எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள்

மரக்காணம் (English: Marakkanam), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்திருந்த துறைமுகமும் நகர்ப்புற மையமுமாகும் (Seaport and Urban Center) (பின்கோடு 604303). இந்நகரம் பண்டைக் காலத்திலிருந்து எயிற்பட்டினம் (Eyirpattinam), சோபட்டினம் (Sopattinam), சோபட்மா (Sopatma), மனக்கானம் (Manakkanam), போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. “மதிலொடு பெயரியப் பட்டினம்” என்று சிறுபாணாற்றுப்படை சுட்டும் இந்தச் சங்ககாலத் துறைமுகப் பட்டணம் பாலாறு வங்கக் கடலுடன் சங்கமிக்கும் கழிமுகத்தில் அமைந்திருந்தது. இந்தப் பதிவில் ஆழ்கடலில் மூழ்கிய இத்துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஆய்வாளர்கள் கண்டறிந்த  மதிற்சுவர் பற்றியும், சிறுபாணாற்றுப்படை காட்டும் ஓவியர் குடிப்பிறந்த நல்லியக்கோடன் ஆண்ட ஒய்மா நாடு, அதன் தலைநகரான நன்மாவிலங்கை பற்றியும், கிடங்கில், ஆமூர், வேலூர், எயிற்பட்டினம்  ஆகிய ஊர்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளன.

சங்க காலத்தில் வங்கக் கடலோரம் பல துறைமுகங்கள் இருந்துள்ளன. உள்நாட்டில் நிலவிய பண்டமாற்று வணிகத்திலும் வெளிநாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட பண்டைய கடல் வணிகத்திலும் இத்துறைமுகங்கள் பெரும் பங்காற்றின. பாண்டிய நாட்டின் கொற்கை (Ptolemy: Kolkhai Emporium: Periplus: Colchi), சோழ நாட்டின் காவிரிபூம்பட்டிணம் (Pliny: Keberis: Periplus: Camera Emporium), ஒய்மா நாட்டின் எயிற்பட்டினம் (Pliny: Soptana; Periplus: Sopatama), தொண்டை நாட்டின் நீர்பெயற்று (Pliny: Nikam) ஆகியவை வங்கக் கடலோரம் அமைந்திருந்த துறைமுகங்களாகச் சங்க இலக்கியம் காட்டுகிறது. சங்ககாலத்தில் வளம் கொழிக்கும் துறைமுகமாக விளங்கிய எயிற்பட்டினம் இயற்கைச் சீற்றத்தால் வங்கக் கடலில் மூழ்கியது.

பெயர்க்காரணம் 

சிறுபாணாற்றுப்படை இவ்வூரை எயிற்பட்டினம் என்று குறிப்பிடுகிறது. எயில் என்றால் மதில் (Wall) என்று பொருள். மதிலைக் கொண்ட கடற்கரைப் பட்டணம் எயிற்பட்டினம் என்று ஆயிற்று. எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவணத்தில் (manuscript document) எயிற்பட்டணம் சோபட்மா (Sopatma) என்று குறிப்பிடப்படுகிறது. பெரிப்ளூஸ் (Periplus) என்னும் இந்தப் படைப்பு ஒரு குறிப்பட்ட ஆசிரியரால் எழுதப்பட்டதல்ல. கடற்பயணக் குறிப்புகள் கடல் சார்ந்த கிரேக்க  மொழி பேசிய எகிப்த்திய வணிக மாலுமிகளால் எழுதப்படிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். சோ என்றால் மதில் என்று பொருள். பட்மா என்றால் பட்டினம் என்று பொருள். சோபட்மா என்றால் மதிலை உடைய பட்டணம் என்று பொருள்.

மரங்கள் நிறைந்திருந்த பகுதி என்பதால் மரக்காணம் என்ற பெயர் பெற்றது என்பது பெயர்க்காரணம் பற்றிய ஒரு கருத்தாகும். இவ்வூரில் உள்ள பூமீஸ்வரர் கோவிலில் பொறிக்கப்பட்ட முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டில் பட்டின நாட்டு மனக்கணமான இராஜராஜப் பேரளத்தில் உள்ள பூமீஸ்வரர் கோவிலுக்கு அளித்த விளக்குக் கொடை  பற்றிப் பதிவு செய்துள்ளது.   முதலாம் இராஜாதிராஜன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் பூமீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நந்தவன நிலத்தை எயிற்பட்டினம் சபையோர் விற்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் காலத்துக்  கல்வெட்டு ஜெயம்கொண்ட சோழ மண்டலம், விஜயராஜேந்திர சோழ வளநாடு,   பட்டின நாட்டில் அமைந்திருந்த இவ்வூரை  கண்டராதித்த நல்லூர் என்று பதிவு செய்துள்ளது. விக்கிரம சோழன் காலத்தில் விக்கிரமசோழ சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றிருந்தது.

பி.எல். சாமி தனது “மகாபலிபுரத்தில் நீர் வழிபாடு” (Samy, P L (1976). Water Cult at Makapalipuram in Journal of Tamil Studies, issue 9-10. p 90) என்ற கட்டுரையில் எயிற்பட்டினமே தற்போதைய மரக்காணம் என்று அடையாளப்படுத்துகிறார். சிறுபாணாற்றுப்படையில் வருணிக்கப்படும் எயிற்பட்டினமும் பெரிபுளூஸ் சுட்டிக்காட்டும் சோபட்மா என்ற சோபட்டினமும் ஒன்று என்று கருதலாம்.

அமைவிடம்

மரக்காணம் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், மரக்காணம் பேரூராட்சியில் அமைந்துள்ள கடற்கரை நகரமாகும் (பின்கோடு 604303). இதன் அமைவிடம் 12.2°N அட்சரேகை 79.95°E தீர்க்கரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இதன் உயரம் 33 மீ (108 அடி) ஆகும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 22,034 (ஆண்கள் 10,998; பெண்கள் 11,036) ஆகும். மரக்காணம் பாண்டிசேரியிலிருந்து 37.3 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 39 கி.மீ. தொலைவிலும், கடலூரிலிருந்து 61 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 74 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 122 கி.மீ. தொலைவிலும், நாகபட்டிணத்திலிருந்து 190 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

ancient_tamilakam_ports

Ports of Tamizhakam During Sangam Period PC: Wikipedia

மரக்காணம் உப்பளம்

marakkanam_salt_pans

மரக்காணம் உப்பு உற்பத்திக்குப் புகழ் பெற்ற ஊர். உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தரமான உப்பு என்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் பரப்பளவில், மிகப்பெரும் உப்பளம் உள்ளது. ஆண்டுதோறும் 75 ஆயிரம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும் இப்பகுதியில் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கி ஜூன் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

மரக்காணம் ஊருக்கு வடக்கே சுமார் 2 – 3 கி.மீ. தொலைவில் கடல்நீரை உப்பளங்களுக்குக் கொண்டுசெல்லும் கழிமுகம் உள்ளது. கடற்கரைக்கும் உப்பளங்களுக்கும் இடைப்பட்ட நிலத்தில் உள்ள பல குப்பங்களில் இன்றும் பரதவர் வாழ்கின்றனர். சிறுபாணாற்றுப்படை இவற்றைக் “கழி சூழ்ந்த ஊர்களையுடைய பட்டினம்” என்று சுட்டுகிறது.

சோழா்கள் ஆட்சியிலும் விஜய நகரப் பேரரசின் ஆட்சியிலும் மரக்காணம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகித்துள்ளது. சோழ அரசு உப்பு உற்பத்தியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சோழர்கள் உப்புக்கு விதித்த வரி உப்பாயம் எனப்பட்டது. அளவில் பெரிய உப்பளங்களுக்குப் பண்டைய அரசர்களின் பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டன எ.கா. பேரளம், கோவளம் (கோ அளம்). மரக்காணம் பூமீசுவரர் கோவில், “மனக்காணமான இராசராசப்பேரளம்” என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கிம்ஹாம் கால்வாய்

பக்கிம்ஹாம் கால்வாய் முக்கியத் தேசிய நீர்வழித் தடமாகும். ஆந்திராவின் விஜயவாடாவிலிருந்து தமிழகத்தின் புதுச்சேரி வரை இந்தக் கால்வாய் சுமார் 420 கி.மீ. நீளம் கொண்டது. இந்தக்கால்வாய் மரக்காணம் வழியாகப் புதுச்சேரி செல்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் மரக்காணத்திலிருந்து சென்னை வரை படகுப் போக்குவரத்து இருந்துள்ளது. தேசிய நீர் வழி நான்கு திட்டத்தின் படி, பக்கிங்ஹாம் தெற்கு கால்வாய் வழித்தடத்தில், சோழிங்கநல்லுார் – கலப்பாக்கம் நீர் வழிப் பாதையை மேம்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கிஉள்ளது. குறும்பரம் மூலிகைவனம் 664 ஏக்கர் பரப்பளவில் இவ்வூரில் அமைந்துள்ளது. இங்கு 650 அரிய வகை மூலிகைகள் உள்ளன.

மரக்காணம் பூமீஸ்வரர் கோவில் கல்வெட்டு 

மரக்காணம் ஶ்ரீகிாிஜாம்பிகை சமேத ஶ்ரீபூமீஸ்வரா் திருக்கோவில் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் கட்டப்பட்டதாகும். இதன் பின்னர்ப் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்த் தஞ்சைப் பெருவுடையார் கோவில் கட்டப்பட்டதாம். சங்க காலத்திலிருந்தே இங்கு ஒரு கோவில் இருந்ததாகவும் இஃது ஆழிப்பேரலையில் அழிந்து போயிற்று என்றும் இந்தச் சங்ககாலக் கோவிலையே இராஜராஜன் மீண்டும் கட்டியுள்ளதாகவும் ஒரு செய்தி உள்ளது.

Bhoomeshwarar Temple, Marakkanam, Villupuram க்கான பட முடிவு

Bhoomeshwarar Temple, Marakkanam, Villupuram க்கான பட முடிவு

இக்கோவிலில் கண்டறியப்பட்ட சோழர்கள் கல்வெட்டுகள் இவ்வூர் மனக்கானம் என்று பெயர் பெற்றிருந்தாகப் பதிவு செய்துள்ளன. மணற்கானம் (மணற்காடு) என்ற சொல்லே மனக்கானம் என்று திரிந்திருக்கலாம் என்று டாக்டர். மா.இராசமாணிக்கனார் தம் பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார். விஜயநகரப் பேரரசின் காலத்தில் மனக்கானம், மரக்காணம் என்று மேலும் திரிபுற்று வழங்கலாயிற்று என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒய்மா நாட்டுக் கடற்கரையில் பட்டினம் என்ற ஊர் இருந்ததாகவும், அந்த ஊரின் பெயராலேயே இக்கடற்கரைப் பகுதி பட்டினநாடு என்று அழைக்கப்பட்டது. பட்டினநாடு ஒய்மா நாட்டில் இடம்பெற்றிருந்த பல உள்நாடுகளில் ஒன்றாகவும் இடம் பெற்றிருந்தது. முதலாம் இராசராசனின் கல்வெட்டுகளில், இப்பகுதியைக் குறிக்கும்போது, ஒய்மாநாட்டு, பட்டினநாட்டு, தேவதானம் என்றும், முதலாம் இராசேந்திரன் கல்வெட்டில், ஒய்மாநாட்டுப் பட்டினநாட்டுப் பட்டினம் என்றும் குறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். முதலாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டில், எயிற்பட்டினம் என்று வருவதைக் காணமுடிகிறது.

மரக்காணம் கடல் ஆய்வுகள் 

சென்னையைச் சேர்ந்த திரு.எஸ்.பி.அரவிந்த் ஓர் ஆழ்கடல் நீச்சல் வீரர் (Scuba Diver). சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட PADI (Professional Association of Diving Instructors) டைவ் மாஸ்டர் (Dive Master). சிறந்த ஆழ்காடல் நீச்சல் பயிற்சியாளரும் (Scuba Instructor) டெம்பிள் அட்வென்சர்ஸ் (Temple Adventures) என்ற ஆழ்கடல் நீச்சல் பள்ளியின் (Scuba Diving School) மூன்று பங்குதாரர்களில் ஒருவரும் ஆவார். இவர் மரக்காணம் அருகே ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கடற்கரையிலிருந்து சில கி.மீ. தூரம் சென்று ஆழ்கடலில் மூழ்கியபோது நீண்ட மதிற்சுவர் ஒன்றைக் கண்டறிந்தார். இந்த மதிற்சுவரை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று கருதி இச்சுவருக்கு “அரவிந்த் வால்” (Aravind Wall) என்று பெயர் சூட்டியுமுள்ளார். புகழ்பெற்ற பெருங்கடற் பண்பாட்டு ஆய்வாளரும், பொறியியலாளரும், வரலாற்றாய்வாளாருமான ஒரிசா பாலு என்கிற பாலசுப்பிரமணி இவருடன் தொடர்பிலிருந்தவர் ஆவார். அரவிந்த் தான் கண்டறிந்த சுவர் பற்றி  திரு பாலுவிற்குத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திரு.பாலு அரவிந்த் குறிப்பிட்ட பகுதியில் தன் கடல் ஆய்வுகளை மேற்கொண்டார்.

scuba diving aravind's wall Orissa Balu க்கான பட முடிவு

இவருடைய ஆய்வு இங்கு சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது. இதற்காக இந்தச் சுவரிலிருந்து கல்லையோ மண்ணையோ பெயர்க்காமல் மேற்பார்வை சோதனைகளை (Superficial Testing) மட்டும் மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் அரவிந்த் சுவர் என்று குறிக்கப்பட்ட அந்தச் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்துவாரம் வரை சென்றதையும் சுவரின் மற்றொரு பகுதி புதுச்சேரியின் எல்லையில் அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்றுக் கழிமுகமான நரம்பை வரை சென்றதையும் கண்டறிந்தார். சுவரை ஒட்டி மரக்கலங்கள் சென்று வருவதற்கான கால்வாய் இருந்ததற்கான தடயங்களையும் கண்டறிந்தார். இந்த மதிற்சுவர் கோட்டைச் சுவராகவோ கடல்நீர் தடுப்புச் சுவராகவோ இருந்திருக்கலாம் என்ற கருத்தையும் முன் வைத்தார். புதுச்சேரி கடற்பகுதியில் மூழ்கியுள்ள சுவற்றின் கீழே படிக்கட்டுகள் உள்ளன. தங்கும் அறைகள் உள்ளன. மேலே கலங்கரை விளக்கம் இருந்ததற்கான அடையாளங்களும் உள்ளன. சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் எயிற்பட்டினத்துடன் இந்த அடையாளம் வெகுவாகப் பொருந்துவதால், மரக்காணம் கடற்பகுதியில் மூழ்கியுள்ள சுவர்ப்பகுதி காணப்படும் இடம்தான் அழிந்துபோன சங்ககாலத் துறைமுகமான எயிற்பட்டினம் என்ற தன் கருத்தையும் முன்வைத்தார். அரவிந்த் சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்கலாம் என்றும் கருதுகிறார்..மேற்சொன்ன தரவுகளின் அடிப்படையில் தமிழகத் தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் இப்பகுதியில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்ட பகுதியை முறையாகப் பாதுகாத்து வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆற்றுப்படை 

ஆற்றுப்படுத்துதல் என்றால் வறுமைச் சூழலில் உள்ள கலைஞர்களான கூத்தர், பாணர், பொருநர், விறலியர் போன்றோரை வழிப்படுத்துதல்  என்று பொருள் கொள்கிறார்கள். இக்கலைஞர்கள் தங்கள் வறுமை நீங்க சங்ககால வள்ளல்களிடம் சென்று பொருள் பெறுவது மரபு. இவ்வாறு ஒரு வள்ளளிடம் பொருள் பெற்றுத் திரும்பும் கலைஞர்கள் வறுமையில் வாடும் மற்றோரு கலைஞர் குழுவினை தாங்கள் பெற்றது போன்றே பொன்னும் பொருளும் பெரும் வகையில் வள்ளல் ஒருவரிடம் செல்வதற்கு வழிப்படுத்துதல் ஆகும். வழிப்படுத்துதல் என்றால் வள்ளளின் புகழ், கொடைத்திறன், செல்லும் வழி, நில அமைப்பியல் (Topography),  இயற்கை, விலங்குகள், மக்கள் உறைவிடங்கள் பற்றியெல்லாம் கூறி வழிப்படுத்துவதே ஆற்றுப்படை என்று தொல்காப்பியம் வரையறுகிறது.

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்
(தொல்காப்பியம், புறத்திணையியல் 88)

கூத்தர், பொருநர், பாணர், விறலியர் ஆகியோரின் ஆற்றுப்படைகளுக்குத் தனித்தனியே இலக்கணம் கூறுவது புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல் ஆகும். பத்துப்பாட்டில் இடம்பெறும் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனும் கூத்தராற்றுப்படை ஆகிய ஐந்து நெடும்பாடல்கள் இந்த இலக்கணங்களின் படி அமைத்துப் பாடப்பட்டவை ஆகும்.

யாழ் 

யாழ் என்பது மீட்டி வாசிக்கக்கூடிய பண்டையத் தமிழ் நரம்பிசைக் கருவி ஆகும். யாழ் பற்றிச் சங்க இலக்கியத்தில் பல செய்திகள் உள்ளன. பண்டைக் காலத்தில் சீறியாழ் (7 நரம்புகள் உடையது), பேரியாழ் (21 நரம்புகளை உடையது), சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ், வில்யாழ், மயில்யாழ், தும்புருயாழ், ஆதியாழ், மருத்துவயாழ், கீசகயாழ், தீந்தொடை என்று பல யாழ் வகைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. பெரும்பாணர் பேரியாழை இசைத்துப் பாடினர். சிறுபாணர் சீறியாழை இசைத்துப் பாடினர். சிறுபாணரை ஆற்றுப்படுத்தும் பத்துப்பாட்டு நூல் சிறுபாணாற்றுப்படை ஆகும்.

தொடர்புடைய படம்

சீறியாழ் க்கான பட முடிவு

சீறியாழ்PC: தமிழ்த்துளி வையன்

சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை, பதினெண் மேல்கணக்கு (Patiṉeṇmelkaṇakku) தொகுப்புகளுள் ஒன்றாகவும், பத்துப்பாட்டு (Ten Idylls) துணைத் தொகுப்புகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. இதனை இயற்றியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் ஆவார். பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதாக இடம்பெறும் சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. பாடாண் திணையிலும், ஆற்றுப்படைத் துறையிலும், ஆசிரியப்பாவிலும் இயற்றப்பட்ட இந்நூல் 269 அடிகளைக் கொண்டது. சிறுபாணாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்லிய கோடனின் வீரம், கொடை ஆகியவற்றைப் போற்றிப் பாடி பரிசில் பெற்றுத் திரும்பும் பாணன் மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துவது சிறுபாணாற்றுப்படை ஆகும்.

இன்குரல் சீறியாழ் இடவயின் தழிஇ
(சிறுபாணாற்றுப்படை 35)

இந்நூலில் பாடினியின் எழிலும், பாணனின் இசைப்புலமையும் சுவையுடன் விவரித்துக் கூறப்பட்டுள்ளது. ஏழு வள்ளல்களுக்கும் ஈடான கொடைச் சிறப்பினை உடையவன் நல்லியக்கோடன்.

எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்
(சிறுபாணாற்றுப்படை 113-115)

ஒய்மா நாடு 

ஒய்மா நாட்டு ஓவியர் குடிப் பெருமகன் என்று போற்றப்பட்ட ஓய்மான் நல்லியக்கோடன் என்ற சங்ககாலக் குறுநில மன்னன் (Chieftain) நன்மாவிலங்கை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த செய்தி சங்க இலக்கியப் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் (முன்னாள் தென்னார்க்காடு மாவட்டம்) திண்டிவனம் வட்டமும் திருக்கோவிலூர் வட்டமும் அன்று ஒய்மா நாடாகத் திகழ்ந்தது.

ஒய்மா நாட்டிற்குக் கிழக்கே கடற்கரையைச் சார்ந்திருந்த பகுதி இடைக்கழி நாடு என்று அழைக்கப்பட்டது. சிறுபாணாற்றுப்படையை இயற்றிய சங்ககாலப் புலவரான இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், “நன்மா இலங்கை கிழவோன்” ஆகிய நல்லியக்கோடனின் கொடைத்தன்மையைப் புகழ்ந்து பாடியுள்ளார். புறத்திணை நன்னாகனாரும் (புறநானூறு பாடல் 176) இவன் கொடைத் திறத்தைப் பாடியுள்ளார். “பெருமாவிலங்கைத் தலைவன்” என்ற சொற்றொடர் மூலம் நல்லிய கோடன் மாவிலங்கையில் இருந்து கொண்டும் ஒய்மா நாட்டை ஆண்டு வந்துள்ளான் என்ற செய்தி புறநானூற்றுப் பாடலில் இடம்பெறுகிறது.

சோழர்கள் காலத்தில் ஓய்மாநாடு ஜெயங்கொண்டசோர மண்டலம் என்னும் தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது. ஒய்மா நாடு விஜயராஜேந்திர வளநாடு என்ற பெயரிலும் அறியப்பட்டது. ஒய்மா நாட்டில் 1. ஆமூர் நாடு; 2. கிடக்கை நாடு (கிடங்கில்); 3. பேரயூர் நாடு (பேரயூர் அல்லது பேராவூர்) ஆகிய மூன்று நாடுகள் இடம்பெற்றிருந்தன.

எயிற்பட்டினம்

எயிற்பட்டினம் சங்ககாலத்தில் ஒய்மா நாட்டின் துறைமுக பட்டணமாகவும் புகழ் பெற்ற கடல் வணிக நகராகவும் விளங்கியது. இவ்வூர் கோப்பட்டினம், மதிற்பட்டினம் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளன, சிறுபாணாற்றுப்படை உரையாசிரியர் இவ்வூரை எயிற்பட்டினம் என்றே தன் உரையில் சுட்டுகிறார்.

அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடுங் கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர,
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி,
மணி நீர் வைப்பு, மதிலொடு பெயரிய,
பனி நீர்ப் படுவின், பட்டினம் படரின்
(சிறுபாணாற்றுப்படை 146 – 153)

கிடங்கில் கோமான் என்று புகழப்படும்  நல்லியக்கோடன் வாழும் கிடங்கிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் நெய்தல் நிலப்பெருவழி வழியாகக் கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் நீலநிறக் கடலின் மணியைப் போன்ற நீர் சூழ்ந்த நிலத்தில், பனிநீர், அதாவது குளிர்ந்த நன்னீருடன் கூடிய குளங்களை உடைய எயிற்பட்டினத்தைச் சென்றடையலாம். இந்தப் பட்டினம் மதிலின் (மதில் = எயில்) iபெயர் இணைந்துள்ள பட்டினம். அஃதாவது எயிற்பட்டினம் ஆகும்.

இந்த எயிற்பட்டினத்துக் கடற்கரையில் தாழை மலர் அன்னம் போலப் பூத்திருக்கும்; செருந்திப் பூக்கள் பொன்போல் பூத்துத் தரையில் இரைந்து கிடக்கும்; கடல் அலைகள் முண்டகப் பூக்களைக் கதிர்மணிகள் என்று கருதிக் கழுவி கொண்டிருக்கும். புன்னை மரம் முத்துக்கள் போல் அரும்பெடுத்து இருக்கும்; கரையிடத்து உள்ள வெள்ளிய மணல் பரப்பில் கடல் பரந்து ஏறுகின்றது. இத்தகைய நெய்தல் நிலத்தின் வழிநெடுக உப்பங்கழிகள் சூழ்ந்த ஊர்கள் உள்ளன. இக்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தவாறே சென்றால் மதில்களால் சூழப்பட்டதும் பொய்கைகள் நிறைந்ததுமான எயிற்பட்டினத்தை அடையலாம்.

ஒழுங்குநிலை ஒட்டகந் துயில் மடிந் தன்ன
வீங்குதிரை கொணா்ந்த விரைமாவிற்றே
(சிறுபாணாற்றுப்படை 154 – 155)

விரைமரம் என்னும் அகில்கட்டைகள் (Aquilaria agallocha, Linn.; Meliaceae), ஒய்மா நாட்டுத் துறைமுகமான எயிற்பட்டினத்தின் கடற்கரையில், படுத்துத் தூங்கும் ஒட்டகம் போன்ற வடிவில் காட்சியளித்தனவாம். இந்த அகில் கட்டைகள் எயிற்பட்டினம் துறைமுகம் வழியே இறக்குமதி செய்யப்பட்ட செய்தியை சிறுபாணாற்றுப்படை வரிகள் தெரிவிக்கின்றன. அகில் சாவக நாட்டிலிருந்து இறக்குமதியாகி இருக்கலாம் என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார். எயிற்பட்டினம் துறைமுகத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் வரிசையாக நின்றதாம்.

எயிற்பட்டினத்துக் கடற்கரையில் அலைகள் பெருங்கட்டைகளைக் கொண்டு வந்து ஒதுக்கும். நெய்தல் நிலத்து நுளைச்சியர் இக்கட்டைகளைக் கொண்டு அடுப்பெரிப்பர்  பழைய பழச்சாற்றுக் (பழம்பேடு) கள்ளை நெய்தல் நிலத்துப் பரதவர்கள் உண்ணும்போது உங்களுக்கும் கொடுப்பார். வாட்டிய மீனையும் கொடுப்பார். உங்கள் (பாணர்) குழுவினர் நல்லியக்கோடனைப் பாடவும், விறலியர் அப்பாட்டிற்கு ஏற்ப ஆடவும் செய்தபின்பு கள்ளையும் மீனையும் உண்டு செல்லுங்கள்.

வேலூர்

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் உப்புவெல்லூர் (பின் கோடு 606207) தான் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடப்படும் வேலூராகும். இவ்வூர் முல்லை நிலத்தில் அமைந்திருந்த ஊராகும்.  விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் மரக்காணத்திற்குத் தென்மேற்குத் திசையில் 34 கி.மீ. தொலைவில் உப்புவெல்லூர் பின் கோடு 605602 அமைந்துள்ளது. முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டில் இவ்வூர் “ஒய்மா நாட்டு மணநாட்டு வேலூர்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற்காலக் கல்வெட்டுகள் இவ்வூரை வேமூர் என்று குறிக்கின்றன. உப்புவேலூர் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ‘திருவிருந்த பெருமாள்’ பக்தர்கள் நன்மை கருதி உப்பின் சுவையை வேண்டாம் என்று மறுத்துத் தியாகம் செய்தாராம். உப்பினை மறுத்த ஒப்பில்லாப் பெருமாளின் புராணக் கதையின் அடிப்படையில் இவ்வூர் ஒப்பிலா வேலூர் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இஃது உப்புவெல்லூர் என்று மருவியது என்கிறார்கள்.

முல்லை சான்ற முல்லை அம் புறவின்
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கிச்
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கித்
திறல் வேல் நுதியின் பூத்த கேணி,
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் [164-173]
(சிறுபாணாற்றுப்படை 169-173)

முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லைக் கொடிகள் உடைய முல்லைக் காட்டில், மலை இடுக்குகளில் குதிக்கும் அருவிகளையுடைய பெரிய மலையில் ஞாயிறு மூழ்கிய நேரத்தில் வானை நோக்கி, வலிமை மிக்க வேலின் நுனியைப் பயன்படுத்தித் தோண்டிய அகழியையுடைய நல்லியக்கோடன் அந்த வேல்கொண்டு போரில் வெற்றி பெற்ற வேலூரை நீங்கள் சென்றடையுங்கள்.

ஆமூர்

சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் மருத நிலத்தில் அமைந்திருந்த ஊர் ஆமூராகும். செய்யூர் தொகுதியில் அமைந்துள்ள சித்தாமூர் என்ற ஊர் தான் ஒய்மா நாட்டு ஆமூர் என்று விக்கிபீடியா குறிப்பிடுகிறது. ‘ஆம்’ என்னும் சொல்லுக்கு ‘ஊற்றுநீர்’ என்பது பொருள். ஊற்று நீர் நிறைந்த ஊர். இந்த ஊரில் உழவர்களோடு ஒன்றிணைந்து அந்தணர்கள் வசித்தனர்.

மருதம் சான்ற மருதத் தண் பணை,
அந்தணர் அருகா அருங்கடி வியன் நகர்,
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின்
(சிறுபாணாற்றுப்படை 178-188)

மருத ஒழுக்கம் நிலைபெறுதற்கு அமைந்த மருத நிலத்தின் குளிர்ந்த வயல்களையும் அந்தணர்கள் குறைதல் இல்லாத அரிய காவலையுடைய பெரிய ஊர்களையும் அழகிய குளிர்ச்சியான அகழியுடைய அவனுடைய ஆமூரை நீவீர் சென்றடையுங்கள்

கிடங்கில் 

திண்டிவனம் நகரின் ஒரு பகுதி என்று தற்போது அறியப்படும் கிடங்கில் ஒய்மா நாட்டின் தலைநகராக விளங்கியது. தற்போது நல்லியக்கோடன் நகர் என்று ஒரு பகுதி திண்டிவனத்தில் உள்ளது.  கிடங்கு என்றால் அகழி என்று பொருள். அகழிகள் சூழ்ந்த மிகவும் தொன்மையான ஊர் கிடங்கில்.  ஒய்மா நாட்டு நல்லியக்கோடன் மலர்க் கொத்துக்கள் நிறைந்த தோட்டங்களை உடைய கிடங்கில் என்னும் ஊர்க்கு மன்னன் ஆவான்

கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்,
(சிறுபாணாற்றுப்படை 160)

கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான்யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ
(நற்றிணை 65, 2 – 3, கபிலர்)

கிடங்கில் அகழியைப் பற்றி நற்றிணை குறிப்பிடுகிறது. அகழியால் பாதுக்காக்கப்படும் நகரம் கிடங்கில் ஆகும்.

திண்டிவனம் அருகே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓமந்தூரில் ஸ்ரீ பீமேஸ்வரர் (சிவன்) கோவிலில் கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை சம்புவராயர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் ‘ஒய்மானாட்டுக் கிடங்கை நாட்டுக்கிடங்கில்’ என்ற ஊரில் இந்தக் கோவில் இருப்பதாகப் பதிவு செய்துள்ளது. இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் திண்டிவனம் நகரில் உள்ள சிவன் கோவிலில் கி.பி. 1300 ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் காலக் கல்வெட்டுகளில் ‘ஒய்மானாட்டுக் கிடக்கை நாட்டுக் கிடங்கிலான இராஜேந்திர சோழ நல்லூர்த் திண்டீசுரம்’ என்று பதிவு செய்துள்ளன. மேற்குறித்த கல்வெட்டுச் சான்றுகளின்படி இன்றைய திண்டிவனம் நகரத்தின் பெரும்பகுதி கிடக்கை நாட்டுக் கிடங்கிலே ஆகும்

நன்மாவிலங்கை

ஒய்மா நாட்டின் பண்டைய நகரம் நன்மாவிலங்கை ஆகும். விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் வட்டம், திண்டிவனத்திலிருந்து மானாம்பதி கூட்டு ரோடு வழியாக வந்தவாசி செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் கீழ்மாவிலங்கை (பின் கோடு 604207) மேல்மாவிலங்கை (பின் கோடு 604207) என்று இரண்டு சிறு கிராமங்கள் அமைந்துள்ளன.  இந்த ஊர்கள் தான் சிறுபாணாற்றுப்படையில் இடம்பெறும் மாவிலங்கை என்று கருதப்படுகிறது. கீழ்மாவிலங்கையில் பல்லவர் காலத்துக் குடைவரை அமைந்துள்ளது. இது விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இலங்கை என்னும் பண்டைய பெயர் ஸ்ரீலங்காவைக் குறித்தது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க மாவிலங்கை நன்மாவிலங்கை என்று பெயரிடப்பட்டது. சிறுபாணாற்றுப்படை ஸ்ரீலங்காவை தொன்மாவிலங்கை என்றும் மாவிலங்கையை நன்மாவிலங்கை என்றும் குறிப்பிடுகிறது:

விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோந்தாள்
நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை ஆகிய
பொருபுனல் தரூஉம் போக்கறு மரபின்
தொல்மா இலங்கைக் கருவொடு பெயரிய
நல்மா இலங்கை மன்ன ருள்ளும்
முறுவின்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்
உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்
(சிறுபாணாற்றுப்படை 113 – 121)

ஓவியர் குடியில் தோன்றிய ஆண்டுவந்த மாவிலங்கை என்ற இவ்வூர் பலராலும் நன்கு அறியப்பட்ட தொல் மா இலங்கைகையைப் (ஸ்ரீலங்கா) போன்றது. அதாவது தொன் மா இலங்கை உருவாகிய காலகட்டத்திலேயே (கருவொடு பெயரிய) இந்த நகரின் பெயரைத் தன் பெயராகக் கொண்டது இந்த மாவிலங்கை நகர். அந்த இலங்கையில் (ஸ்ரீலங்கா) அரக்கர் வாழ்ந்தனர். எனவே இந்த மாவிலங்கையை நன்மாவிலங்கை என்று சிறுபாணாற்றுப்படை இயற்றிய புலவர் குறிப்பிடுகிறார்.

இவ்வளவு சிறப்புடைய நன்மாவிலங்கையில் பாய்ந்தோடும் ஆற்றில் நீராடும் துறையில் உள்ள பெண்களுக்கு ஆற்றில் அடித்துவரப்படும் நறுமணமிக்க மலர்களை உடைய சுரபுன்னை, அகில், சந்தனம் ஆகிய மரங்களின் துண்டுகள் தெப்பமாக வந்து கரையை இடிக்கின்றன.

இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்
பெரு மாவிலங்கைத் தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக்கோடனை
(புறநானூறு 176, 5 – 7, புறத்திணை நன்னாகனார், அரசன் ஓய்மான் நல்லியக்கோடன்)

மதகின் வழியே நீர் சத்தமிட்டு பாய்ந்தோடும் பெருமாவிலங்கை என்னும் ஊரின் தலைவனாகிய நல்லியக்கோடனை சீறியாழ் இசைத்துப் பாடிய வறிய சிறுபாணர்கள் வாழ்க என்று வாழ்த்திப் பாடினர்.

குறிப்புநூற்பட்டி

  1. ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம் டி. எல். சஞ்சீவிகுமார் இந்து தமிழ் திசை ஜூன் 06 2017
  2. ஊரும் பேரும்: மாவிலங்கை (சிறுபாணாற்றுப்படை) https://groups.google.com/forum/#!topic/houstontamil/zKKFo_wml1Y
  3. எயிற்பட்டினம்
  4. எயிற்பட்டினம் (Eyirpattinam): ஆழ்கடலில் புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம் http://tnarchsites.blogspot.com/2014/01/eyirpattinam.html
  5. ஒரிசா பாலு அரவிந்த் சுவாமிநாதன் தென்றல் அக்டோபர் 2014 http://tamilonline.com/thendral/article.aspx?aid=9615
  6. சங்க இலக்கியத்திலும் இப்போதும் (உப்பு) வேலூர் https://groups.google.com/forum/#!msg/mintamil/ec80p1GKWi8/MRQeRFrvsL8J
  7. சிற்றரசுகள் – நகரங்கள் http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/147503/12/12_%20chapter%206.pdf

  8. பத்தாயிரம் ஆண்டு பழமையான துறைமுக நகரம் கண்டுபிடிப்பு
  9. புவனம் தழைக்க அருளும் பூமீஸ்வரப்பெருமான்! பூமீசுவரர்கோயில், மரக்காணம் (Boomeeswarar Temple, Marakkanam) http://agathiyarpogalur.blogspot.com/2018/06/boomeeswarar-temple-marakkanam.html

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in இலக்கியம், தமிழ், தொல்லியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to எயிற்பட்டினம் என்னும் மரக்காணம்: ஆழ்கடலில் மூழ்கிய சங்ககாலத் துறைமுகத்தில் கடல்சார் ஆய்வுகள்

  1. ஸ்ரீராம் சொல்கிறார்:

    சுவாரஸ்யமான விவரங்கள் – வழக்கம் போல.

    Like

  2. அரிய தகவல்கள்தான் நன்றி நண்பரே

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.