தமிழகத்தின் இரும்புக் காலம்: 1 சங்க இலக்கியத்தில் இரும்பு எஃகு தொழில் நுட்ப அறிவு

மனித நாகரீகத்தின் முன்னேற்றத்தை கற்கால நாகரீகத்திலிருந்து உலோக கால நாகரீகத்திற்கு (Iron Age Civilization) நகர்த்திய உலோகங்களில் இரும்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கொஞ்சம் இரும்புத் தாது நெருப்பில் விழுந்து உருகிக் குளிர்ந்து கட்டி இரும்பான (Wrought Iron) போது  ஆதிமனிதனால்  இந்த உலோகம் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் நினைக்கிறார்கள். இரும்பு இவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியது உண்மை. இரும்பினால் செய்யப்பட்ட  செய்யப்பட்ட ஆயுதங்களும் கருவிகளும் திறம்படப் பயன்பட்டன.

ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தைப் பழைய கற்காலம் (கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்), புதிய கற்காலம் (கி.மு. 10,000 – கி.மு. 4,000 வரை) எனப் பிரித்தார்கள்.  புதிய கற்கால நாகரீகதிற்குப் பிறகு உலோககால  (பொற்காலம், செம்புக்காலம், இரும்புக்காலம்) நாகரீகம் தோன்றியது.

தமிழகத்தில் கி.மு. 500 ஆம் ஆண்டளவில் இரும்பு அறிமுகமாகியிருக்கலாம். கொடுமணல், மேல்சிறுவலூர், குட்டூர், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு  போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் தமிழகத்தின் இரும்புக் காலகட்டத்தை வரையறை செய்ய உதவுகின்றன. சங்க இலக்கியம் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் தமிழகத்தில் இரும்புத் தொழில்துறை செழித்தோங்கியது பற்றியும் ரோம் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இரும்பும் எஃகும் ஏற்றுமதியானது குறித்தும் பதிவு செய்துள்ளன. பண்டைய ரோமானிய ஆவணங்கள் சங்ககாலத்துத் தமிழகத்தின் சேர நாட்டிலிருந்து எஃகு இறக்குமதி செய்யப்பட்டது குறித்தும் பதிவு செய்துள்ளன. இது தமிழகத்தின் இரும்புக் காலம் பற்றிய இரண்டு பதிவுகள் கொண்ட தொடர் ஆகும்:

தமிழகத்தின் இரும்புக் காலம்: 1 சங்க இலக்கியத்தில் இரும்பு எஃகு தொழில் நுட்ப அறிவு
தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்

இத்தொடரின் முதல் பதிவு இதுவாகும்.

crucible steel க்கான பட முடிவு

சொல் தோற்றம்

தமிழர்கள் குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களைப் பொன் அல்லது மாழை என்னும் சொற்களால் குறித்தனர். “Metal” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேராகத் தமிழில் பொன் என்ற சொல் பயன்பட்டது. எடுத்துக்காட்டு: தூண்டில் பொன் மீன் விழுங்கியற்று – (திருக்குறள். அதிகாரம் சூது குறள் எண் 931); அரம் பொருத பொன் போலத் தேயும் – (திருக்குறள். அதிகாரம் உட்பகை குறள் எண் 888) இந்தக் குறள்களில் இடம்பெறும் பொன் என்ற சொல் இரும்பைக் குறிப்பனவாகும்.  சுடச்சுடரும் பொன்போல் – (திருக்குறள். அதிகாரம் தவம். குறள் எண் 267) இங்கு பொன் என்பது தங்கத்தைக் குறிக்கும்.

பொன் என்பது ஒளிர்விடும் ஒருவகை உலோகம் ஆகும். பொன் என்பது அரிதாகக் கிடைக்கும் உலோகம். பொன்னை உருக்கி நகை செய்யும் தொழிலாளர்கள் பொற்கொல்லர், கம்மியர், தட்டார் என்றும் பெயர் பெற்றிருந்தனர். எ.கா: “மாண உருக்கிய நன்பொன் மணியுறீ” (கலித்தொகை 117). பொன்னை நெருப்பினில் உருக்கி அதனுள் மண்வைத்து கலை நயத்துடன் அணிகலன்கள் செய்தனர். வெளிர் நிறத்தில் பளபளப்பாக ஒளிர்ந்த உலோகத்திற்கு வெண்பொன் (வெள்ளி) என்று பெயரிட்டார்கள். சிவப்பேறி இருந்த உலோகத்திற்குச் செம்பு என்று பெயரிட்டார்கள்.

இதன் பின்னர்த் தான் இரும்பைப் பற்றித் தெரிந்து கொண்டனர். கருமையான நிறத்துடன் இருந்த பொன் கரும்பொன் என்றே முதலில் அழைக்கப்பட்டது. எ.கா: கரும்பொ னியல்பன்றி (சீவகசிந்தாமணி. 104): உலையினில் கரும்பொன் புகுத்து உமியொடு கரியும் – சீறாபுராணம்: 970:  கரும்பொன், இரு+பொன் “இரும்பொன்” என்று பொருளிலும் அழைக்கப்பட்டது. எ.கா: இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் (அகநானூறு 199: 19); இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில் திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில் (சம்பந்தர் தேவாரம் திருவீழிமிழலை. 1.82). இரு என்ற சொல் பெரிய என்று பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எ.கா: “நளி யிரு முந்நீர்” என்ற சொற்றொடருக்கு பெருங்கடலின் நடுப்பகுதி என்று பொருள். இருங்கடல் என்றால் பெருங்கடல். இரும்பொன் என்றால் பெரும்பொன். பெரிய பயன்பாடு உடைய பொன். இரும்பு என்று பொருள். பூமியில் இஃது அதிக அளவில் கிடைக்கும், உலோகங்களுள் ஒன்று ஆகும்.

ரிக் வேதத்தில் அயஸ் (अयस्) என்ற சொல்லால் உலோகம் குறிப்பிடப்படுகிறது. கருப்பு அயஸ் (இரும்பு), சிவப்பு அயஸ் (செம்பு) போன்ற சொற்களும் உள்ளது. இந்தி மொழியில் உலோகம் (लोहा) என்ற சொல்லுக்கு நேரான பொருள் பொன் என்ற தமிழ்ச் சொல் ஆகும். வாஜஸனேயி சம்ஹிதையில்  (Vājasaneyi Samhitā) அயஸ், தங்கம் (ஹிரன்யா hiranya), அயாஸ், சியாமா (Syāma), லோகா (Loha), ஈயம் lead (சிசா sīsa), வெள்ளீயம் tin (டிராபு trapu) ஆகிய ஆறு உலோகங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கே சியாமா Syāma (‘swarthy’) மற்றும் லோஹா (‘சிவப்பு’) என்பது முறையே ‘இரும்பு’ மற்றும் ‘தாமிரத்தைக்’ குறிப்பனவாகும்.  அதர்வணவேத ஸ்லோகங்கள் மற்றும் பல வேதாந்த நூல்களில் அயஸ் என்ற சொல் அயஸ் (இரும்பு) லோஹிதா (செம்பு)  ஆகிய இரண்டு இனங்களாகப் பிரித்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க: ayas अयस् Sanskrit Dictionary )

சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ் சித்தர்கள் தத்துவ நெறியிலும், சித்த மருத்துவத் துறையிலும் பல நூல்களை இயற்றியுள்ளனர். இவர்கள் இரும்பை, இரும்பொன், அயம் என்ற இரு பெயர்களில் குறித்தனர். இரசவாதத்தில் இரும்பு தாழ்ந்த உலோகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் தான் இயற்றிய போகர் 7000 என்ற நூலில் ஆறு வகை இரும்புகள் பற்றி ஒரு செய்யுளில் வகைப்படுத்தியுள்ளார்.  கர லோகம், கரஞ்ச லோகம், ஓநாள லோகம், தாரபட்ட லோகம், பசார லோகம், காள லோகம் ஆகிய ஆறுவகை இரும்பின் பண்புகள் பற்றியும் தனித்தனியாகச் செய்யுள்கள் இயற்றியுள்ளார்.

சித்த மருத்துவ முறையில் இரும்பு சத்து நிறைந்த மூலிகைகளையும் இரும்பாகிய உலோகத்தையும் பயன்படுத்திச் செந்தூரம், பஸ்பம் போன்ற மருந்துகளைத் தயாரிப்பது வழக்கம். சித்த மருத்துவர்கள் இந்த மருந்துகளை நோயாளிகளின் தேவைக்கேற்ற அளவுகளில் (Dosage) கொடுப்பதுண்டு. இரும்பை சித்தர்கள் கருந்தாது என்று அழைக்கின்றனர். இந்தக் கருந்தாதின் மூலம் குணமாகும் நோய்கள் ஒரு செய்யுளில் பட்டியலிடப்பட்டுள்ளது:

பாண்டு வெண் குட்டம் பருந்தூல நோய் சோகை
மாண்டிடச் செய் மந்தங்கா மாலை குன்மம் – பூண்டே
பெருந்தாது நட்டமும் போம் பேதி பசி யுண்டாங்
கருந்தாது நட்டமிடுங்கால்

இலத்தீன் மொழியில் பெர்ரம் (Ferrum) என்றால் இரும்பு என்ற கடினத் தன்மைமிக்க உலோகம் என்று பொருள்  இரும்பைக் குறிக்கும் அயர்ன் (Iron) என்ற ஆங்கிலச் சொல் “iren” என்ற இடைக்கால ஆங்கில வேரிலிருந்து வந்ததாகத் தெரிகிறது. (Ref: Merriam Webster Dictionary)

இரும்பின் பண்புகள் (Properties of Iron)

இரும்பு (Latin: Ferrum (வேதியியல் குறியீடு: Fe) பத்தாவது அதிகம் கிடைக்கும் தனிமம் ஆகும். இந்தத் தனிமத்தின் பண்புகள்:

அணு = எண் 26; அணு நிறை (Atomic mass) = 55.85 g.mol -1′; மின்னெதிர்தன்மை = 1.8 பாலிங் (Pauling) அளவையில்; அடர்த்தி (Density) = 7.8 g.cm-3 at 20°C; உருகு நிலை (Melting point) = 1538 °C (2800 °F; 1811 K); கொதி நிலை (Boiling point) = 2861 °C; வான்டெர்வால்ஸ் (அணு) ஆரம் (Vanderwaals radius) = 0.126 nm; அயனி ஆரம் (Ionic radius) = 0.076 nm (+2) ; 0.064 nm (+3); ஐசோடோப்புகள் (Isotopes) = 8; அணு ஷெல் (Electronic shell) = [ Ar ] 3d6 4s2; மின்மமாக்கும் ஆற்றல் (Energy ionisation): 1வது = 761 kJ.mol -1; 2வது = 1556.5 kJ.mol -1; 3வது = 2951 kJ.mol -1′ ; தரநிலை ஆற்றல் (Standard potential) = – o.44 V (Fe2+/ Fe ) ; 0.77 V ( Fe3+/ Fe2+ )

இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1812 K, 3073 K ஆகும். இது வளையும் தன்மையும், மழுங்கும் இயல்பும் உடைய உலோகம் ஆகும். ஆக்சிஜனேற்றத்தால் (Oxidising) இதன்மேல் படியும் கறை துரு எனப்பட்டது. துருப்பிடிக்கும் தன்மை இரும்புக்கே உரிய பண்பு ஆகும். நிக்கல், குரோமியம், வனேடியம், டங்ஸ்டன். மாங்கனீசு, சிலிக்கான், கோபால்ட், மாலிப்டினம் போன்ற உலோகங்களை இரும்புடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து எஃகு (Steel), தேனிரும்பு (மாழை), வார்ப்பிரும்பு  போன்ற கலப்பு உலோகங்கள் உருவாக்கப்படுகின்றன.

அதிக வெப்பத்தைக் தாக்கும் திறன், உறுதித் தன்மை கொண்டிருப்பதால் தொழில்துறை தேவைகளில் முதலிடத்தில் உள்ளது. செம்பின் உருகுநிலை: 1,085 °C; கொதிநிலை: 2,562 °C ஆகும். இரும்பின் உருகுநிலை: 1,538 °C; கொதிநிலை: 2,862 °C  ஆகும். எனவே செம்பை உலையில் உருக்கி செய்யும் செம்புத் தொழில் நுட்பம் இரும்புத் தொழில் நுட்பதைவிட எளிது.

electron_shell_026_iron

Datei:Electron shell 026 iron

தொடர்புடைய படம்

Periodical Table

முதன்மை இரும்பு தாதுக்கள் ஹேமடைட் hematite (Fe2O3), மேக்னடைட் magnetite (Fe3O4), லிமோனைட் limonite (Fe2O3.H2O) மற்றும் சிடரைட் siderite (FeCO3) ஆகியவை ஆகும். பைரைட் pyrite (FeS2) மற்றும் இல்மெனைட் ilmenite (FeO.TiO2) போன்றவை பொதுவாக இயற்கையில் கிடைக்கும் இரும்புக் கலவைகள் (natural iron compounds) ஆகும்.

சங்க இலக்கியதில் இரும்பு, எஃகு தொழில் நுட்பம் பற்றிய செய்திகள்

தொல்காப்பியம் 

இரும்பு குறித்துப் பல தகவல்களைச் சங்க இலக்கியத்தில் காணலாம். தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. பொருளதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. இவற்றுள் ஒன்றான புறத்திணை இயல் புறப்பொருள் என்னும் .போர், வீரம், கொடை, புகழ், பிறப்பு, இறப்பு முதலிய சமுதாயப் புறச் செய்திகளைக் குறிப்பிடுகின்றது.

குடையும் வாளும் நாள்கோள் அன்றி
மடையமை ஏணிமிசை மயக்கமுங் கடைஇச்
(தொல்காப்பியம் புறத்திணை இயல் 71)

கணையும் வேலும் துணையுற மொய்த்தலிற்
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இருநிலந் தீண்டா அருநிலை வகையொடு
இருபாற் பட்டஒருசிறப் பின்றே.
(தொல்காப்பியம் புறத்திணை இயல் 71)

களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
வாளோர் ஆடும் அமலையும்-
(தொல்காப்பியம் புறத்திணை இயல் 72)

புறத்திணை இயலின் 71 மற்றும் 72 சூத்திரங்கள் வாள், வேல், கணை போன்ற படைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. இந்தப் படைக்கலன்கள் செய்யப்பட்ட உலோகம் எது என்பது பற்றிய குறிப்பு இல்லை. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் இரும்புக் காலத்தை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நிறுவியுள்ளது. தொல்காப்பியரின் காலம் கி.மு 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதால் இந்நூல் இரும்புக்காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம்.

சங்க இலக்கிய நூல்கள் 

சங்க இலக்கியத் தொகை நூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகியவை இரும்பு மற்றும் எக்குத் தொழில் நுட்பம் மற்றும் பயன்பாடு பற்றி நிறைய செய்திகளைப் பதிவு செய்துள்ளன. பொன், இரும்பொன், கரும்பொன், கருந்தாது, இரும்பு, எஃகு, கொல்லன், கருமைக் கொல்லன், உலை, உலைக்கூடம், உலைக்கல், துருத்தி, விசைவாங்கி, விசைத்து வாங்கு துருத்தி, மிதியுலை, ஊது குருகு, குடம், குறடு, குறுக்கு  போன்ற தொழில்நுட்பக் கலைச் சொற்கள் சங்க காலத்திலேயே இரும்பை உருக்கி எஃகாக உருமாற்றும் தொழில் நுட்பத் தெரிவு (Technical Knowhow) பற்றிச் சான்று பகர்கின்றன.

இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகந்தோறும்
வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந்தாது உதிர.
(நற்றினை 249: 1-4)

இந்தச் செய்யுளில் உலோகங்கள் பற்றிய முரண் உவமைகளாக அமைக்கப்பட்டுள்ளது. இரும்பு புன்னை மரத்தின் கரிய கிளைகளுக்கும்; நீலம் மரத்தின் பசுமையான இலைகளுக்கும்; வெள்ளி மரத்தின் இலைகளின் நடுப் பகுதியில் காணப்படும் நரம்புகளுக்கும், பொன் மரத்தின் நறுந் தாதுக்களுக்கும் உவமையாகப் பேசப்படுகிறது.

கொல்லர்

இரும்பை உருக்கி எஃகாக உருமாற்றி அதனைக் கொண்டு பல கருவிகளைச் செய்தோர். கொல்லர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களது தொழிற்கூடம் உலை என அழைக்கப்பட்டது. உலைக்கல், துருத்தி, சம்மட்டி, பட்டடைக்கல் போன்ற துணைக்கருவிகளும் இங்கு இருந்தன. வேளாண் கருவிகள், போர்க் கருவிகள் ஆகியவற்றை இவர்கள் உருவாக்கினர்.

இரும்பு செய் கொல் எனத் தோன்றும்
(அகநானூறு 72: 6; எருமை வெளியனார் மகனார் கடலானார்)

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
(புறநானூறு 312: 2; பொன்முடியார்)

கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது
(புறநானூறு 21: 7-8 ஐயூர் மூலங்கிழார்)

கரிய வலிமை வாய்ந்த கைகளையுடைய கொல்லனின் உலையில் கொழுந்து விட்டெரியும் செந்தீயில் பட்டு உருகிய இரும்பின் நீரை மீட்டெடுப்பது அரிது.

இரும்பு பயன்படுக்குங் கருங்கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொருஉம்
உலைக்கல் அன்ன வல்லாளன்னே.
(புறநானூறு 170: 15-17 உறையூர் மருத்துவன் தாமோதரனார்)

இரும்புத் தொழில் புரிவதால் கருத்து வலிவான கைகளை உடைய கொல்லன் தன் சம்மட்டியினை ஓங்கி வேகமாக ஓங்கி உலைக்கல்லின் (பட்டடைக்கல்லின்) மீது அடிக்கிறான். அந்த உலைக்கல்லைப் போல பிட்டங்கொற்றன் (குதிரைமலையை ஆண்ட குறுநிலத்தலைவன் ) வலிமையானவன்.

இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல்
கருங்கை வினைஞர் காதல்அம் சிறாஅர்
(பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனார் 222 – 223

கொல்லனுடைய மேனியின் கரிய நிறமும் மடிப்புகளற்ற தோலும் இரும்புத் தகட்டுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.

இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்
(அகநானூறு . மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் 172: 6

கொல்லனின் கைகள் இரும்புத் தகட்டிற்கு உவமைப் படுத்தப்பட்டுள்ளன.

எஃகு

எஃகு என்னும் உருக்கு (Steel) ஒரு கலப்பு உலோகம் ஆகும். இரும்புடன் கார்பன் என்னும் கரிமம் சேர்த்தபின்பு இதன் வலிமையும் வளையாத தன்மையும் குன்றாத தன்மையும் கூடும். மாங்கனீசு, நிக்கல், வனேடியம் போன்ற கனிமங்களும் சேர்க்கப்பட்டு வல்லிரும்பான எஃகு உருவாக்கப்படுகிறது. வேல் என்னும் ஆயுதத்தை எஃகு என்றே குறித்தனர்.

… … … …. ….. ….. ….. …. ,,, அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
(குறுந்தொகை 198)

ஒளிறு இலைய எஃகு ஏந்தி
(புறநானூறு 26 மாங்குடி மருதனார்)

போன்ற வரிகள் எஃகின் வலிமையை விளக்குகின்றன.

எஃகுடை எழில் நலத்து
(அகநானூறு 116)

எஃகுறு மாந்தரின் இனைந்துகண் படுக்கும்
(அகநானூறு 371)

எஃகு படை அறுத்த கொய் சுவற் புரவியொடு
பதிற்றுப்பத்து 62: 3. வென்றிச் சிறப்பு

எஃகில் செய்த படையால் (கத்தரியால்) கத்தரித்து ஒழங்கமைக்கப்பட்ட குதிரையின் பிடறி மயிர்

எஃகுடை வலத்தர்
(பதிற்றுப்பத்து 30; காக்கைபாடினியார் நச்செள்ளையார்)

என்று எஃகின் உறுதியையும் வலிமையையும் சங்க இலக்கியங்கள் வியந்து போற்றுகின்றன. எஃகின் வலிமைக்கு வேல் என்னும் போர்க்கருவியை உவமையாகக் கூறியுள்ளனர்.

கொல்லன் உலைக் களம்

1

கொல்லன் உலை க்கான பட முடிவு

புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் (அகநானூறு 81)

vologda_pto_museum_bellows_8

“இரும்பு ஊது குருகு” அகநானூறு 81 PC: Sergeev Pavel Wikipedia

அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் – அகநானூறு 96

கொல்லன் குருகு ஊது மிதி உலை (அகநானூறு 202)

இரை தேர் எண்கின் பகுவாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி
நல் அரா நடுங்க உரறி கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம்
(நற்றிணை 125)

old_bellow

கொல்லன் ஊதுலைக் குருகு மேற்கோள் பாடல் நற்றிணை 125 PC: Ciell Wikipedia

அகன்ற வாயையுடைய ஆண் கரடி தனக்கு வேண்டிய இரையை நாடுகிறது. வளைந்த வரிகளையுடைய புற்றைப் பெயர்த்து எறிகிறது. அப்போது அந்தப் புற்றில் வாழும் நல்ல பாம்பு பெரும் மூச்சுவிட்டுப் பயந்து நடுங்கியதை கொல்லன் ஊதுகின்ற உலை மூக்குப்போல உள்ளதாக உவமைப்படுத்தப்படுகிறது. ஆண்கரடி புற்றைப் பெயர்ப்பதை நிறுத்தி விடுகிறது.

காமுறு தோழி காதல் அம் கிளவி
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த
தோய் மடல் சில் நீர் போல 10
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே
(நற்றிணை 133: 8 – 11)

கொல்லனின் சூடான உலையில் பழுக்க இரும்பைக் காய்ச்சும் போது தண்ணீரைத் தெளித்துக் குளிர வைத்தது போல உன் இனிய சொற்கள் வலி நிறைந்த என் நெஞ்சிற்கு ஆறுதல் அளித்தது. பனை ஓலைக் காம்பில் செய்த கை விசிறியால் விசிறிக் குளிர்வித்தது போலவும் உள்ளது.

வல்லோன் அடங்கு கயிறு அமைப்பக் கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிராக்
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடைக்
கால் கடுப்பு அன்ன … …. …. …. ….
(அகநானுறு பெருந்தலைச் சாத்தனார் 224: 2 – 5)

தேரில் பூட்டப்பெற்ற குதிரைகள் கொல்லன் வலித்து இழுக்கும் துருத்தியைப் போல வெப்பமாகப் பெருமூச்சு விட்டன.

சங்ககால செந்நாக்குழி க்கான பட முடிவு

செந்நாக்குழி Smelting Unit PC: Wikimapia

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் செம்பாறங் கற்படுகையில் குழி அமைப்புகள் காணப்படுகிறது. செந்நாக்குழி என்று அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இது சங்க காலத்தைச் சேர்ந்த தொல் பழங்கால உருக்கு ஆலையாகக் கருதப்படுகிறது,

வெள்ளி, செம்பு, வெண்கலம், பித்தளை

வெள்ளி விழுத்தொடி மென் கருப்பு உலக்கை
(அகநானூறு 286, ஓரம்போகியார்)

வெள்ளிப் பூண் இட்ட கருப்பு உலக்கை

… …. …. …. …. மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல் வளை … …. …. …. ….
(அகநானூறு 142, பரணர்)

வளைந்து கனத்துடன் காணப்படும் வெள்ளி வளையல்

செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர்
(நெடுநல்வாடை 112)

செம்பில் செய்யப்பட்டது போலக் கட்டப்பட்ட நெடிய சுவர்.

கணக்கதிகாரம் 

காரிநாயனார் இயற்றிய கணக்கதிகாரம் என்ற நூலில் இடம்பெற்றுள்ள செய்யுள் இது. செம்பில் கலக்கத்தக்க உலோகங்களையும் இவற்றின் கலப்பு விகிதங்களையும் இந்தச் செய்யுள் விளக்குகிறது. செம்புத் தொழில்நுட்பம் பற்றி விளக்கும் செய்யுள் இதுவாகும்.

எட்டெடை செம்பி லிரெண்டை யீயமிடில்
திட்டமாய் வெண்கலமாஞ் சேர்ந்துருக்கி – லிட்டமுடன்
ஓரேழு செம்பி லொருமூன் றுதுத்தமிடில்
பாரறியப் பித்தளையாம் யார்”
(காரிநாயனார் கணக்கதிகாரம் செய்யுள் 11)

உரை: எட்டுப்பலஞ் செம்பிலே இரண்டு பலம் ஈயமிட்டுருக்க வெண்கலமாம். ஏழலரைப் பலஞ் செம்பிலே மூன்று பலந் துத்தமிட்டுருக்க பித்தளையாம். (குறிப்பு: பலம் – பழந்தமிழர் எடை அளவு (40.8 கிராம்).

பிளைனி 

பிளைனி எழுதிய இயற்கை வரலாறு (Natural History = Historia Naturalis) என்ற கலைக்களஞ்சியம் இந்தியாவிற்கும் ரோமிற்கும் இடையே நடைபெற்ற கடல் வணிகத்தைப் பற்றி விவரிக்கிறது. ரோம் நாட்டுடன் தொடர்பு கொண்டு உலகின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்பட்டஇரும்புச் சுரங்கத் தொழில் மற்றும் இரும்பு உருக்காலைகள் பற்றிய மிக முழுமையான கணக்கைத் தனது நூலில் பிளைனி பதிவு செய்துள்ளார். இந்த நூலின் 34 வது புத்தகத்தில் (34th book) இரும்பு பற்றிய ஒரு பத்தி (பத்தி 145) உள்ளது:

“Of all the kinds the palm is to the Seric iron. The Seres send this with their textile fabrics and skins. The second place is to the Parthian, and there are no other kinds of iron which are tempered into the true steel for they are mixed with other elements”.

பிளைனி Seres என்று குறிப்பிட்டது கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சங்க காலத்துச் சேர நாடு என்றும், Seric Iron என்று குறிப்பிட்டது சேர நாட்டு இரும்பு என்றும் கருதப்படுகிறது.  வூட்ஸ் எஃகு (Wootz Steel) என்று அழைக்கப்படும் எஃகின் உலோகவியல் பெயர்கள் இவையாகும்: ferrum candidum (bright iron = பிரகாசமான இரும்பு), ferrum indicum, ferrum sericum. Sericum என்ற சொல் Seres உடன் ஒத்து வருவதால் இது சேர நாட்டு எஃகு என்று கருதப்படுகிறது. இந்த வகை வூட்ஸ் எஃகிற்கு டமாஸ்கஸ் எஃகு (Damascus Steel) என்ற மற்றுப் பெயரும் உள்ளது. சிரிய அரபிக் குடியரசு  நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகருடன் டமாஸ்கஸ் எஃகு தொடர்புடையது. அரபு மொழியில் “டமா” (Dama) என்றால் நீர் என்று பொருளாம். வூட்ஸ் எஃகு பண்டைய தமிழகத்தில் வார்க்கப்பட்டது. தென்னிந்தியாவில் இந்த எஃகை பழுக்கக் காய்ச்சி அடித்து வலுவாக்கி வாட்களும் ஈட்டிகளும் அம்புகளும் செய்தார்கள். இந்த எஃகை பெர்ஷியாவிலும் அரபியாவிலும் மென்மேலும்   அடித்து (forge) வலுவேற்றி அழகிய வாள்களும், கத்திகளும் செய்யப்பட்டன.

12-ஆம் நூற்றாண்டில், அரபுப் பயணியும் வரைபடவியலாளருமான (Arab traveler and cartographer) அல் இட்ரிஸ்ஸி (Al Idrisi) இவ்வாறு பதிவு செய்துள்ளார்:

‘The Hindus excel in the manufacture of iron, and in the preparations of those ingredients along with which it is fused to obtain that kind of soft iron which is usually styled Indian steel (Hindiah). They also have workshops wherein are forged the most famous sabres in the world. …It is not possible to find anything to surpass the edge that you get from Indian steel (al-hadid al-Hindi)’

மற்றொரு அரபுப் பயணியான அல் பிரூணியும் (Al-Biruni )(கி.பி. 973-1048) இது பற்றிப் பதிவு செய்துள்ளார்:

“There will never be another nation, which understood separate types of swords and their names, than the inhabitants of India…”

குறிப்புநூற்பட்டி

  1. பழந்தமிழர்களின் தொழில் மேன்மை http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=9074:2015-03-24-19-34-59&catid=57:2010-01-31-18-23-42&Itemid=78
  2. செந்நாக்குழி விக்கிபீடியா
  3. யுத்தபூமி அத்தியாயம் 46 – நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் – 39 த பார்த்திபன் தொல்லியல் மணி தினமணி பிப்ரவரி 09, 2017 http://www.dinamani.com/tholiyalmani/yuththa-bhoomi
  4. A Brief History of Wootz. Atul Sabnis. The Custodian. March 12, 2016
  5. Iron History http://nautilus.fis.uc.pt/st2.5/scenes-e/elem/e02610.html
  6. Sasisekaran, B., and B. Raghunatha Rao. “Iron in Ancient Tamil Nadu.” India; Metallurgy in India: A Retrospective. NML Jamshedpur. Web. 17 July 2015.
  7. The Eastern Iron Trade of the Roman Empire. Journal of the American Oriental Society Vol. 35 (1915), p224‑239
    http://penelope.uchicago.edu/Thayer/E/Journals/JAOS/35/The_Eastern_Iron_Trade_of_the_Roman_Empire*.html

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தமிழ், தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

15 Responses to தமிழகத்தின் இரும்புக் காலம்: 1 சங்க இலக்கியத்தில் இரும்பு எஃகு தொழில் நுட்ப அறிவு

  1. ஸ்ரீராம் சொல்கிறார்:

    திருக்குறளில் பொன் என்று வரும் இடங்களை மனம் தங்கம் என்றே பதிவு செய்து கொள்ளும். இரும்பையும் குறிக்கும் சொல் என்று மனதிலிருத்திக்கொண்டேன்.

    ஹேமடைட், மேக்னடைட் என்று பள்ளிப்பாடங்களில் படித்த நினைவும் வருகிறது!

    இரும்பு ஊது குருகு- ஆச்சர்யம்.

    வழக்கம் போல மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள்.

    Liked by 1 person

  2. pattairaman.t.r. சொல்கிறார்:

    மிக்க முயற்சி எடுத்து பல்வேறு தகவலைகளை திரட்டி அளிக்கப்படும் உங்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் பள்ளிகளில் பாட நூல்களில் சேர்க்கப்படவேண்டும். தமிழ்நாடு அரசு பாட நூல் நிறுவனம் கவனத்தில் கொள்ளுமா?

    Liked by 1 person

    • முத்துசாமி இரா சொல்கிறார்:

      இளைஞர்களுக்கு தொல்லியல் பற்றிய புரிதல் வேண்டும் என்பது என் அவாவும் கூட. பள்ளிக்கு வெளியில் கூட இந்தப் புரிதலை ஏற்படுத்த வேண்டும். பலர் இந்த குறிக்கோளை மனதில் கொண்டு செயல்பட்டும் வருகிறார்கள். தங்கள் மேலான கருத்திற்கு மிக்க நன்றி..

      Liked by 1 person

  3. singanenjam சொல்கிறார்:

    மிக நன்றாக வந்துள்ளது. இரண்டாம் பாகத்தையும் படித்துவிட்டு என் கருத்துகளை எழுதுவேன்.

    Liked by 1 person

  4. Dr B Jambulingam சொல்கிறார்:

    தமிழகத்தின் இரும்புக் காலம் உரிய இலக்கிய சான்றுகளுடன் பகிர்ந்த விதம் அருமை. உங்களின் ஒவ்வொரு பதிவும் ஆய்வாளர் எழுதுகின்ற ஆய்வுக்கட்டுரையாக சிறப்பாக உள்ளது. உங்கள் பதிவுகளைப் பார்த்து வளரும் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கற்றுக்கொண்டியவை நிறையவே உள்ளன. வாழ்த்துகள்

    Liked by 1 person

  5. இரும்பு குறித்து இவ்வளவு விடயங்களா ? பிரமிப்பாக இருக்கிறது.

    Liked by 1 person

  6. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    இரும்பு பற்றிய அனைத்துத் தகவல்களுமே வியக்க வைக்கின்றன ஐயா
    தங்களின் தேடல்போற்றுதலுக்கு உரியது
    அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன்

    Liked by 1 person

  7. Mohan Hariharan சொல்கிறார்:

    மிகச்சிறந்த பதிவு …உங்கள் இரும்பைப்பற்றிய ஆய்விலிருந்து நிறையத் தெரித்து கொண்டேன் ..நன்றி

    Liked by 1 person

  8. mahiram சொல்கிறார்:

    மிகவும் அருமையாக உள்ளது மற்றும் தங்களது கடின உழைப்பு தெரிகிறது மிக்க நன்றி ஐயா மற்றும் தமிழர் போர்க் கலைகள் மற்றும் தற்காப்பு கலைகள் பற்றி ஆதாரங்களுடன் அதாவது இலக்கிய ஆதாரங்களுடன் பதிவுகளை பதிவிடுங்கள் ஐயா

    Liked by 1 person

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.