மும்பை சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள பௌத்த குகைகளைக் காண ஆர்வம் உள்ளதா? நீர்வீழ்ச்சி, ஏரிகள், பறவைகள், விலங்குகள், மரம் செடிகொடி நிறைந்த அடர்வனப் பகுதியில் உங்கள் விடுமுறையைக் கழிக்க விருப்பமா? கவலை வேண்டாம்!. மும்பை போரிவலி கிழக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவும் (संजय गाँधी राष्ट्रीय उद्यान) பூங்காவின் மையத்தில் உள்ள கான்ஹெரீ பெளத்த குடைவரை வளாகமும் (कान्हेरी गुफाएँ) உங்கள் ஒரு நாள் சுற்றுலாவிற்கான சிறந்த தேர்வு ஆகும்.
கான்ஹெரீ 109 பௌத்த குடைவரைகள் அடங்கிய வளாகம் ஆகும். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தப் பழமையான குடைவரைகளைப் பௌத்த துறவிகள், கிருஷ்ண சைலா (அல்லது கன்ஹ சைலா) என்ற செங்குத்துப் பாறையை அகழ்ந்து உருவாக்கியுள்ளார்கள். இந்த 109 குடைவரைகளில் பெரும்பாலானவை சிறிய அளவில் அமைக்கப்பட்ட அறைகள் ஆகும். இவை பெளத்த விகாரைகள் (विहार) என்றழைக்கப்பட்டன. இங்கு வாழ்ந்த பெளத்த துறவிகள் விகாரைகளை உறைவிடமாகவும், பயிலுமிடமாகவும், தவமியற்றும் இடமாகவும் பயன்படுத்தி உள்ளனர். விகாரைகள் மட்டுமின்றிப் பெரிய அளவில் காணப்படும், பொது வழிபாட்டிற்கான, குடைவரைகள் சைத்தியம் (चैत्य) என்று அழைக்கப்பட்டன. பெளத்த சைத்தியங்கள், துறவிகள் ஒன்றிணைந்து கூட்டாக வழிபடவும், பெளத்த இறையியல் (Buddhist Theology) பயிலவும் பயன்பட்டன. அரை வட்ட (குதிரை லாட) வடிவில் அழகிய தூண்களுடன் அமைக்கப்பட்ட சில சைத்திய மண்டபங்களில் (Colonades) ஸ்தூபிகள், வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறிதும் பெரிதுமாகப் பல ஸ்தூபிகளை இங்கு காணலாம். சைத்தியங்களில் புடைப்புச் சிற்பத் தொகுப்புகள், மாபெரும் புத்தர் சிற்பங்கள் (Colossal Buddha Statues) எல்லாம் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல கல்வெட்டுகளும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.
அமைவிடம்
கான்ஹெரீ குடைவரைகள் மகாராஷ்டிர மாநிலம், கொங்கன் பகுதி (Konkan Region), கொங்கன் பிரிவு (Konkan Division), மும்பை நகரம், கிழக்கு போரிவலி (बोरीवली) பின் கோடு 400082 புறநகர்ப் பகுதியில் சஞ்சாய் காந்தி தேசிய பூங்காவின் (संजय गाँधी राष्ट्रीय उद्यान) உள்ளே அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் அமைவிடம் 19°15′N அட்சரேகை 72°55′E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 3 மீ. ஆகும். சஞ்சாய் காந்தி தேசிய பூங்கா (முன்னாள் பெயர் போரிவலி தேசியப் பூங்கா) 109 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது.
கான்ஹெரீ குடைவரை வளாகம் மும்பை மாநகரின் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தொன்மையான சுற்றுலாத் தலமாகும். நெரிசலும் இரைச்சலும் மிக்க மும்பை பெருநகரத்திலிருந்து சற்று தள்ளி அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்தப் புறநகர் தலம் பற்றிப் பலர் (குறிப்பாக மும்பைக்காரர்களே) கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்; அல்லது இங்கு வருவதற்கு அதிக அக்கரை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்களுக்கு இடையே வட மும்பைப் பகுதியில் அமைந்துள்ள சஞ்சாய் காந்தி தேசிய பூங்கா ஒரு காற்றோட்டம் மிகுந்து உயிர்ப்புடன் திகழும் தலமாகும். பூங்காவில் உள்ள தாவரம் மற்றும் விலங்கினங்களைக் (Flora and fauna) காண ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் மக்கள் வந்து செல்கிறார்கள்.
கான்ஹெரீ: பெயர்க்காரணம்
கான்ஹெரீ என்ற சொல் கிருஷ்ணகிரி என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணா என்ற சொல் பொதுவாகக் கருப்பு நிறத்தைக் குறிக்கும். புழக்கத்திலுள்ள கான்ஹெரீ என்ற பெயர் கருப்பு நிற மலை என்ற பொருளில் வழங்கப்படுகிறது. கான்ஹெரீ குடைவரைகள் 21, 98 மற்றும் 101 ஆகிய எண்களுடைய குடைவரைகளில் காணப்படும் மூன்று கல்வெட்டுகளில் இந்த செங்குத்துப் பாறைகளின் பெயர் “கிருஷ்ண சைலா (Krishna-saila),” “கன்ஹ ஷீலா (Kanha Shele)” மற்றும் “கிருஷ்ணகிரி (Krishnagiri)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கான்ஹெரீ குடைவரைகள் இப்பூங்கவின் மையப் பகுதியில் உள்ள பெருத்த பசால்ட்டு செங்குத்துப் பாறைகளைக் (massive basaltic rock cliffs) குடைந்து அகழப்பட்டுள்ளன. இவ்வாறு செங்குத்துப் பாறைகளை அகழ்ந்து செதுக்கி உருவாக்கப்பட்டுள்ள 109 குடைவரைகள் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டுள்ளன. கான்ஹெரீ குடைவரைகளில் மேலே சென்று பார்க்கும் வண்ணம் செதுக்கப்பட்ட படிக்கட்டுகள் பாழடைந்துள்ளன. பார்வையாளர்கள் இவற்றை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது.

PC: Wikimedia
கி.மு. 1 ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 11 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பௌத்த மதகுருக்களால் அகழப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் குடைவரைகள் (பௌத்தக் கல்வி மையங்கள் (Buddhist learning centers) ஒரு பெளத்த யாத்திரைத் தலமாகும் (Buddhist pilgrimage site). இக்குடைவரைகள் மகாயான மற்றும் ஹீனயான பெளத்த காலகட்டங்களின் பிரதிநிதித்துவமாகக் கருதப்படுகின்றன. இந்த கான்ஹெரீ குடைவரை வளாகத்தில் பெளத்த துறவிகள் பயன்படுத்திய சிறிதும் பெரிதுமான விகாரைகளும் சைத்தியங்களும் 109 குடைவரைகளில் சிதறிக் கிடக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 460 மீ. உயரத்தில் அமைந்துள்ள குடைவரையே இங்கு மிகவும் உயரத்தில் அமைந்துள்ள குடைவரையாகும். திட்டமிடப்பட்ட வழிகாட்டுதல்களுடன் அமைந்த சுற்றுலா மூலமாக மட்டுமே இந்த குடைவரைகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். இந்தக் கான்ஹெரீ குடைவரைகளுக்கு வருகை புரிவதன் மூலம் இந்தியாவின் பௌத்தமதத் துறவிகளின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
அதிக எண்ணிக்கையிலான விகாரைகள் நன்கு பராமரிக்கப்பட்ட பெளத்த துறவிகளின் வசிப்பிடங்களாக இருந்துள்ளது. இந்த பெளத்த விகாரைகள் சோபரா (Sopara), கல்யாண் (Kalyan), நாசிக் (Nasik), பைதான் (Paithan) மற்றும் உஜ்ஜைனி (Ujjain) ஆகிய துறைமுக (வணிக) நகரங்களுடன் தொடர்பு கொண்டிருந்தன. கான்ஹெரீ அந்தக் காலத்தில் நன்கு வளர்ந்த பல்கலைக்கழக மையமாகவும் திகழ்ந்துள்ளது.
சோபராவிற்கு 20 கி.மீ. தொலைவில் இருந்த முக்கியத்துவம் பெற்ற கல்வி மையத்தில் பூர்ண எனப்படும் வர்த்தகர் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியதாகக் கருதப்படும் ஸ்தூபி கௌதம் புத்தரால் (கி.மு. 225) தொடங்கப்பட்டதாக ஒரு புராணக்கதை சொல்கிறது. பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன், சோம்நாத்திலிருந்து கத்தியவார் (குஜராத்) செல்லும் வழியில், இந்த மையத்திற்கு வந்து சென்றதாக ஒரு கதையும் உள்ளது. கான்ஹெரீ மற்றும் சோபரா பகுதிகளை ஆண்டுவந்த நஹபன் (Nahapan) (கி.பி. 78) என்ற அரசன் கிருஷ்ணகிரி என்ற சொல்லைப் பலமுறை பயன்படுதியுள்ளார்.
விகாரைகள்
இங்குள்ள பெரும்பாலான குடைவரைகள் உறைவிடமாகவும், பயிலுமிடமாகவும், தவமியற்றும் இடமாகவும் புத்த துறவிகளால் பயன்படுத்தப்பட்ட பெளத்த விகாரைகள் ஆகும். இந்த வளாகத்திலுள்ள சிறிய குடைவறைகளான விகாரைகளில் பெளத்த துறவிகள் தங்கி ஓய்வெடுத்துள்ளார்கள். வெளிப்புற முற்றங்களில் நீண்ட கல்லாலான பலகை இருக்கைகளுடன் காணப்படும் இந்த விகாரைகளைப் பெளத்த துறவிகள் வாழ்ந்த குடியிருப்புகளாகக் கொள்ளலாம். இப்பகுதியில் பயணம் செய்த நேர்ந்த பொழுது பெளத்த துறவிகள் வந்து தங்கிச் சென்ற மழைக்கான தங்குமிடமான ‘vasha vaasa’ (rain shelter) கான்ஹெரீ குடைவரைகள், கி.பி. 3 ஆம் நூற்றாண்டளவில் இந்தத் துறவிகளின் நிரந்தரக் குடியிருப்பாக மாறிவிட்டது. கி.பி. 11 ஆம் நூற்றண்டிற்குப் பின்பு இந்தக் குடைவரைகளைப் பெளத்த துறவிகள் பயன்படுத்தவில்லை. பிற்காலத்தில் சில ஜப்பானிய பெளத்த துறவிகளால் இந்த வளாகம் கண்டறியப்பட்டது.
நீர்மேலன்மை
கான்ஹெரீ வளாகத்தில் உள்ள சில குடைவரைகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட நீர்மேலன்மை அமைப்புகள் பார்வையாளர்களிடையே மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நீர்மேலாண்மை அமைப்பில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஓடைகள் அல்லது கால்வாய்கள் மழை நீரை பெரிய நிலத்தடி நீர் நிலைகளில் சேகரிக்க உதவுகின்றன. மழைநீர் சேமிப்பின் முன்னோடிகளாக இந்தத் துறவிகளைக் கருதலாம்.
சைத்தியங்கள்
சைத்தியா அல்லது சைத்திய மண்டபம், சைத்திய கிருஹம் என்று அறியப்பட்ட பெளத்த தலத்தை, ஒரு பெளத்த கூட்டு வழிப்பாட்டு மண்டபம் என்று புரிந்துகொள்ள வேண்டும். பெளத்த மதத்தில் கூட்டு வழிப்பாட்டு மையங்கள் சைத்தியங்கள் என்று அழைக்கப்பட்டன. பெருமளவில் பௌத்த துறவிகள் ஒன்றாகக் கூடி புத்தரை வழிபடவும், தியானம் செய்யவும் சைத்தியங்கள் பயன்பட்டன. அழகிய தூண்களுடன் அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் ஒரு முனையில் ஸ்தூபி அமைக்கப்பட்டிருக்கும். கான்ஹெரீ குடைவரைகளில் காணப்படும் ஒரு சில சைத்தியங்களில் (Chaityas) பொது வழிபாட்டிற்கான கல்லில் செதுக்கப்பட்ட ஸ்தூபிகள் காணப்படுகின்றன. இங்குள்ள சில சிறிய சைத்திய குடைவரைகளில் புத்தர், ஸ்தூபி மற்றும் காலடித் தடங்கள் போன்ற சின்னங்களால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளார். வேறு சில பெரிய சைத்திய குடைவரைகளில் புத்தரின் மானுடவியல் படிமங்களைக் (anthropomorphic images) காணலாம். சில குடைவரைகளில் நிலத்தடி நீர் நிலைகளையும் காணலாம்.
குடைவரை எண்: 1: விகாரை
முதலாம் எண் குடைவரை ஒரு பெளத்த விகாரை ஆகும். முழுமைபெறாத இக்குடைவரை இரட்டைத் தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. குடைவரையின் முகப்பு மண்டபத்தை இரண்டு பருத்த தூண்கள் தாங்குகின்றன.
குடைவரை எண்: 2: நீண்ட குடைவரை
இந்த நீண்ட குடைவரை குடைவரை எண் 1 மற்றும் எண் 3 ஆகியவற்றிற்கு இடையே அகழப்பட்டுள்ளது. குடைவரை எண் 3 பெரிய சைத்திய கிருஹம் இக்குடைவரைக்கு வலப்புறம் அமைக்கப்பட்டுள்ளது இக்குடைவரை காலத்தால் சற்று பிந்தி அகழப்பட்டிருக்கலாம். அகன்ற முகப்பு குடைவரையின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இக்குடைவரையினுள்ளே மூன்று ஸ்தூபிகள் காணப்படுகின்றன. இந்த நீண்ட அறை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகத் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இதன் அசல் கட்டுமனங்களைக் காண இயலவில்லை.
குடைவரை எண்: 3: பெரிய சைத்திய கிருஹம் (Great Chitya Griha)
கான்ஹெரீ வளாக நுழைவாயில் அருகே அமைந்துள்ள மூன்றாம் எண் குடைவரை ஒரு சைத்திய கிருஹம் ஆகும். இரட்டைத் தளத்துடன் காணப்படும் இந்த சைத்தியத்தின் மேல் தளத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளைக் கண்டறிய முடியவில்லை. குடைவரையின் முன்பகுதியில் உள்ள சிறிய மண்டபத்தில் நின்ற கோலத்தில் காணப்படும் பெரிய புத்தர் சிலை ஏழு மீட்டர் உயரத்தில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கூரையில் மரச் செதுக்கல்கள் போலவே அழகுற செதுக்கப்பட்ட கூரை வடிவமைப்புகள் கண்ணைக் கவர்கின்றன. சைத்திய மண்டபத்தின் நடுவில் செதுக்கப்பட்டுள்ள கல் ஸ்தூபியின் இரு மருங்கிலும் யானை உருவங்களுடன் (elephant motifs) கூடிய இரு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன.
குடைவரையின் முன்புறம் உள்ள சுவற்றில் இந்தக் குடைவரைகளை அகழ்வதற்கு ஆதரவளித்த நன்கொடையாளர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குடைவரையின் வெளிப்புறத்தில் மேலும் சில ஸ்தூபிகளைக் காணலாம். இவற்றுள் ஒன்று முழுதும் மூடப்பட்ட மண்டபத்தில் உள்ளது. மற்றைவை திறந்த வெளியில் உள்ளன. பார்வையாளர்கள் இவற்றைச் சுற்றிவந்து வணங்கலாம். அமராவதி, சாஞ்சி, பஹ்ரூத் மற்றும் மகா போதி சைத்தியங்களில் உள்ளது போன்று இங்கும் பிரபல ஸ்தூபிகளைச் சுற்றி வழக்கமான பாணியில் கைப்பிடிச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குடைவரை எண்: 4:
பெரிய சைத்தியத்தின் இடப்புறம் அகழப்பட்டுள்ள இந்த குடைவரை அறையில் ஒரு ஸ்தூபி செதுக்கப்பட்டுள்ளது. பெரிய சைத்தியத்தைக் காட்டிலும் இது காலத்தால் பிந்தியது ஆகும். குடைவரைச் சுவர்களில் புத்தர் மற்றும் பல உருவங்கள் பிற்காலத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
குடைவரை எண்: 5 மற்றும் 6:
உண்மையில் இவை குடைவரைகள் என்று சொல்ல முடியாது. இவை நீர்த் தொட்டிகள் ஆகலாம். இங்கு ஒரு முக்கிய கல்வெட்டு காணப்படுகின்றது.
குடைவரை எண்: 11 தர்பார் ஹால் என்ற கூட்டுப் பிரார்த்தனை மண்டபம்
தர்பார் ஹால் என்னும் இக்குடைவரையில் புத்தரின் சிலை மையத்தில் அமைந்துள்ளது. இக்குடைவரையில் துறவிகளுக்கான வாழ்விடங்கள் உள்ளன. சைத்தியங்களில் குறைவான உயரம் கொண்ட நீண்ட மேசைகளுடன் கூடிய பெரிய வடிவிலான உணவு உண்ணும் அறைகள் காணப்படுகின்றன.
குடைவரை எண் 34: பெளத்த ஓவியங்கள்
இந்தக் குடைவரையின் கூரைகளில் நிறைவுறாத பெளத்த ஓவியங்கள் உள்ளன.
குடைவரை எண் 41: அவலோகிதேஸ்வரா சிற்பம்
அவலோகிதேஸ்வரா பெளத்த மதத்தில் வணங்கப்படும் ஒரு போதிசத்துவர் ஆவார். இவர் மஹாயான பௌத்தத்தின் இறுதிப் பகுதியல் உருவாகி இந்தப் பெளத்த தெய்வ வடிவம் பின்னாளில் வஜ்ராயன பௌத்தத்திற்கும் இன்றியமையாத தெய்வ வடிவம் ஆனவர் ஆவார். இவர் தாமரையைக் கையில் ஏந்தியவர் என்ற பொருளில் பத்மபாணி என்ற பெயரிலும் குறிப்பிடப்படுகிறார். திபெத்திய தலாய் லாமா அவலோகிதேஸ்வரரின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.
கான்ஹெரீ வளாகத்தின் புகழ் பெற்ற அவலோகிதேஸ்வரா சிற்பம் இந்தக் குடைவரையில் தான் வடிவவமைக்கப்பட்டுள்ளது. இக்குடைவரையில் அவலோகிதேஸ்வரா பதினோரு தலைகளுடன் காணப்படுவது மிகவும் சிறப்பு. வித்தியாசமான இந்தச் சிற்பத்தில் 10 போதிசத்துவர் தலைகள் அடையாளமாகக் காட்டப்பட்டுள்ளது. பதினோராவது தலை புத்தருடைய தலை ஆகும். இந்தப் பதினோராவது தலை, புத்தர் படிப்படியாக அறிவொளி பெற்றதைச் சுட்டுகிறது.
குடைவரை எண் 67: இரண்டு பெண்கள் சூழ அவலோகிதேஸ்வரா
இந்தக் குடைவரையின் தாழ்வாரத்தில் (Verandah) அவலோகிதேஸ்வரா இரு பெண்கள் சூழ புடைப்பிப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளார்.
குடைவரை எண் 90:
இக்குடைவரையின் தாழ்வாரத்தில் வலது மற்றும் இடது சுவர்களில் பல புடைப்புச் சிற்பத் தொகுதிகள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஊழியர்கள் புடைசூழ பத்மாசனத்தில் காட்சி தரும் புத்தர் சிற்பத் தொகுதி புகழ்பெற்றது.
கல்வெட்டுகள்
பிராமி, தேவநகரி, பல்லவி மற்றும் சமஸ்கிருத லிபிகளில் பொறிக்கப்பட்ட பல்வேறு கல்வெட்டுகள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இவற்றைப் படித்துப் பொருள் அறிவது சிக்கலாக உள்ளது. சுவற்றிலோ பலகைக் கல்லிலோ பொறிக்கப்பட்ட 51 கல்வெட்டுகளும் (inscriptions) ஒரு கட்டடத்தில் உள்ள 26 கல்வெட்டுகளும் (epigraphs) இங்கு கண்டறியப்பட்டுள்ளன. பெரும்பாலான கல்வெட்டுகள் இங்குள்ள குடைவரைகளை ஆதரித்துப் பரிபாலித்த மன்னர்கள் மற்றும் வணிகர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. ஒரு கல்வெட்டு இங்கு ஆண்டுவந்த மன்னனின் திருமணம் பற்றிக் குறிப்பிடுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளன. இங்கு உள்ள குடைவரை ஒன்றில் அஜந்தா குடைவரைக்கு இணையான ஓவியங்கள் காணப்படுவது பற்றி இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை குறிப்பிட்டுள்ளது. இவை பல பார்வையாளர்களின் கண்களில் படுவதில்லை. போதிய வழிகாட்டல்கள் இல்லாமை இங்கு பெருங்குறையாகும்.
வழிகாட்டும் சிற்றேடுகள்
கான்ஹெரீ குடைவரைகளின் வெளிப்புறத்தில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளைத் தவிர, தனிப்பட்ட குடைவரைகளைப் பற்றியோ அல்லது சிற்பங்களைப் பற்றிய விளக்கமோ விவரணைகளோ காணப்படவில்லை. நுழைவுச் சீட்டு பெறும் இடத்திலோ அல்லது வேறு எங்குமோ, சிற்றேடுகள், துண்டுப்பிரசுரங்கள், வழிகாட்டும் கையேடுகள் போன்றவற்றை எந்த அமைப்பும் வழங்கவில்லை.
போரிவலி கிழக்கு செல்ல …
போரிவலி கிழக்கு, (Borivilli East) மும்பை சத்திரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 34.1 கி.மீ. தொலைவிலும், மும்பை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து 34.2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சர்ச்கேட் (Churchgate), மெரைன் லைன்ஸ் (Marine Lines), சார்ணி ரோடு (Charni Road), மகாலக்ஷ்மி (Mahalakshmi), லோயர் பரேல் (Lower Parel), தாதர் (Dadar), வில்லே பார்லே (Vile Parle), கண்டிவலி (Kandivali), மலாட் (Malad) மற்றும் பல இரயில் நிலையங்களில் இருந்தும் போரிவலி கிழக்கு இரயில் நிலையத்திற்கு வரலாம். போரிவலி கிழக்கு இரயில் நிலையத்திலிருந்து சஞ்சய் காந்தி தேசிய பூங்கா 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. போரிவலியிலிருந்து மேற்கு விரைவு நெடுஞ்சாலை (Western Express Highway) வழியாக 10 நிமிட கார் பயணம் செய்தால் சஞ்சாய் காந்தி தேசிய பூங்காவின் நுழைவாயிலை அடையலாம்.
சஞ்சய் காந்தி தேசிய பூங்கா
கிருஷ்ணகிரி தேசிய பூங்கா என்று முன்பு அழைக்கப்பட்ட இந்தப் பூங்கா போரிவலி தேசிய பூங்கா என்றும் அழைக்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டில் சஞ்சாய் காந்தி தேசிய பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்பூங்கா சுமார் 104 ச.கி.மீ. சுற்றளவுள்ளது. விஹார் மற்றும் துளசி என்ற இரண்டு ஏரிகள் இங்கு உள்ளன. பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும் நேரம் காலை 7.30 மணி முதல் மாலை 6.3௦ ஆகும். திங்கள் கிழமை வார விடுமுறை தினம் ஆகும். பூங்காவினுள்ளே செல்ல நுழைவு கட்டணமாக ரூ. 36 க்கு நுழைவுச் சீட்டு வாங்கவேண்டும். (டைகர் சஃபாரிக்கு ரூ. 61 தனிக் கட்டணம் ஆகும்). புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு. கட்டணம் ரூ. 50 ஆகும்.
நுழைவுச் சீட்டுப் பெற்றுக்கொண்டு உள்ள நுழைய பொது நுழை வாயிலுக்குச் சென்றபோது பெட் தண்ணீர் புட்டிக்கு ரூ.50 வசூலித்தார்கள். திரும்பி வரும்போது பாட்டிலுடன் வந்து திரும்ப ஒப்படைத்தேன். ரூ. 50 ஐ திரும்பத் தந்துவிட்டனர். இதன் நோக்கம் ரூ. 50 பாதுகாப்பு வைப்புத் தொகையாக வைத்திருந்துவிட்டு காலி பெட் புட்டியைத் திரும்பப் பெற்றுக் கொண்டு பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். இதனால் கண்ட இடங்களில் வீசி எறிவது தடுக்கப்பட்டதல்லவா. இது வனத்துறையினர் மேற்கொண்ட நல்ல முன்முயற்சியாகும்.
இங்குள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து பருவகாலங்களில் மிதமிஞ்சி நீர் கொட்டும். கோடையில் வற்றிவிடும். இங்குள்ள இலையுதிர் காடுகளிலிருந்து சரிவான மலைக்குச் செல்வதற்கு ஒரு மணிநேர மலையேற்றம் தேவைப்படும். மலையின் உச்சியிலிருந்து அழகான குடைவரைகளைக் காண்பது சுகமான அனுபவமாகும்.
சஞ்சாய் காந்தி தேசிய பூங்காவின் நுழைவாயிலிலிருந்து கான்ஹெரீ குடைவரைகளுக்குச் செல்ல ஏழு கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். பூங்கா நுழைவாயிலிலிருந்து கான்ஹெரீ குடைவரைகள் வரை மும்பையின் BEST பேரூந்துகள் சென்று வருகின்றன. டாக்ஸி வசதியும் உள்ளது. மற்ற பயணிகளுடன் டாக்ஸி கட்டணத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். குடைவரை நுழைவாயில் வரை பேரூந்துகள் செல்கின்றன. நுழைவுச் சீட்டு வழங்குமிடத்திற்கு நீண்ட படிக்கட்டுகள் வழியாகச் செல்லலாம். அங்கிருந்து குடைவரைகளைப் பார்வையிடலாம்.
கான்ஹெரீ குடைவரைகள் எல்லாப் பருவங்களிலும் காலை 07.30 மணி முதல் 06.30 மணி வரையில் பார்வையாளருக்குத் திறந்திருக்கும். இங்கும் நுழைவு கட்டணமாக ரூ. 15 (அயல்நாட்டவருக்கு ரூ. 200 நுழைவுக்கட்டணம்) வாங்கிக் கொண்டு நுழைவுச் சீட்டுத் தருகிறார்கள்.
மண்டபேஷ்வர் குடைவரை வளாகம்
கான்ஹெரீ குடைவரை வளாகத்தை அடுத்து சில மீட்டர் தொலைவில் மண்டபேஷ்வர் என்ற குடைவரை (Marathi: मंडपेश्वर गुंफा) வளாகம் அமைந்துள்ளது. மண்டபேஷ்வர் குடைவரை வளாகத்தைப் பற்றிப் பல சுற்றுலாப் பயணிகள் அறிந்திருக்க மாட்டார்கள். இதன் அமைவிடம் மிகவும் அசுத்தமாகவுள்ளது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த இந்துக் குடைவரை வளாகம் போயன்சூர் மலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆதியில் பெளத்த விகாரமாகத் திகழ்ந்த இந்த வளாகம் வேதகால பிராமணிய மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்தக் குடைவரை கருவறை, அந்தராளம், மண்டபம், முற்றம் ஆகிய உறுப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திலிருந்து மேலே செல்லப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நடராஜர், வியாக்யான முத்திரை காட்டும் லகுளீசர் போன்ற புடைப்புச் சிற்பங்கள் கொண்ட இந்து சிற்பத் தொகுப்புகள் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன.
இங்கு கருவறையில் ஒரு மிகப்பெரிய சிவலிங்கம் நிறுவப்பட்டிருந்ததாகச் சிலர் கூறுகிறார்கள். அந்தச் சிவலிங்கம் இப்போது என்னவாயிற்று என்று தெரியவில்லை. தற்போது ஒரு புதிய லிங்கம் நிறுவப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இந்தக் குடைவரை வளாகம் ஒரு தேவாலயமாகவும் (Church) திகழ்ந்துள்ளது என்பது சுவையான வரலாற்றுச் செய்தியாகும். கிறித்துவச் சின்னமான சில சிலுவை உருவங்கள் சுவற்றில் காணப்படுகின்றன. சுவற்றில் சிவலிங்கத்தின் புடைப்புச் சிற்பமும் காணப்படுகிறது. மற்ற புடைப்புச் சிற்பங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது இந்தக் குடைவரை வளாகத்தை இந்துக்கள் தங்கள் வழிபாட்டிற்காக மீட்டுள்ளனர்.
குறிப்புநூற்பட்டி
- A Walk Around Kanheri Caves in Mumbai Akshatha Native Planet https://www.nativeplanet.com/travel-guide/kanheri-caves-mumbai-001750-pg1.html
- Avalokitesvara Buddhist Studies
- Kanheri Caves Bhramanti.com
- Kanheri Caves Mumbai
- Kanheri Caves, Sanjay Gandhi National Park, Mumbai Anuradha Goyal India Tales April 9, 2011
- Kanheri Caves Wikipedia
- Kanheri Caves. Wondermondo. August 22, 2010.
- Mandapeshwar Cave http://www.cpreecenvis.nic.in/Database/MandapeshwarCave_3003.aspx
- Mandapeshwar Caves Wikipedia
- Mumbai’s Ancient Kanheri Caves. Rajen Nair. அக்டோபர் 31, 2006
- The Kanheri Caves, Mumbai: A Precious Monument to Buddhist Civilization BD Dipananda Buddhistdoor Global August14,2015
வழக்கம்போல சிறப்பான தகவல்கள். அழகான படங்கள்.
LikeLike
தங்கள் மேலான கருத்திற்கு மிக்க நன்றி ஐயா
LikeLike
ஆய்வுப் பகிர்வு
அழகானப் படங்கள்
வியக்கச் செய்யும் காணொலிகள்
பெரும் மலையினை சிற்றுளி கொண்டு செதுக்கி ஓரிடத்தில், 109 குடவரைகள் வியப்பைத் தருகின்றன ஐயா
LikeLike
தங்கள் மேலான கருத்திற்கு மிக்க நன்றி ஐயா..
LikeLike
பாட்டில்களை குப்பையாக்கி விடாமல் இருப்பதற்கு நல்ல வழி 50 ரூபாய் விடயம்.
நிறைய தகவல்கள் நன்றி நண்பரே…
LikeLike
உண்மைதான்.. நம் ஊர் நினைவுச் சின்னங்களையும் இவ்வாறு பாதுகாக்கலாம். மேலான கருத்திற்கு மிக்க நன்றி ஐயா..
LikeLike
நான் பார்க்க விரும்பிய குடைவரைகளை உங்கள் பதிவு மூலமாகக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். அங்கு செல்லும்போது உங்களுடைய இந்த பதிவு எனக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி.
LikeLike
ஒரு நாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். நான் சென்று வந்து பல நாட்கள் ஆகிவிட்டன. தங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற பிரார்த்தனைகள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
LikeLike
வணக்கம்,
http://www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.
இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.
அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.
நன்றி..
Tamil US
http://www.tamilus.com
LikeLike