தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்

உலகப் புகழ்[பெற்ற வூட்ஸ் எஃகு என்ற டமாஸ்கஸ் எஃகு பண்டைய சேரநாட்டில் தயாரிக்கப்பட்டது பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இரண்டாம் பதிவில் சேரநாட்டின் தலைநகராகக் கருதப்பட்ட கருவூருடன் ரோமாபுரி நாட்டு வணிகர்கள் கொண்டிருந்த தொடர்பு சங்க இலக்கியம்,  தொல்லியல், கல்வெட்டியல் மற்றும்  நாணயவியல் சான்றுகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றிக் கூறியுள்ளேன்.

இரும்புக் காலம் மற்றும் தொடக்க வரலாற்றுக் காலகட்டத்தைச் சேர்ந்த கொடுமணல், ஆதிச்சநல்லூர், மேல்சிறுவாளூர், குட்டூர், பொற்பனைக்கோட்டை, அரிக்கமேடு, மோதூர், பேரூர் போன்ற தமிழகத் தொல்லியல் களங்களில் மேற்கொள்ளப்பட்ட இரும்பு பிரித்தெடுத்தல் (Iron Extraction), வார்ப்பிரும்பு (Cast Iron), தேனிரும்பு (Wrought Iron), எஃகு (Steel) போன்ற கார்பன் மிகுந்த / சமன்படுத்தப்பட்ட இரும்புக் கலவைகளின் (High Carbon Iron Alloys) உற்பத்தி முறைகள், பண்புகள் பற்றி இந்த இரண்டாம் பதிவில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பல தொல்லியல் களங்களில் பயன்படுத்தப்பட்ட புடக்குகை (மூசை) உலை (Crucible Furnace), இரும்பு உருக்கும் உலை (Iron Smelting Furnace) போன்ற உலைகள் பற்றியும், கரியூட்டம் (Carbonization / Carburizing), கரிநீக்கம் (Decarbonization) போன்ற சுத்திகரிப்பு செயலாக்க நுட்பங்கள் (Purification Processing Techniques) பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முனைவர்.சசிசேகரன், பி மற்றும் பேரா.சாரதா ஸ்ரீநிவாசன் போன்ற தொல்பொருள் உலோகவியல் வல்லுனர்கள் (Archaeometallurgists) மேற்கொண்ட கள ஆய்வுகள் மற்றும் சோதனைக்கூட ஆய்வுகளில் சோதித்தறிந்த உலோக மாதிரிகளின் பண்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

பிளைனியின் இயற்கை வரலாறு (Natural History) என்ற ஆவணம் சேரஸ் (“Seres”) என்ற இடத்திலிருந்து இரும்பு இறக்குமதி செய்யப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளது. இவர் சேரஸ் என்ற சொல்லின் மூலம் சங்க கால சேரநாட்டைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவணம் (manuscript document) ஐயத்திற்கு இடமின்றி இந்தியாவிலிருந்து இரும்பு இறக்குமதி செய்யப்பட்டதாகப் பதிவு செய்துள்ளது. (Schoff 1915; Bronson 1986: 18)

சேர நாடு வணிகத்திலும் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கியதை சங்க இலக்கியம், தொல்லியல், நாணயவியல் மற்றும் கல்வெட்டியல் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. சேர நாட்டின் மேற்குக் கரையில் அமைந்திருந்த முசிறி (Muziris), தொண்டி (Tondi), நீர்க்குன்றம் (Nelcynda), பந்தர் (Balita), வைக்கரை (Bakare) போன்ற துறைமுகங்கள் வழியாக மத்தியதரைக் கடல் (Mediterranean Sea) நாடுகளுக்கு அரியவகை மணிகள், இரும்பு, எஃகு, மிளகு, ஏலம் ஆகிய நறுமணப் பொருட்களும் (spices), தேக்கு, சந்தானம், தந்தம் ஆகிய மலைவளப் பொருட்களும்  ஏற்றுமதி செய்யப்பட்டன.

சேரநாட்டின் கொங்கு நாட்டுப் பகுதிகளில் அதியமான் பெருவழி, அயிரைப் பெருவழி (கொழுமம் வழியாகச் செல்வது), அசுரர் மலைப் பெருவழி, இராசகேசரிப் பெருவழி (கோவை சுண்டக்காமுத்தூர் வழியாகச் செல்வது), கொங்குப் பெருவழி, சேரனை மேற் கொண்டான் பெருவழி, சோழமாதேவிப் பெருவழி, , சோழப் பெருந்தடம் (கோபி வட்டம் கணக்கம்பாளையம் வழியாகச் செல்வது), பிடாரிக் கோவில் பெருவழி போன்ற பெருவழிகள் சிறப்பிடம் பெற்றிருந்தன.

கொங்குநாட்டுக் கருவூர் சேரநாட்டு வஞ்சியின் முற்றமாக விளங்கிற்று. சங்க இலக்கிய நூல்களான புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் கரூவூர் வஞ்சி சேரர்களின் தலைநகராக வருணிக்கப்பட்டுள்ளது  இவ்வூர் சேரர்களின் தலைநகராக விளங்கியதை கரூரில் நடைபெற்ற அகழ்வாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இராசகேசரிப் பெருவழி முசிறி துறைமுகத்தில் இருந்து தொடங்கி பேரூர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கேயம், கரூர், உறையூர் வழியாகப் பூம்புகார் வரை சென்றது. இப்பெருவழிகளில் கிடைத்த தடயங்கள் சங்ககாலச் சேரருக்கும் ரோமானியருக்கும் இடையே நடைபெற்ற கடல் சார் வணிகத்திற்கு மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. ரோ மானிய வணிகர்கள் இவ்வூருக்கு வந்து தங்கியிருந்து வணிக முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக கரூர் வணிகரீதியாக ரோமானிய நாட்டு வணிகர்களுடன் கொண்டிருந்த தொடர்பு அமராவதி ஆற்றுப் படுகை அகழ்வாய்களில் கிடைத்த ரௌலட்டட் மற்றும் ஆம்போரா பானையோடுகள், ரோமானியர் காசுகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிரேக்கர்கள் இவ்வூரை “கோருவூரா” என்ற பெயரில் ஆவணகளில் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் நாட்டில் கண்டறியப்பட்ட ரோம நாணயங்களில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலாகச் சேரநாட்டின் பகுதியாகக் கருதப்படும் கொங்குநாட்டுப் பகுதிகளிலேயே கிடைத்துள்ளன. கரூரின் அமராவதிப் படுகையில் அகஸ்டஸ் (Augustus) மற்றும் கிளாடியஸ் (Claudius) காலத்திய ரோம நாணயங்களும் முத்திரை மோதிரமும் கிடைத்தன. வெள்ளலூரில் வெள்ளி நாணயங்களும், பொன் நகைகளும் கிடைத்தன. கரூர், கொடுமணல், பொருந்தல் அகழ்வாய்வுகளிலும் இந்த வகை நாணயங்கள் கிடைத்தன. கொங்கு நாட்டில் கரூர், கத்தாங்கண்ணி, கலயமுத்தூர் போன்ற இடங்களில் கொல்லிப்புறை. கொல்லிரும்பொறை, மாக்கோதை போன்ற சங்ககாலச் சேரர் நாணயங்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரும்புத் தொழில் நுட்பமும் கைவினைப் பொருட்களின் உற்பத்தியும்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நாட்டில் கிடைக்கும் இயற்கை வளங்களை உயர்த்த தொழில் நுட்பத்தின் மூலம் உற்பத்திப் பொருளாக மாற்றி அவற்றை உள்நாட்டின் பயன்பாட்டிற்கும் வெளிநாட்டின் தேவைக்கும் அளித்து அதன் மூலம் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் பயன்படுத்துவதே ஆகும். இதில் மனித சக்தியைப் பயன்படுத்துதல் என்பது இன்றியமையாததாகும். (முனைவர்.கா.ராஜன் தொல்லியல் நோக்கில் சங்ககாலம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 2010. பக். 109)

“வணிகம் அரசு உருவாவதற்கு ஒரு கருவியாக விளங்கியது; அதே போன்று வணிக வளர்ச்சியும் நிலையான ஆதரவான அரசின் மூலமே ஏற்படுகிறது” (முனைவர்.கா.ராஜன் தொல்லியல் நோக்கில் சங்ககாலம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 2010. பக். 82)

dr. k rajan kodumanal  க்கான பட முடிவு

சங்க காலத்தில் தமிழகம் இரும்புத் தொழில்நுட்பங்களிலும் கைவினைப் பொருட்களின் உற்பத்தியிலும் சிறந்து விளங்கியது குறித்துத் தமிழகத்தில் நடைபெற்ற பல அகழ்வாய்வுகளும் கண்டறியப்பட்ட தொல்பொருட்களும் சான்றாக அமைகின்றன. இந்த ஆய்வுக் களங்களில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் சங்ககாலத்தை ஒட்டியே காலவரையறை செய்யப்பட்டுள்ளன.

கொடுமணல்

அமைவிடம்

ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டத்தில், காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில் அமைந்துள்ள கொடுமணல் (பின் கோடு 638751) கி.மு. மூன்று மற்றும் நான்காம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டகாலத்தைச் சேர்ந்த இரும்புக்காலத் தொல்லியல் களம் என்று முனைவர். கா.ராஜன் காலவரையறை செய்துள்ளார். இதன் அமைவிடம் 11.0125°N தீர்க்கரேகை 78.16°E அட்சரேகை ஆகும். இவ்வூர் சென்னிமலையிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், ஊத்துக்குளி 15 கி.மீ. தொலைவிலும், காங்கயம் 21 கி.மீ. தொலைவிலும், திருப்பூரிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், அவினாசி 37 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டிலிருந்து 41 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

இலக்கியச் சான்றுகள் 

கரூர் நகரிலிருந்து 81 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொடுமணலின் அமைவிடம், சேர நாட்டையும் சோழநாட்டையும் இணைக்கும் சங்ககால வணிகப் பெருவழிப் பாதையில்அமைந்திருந்த காரணத்தாலேயே இவ்வூர் சிறப்புப் பெற்றிருந்து என்று தொல்லியல் ஆய்வாளர் ச.செல்வராஜ் கருதுகிறார். இப்பாதை கரூர் நகரை மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களுடன் இணைத்து. சங்ககாலச் சேரர்கள் ரோமானிய நாட்டினருடன் கடல் சார் வணிகத்தில் சிறந்திருந்தனர். தொல்காப்பியம் கடல் கடந்த வணிகத்தை ‘முந்நீர் வழக்கம்’ என்கின்றது.

கொடுமணல் என்னும் இவ்வூர் சங்ககாலக் கொடுமணம்தான் என்பதற்குச் சங்ககாலத்துப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான, சேரர் புகழ்பாடும்  பதிற்றுப்பத்து நூலில் இடம்பெறும் வரிகள் சான்று பகர்கின்றன:

கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
(பதிற்றுப்பத்து (67:1-2) கபிலர்

கொடுமணம் என்ற ஊரில் வாழ்ந்த பாணர் செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை என்ற சேரனை நாடிச் செல்லும்போது அவர்களை நோக்கி கபிலர் பாடியது. பாணனே! எங்கள் அரசனிடம் சென்று நீ பாடினால் அவன் கொடுமணத்தில் செய்த சிறந்த அணிகலன்களையும், புகழ்பெற்ற பந்தர் நகரிலிருந்து வந்த நன்முத்துக்களையும் பரிசாகத் தருவான்.

கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்”
(பதிற்றுப்பத்து 74:5-6 அரிசில் கிழார்)

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர அரசனைப் புகழ்ந்து அரசில் கிழார் என்ற சங்ககாலப் புலவர் பாடியது. கொடுமணம் என்னும் ஊரிலிருந்து வேலைப்பாடு அமைந்த அணிகலன்களைக் கொண்டுவந்தாய். பந்தர் என்னும் ஊரிலிருந்து முத்துக்களைக் கொண்டுவந்தாய்.

பெர்ஷிய மொழியில் பந்தர் Bandar (Bunder = بندر) என்றால் துறைமுகப் பட்டணம் (port) என்று பொருள். Bandha என்றால் மூடப்பட்ட; Dwara = Gate கதவு. அதாவது கடலிலிருந்து பாதுகாப்பாக அமைக்கப்பட்ட துறைமுகப் பகுதி என்று பொருள். பெரிபுளூஸ் பந்தர் துறைமுகத்தை Balita என்று குறிப்பிட்டுள்ளார். பந்தர் என்ற அரபிச் சொல்லுக்கு அங்காடி அல்லது கடைத்தெரு என்று மயிலை.சீனி. வேங்கடசாமி பொருள்.கொள்கிறார்.

கரூர் அருகே புகளூர்-வேலாயுதம்பாளையத்தில் அமைந்துள்ள ஆறு நாட்டார் குன்றில் கண்டறியப்பட்ட கல்வெட்டு இது:

மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
கடுங்கோன் மகன் ளங்
கடுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்
(ARE 1927-28: 342-349) 1927 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

இக்கல்வெட்டை  பத்மஸ்ரீ. ஐராவதம் மகாதேவன் வசித்து ஆய்வு செய்த பின்பு இதில் இடம்பெற்றுள்ள சேர மன்னர்களைப் பற்றிய இவ்வாறு அடையாளப்படுத்தியுள்ளார்: கோ ஆதன் செல்லிரும்பொறை (அந்துவன் சேரல் இரும்பொறை); கடுங்கோன் என்ற பெருங்கடுங்கோன் (செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறையும்); இளங்கடுங்கோ (குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை.

இதில் இடம்பெற்றுள்ள சேர மன்னர்கள், பதிற்றுப்பத்தில் பாடப்பட்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறையும் (ஏழாம் பத்து), தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் (எட்டாம் பத்து), குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையும் (ஒன்பதாம் பத்து) ஆவர். சேரர்களின் கால் வழி மரபினர்களாகப் பொறையர்கள் கருதப்படுகிறார்கள். இவர்கள் இரும்பொறை என்ற பெயருடன் குறிப்பிடப்பட்டார்கள். குட்டுவர், குடவர், கோதை, வானவன், பூழியன் பொறையர் எனச் சேரர் குடிகள் பலவாகும். இரும்பொறை என்னும் சேரர் குடியினைத் தொடக்கி வைத்தவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆவான். இரும்பொறை  குடியினர் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தாகக் கருதப்படுகிறது. பொறையருக்குப் பின் கடுங்கோ குடியினர் அரசாண்டனர்.

புகளூர் கல்வெட்டின் காலம் பட்டிபுரோலு கல்வெட்டின் (Bhattiporulu Inscription) காலத்திற்கு முந்தையது என்று தொல்லியல் ஆய்வாளரான நடனகாசிநாதன் கருதுகிறார். ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம், பட்டிபுரோலு மண்டல், பட்டிபுரோலு பௌத்த தொல்லியல் களத்தில் உள்ள நினைவுச் சின்னப் பொருட்கள் மீது பொறிக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகளுக்குப் பட்டிபுரோலு கல்வெட்டு என்று பெயர். பட்டிபுரோலு கல்வெட்டு கி.மு. 290-270 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என்றும் நடனகாசிநாதன் கருதுகிறார். ஆகவே புகளூர் கல்வெட்டு கி.மு. 4 – 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதாகக் கொள்ளலாம்.

அகழ்வாய்வுச் சான்றுகள் 

இன்றைய கொடுமணலில் இருந்து ஒன்றரைக் கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொடுமணல் தொல்லியல் களம் 70 ஏக்கர் வரை பரந்துள்ளது. இத்தொல்லியல் களம் 1961 ஆம் ஆண்டில் புலவர் செ.இராசு, செல்வி முத்தையா ஆகியோரால் கண்டறியப்பட்டது. புலவர் செ.இராசு கொடுமணல் பற்றி ‘நொய்யல் ஆற்று நாகரிகம்’ என்று குறிப்பிட்டு ஆய்வறிக்கை வெளியிட்டார். இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையைச் சேர்ந்த வி.என்.ஸ்ரீனிவாசதேசிகனும் கொடுமணலின் தொல்லியல் களத்தை இதே காலத்தில் கண்டறிந்தார்.

இந்தத் தொல்லியல் களம் மனித வாழ்விடமும் ஈமக்காடும் (Habitation cum Burial site) இணைந்த களம் ஆகும். இங்கு வாழ்ந்த மக்களின் ஈமக்குழிகள் பெரிய பலகைக் கற்களைக் கொண்டு கற்பதுக்கைகளாக அமைக்கப்பட்டன என்பதால் இம்மக்கள் பெருங்கற்காலத்தைச் (Megalithic) சேர்ந்தவர்கள் என்று வகைப்படுத்தியுள்ளனர். இங்கு கண்டறியப்பட்ட இரும்புத் தொழில் நுட்பத்தைக் கணக்கில் கொண்டு இவர்கள் இரும்புக் காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர். இவ்வூர் மக்கள் தொடக்க வரலாற்றுக் காலம் (Early Historic period), இரும்புக் காலம் (Iron Age), சங்ககாலம் (Sangam Age) ஆகிய மூன்று காலங்கள் ஒருங்கிணைந்த காலகட்டத்தில் வாழ்ந்துள்ளனர்.

இரும்பு கருவிகள் உருவாக்கம், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் எடுப்பித்தல், கருப்பு சிவப்புப் பானை ஒடுகள் காணப்படுதல் ஆகிய கலாசாரக் கூறுகளின் அடிப்படையில் ஒரு பகுதியில் இரும்புக் காலம் நிலவியதாகக் கருதுகிறார்கள். தமிழகத்தில் இரும்புக் காலம் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் ஒத்திசைந்துள்ளது.

இக்களத்தில் 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் ஒரு மாதிரி அகழ்வாய்வுக்குழி தோண்டப்பட்டு ரோமானியப் பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. இக்களத்தில் 1985, 1986, 1989, 1990, 1997, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் (எழு பருவங்களில்) அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

1985 ஆம் ஆண்டு முதற்கொண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அகழ்வாய்வு மேற்கொண்டது. இந்த அகழ்வாய்வு  நான்கு பருவங்களுக்கு நீடித்தது. முனைவர்.ஒய்.சுப்பராயலுவும் (இந்தியவியல் துறை, பாண்டிச்சேரி ஃபிரெஞ்ச் நிறுவனம்) முனைவர். கா. ராஜனும் (பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்) பல்வேறு காலகட்டங்களில் இத்திட்டத்தின் அகழ்வாய்வு இயக்குர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

தொடர்ந்து 1997-98 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழ்வாய்வினை மேற்கொண்டது. இதையடுத்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 2012 மற்றும் 2013 ஆண்டு தொடங்கி இரண்டு பருவங்களுக்கு இந்த அகழ்வாய்வை மீண்டும் தொடர்ந்தனர்.

இக்களத்தில் உள்ள 70 ஏக்கர் பரப்பில் ஓர் ஏக்கருக்கும் குறைவான பகுதியில் மட்டுமே அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது களத்தின் மொத்தப் பரப்பில் ஒரு சதவிகிதத்திற்கும்  குறைவான பரப்பில் மட்டும் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 63 ஆய்வுக் குழிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுவன்றி 16 ஈமக்காட்டுக் களங்கள் (burial Sites) அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவற்றுள் ஒன்றில் ரோமானியக் குடியேற்றங்கள் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

தொடர்புடைய படம்

இங்குள்ள இடுகாட்டுக் களத்தில் பெருங்கற்காலக் கல்வட்டத்தை (Megalithic Cairn Circle) உள்ளடக்கிய கற்பதுக்கை (Cist) கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள முதன்மைக் கற்பதுக்கையைச் (Primary Cist) சுற்றி வெளிவட்டத்தில் மூடிகள் (lids), கிண்ணங்கள் (bowls), தட்டுகள் (dishes), நான்கு கால்களுடன் ஜாடிகள் (four legged jars) மற்றும் வட்ட வடிவ தாங்கிகள் (ring stands) போன்ற படையல் பொருட்கள் கண்டறியப்பட்டன.

dr. k rajan kodumanal க்கான பட முடிவு

Carnelian Beads PC: The Hindu Jun 24, 2013

முதன்மை கல்பதுக்கையின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு பிணச்சாம்பல் இடும் கொள்கலம் / புதைகலம் (urn) ஒன்று கிடைத்தது. இக்கொள்கலத்தினுள் அலங்காரக் கோடுகள் கொண்ட 782 சூது பவள மணிகள் (Carnelian Beads) இருந்தன. முதன்மை கல்பதுக்கைக்குக் கிழக்கே 169 செ.மீ. நீளமுள்ள இரும்பு வாளும் (iron sword) சில அம்பு முனைகளும் கிடைத்துள்ளன. இது மட்டுமின்றி நான்கு இரும்பு வாட்கள், தாமரை மற்றும் மயில் வடிவுடன் செம்பில் செய்யப்பட்ட கள் வடிக்கும் வடிகட்டி (Copper Stainer), இரட்டை முனை கொண்ட கோடரி, சிறிய குத்து வாட்கள், அங்கவடி (horse – stirrups) (குதிரையுடன் இணைக்கப்படும் கால்களைத் தாங்கும் வளையம்)  ஆகிய பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இங்குள்ள 63 ஆய்வுக் குழிகளில் கண்டறியப்பட்ட தொல் (கலாச்சாரப்) பொருட்கள், மட்கலங்கள் தமிழ் பிராமி எழுத்துக்களின் எழுத்து முறை ஆகியவற்றின் அடிப்படையில் இக்களம் இரண்டு கலாசாரப் பிரிவுகளாகப் பிரித்து காலவரையறை செய்யப்பட்டது: இவை 1. பெருங்கற்காலம் (Megalithic period) (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1 ஆம் நூற்றாண்டு வரை); 2. தொடக்க வரலாற்றுக் காலம் (Early Historical period) (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு .வரை) ஆகும்.

கொடுமணலில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களைக் கொண்டு இங்கு நான்கு வகைத் தொழிற்கூடங்கள் செயல்பட்டிருக்கலாம் என்றும், இந்தத் தொல்லியல் களத்தில் மக்கள் குடியிருப்புகளைச் சார்ந்து இந்தத் தொழிற்கூடங்கள் அமைந்திருந்து செயல்பட்டன  என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு செயல்பட்ட நான்கு தொழிற்கூடங்கள் இவை: : 1. இரும்பு எஃகு உருக்காலை; 2. மணிக்கற்கள் தயாரிக்கும் கைவினைத் தொழில் (Gemstone Cutting Craft); 3. சங்கு அறுக்கும் தொழில் மற்றும் 4. நெசவுத் தொழில். இங்கு நாம் இரும்பு மற்றும் எஃகுத் தொழில் நுட்பம் பற்றிப் பார்க்கலாம்.

இரும்புத் தொழில்நுட்பம் 

ஹாரப்பா – செம்புத் தொழில்நுட்பம் 

சிந்துவெளி நாகரிகத்தில் இடம்பெற்ற ஹாரப்பா மக்கள் செம்பு, வெண்கலம், ஈயம் மற்றும் தகரம் போன்றவற்றை உள்ளடக்கிய உலோகவியலையும் தொழில் நுட்பங்களையும் உருவாக்கினர். இராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் தாமிரத் தாதுக்கள் கிடைத்துள்ளன. தாமிரத்தைத் தாமிரத் தாதுவிலிருந்து பிரித்தெடுப்பது எளிது.

தமிழகம் – இரும்புத் தொழில்நுட்பம்

தமிழகத்தில் தென்னிந்தியாவில், குறிப்பாகச் சேரநாட்டில், கற்காலத் தொழில் நுட்பத்தைத் தொடர்ந்து நேராக இரும்புக்கால தொழில் நுட்பத்திற்கு மாற்றம் நிகழ்ந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. தாமிரத் தொழிலுக்கான கனிம வளங்கள் தென்னிந்தியாவில் இல்லை. எனினும் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், இரும்புத் தாதுக்கள் கிடைத்தன. சங்ககாலத்து மக்கள் இரும்புத் தாதுவிலிருந்து   இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தை எதேச்சையாகக் கற்றுக் கொண்டார்கள். சேரநாட்டு எஃகு ஆயுதங்கள் எகிப்திய பிரமிடுகளில் கண்டறியப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக பவானி ஆற்றங்கரைச் சமூகம் இரும்பு உருக்காலைகளை அமைத்து அழகான அணிகலன்களைத் தயாரித்துள்ளனர். இவர்கள் மோயாறு வழியாகப் பயணித்து குஜராத் வரை சென்று வணிகம் புரிந்துள்ளார்கள்.

கரிதோட்டம் பாளையம், கீழ்பவானி அணை, பங்களாபுதூர் பகுதிகளில் இரும்புத் தாதுக்கள் கிடைத்ததையும் எலவமலை, குமரிக்கல்பாளையம், கொடிவேரி, சின்ன மோளப்பாளையம்,   நிச்சாம்பாளையம், லிங்காபுரம் போன்ற கொங்கு நாட்டுப் பகுதிகளில் இரும்பு உருக்காலை செயல்பட்டதற்கான தரவுகள் கிடைத்தையும் பவானி ஆற்றுப்படுகையில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்ட இந்தியத் தொல்பொருள் அளவீட்டுத் துறையின் ஆய்வாளர் முனைவர்.வி.பி.யதிஸ்குமார் பதிவு செய்துள்ளார். பவானியின் ஆற்றங்கரைகளில் 1847 முதல் 1914 வரை கான்கிரேவ், வில்லியம் ஃப்ரேஸர், சாண்ட்ஃபோர்டு, லாங்ஹர்ஸ்ட் ஆகியோர் ஆய்வுகளை மேற் கொண்டது பற்றியும் 1960, 1961-களில் ஸ்ரீனிவாச தேசிகன் ஆய்வு மேற் கொண்டது பற்றியும் இந்த ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வுகளில் இரும்புக் காலம் எனப்படும் கி.மு. 15 முதல் கி.மு. 5-ம் நூற்றாண்டு வரை, பவானி நதிக்கரையில் வாழ்ந்த மக்களின் சமூக, கலாச்சார, பொருளாதார தகவல்களை அறிய முடிந்தது என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய படம்

இரும்புத் தொழில்நுட்பம் செம்புத் தொழில் நுட்பத்தைக் காட்டிலும் சிக்கலானது. இரும்பை உருக்காக மாற்ற 1,100 சென்டிகிரேட் வெப்பமும் எஃகாக மாற்ற 1,300 சென்டிகிரேட் வெப்பமும் தேவை. இந்த உலைகளில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யச் சங்ககாலத் தமிழர்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊது குழாய்கள் மூலம் காற்றை உலைக்குள் செலுத்தினர்.

இங்கு கண்டறியப்பட்ட புடக்குகை (மூசை) உலையும் (Crucible Furnace), இரும்பு உருக்கும் உலையும் (Iron Smelting Furnace) இந்த அதிவெப்பத்தைத் தாங்கும் திறன் பெற்றிருந்தன. இந்த உலைகளில் அடுக்கப்பட்டிருந்த வெப்பவழி பளபளப்பாக்கம் பெற்ற புடக்குகைகளும் (Vitrified Crucibles) ஏராளமான இரும்புக் கசடுகளும் (Iron Slags), செம்பழுப்பு நிறம் பூசப்பட்ட மட்கலன்களும் (russet coated ware), சுடுமண் குழாய்களும் இக்களத்தில் கண்டறியப்பட்டதாக முனைவர். க.ராஜன் கூறியுள்ளார்.

இரும்பை எஃகாக மாற்றும் செய்முறைக்கு அதிவெப்ப உலையில் பணியாற்றும் பயிற்சி தேவை. சங்ககாலத் தமிழர்கள் இரும்புத் தொழில் நுட்பம் பற்றிய அறிவு, திறமை மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் போன்ற மனநிலைகளைப் பெற்றிருந்தனர். இரும்புத் தொழில்நுட்ப வல்லுனர்களான ஜே.ஜி. வில்கின்சன் மற்றும் ஜே.எம். ஹீத் போன்றோர் இரும்பை எஃகாக மாற்றும் தொழில் நுட்பதத்தில் கொங்குநாட்டுத் தமிழர்கள் சிறந்திருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இயற்கையாகக் கிடைக்கும் இரும்புத் தாது கார்பன் டை ஆக்சைடு, ஈரம், கார்பன் (கரிமம்) போன்ற மாசுக்களையும் உள்ளடக்கியுள்ளது. சில வகை இரும்புத் தாதுக்களில் கார்பன் அதிகமாகவும் வேறு சில வகைகளில் கார்பன் குறைவாகவும் காணப்படுகின்றன. இரும்புத் தொழில் நுட்பம் இரும்புத் தாதுவை பயன்பாட்டிற்கு உரிய இரும்பாக மாற்றுவதாகும். கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஈரப்பதத்தை நீக்கி விட்டு கார்பன் விகிதத்தைத் தரநிலைப் படுத்த வேண்டும். அதாவது கரியூட்டம் (Carbonization / Carburizing) சமச்சீரான அளவில் செய்ய வேண்டும்.

கரியூட்டம்

கரியூட்டம் (Carbonization / Carburizing) என்பது ஒரு வெப்ப பதனிடல் (Heat Treatment) முறையாகும். இம்முறையில் இரும்புத் தாதுவுடன்  தேவையான அளவிற்குக் கரியூட்டம் செய்யப்படுகிறது. தமிழர்கள் இரும்புத் தாதுவுடன் தேவையான விகிதத்தில் மரத் துண்டுகளைச்  சேர்த்து உலையில் வெப்ப பதனீடு (Heat Treated) செய்தனர். மிகுந்த வெப்பத்தினால் மரத்துண்டு கார்பனாக (கரியாக) மாறி இரும்புடன் பிணைந்தது. சென்னிமலைப் பகுதியில் இரும்புத் தாதுப் படிமங்கள் நிறைந்திருந்தன. இங்கு கிடைத்த இரும்புத் தாதுக்களில் கார்பன் அதிகம் இருந்தது. வேறு சில இடங்களில் கிடைத்த தாதுக்களில் கார்பன் குறைவாக இருந்தது. எனவே கார்பன் அதிகச் சதவிகிதம் உள்ள இரும்புத் தாதுக்களில் உள்ள கார்பன் விகிதத்தைக் குறைக்க (Decarbonisation) வேண்டியிருந்தது. கார்பன் குறைந்த சதவிகிதம் உள்ள இரும்புத் தாதுக்களில் உள்ள கார்பன் விகிதத்தைக் அதிகரிக்க (Carbonisation) வேண்டியிருந்தது. 

கொடுமணலுக்கு அருகே சென்னிமலையில் கிடைத்த இரும்புத் தாதுவில் அதிகம் கார்பன் கொண்டிருந்த காரணத்தால்  Decarbonisation செய்முறையே கொடுமணலில் கடைபிடிக்கப்பட்டது. கொடுமணலில் இரண்டு விதமான உலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முதல் வகை உலையில் இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்தனர் (Iron Extraction). இரும்புத் தாதை உருக்கிச் செம்மையாக்க (normalization) மண்ணால் செய்யப்பட்ட மட்கலனைப் (Crucible) பயன்படுத்தினர். இஃது இரும்புத் தாதுவில் உள்ள அதிகப்படியன கரிமத்தை (Carbon) நீக்கிச் சுத்தமான இரும்பைப் பிரித்தெடுக்க, பிரத்தியேகமாக வடிவமைத்த கருவியாகும். இந்த உருக்கு உலையை நன்கு சுட்ட மண்ணைக் கொண்டு அமைத்தார்கள். உலையின் சுவர் பகுதி தடித்து இருக்கும். நடுவே சிறிய துவாரம் இருக்கும். உலையின் மேற்பகுதி பளபளப்பூட்டப்பட்டிருக்கும் (Vitrified). உலைகளைக் குவளை (Cup), உருண்டை (cyindrical) மற்றும் முட்டை (Oval) வடிவில் அமைத்தார்கள். வெப்பமூட்டி உருக்குவதற்கு ஊது உலையைப் பயன்படுத்தினர். மட்கலனில்  இரும்புத் தாதுவை இட்டு உருக்கினார்கள். உருக்கப்பட்ட இரும்புக் குழம்பை பயன்பாட்டிற்கு ஏற்றவாறு பாளங்களாக வார்த்தெடுத்தார்கள். இவ்வாறு  வார்க்கப்பட்ட இரும்பிற்கு வார்ப்பிரும்பு (Cast Iron or Pig Iron) என்று பெயர்.

இரண்டாவது வகை உலையில் இரும்பு தேனிரும்பாகவும் (Wrought Iron) எஃகாகவும்  (Steel) மாற்றப்பட்டது. இதற்கு மண்ணால் செய்யப்பட்ட புடக்குகை (இரும்பைப் புடமிட்டு உருக்கப் பயன்படும் கலம் (Crucible) பயன்படுத்தப்பட்டது. இந்த வகை உலைகள் நிலத்திற்குக் கீழே கட்டமைக்கப்பட்டன. வார்ப்பிரும்பில் உள்ள கார்பன், சிலிகான், மங்கனீஸ் போன்ற வேற்றுப் பொருட்களை அகற்ற Decarbonisation செய்தார்கள். இவ்வாறு வேற்றுப் பொருட்களை அகற்றித் தூய்மையாக்கப்பட்ட இரும்பு தேனிரும்பு (Wrought Iron) அல்லது மாழை என்று அழைக்கப்பட்டது. எஃகில் கார்பன் விகிதம் வார்ப்பிரும்பைவிடக் குறைவாகவும்  தேனிரும்பை விட அதிகமாகவும் இருக்கும்.

முனைவர். சாரதா ஸ்ரீநிவாசன் கலை (Art), தொல்லியல் (Archaeology), தொல்பொருள் உலோகவியல் ஆய்வு (Archaeometallurgy) மற்றும் கலாச்சாரம் (Culture) குறித்த அறிவியல் ஆய்வுகளில் ஆர்வமுள்ள ஒரு தொல்பொருள் வல்லுநர் ஆவார். இவர் பெங்களூருவில் அமைந்துள்ள மேம்பட்ட தேசிய ஆய்வு நிறுவனத்தின் (National Institute of Advanced Studies (NIAS) மானிடவியல் துறையில் (School of Humanities) பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் பண்டைய உலோகவியல் (Ancient Metallurgy) குறித்து Journal Materials and Manufacturing Processes என்ற பருவ இதழ் வெளியிட்ட இரண்டு சிறப்பிதழ்களில் எழுதியுள்ளார். இவர் கொடுமணலில் நடத்திய உலோகப் பகுப்பாய்வில், இக்களத்தில் கண்டறியப்பட்ட உலைகள், வார்ப்பிரும்பின் கொதிநிலையான (Melting point of Cast Iron), 1300 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தைத் தாங்கும் வல்லமை பெற்றிருந்தன என்று உறுதி செய்துள்ளார்.

கொடுமணலில் இரும்பு மிகுந்த இந்த கலப்பு உலோகத்தை (Alloy) புடக்குகையில் எஃகு உருக்கும் முறையில் (Crucible Steel Production method) உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்று பேரா.சாரதா ஸ்ரீநிவாசன் குழு கருதுகின்றது. (reported in Srinivasan and Griffiths 1997; Srinivasan 2007).

சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தைச் சேர்ந்த  சசிசேகரன்.பி மற்றும் இரகுநாதராவ். பி,  ஆகியோர் கொடுமணல், குட்டூர், மல்லப்பாடி  தொல்லியல் களங்களில் சேகரித்த இரும்புப் பொருட்களின் மீது மேற்கொண்ட வேதியல் பகுப்பாய்வு மற்றும் உலோகவியல் ஆய்வுகளில் வார்ப்பிரும்புத் தொழில் செயல்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

உலையின் எரிபொருள் விளிம்புகளில் (a projectile edge) சேகரிக்கப்பட்ட மாதிரிகள், சுமார் ஒரு சதவிகித கார்பன் அமைப்புடன் (a structure of about 1% carbon) கூடிய  மிகு கரி உருக்காக (உயர் கார்பன் எஃகு = High Carbon Steel) இருந்தன என்று பி.சசிசேகரன் நிறுவியுள்ளார் (Sasisekaran (2004: 45, pl. 23.2).

இங்கு வார்ப்பிரும்பு உருக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி எஃகு  உற்பத்தி செய்வதற்கான கரியூட்டமும் (Carburising) நடைபெற்றுள்ளது என்றும் நிறுவியுள்ளனர். இது மட்டுமின்றிக் குறைந்த கார்பன் அளவிலான எஃகுப் பட்டைகள் மற்றும் தேனிரும்புப் பட்டைகளை Forge Welding மூலம் இணைத்து இரும்புப் பட்டைகள் (Iron Bar) தயாரித்துள்ளனர். இங்கு கிடைத்த செம்பு வடிகட்டியைப் (Copper Sieve) பகுப்பாய்வு செய்ததில், தாமிரக் கலப்பு உலோகத்தில் (Copper Alloy) வெள்ளீயம் மற்றும் தகரம் ஆகியவை குறைந்த விகிதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது  தெரியவந்துள்ளது என்கிறார் சசிசேகரன்.

உயர் இளக்கும்  தன்மையும் (Superplasticity) உயர் கடினத் தன்மையும் (high impact hardness) கொண்ட இவ்வகை எஃகு புடக்குகையைப் (Crucible) பயன்படுத்தி இரும்பை எ ஃகாக உருமாற்ற கரியூட்டுதல் செயல்முறையைப் (Process of Carburising) பின்பற்றி உயர்வெப்ப உலையில் உருவாக்கப்பட்டது. இரும்பு தாதுவை மரத் துண்டுகளுடன் சேர்ந்து மூடப்பட்ட புடக்குகையில் (Crucible) இடப்பட்டு உலையில் 1200 டிகிரி செல்சியஸில் வெப்பத்தில் 14 முதல் 24 மணி நேரம் வரை உருக்கப்படுகிறது. மிகுந்த வெப்பத்தினால் மரத்துண்டு கார்பனாக (கரியாக) மாறி இரும்புடன் பிணைகிறது. இந்தக் கலப்பு உலோகத்தின்  நுண்கட்டமைப்பு (microstructure) சூடாக இருக்கும் போது சம்மட்டியாலடித்து  உயர் கார்பன் எஃகு  தயாரிக்கப்படுகிறது.

உலகின் பழமையான வாட்ஸ் எஃகு மையங்களில், கொடுமணலும் ஒன்றாக இருந்துள்ளது. கார்பன் அளவை மிக அதிக அளவில் கொண்டிருக்கும் இந்த வகைப் புடக்குகை எஃகு (Crucible Steel), வூட்ஸ் எஃகு (Wootz steel) அல்லது டமாஸ்கஸ் எஃகு (Damascus steel) என்று அறியப்பட்டன. வூட்ஸ் என்ற சொல் உருக்கு என்ற தமிழ் சொல்லிலிருந்தோ அல்லது உக்கு என்ற கன்னடச் சொல்லிலிருந்தோ தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வூட்ஸ் என்றால் உயர் சிறப்பு மிக்கது என்றும் பொருள் கொள்ளலாம். தில்லி குதூப்மினார் வளாகத்தில் நாம் காணும் துருப்பிடிக்காத இரும்புத் தூண் (Rust Free Iron Pillar) இப்பகுதியில் தயாரிக்கப்பட்ட துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்டிருக்கலாம். சிரிய அரபிக் குடியரசு நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகருடன் டமாஸ்கஸ் எஃகு தொடர்புடையது. அரபு மொழியில் “டமா” (Dama) என்றால் நீர் என்று பொருளாம். தென்னிந்தியாவில் இந்த எஃகை பழுக்கக் காய்ச்சி அடித்து வலுவாக்கி வாட்களும் ஈட்டிகளும் அம்புகளும் செய்தார்கள். இந்த எஃகை பெர்ஷியாவிலும் அரபியாவிலும் மென்மேலும் அடித்து (forge) வலுவேற்றி அழகிய வாள்களும், கத்திகளும் செய்யப்பட்டன. இந்துவாணி (Hindu Vani) என்று டச்சுக்காரர்கள் இந்த வாளுக்குப் பெயரிட்டனர்.

இந்த வகை எஃகு தயாரிப்பு முறைக்குச் சேர மன்னர்கள் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர். இந்த எஃகு வாட்கள் உறுதியாகவும், வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டதாகவும், அழகிய கைப்பிடிகள் கொண்டதாகவும் இருந்த காரணத்தால் இவை பல நாடுகளில் நன்மதிப்பைப் பெற்றிருந்தன.

தமிழகத்தில் கொடுமணல் இந்த வூட்ஸ் எஃகு தயாரிப்பில் முக்கிய இடம் வகித்ததாகத் தெரிகிறது. கோல்கொண்டா (தெலிங்கானா), கர்நாடகா மற்றும் இலங்கை போன்ற பகுதிகளில் இந்த வகை எஃகு உருவாக்கப்பட்டது. இந்த வாட்கள் சீனா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டன. பெர்சியா, ஈரான் மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற போர்களில் இவ்வகை வாட்கள் பயன்படுத்தப்பட்டன.  “இந்தியாவின் பதில்” (Jawab – E -Hind) என்ற சொற்றொடர் அரபு மொழியில் இந்த வாளின் மேல் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் நடைபெற்ற போர்களிலும் இந்த வாள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார். இந்தியாவிலிருந்து  தன் நாட்டிற்குத் திரும்பும்போது  இந்தியர்கள் அவருக்கு அன்புப் பரிசாக 15 கிலோ எடைகொண்ட வூட்ஸ் எஃகு வாளை பரிசளித்தனர். திப்பு சுல்தானின் கல்லறையில் இந்த வாளைப் பற்றிய செய்திகள் உள்ளன.

ஆதிச்சநல்லூர் (Adichanallur)

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், வேலூர் ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்தில் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் அமைந்துள்ளது. திருநெல்வேலி திருச்செந்தூர்ச் சாலையில் ஸ்ரீவைகுண்டத்துக்கு முன்னர், பொன்னன் குறிச்சி பேருந்து நிறுத்தத்தையடுத்து அமைந்துள்ள இக்களத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகள் இந்தியாவின் மிகப்பெரிய அகழ்வாய்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய படம்

இங்கு நடைபெற்ற அகழாய்வில் இரும்பால் செய்த கருவிகள், பொன்னாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட எறிவேல் (Spear), ஈட்டி (Lance), குத்துவாள் (Dagger), அம்புமுனை போன்ற வேல் (Barbed Javeline), இரு புறமும் கூர்மையான வாள் (Double edged Sword), திரிசூலம் (Trident), கூரிய அம்புத்தலை (Barbed arrow head), கைக்கோடரி (Hatchets), வாள் (Sword), வளைந்த கத்தி (Curved Knife), இரு வளைவான கொக்கித்தடி (Hooks with two curved rods), பலி வாள் (Sacrificed sword), அம்புத்தலை (Arrow head), வேலாயுதம் (Javeline), கோடரிகள் (Axes), சூலாயுதம் (Sulams), கேடயம் (Shield), அரிய ஆயுதம் (A Curious Weapon), சிறிய உடைவாள் (Small Dagger), சிறிய ஈட்டி (Small Lance), செங்கோணவாயுள்ள ஈட்டி (Lance with blade rectangular in section), கூம்புவாய் ஈட்டி (Lance with narrow blade), ஈட்டிப் பிடியுள்ள குழிவான குழாய் (Hallow tube handle of lance), குழிவான விளிம்புள்ள குத்துவாள் (Dagger with tapering point), அகன்ற வாய்ப் பரசு (Hatch broadest at the cutting edge), நீண்ட வட்டக் குழிவான ஈட்டி (Lance with long round hollow shaft), குழிவான இரும்புக் கைப்பிடி ஈட்டி (Hollow iron handles with rods through the centre), வளைவுகளுள்ள வாள் (Swords with various curved blades tapering with points), சிறிய நுனியுள்ள வாயுடைய ஈட்டி (Lance with lapering blades and hollow handles), கத்தி (Knife), வளைந்த பலவகைக் கத்திகள் (Reaping hook or curved knives of various forms) போன்ற உலோகப் பொருட்கள் அடங்கிய பல தாழிகள் கிடைத்துள்ளன. எனவே இரும்பு, செம்பு மற்றும் கலப்பு உலோகமான வெண்கலம் ஆகியவற்றை இந்த மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது உறுதிப் பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் உலோகவியலில் பெற்றிருந்த அறிவு வியப்பிற்குரியது.

இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை 2003 – 2004 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை உலோகவியல், மானிடவியல் ஆகிய துறை சார்ந்த வல்லுநர்கள் சோதனைக்கு உட்படுத்தியதன் விளைவாகச் சில முடிவுகள் எட்டப்பட்டன:

பி.சசிசேகரன் குழுவினர் ஆதிச்சநல்லூரிலும் கிருஷ்ணாபுரத்திலும் நடத்திய ஆய்வில் இந்நகரங்களில் சுரங்கத் தொழில் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்விரண்டு ஊர்களிலும் நீண்ட தொலைவிற்கு நிலத்தின் மேற்பகுதியில் சுரங்கங்கள் இருந்தன. இப்பகுதிகளில் இருந்த சுரங்கங்களில் கிடைத்த உலோகங்களின் தன்மைகள் பற்றி இவர்களின் அறிக்கை விவரிக்கிறது. இப்பகுதிகளில்  சேகரிக்கப்பட்ட சுட்ட செங்கற்கள், உலோகத் தாதுக்கள், உலோகக் கசடுகள், உலையில் எரிந்த கரிக்கட்டைகள் போன்றவற்றைக் கூர்ந்து ஆராய்ந்ததன் மூலம் இரும்பு, தாமிரம், தங்கம் போன்ற உலோகங்களின் தாதுக்களை இப்பகுதியிலேயே தோண்டி எடுத்து உருக்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இங்கு கிடைத்த இரும்புத் தாதுப்பொருட்களில் கார்பன், வனடியம் (Vanadium), டைட்டானியம் (Titanium) போன்ற தனிமங்கள் கலந்திருந்தன. எனவே இங்கு கிடைத்த இரும்பு மற்றும் உருக்கு பொருட்களின் தரம் உயர்ந்து காணப்பட்டன, கலப்பு உருக்கில் கலந்துள்ள அசுத்த வேதிப்பொருட்களை நீக்கவும் விறைப்புத் தன்மையுடன் இழுக்கவும் ஒரு சதவிகிதம் வெண்ணாகம் (Zinc) சேர்க்கப்பட்டுள்ளது. உருக்கை உறுதிப்படுத்த எளிய கார்பன் உதவுகிறது.

ஆதிச்சநல்லூர் ஆகழ்வாய்வில் கண்டறியப்பட்ட இத்தொல்லியல் களத்தில் சேகரிக்கப்பட்ட உலோகப் பொருட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பேரா.சாரதா ஸ்ரீநிவாசன் இப்பொருட்களை உலோகவியல் பார்வையில் ஊன்றி ஆராய்ந்துள்ளார். இங்கு கண்டறியப்பட்ட பொருட்களின் உயர் தகர வெண்கல உலோகவியல் (High Tin Bronze Metallurgy) பற்றி பேரா.சாரதா ஸ்ரீநிவாசன் வெளியிட்ட அறிவியல் ஆய்வுத் தாளில் பண்டைய வெண்கல உலோகவியல் பற்றிய விரிவான அலசல் ஆகும். இவ்வூரில்  கிடைத்த சிக்கலான நுண்ணிய கட்டமைப்புடன் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வெண்கலக் கலத்தின் நுண்கட்டமைப்பை எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலம் ஆராய்ந்து அதன் பண்புகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பொருள் பழுக்கக் காய்ச்சி வடிவமைத்த உயர் தர வெண்கலம் என்று நிறுவியுள்ளார்.

மேல் சிறுவலூர்

மேல் சிறுவலூர் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள சிறு கிராமம் ஆகும். இவ்வூர் மாமண்டூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், சங்கராபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 68 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் 12° 0′ 56.5596” N அட்சரேகை 78° 57′ 10.53” E தீர்க்கரேகை ஆகும். இவ்வூரின் பின்புறத்தில் காணப்பட்ட 25 x 9 மீ அகலமும்  5 மீ உயரமும் கொண்ட மேட்டில் தொல்லியல் உலோகவியல் களம் (archaeo-metallurgical site) செயல்பட்டதற்கான  சான்றுகள் கண்டறியப்பட்டன.

புடக்குகையில் எஃகு உற்பத்தி செய்யும் முறை (Crucible Steel Production) இவ்வூரில் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த மேட்டிலிருந்து 1/2 கி.மீ.   தூரத்தில் உள்ள கால்வாய்க்கு அருகில் புடக்குகைத் (Crucibles) துண்டுகள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டுள்ளன. கூடவே பளபளப்பான இரும்புக் கசடுகளும், இரும்புச் சிதைவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. ஊர் மக்களுக்குத் தங்கள் ஊரில் இந்த முறையில் எஃகு உற்பத்தியானது பற்றித்  தெரியவில்லை என்பது வியப்பு.

இவ்வூரில் இரும்புக்காலம் நிலவியது பற்றியது பற்றி அதிகளவில் சான்றுகள் கிடைத்துள்ளன. மேல்சிறுவலூரில் கண்டறியப்பட்ட உலையில் உருக்கும் செய்முறை மூலம் மேம்பட்டகார்பன் எஃகு உற்பத்தி பற்றிப் பேரா.சாரதா ஸ்ரீநிவாசன் தன் ஆய்வுத் தாளில் விவரிக்கிறார். இங்கு கண்டறியப்பட்ட வூட்ஸ் எஃகு பற்றி மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். இங்கு இரும்பைக் கரியுடன் சேர்த்து உலையில் உருக்கி மேம்பட்ட கார்பன் எஃகு உற்பத்தி செயயப்பட்ட செய்முறை பற்றி விரிவாக ஆய்வு செய்து தன் முடிவை வெளியிட்டுள்ளார்.

குட்டூர் (Guttur)

குட்டூர் தருமபுரி வட்டம், தருமபுரி மாவட்டம், அந்திஹள்ளி பஞ்சாயத்தில் அமைந்துள்ள சின்னஞ் சிறு கிராமம் ஆகும். குட்டூர் பின் கோடு 636906, தருமபுரியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள புதிய கற்கால மனித வாழிடம் மற்றும் ஈமக்காடு (Neolithic Human Habitational cum Burial site) ஒன்று கண்டறியப்பட்டது. இங்கு இரட்டை அடுப்பு இரும்பு வார்ப்படஉலை (Twin Hearth Cast Iron Foundry) நடைபெற்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த உலை கி.மு. 500 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் காலவரை செய்யப்பட்டுள்ளது. கெட்டியான இரும்பு படிந்த களிமண் குழாய்களின் ஓடுகளும் அதிக அளவில் இரும்புக் கழிவுகளும் (Iron Slags) கண்டறியப்பட்டுள்ளன.

பொற்பனைக்கோட்டை (Porpanaikottai)

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டம், (வேப்பங்குடி அஞ்சல்) பின்கோடு 622303 அருகே பொற்பனைக்கோட்டை தொல்லியல் களம் (10°22’55″N அட்சரேகை 78°52’15″E தீர்க்கரேகை) அமைந்துள்ளது. இங்குள்ள பழைமையான செம்புராங்கல் பாறையில் அமைக்கப்பட்ட உருக்கு உலைகள் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளுடன் கூடிய உலோகத் தொழிற்கூடம் கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டைப் பகுதியில் பாறையில் கட்டமைக்கப்பட்ட உலோக உருக்காலை தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. கொடுமணல், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட உலைகள் சுடு மண்ணால் அமைக்கப்பட்டிருந்தன.

ancient_metal_melting_vessels_at_porpanaikkottai

பொற்பனைக்கோட்டை அருகே காணப்படும் வட்ட வடிவ உலோக உருக்குக்கலன் PC: விக்கிபீடியா

இங்குள்ள பாறைகளில் ஆங்காங்கே துளைகள் காணப்படுகின்றன. ஒரு துளையின் எதிரே அமைந்துள்ள மற்றொரு துளையின் பக்கவாட்டில் நன்கு சிறிய துளைகள் காணப்படுகின்றன. இத்துளைகளின் வழியாகத் துருத்தி அமைத்துக் காற்றைச் செலுத்தி உலோகங்கள் உருக்கப்பட்டுள்ளது. இதன் அருகே காணப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் நிரப்பி உலோகங்கள் குளிர்விக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மேற்பரப்பில் கண்டறியப்பட்டுள்ள இரும்புக் கசடுகளும் வெப்ப உலைப்பூச்சு மற்றும் உருக்கு வேலைக்குப் பயன்படுத்தப்படும் குவார்ட்சைட் எனப்படும் சீனிக் கற்களும் இங்கு இரும்பு உருக்காலை செயல்பட்டதற்குச் சான்று பகர்கின்றன. இந்த உருக்காலை ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்று இந்த மாவட்ட தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் என்று கருதுகின்றனர்.

அரிக்கமேடு (Arikkamedu)

அரிக்கமேடு தொல்லியல் களம் பாண்டிச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் வட்டம், காக்காயன்தோப்பே கிராமத்தில் அமைந்துள்ளது. இது பாண்டிச்சேரி மாநிலத்திற்கும் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திற்கும் இடைப்பட்ட எல்லைக்கருகே அமைந்துள்ளது. இவ்வூர் பாண்டிசேரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இதன் சங்ககாலப் பெயர் வீராம்பட்டணம் ஆகும். வீரை முன்துறை என்று அகநானூறு (அகநானூறு பாடல் 206) குறிப்பிடுகிறது. இங்கு உலோக வேலை நடைபெற்றதற்கான சான்றாக  வடிவமில்லாத இரும்புக்கட்டிகளும் இங்கே கண்டறியப்பட்டுள்ளன.

மோதூர் (Modur)

மோதூர் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் கரிமங்கலதிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் தருமபுரியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. தமிழ் நாடு தொல்லியல் துறை மோதூரில் புதிய கற்கால மானித வாழ்விடத்தைச் சேர்ந்த களத்தில்  மேற்கொண்ட அகழ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ள 365 தொல்பொருட்கள் கி.மு. 3000 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் காலவரையறை செய்யப்பட்டுள்ளது.  இவற்றுள் 17 வேறுபட்ட புதிய கற்காலக் கருவிகளும் கோடரியும் அடங்கும். இரும்பினால் செய்யப்பட்ட அம்பின் முனையும் (Arrow Head), இரண்டு பெரிய உலைகளும் கோப்பை வடிவத்தில் ஒன்பது உலோகங்களை உருக்கப் பயன்படும் மண் பாத்திரங்களும் (Crucibles) கண்டறியப்பட்டுள்ளன. தடிமனாக வனையப்பட்ட பாத்திரங்களின் உட்புறங்களில் இரும்புக் கசடுகள் ஒட்டிக்கொண்டு உள்ளன.

பேரூர் (Perur)

கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  பேரூர் பின் கோடு 641010 பகுதிதியில் கண்டறியப்பட்ட முடிக்கப்பட்ட இரும்புப் பொருட்களும் இரும்புத் தாதுக்களும் (Ores) கசடுகளும்  இப்பகுதியில் இரும்பை உருக்கிப் பிரித்தெடுக்கும் தொழில் நடைபெற்றதற்குச் சான்றாக அமைகின்றன.

குறிப்புநூற்பட்டி 

  1. கா.ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம் 2004, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 113.
  2. கொடுமணல் அகழ்வாய்வு. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை. 2011. 38 பக்.
  3. செ.இராசு தொல்லியல் நோக்கில் சங்ககாலம்  http://www.tamilheritage.org/old/text/etext/nirutha/thol.html
  4. புதுக்கோட்டை- பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டுகள் பழமையான உலோக தொழிற்கூடம்! http://tamilsnow.com/?p=95632
  5. புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் 2,500 ஆண்டுகள் பழமையான உலோக தொழிற்கூடம் கண்டுபிடிப்பு. இந்து தமிழ் திசை செப்டம்பர் 30, 2016.
  6. புதையுண்ட தமிழகம் பெருங் கற்படைக் காலம் (இரும்புக் காலம் முதல் சங்க காலம் வரை – 3) ச. செல்வராஜ்
  7. சஞ்சீவிகுமார் டி.எல். ஒரு நதியின் வாக்குமூலம்: பவானியைக் காப்போம் வாருங்கள்! இந்து தமிழ் திசை ஜூன் 21, 2015
  8. வணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும் in எங்கள் வாழ்வும் எங்கள் வளமும். தேமொழி அறிவொளி பதிப்பு மார்ச் 2018 பக். 82 – 91
  9. Adichanallur: A Prehistoric Mining Site. Sasisekaran.B. and others. Indian Journal History of Science. 45, 3; 2010; pp.369 – 394 https://www.insa.nic.in/writereaddata/UpLoadedFiles/IJHS/Vol45_3_3_BSasisekara.pdf
  10. Approval given for excavations at Modhur and Andipatti The Hindu Wednesday, Dec 15, 2004 https://www.thehindu.com/2004/12/15/stories/2004121505270700.htm
  11. Archaeological Dept. to take up excavation in Dharmapuri The Hindu Wednesday, Dec 15, 2004 https://www.thehindu.com/2004/12/15/stories/2004121502080300.htm
  12. Bronson, B. (1986) ‘The making and selling of wootz – a crucible steel of India’, Archeomaterials 1(1): 13–51
  13. Focus on archaeological importance of Dharmapuri
    The Hindu Wednesday, JULY 24, 2006 https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/focus-on-archaeological-importance-of-dharmapuri/article3109422.ece
  14. Following the Roman trail The Hindu Aug 17, 2003 https://www.thehindu.com/thehindu/mag/2003/08/17/stories/2003081700370800.htm
  15. Kodumanal http://www.tnarch.gov.in/excavation/kod.htm
  16. Kodumanal excavation yields a bonanza again T. S. Subramanian The Hindu , MAY 28, 2012 (Updated: JULY 11, 2016) https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/kodumanal-excavation-yields-a-bonanza-again/article3463120.ece
  17. Percy, J. (1860–80) Metallurgy, vol. 2, part 3. The Netherlands: Dearchaeologische pers Nederland.
  18. Rajan, K. (1990) ‘New light on the megalithic cultures of the Kongu region, Tamil Nadu’, Man & Environment 16(1): 93–102.
  19. Sasisekaran, B. (2004) Iron Industry and Metallurgy: A Study of Ancient Technology. Chennai: New Era Publications.
  20. Sharada Srinivasan. Indian Iron and Steel, with special reference to southern India. Academia.edu
  21. Sharada Srinivasan. Iron Age & History of Indian Iron Making. Iron and Steel Association. https://indsteel.org/iron-age/
  22. Schoff, W.H., The eastern trade of the Roman empire, Journal of the American Oriental Society, New York. vol.35, 1915,
  23. Srinivasan, S. and Griffiths, D. (1997) ‘Crucible steel in south India: preliminary investigations on crucibles from some newly identi- fied sites’, in P. Vandivar, J. Druzik, J. Merkel and J. Stewart (eds), Material Issues in Art and Archaeology V, 111–27. Warrendale, PA: Materials Research Society.
  24. Srinivasan, S. (2007) ‘on higher carbon and crucible steels in southern India: further insights from Mel-siruvalur, Kodumanal and Patti- nam’, Indian Journal of History of Science 42(4): 673–95.
  25. Tamils Heritage. Natana Kasinathan. April 2006. pp. 25 – 30
  26. Unearthing an industrial past. T.S. Subramanian. Frontline. Volume 29 – Issue 15 :: Jul. 28-Aug. 10, 2012 https://www.frontline.in/static/html/fl2915/stories/20120810291506200.htm

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தமிழ், தமிழ்நாடு, வரலாறு and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும்

  1. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    படிக்கப் படிக்க வியப்புதான் ஏற்படுகிறது ஐயா

    Liked by 1 person

  2. Dr B Jambulingam சொல்கிறார்:

    தொழில்நுட்பத்தைப் பற்றி அறியும்போது அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது.

    Liked by 1 person

  3. எவ்வளவு பிரமிப்பான விடயங்கள்.

    Liked by 1 person

  4. ஸ்ரீராம் சொல்கிறார்:

    பிரமிக்க வைக்கும் விஷயங்கள். படங்கள் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. உங்கள் உழைப்பு போற்றத்தக்கது.

    சற்றே நீளமான பதிவானதால் மூன்று தவணைகளில் படித்தேன்!

    Liked by 1 person

  5. பிங்குபாக்: தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும் – WETA

  6. பிங்குபாக்: தமிழகத்தின் இரும்புக் காலம்: 2 இரும்பு உருக்காலைத் தொழில் நுட்பமும் இரும்பின் பயன்பாடும் – WETA

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.