
Tribal Museum PC: Wikimedia Commons
பழங்குடியினர் அருங்காட்சியகம் (English: Tribal Museum. Telugu: గిరిజన మ్యూజియం) அரக்கு பள்ளத்தாக்கில் அரக்கு நகர் பேரூந்து நிலையத்திலிருந்து 200 மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தினரால் (Andhra Pradesh Tourism Development Corporation A.P.T.D.C.) 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அரக்கு பள்ளத்தாக்கில் அரக்கு நகரைச் சுற்றி 19 பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கிழக்குத் தொடர்ச்சி மலையின் அரக்கு பள்ளத்தாக்கில் வாழும் பழங்குடியினரின் கலாச்சாரத்தை நாடியறியும் விதமாகச் செயல்படும் இந்த அருங்காட்சியகம் அற்புதமான சுற்றுலாத் தலமாகும். பழங்குடி கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வினை உருவாக்குவதே இந்த அருங்காட்சியகத்தின் நோக்கமாகும். இது பழங்குடியினர் வரலாற்று இடமல்ல என்றாலும் இங்கு வாழும் குடியினர் பற்றிய தகவல் மையம் என்று நிச்சயமாகக் கூறலாம்.
அரக்கு பழங்குடியினர் அருங்காட்சியகம் இரண்டு தளத்துடன் கூடிய அழகிய வட்ட வடிவக் கட்டடத்தில் அமைந்துள்ளது. வெளிப்புறச் சுவர்களில் அடர் சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது. ஜன்னல் மற்றும் கதவுகள் வெண்மை வண்ணத்துடன் மிளிர்கின்றன. சிவப்பு நிற வண்ணச் சுவரில் வெண்மை நிறத்தில் கோலங்களும் சிற்றுருவங்களும் வரையப்பட்டுள்ளன.

Tribal Museum Diorama of a HUT

Tribal Museum Diorama of Tribal Market

Tribal Museum Mannequins set in Diorama
அருங்காட்சியகத்தின் உட்புறம் பழங்குடியினரின் வாழ்க்கையினைச் சித்தரிக்கும் விதமாக மண் மற்றும் உலோகங்கள் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரின் திருமணச் சடங்குகளைச் சித்தரிக்கும் 10 புகைப்படங்கள் கொண்ட தொடரை நீங்கள் இங்கு நுழையும்போதே காணலாம். . அருங்காட்சியகத்தின் தளங்களின் நடுவே பாதை அமைத்து, பாதையை ஒட்டியுள்ள இடத்தைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துக் காட்சிக் கூடங்களை (Gallery) அமைத்துள்ளார்கள். இந்தக் காட்சிக் கூடத்தின் அடர்வண்ண மண் சுவர்கள் மீது பழங்குடியினரின் சித்திரங்களும் கோலங்களும் வெண்மை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.
பழங்குடியினரின் தினசரி நடவடிக்கைகள் Diorama என்னும் முப்பரிமானக் காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த diorama வில் பழங்குடியினர் வீட்டின் உட்புறப் பகுதிகளும் (Interior Portions), வெளிப்புறப் பகுதிகளும் (Outdoor Areas) இயற்கையான வண்ணப் பின்னணியுடன் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பழங்குடியினர் பின்னணியின் (Tribal Background) முன்பு பழங்குடி மக்கள் தங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபட்டுள்ளது போன்ற மனித உருப்படிவங்கள் (Mannequins) இயற்கை வடிவளவில் (Life Size) தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. மனித உருப்படிவங்களின் வசீகரமான உடைகள், பழமையான நகைகள், அலங்காரம் மற்றும் பழங்குடியினரின் சமையல் அறை பாத்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தொழிற் பட்டறைகள், சந்தைக் கடைகள், இசைக்கருவிகள், நடனம், வேட்டையாடும் கருவிகள் போன்ற அனைத்தையும் அதிக அக்கறையுடன் வடிவமைத்துள்ளனர். பழங்குடியினர் வீட்டின் ஒவ்வொரு காட்சியமைப்பையும், முறையாகப் பெயர்ப் பலகை அமைத்துத், தேவையான செய்திகளைப் பார்வையாளர்கள் படித்தறியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது. பழங்குடி மக்களின் குடும்பம் வசிக்கும் வீட்டின் முன்புறத் தோற்றம் (Elevation), திண்ணை, கூடம், சமையலறை போன்ற காட்சிகளும் பழங்குடி மக்கள் கூடும் இடமான கிராமச் சந்தை, பழங்குடி மக்கள் வாழும் காட்டுப் பகுதிகள் , வேட்டையாடுதல் போன்ற காட்சிகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளூர் பழங்குடியினர் இடம்பெறும் மயூர் (Telugu: మయూర్ డాన్స్) மற்றும் திம்சா (Telugu: ధింసా డాన్స్) என்ற இரு வகை நடனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பழங்குடி அருங்காட்சியகத்தின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி இதுவெனலாம். வேறொரு பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பழங்குடி கைவினைஞர்களின் (Artisan) கலை மற்றும் கைவினைத் திறனை (Art and Craft Skills) ஊக்குவிக்கும் விதமாக மட்பாண்டம் வனையாலை (Pottery Making), கைத்தறி நெசவு (Handloom Weaving) போன்ற கலை மற்றும் கைவினை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பயிலரங்குகளில் களிமண் வடிவமைத்தல் (Clay Moulding) மற்றும் மட்பாண்டம் வனைதல், கைத்தறி நெசவு நெய்தல், கள் இறக்குதல் (Toddy Tapping), கொல்லன் பட்டறை (Black Smithy), போன்ற தொழில்கள் பற்றிக் கைவினைஞர்கள் செயல்விளக்கம் தருகிறார்கள். இங்குள்ள சிறு குளத்தில் சிறுவர்கள் படகு சவாரி செய்யலாம். அருங்காட்சியகத்தின் வழிகாட்டும் வரைபடத்தையும் இங்கு காணலாம்.

Dhimsa Dance PC: Sacred Space Blog
பழங்குடிப் பெண்கள் பங்குபெறும் திம்சா நடனம் பார்வையாளர்களுக்காக இங்கு ஆடிக் காட்டப்படுகிறது. இந்தப் பெண்களுடன் பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்காக இப்பெண்கள் சிறு அன்பளிப்பையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
நேரம்: 10 AM முதல் 6 PM
நுழைவு கட்டணம்: ரூ. 10 வயது வந்தவர்களுக்கு & ரூ. 5 குழந்தைகள்
தேவைப்படும் நேரம்: ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல்.
ஃபோன: 098486 16517

Padmapuram Botanical Garden PC: Wikipedia
Tree Top Hut @ Padmapuram Botanical Garden
அரக்கு நகரின் பேரூந்து நிலையத்திலிருந்து 2 5 கி.மீ. தொலைவில் பத்மபுரம் தாவரவியல் பூங்கா (English: Padmapuram Botanical Garden. Telugu: పద్మపురం బొటానికల్ గార్డెన్) அமைந்துள்ளது. இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, 1942 ஆம் ஆண்டில், இராணுவ வீரர்களின் உணவுத் தேவைக்குக் காய்கறிகள் பயிரிடுவதற்காக இந்தத் தோட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். தற்போது இந்தத் தோட்டத்தில் காய்கறிகள் பயிரிடப்படுவதில்லை. அரிய வகை ஆர்கிட் பூக்கள் (Orchid flowers), அரிய வகைப் பூக்கள் மற்றும் பழத்தோட்ட (Orchard), மரங்களை வளர்த்துப் பராமரிக்கும் தோட்டக்கலை நர்சரி பயிற்சி மையமாகவும் (Horticultural Nursery cum Training Center) செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ரோஜாத் தோட்டம் மிகவும் அழகானது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்தப் பத்மபுரம் தாவரவியல் பூங்கா வளாகத்தில் குழந்தைகள் பயணம் செய்து மகிழ பொம்மை ரயில் (Toy Train) ஒன்று தோட்டதிற்குள்ளேயே ஊர்ந்து சென்று வருகிறது. மற்றொரு சிறப்பாம்சம் இந்தப் பூங்கா வளாகத்தில் மரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள மரக்குடில்கள் (English: Tree Top Huts. Telugu: ట్రీ టాప్ కుటీరాలు) ஆகும். சுமார் 10 அடி உயரத்தில் மரத்தின் கிளைகளின் மேல் அமைக்கப்பட்டுள்ள இந்த மரக்குடில்கள் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த மரக்குடில்களில் தங்குவது ஒரு கிளர்ச்சியான அனுபவம் ஆகும். இந்தக் குடில் கனமான காற்று வீசும் போது அசைவது சுகமான அனுபவம் ஆகும். இங்குள்ள சிவன் பார்வதி சிலையும் மற்றும் பல சிலைகளும் கண்ணைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

Coffee Museum PC: RamZVizag.Blogspot
இங்குள்ள காஃபி சிற்றுண்டிச்சாலையில் (Coffee Cafe) ஃபில்டர் காஃபி, சாக்லெட், சாண்ட்விச் போன்றவற்றைச் சுவைக்கலாம். இங்கு பல்வேறு சிறப்பினங்களில் நல்ல ஃபில்டர் காஃபிப்பொடி கிடைக்கிறது. வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லெட்டுகள் விற்பனைக்கு உள்ளன.
அரக்கு பள்ளத்தாக்கிற்குப் புலம்பெயர்ந்த பிரகாஷ்ராவ் என்பவரால் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. 1930 ஆம் ஆண்டுகளில் பயணிகளுக்காக ஒரு பொதுவான காஃபி பான (Coffee – Beverage) சேவையைத் தொடங்கியுள்ளார். இங்கு சாகுபடி செய்யப்படும் அரபிகா காஃபிக் (Arabica species coffee beans) கொட்டையின் தனித்தன்மையையும், இதற்கு மாறாகப் பிற இடங்களில் பொதுவாகச் சாகுபடி செய்யப்படும் ரொபஸ்டா காஃபிக் (Robusta species coffee beans) கொட்டையின் தன்மையையும் இவர் உணர்ந்திருந்தார்.
இதன் விளைவாக 1954 ஆம் ஆண்டிலேயே ஒரு காஃபி சிற்றுண்டிச்சாலையுடன் இணைந்த காஃபி அருங்காட்சியகத்தை (Coffee Cafe cum Coffee Museum) நிறுவி நடத்தி வருகிறார். சற்று முன்புவரை இந்தக் காஃபி அருங்காட்சியகமும் காஃபி சிற்றுண்டிச்சாலையும் அயல்நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் (Foreign Delegates) காஃபி வர்த்தகர்களுக்கும் (Coffee Traders) மட்டுமே சேவை செய்தன. தற்போது காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இங்கு எல்லாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
சாப்பறை தண்ணீர் அடுக்ககம் (Chaaparai Water Cascade)

Chaaparai Water Cascade
சாப்பறை தண்ணீர் அடுக்ககம் (Chaaparai Water Cascade) என்னும் தும்பிரிகுடா நீர்வீழ்ச்சி (English: Dumbriguda Waterfalls Telugu: దుమ్బ్రిగుడా జలపాతాలు) அரக்கு பள்ளத்தாக்கில் அரக்கு பேரூந்து நிலையத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் பாதெரு – அரக்கு சாலையில் (English: Paderu – Araku Road Telugu: పడరు – అరకు రోడ్) அமைந்துள்ளது. காடுகளால் சூழப்பட்ட ஓர் அழகிய இடமாக இது திகழ்கிறது.
இது பிரபலமான அரக்கு சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அரக்கு பள்ளத்தாக்கின் பெரிய பாறை வடிவங்களைக் கடந்து இந்தச் சாப்பறை தண்ணீர் அடுக்ககத்தின் நீரோடைகள் அமைந்துள்ளன. பரந்த பாறைகளைச் சுற்றி இந்த நீரோடை பாய்வதால் இந்தத் தண்ணீர் அடுக்ககத்தைச் சுற்றியுள்ள பகுதி ஒரு நாள் சுற்றுலாவிற்கான பிரபலமான தலமாக (Popular Picnic Spot) மாறிவிட்டது. நீரோடையின் பாதையில் மென்மையான பாறைச் சரிவுகள் குறுக்கிடுவதால் இங்கு பெரிய அளவில் இயற்கையான தண்ணீர் அடுக்ககங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தத் தண்ணீர் அடுக்ககங்கள் வசீகரமாகத் தோன்றுவதால் பல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன. இது தெலுங்கு சினிமாப் படப்பிடிப்புகளுக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கிறது. இயற்கையான பாறைச் சரிவுகளின் வழியே நீர் பீறிட்டுப் பெருகி வழிவதைக் காண்பது நல்ல அனுபவம் ஆகும். நீரின் வேகம் மிதமாகப் பெருகி ஓடும்போது இங்கு குளித்து மகிழலாம். பருவ காலங்களில் நீரின் வேகம் மிகுந்து இருக்கும்போது இங்கு குளிப்பது நல்லதல்ல.
மூங்கில் கோழிக்கறி (Bamboo chicken)
சாப்பறை தண்ணீர் அடுக்ககம் செல்லும் வழியில் சாலையின் இரு மருங்கிலும் சிறிய குடிசை (‘pakas’) கடைகளில் “போங்குலோ சிக்கன்” என்னும் மூங்கில் கோழிக்கறியினை (English: Bamboo chicken Telugu: వెదురు చికెన్) விற்கிறார்கள். போங்குலோ சிக்கன் என்று கூவி அழைக்கிறார்கள். ஒரு மேசையில் அரை மீட்டர் அளவுகளில் வெட்டிச் சீராக்கப்பட்ட பச்சை மூங்கில் குழாய்களை வரிசையாக அடுக்கி வைத்துள்ளதைக் காணலாம். இந்த மூங்கிலின் ஒரு புறம் திறவையாகவும் மறு புறம் கணுவுடன் மூடியும் இருக்கும். இந்த மேசையைச் சுற்றி நின்று சில சுற்றுலாப் பயணிகள் வேடிக்கை பார்க்கிறார்கள். சிலர் தேவைக்கேற்ப மூங்கில் கோழிக்கறி கேட்டுக் காத்திருக்கிறார்கள்.
இந்த மூங்கில் கோழிக்கறி அரக்கு பள்ளத்தாக்கில் பழங்குடி மக்களால் சமைக்கப்படும் பழங்குடி அசைவ உணவு ஆகும். உள்ளூர் மொழியில் இதற்கு “போங்குலோ சிக்கன்” (English: Bongulo Chicken Telugu: బోంగులో చికెన్) என்று பெயர்.
அரக்கு பள்ளத்தாக்கின் பழங்குடி மக்கள் இந்தக் கடைகளை நடத்துகிறார்கள். சில கடைகளில் குடும்பமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளது. ஒரு பழங்குடிப் பெண் அலுமினிய பாத்திரத்தில் தோல் நீக்கி அளவாக வெட்டிய நாட்டுக் கோழிக்கறித் துண்டுகள் (சுமார் 250 கிராம் இருக்கலாம்), மிளகாய்பொடி, மஞ்சள் பொடி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, கரம் மசாலா பொடி (பட்டை, இலவங்கம், கசகசா, மல்லி அரவை), கொத்துமல்லி இலை, கல் உப்பு ஆகியவற்றை நன்கு கலந்து மெதுவாகப் பிசைந்தாள். இதில் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்ப்பதில்லை என்றும் சொன்னாள். இஃது இவர்கள் சமையலின் சிறப்பாம்சம் என்றும் சொன்னாள். இந்தக் கலவையை ஒரு மணிநேரம் ஊற விடுகிறாள் (Marinate). இவ்வாறு மசாலாவுடன் நன்கு ஊறிய கோழிக்கறியை மூங்கில் குழாயின் திறந்த வாய் வழியாக நிரப்பினாள். சில மூங்கில் குழாய்களில் ஒரு கிலோ கோழிக்கறியைக் கூட அடைப்பதுண்டாம். சால் மர இலையைப் (Sal Tree Leaves) பந்தாகச் சுருட்டி மூங்கில் குழாயின் வாயை அடைத்தாள்.

Bamboo Chicken under Cooking PC: Rupasree Wikimedia Commons
சற்று தொலைவில் நெருப்பு மூட்டி, அடுப்பு போன்று கற்களை அடுக்கி அதன் மேல் கோழிக்கறி நிரப்பிய மூங்கில் குழாய்களைப் பரப்பி வைத்தாள். மூங்கில் குழாய் தீப்பற்றி எரிகிறது. மூங்கிலைத் திருப்பித் திருப்பி நெருப்பில் காட்ட கோழிக்கறியும் வேகிறது. சுமார் 30 – 45 நிமிடங்களில் சுவையான மூங்கில் கோழிக்கறி பரிமாறத் தயாராகிவிட்டது. இந்தச் சமையல் செய்முறையைத் தன் குடும்பத்தாரிடம் கற்றுக்கொண்டதாக அப்பெண்மணி கூறினாள். பழங்குடியினர் மொழியில் குஃபிய சிடிரா (English: Kufiya Sidira. Telugu: కుఫియా సిడిరా) அல்லது வேடுரு சிடிரா (English: Veduru Sidira. Telugu: వేడురు సిడిరా) என்று மூங்கில் கோழிக்கறியைக் குறிப்பிடுவதாகக் கூறினாள். சிடிரா (English: Sidira. Telugu: సిడిరా) என்றால் கோழி என்று பொருளாம். மூங்கில் குழாயை உடைத்து மெதுவாகக் கோழிக்கறியை பிரித்தெடுக்கிறாள். கோழிக்கறியுடன் நறுக்கிய வெங்காய வில்லைகள், பச்சை மிளகாய்த் துண்டுகள், எலுமிச்சைத் துண்டு ஆகியவற்றையும் இலையில் வைத்துச் சூடாகப் பரிமாறுகிறாள். சுமார் 200 கிராம் எடை கொண்ட கோழிக்கறியின் விலை ரூ. 150/-. கோழிக்கறி பார்சலாகக் கட்டியும் தருகிறாள்.

Cooked Bamboo Chicken being Served PC: Jit Roy Chowdhury Wikimedia Commons
அரக்கு பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ”மூங்கில் கோழிக்கறியை (Bamboo chicken)” உலகப் புகழ் பெற்ற உணவாக அங்கீகரித்துள்ளனர். எனவே மூங்கில் கோழிக்கறி அரக்கு பள்ளத்தாக்குடன் ஒத்த உணவாக மாறி வருகிறது (synonymous with the Araku Valley).

Ananathagiri Hills Coffee Plantation

Ananthagiri / Tadimada Water Falls
அனந்தகிரி பேரூந்து நிருத்தத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அனந்தகிரி அருவி என்னும் தடிமடா அருவி (English: Tadimada waterfalls. Telugu: తడిమాడ జలపాతాలు) அமைந்துள்ளது. பருவ காலங்களில் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவி வீழ்வதைக் காண்பது சுகம். பிரதான சாலையிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அருவிக்குச் செல்ல மலையேற்றம் செய்வது நல்ல அனுபவம் ஆகும். வழுக்கும் பாறைகள் நிறைந்த இந்த அருவியில் நீந்தலாம். இது சிறிய அருவி என்றாலும் இங்கு முகாமிட நல்ல வசதி உள்ளது.
கலிகொண்டா காட்சிக் கோணம் (Galikonda Viewpoint)

Galikonda View Point PC: Wiki Travels
அரக்கு பள்ளத்தாக்கின் கலிகொண்டா காட்சிக் கோணம் (English: Galikonda Viewpoint. Telugu: గలికోండా వ్యూ పాయింట్) விசாகப்பட்டணம் மாவட்டத்தின் (English: The Highest Point Of Vishakapatnam District Telugu: విశాఖపట్నం జిల్లా యొక్క అత్యధిక ప్రదేశం) உயர்ந்த காட்சிக் கோணம் ஆகும். இது விசாகபட்டணம் அரக்கு சாலையில் விசாகபட்டணத்திலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், அரக்குவிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தப் பசுமையான பள்ளத்தாக்கு ஒரு கண்கவர் காட்சியினை அளிக்கிறது. இங்கிருந்து மலை இரயில் பாதையினையும் குடில்களையும் காணலாம். இது கிழக்குத் தொடர்ச்சி மலையின் இரண்டாவது உயர்ந்த சிகரம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 4320 அடி உயரத்தில் இந்தக் காட்சிக் கோணம் அமைந்துள்ளது. அரக்கு பள்ளத்தாக்கின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்சிக் கோணம் போரா குகைகளுக்குப் போகும் வழியில் அமைந்துள்ளது.

Matsayagundam Fish Motif

சங்க்டா அருவி (Sangda Water Falls)
டைடாவின் ஹரிதா ஜங்கிள் பெல்ஸ் இயற்கை முகாம் (TYDA Haritha Jungle Bells Nature Camp (APTDC) அரக்கு பள்ளத்தாக்கில் விசாகபட்டணம் அரக்கு சாலையில் விசாகபட்டணத்திலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், அரக்குவிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. டைடா ஒரு பழங்குடியினர் வாழும் கிராமம் ஆகும். டைடா ஜங்கிள் பெல்ஸ் ஆந்திர பிரதேச மாநில அரசு சுற்றுலாத் துறையால் நடத்தப்படும் ஓர் அற்புதமான பொழுதுபோக்கு இடமாகும் (Resort). வைசாக்கிலிருந்து அரக்கு செல்லும் இரயில் டைடாவில் நின்று செல்கிறது. டைடா இரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. தடிபுடி நீர்த்தேக்கம் இங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Haritha Jungle Bells Huts PC: APTDC
மலைச்சரிவில், பழங்குடியினரின் கிராம சூழலில், குடில்களும் கூடாரங்களும் அமைந்துள்ளன. கட்டணம்: ரூ. 800 முதல் ரூ 1800 வரை. இங்கு தங்கினால் இயற்கையின் அமைதியை அனுபவிக்கலாம். வை ஃபை, மொபைல் நெட்வொர்க், டி.வி போன்ற வசிதிகள் இல்லை. குடில்கள் மலைச் சரிவில் உயர்ந்த பரப்பில் அமைந்துள்ளன. எனவே அழகான காட்சிக் கோணத்தை இங்கிருந்து காணலாம். ஒரு குடிலுக்கும் மற்றொரு குடிலுக்கும் இடைவெளி மிக அதிகம். அறைகள் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் உள்ளன. சமதளத்தில் உணவகம் (Canteen) உள்ளது. தேவைக்கேற்ப உணவிற்கு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். சைவ உணவு நன்றாக உள்ளது. உணவு பணிவிடை நன்றாக இருந்தது. ஊழியர்கள் மரியாதையுடன் பழகுகிறார்கள். ரம்மியமான தங்குமிடம் தவிர இங்கு மலையேற்றம் (Trekking), நெடுந்தொலைவு நடைப்பயிற்சி (Hiking) போன்ற சாகச விளையாட்டுகளையும் பயணிகள் மேற்கொள்ளலாம்.
தடிபுடி நீர்த்தேக்கம் (Tadipudi Reservoir)
தடிபுடி நீர்த்தேக்கம் விசாகபட்டணம் அரக்கு சாலையில் விசாகபட்டணத்திலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், அரக்குவிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தத் தடுப்பணை விஜயநகர மாவட்டத்தில் கோஸ்தானி ஆற்றின் குறுக்கே 1963 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்கத்திலிருந்து தான் விசாகபட்டணத்திற்குக் குடிநீர் கிடைக்கிறது. வைசாக் அரக்கு சாலையில் செல்கையில் 50 வது கி.மீ. வரும் சந்திப்பிலிருந்து வலப்புறம் திரும்பி 8 கி.மீ. பயணித்தால் நீர்தேக்கத்தைச் சென்றடையலாம்.
ஸ்ருங்கவரபுகொடா (Srungavarapukoda) என்னும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம், சுற்றிலும் பசுமையான மலைகள் சூழ ரம்மியமாகக் காட்சி தருகிறது. எப்ரல் / மே மாதங்களில் புலம்பெயர்ந்த பல பறவைகள் (migrant birds) இங்கு வந்து தங்குவது வாடிக்கை. இந்த நீர்த்தேக்கத்தைச் சாதரணமாகச் சுற்றிப்பார்க்க சுமார் 45 நிமிடங்கள் தேவைப்படும்.

Tadipudi Reservoir PC: Wikipedia
நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்ய ஆர்வம் உள்ளவர்கள் இங்கு படகில் சவாரி செய்து மகிழலாம். நபர் ஒருவருக்கு ஒரு மணி நேரம் படகு சவாரி செய்யக் கட்டணம் ரூ. 50 ஆகும். படகு இந்த உல்லாசப் பொழுதுபோக்கிடத்திலிருக்கும் மறு கரைக்கு அழைத்துச் செல்கிறது. சுற்றிப்பார்க்க 20 நிமிட இடைவெளி தரப்படுகிறது. பயணிகள் படகில் மீண்டும் திரும்பி இக்கரைக்கு வந்துவிடலாம்.
விரும்பினால் மறுகரையில் உள்ள விடுதியிலேயே தங்கலாம். தங்குவதற்கு இங்கே 2 ஏ.ஸி அறைகளும், 3 ஏ.ஸி இல்லாத அறைகளும், உணவகமும் உள்ளன. தேவைக்கேற்ப உங்கள் உணவை முன்பே சொல்லி ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
விசாகபட்டணம் >> அரக்கு செல்ல
சென்னை விசாகபட்டணம் செல்ல பல இரயில்கள் உள்ளன. தொலைவு 781 கி.மீ. ஆகும். சென்னையிலிருந்து விசாகபட்டணத்திற்கு ஆம்னி பஸ்கள் செல்கின்றன. ரெட்பஸ் மூலம் முன்பதிவு செய்யலாம். அரக்கு செல்வதற்கான Rail cum Road Package பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அரக்கு பள்ளத்தாக்கில் வானிலை
அரக்கு பள்ளத்தாக்கு விசாகபட்டணத்தை விடக் குளிர்ச்சியாக உள்ளது. எனினும் மற்ற மலைவாழிடங்களைப் போல இது அவ்வளவு குளிர்ச்சியான பள்ளத்தாக்கு அல்ல. மே மாதத்தில் உஷ்ணம் 42 டிகிரி செல்ஷியஸ் வரை செல்வதுண்டு. ஜூன் இரண்டாம் வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை மழைக்காலம் ஆகும். குளிர் காலத்தில் வெப்பநிலை 14 – 15 டிகிரி செல்ஷியஸ் வரை செல்வதுண்டு. அரக்குப் பள்ளத்தாக்கில் மிதமான மழைப்பொழிவு உண்டு. அக்டோபர் – நவம்பர் மாதங்களில் வங்கக் கடலில் தோன்றும் புயலால் இப்பகுதியும் பாதிப்பு அடைகிறது. அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இங்கு சென்றுவர சிறந்த பருவம் ஆகும்.
அரக்கு இரயில் நிலையம்
அரக்கு இரயில் நிலையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து 2 – 3 கி.மீ. தொலைவில் பல தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. விசாகபட்டணம் கிரந்துல் பாசஞ்சர் இரயில் (டிரெய்ன் எண் 58501) காலை 10.40 மணிக்கு இங்கு வந்து சேர்க்கிறது. விசாகபட்டணம் திரும்பும் கிரந்துல் பாசஞ்சர் இரயில் (டிரெய்ன் எண் 58502) மாலை 14.50 மணிக்கு வந்து 14.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்கிறது.
அரக்கு இரயில் நிலையத்தில் ஒய்வு அறை (Retiring room) வசதி உள்ளது. மூன்று படுக்கைகள் கொண்ட அறைக்கு ரூ. 165/- கட்டணம் ஆகும். ஏழு படுக்கைகள் கொண்ட ஓய்வறையில் தங்குவதற்குப் படுக்கை ஒன்றுக்குக் கட்டணம் ரூ. 40/- ஆகும். அரக்கு இரயில் நிலையம் விசாரணை தொலைபேசி எண்: 08936249632 ஆகும். இரயில்வே ஊழியர்களுக்கான விடுமுறை இல்லம் (Holiday Home) இங்கு உள்ளது.
அரக்கில் சில நல்ல ஹோட்டல்களும் ரிசார்ட்டுகளும் வாடகைக்குக் கிடைக்கும். ரூ. 800/- முதல் ரூ. 2500/- வரை அறைகளும் ஏ.ஸி சூட்களும் வாடகைக்குக் கிடைக்கும். சாலை வழியே அரக்கிற்கு வரும் வழியில் இரு மருங்கிலும் இந்த ஹோட்டல்கள் அமைந்துள்ளன. இரயில் நிலையத்திலிருந்து 2 – 3 கி.மீ. தொலைவில் இந்த ஹோட்டல்கள் அமைந்துள்ளன. இரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் கிடைக்கும்.
இரயில் நிலையத்திற்கு வெளியே டாக்ஸிகள் கிடைக்கும். இவர்கள் பயணிகளைப் பல சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று பின்பு திரும்ப அழைத்து வருகிறார்கள். பயணத் தொகுப்பு (Tour Package) வசதியும் உள்ளது.
அரக்கிலிருந்து ஜெய்பூர் (Jeypore) சாலையில் 45 நிமிடங்கள் காரில் பயணித்தால் புகழ்பெற்ற பட்வா (Padwa) இயற்கை ஏரியை அடையலாம். இன்னும் சற்று தூரத்தில் டுடுமா நீர்வீழ்ச்சி (Duduma waterfall) அமைந்துள்ளது.
குறிப்புநூற்பட்டி
- Araku Valley https://www.go2india.in/ap/araku-valley.php
- Araku Valley Attractions – Tourist Places To Visit In Araku Valley Native Planet
https://www.nativeplanet.com/araku-valley/attractions/#borra-caves - Ananthagiri coffee plantation Araku Valley http://www.arakuvalleytourism.in/coffee-plantation.html
- Araku Valley Hill Station Tour My Indiahttps://www.tourmyindia.com/hill_stations/araku-valley.html
- Big plans for Matsyagundam G.V. Prasada Sarma The Hindu December 27, 2015https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/big-plans-for-matsyagundam/article8033896.ece
- Indulge in the steaming world of coffee and the coffee plantations in this exceptional café-cum-museum in the Araku Valley. https://www.yovizag.com/smell-coffee-araku-museum/
- Matsyakundam HelloVizag https://hellovizag.in/listing/matsyagundam/
- Rail cum Road package for Araku https://www.go2india.in/ap/araku-package.php
- Visiting Araku Valley by train from Visakhapatnam by Kottavalasa Kirandul linehttps://www.go2india.in/ap/araku-train.php
படங்களும் பகிர்வும் காணொலிகளும் புது உலகிற்கு அழைத்துச் செல்கின்றன ஐயா
LikeLiked by 1 person
மேலான கருத்திற்கு மிக்க நன்றி ஐயா. தீபாவளி நல்வாழ்த்துகள்..
LikeLiked by 1 person
தகவல்கள் ஆச்சர்யமளிக்கிறது.
LikeLiked by 1 person
கருத்திற்கு மிக்க நன்றி ஐயா.. தீபாவளி வாழ்த்துகள்..
LikeLiked by 1 person