கிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள்

ஆந்திரப் பிரதேச மாநிலம், எஸ்.பி.எஸ்.ஆர் நெல்லூர் மாவட்டம், முதுக்கூர் மண்டலில், வங்கக் கடற்கரையை ஒட்டி, அமைந்துள்ள சிறு கிராமம் கிருஷ்ணபட்ணம் (Telugu: కృష్ణ పట్నం) பின் கோடு 524344 ஆகும். இவ்வூர் தனியாரால் கட்டமைக்கப்பட்டுத் தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணபட்ணம் துறைமுகம் ஆகும். Krishnapatnam Port Company Limited (KPCL) என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் இத்துறைமுகம், ஆழமிக்கதும் எல்லாப் பருவநிலைகளுக்கும் ஏற்றதுமான துறைமுகம் ஆகும்.

இந்தக் கிராமம், ஒரு காலத்தில் பன்னாட்டுத்  துறைமுகபட்டணமாகத் திகழ்ந்தது என்பதை நம்புவது சற்று கடினம்தான். தூர கிழக்கு நாடுகள் (far-eastern) மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் நிலைபெற்றிருந்த பேரரசுகளுடன் (south-eastern Asian empires) விரிவான வணிகம் மேற்கொண்ட  பன்னாட்டு வணிகர் குழுவினரின் (International Merchant-Guilds) துறைமுகப்பட்டணமாகக் கிருஷ்ணபட்ணம் விளங்கியது என்பது சற்று வியப்பான செய்திதான். இவ்வூரில் சித்தேஸ்வரருக்கு  அர்ப்பணிக்கப்பட்ட, கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. மனும சித்தேஸ்வரம் (Manuma-Siddhisvaram) என்ற பெயருடன் இக்கோவில் திகழ்ந்துள்ளது.

அமைவிடம் 

இவ்வூரின் அமைவிடம் 14.283°N அட்சரேகை 80.117°E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 5 மீ (16 அடி) ஆகும். இவ்வூர் நெல்லூருக்குத் தென்கிழக்கில் 26 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து  180 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. நெல்லூர் (Telugu: నెల్లూర్) – முட்டுக்குறு (Telugu: ముట్టుకుఱు) சாலை வழியாக இந்த ஊருக்குச் செல்லலாம். கூடூர் – நெல்லூர் இருப்புப் பாதை வழியில் உள்ள வேங்கடாசலம் இரயில் நிலையத்திலிருந்து (Venkatachelam railway station) இவ்வூர் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி  இவ்வூரின் மக்கள் தொகை 5686 (ஆண்கள்  2815 பெண்கள் 2871, மொத்த வீடுகள் 1722) ஆகும்.

இந்தத் துறைமுகத்தின் வரலாறு விஜயநகரப் பேரரசரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயருடன் தொடர்புடையது. இம்மன்னர் இத்துறைமுகதிற்குத் தன் பெயரை வைத்துப் பயன்படுத்தியுள்ளார். தற்போது தனியார் துறைக்குச் சொந்தமான பெரிய துறைமுகமாக விளங்குகிறது. 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி முதல் செயல்படும் இந்தத் துறைமுகம் ஸி.வி.ஆர் குழுமத்திற்குச் சொந்தமானது.

இவ்வூரில் ஸ்ரீ ருக்மணி பாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீ காமாக்ஷி சமேத ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமி கோவில் ஆகிய இரண்டு பழமையான கோவில்கள் உள்ளன. கடற்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ காமாக்ஷி சமேத ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமி கோவில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஐந்நூற்றுவர் வணிகக்குழு

ஐந்நூற்றுவர் என்போர் 8 – 13 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே தமிழகத்தில் வணிகம் மேற்கொண்ட புகழ்பெற்ற வணிகக் குழுவினர் ஆவர். ஐந்நூற்றுவர் தெய்வமாக ஐயபொழில்புரத்து பரமேச்வரி பட்டாரகி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறாள். ஐந்நூற்றுவர் என்பார் ஐயபொழில்புரத்தைச் சேர்ந்த ஐந்து நூறு கோமான்கள் (Five Hundred Lords of Ayyavalepur) என்றும் ஐயபொழில்புரத்தைச் சேர்ந்த ஐந்து நூறு சுவாமிகள் (Five Hundred Swamis of Ayyavalepur) என்றும் கல்வெட்டுகள் வழியாக இவர்கள் அறியப்பட்டனர்.  இவர்கள் கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த, கி.பி 10 மற்றும் கி.பி 12 நூற்றாண்டுகளுக்கிடையில் மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த, ஐஹோளே (Aihole) என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர்.

ஐந்நூற்றுவர் தங்கள் உறுப்பினர்களைப் பல்வேறு மதம் மற்றும் இனப்பிரிவுகளிலிருந்து சேர்த்தனர். ஐந்நூற்றுவர்களுக்குள்ளே தேசிகள் (உள்நாட்டு வணிகர்கள்) பரதேசிகள் (வெளிநாட்டு வணிகர்கள்) என்று பல்வேறு துணைப் பிரிவுகள் இருந்தன. இந்த வணிகக் குழுக்கள் தங்களுக்கென்று கடுமையான சாசனங்களையோ (Charter) சட்டங்களையோ (laws) அல்லது அமைப்பு விதிகளையோ (bye-laws) இயற்றிக்கொள்ளவில்லை. அவ்வப்போது பல்வேறு நிகழ்விடங்களில் (Venues) (பெரும்பாலும் கோவில் மண்டபங்களில்) ஏற்பாடு செய்து தேவைக்கேற்ப கூட்டப்பட்ட (Convened) ஐந்நூற்றுவர் வணிகர் குழுவின் கூட்டங்களின் நடவடிக்கைகள் (Proceedings of the Meetings), மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் (Resolutions Passed), எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் (Actions Taken) போன்ற வரலாற்றுச் செய்திகளை மெய்கீர்த்தியுடன் கல்வெட்டுகளாகப் பதிவு செய்தனர்.

தங்கள் குழுவில் இடம்பெற்ற வணிக உறுப்பினர்களுக்கு ஐந்நூற்றுவர் குழுவினர், அரசியல் மற்றும் பொருளாதார அளவிலான பாதுகாப்பினை (Political and Economic Protection) அளித்தனர். வணிகப் பயணங்களின்போது, இக்குழுவில் இடம்பெற்ற ஆயுதம் தாங்கிய வணிகர் படைப் பிரிவினர் (Armed Forces Division), வணிகச் சாத்துக்களுக்கும் (வணிகப் பொருட்கள்) வணிகர்களுக்கும் பாதுகாப்பளித்தனர். இவ்வாறு பாதுகாப்பளித்த வணிகப் படைவீரர்கள் தங்களை வீரவளஞ்சியர் (தெலுங்கு: வீரபலிஜா) என்று அழைத்துக்கொண்டனர். நானாதேசி, பதினெண் விஷயம் / பதினெண் விஷயத்தார் (பதினெட்டுப் பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள்), பதினெண்பூமி (பதினெட்டுப் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள்) ஆகிய விருதுப் பெயர்களால் தங்களை அழைத்துக்கொண்டனர். “ஐந்நூற்றுவர், பதினெண் விஷயத்தார், பதினெண்பூமி, நானாதேசி ஆகியவை ஒரே அமைப்பின் பெயர்களே என்று நாம் நம்பலாம்  மக்கள் எந்தப் பெயரை விரும்பினார்களோ அதைப் பயன்படுத்தினர்.

“அறம் வளர கலி மெலிய” போன்ற தொடர்கள் வணிகர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அறம் வளர்ப்பதும் கலி (காலத்தின்) இன்னல்களை மட்டுப்படுத்தவும் வணிகர்கள் அறச்செயல்களைச் செய்ய முற்பட்டனர். சோழர்கள் காலத்தில் கோவில்கள் சமுதாய / பொருளாதார மையங்களாக முக்கியத்துவம் பெற்றன. பல கல்வெட்டுகள் கோவிலுக்கு வணிகர்கள், தங்கள் இலாபத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, அளித்த பொன் மற்றும் பொருட்கொடை பற்றிப் பதிவு செய்துள்ளன. பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் வணிகர்கள் பல கோவில்களுக்கு மிகுந்த ஆதரவு நல்கினர். கோவிலிலிருந்து  இவர்களுக்குப் பல உரிமைகள் அளிக்கப்பட்டன.

ஐந்நூற்றுவர் கர்நாடக மாநிலத்தின் ஐஹோளேயிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது. ஐந்நூற்றுவர் பற்றிய செய்தி முதன்முதலில் கி.பி. 800 ஆம் ஆண்டுத் தேதியிட்ட ஐஹோளே கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஐஹோளே வணிகக் குழு (ஐந்நூற்றுவர்) பிராமணர்களின் தீர்மான அடிப்படையில் தோன்றியுள்ளதாக வரலாற்று ஆய்வாளர் ஆர்.செண்பகலட்சுமி கருதுகிறார். நோபுரு கராஷிமா இக்கருத்தை சந்தேகிக்கிறார். ஐஹோளேயை அடுத்து, தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்ட கி.பி. 927 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, இந்த வணிகக் குழுவினரை “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்” என்ற பெயரில் குறிப்பிடப்பிடுகிறது. தமிழகத்தில் இந்த வணிகக்குழு குறித்து முதலில் கண்டறியப்பட்ட கல்வெட்டு இதுவாகும். “திசை ஆயிரம்” என்பது ஆயிரம் திசைகளிலும் பயணித்து வணிகம் புரிந்தோரின் குழு. ஆகும். பத்தாம் நூற்றாண்டிற்கும் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கர்நாடகத்திலும் தமிழகத்திலும் ,தென்கிழக்கு ஆசியாவிலும் (இந்தோனேஷியா (சுமத்ரா), தாய்லாந்து மியன்மார்) ஐந்நூற்றுவர் குறித்துப் பல கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஐந்நூற்றுவர் கல்வெட்டுகளை நோபுரு கராஷிமா இரண்டு விதமாகப் பிரித்து ஆய்ந்துள்ளார்: 1. எறிவீரப்பட்டணம் கல்வெட்டுகள்“வணிகர்களும் படை வீரர்களும் வாழ்ந்த ஒரு நகரத்துக்கு ஏறிவீரபட்டணம் என்ற தகுதியை வழங்க வணிகர்கள் எடுத்த முடிவை இத்தகைய கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன.” 2. “பட்டணப் பகுடி” கல்வெட்டுகள்“வணிகர்கள் தங்கள் இலாபத்திலிருந்து ஒரு பகுதியை கோயில் திருவிழாக்கள்   திருப்பணிகள் ஆகியவற்றிற்கு வழங்க எடுத்த முடிவைப் பதிவு செய்கின்றன.”

“பட்டணப் பகுடி” என்பதற்கு “நகரின் பங்களிப்பு” என்று பொருள்.” கோவில் திருவிழாக்கள் திருப்பணிகளுக்கு வேண்டிய நிதியினைத் திரட்ட குறிப்பிட்ட மையங்களிலிருந்து (துறைமுகப்பட்டணங்கள், பட்டணங்கள்) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதும் அந்தப்பகுதியின் ஊடே செல்லும் பொருட்களின் மீதும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் வரிகளை விதித்தனர். பிரான்மலைக் கல்வெட்டு (S.I.I. VIII 442) வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலையும் இவற்றிற்கு விதிக்கப்பட்ட வரிவிகிதங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. “நானாதிசைகளிலுமுள்ள பதினெண் விஷயத்தார் சபையில் அங்கம் வகிக்கும் குழுக்களின் முழுமையான பட்டியலை” பிரான்மலைக் கல்வெட்டுப் பதிவு செய்கிறது.

ஐந்நூற்றுவர் வணிகக் குழுக்களைச் சேர்ந்த அறுபத்துநான்கு பேர் சர்க்கார் பெரியபாளையம் (திருப்பூர் மாவட்டம்) சுக்ரீஸ்வரர் (கொங்கில் குரக்குத்தளி) கோவிலில் கூடி “குரக்குத்தளி நாயனாருக்கு வைகாசித்திருவிழா எடுக்க”   முடிவு செய்து அதற்குத் தேவையான நிதிக்காக ஏற்றுமதி, இறக்குமதி, தலைச்சுமை போன்ற பொருட்களுக்கு வரி (சுங்கம்) விதிக்க முடிவு செய்தனர். இந்த 64 வணிகர்களும் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்துக் கைசாத்து (கையொப்பம்) இட்டுள்ளனர். கொங்குச்சோழன் வீரராசேந்திரன் காலத்தை சேர்ந்த, குரக்குத்தளி ஆளுடையா நாயனார் கோவில் அர்த்த மண்டப வடக்கு சுவரில் பதிவு செய்யப்பட்ட சர்க்கார் பெரியபாளையம் வணிகக் கல்வெட்டு இது பற்றிய விரிவான செய்தினைப் பதிவு செய்துள்ளது.

ஐந்நூற்றுவர் கல்வெட்டுகள் ஐந்நூற்றுவர்களைப் பற்றிய மெய்கீர்த்தியுடன் தொடங்குவது சிறப்பு. மெய்கீர்த்தியில் இடம்பெறும் “பஞ்ச சத வீர சாசனம்” என்ற தொடர் மூலம் ஐந்து நூறு (ஐநூறு) சாசனங்கள் இருப்பதாகப் புகழ்ந்து கொள்கிறார்கள். ஐந்நூற்றுவர் என்ற பெயர் பெற்றது விளக்கும் தொடர் இதுவெனலாம். வீரபணஞ்சு தர்மத்தைக் (வணிகர்களின் அறம் மற்றும் சட்டதிட்டங்கள்) காப்பவர்களாக இவர்களைச் சித்தரிக்கிறது. ஐஹோளேயின் பரமேஸ்வரர்களான ஐந்நூற்றுவர் 18 பட்டணம், 32 வேளாபுரம், 64 கடிகைத்தாவளம் ஆகிய இடங்களில் வணிகம் புரிந்தது பற்றியும் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. இவற்றுள் பட்டணம் என்ற சொல் நாகப்பட்டனம், கிருஷ்ணபட்ணம் ஆகிய துறைமுகப் பட்டணங்களைக் குறித்தன. வேளாபுரம் என்பது துறைமுகத்தை அடுத்து அமைந்துள்ள பகுதியாக இருக்கலாம். கடிகைத்தாவளம் என்பது காவலோடு கூடிய நிலையான சந்தையையுடைய வணிகநகராக இருக்கலாம். இவ்விடங்களில் தேவைக்கேற்ப ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரத்தையும் வரிவசூல் செய்யும் அதிகாரத்தையும் பெற்றிருந்தனர். ஐந்நூற்றுவர் அமைப்பில் இடம்பெற்றிருந்த பிற வணிககக் குழுக்கள் பற்றிய பட்டியலும் கல்வெட்டுகளில் இடம்பெறுகிறது. ஐந்நூற்றுவர் கல்வெட்டுகளில் மன்னர்களின் பெயர்களைக்கூடக் குறிப்பிடவில்லை. மன்னன் இவர்களுக்கு அளித்திருந்த தன்னாட்சி அதிகாரம் இதன் மூலம் புலனாகிறது.

நெல்லூர் தெலுங்குச் சோழர்கள் 

நெல்லூர் என்னும் விக்கிரமசிம்மபுரத்தைத் (Vikramasimhapura)  தலைநகராகக் கொண்டு, தற்காலத்து மாவட்டத்தின்   நெல்லூர், சித்தூர், கடப்பா மற்றும் செங்கல்பட்டுப் பகுதிகளை, நெல்லூர் தெலுங்குச் சோழர்கள் (பொத்தப்பிச் சோழர்கள்) ஆண்டு வந்தனர். இவர்கள் காகதீயர்களின் குறுநில தலைவர்களாக விளங்கினர். கரிகாலச் சோழர்களின் வழிதோன்றலாக இவர்கள் கூறிக்கொண்டனர். தெலுங்குச் சோழ மன்னன் டிக்கா (கி.பி. 1223–1248) நாட்டின் எல்லையைத் தெற்கே காவிரி ஆற்றங்கரை வரை விரிவுபடுத்தினார். டிக்காவின் புதல்வர் இரண்டாம் மனுமசித்தி (Manumasiddhi II) என்ற வீர கண்டகோபாலன் (கி.பி. 1248–1263) ஆட்சியில் இப்பகுதி போர்க்களமாயிற்று. இவர் காலத்தில் நெல்லூர் தெலுங்குச் சோழர்களின் ஆட்சி சற்று வலுவிழந்தது.

கி.பி.  1270 ஆம் ஆண்டில், நெல்லூர் தெலுங்குச் சோழ மன்னன் இரண்டாம் மனும சித்தி (Nellore Chola King Manuma Siddhi) காலத்தில் இந்த இரண்டு கோவில்களும் புதுப்பிக்கப்பட்டதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது. இரண்டாம் மனும சித்தியின் அரசில் கவிஞர் மற்றும் அமைச்சராகப் பணியாற்றிய டிக்கனா  சோமையாஜி (Tikkana Somayaji) இக்கோவில் புனரமைப்பில் பெரும்பங்கு ஆற்றியுள்ளதாகக் கோவில் அர்ச்சகர் குடலி சுப்பா ராவ் சர்மா கூறியுள்ளார். இப்பகுதியில் பௌத்தம் வழக்கொழிந்து சைவமும் வைணவமும் தலைதூக்கிய காலத்தில் கோவில்கள் புனரமைக்கப்பட்டன.

ஸ்ரீ காமாக்ஷி சமேத ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமி கோவில்

An over-view of the ancient Siddeswara swamy temple at Krishnapatnam village in Nellore district. (Photo: DC)

கிருஷ்ணபத்னம் கிராமத்தில் உள்ள பழங்கால சித்தஸ்வரா சுவாமி கோவிலின் தோற்றம் PC: டெக்கான் குரோனிக்கிள்

இக்கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், மூலவரை மனும சித்தேஸ்வரர் என்றும் கோவிலை மனும சித்தேஸ்வரம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. கருவறையில் மூலவர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

krishnapatnam temple க்கான பட முடிவு

பிற்காலத்தில் இக்கோவிலின் கட்டமைப்புகள் பலவித மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளன. கருவறை முன்பு தூண்களுடன் ஒரு மண்டபத்தைக் காணலாம். இந்தத் தூண்களில் இந்திரன், அக்கினி, வாயு, வருணன் ஆகிய தமிழ்க் கடவுள்களின் புடைப்புச் சிற்பங்கள் தங்களுக்குரிய வாகனங்களில் அமர்ந்து காட்சி தருவது சிறப்பு.

krishnapatnam temple க்கான பட முடிவு

PC: Mana Temples,net

இக்கோவிலில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு கல்வெட்டுகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. இவற்றுள் ஒன்று கோவில் நுழைவாயில் அருகே இடப்புறத்தில் ஒரு பலகைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் இராஜேந்திரன் என்னும் வீரராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்ததாக இக்கல்வெட்டுக் கருதப்படுகிறது. கொல்லந்துறையான கண்டகோபாலப் பட்டணம் ஊரவர் மற்றும் பதினெண்பூமி சமஸ்த பரதேசிகள் சந்தத்திரை பிள்ளையார் கோவிலில் உள்ள நானாதேசி திருக்காவனத்தில்  கூடினர். தங்கள் வருமானத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை ஒதுக்கி மனும சித்தேஸ்வரம் உடைய நாயனாரின் பூசைக்காக அறக்கொடையாக அளிப்பதென்று தீர்மானித்தனர். இரண்டாம் மனுமசித்தி என்னும் வீர கண்டகோபாலன் என்ற  நெல்லூர் தெலுங்குச் சோழன் பெயரால் இக்கோவில் மூலவர் மனுமசித்தேஸ்வரர் என்றும் கோவில் மனுமசித்தேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

மங்களம் ஆகட்டும். சக வருஷம் 1201 க்கு நிகரான கி.பி. 1279 ஆம் ஆண்டு, திரிபுவன சக்ரவர்த்தி ஸ்ரீ இருமதி திருக்காளத்தி தேவரின் (இப்பகுதியின் குறுநிலத் தலைவன்) இரண்டாம் ஆண்டில்

கொல்லித்துறையன் என்னும் கண்டகோபால பட்டிணத்து நாடு நகர, மலைமண்டலத்து அஞ்சுவண்ண வணிகர்கள், 18 நாடுகளின் வெளியே உள்ள அனைத்து வணிகர்களும், ஆகிய ஐந்நூற்றுவன்களாகிய நாங்கள் மண்டபத்திலே கூடி எடுத்த முடிவு:

மீன மாதம் (பங்குனி) பட்சத்து 10 ஆம் நாளில் அமுது படைக்கவும், கோவிலைப் புனரமைக்கவும், இந்த நகரத் துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் சரக்குகளின் மதிப்பில் 1/4  சதவிகிதம் வரித்தொகையை முதலாக அளிப்பதாகத் தீர்மானித்தோம்.

நாடு நகரம், மலைமண்டலத்து அஞ்சுவண்ணம் வணிகர்கள் மற்றும் நானாதேசி பதினெண்பூமி சமஸ்த பரதேசிகா, சிவ பக்தர்கள்   ஆகிய எங்கள் ரட்சை.

மற்றொரு பலகைக்கல் கல்வெட்டு கோவிலின் நுழைவாயிலின் வலப்புறம் உள்ள சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது. சக வருஷம் 1201 ஆம் ஆண்டு (கி.பி. 1279 ஆம் ஆண்டு) திரிபுவனச் சக்ரவர்த்திகள் இருமடி திருக்காளத்தி தேவரின் இரண்டாம் ஆண்டு ஆட்சியில் இந்தத் தமிழ் கல்வெட்டு (ARE 78 of 1963-64) பொறிக்கப்பட்டுள்ளது. அஞ்சுவண்ண வணிகர், நாடு நகரம் மற்றும் மலைமண்டலத்துப் பதினெண்பூமி சமஸ்த பரதேசிகள், கொல்லித்துறை என்னும் கண்டகோபால பட்டிணத்து ஊரார் அனைவரும் கோவிலில் அமைந்துள்ள ஐந்நூற்றுவர் திருக்காவணத்தில் முழுமையாக வருகை தந்து கூடினர். கிருஷ்ணபட்ணம் துறைமுகத்தைக் கடந்து செல்லும் சரக்குகளின் மதிப்பில் 1/4 சதவிகிதம் வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மனும சித்தீஸ்வரம் உடையாரின் பூசைக்காகவும் அமுது படைக்கவும், கோவில் புனரமைப்புப் பணிகளுக்கும் ஒதுக்குவதாக ஒரு மனதாகத் தீர்மானித்தார்கள்.

இந்த இரண்டு கல்வெட்டுகளையும் இணைத்துப் படிக்கும்போது கிருஷ்ணபட்ணம் என்னும் கொல்லித்துறை துறைமுகப் பட்டணத்திலிருந்து கணிசமான அளவிற்குக் கடல் வணிகம் நடைபெற்றுள்ளது தெரியவருகிறது. இந்தத் துறைமுகத்திற்கு நெல்லூர் தெலுங்குச் சோழ மன்னன் வீரகண்டகோபாலன் பெயர் சூட்டப்பட்டுக் கண்டகோபாலபட்டணம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகத்தில் கட்டப்பட்ட மனும சித்தேஸ்வரம் கோவிலில் அமைந்திருந்த ஐந்நூற்றுவர் திருக்காவணத்தில் பல்வேறு வணிகர் குழுவினர் ஒன்றாகக் கூடி வணிகப் பரிவர்தனைகளைச் செய்துகொண்டனர். வணிகம் மற்றும் துறைமுக நிர்வாகத்தின் விதிகள் மட்டும் கட்டுப்பாடுகள் பற்றியும் இந்த வணிகக் குழுவினர் விவாதித்து முடிவெடுத்துள்ளனர்.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட கல்வெட்டில் (in ARE 78 of 1963-64) இடம்பெறும் ஐந்நூற்றுவர் திருக்காவணம் என்ற மண்டபத்தில் வணிகர் குழுக்கள் கூடி விவாதங்களை நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலில் அழகுறச் செதுக்கப்பட்ட தூண்களுடன் கூடிய மண்டபத்தையே இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது எனலாம். இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் வணிகர் குழுக்களின் பெயர்களில் அமைந்த மண்டபங்களின் பெயர்களைக் கொண்டு இவர்கள் இந்த மண்டபங்களைக் கட்டியிருக்கலாம் அல்லது கட்ட உதவியிருக்கலாம் என்று புலனாகிறது. இந்தக் கோவில் மற்றும் முன்புறத்தில் அமைந்துள்ள மண்டபம் எல்லாம் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆய்வாளர்கள் காலக்கணிப்பு செய்துள்ளனர். கருவறை பல மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளதும் புலனாகிறது.

இந்தக் கோவில் நிலத்தை ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ரூ. 40 கோடி கொடுத்து விலைக்கு  வாங்கிக் கொண்டார்கள். தற்போது இந்தத் தொகை வங்கியில் வட்டியுடன் ரூ. 70 கோடியாகப் பெருகியுள்ளது. என்றாலும் ஸ்ரீ சித்தேஸ்வரர் கோவிலின் மதில் சுவர்களும் வாகனங்களும் மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன.

குறிப்புநூற்பட்டி

  1. இந்தியப் பெருங்கடலிலும் தென்கிழக்காசியாவிலும் தென்னிந்திய வணிகச் சங்கங்கள் நோபுரு கராஷிமா. பக். 156 -182; நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை: தென்கிழாக்காசியாவில் சோழர்களின் கடற்பயணங்கள். ஹெர்மன் குல்கே, விஜய் சகுஜா, கேசவபாணி, கே. (தொகுத்தோர்) இன்ஸ்டிட்யூட் ஆஃப் சவுத்ஈஸ்ட் ஏஷியன் ஸ்டடீஸ் 2011. 387 பக்கங்கள்
  2. பழந்தமிழ் வணிகர்கள் சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள். கனகலதா முகுந்த். தமிழில்: எஸ்.கிருஷ்ணன். கிழக்குப் பதிப்பகம். 2016. 160 பக்கங்கள்.
  3. பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரி: சுக்ரீஸ்வரர் கோவில் கல்வெட்டில் தகவல். தினமலர் ஆகஸ்டு 24, 2015
  4. Champakalakshmi, P., 1996, Trade Ideology and Urbanization: South India 300 BC to AD 1300, Oxford University Press, New Delhi, p. 196
  5. Constructing Community: Tamil Merchant Temples in India and China, 850 – 1281. Risha Lee, Ph.D Thesis. Columbia University. 2012 p.319
  6. Krishnapatnam Wikipedia
  7. Later Chola Temples S.R.Balasubramaniam. 1979
  8. Merchant Guilds and Overseas Trade in the Medieval Tamil Country. Selvi. P. in History of People and Their Environs: Essays in Honour of Prof. B.S. Chandrababu. Ganeshram, S and Bhavani, C. Ed. Bharathi Puthakalayam, 2011 – 767 pages
  9. Nellore Chodas Wikipedia
  10. Quality issue raised in renovation of temples in Nellore. Deccan Chronicle.  Feb 7, 2018 https://www.deccanchronicle.com/nation/in-other-news/070218/quality-issue-raised-in-renovation-of-temples-in-nellore.html
  11. Siddeswaralayam. Nellore Temples. Mana Temples.net http://manatemples.net/Pages/AP_NLE_Krishnapatnam.htm
  12. Temples in Krishnapatnam Widom Library

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தொல்லியல், மேலாண்மை, வரலாறு and tagged , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to கிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள்

  1. Vaidyanathan Ramamurthy சொல்கிறார்:

    ஆந்திர மாநிலத்தின் பல அறிய கோவில்களைப் பற்றி தொடர்ந்து பதிவுகள் செய்து வரும் உங்கள் சீரிய தொண்டுகளுக்கு ஏந்து மனமார்ந்த பாராட்டுகள்.இந்த கோவிலுக்கு கூடிய விரைவில் தரிசனம் செய்ய முயலுகிறென்.நன்றிகள் பல.

    Liked by 1 person

  2. பலவகையான தகவல்கள் பிரமிக்க வைக்கிறது நண்பரே

    Liked by 1 person

  3. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    தங்களின் ஒவ்வொரு பதிவும் வியக்க வைக்கின்றன ஐயா

    Liked by 1 person

  4. பிங்குபாக்: பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்: திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் கல்வெட்டு | அ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.