தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் நாளன்று, உலகம் முழுவதிலும் வாழ்கின்ற தமிழர்களால், கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தமிழர்கள் மிகுதியாக வாழும் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, மியான்மார், லாவோஸ், மலேஷியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்தப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இரவும் பகலும் சமமாக இருக்கும் இந்த நாளை இளவேனில் சம இராப் பகல் நாள் (Vernal Equinox Day) என்று குறிப்பிடுகிறார்கள். வெப்ப மண்டல இளவேனில் சம இராப் பகல் நாள் மார்ச் மாதம் 22 ஆம் தேதியில் அமைகிறது. நீள்வட்டப்பதையில் புவிஈர்ப்பு விசையால் ஏற்படும் அலைவு (Oscillation) மற்றும் நடுக்கம் (Trepidation) போன்ற காரணங்களுக்காக 23 டிகிரி கூட்டிக்கொண்டால், தமிழ் புத்தாண்டு என்னும் நிராயன மேஷ சங்கராந்தி, சித்திரை மாதம் முதல் நாளன்று அமைகிறது. இந்த நாள், சூரியன் மேஷ இராசி, அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிரவேசிக்கும் நாளாகும். சித்திரை மாதம் முதல் தேதியில் வரும் தமிழ் புத்தாண்டுக்குத் தொடர்புடைய ஆங்கிலத் தேதி, கிரிகோரி நாட்காட்டியின் (Gregorian Calendar) அடிப்படையில், பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அமைகிறது. சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 ஆம் தேதிகளில் அமைவதும் உண்டு.
தமிழ் புத்தாண்டு பண்டிகை
தமிழ் நாட்டில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை கண்விழித்ததும் கர தரிசனம் என்னும் கைகளைப் பார்த்துத் தரிசனம் செய்வர். பிறகு பூஜை அறையில் இடம்பெற்றுள்ள கடவுளர் உருவப்படங்கள், வலம்புரிச் சங்கு, நாணயங்கள், கண்ணாடி, நிறைகுடத்து நீர் போன்றவற்றைப் பார்க்கலாம். கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம்.
இந்த நல்ல நாளில் வீட்டைப் பெருக்கி நன்றாகத் தூய்மை செய்வார்கள். வீட்டு வாசலில் நீர் தெளித்து அரிசி மாவில் கோலமிட்டு அலங்கரிப்பார்கள். தரையை மெழுகிச் சுத்தம் செய்வார்கள். வாசல் நிலைப்படியில் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு இட்டு அலங்கரிப்பார்கள். நிலைக் கதவில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவார்கள்.
புனித நதிகளில் நீராடுதல் நல்ல பலன் தரும். நீராடி புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று இறைவழிபாடு செய்வர். கோவிலில் உள்ளூர் ஜோதிடர்கள் பஞ்சாங்கப் படணம் செய்வார்கள். இந்த வருடம் பிறக்கும் இலக்னம், ஓரை முதலானவற்றைக் குறிப்பிட்டு வருட பலன்கள் இராசி பலன்கள் போன்றவற்றை விளக்கிக் கூறுவார்கள். மழை பெய்யும் நாட்கள் மற்றும் உழவுத் தொழில் மேற்கொள்வதற்கு உகந்த நாட்கள். வணிகம் மேற்கொள்வதற்கான குறிப்புகள் போன்ற செய்திகளும் இந்த நிகழ்வில் இடம்பெறும். வீடு திரும்பியதும் நடப்பு ஆண்டின் புதிய பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை அறையில் வைத்து வணங்குவார்கள். மதிய உணவில் வெல்லம், வேப்பம் பூ, புளி, உப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கடுகு எண்ணெய் ஆகிய பொருட்களைக் கொண்டு சமைத்த வேப்பம் பூ பச்சடியும், சர்க்கரைப் பொங்கல் வடை பாயசத்துடன் கூடிய அறுசுவை உணவும் இடம்பெறுகிறது.
தமிழர்கள் சித்திரை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாகக் கொண்டாடுவதைப் போல அசாம் மக்கள் பிஹு என்ற பெயரிலும், பஞ்சாபிகள் வைஷாகி என்ற பெயரிலும், வங்காளிகள் பொஹெலா பொய்ஷாக் என்ற பெயரிலும் புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகின்றனர். கேரளத்து மக்களுக்குப் புத்தாண்டு தினம் சூரியன் சிம்ம இராசியில் பிரவேசிக்கும் நாளாகும். எனினும் இந்த சம இராப்பகல் நாளை (Equinox Day) விஷு என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
மலையாளத்தில் விஷு என்றால் சமம் என்று பொருள். இந்த விஷு நாளில் கேரளாவில் விஷுக்கனி, விஷு கைநீட்டம், விஷு சாப்பாடு ஆகிய நிகழ்வுகள் பிரபலம். விஷுவிற்கு முதல் நாள் இரவே பூஜை அறையில் வாழை இலை விரித்து அதில் அரிசியினைப் பரப்புகிறார்கள். அதன் மீது புத்தாடைகள், பணம், பொன் நகைகள், பழங்கள், கண்ணாடி, கடவுள் படம் (பெரும்பாலும் குருவாயூரப்பன் படம்), கொன்றைப்பூ போன்றவற்றை அலங்காரமாக அடுக்கி வைக்கிறார்கள். விஷு நாளன்று காலை எழுந்ததும் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கண்விழித்துக் காண்பது இந்த விஷுக்கனி அலங்காரத்தைத் தான்.
தமிழ் புத்தாண்டும் தமிழ் ஜோதிடமும்
பண்டைக் காலத்தில் வாழ்ந்த ரிஷிகளும் முனிவர்களும், தங்கள் தவ வலிமையால், இராசி வட்டத்தில் நட்சத்திரம் மற்றும் கிரகங்களின் புதிரான இயக்கங்களை அறிந்து கொண்டனர். நமது ஜோதிட முறையில் சூரியன் (Sun), சந்திரன் (Moon), செவ்வாய் (Mars), புதன் (Mercury), குரு (Jupiter), சுக்கிரன் (Venus), சனி (Saturn), ராகு (Raghu or Dragon’s Head, the Nodal Point of the Moon), கேதுவைச் (Kethu or Dragon’s Tail, the Nodal Point of the Moon) சேர்த்து ஒன்பது கிரகங்கள் உண்டு. நமது கிரக மண்டலத்தைப் பன்னிரெண்டு சரிசமான பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் ஒரு குறியீட்டைக் கொடுத்து உள்ளார்கள்
மேஷம் (Aries – symbol ♈), ரிஷபம் – (Taurus – symbol ♉), மிதுனம் – (Gemini – symbol ♊), கடகம் – (Cancer – symbol ♋), சிம்மம் (Leo – symbol ♌), கன்னி (Virgo – symbol ♍), துலாம் – (Libra symbol ♎), விருச்சிகம் (Scorpio – symbol ♏), தனுசு (Sagitarius – symbol ♐), மகரம் (Capricon – symbol ♑), கும்பம் (Aquarius – symbol ♒), மீனம் (Pisces – symbol ♓) ஆகிய குறியீடுகள் தான் பன்னிரெண்டு இராசிகள் (signs of the zodiac) ஆகும்.

Know Your Hindu Religion
கிரக மண்டலத்தின் பன்னிரெண்டு குறியீடுகள் கொண்ட சக்கரத்திற்கு இராசிச் சக்கரம் (Zodiac Sign) என்று பெயர். இந்த பன்னிரண்டு இராசி மண்டலங்களில் பன்னிரெண்டு இராசிகள் கொண்ட வீடுகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இராசிச் சக்கரம் ஆகும். இந்த இராசிச் சக்கரம் 360 பாகைகள் கொண்டது.

Know Your Hindu Religion
நமது ஜோதிட முறையில் இந்த இராசிச் சக்கரத்திற்கு நிராயனா (Nirayana) என்று பெயர். நிராயனா (Nirayana) என்றால் நடசத்திர மண்டல அமைப்பு (Sidereal Zodiacal System) அல்லது நிலையான நட்சத்திர ஜோதிடக் கணித முறை ஆகும்.. இந்தக் கணித முறை ஸ்திரமானது. ஆகவே இதற்கு “நிராயனா” என்று பெயர். இந்த முறையில் 12 இராசிகளின் வீடுகளும் சமமாக 30° இருக்கும்.

Know Your Hindu Religion
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கணித முறை. தமிழ் பஞ்சாங்கம் வானவியலில் உள்ள கிரகங்களின் மாற்றத்தை மேலே குறிப்பிட்ட ஐந்து அங்கங்களை கொண்டு விரிவாக விவரிக்கிறது. தமிழ் வருடம் என்பது பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் ஆகும். இதனை 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் என்று கணித்து உள்ளார்கள்.
வாரம் (Solar (Week) Days), சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் காலக் கணிப்பு முறை. 7 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் வாரம் (கிழமை) எனப்படும். (ஞாயிறு முதல் சனி வரை 7 வாரங்கள்)
திதி (Lunar Day) என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் காலக் கணிப்பு முறை. இதில் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் திதி எனப்படும். ஒவ்வொரு பட்சத்திலும் 15 திதிகள் இடம்பெறுகின்றன. (வளர்பிறை பிரதமை முதல் பௌர்ணமி வரை; தேய் பிறை பிரதமை முதல் அமாவாசை வரை) ஒவ்வொரு (தமிழ்) சந்திர மாதத்திலும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன.
நட்சத்திரம் (Asterism i.e., Stellar Mansion): நிராயன முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13.33 பாகை அளவுள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் நிற்கும். சந்திரன் அனுஷ நட்சத்திரத்தில் நின்றால் அந்த கால அளவிற்குரிய நட்சத்திரம் அனுஷ நட்சத்திரம் ஆகும்.
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பூமியின் சுற்று வட்டப்பாதையில் 108 பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு இராசிக்கும் 9 பாதங்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு மாதத்திற்கும் 9 பாதங்கள் உள்ளன.
யோகம் என்பது “சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20′ அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20′ அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன”. விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை 27 யோகங்கள் உள்ளன.
கரணம் (Ending Moment of Half of a Tithi) கரணம் என்பது ஒரு திதியில் பாதியாகும் .ஆறு பாகை கொண்டது ஒரு கரணம்.
தமிழ் ஜோதிடம் (Tamil astrology), இந்திய வேதகால வானவியலில் (Indian Vedic Astronomy) இருந்து பிரிந்து உருவான, ஒரு இயற்கையான, பிரபஞ்ச பாரம்பரியம் (natural cosmic tradition) ஆகும். மேல்நாட்டவர்கள் சாயனம் (Sayana) என்ற ஜோதிட கணித முறையைப் பின்பற்றுகிறார்கள்
நிராயன ஜோதிட முறைப் பஞ்சாங்கத்தில் இரண்டு பஞ்சாங்க முறைகள் உண்டு. ஒன்று வாக்கியப் பஞ்சாங்க முறை; மற்றொன்று திருக்கணிதப் பஞ்சாங்க முறை.
வாக்கியப் பஞ்சாங்கம்
நிராயன முறையில் வாக்கியப் பஞ்சாங்கம் பராசரர், ஜைமினி, வராகமிகிரர் போன்ற மகரிஷிகள் வகுத்துத் தந்த வாய்மொழி மரபுகளைப் பின்பற்றிக் கணிக்கப்படுகிறது. இந்த முறையில் கிரகங்களின் வேகம், பாதை முதலியவற்றை வாய்மொழி வாக்கியங்களாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த முறையில் பல தமிழ் பஞ்சாங்கங்கள் கணிக்கப்பட்டு வருகின்றன.
திருக்கணிதப் பஞ்சாங்கம்
வாக்கியப் பஞ்சாங்க முறையில் சில குறைகள் இருப்பதாகப் பிற்காலத்தில் தோன்றிய சில ஜோதிட வல்லுனர்கள் கண்டனர். கிரகங்களின் வேகம் புவிஈர்ப்பு விசையால் மாறுபடுகிறன. குறிப்பாகச் சந்திரனின் வேகம் பூமியின் புவிஈர்ப்பு விசையால் மிகுந்த மாற்றத்திற்கு உள்ளாகிறது. இது போன்ற மாற்றங்களை எல்லாம் துல்லியமாகக் கணக்கிட்டு வாக்கியப் பஞ்சாங்கத்தில் பல மற்றங்களைக் கொண்டு வந்தார்கள். இவ்வாறு திருத்தப்பட்ட ஜோதிட கணித முறை திருக்கணித ஜோதிட முறை என்று அழைக்கப்பட்டது. இம்முறை கி.பி. 1431 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
தமிழ் ஆண்டு முறைமை: அறுபது ஆண்டு சுழற்சி
தமிழ் பஞ்சாங்கத்தில் பிரபவ முதல் அட்சய வரை 60 ஆண்டுகள் சுழற்சியின் அடிப்படையில் மாறி மாறி வருகிறது. சூரிய சித்தாந்த நூலின் அடிப்படையிலே 60 ஆண்டுகாலச் சுழற்சி உருவாக்கப்பட்டது. இதேபோன்ற 60 ஆண்டுகாலச் சுழற்சி சீன நாள்காட்டியிலும் பயன்படுத்தப்படுகின்றது. சீன நாள்காட்டியில் மிருகங்களின் பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகாலச் சுழற்சி இடம்பெற்றுள்ளது.
தமிழ் மாதங்கள்
சூரியன் ஒவ்வொரு இராசியிலும் ஒவ்வொரு மாதம் தங்கி இருக்கிறான். இப்படித் தங்கி இருக்கும் காலம் ஒரு மாதம் ஆகும். சித்திரை முதல் பங்குனி வரை 12 தமிழ் மாதங்கள் கொண்டது ஒரு தமிழ் ஆண்டு ஆகும்.
சூரியன் மேஷ இராசியில் பிரவேசம்
இந்த அடிப்படையில் சூரியன் மேஷ இராசியில் பிரவேசிக்கும் நாளில் தமிழ் புத்தாண்டு தொடங்குகிறது. இது போல சூரியன் மீன இராசியில் இருந்து வெளியேறும் நாள் அன்று தமிழ் ஆண்டு முடிவடைகின்றது. பஞ்சாங்கத்தில் சூரியன் மேஷ இராசிக்கு இடம்பெயரும் நேரம், லக்னம், ஓரை முதலியன துல்லியமாகக் குறிக்கப்படுகிறது.
பஞ்சாங்கப் பலன்கள்
பஞ்சாங்கத்தில் வானியல் அடிப்படையில் ஒரு வருடத்திற்கான மழை பொழிவிற்கான பலன்கள் இடம்பெறுகிறது. திருமணம், சீமந்தம், காது குத்து, புதுமணை புகுதல், பிரயாணம், உழவு செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல் அறுவடை போன்ற சுபநிகழ்வுகளுக்கான முகூர்த்த நாட்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்று இருக்கும். கோவில் உற்சவங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள், போன்ற செய்திகளும் இடம் பெற்றிருக்கும்.
குறிப்புநூற்பட்டி
- Calendar http://en.wikipedia.org/wiki/Calendar
- Constellation http://en.wikipedia.org/wiki/Constellation
- Hindu calendar http://en.wikipedia.org/wiki/Hindu_calendar
- Nakshatra http://en.wikipedia.org/wiki/Nakshatra
- Panchangam http://en.wikipedia.org/wiki/Panchanga
- Sidereal astrology http://en.wikipedia.org/wiki/Sidereal_astrology
- Tamil Astrology http://know-your-hindu-religion.blogspot.com/2014/04/tamil-astrology.html
- Tamil Panchangam (Almanac) http://know-your-hindu-religion.blogspot.com/2014/04/tamil-panchangam-almanac.html
- Tamil Panchangam தமிழ் பஞ்சாங்கம் https://www.prokerala.com/astrology/tamil-panchangam/
- Zodiac http://en.wikipedia.org/wiki/Zodiac
அறியாத, பல புதிய செய்திகளை அறிந்தேன். தமிழ்ப்பஞ்சாங்கத்தில் உள்ள பிரபவ, விபவ… 60 ஆண்டுகளை பள்ளிக்காலத்தில் மனனம் செய்து ஒப்பித்தது நினைவில் வந்தது.
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா..
LikeLike
தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள் ஐயா
LikeLike
தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும்
நீளாயுள் உடல்நலம் நிறைசெல்வம் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.
LikeLike