அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 1: ஈர்க்கும் இடங்களுக்குப் பயணம் செல்வோமா?

நகரத்தின் இயந்திர வாழ்க்கையிலிருந்து விலகி அழகு ததும்பும் மலைவாழிடங்களுக்குச் சுற்றுலா செல்வது என்பது ஒரு சிறந்த தேர்வாகும். அரக்கு பள்ளத்தாக்கு (Telugu: అరకు వ్యాలీ; English: Araku Valley) ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாழிடங்களில் அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமாகும். மேகம் வருடிச் செல்லும் மலைத்தொடர்கள், வெள்ளியை உருக்கி வார்த்தது போல மலையிலிருந்து கொட்டும் அருவிகள், இதமான குளிருடன் மயக்கும் சூழல், காற்றில் காஃபி மணம் தவழ்ந்து வர கண்ணிற்கினிய பசுமையான காஃபித் தோட்டங்கள் சூழ்ந்த நிலப்பரப்பு, இனிமையாய்ப் பழகும் மலைவாழ் மக்கள் என்று பல சுற்றுலா அம்சங்கள் நிறைந்த ரம்மியமான பள்ளத்தாக்கு இதுவாகும். ஆங்காங்கே சில வீடுகள் தென்படுகின்றன. விவசாயம் நடைபெறுகிறது. சில இடங்களில் நெல்  அதிக  அளவில் பயிரிடுகிறார்கள். இது அரக்கு பள்ளத்தாக்குச் சுற்றுலா பற்றிய மூன்று பதிவுகள் கொண்ட தொடர் ஆகும்:

அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 1: ஈர்க்கும் இடங்களுக்குப் பயணம் செல்வோமா?
அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 2: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்கள்
அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 3: போரா குகைகள்

இத்தொடரின்  முதல் பதிவு இதுவாகும்.

அனந்தகிரி குன்றின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதும் சுண்ணாம்புப் பாறைகளால் உருவாகியுள்ளதும், இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றாக அறியப்படுவதுமான  உலகப்புகழ் பெற்ற போரா குகைகள் (Borra Caves) ,ஒவ்வொருவரும் கண்டிப்பாக கண்டுகளிக்க வேண்டிய குகையாகும். இது மட்டுமின்றி  தடிபுடி நீர்த்தேக்கம் (Thadipudi Reservoir), டைடா கிராமம் (TYDA Village) மற்றும் ஜங்கிள் பெல்ஸ் இயற்கை முகாம் (Jungle Bells Nature Camp), காலிகொண்டா காட்சிக் கோணம் (Galikonda View Point), சாப்பாறை நீரிணை (Chaparai Water Cascade), சங்க்டா அருவி (Sangda Falls), பத்மபுரம் தாவரவியல் பூங்கா (Padmapuram Botanical Gardens), பத்மபுரம் தொங்கும் குடிசைகள் (Padmapuram Hanging Cottages), மலைவாழ் மக்கள் பற்றிய அருங்காட்சியகம் (Tribal Museum). போன்ற சுற்றுலாத் தலங்கள் ஆண்டுதோறும் பல சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்த்து வருகின்றன.

அமைவிடம் 

மனதிற்கினிய மலைவாழிடமான அரக்கு பள்ளத்தாக்கு ஆந்திர பிரதேச மாநிலம், விசாகபட்டிணம் மாவட்டம், அரக்குவேலி மண்டலில் (Arakuvalley Mandal) அமைந்துள்ளது. இதமான குளிர் நிலவும் மலை வாழிடமாகும் இதுவாகும். அரக்குவேலி மண்டலில் 245 கிராமங்களும், 15 பஞ்சாயத்துகளும் உள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் சூழ, கடல் மட்டத்திலிருந்து 925 மீ. உயரத்தில், ஓடிஸா மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள அரக்கு பள்ளத்தாக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. ரக்தகொண்டா, சிட்டமகொண்டா, கலிகொண்டா, சுங்கரிமெட்டா போன்ற அழகிய மலைச்சிகரங்களின் நடுவே அமைந்துள்ளது அரக்கு பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கு அழகிய மலைமுகடுகளாலான மிகப்பெரிய மலைதொடர்களையும், அனந்தகிரி மற்றும் சுங்கரிமெட்டா பாதுகாப்பு காடுகளையும்  அரக்கு பள்ளத்தாக்கு உள்ளடக்கியுள்ளது.

அரக்கு வேலி (అరకు వాలీ) நகரம் இந்த மண்டலின் தலைநகர் ஆகும். இவ்வூர் சலூரிலிருந்து 58.6 கி.மீ. தொலைவிலும், சிமிளிகுடா இரயில் நிலையத்திலிருந்து 78 கி.மீ. தொலைவிலும், பொப்பிலியிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும், சுனபேடவிலிருந்து 81 கி.மீ. தொலைவிலும், விஜயநகரத்திலிருந்து 85.3 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகரான விசாகபட்டிணத்திலிருந்து 86 கி.மீ. தொலைவிலும், சிம்மாச்சலத்திலிருந்து 108 கி.மீ. தொலைவிலும், ஸ்ரீகாகுளத்திலிருந்து 151 கி.மீ. தொலைவிலும், புபனேஸ்வரிலிருந்து 430 கி.மீ. தொலைவிலும், ஹைதராபாத்த்திலிருந்து 624 கி.மீ. தொலைவிலும், திருப்பதியிலிருந்து 763 கிமீ. தொலைவிலும் சென்னையிலிருந்து 803 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

அரக்குவேலிக்கு இரயிலுடன் சாலையையும் இணைத்து சுற்றுலா பயணம்

அரக்குவேலிக்கு சுற்றுலா செல்லுவோர் இரயில் பயணம் மேற்கொள்வது மிக இனிமையான அனுபவம் ஆகும். விசாகபட்டிணம் சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து (Visakapatnam Railway Junction) கிரண்துல் இரயில் நிலையம் (Kirandul Railway Station) வரை ஒரு பாசஞ்சர் இரயிலும் ஒரு கிரண்துல் விரைவு இரயிலும்  இயக்கப்படுகின்றன. கிரந்துல் இரயில் நிலையம் சட்டிஸ்கர்  மாநிலம் தண்டேவாடா  மாவட்டத்தில் அமைந்துள்ளது. விசாகபட்டிணம் – கிரண்துல் இரயில் பயண தூரம் 131 கி.மீ. ஆகும்.

விசாகபட்டணம் – கிரண்துல் (கொத்தவலசா – கிரண்துல்) அகல இருப்புப் பாதைத் திட்டம்,  இரும்புக் கனிம தாதுக்களை சத்திஸ்கார் மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் விசாகபட்டணம் நகரத்திற்கு எடுத்துச் செல்வதற்காக தண்டகாருண்ய  காடுகளில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது.  கந்தகம் அற்ற இந்த இரும்புக் கனிம தாதுவிற்கு உலகச் சந்தையில் தேவை அதிகரித்துள்ளது.

Kirandul passenger க்கான பட முடிவு

தொடர்புடைய படம்

கிரண்துல் பாசஞ்சர் இரயில் (டிரெய்ன் எண்: 58501): பயண நேரம்: 3 மணி. 55 நிமிடங்கள். வைசாக்கில் புறப்படும் நேரம் காலை 06.50 மணி. – அரக்கு நகர் சென்றடையும் நேரம் காலை 10.45 மணி. இடையே மொத்தம் 15 நிறுத்தங்கள்).

கிரண்துல் விரைவு இரயில் (டிரெய்ன் எண்: 18514): பயண நேரம்: 3 மணி. 8 நிமிடங்கள். வைசாக்கில் புறப்படும் நேரம் இரவு 09.40 மணி. – அரக்கு நகர் சென்றடையும் நேரம் இரவு 12.48 மணி – மொத்தம் 1 நிறுத்தம் மட்டும்) – ஆகும். பயண வகுப்புகள்  இரண்டாம் வகுப்பு (Unreserved), இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் (Reserved), 3 டயர் ஏ.ஸி (Reserved), 2 டயர் ஏ.ஸி  (Reserved).

araku valley train Travel Forum க்கான பட முடிவு

கண்ணாடிக் கூரையும் குளிர்சாதன வசதியும் கொண்ட இரயில் பெட்டி (Glass-domed Air-conditioned Coach) கிரந்துல் பாசஞ்சருடன் தற்போது இணைக்கப்படுகிறது. விஸ்டாடோம் கோச் (Vistadomeஎன்று பெயர்கொண்ட இப்பெட்டியில் மெத்தையுடன் இருக்கைகள் (cushioned seats), பரந்த கண்ணாடி ஜன்னல்கள், (wide glass windows), எல்.ஸி.டி டி.வி. (LCD TV) போன்ற வசதிகள் உள்ளன. இந்த இரயில் பெட்டி அரக்கு நகரில் கழட்டிவிடப்படுகிறது. பாசஞ்சர் இரயில் மாலை வைசாக்கிற்குத் திரும்பும்போது மீண்டும் இணைக்கப்படுகிறது. இந்த வகுப்பில் இருக்கைக்கான கட்டணம் ரூ. 665.00 ஆகும்.

தொடர்புடைய படம்

ஏ.பி.டி.டி.ஸி யின் இரயில் மற்றும் சாலை சுற்றுப்பயணத் தொகுப்பு 

கிரண்துல் பாசஞ்சர் (டிரெய்ன் எண்: 58501) இரயிலில் பயணிகளுக்காக ஒரு நாள் பயணமாக அரக்குவேலி சென்று திரும்ப  ரூ. 875.00 பயணச் சீட்டுக் கட்டணத்தில் (குழந்தைகளுக்குப் ரூ. 700 கட்டணம்) ஒரு தொகுப்பு சலுகையினை (Rail cum Road package) ஏ.பி.டி.டி.ஸி சுற்றுலாத் துறையினர் (A.P.T.D.C Tourism Department) அளிக்கிறார்கள். இரண்டு நாள் பயணத் திட்டங்களும் சுற்றுலாத் துறையினரிடம் உள்ளன. கிரண்துல் பாசஞ்சர் இரயிலில் ஒரு பெட்டி இந்தச் சுற்றுலா தொகுப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உங்கள் பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு பயணிகள் காலை 6.00 மணிக்கு முதல் நடை மேடையில் உள்ள ஏ.பி.சுற்றுலாத் துறையினர் சேவை மையத்திற்கு வந்து சேர வேண்டும். காலை 6:50 மணிக்கு விசாகபட்டணம் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 10:45 மணி அளவில் அரக்கு நகர் சென்றடைகிறது.

காலை சிற்றுண்டி, மதிய உணவு, சிற்றிடை உணவு (Snacks) எல்லாம் ஏ.பி. டி.டி.ஸி. சுற்றுலாத் துறையினர் மூலம் பயணிகளுக்கு அளிக்கப்படுகிறது. அரக்குவேலியில் ஒரு பேரூந்து மூலம் பயணிகள், பத்மபுரம் தாவரவியல் பூங்கா (Padmapuram Botanical Garden), பழங்குடியினர் அருங்காட்சியகம் (Tribal Museum), ஆனந்தகிரி காஃபித் தோட்டங்கள், காலிகுண்டா காட்சிக் கோணம் Galikonda View Point),  போரா குகைகள் மற்றும் திம்சா நடனம் (Dimsa dance) ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மாலை இதே பாசஞ்சர் இரயிலில் பயணிகள் அரக்குவேலியிலிருந்து விசாகபட்டணத்திற்குத் திரும்புகிறார்கள். இந்த இரயில் இரவு 11:00 மணிக்கு விசாகபட்டணம் சென்றடையும்.

Kirandul passenger க்கான பட முடிவு

தொடர்புடைய படம்

இரயில் ஜன்னல் வழியே நீங்கள் காண்பது ஒரு பக்கம் பள்ளத்தாக்கு, மறுபக்கம் குன்றுகள் என்று பாதை நெடுக திகைப்பூட்டும்படியான, எப்போதும் கண்டிராத எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பது சுகமான அனுபவம் ஆகும். இந்த இரயில் தடத்தில் 58 சுரங்கப் பாதைகளையும் 84 பாலங்களையும் கடந்து செல்வது சிலிர்ப்பான அனுபவம் ஆகும். இங்குள்ள பெரிய சுரங்கப் பாதை 896 மீ. தூரமும் சிறிய சுரங்கப் பாதை 26 மீ. தூரமும் கொண்டுள்ளது. சராசரியாக சுரங்கப் பாதையின் தூரம் 400 மீ. ஆகும். இங்குள்ள சுரங்கப் பாதைகளுக்கு வரிசை எண் தரப்பட்டுள்ளது சுவாரஸ்யமான செய்தி. பயணிகள் சுரங்கப் பாதைகளை எண்ணிக்கொண்டு வருவதும் சிறிது தூரம் கடந்தபின்பு எண்ணிக்கையைத் தவற விடுவதும் எண்ணிக்கை தெரியாத குற்றமல்ல. இயற்கைக் காட்சிகளால் ஈர்க்கப்பட்டதால் மட்டும்தான். இந்த இரயில் தடத்தில் உள்ள ஷிமிளிகுடா (Shimiliguda)  இரயில்  நிலையம் மிகவும் உயரத்தில் அமைந்துள்ள அகலப் பாதை இரயில் நிலையம் (Broadgauge Railway Station) ஆகும்.

விசாகபட்டணம்  அரக்குவேலி சாலை வழிப் பயணம் 

அரக்குவேலி ஏ.பி.எஸ்.ஆர்.டி.ஸி பேரூந்து நிலையம், அரக்கு ஏ.பி.எஸ்.ஆர்.டி.ஸி பேரூந்து நிலையம், போரா குகை ஏ.பி.எஸ்.ஆர்.டி.ஸி பேரூந்து நிலையம் ஆகிய பேரூந்து நிலையங்கள் அரக்குவேலிக்கு அருகில்  அமைந்துள்ளன. பல்வேறு நகரங்களிலிருந்து ஏ.பி.எஸ்.ஆர்.டி.ஸி பேரூந்துகளை இயக்கி வருகிறது. காலை ௦5:00 மணி முதல் இரவு 07:00 வரை விசாகபட்டணத்திலிருந்து  அரக்குவேலிக்கு ஒவ்வொரு ௦.45 நிமிட இடைவெளியில் ஏ.பி.எஸ்.ஆர்.டி.ஸி பேரூந்துகள் புறப்பட்டுச் செல்கின்றன. தூரம் 114 கி.மீ. பயண நேரம் சுமார் 4.00 மணி நேரம். கட்டணம் ரூ. 102.00 ஆகும்.

Visakapatnam araku Road trip க்கான பட முடிவு

Visakapatnam araku Road trip க்கான பட முடிவு

விசாகபட்டணம் – ஆனந்தகிரி – அரக்குவேலி மலைச்சாலை 106 கி.மீ. தூரம் கொண்டது, விசாகபட்டணம் என்.ஏ.டி. சந்திப்பிலிருந்து (NAD Junction) (104.4 கி.மீ. தொலைவு) தொடங்கும் நான்கு வழி கொண்ட குறைவான மேடுகள் (bumps) கொண்ட இந்த அகலச் சாலை பயணம் இனிமையானது. அரக்கு நகரம் பெந்தூர்த்தியிலிருந்து (Pendurthi) 96.7 கி.மீ. தொலைவிலும், கொத்தவலசவிலிருந்து (Kothavalasa) 87 கி.மீ. தொலைவிலும், தடிபுடியிலிருந்து (Tadipudi) 61.7 கி.மீ. தொலைவிலும், டைடா விலிருந்து (TYDA) 38.7 கி.மீ. தொலைவிலும், போரா குகை சந்திப்பிலிருந்து (Borra Cave Junction) 33.1 கி.மீ. தொலைவிலும், ஆனந்தகிரியிலிருந்து (Ananthagiri) 26 கி.மீ. தொலைவிலும், சங்கர்மட்டாவிலிருந்து (Sankarmatta) 11 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த மலைச் சாலையின் வரைபடம் கீழே தரப்பட்டுள்ளது. பெந்தூர்த்திச் சமதளத்திலும் பின்பு மலைச் சாலையிலும் பயணிக்க வேண்டும். மலைச்சாலையில் சில நேரங்களில் கொதவலச வரைகூடப் போக்குவரத்து நெரிசல் இருப்பதுண்டு.

road trip from vizag to araku க்கான பட முடிவு

ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வியூ பாயிண்டுகளில் அரக்கு பள்ளத்தாக்கின் எழில் கொஞ்சும் பரந்த தோற்றத்தை (Panoramic View) பல கோணங்களில் காணலாம்.  மேகம் தவழும் மலையில் அவ்வப்போது பெய்துகொண்டிருந்த தூறல் மழையால் மலையெங்கும் உள்ள செடிகொடிகள் அலம்பிவிட்டது போல பசைப்பசெலேன்று தோன்றியது. இந்த எழில் கொஞ்சும் காட்சிகள் உங்கள் மனதில் பதிந்துவிடுவது உறுதி.

குறிப்புநூற்பட்டி

  1. அரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம் மீன்துள்ளியான் அக்டோபர் 29, 2௦16 http://meenthulliyaan.blogspot.com/2016/10/blog-post_29.html
  2. அரக்கு பள்ளத்தாக்கு – புத்துணர்ச்சியூட்டும் சீமாந்திரா மலைவாசஸ்தலம்! நேட்டிவ் பிளானெட் https://tamil.nativeplanet.com/araku-valley/#overview
  3. A Complete Tour Guide To Araku Valley Hill Station Trans India Travels
  4. Araku Valley Go2India.in
  5. Araku Valley Wikipedia
  6. Rail cum Road package for Araku Go2India.in

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in குகைகள், சுற்றுலா and tagged , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 1: ஈர்க்கும் இடங்களுக்குப் பயணம் செல்வோமா?

  1. ஸ்ரீராம் சொல்கிறார்:

    சுவாரஸ்யம்.

    Like

  2. புகைப்படங்களும், காணொளி காட்சிகளுமே… அரக்கு பள்ளத்தாக்கை காணும் ஆசையை ஏற்படுத்துகிறது.

    Like

  3. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    புகைப்படங்களும் காணொலிகளும் வா வா என்று அழைக்கின்றன ஐயா
    வாழ்வில் ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என மனம் விழைகிறது
    நன்றி ஐயா

    Like

  4. Dr B Jambulingam சொல்கிறார்:

    அரக்கு பள்ளத்தாக்குப் பற்றி படித்துள்ளேன். இன்று கூடுதலாக படங்களுடன் அறிந்தேன். எங்களுடைய பயணத்தில் தற்போது அரக்குப் பள்ளத்தாக்கினையும் இணைக்க வைத்த உங்களுடைய எழுத்துக்கு நன்றி.

    Like

  5. Ilaval hariharan சொல்கிறார்:

    இவ்வளவு தெரிந்த நீங்கள் APTDCயுடன் இணைந்து ஏன் ஒரு டூர் ஆர்கனைஸ் பண்ணக் கூடாது…? உங்கள் எழுத்தே அவசியம் போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் தூண்டுகிறது, அய்யா. நன்றி

    இளவல் ஹரிஹரன், மதுரை

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.