சமஸ்கிருதத்தில் K எழுத்துடன் தொடங்கும் திராவிடச் சொற்கள்: சிந்து மொழியில் சில பூர்வாங்கமான புரிதல்கள். முனைவர். நா.கணேசன் (ஹூஸ்டன், டெக்சாஸ், யு.எஸ்) சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு

அமெரிக்க நாட்டின், டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றி வரும் முனைவர் நா.கணேசன் கடந்த டிசம்பர் 15, 2018 ஆம் தேதியன்று மாலை 05:30 மணியளவில் சென்னை, தரமணி, 3 ஆம் குறுக்குச் சாலை, சி.பி.டி வளாகத்தில் அமைந்துள்ள ரோஜா முத்தையா நூலகத்தில்:

சமஸ்கிருதத்தில் K எழுத்துடன் தொடங்கும் திராவிடச் சொற்கள்: சிந்து மொழியில் சில பூர்வாங்கமான புரிதல்கள். (Some K Initial Dravidian Loan  Words in Sanskrit: Preliminary Observation on the Indus Language).

என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

முதலை ஒரு சின்னமாகச் சிந்து சமவெளி நாகரிகம் (Indus Valley civilisation) மற்றும் பண்டைய தமிழர் நாகரிகங்களில் (ancient Tamil Civilization) பயன்படுத்தப்பட்டது பற்றி இவருடைய உரை அமைந்தது.

முனைவர். நா கணேசன் க்கான பட முடிவு

முனைவர்.நா.கணேசனின் கோட்பாடு (Theory) பிந்தைய ஹாரப்பன் காலத்திய சிந்து சமவெளி நாகரிகத்திலும்  (post-Harappan Indus Valley Civilization) தமிழகத்தின் பெருங்கற்கால நாகரிகத்திலும் (Megalithic Culture of Ancient Tamizhakam) பரவலாகக் காணப்படும் மகரம் (முதலை) (Makara (Crocodile) என்னும் கடவுள் (Deity) அல்லது சின்னத்தைத் (Icon) தொடர்பு படுத்துகிறது.

மகர விடங்கர்

விடங்கர் என்ற சொல்லுக்கு உளியால் செதுக்கப் பெறாத கடவுள் என்று பொருள். ஏழு தலங்களில் சிவன் விடங்கராகக் காட்சி தருவதால் இவை சப்த விடங்க தலங்கள் என்று வழங்கப்படுகின்றன. தஞ்சை பெரிய கோவிலில் இராஜராஜனால் எழுந்தருளிவிக்கப்பட்ட நடராஜருக்கு மேருவிடங்கர் என்றும் தட்சிண மேரு விடங்கர் என்றும் பெயர். முருகன் திருசெந்தூரில் குமார விடங்கர் என்று அழைக்கப்படுகிறார். விடங்கர் என்ற சொல்லுக்கு முதலை என்றும் ஒரு பொருள் உள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில், முதலை வடிவில் விடங்கரும் கொற்றவையும் (துர்க்கை) வழிபடப்பட்டுள்ளனர். சிந்து மற்றும் குஜராத் பகுதிகளில் முதலை, மோகர தேவன் (Mogara Dev) என்னும் கடவுளாக வழிபடப்படுகிறது, மகர விடங்கர் / இடங்கர் என்ற பொருளில் கூகுள் மின்தமிழ் மன்றத்தில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சிந்து சமவெளி முத்திரைகளிலும் (Indus Valley Seals) மற்றும் நாணயங்களிலும் முதலையின் உருவங்களும் (Makara Vidankar – மகர விடங்கர்) ஆதி துர்கையின் (Proto Durga) உருவங்களும் இடம் பெற்றிருந்ததைப் படக்காட்சிகள் (Slide Show) மூலம் காட்டியது குறிப்பிடத்தக்கது. குடிமல்லம் கோவிலில் காணப்படும் ஆண்குறி வழிபாட்டை வருண வழிபாடு என்று இவர் கருதுகிறார். விடங்கர் (= இலிங்கம்) இதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வலுவான திராவிடர் தாக்கங்கள் உள்ளதை வலியுறுத்தி விளக்கினார்.

சொற்பகுப்பாய்வு 

சிந்து சமவெளியின் பரந்த நிலப்பரப்பில் பல மொழிகள் பேசப்பட்டிருக்க வேண்டும். குறியீடுகளில் நிலைத்தன்மை கொண்ட சிந்து சமவெளியின் வரிவடிவம் (Indus Script) ஒற்றை மொழியியல் சமூகத்தினரால் உருவாக்கப்பட்டிருக்கலாம். சிந்து சமவெளியின் வானியல், பண்பாடு மற்றும் மதம் போன்றவற்றில் மீனும் முதலையும் முக்கியப் பங்கு வகித்திருப்பதால் இவை சிந்து சமவெளி சித்திர மொழி வடிவங்களில் இடம்பெற்றுள்ளன. ஹாரப்பா மக்கள் இந்தச் சித்திர மொழிக் குறியீடுகளைத் தங்கள் மொழியில் மீன் மற்றும் மொகரா / மகரா என்று அழைத்தனர். சிம்சுமார (śiṁśumāra Sanskrit शिंशुमार) என்ற சொல் முதலில் கங்கையின் டால்பினைக் குறிப்பிட்டது. இது போலக் கரியால் இன முதலையைக் (Gharial Species Crocodile) குறிக்கும் சொல், ஆதி திராவிட வேர்ச் சொல்லோடு பகுத்தாய்வு செய்யப்பட்டது. K என்னும் தொடக்க எழுத்துடன் கூடிய சொல், S என்னும் தொடக்க எழுத்துடன் கூடிய சமஸ்கிருதச் சொல்லாக உருமாற்றம் பெறும் வகையில் அமைந்த பல சொற்கள் செயல் விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. விண்மீன்கள் (asterisms), காலம் (Time), நிமிஷம், வினாடி, மற்றும் திமிரா (Timira) என்னும் முதுகில் திமிலுடனும், கழுத்தில் தொங்கும் தசையான அலைதாடியுடனும் கூடிய நாட்டு மாடுகள் (Zebu Bull), புச்சா Puccha வால் (Tail), Indu (Drop) வீசுதல், அண்டா (Anda) முட்டை, விதை, முண்டை போன்ற சொற்கள் சிந்து சமவெளி விவசாயப் பொருளாதாரத்துடன் இணைத்துத் தொடர்புபடுத்திக் காட்டப்பட்டன.

முக்கர் மற்றும் கரியால் முதலை இனங்கள் 

சிந்து நதியில்  மூன்று இன முதலைகள் காணப்படுகின்றன. ஒன்று முக்கர் முதலை இனம் (Mugger Crocodile also known as “Magar Much” = Species: Crocodylus palustris) என்னும் சிந்து சதுப்பு நில முதலை ஆகும். இரண்டாவது உப்பு நீர் இன வகை முதலை (Crocodylidae porosus) ஆகும். இவை இந்தியாவின் கிழக்குக் கடற்கரைகளிலும் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் காணப்படுகின்றன. மூன்றாவது கரியால்  (Gharial Species: Gavialis gangeticus) என்னும் கங்கை முதலை இனம் ஆகும்.

வலுவான கால்களுடன் நடக்கவல்ல முக்கர் முதலை இனம் ஏரி, ஆறு, மற்றும் சதுப்பு நிலங்களில் வாழும் நன்னீர் வாழ் இனமாகும்.. ஆழமற்ற நீர்நிலைகள் மற்றும் வேகமாகப் பாய்ந்தோடும் ஆழமான நீர்நிலைகள் போன்றவற்றில் இவை வாழும் தன்மை கொண்டவை. இவை மீன், ஊர்வன, மற்றும் சிறிய வகைப் பாலூட்டி விலங்குகளை உண்ணும்.

அருகிவரும் (Endangered) கரியால் முதலை இனம் மீன் உண்ணும் முதலை இனமாகும். சில நூறு முதலைகள் மட்டுமே சிந்து, கங்கை மற்றும் நதிகளில் வாழ்ந்து வருகின்றன. சிறிய வலுவற்ற கால்களையுடைய இந்த இன முதலைகளால் நிற்க இயலாது. நகர்ந்து செல்லக்கூடிய இந்த வகை முதலைகள்  நகர்  என்ற பெயரில் அறியப்படுகிறது. தமிழில் நகர் என்ற சொல் பிராகிருதத்தில் நாக்ரா என்ற பெயரில் அறியப்படுகிறது.

திருப்பரங்குன்றம் கல்வெட்டு 

முனைவர் கா.ராஜன் குழுவினர் கண்டறிந்த திருப்பரங்குன்றம் குளக்கரைத் தமிழ் பிராமிக் கல்வெட்டில் விடங்கர் – கொற்றவை வழிபாட்டைச் சுட்டுகிறது. பிராகிருதத்தில் நாக்ரா என்று அறியப்பட்ட வடிவமே இந்த விடங்கர் என்றும் இந்தச் சொற்பொழிவில் குறிப்பிடப்பட்டது. விடங்கரின் மனைவியாக ஆதி சக்தியான கொற்றவையைக் (Proto Korravai) குறிப்பிட்டார்.

6

பாண்டியர் கர்ஷபணம்

7

பாண்டியர் பெருவழுதி நாணயத்தில் மகரவிடங்கர்

8

பாண்டியர் நாணயம் நீரில் முதலை; ஆற்றில் மீன்கள்

9

பாண்டியர் நாணயம் குளத்தங்கரையில் மகரவிடங்கர். உடன் இருப்பது யானையும் காளையும்

பண்டைய தமிழகத்தில் பாண்டியன் பெருவழுதி வெளியிட்ட கர்ஷபண வெள்ளிக்காசுகளில் விடங்கர் வழிபாடு நிகழ்ந்துள்ளதையும் குறிப்பிட்டார்.

சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் மகரவிடங்கர்.  நா. கணேசன் க்கான பட முடிவு

PC: முனைவர். நா.கணேசன்

ஆதிச்சநல்லூர் மண்பானை ஓடு 

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட தாழியில் மண்பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளதையும் குறிப்பிட்டார். மண்பானை ஓட்டில்  ஒரு பெண், ஒரு நெற்கதிர், ஒரு மான், ஒரு முதலை உருவங்கள் புடைப்புச் சித்திரங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் காணப்படும் பெண் உருவம் ஆதி துர்க்கை என்பது இவர் நிலைப்பாடு.

இதே தாழியில் போர்க் கோடரி (Battle Axe) உருவமும் கிடைத்துள்ளது. இந்த வடிவத்தை, மதுரைக் காஞ்சி என்னும் சங்க இலக்கிய நூலில் இடம்பெறும் “மழுவாள் நெடியோன்” என்னும் சங்ககால (வருணன்) கடவுள் வடிவத்துடன் ஒப்பிட்டார்.

நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக,
(மதுரைக் காஞ்சி 453 – 455; மாங்குடிமருதனார் )

மதுரையில் இருந்த கடவுளின் பள்ளியில் பூவும் நறுமணப் புகையும் கொண்டு வழிபாடு நடப்பதுண்டு. இந்தப் பள்ளியில் வாடாத பூக்களைச் சூடிக்கொண்டு, இமைக்காத பார்வையுடன், ஆவி உணவை உண்ணும் வல்லமை கொண்ட தேவர்களுக்கு ஸ்ரீபலி படைக்கப்பட்டது. இந்தத் தேவர்கள் மழுவாள் நெடியோனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். தேவர்களின் தலைவனான மழுவாள் நெடியோன் நிலம், நீர், தீ, வளி, விசும்பு ஆகிய ஐம்பூதங்களைப் படைத்தவன் ஆவான்.

Anthropomorphic Axe PC: முனைவர் நா.கணேசன்

Copper Anthropomorphic Figure PC: முனைவர் நா.கணேசன்

கங்கை, யமுனைச் சமவெளிகளில் கிடைக்கும் Anthropomorphic Axe வடிவத்தை உடையாநத்தம் (விழுப்புரம் மாவட்டம்), சித்தன்னவாசல் (புதுக்கோட்டை மாவட்டம்), மோட்டூர் (திருவண்ணாமலை மாவட்டம்) (யூடுயூப்) மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் கண்டறியப்பட்ட கல்லால் ஆன விசிறிக் கற்சிற்பங்களுடன் ஒப்பிட்டார்  இரும்புக் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கற்சிற்பங்கள்  நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.:

Inline image 1

விசிறிக்கல் சிற்பம் PC: முனைவர் நா.கணேசன்

பரசு என்று வடமொழியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதமே மழு என்றும் இந்த மழுவினை ஏந்திச் சத்திரிய குலங்களை வேரறுத்த நெடியோனாகப் பரசுராமனை அகநானூறும் மணிமேகலையும் சுட்டுவதாகப் பல உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன்
(அகநானூறு 220: 5 மதுரை மருதன் இளநாகனார்)

மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன்
(மணிமேகலை (22:25)

‘மழுவாள் நெடியோன்’ பற்றி மதுரைக் காஞ்சியில் இடம்பெறும் குறிப்பு பற்றி “பண்டைத் தமிழகத்தில் இந்திர வழிபாடு” என்ற தலைப்பில் கல்வெட்டு அறிஞர் திரு.எஸ். இராமச்சந்திரன் கூறியுள்ள கருத்து இது:

“இத்தெய்வம் பற்றிய வருணனைகளைக் கவனித்தால் இவன் இதிகாச புருடனாகிய பரசுராமன் அல்லன் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மழுவாள் நெடியோன் இந்திரனே என்பது தெளிவாகிறது. ஐம்பூதங்களும் கலந்த மயக்கமே உலகம் எனத் தொல்காப்பியம் (பொருளதிகாரம், மரபியல், 91) குறிப்பிடுகிற கருத்தின் அடிப்படையில் மேற்கூறிய மதுரைக் காஞ்சி வருணனைக்குப் பொருள் கொண்டால் உலகைப் படைத்தவன் இந்திரனே என்ற ரிக் வேதக் கருத்து மதுரைக் காஞ்சியில் பதிவு பெற்றிருப்பதை உணரலாம். ” சான்று: பண்டைத் தமிழகத்தில் இந்திர வழிபாடு. எஸ். இராமச்சந்திரன். SISHRI

“ஆழிமழைக்கண்ணா” என்று ஆண்டாள் விளித்து அழைப்பது வருணனையே என்பது இவருடைய வாதம். கண்ணன் என்றால் வடமொழியில் கரியவன் என்று பொருள் என்றும்,  சங்கத் தமிழில் இடம்பெறும் கண்ணன் என்னும் பெயர் கரிய நிறம்கொண்ட வருணனையே குறிக்கும் என்றும் இவர் குறிப்பிட்டார். சங்க இலக்கியத்தில் வருண வழிபாடு நிலவியதும் குறிப்பிடத்தக்கது. தன் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை போன்றோர் உரைகள் அமைந்துள்ளதையும் குறிப்பிட்டார்.

சிந்து சமவெளியில் வழிபடப்பட்ட விடங்கர் – கொற்றவை வழிபாடு தமிழகத்தின் பெருங்கற்கால நாகரிகத்திலும் தொடர்ந்து வருகிறது. ஆதிச்சநல்லூர் பானை ஓட்டின் சித்திரப் பொறிப்பையும் திருப்பரங்குன்றம் தமிழ் பிராமிக் கல்வெட்டையும் சிந்து சமவெளி விடங்கர் – கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டார். பண்டைய தமிழகத்தில் “மழுவாள் நெடியோனாக” வணங்கப்பட்ட சிவபெருமான் முற்காலத்தில் வருணனாக வணங்கப்பட்டிருக்கலாம் என்பதும்  இந்த வருண வழிபாட்டு மரபு சிந்து சமவெளி நாகரிக வழிபாட்டின் தொடர்ச்சியாக இருந்திருக்கலாம் என்பதும் இவருடைய தொகுப்புரை ஆகும்.

முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். சான்று: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html

குறிப்புநூற்பட்டி

  1. பண்டைத் தமிழகத்தில் இந்திர வழிபாடு. எஸ். இராமச்சந்திரன். SISHRI
  2. சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் மகரவிடங்கர். நா.கணேசன். வல்லமை. ஆகஸ்டு 20, 2014
  3. நாசா விண்வெளி ஆய்வுநடுவத்தில் ஒரு தமிழுள்ளம்….தமிழ் ஓசையில் என் கட்டுரை http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தொல்லியல், வரலாறு and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to சமஸ்கிருதத்தில் K எழுத்துடன் தொடங்கும் திராவிடச் சொற்கள்: சிந்து மொழியில் சில பூர்வாங்கமான புரிதல்கள். முனைவர். நா.கணேசன் (ஹூஸ்டன், டெக்சாஸ், யு.எஸ்) சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு

  1. Dr B Jambulingam சொல்கிறார்:

    அரிய பல புதிய செய்திகளை பதிவில் காண முடிந்தது.

    Liked by 1 person

  2. நல்லதொரு விடயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே…

    Liked by 1 person

  3. ஸ்ரீராம் சொல்கிறார்:

    சிறப்பாக தொகுக்கப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள்.

    Liked by 1 person

  4. Revathi Narasimhan சொல்கிறார்:

    மிகப் பிரமிக்க வைக்கும் தகவல்கள் அரிய செய்திகள். அறியக் கொடுத்தமைக்கு மிக நன்றி.

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.