில், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுக் கழக உறுப்பினர்கள் செல்லுகுடிக்குச் சுற்றுலா சென்றபோது கண்டறியப்பட்டு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகக் (Pudukkottai Archeological Research Forum) குழுவினரால் படித்தறியப்பட்ட “திசையாயிரத்து ஐநூற்றுவர்” (Thisaiyaarathu Ainootruvar) என்னும் வணிககுழுவினர் (Merchant’s Guild) பற்றிய சோழர் காலத்துத் தூண் கல்வெட்டு தொல்லியல் ஆர்வலர்களிடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பற்றிச் செப்டம்பர் 19, 2018 தேதி நாளிதழ்களில் விரிவான செய்தி வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், செல்லுகுடி பஞ்சாயத்தில் செல்லுக்குடி பின் கோடு 622005 கிராமம் அமைந்துள்ளது. இவ்வூர் கலயான்புரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், பழனியப்பா நகரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், திருவப்பூரிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், திருக்கோகர்ணத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இவ்வூரின் மக்கள்தொகை 470 (ஆண்கள் 239, பெண்கள் 231, மொத்த வீடுகள் 111) ஆகும்.
திசையாயிரத்து ஐஞ்நூற்றுவர் வணிகக்குழுவின் கல்வெட்டு
இந்தச் செல்லுகுடி கிராமத்தில் ஒரு கல்வெட்டைப் பார்த்த எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி (Heritage Club of Government High School Ellaippatti) மாணவர் எஸ்.பூவரசன், தன் பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் (Co-ordinator, Heritage Club) திரு.எஸ்.கஸ்தூரிரங்கனிடம் (Mr.S.Kasthuri Rengan) தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் (Pudukkottai Archeological Research Forum) நிறுவுனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் (Manganoor A. Manikakandan), தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் (President Karu.Rajendran), ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார், உறுப்பினர் ம.மு. கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செல்லுகுடிக்குச் சென்று இக்கல்வெட்டைப் படியெடுத்துப் படித்துள்ளனர். இது திசையாயிரத்து ஐஞ்நூற்றுவர் வணிகக்குழுவின் (Thisaiyaarathu Ainootruvar Merchant’s Guild) கல்வெட்டு என்பது அப்போது தெளிவாயிற்று.
சங்ககாலத்தில் வணிகம்
சங்ககாலத்தில் உழவும் வாணிகத் தொழிலும் சிறந்த தொழில்களாக விளங்கின. உழவும் வாணிகமும் செழிப்புற்று இருந்தமையால் நாடு செழிப்புடன் விளங்கியது. உள்நாட்டு வணிகம் வெளிநாட்டு வணிகம் என்று இருவகை வணிகங்கள் சங்ககாலத்தில் நடைபெற்றன. உள்ளூரில் பண்டமாற்று முறையிலேயே வாணிகங்கள் நடைபெற்றன. நகரங்களில் கூல வணிகர் (கூலம் = நவதானியம்), பொன் வணிகர், அறுவை வணிகர் (துணி), மணி வணிகர் போன்ற வணிகர்களும் சேனை வணிகர் என்ற பிரிவினரும் இருந்தமை பற்றிச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.
சங்ககாலத்தில் வெளிநாட்டு வணிகம் சிறந்து விளங்கியது. சங்ககாலத்திலேயே வாணிகர்கள் பாபிலோனியா, எகிப்து, பாலஸ்தினியம், மெசபத்தோமியா, உரோமாபுரி, கிரேக்கம் போன்ற மேலை நாடுகளுடனும், சீனம், சாவகம் (ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா தேசங்களின் பகுதிகள்) போன்ற கீழை நாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
முத்து, பவளம், ஆரம், அகில், வெண்துகில், சங்கு, மிளகு, இலவங்கம், ஏலம் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. தங்கம், குதிரை, இரும்பு, கம்பளி போன்றவற்றை இறக்குமதி செய்யப்பட்டன. கொற்கை, காவிரிப்பூம் பட்டினம், எயிற்பட்டினம், அழகன்குளம், அரிக்கமேடு, மருங்கூர்பட்டணம் மசுலிப் பட்டினம், மரக்காணம் போன்ற கிழக்குக்கரை துறைமுகங்களைப் பற்றியும் குமரி, நறவு, முசிறி, தொண்டி, பொற்காடு போன்ற மேற்குக்கரைத் துறைமுகங்களைப் பற்றியும் பட்டினப்பாலை, சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.
தமிழகத்திலிருந்து கங்கை முகத்துவாரம் வரை கடற்பயணம் செய்து அங்கிருந்த கலிங்க நாட்டுத் துறைமுக நகரான தாமரலிபதி ((Tamralipti) வழியே கங்கை ஆற்றில் நுழைந்து பாடலிபுத்திரம், காசி போன்ற நகரங்களுக்குச் சென்றும் வணிகம் புரிந்துள்ளனர்.
தமிழகத்தில் சங்ககாலத்திலேயே வணிகச் சாத்து என்னும் பெயரில் செயல்பட்ட வணிகக் குழுக்கள் (கூட்டம்) பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,
வளை அணி நெடு வேல் ஏந்தி,
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே (குறுந்தொகை 390)
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் (அகம் 119)
பிற்கால சோழர் காலத்தில் வணிகம்
சோழர்கள் காலத்தில் வாணிகம் செழித்து வளர்ந்தது. தமிழகத்தின் கிழக்கு, மேற்குக்கரைகள் இரண்டிலும் சோழர்கள் ஆதிக்கம் பெற்றிருந்தனர். சீனா, மற்றும் தென்கிழக்காசியா நாடுகளின் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்களையும் சோழர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த முயற்சியில் சோழர்களுக்கு சீனத்து டாங் வம்சமும் (Tang dynasty) கிழக்கு ஆசியாவின் ஸ்ரீவிஜயப் பேரரசு, பாக்தாத்தின் அப்பாசிட் கலீபகங்கள் (Abbasid Kalifat) போன்ற அரசுகளின் உதவிகளும் கிடைத்தன.

சோழர் காலத்தில் வணிகம் PC: Wikimapia
தமிழகத்தில் கி.பி. 11 – 13 ஆம் நூற்றாண்டுகளில் நானாதேசி, திசை ஆயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், வளஞ்சியர், சித்திரமேழிப் பெரியநாடு, அத்திகோசத்தார், பன்னிரண்டார், இருபத்துநான்கு மனையார் ஆகிய வணிகக் குழுக்கள் (Trade Guilds) இயங்கி வந்துள்ளன. அனைத்து நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்தோர் நானாதேசி ஆவர். “வணிகர் சென்ற எல்லாத் திசைகளும்” என்ற பொருளில் திசையாயிரம் குழுவினர் அறியப்பட்டனர். ஐந்நூற்றுவர் என்பதற்கு ஐந்நூறு வணிகர்கள் என்று பொருள். இவர்கள் பஞ்சசதவீரர் என்ற பெயரிலும் அறியப்பட்டனர். இவர்கள் கப்பல்களில் தம் பொருட்களை ஏற்றிச் சென்று உலகம் முழுவதும் வணிகம் செய்து வந்தனர்.
சோழ நாட்டில் தஞ்சாவூர் பெரிய உள்நாட்டு வணிக நகராகத் திகழ்ந்தது. இந்நகரில் வளஞ்சியர், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் ஆகிய வணிகக் குழுவினர் வந்து தங்கி வணிகம் செய்துள்ளனர். முதலாம் ஆதித்தன் காலத்தில் “மடிகை” என்ற பெயரில் செயல்பட்ட கிடங்குகள் பற்றி நிறையக் கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கின்றன. முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் தமிழர்களின் கடல்சார் வணிகம் சிறந்திருந்தது.
“மணிக்கிராமம்” என்ற வணிகருக்குரிய பட்டம் பெற்ற வணிகர்களே மணிக்கிராமத்தார் ஆவர். இஸ்லாமிய வணிகக்குழுவினர் அஞ்சுவண்ணத்தார் என்று அறியப்பட்டனர். எட்டுத் திசைகளும் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்த ‘மணிக்கிராமம் செட்டிகள்’ பற்றி நிறையச் செய்திகள் உள்ளன. சோழ நாட்டின் வணிகக் குழுவிற்கு வளஞ்சியம் என்று பெயர். இந்தக் குழுவினர் குறித்து முதலாம் இராசேந்திர சோழன் காலத்திய காட்டூர்க் கல்வெட்டு (Ref: Epigraphy Report 256/12) விரிவான செய்திகளைப் பதிவு செய்துள்ளது. சித்திரமேழி என்பது கி.பி. 11 ஆம் நூற்றண்டில் சோழர் காலத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட வணிகக் குழுவாகும். பன்னிரண்டார் மற்றும் இருபத்துநான்கு மனையார் ஆகிய வணிகர் குழுக்கள் செட்டி வகுப்பினர் இடம்பெற்ற வணிகக் குழுக்கள் ஆகும்.
வணிக சாத்துக்களும் தாவளங்களும்.
சோழர்கள் காலத்தில் வணிகப் பொருட்களை எடுத்துச் செல்ல பொதி எருதுகளும் மாட்டுவண்டிகளும் பயன்பட்டன. சரக்கு வண்டிகளின் கூட்டம் அணிவகுத்து வரிசையாகச் செல்வது வழக்கம். அகன்ற பெருவழிகளில் (Highways) வணிகப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இவ்வாறு சென்ற வணிகர் கூட்டம் “வணிகச்சாத்து” (Caravan of Traders) என்ற பெயரில் அறியப்பட்டது. இராசகேசரிப் பெருவழி, சோழமாதேவிப் பெருவழிதஞ்சாவூர் பெருவழிகள், கொங்குப் பெருவழி, வடுகப் பெருவழி ஆகிய பெருவழிகள் (Highways) தரைவழி வணிகம் (Home Trade) செழித்தோங்க வழிவகுத்தன. வணிகச் சாத்துகள் பெருவழிகளில் பயணம் மேற்கொள்ளும்போது தங்குவதற்காகச் செயல்பட்ட இடங்கள் தாவளம் என்று பெயர்பெற்றிருந்தன. வேம்படி தாவளம், மஞ்சிப்புல தாவளம், வண்டித் தாவளம், அறுபத்துநாலு கடிகை தாவளம் போன்ற தாவளங்களைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
ஆறலைக் கள்வர்களின் தாக்குதலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வணிகர்கள் தங்களுக்கெனப் படை அமர்த்தித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை அரசரால் வழங்கப்பட்டிருந்தது. வணிகர்களைப் பாதுகாப்பதற்காகப் பெருவழிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட யானைப் படையின் தலைவர் குழுவினர் அத்திகோசத்தார் (அத்தி = யானை; கோசம் = உறை அல்லது மதில்) எனப்பட்டனர். பெருவழிகளில் நிறுத்திவைக்கப்பட்ட அத்திகோசத்தார் குறித்த செப்பேடுகளும், கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் தங்கள் இடங்களில் வந்து தாங்கும் வணிகப் பொருட்களுக்குச் சுங்கம் வசூலித்துக்கொண்டு பாதுகாப்பு அளித்தனர். அரசரின் தானங்களுக்கும் பாதுகாப்பு அளித்தனர். காலாட்படை தலைவரின் குழுக்கள் வீரகோசம் என்று பெயர் பெற்றிருந்தது.
சோழர்கள் காலத்தமிழகத்தில் வணிகர்கள் அமர்த்திக்கொண்ட படை வீரர்களை, முனைவீரர், பெருநிரவியார், கொடிவீரர், எறிவீரர், செட்டிவீரர் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அறுநூற்று மங்கலம் சிவன் கோவிலின் முன் கண்டறியப்பட்ட பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டில் வணிகர்களின் பாதுகாப்பு வீரர்களாகக் கருதப்படும் அறுநூற்றுவர், பிராமணர்களுக்குத் தானமாக ஓர் ஊரை உருவாக்கி கொடுத்து, அதன் காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில வணிகக் குழுக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக விளங்கியது மட்டுமல்ல அவை அரசர்களிடமும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்த வணிகக் குழுவினரிடமிருந்து பெற்ற பயன் காரணமாக, அரசர்கள் தங்களால் இயன்ற அத்தனை சலுகைகளையும் இக்குழுவினருக்கு அளித்து அவர்களை ஆதரித்தனர். இவர்கள் யாரையும் சார்ந்திராத அல்லது சார்பற்ற குழுக்களாக இயங்குவதற்கு (independent bodies) அரசர்கள் ஆதரவு அளித்திருந்தனர். வங்கியாளர்கள் (Bankers) மற்றும் பணம் மாற்றும் நபர்கள் (Money Changers) ஆகவும் செயல்பட்டுள்ளனர். நாணயசாலைகளுக்கான பொன், வெள்ளி மற்றும் உலோகங்கள் இவர்கள் மூலமாகவே சில அரசுகளுக்குக் கிடைத்தன.
வணிகக் குழுவினர்கள் சந்தித்த பின்னடைவு நிலை
கி.பி. 10, 11 நூற்றாண்டுகளில் பாரசிகர், அரபியர் மற்றும் சீன நாட்டு வணிகர்களின் போட்டியால் இந்த வணிகர் குழுவினர்களுக்குச் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது. பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன் ஆகியோர்களின் ஆட்சியில் வணிகர் குழுவினரின் கடல் வணிகத்தைக் காப்பதற்காகவே ஸ்ரீவிஜயா, மலையூர், பண்ணை, கடாரம், மதமலிங்கம், இலங்கசோகம், மயூரிடங்கம், தலை தக்கோலம், மாயாபள்ளம், லெமூரியதேசம் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது பல படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சோழர்களின் கடற்படை வெற்றியால் இந்நாடுகளில் சோழர்களின் முதன்மை நிலைநாட்டப்பட்டாலும் இவர்கள் ஒரு நாட்டு அரசின் ஆட்சியைக்கூடக் கைப்பற்றவில்லை.
வணிகக் குழுவினர் பற்றிய கல்வெட்டுகள்
இவர்களுடைய அகில உலக வணிகத் தொடர்பு, இவர்கள் கோவில்களுக்கும் மற்றும் பிற நற்காரியங்களுக்கும் அளித்த கொடைகள் பற்றி எல்லாம் கல்வெட்டிலே பொறிக்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அரசர்களுக்கு இணையாகத் தங்களுக்கான வணிகச் சின்னங்களையும் மெய்க்கீர்த்திகளையும் கூட தங்கள் கல்வெட்டுகளில் பொறித்தனர். இவ்வாறு பல்வேறு வணிகர் குழுவினர் பொறித்த 314 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் “தமிழகத்தில் 118 கல்வெட்டுகளும், கர்நாடகாவில் 132 கல்வெட்டுகளும், ஆந்திராவில் 35 கல்வெட்டுகளும், மகாராஷ்டிராவில் 2 கல்வெட்டுகளும், கேரளத்தில் 8 கல்வெட்டுகளும், தென்கிழக்காசிவில் இந்தோனேசியா (சுமத்ரா), தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் 4 கல்வெட்டுகளும், இலங்கையில் 15 கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.”
சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிச் சுமித்திராத் தீவில் கண்டறியப்பட்ட கி.பி. 1088 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டும் சான்று பகர்கிறது.
இந்த காலகட்டங்களில் வணிகக் குழுக்களின் கூட்டங்கள் ஈரோடு மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் மற்றும் சிவகங்கை மாவட்டம் பிரான்மலை ஆகிய ஊர்களில் நடைபெற்றது பற்றிக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இரட்டைத்தாழை முனியசாமி கோயிலில் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது. இது முன்னூற்றுவர், வளஞ்சியர், திசைஆயிரத்து ஐந்நூற்றுவர் ஆகிய வணிகக் குழுவினர் இணைந்து இராமேஸ்வரத்தில் செய்த தர்மத்தைக் குறிப்பிடுகிறது.
கி.பி., 12ம் நூற்றாண்டில், வணிகம் செய்து வந்த சித்திரமேழி வணிகக் குழுவின் கல்வெட்டு, தற்போது ஆறகளூர் கிராமத்தில், விவசாய நிலத்தில் செப்டம்பர் 2015 இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே வானமங்கலத்தில் புலி சின்னத்துடன் கூடிய சோழர் காலத்து சித்திரமேழி வணிகக் குழுவின் கல்வெட்டு ஆகஸ்டு 2017 இல் கண்டறியப்பட்டுள்ளது.
செல்லுகுடி திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் தூண் கல்வெட்டு
இந்தப் பின்னணியில் செல்லுகுடியில் கண்டறியப்பட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினரால் படிக்கப்பட்ட கல்வெட்டைப்பற்றிச் சற்று விரிவாகத் தெரிந்து கொள்வோமா? சுருக்கமாகச் சொல்வதென்றால் “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்” வணிகக் குழுவின் கூட்டுறவு வணிகத்தின் பெருமையைப் பறைசாற்றும்” கல்வெட்டாகும். ஐந்து அடி உயரமுள்ள ஒரு கல் தூணின் நான்கு புறமும் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு 83 வரிகளுடன் அமைந்த தூண் கல்வெட்டாகும். கல்வெட்டின் தொடக்கத்தில் சங்கு, செங்கோல், அரிவாள், குத்துவிளக்குகள் ஆகிய சின்னங்கள் கோட்டுருவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் “பழியிலி கள்ளிடைக்கொடி தலை” என்ற சொற்றொடரும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொற்றொடர் முதலாம் இராஜேந்திர சோழரின் (கிபி 1012 – கிபி 1044) வலங்கைத் தலைமையின் சிறப்புப் பெயராக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
பிற்காலச் சோழர்கள் ஆட்சியின் தொடக்கக் காலத்தில் இருந்தே அந்தணர், வேளாளர் அல்லாத இதர மொத்த சமூகங்கள் இடம்பெற்ற வலங்கை – இடங்கை பிரிவுகள் தொடங்கி வளர்ந்துள்ளன. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் படைப்பிரிவுகளிலேயே இந்த வலங்கை இடங்கை வேற்றுமைகள் தலையெடுத்தன. இந்த வேற்றுமை சோழர் காலத்து அனைத்து சமுதாய மக்களிடையேயும் பரவியது. வேளாண் தொழிலை அடிப்படையாகக் கொண்ட மேம்பட்ட சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் மன்னர் படைகளில் சிறப்பிடம் பெற்றிருந்தவர்களும் ஒரு பிரிவினராகவும் வணிகர்கள் மற்றும் வேளாண்மை சாராத தொழில்களைச் செய்பவர்களான உலோகத் தொழிலாளர்கள், நெசவாளர்கள் போன்ற கைவினை உற்பத்தித் தொழில் செய்வோர் மறு பிரிவினராகவும் செயல்பட்டுள்ளனர். வணிகம் மற்றும் தொழில் சார்ந்தோர் வலங்கை இடங்கை என்று செயல்பட்டதாகவும் ஒரு செய்தி உள்ளது. .சோழ மன்னனின் அரசவையில் மன்னனின் வலப்புறமும் இடப்புறமும் அமரும் உரிமை சிலருக்கு அளிக்கப்பட்டதாம். வலங்கை இடங்கைப் பிரிவினர்களிடையே பல பூசல்கள் நிகழ்ந்துள்ளன.
இக்கல்வெட்டைப் பொறித்தவர் முதலாம் இராஜேந்திர சோழனின் ஒரு வலங்கை குழுத்தலைவராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது, இந்தக் கல்வெட்டில் காணப்படும் “வலங்கை வல்லபர்” என்ற சொற்றொடர் மூலம் நமக்குப் புலனாகிறது.
இக்கல்வெட்டுத் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவருக்கே உரித்தான “ஸமஸ்த புவநாத” என்ற மெய்க்கீர்த்தித் தொடருடன் தொடங்குவது மிகவும் சிறப்பு. மெய்கீர்த்தியின் ஏழு மங்கல வரிகளில் ஸ்ரீவாசுதேவர், கண்டழி, மூலபத்திரர் போன்றவர்களின் வழிவந்த ஐயபொழில்புர ஸ்ரீபரமேஸவரியின் மக்கள் எனத் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்!
திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் குழுவில் பதினெண் கொடி வீரகொடியார் (வீரர்), செட்டி சீர்புத்திரன் (வீரர்), கவறை (வணிகர்), காசி யவன் விடுத்த காமுண்ட சுவாமி (நிலக்கிழார்), உருத்திரந் விடுத்த ஓலை வாரியன் (கணக்கு எழுதுபவர்), சீரிய செண்டாவனும் (சிறு பணி செய்பவர்) இடம்பெற்றிருந்ததாகப் பொறிக்கப்பட்டுள்ளது. வணிகர்களும் அவர்தம் பதினெண் வீரகொடியாரும் மன்னருக்கு இணையான மதிப்பு மிக்கவர்களாகக் கருதப்பட்டனர்.
இவ்வாறு வணிகர்களும் பாதுகாப்புப் படை வீரர்களும், கம்மியர்; கைத்திறத் தொழிலாளர்; கைவினைஞர் ஆகிய தொழிலாளர்களும், சிறு தொழில் செய்தோரும் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டுறவு வணிகத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள். இந்த வணிகத்தில் அனைவரும் பரஸ்பர நம்பிக்கையுடன் செயல்பட்டுள்ளனர். வணிகத்தில் ஈட்டிய லாபத்தில் ஒரு பகுதி பொதுக் காரியங்களுக்காகக் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. சற்று பிந்தைய காலங்களில் நிலம் உள்ளிட்ட ஆதாரங்களிலிருந்து கிடைத்த வருவாயின் ஒரு பகுதி கூட நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட்ட செய்திகளும் தெரியவருகிறது.
பிற்காலச் சோழர்களின் காலத்தில் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் குழு வணிகர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிக ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இந்தப் பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்களுடன் இணக்கமான உறவு கொண்டிருந்தனர். இந்தப் பகுதிகளில் அருகாமையில் அமைந்துள்ள நாடுகளின் தூதுவர்களாவும் செயல்பட்டுள்ளனர்.
பழ வீரசிங்கன், வலங்கைபாவாடை வீரன், கடிபுரத்து முனைவீரன் ஆகிய பதினெண் கொடியார், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் குழுவின் உயர்ந்த பொறுப்பிலும் பாதுகாப்புப் பணியிலும் இடம்பெற்றிருந்த செய்தியையும் இக்கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது. சிங்கன் என்னும் பெயர் அரிதாகவே வணிகக் கல்வெட்டுகளில் இடம்பெறுவதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இக்கல்வெட்டு மா, பலா, வாழை, பாக்கு மரங்களும் முல்லை மலர்க் கொடிகளும், குயிலும், கிளியும் குழுமி இருப்பதாகப் பதிவு செய்துள்ளது. வணிகர்கள் துன்பங்கள் ஏதுமின்றி ஒன்றாகக் கூடி மகிழ்வுடன் இருந்துள்ளார்கள். திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் தங்கள் செங்கோலை முன்னிறுத்தி ஆயிரம் திசைகளிலும் நேர்மையுடன் செழிப்புற வணிக நிர்வாகம் செய்த செய்தியையும் இக்கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது.
இந்தக் கல்வெட்டில் நிலவைத் தொடும் உயரத்தில் அமைந்த உப்பரிகைகளுடன் கூடிய மாட வீதிகளைக் கொண்ட 18 பட்டணங்கள் (துறைமுக நகரங்கள்), 32 வேளாபுரங்கள் (இரண்டாம் நிலை வணிக நிறுவனங்கள் இடம்பெற்ற வேளாண் நகரங்கள்) மற்றும் இடையறாத காவல் வசதிகளுடன் செயல்பட்ட வணிகப் பொருட்களுக்கான கிடங்குகளுடன் (Godowns) கூடிய 64 கடிகைத் தாவளங்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
கி.பி., 12-13 ஆம் நுாற்றாண்டுகளுக்கு உரிய வணிகர் கல்வெட்டுகள், ‘கடிகைத் தாவளம்’ என்ற பெயரில் செயல்பட்ட ‘கடி’ அல்லது ‘கெடி’ பற்றிக் குறிப்பிடுகின்றன.“தாவளத்திருந்து தன்மம் வளர்க்கும் செட்டி” என்ற கல்வெட்டுத் தொடர் மூலம் தாவளங்கள் பற்றித் தெரிந்துகொள்ள முடிகிறது.
கடிகைத் தாவளங்கள், தற்காலத்து இரயில் நிலைய சந்திப்புகள் போன்று, அக்காலத்துப் பெருவழிகளில் செயல்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் இத்தகைய அமைப்புகள் ‘கடி’ அல்லது ‘கெடி’ என்ற பெயர்களில் செயல்பட்டுள்ளமை பற்றித் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த எச்.ஆர்.பேட், என்ற ஆங்கிலேயர் குறிப்பிட்டுள்ளார். தற்காலத்திலும் வண்டிப்பேட்டை என்ற பெயரில் தரகு கடைகளுடன் கூடிய அமைப்புகள் தமிழ்நாட்டு விவசாய நகரங்களில் செயல்பட்டு வருவதைக் காணலாம்.
இந்தத் தூண் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள தூணின் 4 ஆம் பக்கம் சற்று சிதைந்து காணப்படுவதாகவும் இறுதி வரிகள் தெளிவாக உள்ளதாகவும் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் தங்கள் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். கல்வெட்டின் இறுதிப் பகுதி திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் செல்லுகுடிக்கு வழங்கிய கொடை பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.
‘குடுத்தோம் பதினெண் கொடி வீரகொடி வலங்கை வல்லபர் செல்விகுடிக்கு’ என நிறைவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் இவ்வூருக்கு நற்பணி செய்வதற்கான சாசனமாகக் கருதலாம்!
இக்கல்வெட்டின் காலம் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை. இக்கல்வெட்டைப் படித்த புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகதினர் கல்வெட்டின் காலத்தை கி.பி. 11 ஆம் நூற்றாண்டு என்று எழுத்தமைதி, மெய்க்கீர்த்தி, கல்வெட்டில் இடம்பெறும் முதலாம் இராஜேந்திர சோழனின் பெயர் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவியுள்ளனர்.
குறிப்புநூற்பட்டி
- அத்திகோசத்தார் விக்கிபீடியா
- அன்னவாசல் அருகே திசையாயிரத்து ஐநூற்றுவர் கல்வெட்டு. தினமணி செப்டம்பர் 19, 2018
- கிபி 11-ஆம் நூற்றாண்டில், முதலாம் #இராசேந்திரசோழன் (கிபி 1012 – கிபி 1044) காலத்தில் உலகம் முழுவதும் வாணிபம் செய்த புகழ்பெற்ற வணிகக் குழுவான “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்” வணிகக் குழுவின் கூட்டுறவு வணிகத்தின் பெருமையை பறைசாற்றும் #கல்வெட்டு #புதுக்கோட்டை அருகே கண்டெடுப்பு! https://twitter.com/ThanjaiMadhavan/status/1042432886039764993
- சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு. Onetune.in
- சோழர்கால வாணிகம் விக்கிபீடியா
- சோழர் கால வணிகக் குழு கல்வெட்டு கண்டெடுப்பு. தினமணி 17 ஆகஸ்டு 2017
- பவளப்பாறைகளால் உருவான தனுஷ்கோடி: மரபுநடை நிகழ்ச்சியில் தகவல் தினக்காவலன் ஆகஸ்டு 27, 2018 http://dhinakkavalan.com/2018/08/27/dhanushkodi-created-by-coral-groves-information-on-the-legend/
- ராமநாதபுரம் அருகே கி.பி. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த வணிகக் குழுவினரின் பாதுகாப்பு வீரர்கள் ‘அறுநூற்றுவர்’ கல்வெட்டு கண்டெடுப்பு. எஸ். முஹம்மது ராஃபி. தி இந்து 06 டிசம்பர் 2017 https://tamil.thehindu.com/tamilnadu/article21273190.ece
- வண்டிப்பேட்டை விநாயகரும், குபேரனும் தினமணி ஆக 28, 2014 http://www.dinamalar.com/news_detail.asp?id=1056907&Print=1
- வணிகக்குழுக்கள் தமிழ் இணையக் கல்விக்கழகம் http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314663.htm
- வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும் தேமொழி May 17, 2016 சிறகு
- A rare Thisaiyaarathu Ainootruvar inscription stone pillar (Rajendra chola Valangai ) of 11th century BC is found near Sellukudi, Pudukkottai District, Tamil Nadu. October 2, 2018 http://pudukkottaihistory.blogspot.com/2018/10/a-rare-thisaiyaarathu-ainootruvar.html
படிக்கப் படிக்க வியப்புதான் மேலிடுகிறது ஐயா
நன்றி
LikeLike
தங்கள் மேலான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..
LikeLike
சோழ மன்னர்களின் முதன்மை நாட்டப் பட்டாலும் அவர்கள் ஆட்சியை கைப்பற்ற வில்லை என்ற வரிகளை படிக்கும் போது தஞ்சை மண்ணை சேர்ந்தவன் என்ற எண்ணத்தில் பெருமை கொள்கிறேன்
LikeLike
தங்கள் மேலான வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி ஐயா..
LikeLike
சோழமன்னர்கள் பற்றிய தகவல் பெருமிதம் அளிக்கிறது. நானும் தஞ்சை! வணிகர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.
LikeLike
தங்கள் மேலான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..
LikeLike
வியக்க வைக்கும் தகவல்கள்
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..
LikeLike
அறியாத பல விடயங்கள் அறிந்து கொண்டேன் நண்பரே
LikeLike
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..
LikeLike
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தாரின் பணி போற்றத்தக்கது. உங்களின் இப்பதிவால் மேலும் பல கூடுதல் செய்திகளை அறிந்தேன். நன்றி.
LikeLike
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தார் எங்கேயோ கிடந்த இந்த அரிய தூண் கல்வெட்டை உலகறியச் செய்துள்ளார்கள். இவ்வளவு செய்திகளுடன் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. தங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..
LikeLike