சாலார் ஜூங் அருங்காட்சியகம், ஹைதராபாத்

சாலார் ஜூங் அருங்காட்சியகம் (English: Salarjung Museum – Telugu: సాలార్ జుంగ్ మియూచియం), தெலிங்கானா மாநிலம், ஹைதராபாத் மாவட்டம், ஹைதராபாத் நகரம், தாருலஷிபா (దారులషిఫా), நயா புல், எண் 22-8-299/320, சாலார் ஜூங் சாலையில் (సాలార్ జుంగ్ రోడ్) (பின் கோடு 500002) அமைந்துள்ளது. மூசி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய அருங்காட்சியகமாகவும்,  உலகின் மிகப்பெரிய தனி-மனிதத் தொகுப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் முதல் இரண்டு இடம் வகிக்கும் அருங்காட்சியகங்கள்: முதல் இடம் ககோரி-கி-ஹவேலி அருங்காட்சியகம், உதய்பூர்; இரண்டாம் இடம் விக்டோரியா நினைவு மாளிகை அருங்காட்சியகம், கல்கத்தா. ஹைதராபாத்தில் சார்மினார், மெக்கா மசூதி, உயர் நீதிமன்றம், மாநில மத்திய நூலகம் போன்ற  சுற்றுலாத் தலங்களுக்கு அருகே அமைந்துள்ள இந்த அருங்காட்சியம் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

பத்து ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அருங்காட்சிய வளாகத்தின் இரண்டு தளக் கட்டடத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில். காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருட்கள், மூன்றாம் சாலார் ஜூங் என்று அறியப்படும் மிர் யூசுஃப் அலி கான், நவாப் துரப் அலி கான் (முதலாம் சாலார் ஜூங்), இவர்களின் வாரிசுகள் ஆகியோர் இணைந்து சேகரித்த வாழ்நாள் சேகரிப்புகளாகும். ஹைதராபாத்தின் ஏழாம் நிஜாம் உஸ்மான் அலி கான் (Osman Ali Khan) அவர்களின் முதன்மை அமைச்சராக  – (வசீர் – Wazir) கி.பி. 1899 முதல் 1949 வரை பதவி வகித்த மிர் யூசுஃப் அலி கான், உலகின் பல பகுதிகளில் இருந்து தொல்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்களை 35 ஆண்டுகள் முயன்று சேகரிக்கத் தன் வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிட்டதுடன் இவற்றைப் பாதுகாப்பதில் தன் மொத்த வாழ்நாட்களையும் செலவிட்டார்.  சாலார் ஜூங் அருங்காட்சியகம், திருமணம் செய்து கொள்ளாது தனியே வாழ்ந்த, நவாப் மிர் யூசுஃப் கானின் கலை மற்றும் தொல்பொருட்கள் குறித்த பேரார்வத்திற்கு ஒரு சான்று.எனலாம். இவர் அருங்காட்சியகப் பொருட்களைப் பாதுகாக்க தனது பணியாளர்களையே நம்பவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். என்றாலும் பல பொருட்கள் காணமல் போய்விட்டதாகத் தெரிகிறது.

salar_jung_museum2c_hyderabad2c_india

Salar Jung Museum, Facade PC: Wikipedia

salarjung_iii

மூன்றாம் சாலார் ஜூங்

மூன்றாம் சாலார் ஜூங் வசித்த குடும்ப மாளிகையான திவான் தேவ்ரியில் (Dewan Deorhi) 1951 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டுப் பாரதப் பிரதமர் பண்டிட். ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை 1958 ஆம் ஆண்டில் அரசு  தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. 1961 ஆம் ஆண்டு முதல் தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த அருங்காட்சியகம், அருங்காட்சியகச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுனரைப் பதவிவழித் தலைவராகக் கொண்ட நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை ஒன்றினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 1968 ஆம் ஆண்டில் மூசி ஆற்றின் தென்கரையிலுள்ள புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டுத் தற்போது வரை இந்த முகவரியில் செயல்பட்டு வருகிறது.

38 காட்சிக்கூடங்கள் (Galleries) கொண்ட அருங்காட்சியகம் இரண்டு தளக் கட்டடத்தில் பரந்து விரிந்துள்ளது. தரைத்தளத்தில் 20 காட்சிக் கூடங்களும், முதல் தளத்தில் 18 காட்சிக் கூடங்களும் அமைந்துள்ளன. காட்சிக் கூடங்கள் மத்திய தொகுதி (Central Block), கிழக்கு தொகுதி (Eastern Block) மற்றும் மேற்கு தொகுதி (Western Block) உள்ளிட்ட மூன்று பிரிவுகளாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஒருங்கிணைக்கும் பிரிவுகள் (co-ordinating sections), கல்வித் துறை, வேதியல் பாதுகாப்பு ஆய்வகம் (Chemical Conservation Laboratory), புகைப்படப் பிரிவு, காட்சிப் பிரிவு (Display section), படிப்பறை (Reading Room), பயணிகள் உடமைகள் பாதுகாப்பு அறை (Cloak Room), வரவேற்பு (Reception) மற்றும் விற்பனை நிலையம் (Sales counter) போன்ற பிரிவுகளும் உள்ளன.

விற்பனைப் பிரிவில் அருங்காட்சியகத்தின் அட்டவணை (Museum Catalogue) மற்றும் தபால் அட்டை அளவிலான புகைப்படங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையினரால் நடத்தப்படும் சிற்றுண்டிச் சாலையும் உள்ளது.

இந்தியக் கலை (Indian Art), தூர கிழக்கு நாட்டுக் கலை (Far Eastern Art), ஐரோப்பியக் கலை (European Art), சிறுவர்களுக்கான கலை (Children Art), மத்திய கிழக்கு நாட்டுக் கலை (Middle Eastern Art), நிறுவுனர் காட்சிக் கூடம் (Founders gallery) மற்றும் சுவடியியல் பிரிவு (Rare Manuscript section) முதலிய சேகரிப்புகள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆப்பிரிக்கா (Africa), ஐரோப்பா (Europe), தென்கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் (South-East and West Asian Countries) மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சிற்பங்கள் (sculptures), பாரசீக சிற்றுருவங்கள் (Persian Miniatures), அறைகலன் (Furniure), கையெழுத்துச் சுவடிகள் (Manuscripts) மற்றும் ஆயுதங்கள் (Weapons) எல்லாம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய 43000 கலைப்பொருட்கள், 9000 கையெழுத்துச் சுவடிகள் (manuscripts) மற்றும் 47000 அச்சிடப்பட்ட நூல்கள் போன்ற சேகரிப்புகள் கொண்ட சாலார் ஜூங் அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வளமான அனுபவத்தைத் தரும் என்று நம்பலாம்.

தக்காணச் சிற்றோவியம் (Deccan Miniature Paintings), சீனத்துப் பீங்கான் பத்திரங்கள் (Chinese porcelain), அரேபிய மற்றும் பெர்சிய கையெழுத்துச் சுவடிகள் (Arabic and Persian manuscripts), 184 கேரட் ஜேகப் வைரம் (184-carat Jacob Diamond) உள்ளிட்ட நிஜாமின் நகைகள் (Nizam’s Jewels), பண்டைய தென்னிந்திய வெண்கலச் சிலைகள் (Ancient South Indian Bronzes), மரம் மற்றும் கற்சிற்பங்கள் முதலியன மற்ற சிறப்பம்சங்களாகக் கருதப்படுகின்றன. பலவித அளவுகளிலும் வடிவங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குரான் நூல்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டவை ஆகும். இவற்றுள் தங்கம் மற்றும் வெள்ளித் தகடுகளின் மேல் எழுதப்பட்ட குரான் நம் கவனத்தைக் கவர்கிறது. சில தொல்பொருட்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை ஆகும்.

salar_jung_museum_-_front_man_back_woman

Mephistopheles & Margaretta: Wooden sculpture PC: Wikipedia

இங்குள்ள கடிகார அறையில் (Clock Room) பண்டைய சூரியக் கடிகாரம் (Sun Dial Clock) முதல் நவீன கடிகாரம் வரை பல அற்புதமான கடிகார சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பூதக்கண்ணாடியில் பார்க்கத்தக்க மிகச் சிறிய கடிகாரமும் இங்குள்ளது.

இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் இசைக் கடிகாரம் (British Musical Clock) இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் வசீகரிக்கும் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கடிகாரம் இங்கிலாந்து நாட்டின் குக் அண்டு கேல்வி (Cooke and Kelvey) நிருவனத்தரால் விற்கப்பட்டது ஆகும். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த இசைக் கடிகாரத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்ட கதவு தானே திறந்து கொள்கிறது. உள்ளிருந்து ஒரு மனிதப் பொம்மை தாடியுடன் வெளியே வருகிறது. சுத்தியல் கொண்டு உலோகத் தகட்டின் மீது ஓங்கி அடித்த பின்பு உள்ளே சென்று விடுகிறது. கதவு மூடிக்கொள்கிறது. இசைக் கடிகாரத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் பார்வையாளர்கள் கூடியிருந்து இந்த நிகழ்வைக் கண்டு ரசிக்கிறார்கள். இருநூறு வருடங்களாக இந்த இசைக் கடிகாரம் ஒரு முறை கூடப் பழுதாகாமல் ஓடிக்கொண்டு இருப்பது வியப்பான செய்தியாகும்.

தொடர்புடைய படம்

யானைத் தந்தம், சலவைக்கல் போன்றவற்றால் செய்யப்பட்ட பல விலைமதிப்பற்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜி..பி. பென்சோனி (G B Benzoni = Giovani Battista Benzoni) என்ற இத்தாலிய சிற்பியால் 1876 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட முக்காடு அணிந்த ரெபெக்காவின் பளிங்குச் சிலை (Veiled marble statue of Rebecca) இந்த அருங்காட்சியகத்தில் பார்வையாளர் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு சிறப்பம்சம் ஆகும். ரெபெக்கா ஒரு விவிலியப் பாத்திரம் ஆகும். இந்தச் சிலை முதலாம் சாலார் ஜூங் 1876 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டிற்குச் சென்றபோது இந்தியா கொண்டுவரப்பட்டது.

the_veiled_rebecca

முக்காடு அணிந்த ரெபெக்காவின் பளிங்குச் சிலை PC: Wikipedia

நவாப் மிர் யூசுஃப் கான் தொல்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் மீதும் தீராத காதல் கொண்டவர். உலகெங்கிலுமிருந்து தொல்பொருட்களையும் கலைப்பொருட்களையும் சேகரித்து அவற்றைத் தன் மதிப்பு மிக்க உடமைகளாக ஆக்கிக்கொள்வதில் பேரார்வம் காட்டியதுடன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியையும் இதற்காகவே செலவிட்டார். இவ்வாறு சேகரித்த ராஜா ரவிவர்மா ஓவியங்கள், ஒளரங்கசீப், ஜஹாங்கீர், நுார்ஜஹானுடைய வாள்கள், திப்பு சுல்தானின் அங்கிகள், தலைப்பாகை, நாற்காலிகள் எல்லாம் இங்கு காட்சிப்படுதப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தைக் காண ஆண்டுதோறும் பத்து லட்சம் பார்வையாளர்கள் வருகிறார்களாம். ஹைதராபாத் நகருக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வோர் சாலார் ஜூங் அருங்கட்சியகத்தைப் பார்வையிட வரவில்லை என்றால் அவர்கள் பயணம் முடிவடையாத பயணமாக இருக்கும்.

அருங்காட்சியகம் வேலைநேரம்:

காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை  வெள்ளிக்கிழமை வார விடுமுறை

கட்டணம்:
இந்தியர்களுக்கு ரூ. 20
வெளிநாட்டினருக்கு ரூ. 500
அடையாள அட்டையுடன் வரும் 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு இலவசம்.
சீருடை அணிந்த இராணுவத்தினர், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உழவர் குழுவினர்களுக்கு 50 சதவிகிதம் சலுகைக் கட்டணம் உண்டு
புகைப்படக் கேமரா ரூ. 50

 1. தொலைபேசித் தொடர்புக்கு : +91 40 2457 6443
 2. வெப் (web): salarjungmuseum.in
 3. சுற்றிப் பார்க்க சுமார் இரண்டு மணி நேரம் ஆகலாம்.
 4. வழிகாட்டும் சுற்றுலா வசதி உண்டு
 5. உங்கள் பயண உடமைகளை பொருள் வைப்பறையில் (Cloak Room) வைத்துச் செல்வது அவசியம்.
 6. கத்தி, கத்தரி, பிளேடு, தீப்பெட்டி, லைட்டர் போன்ற பொருட்களுக்கு அனுமதியில்லை.
 7. சில கூடங்களில் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கேமராவை பாதுகாப்பு வைப்றையில் விட்டுச் செல்லவேண்டும்.
 8. காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களைத் தொடாமல் பார்க்கலாம்.
 9. காட்சிக் கூடங்களில் கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
 10. பிக்னிக் வசதி இல்லை
 11. உணவு மற்றும் குடிநீர் வசதி அளிக்கப்படுகிறது.
 12. கழிப்பறை வசதிகள் உள்ளன.
 13. வாகனப் பாதுகாப்பு வசதி உள்ளது.
 14. புகைபிடிப்பதற்கு அனுமதியில்லை.
 15. சுற்றுப்புறங்களைத்  தூய்மையாக வைத்திருக்கவும்.

குறிப்புநூற்பட்டி 

 1. வியப்பூட்டும் இந்தியா: சலார் ஜங் அருங்காட்சியகம் அ. மங்கையர்கரசி இந்து தமிழ் திசை டிசம்பர் 06, 2017
 2. Salaar Jung Museum https://timesofindia.indiatimes.com/travel/hyderabad/salar-jung-museum/ps24926054.cms
 3. Salar Jung Museum Hyderabad (Entry Fee, Timings, Entry Ticket Cost, Price) https://www.hyderabadtourism.travel/salarjungmuseumhyderabad
 4. Salar Jung Museum in Hyderabad https://www.mapsofindia.com/my-india/travel/salar-jung-museum-hyderabad-the-third-largest-museum-in-india

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in தொல்லியல், வரலாறு and tagged , , , , , . Bookmark the permalink.

6 Responses to சாலார் ஜூங் அருங்காட்சியகம், ஹைதராபாத்

 1. muralidharan3756 சொல்கிறார்:

  உங்கள் நற்பணி தொடரட்டும் ஐயா
  வணங்குகிறேன்.

  Like

 2. இதில் வெளிநாட்டினருக்கு மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தவறானது என்பது எனது கருத்து.

  Like

 3. Dr B Jambulingam சொல்கிறார்:

  என் வாழ்க்கையில் நான் பார்க்க ஆசைப்பட்டு இது வரை பார்த்திராத இடத்திற்கு உங்கள் பதிவு மூலமாக அழைத்துச் சென்றமைக்கு நன்றி. அங்கு செல்லும் ஆசையை இப்பதிவு மேம்படுத்திவிட்டது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.