பிர்லா மந்திர், ஹைதராபாத்

பிர்லா மந்திர் தெலிங்கானா மாநிலம், ஹைதராபாத்  நகரின் ஆதர்ஷ் நகர் காலனி, (பின் கோடு 500063) காசி பஜார் (Gasi Bazar), காகர்வாடியில்  (Kakarwadi) அமைந்துள்ளது. இக்கோவில் உசைன்சாகர் ஏரியின் தென்கரையில், 85 மீ. (280 அடி) உயரம் கொண்ட நௌபத் பர்பத் (Naubat Parbat) என்னும் காலா பஹத் குன்றின் (Kala Pahad Hillock) மேல், 13 ஏக்கர் (53,000 சதுர மீ.) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 2000 டன் தூய இராஜஸ்தான் வெள்ளைச் சலவைக் கல் கொண்டு பிர்லா அறக்கட்டளையால் (Birla Foundation) கட்டுவிக்கப்பட்ட இக்கோவில் வேங்கடேஸ்வரருக்கு அற்பணிக்கப்படுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இந்தக் கோவிலை இராமகிருஷ்ணா மிஷனரியைச் சேர்ந்த சுவாமி அரங்கநாதானந்தா 1976 ஆம் ஆண்டில் திறந்து வைத்துள்ளார். இதன் அமைவிடம் :17.4061875°N அட்சரேகை 78.4690625°E தீர்க்கரேகை ஆகும்.

பிர்லா அறக்கட்டளை இந்தியாவெங்கும் 19 சலவைக்கல் கோவில்களைக் கட்டி, கணேஷ் (அலிபாக்), சூரியன் (குவாலியர்), ராதா கிருஷ்ணர் (கொல்கொத்தா), சரஸ்வதி (பிட்ஸ் பிலானி), சிவன் (வாரணாசி, ரேணுகூட்), வெங்கடேஸ்வரர் (ஹைதராபாத்), இராமன் (வாரணாசி), கிருஷ்ணன் (குருஷேத்ரம்), விதோபா (ஷாஹத்), இலட்சுமி நாராயணன் (தில்லி, கான்பூர், கர்னூல், போபால், ஜெய்பூர், பாட்னா, பிராஜராஜநகர்) போன்ற தெய்வங்களுக்கு அற்பணித்துள்ளார்கள். எனவே இக்கோவில்களுக்குப் பிர்லா மந்திர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஹைதராபாத் கோவில் திராவிடம், உத்கலா மற்றும் இராஜஸ்தானி கட்டடக் கலை பாணிகளை ஒருங்கே இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

Birla Mandir Hyderabad

SAM_0817

SAM_0816

கோவில் வளாகத்தில் நுழைந்த உடன் உயர்ந்த மண்டபத்தில், கருப்புக் கிரனைட் கல்லில் செதுக்கப்பட்ட, விஷ்ணு, நின்ற கோலத்தில், சக்கரம் ஏந்தியவாறு, காட்சி தருகிறார். கோவிலுக்குச் செல்ல சலவைக்கல்லில் வடிவமைக்கப்பட்ட அழகிய படிக்கட்டுகள் உள்ளன.

கலிங்க பாணி கோவில் கட்டிடக்கலை அல்லது உத்கல பாணி (Utkala Style), நகராவின் பாணி கட்டடக்கலைப் பள்ளியின் துணை பாணியாகப் பரிணாமம் பெற்று வளர்ச்சி கண்டது. திராவிடக் கோவில் கட்டடக்கலையில் விமானம் என்று அழைக்கப்படும் கட்டுமானம் கலிங்கக் கட்டடக் கலைபாணியில் Deula என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் மொத்தக் கோவில் அமைப்பையுமே Deula என்று அழைக்கிறார்கள். ஒரியா மொழியில் “Deula” என்றால் “குறிப்பிட்ட பாணியில் கட்டப்பட்ட கட்டடம் அல்லது கட்டுமானம்” என்று பொருள். மேற்கு வங்கத்தில் இந்தத் Deula வடிவம் வேறுபடுகிறது.

இக்கட்டடக் கலைப்பாணியில் மூன்று விதமான Deula அமைப்புகள் உண்டு: ரேகா (Rekha or Rekha Deula), பீதா (Pidha or Pidha Deula) மற்றும் காக்ரா (Khakhara or Khakhara Deula). கருவறை மற்றும் அதன் மேல் அமைக்கப்பட்ட வளைகோட்டுச் சிகரம் (Curvilinear Spire) ஆகிய இரண்டையும் சேர்த்து ரேகா (Rekha or Rekha Deula) என்று அழைக்கிறார்கள்.

ஹைதராபாத் பிர்லா மந்திரில் மூலவரின் ரேகா (Rekha Deula) உயர்ந்த மேடை போன்ற, ஜகதி என்னும் அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. ஜகதியில் பல உறுப்புகள் (Several Mouldings) காணப்படுகின்றன. ஜகதிக்கு மேலே அதிஷ்டானம் (Adishtanam) அமைந்துள்ளது.

மூலவர் கருவறையின் மேல் கட்டுமானம் (Super Structure) ரேகா (Rekha) வகை உத்கல (கலிங்க) நாகரா பாணி சிகரம் பெற்றுள்ளது. சிகரத்தின் உச்சியில் நெல்லிக்காய் வடிவில் அமலாக்காவும் அதற்கு மேலே கலசமும் அமைந்துள்ளது.

சுமார் 11 அடி உயரங்கொண்ட மூலவரான வெங்கடேஸ்வரர் உத்கல நாகரா பாணி விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் காட்சி தருகிறார். கிரீட மகுடமும் வெள்ளி அங்கியும் அணிந்து வலது முன் கை வரத ஹஸ்த முத்திரையும்  இடது முன்கை அபய ஹஸ்த முத்திரையும் காட்டி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பின் இடக்கை சக்கரமும் பின் வலக்கை சங்கும் ஏந்தியுள்ளன.

கருவறையை ஒட்டி முன்புறம் அமைந்துள்ள மண்டபத்திற்கு ஜகமோகனா (Jagamogana) என்று பெயர். ஜகமோகனாவிற்குப் பீதா (Pidha or Pidha Deula) என்று பெயர். பீதாவின் சிகரம், சட்டங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக அடுக்கி பிரமீடு போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஜகமோகனின் (Jagamohan) இருபக்கச் சுவர்களிலும் சமுத்திர மந்தன் மற்றும் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் ஆகிய காட்சித் தொகுப்புகள் (Panels) புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஜகமோகனாவை ஒட்டி மற்றொரு பீதா (Pidha or Pidha Deula) அமைந்துள்ளது. இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் ஜெய விஜய என்ற இரு துவாரபாலகர்களைக் காணலாம்.

திராவிட பாணியில், சலவைக்கல்லில், 51 அடி உயரத்தில், ஐந்து நிலைகளுடன், கண்கவர் இராஜகோபுரம் அமைந்துள்ளது. கலிங்க கட்டடக் கலைப்பாணியில் இதனைக் காக்ரா (Khakhara or Khakhara Deula) என்று அழைக்கிறார்கள்.

Simplified_schema_of_Kalinga_architecture

Deula Kalinga Architecture PC: Wikipedia

மூலவர் கருவறையின் வெளிப்புறச் சுவர்களை, நான்முக அரைத்தூண்களைக் (Pilasters) கொண்டு பல பத்திகளாகப் பிரித்துள்ளார்கள். இந்தப் பத்திகளில் நடுவில் விஷ்ணுவின் பத்துத் தசாவதாரக் காட்சிகளும், புத்தர், பகவான் மகாவீரர், குருநானக் தேவ், குரு கோபிந் சிங்,  வேமணர், இயேசு கிறிஸ்து போன்றோரின் உருவங்களும்  நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. எனவே ஜாதி, மத பேதமற்ற இக்கோவிலுக்கு எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்து தரிசிக்கலாம். நுழைவாயிலில் 42 அடி உயரத்தில் பித்தளைப் பூணுடன் கொடிமரமும் பலிபீடமும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கோவில் வளாகத்தில் காண்டா மணி இல்லை.

கருவறையைச் சுற்றி திறந்த வெளிப் பிரகாரம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஹுசைன் சாகர் ஏரி, ஏரியின் சுற்றுச் சாலைகள், பூங்காக்கள் மற்றும் ஹைதராபாத் நகரத்தையும் பறவை பார்வையாகக் (Bird’s Eye View) காணலாம். கருவறையை ஒட்டி வலப்புறம் ரேகா சிகரத்துடன் அமைந்துள்ள தனி சன்னதியில் பத்மாவதித் தாயாரும் இடப்புறம் ரேகா சிகரத்துடன் அமைந்துள்ள தனி சன்னதியில் ஸ்ரீ ஆண்டாளும் காட்சி தருகிறார்கள்.

கோவில் மூலவர் கருவறைக்குச் செல்லும் வழியில் சிவன், சக்தி, கணேசன், ஹனுமான், பிரம்மா, சரஸ்வதி, லட்சுமி மற்றும் சாய்பாபா ஆகிய துணை தெய்வங்களுக்குத் தனிச் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட மகான்களின் பொன்மொழிகளும் கோவிற் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன. காலை மற்றும் மாலை வேளைகளில் இங்கு சென்று தரிசனம் செய்வது மனத்திற்கு இனிமையாய் இருக்கும். சலவைக்கல்லால் கட்டப்பட்ட இந்த வெள்ளைக்  கலைக் கோவிலை மின் விளக்குகள் அழகாகக் காட்டுகின்றன.

கேமரா, பைகள், மொபைல் போன்றவை பிர்லா மந்திரில் தடை செய்யப்பட்டுள்ளதால் உடன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. செருப்பு, சாமான்கள், மொபைல் போன்றவற்றிற்கு இலவசக் காப்பகங்கள்  உள்ளன.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 07.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை; மாலை 03.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை.

இக்கோவில் ஹைதராபாத் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலும், ஹைதராபாத் பேரூந்து முனையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், பேகம்பேட் விமானநிலையம் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பிர்லா கோளரங்கம் (Birla Planetarium), வான் ஆய்வுக்கூடம் (Observatory) மற்றும் பிர்லா அறிவியல் அருங்காட்சியகம் எல்லாம் பிர்லா மந்திரின் அருகில் அமைந்துள்ளன.

குறிப்புநூற்பட்டி

  1. Birla Mandir in Hyderabad https://www.mapsofindia.com/my-india/travel/pure-marble-marvel-birla-mandir
  2. Birla Mandir, Hyderabad Wikipedia
  3. Deula, Wikipedia

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in கோவில் and tagged , , , , , , . Bookmark the permalink.