தமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள் (Interactive images), அசையும் படங்கள் (Animated images), கலந்துரையாடல் (Discussion) எனப் பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும் “கனியும் மணியும்”: மின்னூல் செயலி ஆகும். இந்த மின்னூலின் முதல் பதிப்பில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தச் செயலி கடந்த ஜனவரி 17, 2019 ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின்போது சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சகத்தில் செயல்படும் ‘தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின்’ தலைவரும், செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார். இந்தச் செயலிக்கான உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த கனியியலாளரான முரசு நெடுமாறனும் ஆசிரியையான கஸ்தூரி இராமளிங்கமும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.கனியும் மணியும் என்னும் புதிய மின்னூல் செயலி, குழந்தைகளுக்கு எளிய முறையில் தமிழ்க் கற்பிக்கவும், அவர்கள் தாமாகவே ஈடுபட்டு விளையாட்டாகவும், மகிழ்வோடும் தமிழைக் கற்கவும், தமிழ் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அன்று பாட்டிமார்கள் குழந்தைகளுக்குக் கதை சொன்னார்கள். இந்தக் கதைகள் குழந்தைகளின் மொழி வளத்தையும் கற்பனைத் திறனையும் வளர்க்க உதவின. கூட்டுக்குடும்பங்கள் அருகிப்போன காரணத்தால் இன்று பாட்டிமார்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்வதில்லை. அன்று கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடிகள் வழியே வளர்க்கப்பட்ட தமிழ் இன்று கையடக்கமான கைபேசிகள் (மொபைல்கள்) வாயிலாக ‘நவீன தொழில்நுட்பத்தின் அனைத்துத் தளங்களிலும் தன் காலடித் தடத்தை ஆழப் பதித்துப் பீடு நடை போட்டு வருகின்றது.’
இன்று குழந்தைகள் வளர்ச்சியுடன் மொழியறிதல் திறனும் கணிசமான அளவு வளர்ந்து வருகிறது. பள்ளிக்குச் செல்லும் முன்னரே நம் இளஞ்சிறார்களை ஆங்கில மொழியுடன் தொடர்புபடுத்தும் விதமாகப் பல உருவாக்கங்கள் அன்றாடம் வெளியிடப்பட்டு வருகின்றன. இவை எழுதுக்களையும் சொற்களையும் விளையாட்டாகவே கற்பிக்கின்றன. எழுத்துக்களின் வடிவங்களைத் தொட்டு விளையாடுதல், பலநிறங்களில் வடிவமைக்கப்பட்ட எழுத்து வடிவங்களை முறையாக அடுக்குதல் போன்ற விளையாட்டுக்கள் மூலம் எழுத்துக்களும் தொடர்புடைய சொற்களும் இவர்களின் நினைவில் பதிகின்றன. இம்முறையில் எழுத்துக்கள் மூலம் சொற்களை இணைத்துக் கற்பிக்கின்றனர்.
கனியும் மணியும் மின்னூல் செயலி, ‘தமிழ் எழுத்துகளோடும் சொற்களோடும் இதே மனமகிழ் சூழலில் இந்தக் குழந்தைகள் விளையாடிக்கொண்டே கற்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எழுத்துக்களோடும் சொற்களோடும் குழந்தைகளை இணைக்கும் முயற்சி இதுவாகும். இந்தச் செயலியில் பல வேறுபட்டக் கோணங்களில் தமிழ் கற்பிக்க ஊடாடும் படங்களும், அசையும் படங்களும், கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மின்னூலின் முதல் பதிப்பில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன.

“கனியும் மணியும்” மின்னூல் செயலியின் தோற்றுநர்கள் முத்து நெடுமாறன் – கஸ்தூரி இராமலிங்கம்
கனியும் மணியும் செயலியின் உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த கனியியலாளரும், முரசு குழுமத்தின் தலைவரும் (முரசு அஞ்சல் மென்பொருள்), கவிஞருமான ‘பாப்பாவின் பாவலர்’ முரசு நெடுமாறனும், இதே நாட்டின் ஜோகூர் மாநிலம், ஜோகூரில் உள்ள மசாய் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியையான கஸ்தூரி இராமளிங்கமும் இணைந்து பணியாற்றியுள்ளனர். ‘எல்லோருக்கும் எளிய தமிழ்’ எனும் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்னூல் செயலி குழந்தைகளைத் தமிழ் எழுத்துகளோடும் சொற்களோடும் ஈடுபடவைக்கும். இந்தச் செயலியில் குழந்தைகளுக்கு ஏற்ற தமிழ் மொழி பயன்பாடு சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த இருவழித் தொடர்புச் செயலி பெற்றோருக்கு உறுதுணையாக இருக்கும்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘குரோ மோமெண்டம்’ நிறுவனமும் இணைந்து இந்தச் செயலியை முழுமையாக உருவாக்கி, கடந்த ஜனவரி 17, 2019 ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக வெளியிட்டனர். இந்த மின்னூலை சிங்கப்பூர் அரசின் கல்வி அமைச்சகத்தில் செயல்படும் ‘தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின்’ தலைவரும், செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார். “இனிவரும் காலங்களில் தமிழ் மொழிக் கற்பதற்குத் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கருவிகளும், வளங்களும் முக்கியப் பங்காற்றும். கனியும் மணியும் போன்ற படைப்புகளின் மூலம் தமிழ் மொழியை என்றும் வாழும் மொழியாக நிலைத்திடச் செய்வோம்” என்று விக்ரம் நாயர் தனது உரையில் குறிப்பிட்டார்.
கனியும் மணியும் செயலியை ஆப்பிள் கருவிகளுக்கான ஆப்ஸ்டோர் தளத்திலிருந்தும், அண்ட்ரோய்டு கருவிகளுக்கான தளமான கூகுள் ஸ்டோர்ஸ் தளத்திலிருந்தும் செல்பேசி மற்றும் ஐபேட் போன்ற கையடக்கக் கருவிகளின் சிங்கப்பூர் பயனர்கள் பதிவிறக்கம் செய்யலாம். இவற்றிற்கான நேரடி இணைப்பு http://kanimani.com இணையப் பக்கத்தில் கிடைக்கும்.
கூகுள் பிளே ஸ்டோர்: Kani Mani Bk 1 (Unreleased) KaniMani.com (Educational)
கோப்பு:அளவு: 76 மெகாபைட்; தற்போதைய பதிப்பு: 1.02; ஆன்ராய்டு இயக்க முறைமை 4.2 பதிப்பு; மேம்படுத்தப்பட்டது> மார்ச் 7, 2019.
குறிப்புநூற்பட்டி
- கனியும் மணியும் https://kanimani.com/
- “கனியும் மணியும்” – ஊடாடுவதன் வழி அனைத்து வயதினருக்கும் தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி. செல்லியல், ஜனவரி 25, 2019
- Kani Mani Bk 1 1.0.1 APK https://apktada.com/app/com.kanimani.book1
- Kani Mani Bk 1 4+ Stories and Games in Tamil https://itunes.apple.com/sg/app/kani-mani-bk-1/id1448629201
- Kani Mani Bk 1 (Unreleased) https://play.google.com/store/apps/details?id=com.kanimani.book1&hl=en_US
பயனுள்ள செயலியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஐயா
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..
LikeLike