பண்டைத்தமிழர் கடல்சார் வணிகம், ஸ்ரீவிஜய பேரரசின் கடல்சார் வணிக ஏகபோகம், கடற்பகுதியையும் கடல் வணிகத்தையும் பாதுகாப்பதற்காக முதலாம் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுப்பு மேற்கொண்டு பதின்மூன்று தென்கிழக்காசிய நாடுகளை வென்ற செய்தி; மலேசிய நாட்டின் கெடா மாநிலம், கெடா துவா (Kedah Tua) என்னும் பகுதியில் கி,மு. 535 ஆம் ஆண்டுகளில், தழைத்தோங்கி பண்டைய நாகரிகம், கி.பி 1936 -1937 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், இங்குக் கண்டறியப்பட்ட சண்டி என்னும் வழிப்பாட்டுக் கட்டமைப்புகள், தொல்லியல் சின்னங்கள், உடைந்த சிற்பங்கள் பற்றியெல்லாம் முதல் பதிவில் கூறியிருந்தேன்.
கெடா மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற லெம்பா புஜாங் (Lembah Bujang) பகுதி கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே விரைவான வளர்ச்சியை எவ்வாறு அடைந்தது? இப்பகுதி பாதுக்கப்பட்ட வரலாற்றுத் தளங்களில் ஒன்றாக மாறியது ஏன்? எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? இது போன்ற கேள்விகளுக்கான விடை இந்த இரண்டாம் பதிவில் இடம்பெற்றுள்ளது. இந்து பெளத்த வழிபாட்டுத் தலங்களாகிய சண்டிகளும் தொல்பொருட்களும் இங்கு கண்டறியப்பட்டன. இந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் பற்றியும் இப்பதிவு விவரிக்கிறது.
இது கடாரம் பற்றிய இரு பதிவுகள் கொண்ட தொடராகும்.
கடாரம் 1: சோழர் நிலைநாட்டிய கடல் வணிக மேலாதிக்கம், அகழ்வாய்வுகள் மெய்பிக்கும் கெடா துவா நாகரிகம்
கடாரம் 2: புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் அருங்காட்சியகம்
இத்தொடரின் இரண்டாம் பதிவு இதுவாகும்.
புஜங்கம் (भुजङ्ग) என்றால் சம்ஸ்கிருதத்தில் பாம்பு என்று பொருள் (எ.கா. புஜங்க சயனம்). புஜங்க என்ற சொல்லின் திரிபே “பூஜாங்” என்ற சொல் என்ற ஒரு கருத்து உள்ளது. இங்கு பாயும் மெர்போக்.ஆறு பாம்பைப்போல வளைந்து செல்வதால் புஜாங் என்ற பெயர் இடப்பட்டதாம். இந்தப் பள்ளத்தாக்கு மலாய் மொழியில் லெம்பா புஜாங் (Lembah Bujang) என்று அழைக்கப்படுகிறது. லெம்பா (Lembah) என்ற மலாய் சொல்லுக்கு பள்ளத்தாக்கு என்று பொருள். புஜாங் என்ற மலாய் சொல்லுக்கு மணமாகாத ஆடவன் என்று பொருள். லெம்பா புஜாங் என்றால் புஜாங் பள்ளத்தாக்கு என்று பொருள். பூஜாங் பள்ளத்தாக்கு சுங்கை பெட்டணியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் குனுங் ஜெராய் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி முக்கிய வணிக மையமாக இருந்திருக்க வேண்டும்.
மலேசியா நாட்டின் கெடா மாநிலத்தில், லெம்பா புஜாங் என்னும் புஜாங் பள்ளத்தாக்கு கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே செழிப்பான பகுதியாகத் திகழ்ந்தது. இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே வேகமாக வளர்ந்து வந்த வணிகம் லெம்பா புஜாங் பகுதியின் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் உதவிற்று எனலாம். இந்தியாவிலிருந்து கடல் வழியே பயணித்துச் சுங்கை மெர்போக்கிலிருந்து (Sungai Merpok) கெளாந்தான் (Kelantan) மற்றும் தென்சீனக் கடல் (South China sea) வழியாகச் சைனாவை அடையும் குறுக்கு வழிக் கடற்பாதையில் இப்பகுதி அமைந்திருந்தது. இந்திய வணிகர்கள் சீனாவிற்குக் கடற்பயணம் மேற்கொண்டபோது தங்கிச் செல்லும் இடைவழி (Transit Point) ஆகவும் இப்பகுதி திகழ்ந்தது.
லாம்பா புஜங் இன்றுவரை மிக முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுத் தளங்களில் ஒன்றாக மாறியது ஏன்? எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? இந்தக் கேள்விகளுக்கு விடைகாணும் விதமாக அருங்காட்சியகத் துறையினர் (Museum Department) தொல்லியல் அகழ்வாய்வினை இப்பகுதியில் மேற்கொண்டனர். கர்னல். ஜேம்ஸ் லோ (Colonel James Low) என்பவர் கி.பி. 1864 ஆம் ஆண்டில் இப்பகுதியில் தன் அகழ்வாய்வுகளை மேற்கொண்டார். எச்.ஜி. குவாட்ரிச் வேல்ஸ் தன் மனைவி திருமதி. டோரதி வேல்ஸுடன் கி.பி. 1936 முதல் 1939 ஆம் ஆண்டு வரை இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டனர், திருமதி. டோரதி 30 சண்டிகளை (இந்து-பௌத்த ஆலயங்களைக்) கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் உள்நாட்டுப் பலகலைக் கழகங்களின் தொல்லியல் துறையில் பணியாற்றிய தொல்லியலாளர்கள் தங்கள் அகழ்வாய்வுகளைத் தொடர்ந்தனர். இந்த வளாகத்தில் சண்டி புக்கிட் பத்து பாஹாத் (Candi Bukit Batu Pahat) என்னும் இந்துக் கோவில் கண்டறியப்பட்டது. தங்கள் அகழ்வாய்வுகளில் கண்டறிந்த கட்டுமானங்களைக் கொண்டு இந்த வளாகத்திலேயே மறுகட்டமைப்புச் செய்வதிலும் ஈடுபட்டனர். அப்போதுதான் இந்த அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து புஜாங் பள்ளத்தாக்கின் வெவ்வேறு இடங்களில் சண்டி பெண்டியாட், சண்டி பெண்டாங் டாலாம், சண்டி பெங்காலான் பூஜாங் ஆகிய சண்டிகள் கண்டறியப்பட்டன. இவ்வாறு கண்டறியப்பட்ட சண்டிகளின் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு இந்த அருங்காட்சி வளாகத்தில் மறுகட்டமைப்புச் செய்துள்ளனர்.
சண்டி என்ற சொல் சிவனின் தேவியான சண்டிகா (துர்கா) என்ற பெயரிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தச் சண்டியின் அடித்தளத்தைக் கருங்கல்லாலும், செம்பூரான் கல்லாலும் (Laterite stone), செங்கல்லாலும் கட்டினார்கள். சண்டியின் தூண்கள், உத்திரங்கள் போன்றவை மரத்தால் கட்டப்பட்டன. கூரை ஓலை போன்ற பொருட்களைக் கொண்டு வேயப்பட்டிருக்கலாம்.
லெம்பா புஜாங்கின் வரலாற்று எச்சங்களில் (Historical Relics) இந்து பெளத்த வழிபாட்டுத் தலங்களும் தொல்பொருட்களும் அடங்கும். இங்கு சண்டி புக்கிட் பத்து பாஹாத், சண்டி பெண்டியாட், சண்டி பெண்டாங் டாலாம், சண்டி பெங்காலான் பூஜாங் போன்ற பல சண்டிகளில் கண்டறியப்பட்ட வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் விதமாக அருங்காட்சியகத் துறை லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகத்தை நிறுவியது. இனி இந்த அருங்காட்சியகத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோமா?
புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் அருங்காட்சியகம் (Bujang Valley Archaeological Museum) மலாய் மொழியில் (Muzium Arkeologi Lembah Bujang)
லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் மலேசிய நாட்டின் கெடா மாநிலம், கோலா மூடா மாவட்டம் (Kuala Muda District), மெர்போக் (Merbok) நிர்வாக உட்பிரிவு (Mukim), பங்குணன் டிஸ்பென்சரி லாமா (Bangunan Dispensari Lama), 08400, பேக்கன் மெர்போக் (Pekan Merbok) என்ற முகவரியில் அமைந்துள்ளது. இது மலேசியாவில் உள்ள ஒரே தொல்லியல் அருங்காட்சியகமாகும். MARA தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (Universiti Teknologi MARA) கெடா வளாகமும் இப்பகுதியிலேயே அமைந்துள்ளது.
இந்தப் புஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகம் 1978 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்றாலும் இதனை மேதகு அப்துல் ஹாலிம் மு’அட்சாம் ஷா, கெடாவின் சுல்தான் (HRH Sultan of Kedah, Abdul Halim Mua’dzam Shah) அவர்கள் ஜனவரி 23, 1980 ஆம் தேதியன்று முறைப்படி தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். மலேசிய அருங்காட்சியகத் துறை இந்த அருங்காட்சியகத்தை நிறுவிப் பராமரித்து வருகிறது. இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டதன் நோக்கம் அகழ்வாய்வுகளை மேற்கொள்வது, ஆய்வுகளைத் தொடர்வது, லெம்பா புஜாங் தளங்களில் கண்டறியப்பட்ட வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட (pre-Historic) அல்லது மலேசிய இஸ்லாமிய காலத்திற்கு முற்பட்ட (Pre-Islamic) தொல்பொருட்களைக் காட்சிப்படுத்துதல் ஆகியவை ஆகும். புஜாங் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்ட சண்டிகளைப் பிரித்தெடுத்து, இவற்றின் கட்டுமானப் பொருட்களை இந்த வளாகத்திற்குக் கொண்டுவந்து மறுகட்டுமானம் செய்துள்ளார்கள்.
லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகத்தின் காட்சிக் கூடங்கள் மற்றும் சேகரிப்புகள்
இந்த அருங்காட்சியகத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புஜாங் பள்ளத்தாக்கின் அளவுப் படிமம் (Scale Model) பள்ளத்தாக்கின் பல இடங்கள் இணைப்புச் சீட்டுகளுடன் (Tags) சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இங்கு இரண்டு முக்கிய காட்சியகங்கள் (Galleries) உள்ளன. இங்கு லெம்பா புஜாங் இருந்ததற்கான சான்றுகளாக பல தொல்பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன:
I. தென்கிழக்கு ஆசியாவில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை முதன்மை வணிகத் துறைமுகமாகத் திகழ்ந்த இந்தத் துறைமுகத்திற்கு அரபு, சீன மற்றும் இந்திய வணிகர்கள் கொண்டு வந்த பொருட்கள் அத்துடன் மலாய் தீபகற்பத்தின் வணிகர்கள் கொண்டுவந்த அகில் (gaharu), சந்தனம் (cendana), பாதரசம் (Mercury), முதலிய வெளிநாட்டு காட்டு விளைபொருட்கள் (exotic jungle goods) எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மணிகள் (Beads), சீனத்துப் பீங்கான்கள் (Chinese Ceramics), போன்ற தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் பிரஹு சகோர் (Prahu Sagor) என்னும் பாரம்பரிய கெடா மலாய் படகுகள் (Traditional Kedah Malay boats) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை 20 ஆம் நூற்றாண்டு வரை நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
II. கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலங்களில் லெம்பா புஜாங் பள்ளத்தாக்கை நுழைமுகத் துறைமுகமாகப் பயன்படுத்திய சமுதாயத்தின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்திய இந்து / பௌத்த மத நம்பிக்கைகளுடன் இணைந்த கட்டிடக்கலை மற்றும் பொருள்சார் கலாச்சார எச்சங்கள்,. இந்து / பெளத்த நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்த தக்க இந்துக் கோவில்களின் கட்டடக்கலை வடிவங்களுடன் இந்து / பௌத்த சிறப்பியல்புகளும் மற்றும் சாதனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. லெம்பா புஜாங் என்னும் வழிபாட்டுத்தலமே கெடாவில் மிகவும் தொன்மை வாய்ந்த வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது. இதனோடு தொடர்புடைய தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் உள்ளும் புறமும் கல்லினால் ஆன உடைந்து சிதைந்த பல்வேறு கட்டிட உறுப்புகள், மட்பாண்டங்கள் (potteries), பூச்சாடிகள் (Vases) மற்றும் கருங்கல் மற்றும் சுட்ட களி மண்ணால் செய்யப்பட்ட சிவ லிங்கம், கணேசன், நந்தி போன்ற இந்துக் கடவுள்களின் உருவங்களும் புத்தர் போன்ற பெளத்த உருவங்களும், பிற மனித உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நுழைவுக்கட்டணம் (Entrance Fees):
அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்க்க நுழைவுக்கட்டணம் கிடையாது.
சாலை வழியாக (By Road):
சாலை வழியாகச் செல்வதானால் வடக்கு-தெற்கு எக்ஸ்பிரஸ்வே வழியாகக் காரில் செல்லலாம். பெர்லிஸ் (Perlis)அல்லது அலோஸ் செடாரில் (Alor Setar) இருந்து தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும். சுங்கை பெட்டாணி (Sungai Petani) வழியாக வெளியேறி மெர்போக் (Merbok) நோக்கிச் செல்ல வேண்டும். சுங்கை பெட்டாணி (Sungai Petani) பேருந்து முனையத்திலிருந்து மெர்போக்கிற்குச் செல்லும் சுங்கை பெட்டாணி பேருந்தைப் பிடிக்கவும். மெர்போக் சென்றதும் லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் செல்வதற்கான வழிகாட்டிப் பலகையைக் காணலாம்.
இரயில் மூலம் செல்ல (By Train):
சுங்கை பெடாணி மற்றும் ஆலோர் செடார் இரயில் நிலையங்களில் இரயில்கள் நின்று செல்கின்றன.
அருகில் காணத்தக்க இடங்கள் (Nearby Attractions):
முறையாக முன்பதிவு செய்து கொள்ளும் 10 நபர்கள் அடங்கிய குழுவினருக்கு அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் சுற்றிக்காட்டுகிறார்கள். இங்கு வரும் ஆய்வாளர்களுக்கு உதவுவதற்கு முழுமையான தொல்பொருள் சேகரிப்புகள், நூலகம் மற்றும் பயிற்சி பெற்ற அலுவலர்களின் வழிகாட்டுதல்கள் போன்ற வசதிகள் உள்ளன.
தொடர்புக்கு:
திரு. அஸ்மான் பின் ஆடம் Mr. Azman bin Adam (azmanadam@jmm.gov.my)
திருமதி நுருல் அஸ்லீடா கோசாலி Mrs. Nurul Azlida bt. Ghozali (azlida@jmm.gov.my)
முகவரி:
லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் (Lembah Bujang Archaeological Museum), பெக்கான் மெர்போக் (Pekan Merbok), 08400 மெர்போக் (Merbok), கெடா (Kedah). தொலைபேசி:: +60-4-457 2005. அதிகாரபூர்வ வலைத்தளம்
1.) சண்டி புக்கிட் பத்து பாஹாத் (Candi Bukit Batu Pahat)
சண்டி புக்கிட் பத்து பாஹாத் புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் பூங்காவில் மிகவும் முதன்மையான நினைவுச்சின்னமாகும். தளம் 8 என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த இந்துக் கோவில் டாக்டர் குவாரிட்ச் வேல்ஸால் 1936 மற்றும் 1937 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வின் போது கண்டறியப்பட்டது. இவரைத் தொடர்ந்து அலஸ்டேயர் லாம்ப் (Alastair Lamb) 1959 – 1960 ஆண்டுகளில் சரிந்து கிடந்த கோவிலைப் பெயர்த்தெடுத்து மீண்டும் அதே இடத்தில் மறுகட்டமைப்பு செய்தார். இதன் அசல் இடத்தில் கட்டப்பட்ட காலம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு எனவும் 11 ஆம் நூற்றாண்டு எனவும் கால வரையறைகள் செய்யப்பட்டுள்ளன.
இடிந்து சரிந்த இக்கோவில் முன்பிருந்த அதே இடத்தில் மீண்டும் கட்டமைக்கப்பட்டது. இவ்வாறு முன்பிருந்த அதே இடத்தில் மறுகட்டமைக்கப்பட்ட ஒரே பண்டைய கோவில் இதுவாகும். இதன் பின்னரே பிற சண்டிகள் அதன் அசல் இருப்பிடத்திலிருந்து இங்கு இடமாற்றம் செய்யப்பட்டன. புக்கிட் பத்து பாஹாத் சண்டி மறுகட்டமைப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொல்லியல் அருங்காட்சியகமும் இங்கு அமைக்கப்பட்டது.
இந்தச் சண்டி கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இஃது இந்துக் கோவிலின் அமைப்புத் திட்டப்படி (Layout of Hindu Temple) கட்டப்பட்ட சண்டியாகும். விமானமும் விமானத்தின் முன்பு தூண்களுடன் கூடிய மண்டபமும் அமைக்கப்பட்டிருந்தது. கருவறை சுமார் நான்கடி உயரம் கொண்ட தாங்குதளத்தின் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவறையைச் சுற்றி சுற்றுச் சுவர்கள் கருங்கல்லால் சுமார் 3 அடி உயரத்திற்குக் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்திலிருந்து கருவறையை அடைய ஏழு படிக்கட்டுகள் உதவுகின்றன. இங்கு மொத்தம் 67 தூண்களின் அடித்தளங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் 39 தூண்கள் விமானப் பகுதியிலும் மீதி 28 தூண்கள் மண்டபப் பகுதியிலும் காணப்படுகின்றன. இவற்றின் மேல் மரத்தூண்களும் உத்திரங்களும் அமைக்கப்பட்டிருக்கலாம். இதன் கூரை பனை ஓலையால் வேயப்பட்டிருக்கலாம். இதன் காரணமாகவே இக்கோவிலின் மேல்கட்டுமானம் நிலைக்கவில்லை.
தெய்வம் மேடையில் (யோனி) மீது இருத்தப்பட்டுள்ளது. மேடையின் வலப்புறம் சோமசூத்ரா (Somasutra) என்னும் நீர் வடியுங் காடி அல்லது ஜலத்துவாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. நீர் முழுக்காட்டின் (அபிஷேகம்) போது நீர் சோமசூத்ரா மூலம் வடிந்து விழுகிறது. ஜலத்துவாரத்தின் வழியாக முழுக்காட்டு நீரைப் பக்தர்கள் சேகரிக்கிறார்கள். இந்த அமைப்பையே இந்துக் கோவில்களில் இன்றும் காணலாம்.
சண்டி புக்கிட் பத்து பாஹாத்தில் பல்வேறு தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் மூடியுடன் கூடிய கல்பெட்டிகள் அல்லது பேழைகளும் (stone boxes, or caskets, with lids) அடங்கும். பேழைகளினுள்ளே பல வித உருவங்களில் தங்கத் தகடுகள், ஜாடிகள், மணிகள் மற்றும் சிவன், சக்தி மற்றும் நந்தி சிலைகள் போன்ற பூசைப் பொருட்களும் இருந்தன. சிலையின் பீடம் மற்றும் சிவனின் திரிசூலம் போன்ற வெண்கலப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.

One of the six stone boxes
2.) சண்டி பெண்டியாட் (Candi Pendiat)
சண்டி பெண்டியா புஜாங் பள்ளத்தாக்கின் தொன்மையான தளங்களில் ஒன்று. ஹெச்.ஜி. குவாரிட்ச் வேல்ஸ் (HG Quaritch Wales) இவர் மனைவி டோரதி (Dorothy) ஆகியோரால் 1940 ஆம் ஆண்டுக் கண்டறியப்பட்டது. கி.பி. 11 ஆண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்தச் சண்டி கம்புங் பெண்டியா (Kampung Pendiat) , மெர்போக் என்னும் இடத்தில் முன்பு அமைந்திருந்தது. அமைவிடம் 5° 32′ 57.696” N அட்சரேகை 100° 54′ 28.404” E தீர்க்கரேகை ஆகும். எனவே இதன் பெயர் சண்டி பெண்டியாட் ஆயிற்று.
இங்கிருந்து 1974 ஆம் ஆண்டில் பெயர்த்தெடுக்கப்பட்டுப் புஜாங் பள்ளத்தாக்கில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இந்தச் சண்டியின் தாங்குதளம் செம்பூரான் கற்களைக் (Laterite Stones) கொண்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. கம்புங் பெண்டியாவில் இருந்த சண்டியில் மேல்கட்டுமானம் மரத்தில் கட்டப்பட்டிருந்தது. இங்கு விலைமதிப்பற்ற மணிகள், சீனத்துப் பீங்கான் பத்திரங்கள், நின்ற நிலையில் காட்சி தரும் புத்தரின் வெண்கலச் சிலை மற்றும் பொன்னால் செய்யப்பட்ட பொருட்களுடன் வெண்கலப் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டது. ஒரு மண்டபமும் விமானமும் இடம்பெற்றிருந்த இஃது ஓர் இந்துச் சண்டியாகும். இந்த மண்டபமும் விமானமும் ஒன்றிற்கொன்று தனித்தனியே இருந்தது தான் சுவாரஸ்யம் மிக்கது. இதன் மேற்கட்டுமானம் மரத்தூண்களாலும் ஓடுகளாலும் அமைக்கப்பட்டிருக்கலாம்.
3.) சண்டி பெண்டாங் டாலாம் (Candi Bendang Dalam)
சண்டி பெண்டாங் டாலாம் புஜாங் (தளம் எண் 50) பள்ளத்தாக்கின் தொல்லியல் பூங்காவில் மறுகட்டமைக்கப்பட்ட சண்டியாகும். இந்தச் சண்டி கம்புங் பெண்டாங் டாலாம் (Kampung Bendang Dalam) என்னுமிடத்தில் 1960 ஆம் ஆண்டுகளில் முதலாவதாகக் கண்டறியப்பட்டது. இதன் அமைவிடம் 6° 9′ 9” N அட்சரேகை 102° 9′ 24.084” E தீர்க்கரேகை ஆகும். இது 1974 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறையினரால் அகழ்வாய்வு செய்யப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டில் கற்கள் பிரிக்கப்பட்டு புஜாங் பள்ளத்தாக்கின் தொல்லியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.
புஜாங் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற சண்டிகளைப் போலவே இந்த இந்துச் சண்டியிலும் விமானம் (உள்சுற்று) மற்றும் மண்டபம் (வெளிச்சுற்று) ஆகிய உறுப்புகளுடன் கூடிய தளவடிவமைப்புக் கொண்ட இந்தக் கோவில் முழுவதிலும் இந்து மதத்தின் தாக்கம் காணப்படுகிறது. செவ்வக வடிவ விமானத் தாங்குதளம் 6.75 மீ x 6.25 மீ அளவுகளிலும் செவ்வக வடிவ மண்டபத்தின் தாங்குதளம் 6.75 மீ x 6.20 மீ அளவுகளிலும் செம்பூரான் கற்களைக் (Laterite Stone) கொண்டு கட்டப்பட்டுள்ளது. தூண்களின் அடிப்பகுதி கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. தொல்லியலாளர்கள் இங்கு லிங்கம் (ஆவுடை), பீடம் (யோனி), நீர் வடியும் காடி (சோமசூத்ரம்) ஆகிய அனைத்தையும் அகழ்ந்தெடுத்துள்ளனர். இந்தக் களத்தில் சீனாவின் சோங் வம்சத்தைச் சேர்ந்த பீங்கான் துண்டுகளும் (ceramic shards from Song Dynasty), மத்திய கிழக்கு நாடுகளின் கண்ணாடி எல்லாம் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சண்டி கி.பி. 12 மற்றும் 13 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்படிருக்கலாம் என்று தொல்லியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
4.) சண்டி பெங்காலான் பூஜாங் (Candi Pengkalan Bujang)
சண்டி பெங்காலான் பூஜாங், கெடாவின், புஜாங் பள்ளத்தாக்கில் உள்ள பெங்காலான் புஜாங் (Pengkalan Bujang) என்னுமிடத்தில் அமைந்திருந்த இந்து கோவிலாகும். அமைவிடம் 5° 41′ 59.532” N அட்சரேகை 100° 23′ 37.032” E தீர்க்கரேகை ஆகும். சண்டி பெங்காலன் புஜங் 10 முதல் 14 ஆம் நூற்றாண்டிற்குள் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது இது ஹெச்.ஜி. குவாரிட்ச் வேல்ஸ் என்பவரால் 1936 – 1937 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறையினர் இத்தளத்தில் 1974 ஆம் ஆண்டில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
பெங்காலான் புஜாங்கில் புத்தரின் ஐந்து சுடுமண் சிலைகளையும் தர்மச்சக்ர முத்திரை காட்டும் போதிசத்துவரின் வெண்கலச் சிலையினையும் வேல்செஸ் (Waleses) என்பவர் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்புகள் பெங்காலான் புஜாங் இந்துத் தளத்தில் காணப்பட்ட பெளத்தக் கூறுகளைச் சுட்டுகின்றன.
1976 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தளம் எண் 21 இல் இருந்த சண்டி புஜாங் பள்ளத்தாக்கின் தொல்லியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுப் புக்கிட் பத்து பாஹாத் சண்டிக்குப் பக்கத்தில் மறுகட்டமைப்புச் செய்யப்பட்டது. இந்தச் சண்டி தளம் எண் 21 என்று குறிக்கப்பட்டது. இது தளம் எண் 22 அருகில் அமைந்திருந்தது.
புஜாங்க் பள்ளத்தாக்கு தொல்லியல் அருங்காட்சியகம், மலேசியாவின் யுனிவர்சிட்டி கெம்பங்ஸான் (Universiti Kebangsaan of Malaysia) வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து 1986 ஆம் ஆண்டு முதல் 1991 வரை முகிம் புஜாங் வளாகத்தின் (Complex in Mukim Bujang) தளம் 23 இல் அகழ்வாய்வினை மேற்கொண்டனர். இந்த அகழ்வாய்வில் 3.5 ஹெக்டர் பரப்பளவில் ஆறு ஸ்தூபிகளைக் கண்டறிந்தனர். இந்த ஸ்தூபிகளில் இந்து மற்றும் பௌத்த மதங்களின் தாக்கம் காணப்படுகிறது.
சண்டி பெங்காலான் பூஜாங் எண்கோண (Octogonal) வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபியாகும். ஒடிசாவில் காணப்படும் இந்துக் கோவில்களைப் போன்று உபபீடமும் (Upapita), தாங்குதளமும் (Adhshtana) ஸ்தூபியும் எண்கோண வடிவில் அமைந்துள்ளது. ஸ்தூபியின் முன்புறம் செங்கல்லால் ஆன மூன்று படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சண்டி சுட்ட செங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டுமானம் என்பது இதன் சிறப்பாகக் கருதப்படுகிறது. செங்கற்களின் கனிம உள்ளடக்கத்தை (mineral content) அறிவதற்கு இரண்டு சோதனைகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். ஒன்று எக்ஸ்-ரே ஃப்ளூரசன்ஸ் நுட்பம் (X-Ray Fluorescence technique (XRF) இரண்டு எக்ஸ்-ரே ஒளிக்கதிர் சிதறல் நுட்பம் (X-Ray Diffraction technique (XRD). தொன்மைமிக்க இந்தச் செங்கல்லில் குவார்ட்ஸ் (Quartz), மஸ்கோவிட் (Muscovite) மற்றும் மைக்ரோலைன் (Microcline) ஆகிய கனிமங்களைக் கொண்டிருக்கும் மற்ற கனிமங்கள் லுசிட் (leucite), மூள்ளைட் (mullite) மற்றும் ஜியோதைட் ( geothite) ஆகிய கனிமங்கள் காணப்படுவதாகச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
5.) செரோக் டோகுன் எச்சங்கள் (கல்வெட்டு) (Cherok Tokun Relics (Inscription)
செரோக் டோகுன் எச்சங்கள் (கல்வெட்டு) புக்கிட் மேற்தஜம், பினாங்கு (Bukit Mertajam, Penang) என்னுமிடத்தில் உள்ள பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆகும். இதன் அமைவிடம் 5°21′55.692″N அட்சரேகை 100°27′38.3898″E தீர்க்கரேகை ஆகும். இதற்குப் பத்து செரோக் டோகுன் என்ற பெயரும் உள்ளது. மலேசிய அருங்காட்சியம் மற்றும் தொல்லியல் துறையால் மலேசியாவின் பினாங்கில் கண்டறியப்பட்ட தொன்மைமிக்க ஒரே பெருங்கற்கால நினைவுச் சின்னம் இதுவாகும். கருங்கல்லில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு புனித அன்னாள் தேவாலய (St Anne Church) வளாகத்தில் புக்கிட் மேற்தஜம் அருகே கண்டறியப்பட்டது.
தொன்மைமிக்க இந்தக் கல்வெட்டை கர்னல். ஜேம்ஸ் லோ (Colonel James Low) என்ற பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி (British army officer) 1845 ஆம் ஆண்டு இக்கல்வெட்டைப் பதிவு செய்தார். இந்தக் கல்வெட்டு பல்லவர் காலத்திற்கும் முந்தைய லிபியில் சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டு கி.பி. 5 – 6 ஆம் நூற்றாண்டுகளில் செழித்தோங்கிய கடாரம் அரசுடன் தொடர்புடையது ஆகும்.. இந்தக் கல்வெட்டின் வாசகத்தை ஜே. லெய்ட்லி (J Laidlay) என்பவர் 1848 ஆம் ஆண்டில் மொழி பெயர்த்தார். இக்கல்வெட்டு பாலி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளதாக இவர் உறுதிப்படுத்தியுள்ளார். மலேசிய அரசிதழில் (Gazette) வெளியிடப்பட்ட பினாங்கைச் சேர்ந்த ஒரே கல்வெட்டு இதுவாகும். அருங்காட்சியகத் துறையினர் 1973 ஆம் ஆண்டில் இக்கல்வெட்டைக் காக்க மேற்கூரை அமைத்துள்ளனர்.
குறிப்புநூற்பட்டி
- இந்தோனேஷியா விக்கிபீடியா
- கல்வெட்டுகளில் உள்ள ஆட்சியாண்டு வரிசைப்படி முதலாம் இராஜேந்திரன் வென்ற நாடுகள். முனைவர்.இல.தியாகராஜன். பக். 53. In கங்கைகொண்ட இராஜேந்திரசோழன்: அரியணை ஆண்டுவிழா கருத்தரங்கக் கட்டுரைகள். கங்கைகொண்டசோழபுரம் மேம்பட்டு குழுமம், கங்கைகொண்டசோழபுரம். ஜனவரி 2017 சான்று திருவல்லம் கல்வெட்டு 228/ 1921
- பரமேசுவரா விக்கிபீடியா
- பூஜாங் பள்ளத்தாக்கு இந்து – புத்த ஆலயங்கள் – யூனேஸ்கோ பாரம்பரியத் தலங்களாக பரிந்துரைக்கப்படாதா? மலேசியன்டைம்ஸ் மே 23, 2016
- தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இராஜேந்திரசோழனின் படையெடுப்புகளும் அதன் தாக்கமும். பெ.இராமலிங்கம். பக். 420 – 421 In கங்கைகொண்ட இராஜேந்திரசோழன்: அரியணை ஆண்டுவிழா கருத்தரங்கக் கட்டுரைகள். கங்கைகொண்டசோழபுரம் மேம்பட்டு குழுமம், கங்கைகொண்டசோழபுரம். ஜனவரி 2017
- ஸ்ரீ விஜய பேரரசு http://ksmuthukrishnan.blogspot.com/2016/05/blog-post_11.html
- Ancient Indian Inscription In Cherok To’kun – Grounds Of St.Anne’s Church Malaysia Today Dec 1, 2015 https://www.malaysia-today.net/2015/11/30/ancient-indian-inscription-in-cherok-tokun-grounds-of-st-annes-church/
- Ancient seaport of Sg Batu Putri Zanina New Straits Times 3 February 2019. https://www.nst.com.my/news/2016/05/147317/ancient-seaport-sg-batu
- Archaeologists search for a king in Sungai Batu Opalyn Mok, Malay Mail, June 09 2017 https://www.malaymail.com/news/malaysia/2017/06/09/archaeologists-search-for-a-king-in-sungai-batu/1395663
- Bujang Valley Archaeological Sites https://www.timothytye.com/malaysia/kedah/bujang-valley.htm
- Bujang Valley is Our National Heritage Muthiah Alagappa https://carnegieendowment.org/2014/03/31/bujang-valley-is-our-national-heritage-pub-55215
- Bujang Valley Wikipedia
- History of Bujang Valley ( Lembah Bujang) https://sites.google.com/site/ashweenaresearch/history-of-bujang-valley-lembah-bujang
- Kadaram or Bhujanga http://veda.wikidot.com/info:kadaram
- Lembah Bujang. National Archives of Malaysia http://www.arkib.gov.my/en/web/guest/lembah-bujang
- Srivijaya Wikipedia
- yogi கடாரம் ராஜேந்திர சோழனுடையதா? 4 http://yogiperiyasamy.blogspot.com/2014/10/blog-post_19.html
புஜாங் பகுதியின் சிறப்பை உணர்த்துகின்ற ஆழமான பதிவு. செறிவான நடையுடன் வழக்கம்போல வியக்கவைத்தது.
LikeLike
மேலான வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
LikeLike