அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 3: போரா குகைகள்

போரா குகைகள் (தெலுங்கு: బొర్రా గుహలు = போரா குஹலு) ஆந்திரப் பிரதேச மாநிலம், அரக்கு பள்ளத்தாக்கில், கடல்மட்டத்திலிருந்து 705 (2,313 அடி) உயரத்தில், அனந்தகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கையான குகைகள் ஆகும்.  குகையின் உட்புறம் (Interior of the Cave) கடல்மட்டத்திலிருந்து 625 மீ. அமைந்துள்ளது. உயரத்தில் போரா என்றால் (Telugu: బొర్రా) தெலுங்கில் மூளை என்று பொருள். ஒரிய மொழியில் போரா என்றால் துளை என்று பொருள். குஹலு என்றால் குகை என்று பொருள். இந்தியாவின் பெரிய குகைகளில் ஒன்றாகக் கருதப்படும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகைகளாவும் கருதப்படுகிறது. இதன் நீளம் 200 மீ. ஆகும். இந்தக் குகைகள் 2 கி.மீ. தூர அளவுக்குப் பரந்து விரிந்துள்ளன. நுழைவாயிலோ 100 மீ. அகலமும், 75 மீ. உயரமும் கொண்டது. இக்குகையினுள்ளே ஒருவரால் 350 மீ. தூரத்திற்குப் பயணம் செய்ய (Trekking) இயலும்.

இந்த இயற்கைக் குகைக்கனிமப் படிவுகள் (Speleothems) நாட்டின் மிகப்பெரிய ஸ்டலக்டைட் (Stalactite) மற்றும் ஸ்டலக்மைட் (Stalagmite) படிவங்களால் ஆன குகைகள் ஆகும். “Speleothems” என்றால் குகைக்கனிமப் பதிவு என்று பொருள். Spēlaion என்ற கிரேக்க வார்த்தைக்கு “குகை’ என்று பொருள். “Thema” என்ற சொல்லுக்குப் படிமம் (Deposit) என்று பொருள். குகைக்கனிமப் படிவு (Speleothem) என்ற சொல்லை ஜி.டபிள்யூ. மூர் (G.W. Moore). (1952) என்ற அறிஞர் அறிமுகப்படுத்தினாராம்.  இந்தப் பதிவு இத்தொடரின் மூன்றாவது பதிவு ஆகும். இத்தொடரின் இரண்டாம் பதிவு , முதற் பதிவு ஆகியவற்றையும் பார்க்கவும்.

borra-caves_1

பொது தகவல்

  1. இருப்பிடம்: அனந்தகிரி மலைத்தொடர் 800 முதல் 1300 மீ Mean Sea Level
  2. ஊர்: போரா (English: Borra; Telugu: బొర్రా)  ஆனந்தகிரி மண்டல், விசாகபட்டணம் மாவட்டம். பின் கோடு:   531149.
  3. அமைவிடம்:   18°10′N அட்சரேகை 83°0′E தீர்க்கரேகை
  4. கடல் மட்டத்திலிருந்து:  705 மீ. (2,313 அடி) உயரம்
  5. போரா குகைகள்:  ஒரு காலப் பகுதியில் ஏற்பட்ட வற்றாத நீரோட்டத்தால் இந்தக் குகைக்கனிமப் படிவு தோன்றியது. இந்தக் குன்றுகளிலிருந்து  சிறிய நீரோடைகள் கோஸ்தானி  ஆற்றை நோக்கிப் பாய்ந்தன. இது இந்தியாவின் பெரிய குகையும் ஆழமான குகையும் ஆகும்.
  6. எப்படி தோன்றியது?;   தண்ணீரில் உள்ள ஹுயுமிக் அமிலம் சுண்ணாம்புப் பாறையில் உள்ள கால்ஷியம் கார்பனேட்டுடன் வேதிவினை புரிந்தது. இதனால் கனிமங்கள் கரைந்து பாறை உடைந்து போயிற்று. (கீழே யூடுயுப் விடியோ தரும் விளக்கம் பார்க்கவும்)
  7. குகை உருவாக்கம்:   கரிஸ்டிக் சுண்ணாம்பு கட்டமைப்புகள் (Karstic Limestone Structures) மூன்று நிலைகளில் (Levels) அமைந்துள்ளது. இவை நுழைவாயில் (Entrance), அந்திக்கருக்கல் (Twilight) மற்றும் இருண்ட (Dark) பகுதிகள் (Zones) ஆகும்.
  8. கண்டு பிடித்த ஆண்டு:  கி.பி. 1807 ஆம் ஆண்டு
  9. கண்டு பிடித்தவர்:  வில்லியம் கிங் ஜார்ஜ் (பிரிட்டிஷ் புவியியலாளர்)
  10. குகை பரப்பளவு (நிலம்):  2 சதுர கி.மீ (0.8 சதுர மைல்)
  11. குகை ஆழம்:  80 மீ. (26௦ அடி); நீளம் 200 மீ.
  12. குகை நுழை வாயில்: 100 மீ (330 அடி) கிடைமட்டமாக மற்றும் 75 மீ (246 அடி) செங்குத்தாக

சுற்றுலாத் தகவல்                                                      

  1. இங்கு செல்வதற்கேற்ற பருவம்: நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்
  2. தொலைவு: விசாகபட்டணம் 90 கி.மீ; விசாகபட்டணம் விமானநிலையம் 76 கி.மீ.; விசாகபட்டணம் இரயில்நிலைய சந்திப்பு 90.5 கி.மீ. அரக்கு நகர் 36.6 கி.மீ. போரா இரயில் நிலையம் 1 கி.மீ.
  3. நேரம்:  காலை 1௦.00 மணி முதல் மாலை 5.௦0 மணி வரை (மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை உணவு இடைவேளை)
  4. பார்வையிட: 2 முதல் 3 மணி நேரம் ஆகலாம். பயணிகள் 6.00 வரை   பயணிகள் குகையினுள் இருக்க அனுமதிக்கிறார்கள்.
  5. கட்டணம் பெரியவர்:ரூ. 1௦௦/- குழந்தைகள் ரூ. 6௦/-
  6. ஒளிப்படம்: கேமரா (டிஜிட்டல் / ஸ்டில்) ரூ. 1௦௦/- செல் ஃபோன் ரூ. 25/-
  7. விடியோ: ரூ. 1௦௦/-

borra-caves-vishakapatnam-1

borra_caves

குகைக்கனிமப் படிவம்: புவியியல் உருவாக்கம்

போரா குகைகள் முழுக்க முழுக்கச் சுண்ணாம்புப் பாறைகளால் கொண்ட சுண்ணாம்புக்கரட்டால் (Karstic Limestone structures) உருவாகியுள்ள குகைக்கனிமப் படிவு ஆகும். இந்தச் சுண்ணாம்புக்கரட்டில், சுண்ணாம்புக்கல் (limestone), டோலோமைட் (dolomite), ஜிப்சம் (gypsum) போன்ற கரையக்கூடிய கனிமங்கள் உள்ளன. இந்தக் குகைளின்  இட அமைப்பியல் (topography) பூமியின் கீழே பல நூறு அடிகள் பரந்து விரிந்து காணப்படுகின்றன.

கரைந்துருகும் கால்ஷியம் கார்பனேட் வேதிவினைகள் (Calcium Carbonate Dissolution Reactions) காரணமாகக் குகைக்கனிமச் சுண்ணாம்பு பாறைப்படிவுகள் (Calcareous speleothems) உருவாகின்றன. இதுவரை உலகெங்கும் இவை போன்ற 319 வேறுபட்ட குகைக்கனிமப் படிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது போன்ற இயற்கைக் குகைகள் அமெரிக்காவின் டெக்சாஸிலும். ஸ்லோவாக்கியாவின் டெமநோவ்ஸ்காவிலும், பிரேசிலின் குருடா டோ ஜனிலாவ்விலும் (Gruta do Janelao), தாய்லாந்தின் தம் சாவ் ஹின்னிலும் (Tham Sao Hin), மலேசியாவின் வொண்டர் குகை குனுங் முலுவிலும் (Wonder Cave, Gunung Mulu) இந்தியாவின் மேகாலயாவிலும் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற்றின் தொன்மையை எப்போதும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளில் குறிப்பிடப்படுகிறார்கள்.

கோஸ்தானி ஆறு

கோஸ்தானி (கோ = பசு; ஸ்தானி = பால்மடி; பசுவின் பால்மடி என்று பொருள்) ஆறு கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஆனந்தகிரி மலையில் உருவாகி போரா குகைகளின் அடிவாரத்தை  வந்தடைவதை குகை வாயிலிலிருந்து பார்ப்பது கண்கொள்ளாக்காட்சியாகும். போரா குகையிலிருந்து பெருகும் கோஸ்தானி ஆறு ஒரிஸா மாநிலம் வரை பாய்ந்து சென்று கடலில் கலக்கிறது.

valley_borracaves_eastern_ghats_visakhapatnam

இடையர்கள் கோஸ்தானி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது பசு ஒன்று வழி தவறி போரா குகைக்குள் சென்றதாம். இடையர்கள் பசுவைத் தேடிச் சென்றபோது இந்தக் குகையைக் கண்டுபிடித்ததாக ஒரு கதை உண்டு. இங்கிலாந்து நாட்டின் புவியியல் நிபுணரான வில்லியம் கிங் என்பவர் கடந்த 1807 ஆம் ஆண்டு இக்குகைகளைக் முறையாகக் கண்டுபிடித்தார்.

மூன்று நிலைகளில் போரா குகைகள்

தொடர்புடைய படம்

போரா குகைகள் மூன்று நிலைகளில் பரந்து விரிந்துள்ளன. நுழைவுப் பகுதி (Entrance Zone),  குறைவான ஒளி புகும் (அந்திக் கருக்கல்) பகுதி (Twilight Zone), இருண்ட பகுதி (Dark Zone) என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றுள் குகையின் நடுவில் உள்ள குறைவான ஒளி புகும் பகுதிகளை மட்டும் பொதுமக்கள் சென்று பார்க்க அனுமதியுண்டு.

OLYMPUS DIGITAL CAMERA

குகையின் சில தாழ்வான பகுதிகளும் மேடான இடத்தில் உள்ள இருண்ட பகுதிகளும்  சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்கும் அளவிற்குப் பாதுகாப்பானதல்ல. தாழ்வான பகுதி கோஸ்தானி ஆற்றுடன் இணைவதால் இங்கு செல்வது ஆபத்தானது.  இப்பகுதியின் பழங்குடிமக்கள் இக்குகைக்குச் சிவராத்திரி தினத்தன்று வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்த தினத்தில் குகையின் பல பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கிறார்கள்.  குகையின் நுழைவாயில் பரந்து அகன்றுள்ளது. நீங்கள் குகையின் பரந்து விரிந்த பரப்பைக் காணும்போது குகையினுள் உள்ள சுற்றுலாப் பயணியர்  சின்னஞ் சிறிய குள்ளர்களாகத் தோன்றுவது வியப்பிலும் வியப்பு. இந்த மொத்தக் குகைப் பரப்பும் சிவன் கோவில் என்ற எண்ணம் ஏற்படும் வண்ணம் சிவ இலிங்கங்களையும் இரண்டு நந்தி கற்சிலைகளை நுழைவாயில் அருகே நிறுவியுள்ளார்கள்.

ENVIRONMENTAL CONDITIONS OF BORRA CAVE, VISAKHAPATTANAM, INDIA க்கான பட முடிவு

Light zones of the Cave The Cave is basically Karstic limestone PC: Research Gate

ஸ்டலக்டைட் (Stalactite) – ஸ்டலக்மைட் (Stalagmite)  ஸ்பீலோதெம் (Spelothem) :

ENVIRONMENTAL CONDITIONS OF BORRA CAVE, VISAKHAPATTANAM, INDIA க்கான பட முடிவு

General Outline Related to Formation of Borra Cave PC: Research Gate

பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்போது போரா குகைகள் உள்ள நிலப்பரப்பில் சுண்ணாம்புப் பாறை அடுக்குகள் தோன்றின. இங்கு கோஸ்தானி ஆறு பாய்ந்து சென்றது. காலப்போக்கில் தண்ணீர் மட்டம் குறைந்துவிட்டது. ஆற்று நீர் கரியமில வாயுவை (Carbon dioxide)  உட்கொண்டு ஹ்யூமிக் அமிலத் தன்மையுடைய  தண்ணீராக மாறியது. ஹ்யூமிக் அமில நீர் சுண்ணாம்புப் பாறையைக் கரைத்து வெடிப்புகளை ஏற்படுத்தின. இந்த வெடிப்புகள் குகைகளாக உருவாகினவாம். விரிசல் மென்மேலும் விரிந்து பல நூறு கி.மீ. பரப்பளவில் குகைகள் விரிந்து பரந்தன.

மேலும் ஹ்யூமிக் அமில நீர் சுண்ணாம்புப் படிமப் பாறையின் மீது மோதி, மோதி, உராய்ந்து, உராய்ந்து ஏற்பட்ட வேதிக் கிரிகைகளால் ஸ்டலக்டைட் (Stalactite), ஸ்டலக்மைட்  (Stalagmite) என்று இரண்டு இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாயின.

borra_cave

ஸ்டலக்டைட் என்பது தொங்குபனி (icicle) போன்ற வடிவத்தில் உருவாகி குகை விதானத்திலிருந்து தொங்கியபடி காணப்படுகின்றன. இவை கால்ஷியம் பை கார்பனேட் மற்ற கனிமங்கள் சேர்ந்த கனிமநீர் குகை விதானதிலிருந்து கசிந்து (Percolate) மழைத் தூறல்  போன்று சொட்டுச் சொட்டாக வடிந்தமையினால் உருவாயின. பெரும்பாலான ஸ்டலக்டைட்கள் ஊசிமுனை போன்ற வடிவங்களைக் கொண்டுள்ளன.

borra_caves_vizag

ஸ்டலக்மைட் என்பது குகைத் தளத்திலிருந்து மேல்நோக்கி திட்டாக (Mound) வளர்ந்த கால்ஷியம் பை கார்பனேட் மற்றும் சில கனிமப் படிவம் ஆகும் (Upward-growing mound of mineral deposits). இந்தத் திட்டுக்கள் (Mounds) குகைகளின் தளத்தில் கனிமநீர் சொட்டுச் சொட்டாகக் கசிந்தமையினால் (Percolate) உருவாயிற்று. பெரும்பாலான ஸ்டலக்மைட்கள் வட்டமான அல்லது தட்டையான முனைகளைக் கொண்டுள்ளன. குகையின் நடுப்பகுதியில் மனித மூளையின் வடிவில்  ஸ்டலக்மைட் திட்டுக்கள் (Human Brain shaped Stalagmite Mounds) உருவாகியுள்ளது இயற்கையின் கொடை எனலாம்.

borra_caves_42c_vizag28india29

இந்த ஸ்டலக்டைட், ஸ்டலக்மைட் கனிமப் படிவங்களுக்கு குகைக்கனிமப் படிவம் (Speleothem) என்று பெயர்.  இந்தக் குகைக்கனிமப் படிவங்கள் அனுபவமிக்கச் சிற்பிகள் உளிகொண்டு செதுக்கிய சிற்பங்கள் போல காட்சியளிப்பது வியப்பிலும் வியப்பு. இங்கு வரும் மக்கள் குகைக்கனிமப் படிவங்களைப் பார்த்து பலவித உருவங்களைக் கற்பனை செய்வது வாடிக்கை. சிவன் – பார்வதி, வயதான சூனியக் கிழவியின் முகம், பிசாசுகள், மனித மூளை, முதலை, காளான் குடைகள், கோபுரம் போன்று பல தோற்றங்களைக் கற்பனை செய்து கொள்கின்றனர்.

borra_caves_vizag_ap_-_panoramio_28229

தற்போது நாம் காணும் இந்த Spelothem கள் இந்த நிலைக்கு வருவதற்குப் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும் என்பது வியப்பான செய்தி. தற்போது கூட வளர்ந்து கொண்டிருக்கும் இந்த Spelothem வடிவங்கள் எளிதில் உடையக்கூடியது. என்பது பலருக்கும் வியப்பான செய்தியாகும். இந்த வடிவங்கள் உடைந்துவிட்டால் மேலும் வளர்ச்சி அடையாது என்பதால் இவற்றிற்கு அதிக பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

ஆந்திரப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாந்தவியலாளர்கள் (Anthropologists) இங்கு அகழ்வாய்வு மேற்கொண்ட போது, 30௦௦௦ முதல் 50000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும், இடைநிலைப் பழங்கற்காலத்தைச் (middle Paleolithic period) சேர்ந்த கற்கருவிகளை (Stone Tools) கண்டெடுத்துள்ளார்கள். இந்தக் கண்டெடுப்பு இப்பகுதியில் 30௦௦௦ முதல் 50000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் வாழ்ந்ததற்கான அறிகுறியாகும்.

இக்குகையின் மேலேயே கொத்தவலச – கிரந்துல் இருப்புப் பாதையை (கே.கே இருப்புப் பாதையை) கிழக்குக் கடற்கரை இரயில்வேத் (East Coast Railway) துறையினர் அமைத்தது வியப்பிலும் வியப்பாகும். இன்றும் இந்தக் குகையின் மீதே கிரந்துல் பாசஞ்சர் இரயில் சென்று வருகிறது. இதன் மூலம் இந்தக் குகைதளத்தின் வலிமை புலப்பட்டும்.

குறிப்புநூற்பட்டி

  1. அமிலம் செதுக்கிய அழகிய குகைகள் தினமலர் அக்டோபர் 18, 2016 http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33874&cat=1360&Print=1
  2. கலைக்கூடங்களாகும் குகைகள் தினமலர் ஆகஸ்டு 11, 2012 http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11704&cat=23&Print=1
  3. Borra Caves Eco India http://www.ecoindia.com/caves/borra.html
  4. Cave Formations (Speleothems) Jenolan Caves https://www.jenolancaves.org.au/about/limestone-cave-geology/cave-formations-speleothems/
  5. Environmental Conditions of Borra Cave, Visakapattanam, India. Haraprasad Bairagya. Academia.edu
  6. Stalactites hang from the ceiling of a cave while stalagmites grow from the cave floor. Ocean Explorer https://oceanexplorer.noaa.gov/facts/stalactite.html
  7. The World’s 16 Most Incredible Caves https://www.flightnetwork.com/blog/16-worlds-incredible-caves/
  8. What’s the difference between stalactites and stalagmites? John Fuller How Stuff Woks https://science.howstuffworks.com/environmental/earth/geology/stalactite-stalagmite1.htm

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in குகைகள், சுற்றுலா and tagged , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா 3: போரா குகைகள்

  1. ஸ்ரீராம் சொல்கிறார்:

    குகைகளின் பழைமை, அப்போதே மனிதர்கள் அங்கு வாழ்ந்திருப்பதற்கான தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன. நுண்ணிய தகவல்கள் வழக்கம்போல. மிகவும் சுவாரஸ்யமாகவே படித்தேன். இந்தத் தகவல்களை வேறு தளத்தில் மேலோட்டமாகப் படித்திருக்கிறேன்.

    இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

    Liked by 1 person

  2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    வியப்பூட்டும் தகவல்கள் ஐயா
    எந்தப் பயண வசதியும் இல்லாத அக்காலத்தில் எப்படி இங்கு மக்கள் வாழ்ந்திருப்பார்கள், ஓரிடம் விட்டு வேறிடத்திற்கு எப்படிப் பயணித்திருப்பார்கள் என்று நினைத்தாலே வியப்பாகத்தான் இருக்கிறது ஐயா

    Liked by 1 person

  3. குகைகள் பற்றிய விடயம் பிரமிப்பாக இருக்கிறது.

    இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் நண்பரே

    Liked by 1 person

  4. Dr B Jambulingam சொல்கிறார்:

    இயற்கையும், ஆன்மீகமும் இணையும்போது….மனதிற்கு நிறைவுதான். இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.