மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும்

மதுரா அரசு அருங்காட்சியகம் (Mathura Government Museum) மதுரா கலைமரபைச் (Mathura School of Arts) சேர்ந்த பண்டைய சிற்பங்களுக்குப் புகழ்பெற்றது. இஃது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய அருங்காட்சியகம் ஆகும். குஷான வம்சத்தவர்களின் (Kushan Dynasty) (கி.பி. 1 – 2 ஆம் நூற்றாண்டு) மதுரா கலை மரபைச் சேர்ந்த தொல்பொருட்கள், மிகப்பெரிய அளவில், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் இந்த அருங்காட்சியகத்தின் அரிய சேகரிப்புகள் ஆகும். சுடுமண் பொம்மைகள் (Terracota Images), பண்டைய மண்பாண்டங்கள் (Ancient Pottery), களிமண் முத்திரைகள் (Clay Seals), ஓவியங்கள் மற்றும் பல பொருட்களை இங்கு காணலாம்.

கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஏகமுக சிவலிங்கம், புத்தரின் தலை, கனிஷ்கரின் தலையற்ற உருவம், விருக்ஷா தேவி, யக்ஷி போன்ற குஷானர் காலத்துச் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தின் விலைமதிப்பற்ற காட்சிப் பொருளாகக் கருதப்படுகிறன. தொன்மைமிக்கத் தாய் தெய்வத்தின் சிற்பமும் (Archaic Mother Goddess), சுங்க வம்சத்தினர் (Sunga Dynasty) காலத்தைச் சேர்ந்த தட்டுகளும் (Plaques of the Sunga period) இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புக் காட்சிப் பொருட்கள் ஆகும். எனவே இந்த அரசு அருங்காட்சிகம் மதுராவில் கண்டிப்பாகக் காண வேண்டிய சுற்றுலாத் தலம் ஆகும்.

மதுரா அரசு அருங்காட்சியகம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டம், மதுரா நகர் பின் கோடு 281001, டாம்பிர் நகர் (Dampier Nagar), சௌபே பாரா, மியூசியம் சாலையில் அமைந்துள்ளது. மொத்த அருங்காட்சியகமும், பெரிய அளவில், எண்கோண வடிவில் மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அருங்காட்சியகங்களின் இரத்தினம் (Gem of Museums) என்று கருதத்தக்க இந்த அருங்காட்சியகம் பொதுமக்களால் அதிகம் அறியப்படாத ஒன்று எனலாம். நீங்கள் இதைத் தவறவிட வாய்ப்பே இல்லை. என்றாலும் மதுராவில் நீங்கள் இந்த அருங்காட்சியகம் பற்றிப் பொதுமக்களைக் கேட்டால், பெரும்பாலும், தெரியாது என்றுதான் சொல்லுவார்கள். ஒருவேளை சில வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும். மதுரா சுற்றுலாப் பயண நிரலில், இப்பகுதியின் மிக பழமையான பொக்கிஷங்களைப் போற்றிப் பாதுகாக்கும்,  இந்த இடம் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை.

அமைவிடம்

government_museum_-_mathura_2013-02-23_5014

மதுரா அரசு அருங்காட்சியகம் PC: விக்கிபீடியா

மதுரா நகரைச் சுற்றியுள்ள இடங்களிலில் அகழ்வாய்வு நிகழ்ந்தபோது கண்டறியப்பட்ட (சேகரிக்கப்பட்ட) தொல்பொருட்களைப் பாதுகாத்துக் காட்சிப்படுத்துவதற்காக மதுரா அரசு அருங்காட்சியகம் 1874 ஆம் ஆண்டில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் மற்றும் நீதிபதியாகப் பணியாற்றிய சர். எஃப். எஸ். கிரௌஸ் (Sir F.S Growse) என்பவரால் நிறுவப்பட்டது. ஆர்வமிக்க தொல்பொருள் நிபுணரான இவர் மதுராவைச் சுற்றிலும் உள்ள பல்வேறு மேடுகளை (Mounds) ஆராய்ந்து  பண்டைக்காலப் புத்தர் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்களைக் கண்டறிந்தார்.

இந்த அருங்காட்சியகம் ராஜிய சங்ரஹாலயா (Rajiya Sangrahalaya), கர்சன் தொல்லியல் அருங்காட்சியகம் (Curzon Museum of Archaeology) ஆகிய பெயர்களிலும் அறியப்பட்டது. இந்திய அரசு (Government of India) 1947 ஆம் ஆண்டில் ஒரு தபால் தலையை வெளியிட்டு இதன் தொடக்க நாளை கொண்டாடியது.

archaeology_gallery_-_corridor_-_government_museum_-_mathura_2013-02-24_6516

மதுரா அரசு அருங்காட்சியகம் காட்சிக் கூடம் PC: விக்கிபீடியா

mathuramuseum5

பண்டைய நகரான மதுரா முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் அமைவிடம் 27°27′N அட்சரேகை 77°43′E தீர்க்கரேகை ஆகும். கடல் மட்டத்திலிருந்து 177 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும், டில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து பிருந்தாவனம் 11 கி.மீ தொலைவிலும், கோவர்த்தனம் 22 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரா சந்திப்பு இரயில் நிலையம் இந்நகருக்கு அருகில் உள்ளது.

மதுரா கலை மரபு (Mathura School of Art)

புள்ளிகளுடன் கூடிய சிவப்புநிற மணற்கற்களைப்  பயன்படுத்தியது மதுரா கலைமரபின் சிறப்பியல்புகளின் ஒன்று எனலாம். இந்துக் கடவுளர்கள், சமணத் தீர்த்தங்கரர்கள், புத்தர் ஆகியோரின் மணற்கல் சிற்பங்களும் சிற்பத் தொகுப்புகளும் இந்த  சிவப்புநிற மணற்கற்களாலேயே செதுக்கப்பட்டன.

mathura travel

யக்ஷி PC: 10 Year ITCH

பண்டைய வழிபாடுகளில் இடம்பெற்றிருந்த  யக்ஷன் (Yaksha), யக்ஷி (Yakshi) போன்ற தெய்வங்களின் மிகப்பெரிய சிலைகள் இப்பகுதியில் வடிக்கப்பட்டன. இந்தச் சிலைகள் மிகப்பெரிய அளவிலோ (Giant size) அல்லது மனித வடிவளவிலோ  (Life size) செதுக்கப்பட்டன. அதிக எடைகொண்ட இந்த உருவங்களை மக்கள் தொழுது பணிந்தார்கள். இங்கு கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த குஷான மன்னர் கனிஷ்கரின் தலையின்றிக் காணப்படும் உடல் முண்டப்பகுதிச் சிற்பமும்  (Headless Torso of Kushan king),  கனிஷ்கர் காலத்திய புத்தரின் தலைப்பகுதிச் சிற்பமும், விரிக்ஷா தேவியின் (வனப்பெண்) சிற்பத் துண்டும், விஷ்ணுவின் சிலையும், தலையைச் சுற்றி ஒளிவட்டம் பொருந்திய புத்தரின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டுச் சிற்பமும்  புகழ்பெற்ற மதுரா கலை மரபின் படைப்புகளாகும்.

பண்டைய அரசுகளின் கலை மரபுகள் (School of Art of Ancient Dynasties)

இந்த அருங்காட்சியகம், மௌரியர், சுங்கர், குஷானர் மற்றும் குப்த பேரரசர்களின் ஆட்சி காலங்களான கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12 நூற்றாண்டு காலங்களுக்கு உட்பட்டதும்,  மதுரா கலை மரபைச் சேர்ந்ததும், வளமிக்கதும், மிக முக்கியமான தொல்பொருட்களின் தொகுப்பாகும்.

காலவரிசை (Chronology)

புத்தர்: கி.மு. 563  to கி.மு. 483
மகாவீரா:  கி.மு. 599  to கி.மு. 527
மௌரியா: கி.மு. 325  to கி.மு. 184
சுங்கா: கி.மு. 184  to கி.மு. 72
க்ஷஹரதா சாட்ராப்ஸ் (Kshaharata Satraps): C. கி.மு. 100 to கி.மு.  57
சுங்கர்களின் மறுமலர்ச்சி காலம் (Revival of the Sungas): கி.மு. 57  to C. கி.மு. 20
குஷானர்கள்: கி.பி. முதல் நூற்றாண்டு கி.பி. 300 வரை .
குப்தர்கள்: கி.பி. 320  to கி.பி. 600
முன் இடைக்காலம் (Early Mediaval) C. கி.பி. 600  to கி.பி. 900
பின் இடைக்காலம் (Late Mediaval): C. கி.பி. 900  to lகி.பி. 200

சர். எஃப். எஸ். கிரௌஸ் (Sir F.S Growse), அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் (Alexander Cunningham) மற்றும் ஃப்யூரர் (Fuhrer) போன்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் காலனித்துவத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் (British Colonial Archaeologists) கண்டறிந்த சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள், கட்டடக்கலை துண்டுகள், பொறிக்கப்பட்ட செங்கற்கள், மண்பாண்டங்கள், களிமண் முத்திரைகள் (Clay Seals), ஓவியங்கள், பழைய நாணயங்கள், கல்வெட்டுகள், மற்றும் பல தொல்பொருட்களும் பெரிய அளவில் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் 6000 கற்சிலைகள், 400 ஓவியங்கள், 3000 சுடுமண் சிலைகள் (Terracotta Figures), 350 உலோகச் சிலைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இவை பல்வேறு மதங்களையும் மத நம்பிக்கைகளையும் சார்ந்தவைகளாகும்.

four_fold_jain_image_with_suparshvanath_and_three_other_tirthankaras_-_circa_1st_century_ce_-_accn_00-b-67_-_government_museum_-_mathura_2013-02-24_6023

சுபர்சுவநாதர் மற்றும் மூன்று தீர்த்தங்கரர்களின் சிற்பம், கிபி 1ம் நூற்றாண்டு PC: விக்கிபீடியா

four-armed_seated_vishnu_in_meditation_-_mediaeval_period_-_pannapur_-_accn_14-379_-_government_museum_-_mathura_2013-02-23_5275

தியான நிலையில் நான்கு கைகளுடன் கூடிய விஷ்ணுவின் சிற்பம் PC: விக்கிபீடியா

சாஞ்சி ஸ்தூபியின் துல்லியமான பிரதிகளை (Exact Replicas) இங்கு காணலாம். புத்தரின் வாழ்வில் இடம்பெற்ற பல கதைகள் சிற்பத் தொகுப்புகளாக (Sculptural Panels) ஆகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்களில் புத்தரை மனித வடிவளவுகளில் (Anthropomorphic Representation of Buddha) காட்டாமல் குறியீட்டு வடிவிலேயே பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர் (Symbolic Representation). ஜதகா கதையில் இடம்பெற்ற புத்தருக்கு முந்தைய வடிவங்களையும் சில சிற்பத் தொகுப்புகள் சித்தரிக்கின்றன. சமணத் துறவிகள் தவக்கோலத்தில் சிதரிக்கப்பட்டுள்ளனர். சிவனுடன் பார்வதி, கணேசன், கார்த்திகேயன், விஷ்ணுவின் அவதாரங்கள்  ஆகிய இந்துக் கடவுளர் வடிவங்களும் காணப்படுகின்றன. சூரியனின் பல்வேறு உருவமைப்புகள் ஒரு தொகுப்பில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். மற்றொரு தொகுப்பில் பல்வேறு தோற்றங்களில் பெண்கள் பல்வேறு புராணக் கதைகளைச் சித்தரிக்கிறார்கள். பெரிய கற்பாத்திரங்கள் இங்கு உள்ளன.

mathura travel

புத்தர் வெண்கலம் PC: 10 Year ITCH

இங்குள்ள சிற்பங்களில் விரிவான தலையலங்காரங்கள் மற்றும் வசீகரமான உடைகள் போன்ற தனித்துவங்கள் உற்றுக் கவனிக்கத்தக்கன. அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு அலங்காரங்கள் சிந்திக்க வைக்கின்றன. தற்காலத்தில் இவை எல்லாவற்றையும் சிறிது சிறிதாக இழந்துவிட்டோம்.

சிவப்புநிற மணற்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மதுரா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வட்டவடிவ மைய முற்றத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைக்கூடத்தில் சில சிதிலமடைந்த  சிலைகளும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. வெளியே அமைந்துள்ள புல்வெளியில் வேறு சில சிவப்பு நிறச் சிலைகள் புல்லின் பச்சை நிறத்திற்கு முரணாகக் காணப்படுகின்றன.

ஒரே பகுதியில் கண்டறியப்பட்ட, பல்வேறுவகைப்பட்ட சிறப்புகளுடைய, தொல்பொருட்களின் சேகரிப்பு மையமாக இந்த அருங்காட்சியகம்  திகழ்கிறது. இப்பகுதியின் சிறப்புப் பற்றி ஆய்வு நடத்துவதற்கு உகந்த ஆதார மையமாகவும் இது திகழ்கிறது.

இருப்பிடம்: அருங்காட்சியகம் சாலை,  டாம்பிர் பார்க் (Dampier Park), டாம்பிர் நகர் (Dampier Nagar), சௌபே பாரா, மதுரா, உத்தரப் பிரதேசம், 281001,
தொலைபேசி: 0565 2500847
சுற்றிப்பார்க்கும் நேரம்:  காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை  (திங்கள் விடுமுறை)
கட்டணம்: பெரியவர் ரூ. 5/- சிறியவர் ரூ. 2/- அயல்நாட்டினர் ரூ. 25/- புகைப்படம் எடுக்க ரூ. 20/-

குறிப்புநூற்பட்டி

  1. அரசு அருங்காட்சியகம், மதுரா  விக்கிப்பீடியா
  2. Government Museum Parampara http://www.paramparaproject.org/institution_govt-museum-mathura.html
  3. Museum Mathura Vrindavan http://www.mathura-vrindavan.com/mathura/museum.htm
  4. Museums in Mathura Indian Holiday https://www.indianholiday.com/tourist-attraction/mathura/museums-in-mathura/
  5. Mathura Museum https://10yearitch.com/india-travel-tour/uttar-pradesh/mathura-museum-archaeological/
  6. Priceless artefacts hidden away from tourists’ eyes Shona Adhikari The Tribune https://www.tribuneindia.com/2002/20020818/spectrum/travel.htm

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to மதுரா அரசு அருங்காட்சியகமும் மதுரா கலை மரபும்

  1. ஒரே கல்லில் வடித்த சிலை நான்கு முகங்களோ…. அழகு விடயங்கள் வழக்கம் போல் அருமை

    Liked by 1 person

  2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    1874 லிலேயே அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப் பட்டக் கலைப் பொக்கிசங்களக்காக ஒரு அருங்காட்சியகத்தை, நம்மை ஆண்டு ஆங்கிலேயர்கள் உருவாக்கி இருக்கிறார்கள், ஆனால் நாம் நம் மண்ணில் கண்டுபிடிக்கப் படும் பொருட்களைப் பாதுகாக்க வழி இல்லாமல் திண்டாடுகிறோம்
    வேதனை ஐயா

    Liked by 1 person

    • முத்துசாமி இரா சொல்கிறார்:

      உண்மைதான் நம்முடைய அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களில் சிலவற்றை மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளோம். பெரும்பாலானவை என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. கீழடியில், அழகன்குளத்தில் கிடைத்த தொல்பொருட்கள் எங்கு உள்ளன? இவற்றை எப்படிப் பாதுகாப்பது? லைப்ரரி செஸ் போல மியூசியம் செஸ் கூட தேவைதானோ? கருத்திற்கு நன்றி ஐயா..

      Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.