தேவ-அசுர யுத்தம் நடக்கிறது. இறந்த அசுரர்களை அசுரகுரு சுக்கிராச்சாரியார் சஞ்சீவினி என்ற மந்திரம் உச்சரித்து உயிர் பிழைக்க வைக்கிறார். இந்த மந்திரத்தைக் கற்றுக்கொள்ள விரும்பிய தேவர்கள், கசன் மகரிஷியைத் தேர்ந்தெடுத்து அசுர குருவிடம் அனுப்புகிறார்கள். குருவின் மகள் தேவயானி கசன் அழகில் மயங்கி அவனைக் காதலிக்கிறாள்.
கசன் இந்த மந்திரத்தைத் தங்கள் குருவிடமிருந்து கற்றுக்கொண்டால் என்னவாகும் என்று அசுரர்கள் பயந்து போய் கசனை இரண்டு முறை கொடூரமாகக் கொலை செய்தனர். சஞ்சீவினி மந்திரத்தின் சக்தியால் சுக்கிராச்சாரியார் அவனை உயிர் பிழைக்க வைத்தார். மூன்றாம் முறை கசனைக் கொன்று, அவனைச் சுட்டெரித்த சாம்பலை மதுவில் கலந்து கொடுத்துச் சுக்கிராச்சாரியாரைக் குடிக்கச் செய்தனர். மூன்றாவது முறையும் குரு கசனைக் காப்பாற்றிவிட்டார். மந்திரத்தையும் உபதேசித்தார். தேவயானி எவ்வளவோ கேட்டுக்கொண்டாலும் கசன் தேவயானி காதலை ஏற்க மறுத்துவிட்டான். பிறகு என்ன ஆனது? விடை தெரிந்துகொள்ள இந்தச் சிறுவர் கதையைப் படியுங்கள். கருத்துக்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
ஒரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் மூன்று உலகங்களையும் ஆட்சி செய்ய விரும்பினர். இதனால் இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது. தேவர்களின் குருவாகப் பிரகஸ்பதி இருந்தார்.; சுக்கிராச்சாரியார் அசுரர்களின் குருவாக இருந்தார்.
சுக்கிராச்சாரியார் சஞ்சீவினி என்ற மந்திரத்தைக் கற்றிருந்தார். சஞ்சீவினி மந்திரம் என்றால் என்னவென்று தெரியுமா? இந்த மந்திரத்தை அறிந்தவர்கள் உச்சாடனம் செய்தால் இறந்தவர்கள் கூடப் பிழைத்துக் கொள்வார்களாம். சுக்கிராச்சாரியார் சஞ்சீவினி மந்திரத்தை உச்சாடனம் செய்து சண்டையில் இறந்த அசுரர்களை உயிர் பிழைக்க வைத்துக்கொண்டே இருந்தாராம். அசுரர்கள் சண்டையில் இறந்துபோனாலும் மீண்டும் மீண்டும் உயிர் பிழைத்து எழுந்து வந்து தேவர்களை எதிர்த்தார்கள். இதனால் அசுரர்கள் தாங்கள் இழந்த பலத்தைச் சுக்கிராச்சாரியார் மூலம் மீண்டும் பெற்றனர். பிரகஸ்பதிக்கு சஞ்சீவினி மந்திரம் தெரியாது. தேவர்களுக்கு இது மிகவும் பலவீனமாக இருந்தது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்த தேவர்கள் அலுப்பும் சலிப்பும் அடைந்தனர்.
இதனை முடிவிற்குக் கொண்டுவர தேவர்கள் பிரஹஸ்பதியிடம் சென்று முறையிட்டனர். “தேவகுருவே! அசுரர்கள் போரில் இறந்தாலும் மீண்டும் மீண்டும் பிழைத்து எழுந்து வந்துவிடுகிறார்கள். அசுரகுருவான சுக்கிராச்சாரியார் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்துப் பிழைக்க வைத்துவிடுகிறார். இதனால்தான் நமக்குத் தோல்வி வருகிறது. அல்லவா?” என்று எடுத்துக் கூறினார்கள்.
“உண்மைதான்! நம்மில் யாருக்கும் சஞ்சீவினி மந்திரம் தெரியாது. சுக்கிராச்சாரியாருக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் நாம் நேரிடையாக வேண்டினால் அவர் நமக்குக் கற்றுத்தரமட்டார். அப்படித்தானே?” இது பிரஹஸ்பதியின் கேள்வி.
“ஆமாம் குருவே! நேர்வழியில் சஞ்சீவினி மந்திரத்தை சுக்கிராச்சாரியாரிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ள முடியாது. இதனைச் சூழ்ச்சி செய்ததுதான் கற்றுக்கொள்ள முடியும்.” என்றனர் தேவர்கள்.
கசன் (कच, Kacha) பிரகஸ்பதியின் மகன் ஆவான். பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்தான். தேவர்கள் கசனிடம் போய்த் தங்கள் குறைகளைச் சொன்னார்கள்.
“கசன் மகரிஷியே! தேவர்களாகிய நாங்கள் பெரிய இக்கட்டில் இருக்கிறோம். சண்டையில் இறந்து போன அசுரர்களைச் சுக்கிராச்சாரியார் பிழைக்க வைத்துவிடுகிறார். அவருக்குச் சஞ்சீவினி மந்திரம் தெரியும். இதனால்தான் அசுரர்கள் மீண்டும் மீண்டும் பிழைதது வந்து நம்மோடு சண்டை போடுகிறார்கள். இந்த இக்கட்டில் இருந்து தேவர்களைக் காப்பாற்ற உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும்” என்று தேவர்கள் முறையிட்டார்கள்
“நான் எப்படி இந்த இக்கட்டிலிருந்து உங்களைக் காப்பாற்ற முடியும்?” என்று கசன் கேட்டான்.
“கசன் மகரிஷியே! நீங்கள் ஒரு பிரம்மசாரி. பணிவும் பக்தியும் மிக்கவர். பிரம்மசாரிய விரதத்தை முறையாகப் பின்பற்றி வருகிறீர்கள். உங்கள் ஒருவரால் மட்டுமே தேவர்களைக் காப்பற்ற முடியும். எப்படிக் காப்பாற்ற முடியும் என்று சொல்கிறோம் கேளுங்கள். நீங்கள் சுக்கிராச்சாரியார் ஆசிரமத்திற்குச் சென்று அவருடைய சீடனாகச் சேர்ந்து கொள்ள வேண்டும். அவருக்குப் பணிவிடை செய்து அவருடைய நன்மதிப்பைப் பெற வேண்டும். பிறகு எப்படியாவது அவரிடமிருந்து சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக்கொண்டு திரும்ப வேண்டும். இதுதான் திட்டம்.” என்று வேண்டினார்கள்.
இது தெரிந்த கசன், சுக்கிராச்சாரியாரிடமிருந்து சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினான். இதற்காகவே சுக்கிராச்சாரியாரிடம் சீடனாகவும் சேர்ந்து கொள்ளவும் விரும்பினான். என்றாலும் “அவர் எப்படி எனக்குச் சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுத் தருவார்?’ என்று கசன் கேட்டான்.
“மகரிஷி! நேரிடையாகக் கேட்டால் கற்றுத்தரமாட்டார் என்பது உண்மைதான். ஆனால் குருகுல வாசம் செய்து வித்தைகள் கற்றுக் கொள்ளும் விருப்பத்தை அசுரகுருவிடம் சொல்லிப் பணிவுடன் கேட்டுக்கொள்ளுங்கள். தொடர்ந்து அவருக்குப் பணிவிடை செய்து வாருங்கள். தேவயானி சுக்கிராச்சாரியாரின் மகள் ஆவாள். அவளுக்குப் நீங்கள் பணிவிடைகள் செய்தால் அவள் அன்பைப் பெற முடியும். அவள் உங்களுக்கு உதவக்கூடும். ஆனால் எப்படியாவது சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக்கொண்டு வரவேண்டும்” என்று வேண்டினர்.
கசன் தேவர்கள் வேண்டுகோளை ஏற்றான். சுக்கிராச்சாரியாரின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டுப் போனான். அவரை நேரில் பார்த்து வணங்கியவாறு, “குருவே! தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்… நான் கசன். பிரகஸ்பதியின் மகன். அங்கிரஸ் முனிவரின் பேரன் ஆவேன்.” என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டான்.

கசன் சுக்கிராச்சாரியாரை வணங்குகிறான். PC: விக்கிபீடியா
ஆசிரமத்தில் தங்கிக் குருகுல வாசம் செய்தவாறு, சுக்கிராச்சாரியாரிடம் இருந்து, வித்தைகளைக் கற்றுக்கொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தான். தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வணங்கி, வற்புறுத்திக் கேட்டுக்கொண்டான். சுக்கிராச்சாரியாரும் அவன் வேண்டுகோளைக் கனிவுடன் கேட்டார். பின்னர்ப் பெருமனதுடன் அவனைச் சீடனாகவும் ஏற்றுகொண்டார்.
சுக்கிராச்சாரியாரின் மகளான தேவயானி தந்தையுடன் ஆசிரமத்தில் தங்கி இருந்தாள். கசன் குருவிற்கும், தேவயானிக்கும் பயபக்தியுடன் பணிவிடைகள் செய்துவந்தான். தேவயானி கசனின் பேரழகில் மயங்கினாள். அவன் மீது ஒருதலைக் காதல் கொண்டாள். ஆனால் கசன் தேவயானியை சகோதரியாகவே நினைத்துப் பணிவிடைகள் செய்து வந்தான். சுக்கிராச்சாரியாரும் கசனுக்குப் பல வித்தைகளைக் கற்றுக் கொடுத்தார்.
அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இருந்த பகை அதிகமாகிக் கொண்டு வந்தது. பிரகஸ்பதியின் மகனாகிய கசன் சுக்கிராச்சாரியாரிடம் சீடனாகச் சேர்ந்ததை அசுரர்கள் விரும்பவில்லை. அவரிடமிருந்து சஞ்சீவினி மந்திரத்தைக் கசன் கற்றுக்கொண்டுவிடுவானோ என்று பயந்தனர். இந்த மந்திரத்தைக் கசன் கற்றுக்கொள்வதை அவர்கள் அறவே விரும்பவில்லை. இதனால் அவனைச் சமயம் பார்த்துக் கொலை செய்யத் திட்டம் தீட்டிக் காத்திருந்தனர்.
ஒருநாள் கசன் காட்டில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அசுரர்கள் கசனைக் கொன்றுவிட்டனர். அது மட்டுமா.. அவன் உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஒநாய்களுக்கு உணவாகப் போட்டனர். எவ்வளவு வன்மம் பாருங்கள்!
மாலையில் மாடுகள் மட்டும் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்தன. கசன் வரவில்லை. இதனால் தேவயானி கசனுக்கு என்ன ஆயிற்றோ? ஏது ஆயிற்றோ? என்று கவலைப்பட்டாள். தந்தையிடம் சென்று, “தந்தையே! கசன் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது. கட்டாயம் அவனைக் கண்டுபிடித்துத் திரும்பக் கொண்டு வரவேண்டும்” என்று வேண்டினாள்
தேவயானி கசன் மீது வைத்திருந்த அன்பை அவள் தந்தை புரிந்துகொண்டார். தன் ஞானதிருஷ்டியால் கசன் இறந்து போனதைக் கண்டறிந்தார். உடனே சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தார். “கசனே நீ எங்கிருந்தாலும் உயிர் பிழைத்து வா” என்று கூப்பிட்டார். கசன் உயிர்பிழைத்து, ஓநாயின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே, வந்தான். காட்டிலிருந்து ஆசிரமத்திற்கு வந்து குருவைப் பணிந்தான்.
சுக்கிராச்சாரியார் மூலம் கசன் உயிர் பிழைத்து எழுந்து வந்தது அசுரர்களுக்குத் தெரிந்துபோயிற்று. அவர்கள் கசன் மீது மிகுந்த கோபம் கொண்டார்கள். இரண்டாவது முறையாக அவனை மீண்டும் கொல்லத் திட்டம் போட்டார்கள். இந்த முறை கசன் தப்பிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.
ஒருமுறை தேவயானிக்காகப் பூப்பறித்துவர கசன் நந்தவனத்துக்குப் போனான். அவனைப் பின்தொடர்ந்து வந்த அசுரர்கள் அவனை மீண்டும் கொன்றுவிட்டனர். இந்தமுறை என்ன செய்தார்கள் என்று பாருங்கள்! அவனது உடலைப் பொடிப்பொடியாக அரைத்துக் கூழாக்கிக் கடலில் கரைத்து விட்டனர். தீராப்பகையினால் அசுரர்கள் எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்!
நந்தவனத்திற்குப் போன கசன், ஆசிரமம் திரும்பாததை அறிந்த தேவயானி மிகவும் கவலைப்பட்டாள். மீண்டும் தன் தந்தையிடம் அழுது மன்றாடினாள். மனமிரங்கிய சுக்கிராச்சாரியார், இரண்டாம் முறையாகச் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தார். கசனை உயிர் பிழைக்க வைத்துக் கடலில் இருந்து எழுந்து வரச்செய்தார். கசனும் ஆசிரமம் திரும்பினான்.
கசன் இரண்டாவது முறையாக உயிர் பிழைத்து எழுந்து வந்ததை அசுரர்கள் தெரிந்து கொண்டார்கள். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். மீண்டும் கொல்வதற்கு மிகவும் கவனமாகத் திட்டம் தீட்டினார்கள். மூன்றாம் முறையாகக் கசனை அவர்கள் கொன்று விட்டார்கள். பின்பு என்ன செய்தார்கள் தெரியுமா? இறந்த அவன் உடலைச் சுட்டுச் சாம்பலாகவும் ஆக்கிவிட்டார்கள்.
சாம்பலை என்ன செய்தார்கள் தெரியுமா? சோமபானத்தில் (மதுவில்) கரைத்துவிட்டார்கள். சாம்பல் கலந்த சோமபானத்தை எடுத்துக்கொண்டு சுக்கிராச்சாரியாரைப் பார்த்து அந்தப் பானத்தைக் குடிக்கக் கொடுத்துள்ளர்கள். சோமபானத்தின்மேல் இருந்த மோகத்தால் சுக்கிராச்சாரியாரும் ஒரு சொட்டு மீதம் வைக்காமல் குடித்துவிட்டார்.
வழக்கம்போல மூன்றாவது முறையாகக் கசனைக் காணமல் தேவயானி மிகவும் துன்பப்பட்டாள். “கசன் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை” என்று தன் தந்தையிடம் அழுது புலம்பினாள்.
சுக்கிராச்சாரியாரும் அசுரர்கள் மூலமாகத்தான் கசனுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதினார். அசுரர்கள் மீது கோபமும் கொண்டார். அசுரர்களைப் பிறகு கண்டித்துக்கொள்ளலாம் என்று நினைத்துத் தன்னைச் சமாதானம் செய்து கொண்டார். காலம் தாழ்த்தாமல் கசனைப் பிழைக்க வைக்க வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டார். சஞ்சீவினி மந்திரத்தை மூன்றாவது முறை உச்சரிக்கத் தொடங்கினார்.
சுக்கிராச்சாரியாரின் வயிற்றுக்குள், சோமபானத்தில் சாம்பலாகக் கலந்து, இருந்த கசன் பேசினான். “குருவே! என் மீது கருணை காட்டுங்கள்.” என்று வேண்டினான்.
கசன் தன் வயிற்றிற்குள் இருப்பது தெரிந்து வியந்தார். சஞ்சீவினி மந்திரம் உச்சரிப்பதை நிறுத்திக்கொண்டார்.
தேவயானியிடம், “மகளே! கசன் என்னுடைய வயிற்றில் இருந்து பேசுகிறான். இது அசுரர்கள் செய்த சதியாகும். நான் உனக்காகச் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்தால் கசன் உயிர் பிழைத்து விடுவான். அவன் வெளியே வர வேண்டும் என்றால் என் வயிற்றைக் கிழித்துக்கொண்டுதான் வரவேண்டும். அப்போது நான் இறந்துவிடுவேன். ஆமாம் அப்படித்தான் நடக்கும். சரி.. இதற்கு நீ சம்மதிக்கிறாயா? அப்படி நீ சம்மதித்தால் நான் மந்திரத்தை உச்சரிக்கிறேன்.” என்றார் அசுரகுரு.
இதைக்கேட்டு தேவயானி மிகுந்த கவலை அடைந்தாள். “தந்தையே! கசன் உயிர் பிழைத்து உங்கள் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தால் நீங்கள் இறந்து போவீர்கள். அப்படியே விட்டுவிட்டால் கசன் இறந்தது இறந்ததாகவே போய்விடும். உங்கள் இருவரையும் இழந்த பின்பு நான் வாழ வேண்டுமா? நான் தர்மசங்கடத்தில் இருக்கிறேன். தங்களுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதையே செய்யுங்கள்.” என்று வேண்டினாள்
சுக்கிராச்சாரியாரும் தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார். ஒரே ஒரு வழிதான் புலப்பட்டது. அதைத்தவிர வேறு வழியே இல்லை என்றும் நினைத்தார். அதையே செய்வது என்று தீர்மானமாக ஒரு முடிவிற்கும் வந்துவிட்டார். அந்த வழிதான் என்ன?
கசனுக்குச் சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொடுப்பது ஒன்றுதான் அவர் முன்னால் இருந்த ஒரே வழி. தேவாயானிக்காகச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். “கசனே! நீ கொடுத்துவைத்தவன்!! நீ விரும்பிய மந்திரத்தைக் கற்றுக் கொள்ளும் தருணம் வந்துவிட்டது!!! ஆமாம். சஞ்சீவினி மந்திரத்தை உனக்கு உபதேசிக்க நான் முடிவு செய்துவிட்டேன். முதலில் சஞ்சீவினி மந்திரத்தை நான் உனக்கு உபதேசிக்கிறேன். அதனைக் கவனமாகக் கற்றுக்கொள். அதன் பின்னர் நான் சஞ்சீவினி மந்திரத்தை மூன்றாம் முறையாக உச்சரித்து நான் உன்னைப் பிழைக்க வைக்கிறேன். ஆனால் நீ என் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும்போது நான் இறந்துவிடுவேன், கசனே! கவலைப் படாதே! நீ வெளியே வந்து சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து என்னைப் பிழைக்க வைத்துவிடு. சரி தானே..” என்று கசனிடம் எடுத்துச் சொன்னார்.
சஞ்சீவினி மந்திரத்தைக் கசனும் கற்றுக்கொண்டான். உயிர் பிழைத்து எழுந்து, சுக்கிராச்சாரியாரின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தான். இதனால் சுக்கிராச்சாரியார் உடனே இறந்து போனார். வெளியே வந்த கசன் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்துச் சுக்கிரச்சரியாரை உயிர் பிழைக்க வைத்தான்.
உயிர் பிழைத்த கசன், “குருவே! தாங்கள் எனக்கு எல்லா வித்தைகளையும் கற்றுத் தந்தீர்கள் அல்லாவா? இப்போது யாருமே அறிந்திராத சஞ்சீவினி மந்திரத்தையும் கற்றுத் தந்துவிட்டீர்கள். என் குருவாகிய உங்களை இதன் மூலம் தந்தைக்குச் சமமாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். நான் உங்கள் வயிற்றில் குடியிருந்தேன். சஞ்சீவினி மந்திர சக்தியால் இன்று உயிர் பிழைத்துத் தங்கள் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். இதனால் உங்களைத் தாயுமானவர் ஆகவும் ஏற்றுக்கொண்டேன்.” என்று கூறி சுக்கிராச்சாரியாரைப் பணிவுடன் வணங்கினான். தன்னை ஆசீர்வதித்துத் தேவலோகம் அனுப்பிவைக்க வேண்டினான்.
இதைக் கேட்டுத் தேவயானி மிகுந்த கவலை அடைந்தாள். “பிரகஸ்பதியின் புத்திரனே! நீங்கள் பிரம்மசாரிய விரதம் பூண்டு குருகுலத்தில் எல்லா வித்தைகளையும் கற்று முடித்துவிட்டீர்கள். தங்களுக்குச் சஞ்சீவினி மந்திரமும் உபதேசிக்கப்பட்டுவிட்டது. இன்றுடன் உங்கள் பிரம்மச்சாரிய விரதம் முடிவுக்கு வந்து விட்டதல்லவா? இனிமேல் தாங்கள் கிரஹஸ்தானாக ஆக வேண்டுமல்லவா? நான் தங்கள் மீது அன்பு கொண்டு உள்ளேன். தாங்கள் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது. எனவே என்னை மணந்து ரிஷி பத்தினியாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று வேண்டினாள்.
கசன் தேவயானியை ஆறுதல்படுத்த எண்ணினான். “தருமத்தின்படி வாழ்ந்து வரும் தேவயானியாகிய தங்கள் வணங்கத் தக்கவர். தங்களைக் குருபுத்திரியாக ஏற்றுக்கொண்டு பணிவிடை செய்துவந்தேன். வித்தை கற்பித்ததால் என் குருவைத் தந்தையாக ஏற்றுக்கொண்டுவிட்டேன். குருவின் வயிற்றில் குடியிருந்து வெளிப்பட்ட காரணத்தால் என் குரு எனக்குத் தாயாகவும் ஆகிவிட்டார். தங்கள் தந்தையை நான் தந்தையாகவும் தாயாகவும் ஏற்றுக்கொண்டேன் அல்லவா?. இந்தக் காரணத்தால் நான் தங்கள் சகோதரனாகிவிட்டேன். சகோதரியை நான் எப்படித் தங்களைத் திருமணம் செய்துகொள்ள முடியும்?” என்று கேட்டான்.
தேவயானி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கசன் கேட்கவில்லை. இதனால் தேவயானி ஆத்திரமடைந்தாள் “என்னை மணந்து ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று மறுக்கும் நீ பெரும் குருத் துரோகி ஆகிவிட்டாய். இதனால் என் தந்தையும், நீ உன் குருவுமாகிய சுக்கிராச்சாரியாரிடம் கற்றுக்கொண்ட சஞ்சீவினி மந்திரம் உனக்குப் பலனளிக்காமல் போகட்டும்” என்று சாபமிட்டாள்.
“தேவயானி! உன் சாபத்தினால் நான் கற்றுக்கொண்ட மந்திரம் எனக்குத் தக்க சமயத்தில் பலனளிக்காமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் நான் தேவர்களுக்கு முறையாகச் சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக்கொடுப்பேன். அது எனக்குப் போதும்” என்றான்.
“குருபுத்திரியே! நான் நைஷ்டிக பிரம்மசாரி என்று நீ அறிவாய். நீயாக உன் மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டாய். மணம் செய்துகொள்ள என்னை வற்புறுத்தினாய். மறுத்து விளக்கம் தந்த எனக்குச் சாபமும் கொடுத்துவிட்டாய். ஆத்திரத்தால் மதியிழந்த உனக்கு நான் இப்போது உனக்குச் சாபமிடுகிறேன். ரிஷி (அந்தணர்) குலத்தில் பிறந்த உன்னை, உன் குலத்தைச் சேர்ந்த யாரும் மணந்துகொள்ள முன்வர மாட்டார்கள். நீ ஒரு சத்திரியனையே மணந்து கொள்வாய்” என்று சாபம் கொடுத்த பின்னர்த் தேவலோகம் சென்றான்.
“இன்று முதல் அந்தணனாகிய எவனொருவன் அறிவிழந்து மது அருந்தினால் அவன் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளாவான். எல்லா உலகங்களிலும் ஏளனமாக இகழப்படுவான். இது சத்தியம். ” என்று சுக்கிராச்சாரியார் சாபமிட்டார்.
குறிப்புநூற்பட்டி
- இறந்தவரை உயிர்ப்பிக்கும் மந்திரம்! https://www.vikatan.com/sakthivikatan/2007-may-02/short-stories/83072.html
- உயிர்மீட்பு ஞானத்தை அடைந்த கசன்! | ஆதிபர்வம் – பகுதி 76 முழு மகாபாரதம் https://mahabharatham.arasan.info/
- தேவயானியை ஏற்க மறுத்த கசன்! – பகுதி 77. முழு மகாபாரதம் https://mahabharatham.arasan.info/
- கசன்: மாண்டவன் மீண்டான் http://vyasabharatham.blogspot.com/2017/12/blog-post_98.html
நன்றி ஐயா
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
LikeLike
தொடர்ந்து வாசிக்கிறேன். அருமை.
LikeLiked by 1 person
வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி ஐயா..
LikeLiked by 1 person