கொடுங்குன்றநாதர் கோவில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், பிரான்மலை பின் கோடு 630502 கிராமத்தில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டுத் தேவாரப் பதிகளில் ஐந்தாவதாகக் கருதப்படும் கொடுங்குன்றநாதர் கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் கடையெழு வள்ளல்களில் புகழ்பெற்ற வேள்பாரி என்ற வேளிர் குடிப்பிறந்த குறுநிலமன்னன் ஆட்சி செய்த இப்பகுதிக்குப் பறம்பு நாடு என்று பெயர். இவன் பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். பறம்பு மலை என்ற பெயர் மருவி பிரான்மலை ஆயிற்று.
திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற புகழ்பெற்ற வணிகக் குழுவினர் இப்பகுதியில் வணிகம் புரிந்துள்ளனர். அழகிய திருசிற்றம்பலமுடைய நாயனார் (கொடுங்குன்றநாதர்) கோவிலில் அமைந்திருந்த திருக்காவனத்தில் ஐந்நூற்றுவரின் பதினோரு குழுக்கள் (Eleven Groups of Ainurruvar) கூடினர். தங்கள் வணிகப் பொருட்களின் மீது, சுமைக்கேற்றவாறு குறிப்பிட்ட தொகையைப் பட்டணப் பகுடியாக விதித்தனர். இதன் மூலம் வசூலாகும் தொகையைக் கோவில் திருப்பணிகளுக்கு அளிப்பதாக ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர். இந்தச் செய்தியினை இங்குள்ள கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று பதிவு செய்துள்ளது.
அமைவிடம்
இவ்வூரின் அமைவிடம் 10° 14′ 19″ N அட்சரேகை, 78° 26′ 13″ E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இவ்வூரின் உயரம் 609.6 மீ (2,000 அடி) ஆகும். இவ்வூர் சிங்கம்புணரியிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) 26 கி.,மீ. தொலைவிலும், நத்தம் 28 கி.மீ. தொலைவிலும், அழகர்கோவில் 49 கி.மீ. தொலைவிலும், திருமயம் 49 கி.மீ. தொலைவிலும், மணப்பாறை 57 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல் 63 கி.மீ. தொலைவிலும், மதுரை 64 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டை 71 கி.மீ. தொலைவிலும், திருச்சிராப்பள்ளி 84 கி.மீ. தொலைவிலும், சென்னை 433 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 4145 (ஆண்கள் 2087 பெண்கள் 2058; மொத்த வீடுகள் 966) ஆகும்.
பறம்புமலை
கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய வேள்பாரி பறம்பு மலையைத் தலைநகராகக் கொண்டு இந்த மலையைச் சூழ்ந்திருந்த முன்னூறு ஊர்களை ஆண்டு வந்தான். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டான். வேள்பாரியின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு எனக் கால வரையறை செய்யப்பட்டுள்ளது.
சங்க இலக்கியத்தில் கடையெழு வள்ளல்களுள் அதிகமான சங்க இலக்கியப் பாடல்கள் பெற்றவன் வேள்பாரி ஆவான். ‘பொய்யாநாவிற் கபிலர்’ என்று புகழப்பட்ட சங்ககாலப் புலவரான கபிலர் சங்க இலக்கியப் பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர். திருவாதவூரில் பிறந்த கபிலர் வேள்பாரியைச் சிறப்பித்துப் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் வேள்பாரியின் மீதும் பாரி மகளிர் மீதும் 21 புறநானூற்றுப் பாடல்களைப் பாடியுள்ளார். (பார்வை: புறநானுறு பாடல்கள் எண்: 8, 105 – 111, 113 – 120, 200-203, 236, 337). வேள்பாரியின் உயர்ந்து நிற்கும் பறம்புமலை, அருவி உள்ளிட்ட இயற்கை வளங்களும் கபிலரால் வியந்து பாடப்பட்டுள்ளன.
பாரி பறம்பின் பனிச்சுனை போலக்,
காண்டற்கு அரியளாகி
(புறநானூறு 337 கபிலர்)
பாரியின் பறம்பு மலையில் பனிநீர்ச் சுனை ஒன்று உண்டு. அதனை யாரும் அத்துணை எளிமையாகப் பார்க்க முடியாது என்றும் இந்தப் பாடலின் தலைவியும் காண்பதற்கு அரியவள். என்கிறார் கபிலர்.
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி சாரல்
பறம்பிற் கோமான் பாரி”
(சிறுபாணாற்றுப்படை.88-91; நல்லூர் நத்தத்தனார்)
முல்லைக்குத் தேர் கொடுத்த நிகழ்வு கபிலரால் பாடப்படவில்லை என்றாலும் நல்லூர் நத்தத்தனார் இந்த நிகழ்வை வியந்து “பறம்பிற் கோமான்” என்று வேள்பாரியைப் புகழ்கிறார்.
வேள்பாரியின் பறம்பு மலையே பிறம்பு மலை என்று திரிந்து இன்று பிரான்மலை என்று மருவிவிட்டது. இவ்வூர் கொடுங்குன்றம் என்ற பெயரிலும் புராண இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சிவலிங்கத்தைப் போலத் தோற்றம் தரும் இந்தக் கொடுங்குன்றம் வின்னைமுட்டி நிற்பதாக ஒரு புலவர் வியந்து போற்றுகிறார்.
ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும்; சிறுவரை
சென்றுநின் றோர்க்கும் தோன்றும் மன்ற;
(புறநானூறு பாடல் 114; கபிலர்)
என்று கபிலர் தம் பாடலில் குறிப்பிட்டது போலவே இம்மலை 2500 அடி உயரத்துடன் நெடிதுயர்ந்து நிற்கிறது. கோட்டைச் சுவர்களால் சூழப்பட்ட இக்குன்றின் மேல் மலையேற்றம் செய்வது மிகவும் கடினம் தான்.

பறம்புமலை PC: Wikipedia
அடிவாரத்தில் கொடுங்குன்றநாதர் கோவில் அமைந்துள்ளது. மலையின் நடுவில், 500 அடி உயரத்தில் வடுக பைரவர் சன்னதி அமைந்துள்ளது. குன்றின் உச்சியில் மங்கைபாகர் சன்னதியுடன் கூடிய குடைவரைக் கோவிலும் வலியல்லாஹ் ஷேக் அப்துல்லா சாஹப்பிற்கு ஒரு தர்க்காவும் அமைந்துள்ளன. ஊமைத்துரை காலத்துப் பீரங்கி ஒன்றும் பீரங்கி மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. மருதுபாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட அகழியும் கோட்டைச் சுவர்களும் இருந்ததற்கான தடயங்களை இன்றும் காணலாம். இவையெல்லாம் 19 ஆம் நூற்றண்டில் அழிக்கப்பட்டுள்ளது.

பறம்பு மலை PC: Wikipedia
நெல்வயல்களையும் தென்னை மற்றும் வாழைத் தோப்புகளையும். அடர்ந்த புதர்களையும் இன்று நாம் காண்கிறோம். கிழக்குச் தொடர்ச்சி மலைத் தொடரின் கடைசிக் குன்றம் இதுவாகும். இயற்கை கொஞ்சும் இம்மலையில் பொழுது விழுந்தான் சுனை, மஞ்சள் சுனை, காசிச் சுனை போன்ற நீர்சுனைகளையும், 57 தீர்த்தங்ககளையும், வெள்ளைப் பிள்ளையாரையும் கண்டுகளிக்கலாம். பாரி முல்லைக் கொடிக்குத் தன் தேரினை ஈந்து உதவியதாகக் கருதப்படும் இடம் பிரான்மலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கல்லில் அமைக்கப்பட்ட நான்கு தேர்க்கால்கள், ஒரு சப்பரம், கருங்குண்டு போன்றவற்றைக் காணலாம். புவியியல் துறை ஆய்வாளர் நிலையமும் இங்கு உள்ளது.

திருக்கொடுங்குன்றம் என்னும் பிரான்மலை: கோவில் PC: Wikipedia
- பிரான்மலை கொடுங்குன்ற நாதர் கோவிலில் அடிவாரம், நடுப்பகுதி மற்றும் மலை உச்சி என்று மூன்று நிலைகளில் சன்னதிகள் உள்ளன.
- அடிவாரத்தில் கொடுங்குன்றநாதர் கோவில் அமைந்துள்ளது.
- இறைவன்: கொடுங்குன்றீசர். சிவலிங்க வடிவம்.
- அம்மன்: குயிலமுத நாயகி
- கொடுங்குன்றநாதர் கோவில் பிரகாரத்தில் அறுபத்துமூவர், விநாயகர், அர்த்தநாரீஸ்வரர் சன்னதிகள் அமைந்துள்ளன. நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் காட்சி தருவது இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு. பிரகாரத்தில் கூரையிலிருந்து தொங்கும் கற்சங்கிலி வளையங்கள் கலை நயமிக்கவை.
- சுந்தரபாண்டியன் மண்டபம், லட்சுமி மண்டபம் போன்ற மண்டபங்களும் இடம்பெற்றுள்ளன.
- தல விருட்சம்: உறங்காப்புளி
- சிறப்பு: ஐப்பசி முதல் பங்குனி வரை 6 மாதங்களுக்குச் சூரியக் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுவது சிறப்பு.
- மலையின் நடுவில் 500 அடி உயரத்தில் வடுக பைரவர் சன்னதி அமைந்துள்ளது. வடுக என்றால் பிரமச்சாரி என்றும் வீரன் என்று இங்கு பொருள் கொள்கின்றனர். கோவில் கருவறை, அர்த்தமண்டபம், முக மண்டபம் ஆகிய உறுப்புகளைக் கொண்டுள்ளது. தெற்கு நோக்கிய சன்னதியில் பைரவர் சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் தாங்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் கருவறையில் வாள் சார்த்தி வைத்துள்ளார்கள். காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, விநாயகர், தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களுக்கும் இங்கு துணை சன்னதிகள் உள்ளன.
- மலை உச்சியில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய குடைவரைக் கோயில் உள்ளது. இங்கு சிவன் மங்கைபாகர் என்னும் பெயர் கொண்டு திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியருக்காக இறைவி தேனாம்பிகையுடன் இணைந்து காட்சி தருகிறார். மணக்கோலத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்கள் கூடியுள்ளனர். இறைவன் சிலை நவ மூலிகைச் சாற்றால் வடிக்கப்ட்டுள்ளதாம். எனவே திருமுழுக்காட்டு இல்லை. சந்தனம் மற்றும் புனுகுக் காப்பு மட்டும் இடுகிறார்கள். காசி ராஜனால் அளிக்கப்பட்ட உடையவர் சிவலிங்கத்திற்கு அபிசேகம் உண்டு.
- மணக்கோலத்தில் காட்சி தருவதாலும் நந்தி கைலாயத்தில் மணக்கோலம் கான்பதாலும் மங்கைபாகர் எதிரில் நந்தி, கொடிமரம், பலிபீடம் இல்லாதது சிறப்பு. மங்கைபாகர் தினமும் புத்தாடை அணியும் போகமூர்த்தி வடிவம் ஆவார். வேதங்களுடன் காட்சி தரும் இவருக்கு வேத சிவன் என்ற பெயருமுண்டு.
- மலைக்கோவில் முன்மண்டபத்தின் மேற்குச் சுவரில் தேவர்கள் மற்றும் அசுரர்கள் சிற்பங்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.
- திருவிழாக்கள்: சித்திரை பிரமோத்சவம், வைகாசி விசாகம், சிவராத்திரி, கார்த்திகை.
- பாடியோர்: திருஞானசம்பந்தர் தேவாரம், அருணகிரிநாதர் திருப்புகழ்
- கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் 12.00 வரை மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை. மலைக்கோவிலில் உள்ள மங்கைபாகர் சன்னதி 06.30 மணி வரை.
கல்வெட்டு:
கொடுங்குன்றத்தில் 21 கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் 1903 ஆம் ஆண்டில் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 8 கல்வெட்டுகள் படித்து ஆய்வு செய்து முடிக்கப்பட்டன என்றும் மீதிக் கல்வெட்டுகள் படிக்கப்பட வேண்டும் என்றும், குலசேகரபாண்டியனின் 10 மற்றும் 13 ஆம் ஆட்சி ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் நான்கு என்றும் ஸெவல் பாதிரியார் எழுதியுள்ளார்.
இக்கோவிலில் 1924 ஆம் ஆண்டில் படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் 16 ஆகும். இவற்றுள் 5 கல்வெட்டுகள் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தனவாகும். மீதிக் கல்வெட்டுகள் விஜயநகர அரச வம்சத்தைச் சேர்ந்தனவாகும்.
ஐந்நூற்றுவர் வணிகக்குழு
ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் கி.பி. 8 – 13 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே தமிழகத்தில் வணிகம் மேற்கொண்ட புகழ்மிக்க வணிகக் குழுவினர் ஆவர். ஐயபொழில்புரத்து பரமேச்வரி பட்டாரகி ஐந்நூற்றுவர் தெய்வமாகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறாள். ஐந்நூற்றுவர் என்பார் ஐயபொழில்புரத்தைச் சேர்ந்த ஐந்து நூறு பெருமான்கள் (Five Hundred Lords of Ayyavalepur) என்றும் ஐயபொழில்புரத்தைச் சேர்ந்த ஐந்து நூறு சுவாமிகள் (Five Hundred Swamis of Ayyavalepur) என்றும் கல்வெட்டுகள் வழியாக இவர்கள் அறியப்பட்டனர். இவர்கள் கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த, கி.பி 10 மற்றும் கி.பி 12 நூற்றாண்டுகளுக்கிடையில் மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த, ஐஹோளே (Aihole) என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர்.
ஐந்நூற்றுவர் தங்கள் உறுப்பினர்களைப் பல்வேறு மதம் மற்றும் இனப்பிரிவுகளிலிருந்து சேர்த்தனர். ஐந்நூற்றுவர்களுக்குள்ளே தேசிகள் (உள்நாட்டு வணிகர்கள்) பரதேசிகள் (வெளிநாட்டு வணிகர்கள்) என்று பல்வேறு துணைப் பிரிவுகள் இருந்தன. இந்த வணிகக் குழுக்கள் தங்களுக்கென்று கடுமையான சாசனங்களையோ (Charter) சட்டங்களையோ (laws) அல்லது அமைப்பு விதிகளையோ (bye-laws) இயற்றிக்கொள்ளவில்லை. அவ்வப்போது பல்வேறு நிகழ்விடங்களில் (Venues) (பெரும்பாலும் கோவில் மண்டபங்களில்) ஏற்பாடு செய்து தேவைக்கேற்ப கூட்டப்பட்ட (Convened) ஐந்நூற்றுவர் வணிகர் குழுவின் கூட்டங்களின் நடவடிக்கைகள் (Proceedings of the Meetings), மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் (Resolutions Passed), எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் (Actions Taken) போன்ற வரலாற்றுச் செய்திகளை மெய்கீர்த்தியுடன் கல்வெட்டுகளாகப் பதிவு செய்தனர்.
தங்கள் குழுவில் இடம்பெற்ற வணிக உறுப்பினர்களுக்கு ஐந்நூற்றுவர் குழுவினர், அரசியல் மற்றும் பொருளாதார அளவிலான பாதுகாப்பினை (Political and Economic Protection) அளித்தனர். வணிகப் பயணங்களின்போது, இக்குழுவில் இடம்பெற்ற ஆயுதம் தாங்கிய வணிகர் படைப் பிரிவினர் (Armed Forces Division), வணிகச் சாத்துக்களுக்கும் (வணிகப் பொருட்கள்) வணிகர்களுக்கும் பாதுகாப்பளித்தனர். இவ்வாறு பாதுகாப்பளித்த வணிகப் படைவீரர்கள் தங்களை வீரவளஞ்சியர் (தெலுங்கு: வீரபலிஜா) என்று அழைத்துக்கொண்டனர். நானாதேசி, பதினெண் விஷயம் / பதினெண் விஷயத்தார் (பதினெட்டுப் பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள்), பதினெண்பூமி (பதினெட்டுப் நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள்) ஆகிய விருதுப் பெயர்களால் தங்களை அழைத்துக்கொண்டனர். “ஐந்நூற்றுவர், பதினெண் விஷயத்தார், பதினெண்பூமி, நானாதேசி ஆகியவை ஒரே அமைப்பின் பெயர்களே என்று நாம் நம்பலாம் மக்கள் எந்தப் பெயரை விரும்பினார்களோ அதைப் பயன்படுத்தினர்.
“அறம் வளர கலி மெலிய” போன்ற தொடர்கள் வணிகர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அறம் வளர்ப்பதும் கலி (காலத்தின்) இன்னல்களை மட்டுப்படுத்தவும் வணிகர்கள் அறச்செயல்களைச் செய்ய முற்பட்டனர். சோழர்கள் காலத்தில் கோவில்கள் சமுதாய / பொருளாதார மையங்களாக முக்கியத்துவம் பெற்றன. பல கல்வெட்டுகள் கோவிலுக்கு வணிகர்கள், தங்கள் இலாபத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, அளித்த பொன் மற்றும் பொருட்கொடை பற்றிப் பதிவு செய்துள்ளன. பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் வணிகர்கள் பல கோவில்களுக்கு மிகுந்த ஆதரவு நல்கினர். கோவிலிலிருந்து இவர்களுக்குப் பல உரிமைகள் அளிக்கப்பட்டன.
ஐந்நூற்றுவர் கர்நாடக மாநிலத்தின் ஐஹோளேயிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது. ஐஹோளேயை அடுத்து, தமிழகத்தில் புதுக்கோட்டை அருகே கண்டறியப்பட்ட கி.பி. 870 ஆம் ஆண்டைச் சேர்ந்த முனைசந்தைக் கல்வெட்டும் கி.பி. 927 ஆம் ஆண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டும் இந்த வணிகக் குழுவினரை “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்” என்ற பெயரில் அடையாளப்படுத்துகிறது. இந்த வணிகக்குழு குறித்துத் தமிழகத்தில் முதலில் கண்டறியப்பட்ட கல்வெட்டு இவையாகும்.
கொடும்பாளூரை ஆண்ட இருக்குவேளிர்கள் இந்த வணிகர் குழுவினருக்கு ஆதரவு அளித்துள்ளனர். “திசை ஆயிரம்” என்பது ஆயிரம் திசைகளிலும் பயணித்து வணிகம் புரிந்தோரின் குழு. ஆகும். கரூர் மாவட்டத்தின் மேல்நங்கல்வரு, திருச்சி மாவட்டத்தின் இடைமலைப்பட்டிபுதூர், காளியாம்பட்டி, சிங்களாந்தகநல்லூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பொழிச்சலூர் போன்ற ஊர்களில் இந்த வணிகக் குழுவினர்களின் கல்வெட்டுகள் சங்கு, கோடரி, விளக்கு ஆகிய சின்னங்களுடன் காணப்படுகின்றன.
பத்தாம் நூற்றாண்டிற்கும் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வணிகர்களுக்குச் சோழர்கள் அளித்த ஆதரவு மூலம் சோழப் பேரரசை தென்கர்னாடகம் மற்றும் கொங்குநாட்டுப் பகுதிகளில் விரிவடையச் செய்தனர். வணிகர்களும் ஆந்திர மாநிலம் விசாகபட்டணம் ஓடிஸா மாநிலத்தின் கஞ்சம் போன்ற பகுதிகளுக்குப் பரவினர். தென்கிழக்கு ஆசியாவிலும் (இந்தோனேஷியா (சுமத்ரா), தாய்லாந்து மியன்மார்) ஐந்நூற்றுவர் குறித்துப் பல கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஐந்நூற்றுவர் கல்வெட்டுகளை நோபுரு கராஷிமா இரண்டு விதமாகப் பிரித்து ஆய்ந்துள்ளார்: 1. எறிவீரப்பட்டணம் கல்வெட்டுகள் – “வணிகர்களும் படை வீரர்களும் வாழ்ந்த ஒரு நகரத்துக்கு ஏறிவீரபட்டணம் என்ற தகுதியை வழங்க வணிகர்கள் எடுத்த முடிவை இத்தகைய கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன.” 2. “பட்டணப் பகுடி” கல்வெட்டுகள் – “வணிகர்கள் தங்கள் இலாபத்திலிருந்து ஒரு பகுதியை கோயில் திருவிழாக்கள் திருப்பணிகள் ஆகியவற்றிற்கு வழங்க எடுத்த முடிவைப் பதிவு செய்கின்றன.”
“பட்டணப் பகுடி” என்பதற்கு “நகரின் பங்களிப்பு” என்று பொருள்.” பட்டணப் பகுடி, சில தமிழ்க் கல்வெட்டுகளில் “மகமை” என்றும் கன்னடக் கல்வெட்டுகளில் “தர்மாயம்” என்றும் குறிப்படப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் 53 பட்டணப் பகுடிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை கி.பி. 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டவை ஆகும். தமிழ் நாட்டில் காணப்படும் 35 பட்டணப் பகுடிக் கல்வெட்டுகள் கி.பி. 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்டவை ஆகும். குறிப்பிட்ட கோவில் திருவிழாக்கள் திருப்பணிகள் போன்றவற்றை நடத்துவதற்குப் பட்டணப் பகுடி வசூலிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய பட்டணப் பகுடித் தொகை அவர்கள் வணிகம் புரிந்த பொருட்களின் அடிப்படையில் இருந்தது என்பது பட்டணப் பகுடி கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.
பிரான்மலைக் கல்வெட்டு
பிரான்மலைக் கல்வெட்டு (A.R.E. 154 of 1903; S.I.I. VIII, 442) வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலையும் இவற்றிற்கு விதிக்கப்பட்ட பட்டணப் பகுடி விகிதங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. இக்கல்வெட்டு ஐநூற்றுவரின் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. “நானாதிசைகளிலுமுள்ள பதினெண் விஷயத்தார் சபையில் அங்கம் வகிக்கும் குழுக்களின் முழுமையான பட்டியலை” பிரான்மலைக் கல்வெட்டுப் பதிவு செய்கிறது. பதி னெண் விஷயம், பதினெண்பூமி, நானாதேசி போன்ற குழுக்களின் பெயர்கள் குழுக்களாகவோ தனித்தனியாகவோ குறிப்பிடப்படுகின்றன. இவை ஐநூற்றுவருக்கான வேறொரு பெயராகவே பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுவில் இடம்பெற்ற அய்யவோளே, கொடும்பாளூர் மணிக்கிரமத்தார், மற்றும் பதினொரு நகரத்தார் இங்கு கூடினர். பதினொரு நகரத்தார் என்று குறிப்பிட்டது செட்டிகள் (Settis), செட்டிபுத்திரர்கள் (Settiputars), கவறேக்கள் (Kavares), கந்தளிகள் (Kandalis), பத்ராக்ஷர்கள் (Bhatraksas), கவுண்ட (காமுண்ட) சுவாமிகள் (Gavunta-Svamins), சிறுபுள்ளி (Sirupulli), வலத்துக்கை (Valattukkai), வரியன்கள் (Variyan) ஆகியோர் ஆவர். இக்கல்வெட்டில் நகரத்தார் என்று குறிப்பிட்டது நாட்டுக்கோட்டை நகரத்தாரையே குறிக்கும் என்று ஆய்வாளர் மீரா ஆப்ரஹாம் (Meera Abraham) வலியுறுத்துகிறார். ஓம்படைக் கிழளயில் பதினெண் விஷயத்தாரின் ஆணைப்படி என்று கோவில் கணக்கரால் பொறிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்கொடுங்குன்றம் குன்றின் அடிவாரத்தில் உள்ள அழகிய திருசிற்றம்பலமுடைய நாயனார் கோவிலில் அமைந்திருந்த திருக்காவனத்தில் ஐந்நூற்றுவரின் பதினோரு குழுக்கள் (Eleven Groups of Ainurruvar) பட்டணப் பகுடி பற்றி முடிவெடுப்பதற்குக் கூடினர்.
இதில் பங்கேற்ற பதினோரு குழுக்களில், இப்பகுதியில் அமைந்துள்ள மாத்தூர் கிராமத்தின் பிரதிநிதிகளும் அடங்குவர். இவர்கள் நகரத்தார் என்னும் வணிக இனக் குழுவினர் ஆவர். நகரம் என்ற சொல் வணிகர்களின் முதன்மைப் பேரவையைக் (Primary Assembly of Merchants) குறிப்பிடுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார் (செட்டிகள்) இனத்தில் புறமண உறவுடைய (Exogamous) ஒன்பது கிளைகளுடன் (Clans) கூடிய உறவு முறைமை (Kinship) உண்டு. இவர்களின் நகரம் என்னும் பேரவை (Nagaram Assembly) ஒன்பது சிவன் கோவில்களில் செயல்பட்டது. இவர்களில் ஒரு கிளையினர் (Clan) மாத்தூர் பெரியநாயகியம்மன் உடனுறை ஐநூற்றீஸ்வரர் கோவிலை (சிவன்) குலதெய்வமாகக் கொண்டவர்கள். இக்கோவிலில் இன்றும் ஐநூற்றீஸ்வரர் (Ainurrisvarar) என்னும் ஐவோளே வணிகக் குழுவின் கடவுள் மூலவராக வழிபடப்படுகிறார்.
அழகிய திருசிற்றம்பலமுடைய நாயனார் கோவில் திருப்பணிக்காக ஓவ்வொருவரும் செலுத்தவேண்டிய பட்டணப் பகுடியை இவர்கள் வணிகம் புரிந்த பொருட்களின் அடிப்படையில் வசூலிக்கத் தீர்மானித்தனர். வணிகப் பொருட்களின் அடிப்படையில் பட்டணப் பகுடி பகிர்ந்து கொள்ளப்பட்ட முறையை இக்கல்வெட்டு விரிவாகப் பதிவு செய்துள்ளது.
வணிகப் பொருட்கள் / அளவு மற்றும் எண்ணிக்கை
மஞ்சள், மிளகு, கடுகு, சீரகம், எள், சுக்கு, பாக்கு, வெங்காயம், மெழுகு, சொரசொரப்பான ஆடைகள், மென்மையான ஆடைகள் முதலிய பொருட்கள் பொதியாகவும், தலைச்சுமையாகவும், சிறு சிறு மூட்டைகளாகவும் அங்காடிகளுக்கு அனுப்பப்பட்டன.
அரிசி, நெல், அவரை, துவரை, பயறு, உப்பு, ஆமணக்குக் கொட்டை, பருத்தி, நூல், இரும்பு ஆகிய பொருட்கள் வண்டிகளில் ஏற்றி அனுப்பப்பட்டன.
சந்தானம் பொதியாகக் கொண்டு செல்லப்பட்டதைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
அகில், கற்பூரத் தைலம் ஆகிய பொருட்கள் தலைச்சுமையாக இறங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சவரி முடிகூடத் தலைச்சுமையாக விற்பனைக்குக் கொண்டுவந்தாக இந்தக் கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது.
தேனைக் குடத்தில் கொண்டு வந்து விற்றார்கள். இங்கு நறுமணப் பொருட்களான சவ்வாது, சாந்து, பன்னீர், புனுகு ஆகியவற்றை மக்கள் மிகவும் விருப்பத்துடன் வாங்கினார்கள் என்ற செய்தியை இக்கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது.
செலுத்தவேண்டிய பட்டணப் பகுடி
பொதியாகக் கொண்டு வரப்பட்ட பொருட்களுக்குப் பொதிக்கு ஒரு காசு வீதம் பட்டணப் பகுடி வசூலித்து வந்த நிதி கோவிலுக்கு அளிக்கப்பட்டது. இது போல வண்டியில் ஏற்றப்பட்டு வந்த பொருட்களுக்கு வண்டிக்குப் பத்துக் காசு மற்றும் இருபது காசு என்ற விகிதங்களில் வசூலித்த வந்த பட்டணப் பகுடி நிதியைக் கோவிலுக்கு அளித்தனர்.
தலைச்சுமை, சிறு மூட்டைகளைக் கொண்டுவந்தவர்கள் தங்கள் பொருளை விற்றுப் பெற்ற வருவாயில் இருந்து அரைக்காசு கொடையாக அளித்துக் கோவில் விழா நடைபெற உதவினர்.
இவ்வாறு தங்கள் வணிகப் பொருட்களின் அடிப்படையில் சுமைக்கேற்றவாறு குறிப்பிட்ட தொகையைப் பட்டணப் பகுடியாக நிர்ணயத்தனர். இதன் மூலம் பெறப்பட்ட தொகையைக் கோவில் திருப்பணிகளுக்கு அளிப்பதாக ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர்.
இப்பகுதியில் விவசாயம் மற்றும் உற்பத்திப் பொருட்களின் வணிகம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. இறக்குமதி செய்யப்பட்ட பல ஆடம்பரப் பொருட்களுக்கு தேவையான உடனடி சந்தையைக் கோவிலும் உயர்மட்டக் குழுவினரும் அளித்தனர்.
https://tamilnadu-favtourism.blogspot.com/2016/08/kodunkundranathar-temple-piranmalai_8.html
குறிப்புநூற்பட்டி
- அருள்மிகு குயிலமுத நாயகி உடனுறை கொடுங்குன்றீசர் http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=111
- அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோயில் தினமலர் கோயில்கள் http://temple.dinamalar.com/New.php?id=392
- இந்தியப் பெருங்கடலிலும் தென்கிழக்காசியாவிலும் தென்னிந்திய வணிகச் சங்கங்கள் நோபுரு கராஷிமா. பக். 156 -182; நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை: தென்கிழாக்காசியாவில் சோழர்களின் கடற்பயணங்கள். ஹெர்மன் குல்கே, விஜய் சகுஜா, கேசவபாணி, கே. (தொகுத்தோர்) இன்ஸ்டிட்யூட் ஆஃப் சவுத்ஈஸ்ட் ஏஷியன் ஸ்டடீஸ் 2011. 387 பக்கங்கள்
- கிருஷ்ணபட்ணம் சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவினர் பற்றிய விரிவான தகவலுடன் கல்வெட்டுகள் அகரம் நவம்பர் 17, 2018
- கொடுங்குன்றீஸ்வரர் கோவில், திருகொடுங்குன்றம் http://www.shivatemples.com/pnadut/pnt05.php
- பழந்தமிழ் வணிகர்கள் சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள். கனகலதா முகுந்த். தமிழில்: எஸ்.கிருஷ்ணன். கிழக்குப் பதிப்பகம். 2016. 160 பக்கங்கள்.
- பாரியின் பறம்பு மலை தீக்கதிர்
- பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரி: சுக்ரீஸ்வரர் கோவில் கல்வெட்டில் தகவல். தினமலர் ஆகஸ்டு 24, 2015
- வணிகர்கள் இரா கலைக்கோவன் http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1266
- Constructing Community: Tamil Merchant Temples in India and China, 850 – 1281. Risha Lee, Ph.D Thesis. Columbia University. 2012 p.319
- Hills and tales Soma Basu The Hindu April 04, 2013 https://www.thehindu.com/news/cities/chennai/hills-and-tales/article4580711.ece
- Historical overview and contextualisation – Shodhganga http://shodhganga.inflibnet.ac.in/bitstream/0603/31094/8/08_chapter%201.pdf
- Merchant Guilds and Overseas Trade in the Medieval Tamil Country. Selvi. P. in History of People and Their Environs: Essays in Honour of Prof. B.S. Chandrababu. Ganeshram, S and Bhavani, C. Ed. Bharathi Puthakalayam, 2011 – 767
- Meera Abraham, Two Medieval Merchant Guilds of South India, South Asian Studies, No. XVIII, Manohar, New Delhi, 1988, pp. xii + 273,
- Laxminama: Monks, Merchants, Money and Mantra. Anshuman Tiwari, Anindya Sengupta. Bloomsbury Publishing, Aug 10, 2018 – 480 pages
- The Migratory aspects of the Sourashtras of Tamil Nadu after 800 A.D. Krishnamoorthy C S https://www.academia.edu/9748944/The_Migratory_aspects_of_the_Sourashtras_of_Tamil_Nadu_after_800_A.D
ஒருமுறையேனும் பிரான்மலை செல்ல வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிவிட்டது ஐயா
நன்றி
LikeLiked by 1 person
மேலான கருத்திற்கு நன்றி ஐயா
LikeLiked by 1 person
25 வருடங்களுக்கு முன்பு இஸ்லாமிய குடும்பம் என்னை தர்ஹாவுக்கு விருந்துக்கு அழைத்து சென்றது நண்பரே…
இவ்வளவு விடயங்கள் நான் அறியாததே… மீண்டும் செல்லும் ஆவல் மேலிடுகிறது.
LikeLiked by 1 person
மேலான கருத்திற்கு மிக்க நன்றி ஐயா..
LikeLiked by 1 person
வெகுநாளாக நான் பார்க்க விரும்பும் இடம். இந்த உங்கள் பதிவு என் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.
LikeLiked by 1 person
மேலான கருத்திற்கு நன்றி ஐயா
LikeLiked by 1 person