இராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத்

நீங்கள் உங்கள் வார விடுமுறையை முழுமையாகச் செலவிட்டு ஓய்வெடுக்கவோ அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அற்புதமான நேரத்தைச் செலவிடவோ அல்லது உங்கள் புது மனைவியுடன் தேன்நிலவு செல்லவோ விரும்புகிறீர்களா? ராமோஜி ஃபிலிம் சிட்டியில், உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாகவே, நீங்கள் விரும்பிய எல்லாவற்றையும் சிறப்பாக அனுபவித்து மகிழலாம்.

இராமோஜி ஃபிலிம் சிட்டி அல்லது இராமோஜி திரைப்பட நகரம் (Ramoji Film City) 1996 ஆம் ஆண்டில் இராமோஜி குழுமத்தால் (Ramoji Group of Companies) திட்டமிட்டு அமைக்கப்பட்ட மிகப்பெரிய திரைப்பட நகரம் ஆகும். ஹைதராபாத் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில், 674 ஹெக்டேர் (1666 ஏக்கர்) பரப்பளவில், உலகத் தரத்துடன் கூடிய திரைப்படத் தயாரிப்பு வசதிகளுடன், பரந்து விரிந்த இந்தத் திரைப்பட நகரம் மில்லியன் கனவுகள் நகரம் (Land of Million Dreams) என்று விவரிக்கப்படுகிறது. ஆரவாரமிக்க பகட்டான அமைவிடம், அழகான நிழற்சாலைகள், தத்ரூபமான திரைப்படச் செட்டுகள் மற்றும் தலைசிறந்த உள்கட்டமைப்புகளுடன் கூடிய சாலைகள் மற்றும் பல தலைப்புகளில் அமைந்த பூங்காக்கள் (Theme Parks on Various Subjects) எல்லாம் இந்த வளாகத்தைத் திரைப்படத் தயாரிப்பளர்களின் மிகப்பெரிய சொர்க்கம் என்றும் சித்தரிக்கிறார்கள்.

இந்தச் செல்லுலாய்டு வளாகத்தில் நுழைந்தால் கனவுகள், கற்பனை உலகங்கள், எல்லாம் உருமாற்றம் பெற்றுத் திரைப்படங்களாக்கும் வித்தையை நேரிடையாகக் காணலாம். உங்களுடைய குழந்தை உள்ளமும், ரசிகத்தன்மையையும், உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் தயாரிக்கும் ஆர்வமும் இங்குள்ள பல திரைப்படச் செட்டுகளுடன் ஒன்றுவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். சுற்றுலாப் பயணிகள் மற்றும் சினிமா இரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் பல இந்த அற்புதமான இடங்களை நீங்கள் இந்த வளாகத்தில் காணலாம்.

அமைவிடம்

தெலிங்கானா மாநிலம், ரெங்காரெட்டி மாவட்டம், ஹயத்நகர் வட்டம் (மண்டல்), அனஜ்பூர் (English: Anajpur = (Telugu: అఞ్జపూర్) பின் கோடு 501512 கிராமத்தையொட்டி அமைந்துள்ள  இந்த இராமோஜி ஃபிலிம் சிட்டி வளாகத்தின் அட்சரேகை 17.252°N மற்றும் தீர்க்கரேகை 78.681°E ஆகும். கடல் மட்டத்திலிருந்து இந்த வளாகம் 505மீ. உயரத்தில், நேரு புற வட்டச் சாலையை (Nehru Outer Ring Road) ஒட்டி அமைந்துள்ளது.  ஹைதராபாத்திலிருந்து உள் வட்டச் சாலையையும் (Inner Ring Road), நாகார்ஜுன சாகர் வட்டச் சாலையையும் கடந்து விஜயவாடா செல்லும் என்.எச். 65 தேசிய நெடுஞ்சாலை (NH 65 National Highway) வழியாகப் பயணித்தால் இராமோஜி ஃபிலிம் சிட்டியை அடையலாம். கோட்டி (Koti) பேருந்து நிலையத்திலிருந்து தில்குஷ் நகர் வழியாக நகரப் பேருந்துகள் சென்று வருகின்றன. கொத்தபெட் (Kothapet) போன்ற நகரின் வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துப் போக்குவரத்து உண்டு.

இராமோஜி குழுமம்

இராமோஜி ஃபிலிம் சிட்டி வளாகம் இராமோஜி குழுமத்தினரால் நிர்வாகிக்கப்படுகிறது. ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்ட இராமோஜி குழுமத்தின் தலைவரான பத்மவிபூஷன். செருகூரி இராமோஜி ராவ் (Cherukuri Ramoji Rao), (வயது 82) பிரபலமான இந்திய தொழிலதிபரும், திரைப்படத் தயாரிப்பாளரும், கல்வியாளரும், பத்திரிகையாளரும் ஊடகத் தொழில் முனைவரும் (Media Entrepreneur) ஆவார். ஈநாடு தெலுங்கு நாளிதழ், ஈ.டி.வி (E TV) தொலைகாட்சி நிறுவனம், உஷாகிரன் மூவிஸ் (திரைப்படத் தயாரிப்பு) போன்றவை இவருடைய நிறுவனங்களாகும்.

உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டூடியோ வளாகமாக 2005 ஆம் ஆண்டில் கின்னஸ் நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட இராமோஜி பிலிம் சிட்டி ஒரு கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளது. “இங்கு ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்டுடன் இந்தத் திரைப்பட நகரத்திற்குள் வந்தால், தரமான திரைப்படத்துடன் வெளியே செல்ல முடியும்,” என்று இங்குள்ள தொழில் நுட்பத் தர வசதிகளைச் சிறப்பித்துக் குறிப்பிடுகிறார்கள்.

1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வளாகத்தில்  22 ஆண்டுகளாக இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, பெங்காலி, ஒரியா, போஜ்பூரி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் எண்ணற்ற திரைப்படங்களும்,  தொலைக்காட்சி விளம்பரங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஓர் ஆண்டில் இருநூறுக்கும் மேலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதாலேயே இந்த வளாகம் கின்னஸ் சாதனை விருது பெற்றுள்ளதில் வியப்பேதுமில்லை.

இந்த வளாகத்தில் அலங்காரமிக்க பலவித திரைப்படச் செட்டுகளிலும், மனங்கவரும் கேளிக்கைப் பூங்காக்களிலும் (Amusement Park), பறவைகள், பட்டாம்பூச்சி மற்றும் மலர்ப் பூங்காக்களிலும் (Theme Park) உணவு முற்றங்களிலும் (Food Courts), அழகு சாதனச் சிறு கடைகளிலும் (Boutique Kiosks), வேடிக்கை சவாரிகளிலும் (Fun Rides), சாகச விளையாட்டுகளிலும், பல்சுவை நிகழ்சிகள் நடைபெறும் திறந்தவெளி அரங்கங்களிலும் (Variety Shows in Open Air Theatres) மட்டுமே உங்கள் நேரம் செலவாகப் போகிறது. இங்கு உங்களுடைய தரமான ஒரு நாளையும் நேரத்தையும் (A Quality Day and Time) செலவிடுவதற்கு இந்த வளாகம் மிகவும் தகுதி உடையது.  இங்கு வேனிற்காலக் கொண்டாட்டங்கள், குளிர்காலக் கொண்டாட்டங்கள், பண்டிகை காலக் கொண்டாட்டங்கள் என்று பல்வேறு பருவகாலங்களிலும் விதவிதமான கொண்டாட்டங்கள் நடைபெறுவது சிறப்பு.

SAM_0706

விரிவான திரைப்படம் தயாரிக்கும் வளாகம் மட்டுமின்றிச் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் புகழ்பெற்ற சுற்றுலா மையமாகவும் இந்த இராமோஜி ஃபிலிம் சிட்டி திகழ்கிறது. இங்கு சுமார் 1.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருவருவதாகப் புள்ளி விபரம் குறிப்பிடுகிறது. ஆகவே இராமோஜி ஃபிலிம் சிட்டி வாழ்வில் ஒரே ஒரு முறையேனும் சுற்றிப்பார்த்து மகிழ வேண்டிய சுற்றுலா மையம் ஆகும். காலை 09.00 மணி முதல் மாலை 08.00 மணி வரை இராமோஜி ஃபிலிம் சிட்டியின் பொதுமக்கள் அணுகக்கூடிய பகுதிகளுக்குப் பயணிகள் சென்று பார்த்து மகிழலாம்.

தின சுற்றுலா கட்டணம்

 1. குளிர்கால விடுமுறை தின சுற்றுலா  அனுமதிக்கும் நேரம் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை. சுற்றிவர அனுமதிக்கப்பட்ட நேரம்: காலை 09.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை. வழிகாட்டுதல் சுற்றுலா – குளிர்சாதன வசதியற்ற பேருந்தில்.  கட்டணம்: பெரியவர் ரூ. 1250/- குழந்தைக்கு ரூ. 1050/-
 2. குளிர்கால விடுமுறை உயர் மதிப்பு அனுபவம் உள்ளே அனுமதிக்கும் நேரம் காலை 09.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை. சுற்றிவர அனுமதிக்கப்பட்ட நேரம்: காலை 09.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை. வழிகாட்டுதல் சுற்றுலா – குளிர்சாதன வசதியுடைய பேருந்தில்.  கட்டணம்: பெரியவர் ரூ. 2349/- குழந்தைக்கு ரூ. 2149/- (பஃபே சைவ / அசைவ மதிய உணவுடன்)
 3. குளிர்கால விடுமுறை பண்டிகை நாள் நண்பகல் உள்ளே அனுமதிக்கும் நேரம் காலை 11.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை. சுற்றிவர அனுமதிக்கப்பட்ட நேரம்: மதியம் 12.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை. வழிகாட்டுதல் சுற்றுலா – குளிர்சாதன வசதியுடைய பேருந்தில்.  கட்டணம்: பெரியவர் ரூ. 2149/- குழந்தைக்கு ரூ. 1949/- (பஃபே சைவ / அசைவ இரவு உணவுடன்)
 4. குளிர்கால விடுமுறை அந்திக் கருக்கல் உள்ளே அனுபவம் அனுமதிக்கும் நேரம் காலை 11.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை. சுற்றிவர அனுமதிக்கப்பட்ட நேரம்: மதியம் 02.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை. வழிகாட்டுதல் சுற்றுலா – குளிர்சாதன வசதியுடைய பேருந்தில்.  கட்டணம்: பெரியவர் ரூ. 1399/- குழந்தைக்கு ரூ. 1199/- (பஃபே சைவ / அசைவ இரவு உணவுடன்)

மதிய உணவு இல்லாத சாதாரண நுழைவுச் சீட்டே போதும் என்று நினைக்கிறேன். குளிர்சாதனமுடைய பேருந்து பயணம் தேவையற்றது. ஏனெனில் நீங்கள் பேருந்தில் பயணிக்கப் போவது சில நிமிடங்கள் மட்டுமே. நீங்கள் உள்ளே நுழைந்தவுடன்.இந்த வளாகத்தைச் சுற்றிக் காட்டுவதற்குச் சுற்றுலா மையத்தின் ட்ராம் போன்று வடிவமைக்கப்பட்ட சிவப்பு வண்ண பேருந்துகள் (Open Vintage Tour Buses) காத்திருக்கின்றன.

ramoji film city blog க்கான பட முடிவு

இந்தச் சிவப்பு வண்ணப் பேருந்துகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு இராமோஜி ஃபிலிம் சிட்டி வளாகத்தைச் சுற்றி வருகிறது. இந்த ஃபிலிம் சிட்டி சுற்றுலாவில் மைக் ஏந்திய வழிகாட்டி ஒருவர் நேரடி வர்ணனை செய்கிறார். வழியில் சூரிய நீரூற்று, ஏஞ்சல் நீரூற்று, அஸ்காரி பூங்கா, மொகல் பூங்கா, சரணாலய பூங்கா ஆகியவற்றைக் காணலாம். “உங்கள் இடது பக்கம் பைனாப்பிள் தோட்டம் பார்த்தீர்களா? இந்தப் பழத்தை நீங்கள் சாப்பிட முடியாது! சாப்பிட்டால் உங்களுக்கு வயிற்று உபாதை வரலாம். ஏனென்றால் அது செயற்கைத் தோட்டம்! பயணிகள் சிரித்தவாறு வியப்புடன் எட்டிப் பார்க்கிறார்கள்.

ramoji film city hospital க்கான பட முடிவு

“இந்தப் பயணத்தில் நீங்கள் உலகத்திலேயே சிறந்த மருத்துவ மனைக்குச் செல்லலாம். ஆபத்தை விலைக்கு வாங்குவதானால் நீங்கள் இங்கு செல்லலாம். இந்த மருத்துவ மனையில் டாக்டர்களைப் பார்க்க முடியாது. ஆனால் டாக்டர்களாக நடிக்கும் நடிகர்களைக் காணலாம்.” என்று வழிகாட்டி சொன்னவுடன் பயணிகள் எட்டிப் பார்க்கிறார்கள்.

இராமோஜி ஃபிலிம் சிட்டி என்ற பெயருக்கு ஏற்றார்போல எல்லாமே போலி செட்டுகள்தான். எந்த விதமான குற்றமும் செய்யாமல் முதன் முறையாகச் சிறைக்குச் செல்லும் மக்கள் நீங்கள் தான்!” என்று வழிகாட்டி சொல்கையில் எங்கள் பேருந்து “சென்ட்ரல் ஜெயில்” என்று எழுதப்பட்ட வளைவு வழியாக உள்ளே நுழைந்தது. “நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட கைதிகள் சிறையை உடைத்துக்கொண்டு வெளியேவரத் துடிப்பதைப் பாருங்கள்” என்று சொன்னதும் நாம் எட்டிப் பார்த்தால் கைதி உருவில் அடைபட்டிருந்த ரோபோக்கள் சிறைக் கதவின் கம்பியைப் பிடித்து ஆட்டி வளைக்கப் பார்கிறார்கள். சிறைக் கதவினை உடைப்பது போன்ற காட்சி உருவகப்படுதப்படுவதைப் (Simulation) பார்த்தோம்.

மிகப்பெரிய திரைப்பட ஸ்டூடியோ வளாகத்தில் உண்மையும் கற்பனையும் கலந்து சரியான பிரதிகள் (Replicas) வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு அன்றாட வாழ்வில் நாம் தினமும் காணும் இடங்களான காவல் நிலையம் (Police Station), அரசு கட்டடம் (Government Building), மாளிகைகள் (Mansions), காய்கறிச் சந்தை (Vegetable Market) போன்றவற்றின் செட்களைக் பார்க்கிறோம். இங்கு பதேபூர் சிக்ரியின் புலாந் தர்வாஜா (Buland Darwaza of Fatehpur Sikri), ஆக்ராவின் தாஜ்மஹால், மைசூரின் பிருந்தாவனம் (Brindavan Gardens of Mysore) போன்ற இந்திய சுற்றுலாத் தலங்களின் பிரதிகள் திரைப்படச் செட்டுகளாகக் பரிமளிக்கின்றன. ஜப்பானியத் தோட்டம் (Japanese Garden), நிலத்தடி குகைகள் (Underground Caves) மற்றும் குழந்தைகளுக்கான புதிர் தோட்டம் (Children’s Puzzle Garden) போன்ற திரைப்படச் செட்டுகளையும் இங்கு காணலாம்.

இங்கு ஆண்டொன்றுக்குப் பதினைந்து இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இருந்தாலும் இராமோஜி ஃபிலிம் சிட்டி, முதல் முன்னுரிமை கொண்ட திரைப்படப் படப்பிடிப்புத் தளம் ஆகும். சுற்றுலாத் தலம் என்பது இரண்டாம் முன்னுரிமை கொண்டது எனலாம். இந்த ஃபிலிம் சிட்டி தொடங்கிய நாளில் (1996) இருந்து , சுமார் 2500 திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். படே மியான் சோட்டே மியான் (Bade Miyan Chhote Miyan), டர்டி பிக்சர் (Dirty Picture), தில்வாலே, ரா ஒன் Ra One), தில்வாலே (Dilwale), சந்திரமுகி (Chandramukhi) போன்ற இந்திப் படங்களும் பீப்பர் (Beeper), குவிக் சான்ட் (Quicksand) போன்ற ஹாலிவுட் படங்களும் விவேகம் (Vivegam) மற்றும் ஸ்பைடர் போன்ற தமிழ்ப் படங்களும், பெங்கால் டைகர், மசாலா, ஒக்க தினே, ஊபிரி (தமிழில் தோழா), ரபசா (Rabhasa), ரேஸ் குர்ரம், S/O சத்யமூர்த்தி, சர்தார் கப்பர் சிங் போன்ற குறிப்பிடத்தக்க தெலுங்கு படங்களும் இந்த வளாகத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளனவாம்.

“நாயக் (2001) இந்தித் திரைப்படத்தில் இடம்பெறும் ராணி முகர்ஜியின் வீட்டைப் பாருங்களேன்!” என்று வழி காட்டி சொல்லிய உடனே பயணிகள் மொபைலை ஜன்னல் வழியாக நீட்டிப் படமெடுக்கிறார்கள். “சூரியவம்சம்” இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெறும் எம்.பி. வீடு இதுதான் என்று தொடர்கிறார் வழிகாட்டி. ஓம் சாந்தி ஓம் படத்தில் இடம்பெற்ற வீட்டின் செட்டையும் பார்த்தோம். கோல்மால் (Golmaal) மற்றும் ஆல் தி பெஸ்ட் (All the Best) போன்ற திரைப்படங்கள் இந்தத் தெருவில் தான் படமாக்கப்பட்டது தெரியுமா? என்று வியப்பூட்டுகிறார்.

வழக்கமான நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் வீடு இது தான். வீட்டின் முன்புறம் படம்பிடித்தால் அது கதாநாயகனின் வீடு பின்புறம் படம் பிடித்தால் கதாநாயகியின் வீடு என்று அசத்துகிறார். மொபைல் கரங்கள் வெளியே நீட்டிக் காட்சிகளைப் படமெடுக்கின்றன. இலண்டன் நகரத்தின் தெரு ஒன்று பிரின்சஸ் வீதி (Princess Street) என்னும் பெயருடன் பன்னாட்டு நகரமைப்பில் (International Citycape) நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வடஇந்திய நகரமைப்பில் நார்த் டவுன் (North Town) வீதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இறுதியாகப் பேருந்து ஓர் இரயில் நிலையம் அருகே நிற்கிறது. இந்த இரயில் நிலையத்தில் தான் சென்னை எக்ஸ்பிரஸ், ரன்னா (Ranna) (கன்னடம்) போன்ற திரைப்படங்கள் படமாக்கப்பட்டன என்றால் நம்புவீர்களா? என்று முடிக்கிறார் வழிகாட்டி.

ramoji film city railway station க்கான பட முடிவு

பேருந்திலிருந்து இறங்கியதும் மிகவும் பிரபலமான பாகவதம் செட்டைக் காணலாம். நம்ப முடியாத அளவுக்குப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டு, மகாபாரதம் தொலைக்காட்சித் தொடருக்காகப் பிரத்யோகமாகப் போடப்பட்ட அரசவைக் காட்சி செட் ஆகும் பயணிகள் இந்த செட்டுகளை வியப்புடன் காண்டு மகிழலாம். இதை அடுத்து மேலே கூறிய இரயில் நிலைய செட் உள்ளது.

இங்கு படப்பிடிப்பு நடைபெறும் தளங்களில் பயணிகளை (பார்வையாளர்களை) அனுமதிப்பதில்லை. இவை பயணிகளுக்கான தடை செய்யப்பட்ட பகுதிகள் ஆகும். திரைப்படத் தயாரிப்பாளர்கள் பெரும் செலவில் இங்கு அமைத்த செட்களைப் படப்பிடிப்பு முடிந்ததும் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த செட்டுகள் சுற்றுலாவின் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகின்றன.

எஸ்.எஸ்.இராஜமௌலி இயக்கத்தில், 3-டி (முப்பரிமாண) தொழில்நுட்பத்தில், 250 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுப் பெரும் வெற்றிகண்ட பாகுபலி திரைப்படத்திற்காக, சாபு சிரில் பிரம்மாண்டான செட்களை வடிவமைத்து இந்த வளாகத்தில் நிறுவியுள்ளார். பிரம்மாண்டமான காட்சி வடிவமைப்பிற்காகவே தனித்துவ வெற்றிகண்ட இப்படத்தில் இடம்பெறும் மகிஷ்மதி அரச மாளிகையின் கனவுலகத்துத் தூண்கள், விரிவான படிக்கட்டுகள், கொள்ளை அழகான சிற்பங்கள், தேரில் பூட்டப்பட்டுப் பாய்ந்த நிலையில், இயற்கை வடிவளவில் (Life Size) வடிவமைக்கப்பட்ட குதிரைகள், கம்பீரம் காட்டும் யானைகள், சிவலிங்கம், நிலத்தடி சிறை (Underground prison) ஆகிய எல்லாம் டிசம்பர் 2018 வரை பயணிகளின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடத்தில் இருந்து கடைசிப் பேருந்து மாலை 4.00 மணிக்குப் புறப்படுகிறது.

இங்கு பல்வேறு கருப்பொருள்கள் கொண்டு அமைக்கப்பட்ட 38 கேளிக்கைப் பூங்காக்கள் உள்ளன. மொகல் பூங்கா (Moghul Garden), சிறுவர்களின் புதிர் பூங்கா (children’s Puzzle Garden), டோடெம் போல் கார்டன் (Totem Pole Garden); சியரா பூங்கா (Sierra Garden) போன்று பல பூங்காக்கள் உள்ளன. பட்டாம்பூச்சிப் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் (Butterfly Park Cum Museum) இந்த வளாகத்தின் சிறந்த பூங்காவாகும். வண்ணம் மிகுந்த பட்டாம்பூச்சிகள் பறந்து சென்று பூக்களில் அமரும் காட்சி கொள்ளை அழகு. Wings – Exotic Bird Park என்ற பறவைகள் பூங்காவில் கூண்டுகளில் சிறைப்பட்ட பல வண்ண வண்ணப் பறவைகளின் பெயர்களைப் பலர் அறியாமல்  இருக்கலாம். செயற்கை நீர்வீழ்ச்சி வழியே கடந்து போவது நல்ல அனுபவம். இவ்வளவு பெரிய நெருப்புக்கோழியை இங்குதான் பார்த்தேன்.

வளாகத்தின் உயரமான பகுதியில் ஹவா மஹால் (Hawa Mahal) அமைக்கப்பட்டுள்ளது. மயக்கும் கோணத்தில் பயணிகளைச் சுண்டியிழுக்கும் விதத்தில் இந்த ஹவா மஹால் வளாகம் அமைந்துள்ளது. புத்தர் குகை ஒன்றை சிறப்பாக அமைத்துள்ளார்கள். இயற்கை வனப்பின் நடுவே அமைதி நிறைந்த உணர்வு பெறக் கிரிபாலு குகைகளுக்குச் ( kripalu caves) செல்லலாம். இக்குகை கலிங்கம், மகதம், மற்றும் போதிசத்துவர் பற்றிய வேறுபட்ட மதங்கள் மற்றும் வரலாறு குறித்து விவரிக்கிறது.

ஜப்பான் பூங்காவில் பகோடா போன்ற உருவமைப்புடன் கூடிய கட்டுமானம் ஒரு நீர்நிலையின் மேல் கட்டப்பட்டுள்ளது. வளாகத்தில் ஜப்பானிய பின்னணி இசை இனிமை கூட்டுகிறது. முழுக்க முழுக்க இஸ்லாமிய பாணியில் 1917 ஆம் ஆண்டு சர் எட்வின் லுடியன்ஸால் டில்லியில் (இன்றைய இராஷ்ட்ரபதி பவனில்) வடிவமைக்கப்பட்ட மொகல் பூங்கா (Mogal Garden) மொகல்-இ-அசாம் கலாச்சாரத்தை நினைவூட்டுகிறது. இந்தப் பூங்காவைச் சுற்றிப் பார்க்கையில் முகலாய பாணிக் கட்டடக்கலையில் அமைந்த மாதிரிக் கட்டடங்களைக் கண்டு இரசிக்கலாம். சரணாலய தோட்டத்தின் (Sanctury Garden) நிலப்பரப்பு விலங்குகளின் சரணாலயம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு புதர்ச் செடிகளை யானை, மான், மயில் மற்றும் ஒட்டகச் சிவிங்கி போன்ற விலங்குகளின் வடிவங்களில் கத்தரித்து (Topiaries) அழகுபடுத்தியுள்ளார்கள். சூரிய நீரூற்றுக் குதிரைகள் பூட்டிய தேரை சூரியன் செலுத்துவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றி அழகுற அமைக்கப்பட்ட தோட்டம் கண்ணைக் கவர்கிறது. சூரியன் மேற்கே மறையும் போது  இந்தப் பூங்காக்கள் வண்ண வண்ண விளக்கு அலங்காரங்களால் மின்னுகின்றன.

ramoji film city garden க்கான பட முடிவு

ramoji film city garden க்கான பட முடிவு

திரைப்பட மாயாஜாலம் (Movie Magic)

தொடக்க விழா மற்றும் நிறைவு விழா (Opening and Closing Ceremonies) : அன்றாடம் நடைபெறும் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்சிகள் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரபலமானது. இந்த வளாகத்தில் உங்களை ஓர் அரசனைப் போல பாவித்து உங்கள் வருகையை மிகவும் ஆடம்பரமான முறையில் கொண்டாடி வரவேற்கிறார்கள். இறுதியில் அன்புடன் பிரியாவிடை தருகிறார்கள். வண்ண வண்ண நடனங்கள், மயக்கும் இசை இதைவிட வேறென்ன வேண்டும்?

திரைப்பட மாயாஜாலம் (Movie Magic): இராமோஜி ஃபிலிம் சிட்டியைச் சுற்றிப் பார்க்கையில் பல பரவசமான உணர்வுகள் தோன்றும். உங்களைச் சூழ்ந்துகொண்டு நடனமங்கையர் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் இசைக்கேற்ப நடனமாடுவது இனிமையான அனுபவம் ஆகும். எனக்குப் பிடித்த கதாநயகன் ஒவ்வொரு முறையும் வில்லனுடன் பறந்து பறந்து சண்டை போடுவதை வியப்புடன் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. இராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஸ்டண்ட் நடிகர்கள் துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டு போலப் பாய்ந்தும் (Bullet Thuds), உயரே பறந்து குதித்தும் (Aerial Jump) சண்டை போட்டதை வருணிக்க வார்த்தையில்லை.

இராமோஜியின் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வு காட்சி (Spirit Of Ramoji): இந்தக் காட்சி இந்தியாவின் வேற்றுமையின் ஒற்றுமையையும் கலாசாரத்தையும் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் காட்சியில் இந்தியாவின் பல்வேறு மரபுகள் சங்கமம் ஆவதை உணரலாம். நன்கு பயிற்சி பெற்ற நடனக் கலைஞர்கள் அழகாக வடிவமைக்கப்பட்ட நடனத்தின் மூலம் இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறார்கள்.

ஃபண்டுஸ்தான் (FUNDUSTAN)

குழந்தைகள் பூங்காவின் விளையாட்டு உலகம் உங்கள் குழந்தைகளுக்கு வேடிக்கை, உற்சாகம், சிலிர்ப்பு, பெருமகிழ்ச்சி போன்றவற்றை நிச்சயம் தரப்போவது உறுதி. இங்கு குழந்தைகளுக்கான பல வேடிக்கை விளையாட்டுகள் மற்றும் சவாரிகள் (fun games and rides) உள்ளன:

தாதாஜின் பௌண்டன் (Dadajinn Fountain); தாதாஜினின் ஷூ (Dadajinn’s Shoe) காட்சிக் கோபுரம்; தாதாஜினின் மில்க் பாட்டில் (Dadajinn’s Milk Bottle); தாதாஜினின் வாழ்த்தும் (பேசும்) கிளி (Dadajinn’s Wishing Parrot); தாதாஜினின் பூசணிக்காய் (Dadajinn’s pumpkin); தாதாஜினின் பயாஸ்கோப் (Dadajinn’s Bioscope); ரெய்ன் டான்ஸ் (Rain Dance); டாய்  லேண்ட் (Toy Land); மியூசிகல் டால்ஸ் (Musical Dolls); ஸ்னேக் மற்றும் லாடர் (Snake and Ladder);  மற்றும் அட்வென்சர் லேண்ட் (Adventure Land).

மழை நடனம் (Rain Dance) இங்கு எல்லோராலும் மிகவும் விரும்பி விளையாடும் விளையாட்டாகும். தாதாஜின் லைவ் டி.வி ஷோ இங்கு அவசியம் காண வேண்டிய ஒன்றாகும். தாதாஜின் கதாபாத்திரம் குழந்தைகளை உறுதியாக மகிழ்விப்பார். திறன் வாய்ந்த செப்பிடுவித்தைக்காரர்கள் வியப்பான வித்தைகளைக் காட்டி அசத்துகிறார்கள். பயமுறுத்தும் வீடு (Scary House) குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வேடிக்கை காட்டுவது திண்ணம். இது தவிரப் பல்வேறு சவாரிகளையும் பயணிகள் குடும்பத்துடன் அனுபவித்து மகிழலாம்.

உணவு விருப்பங்கள்

இங்கு உணவுக்கான பல விருப்பங்கள் உள்ளன. ஐந்து நட்சத்திரம் (சித்தாரா ஹோட்டல்) மற்றும்  மூன்று நட்சத்திர (தாரா ஹோட்டல்) தங்கும் விடுதிகளில் கிடைக்கும் சாப்பாடு முதல் சிறு கடைகளில் விற்கப்படும் துரித உணவு மற்றும் நொறுக்குத் தீனி வரை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் விதத்தில் உணவு விடுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திரைப்படக் கருப்பொருளை ஒட்டி அமைந்த உணவகங்கள், திரைப்படக் கலைஞர்கள் விரும்பும் உணவைப் பயணிகளுக்குப் பரிமாறும் உணவகங்கள் எல்லாம் இங்கு உண்டு. சாக்லெட்டுகள், பிஸ்கெட்ஸ், சாண்ட்விச், சமோசா, பேஸ்ட்ரி, பஃப்ஸ், ஐஸ்கிரீம், குளிர்பானம், சோடா போன்ற துரித உணவுகள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.

ஷாப்பிங்

இங்கிருந்து சில நினைவுப் பொருட்களை நீங்கள் எடுத்துச் செல்ல விரும்பினால் இந்த வளாகத்திலிருந்து கைவினைப் பொருட்கள், கையால் செய்யப்பட்ட இந்திய நகைகள் (Indian hand-made jewelry), அலங்காரப் பொருட்கள், தொப்பிகள், குல்லாய்கள், கௌபாய் ஆடை அணிகலன்கள், டி சர்ட்டுகள் மற்றும் பல பொருட்களை இங்குள்ள கடைகளில் இருந்து வாங்கிச் செல்லலாம்.

குறிப்புநூற்பட்டி

 1. At Ramoji Film City in Hyderabad, everything is about show business (and not just for filmmakers) https://scroll.in/reel/860202/location-scouting-everything-is-about-show-business-at-ramoji-film-city-not-just-for-filmmakers
 2. Awards and achievements https://www.ramojifilmcity.com/about
 3. Largest film studio http://www.guinnessworldrecords.com/world-records/largest-film-studio
 4. My Trip to Ramoji Film City by Lakshmi Menon https://www.induswomanwriting.com/my-trip-to-ramoji-film-city.html
 5. Ramoji Film City, Hyderabad http://thetalesofatraveler.com/ramoji-film-city-hyderabad/
 6. Ramoji Film City Hyderabad (Entry Fee, Timings, Entry Ticket Cost, Price) https://www.hyderabadtourism.travel/ramoji-film-city-hyderabad
 7. Ramoji Film City (Online Entry Tickets Booking, Bus Timings, Hotels Booking) BestBus (Authorized Online Booking Partner for Ramoji Film City ) https://www.bestbus.in/ramoji-film-city-tour
 8. Visiting Ramoji Film City, Hyderabad http://www.theheebee.com/2017/06/27/visiting-ramoji-film-city-hyderabad/

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in சுற்றுலா, திரைப்படம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to இராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத்

 1. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  பார்க்கப் பார்க்க படிக்கப் படிக்க வியப்பாகத்தான் இருக்கிறது ஐயா

  Liked by 1 person

 2. ஸ்ரீராம் சொல்கிறார்:

  சுவாரஸ்யமான அறிமுகம். பார்க்க எப்போது முடியுமோ, இப்போது படிக்கவாவது கிடைத்ததே,,, நன்றி.

  Like

 3. படிப்பதற்கு பிரமிப்பாகவும், நிச்சயம் ஒருமுறையாவது இவ்விடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது நண்பரே..

  Liked by 1 person

 4. பிங்குபாக்: இராமோஜி ஃபிலிம் சிட்டி, ஹைதராபாத்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.