இட்லியின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு

தென்னிந்தியாவில், பால்குடி மறந்த குழந்தைகள் முதல் பல் விழுந்த தாத்தாக்கள் வரை, அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவு இட்லி ஆகும். நோயாளிகள், பத்தியம் இருப்பவர்கள், விரதம் இருப்பவர்கள் ஆகிய எல்லோருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இட்லி மாவில், நல்ல பாக்டீரியாக்கள் வளர்கின்றன என்பது ஒரு காரணம். நீராவியில் வெந்த இந்தச் சிற்றுண்டி எளிதில் செரிமானம் ஆகிவிடுவது மற்றொரு காரணம். எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என்பது மூன்றாவது காரணம். இட்லியின் தாயகம் இந்தியா அல்ல. இந்தோனேஷியா என்பது ஒரு உணவு வல்லுநரின் கருத்து. கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் நீராவியில் வேகவைக்கப்பட்ட உணவு வகைகள் இல்லை என்று யுவான் சுவாங் தன் பயணக் குறிப்புகளில் பதிவுசெய்துள்ளார். கர்நாடகாவில் வெளியிடப்பட்ட சில தொன்மையான நூல்களில் இட்லியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இட்லியின் கதை பற்றிய ஒரு சிறு பதிவு இது.

நீராவியில் வேகவைத்து அவிக்கப்படும் இட்லியைப் பரபரப்பான காலை வேளைகளில், சமைப்பது இல்லத்தரசிகளுக்கு எளிது. எல்லா ஊர்களிலும் இட்லிக்கான ஈரமாவுக் மாவுக் கடைகள்தெருவெங்கும் முளைத்துள்ளதைத் தற்போது காணலாம். இட்லியைக் காலைச் சிற்றுண்டியாகத் தினசரி சாப்பிடும் பல குடும்பங்கள் உள்ளன. இட்லி மீது ஒருவித அலுப்பு ஏற்படுவதால் சிலர் இதனை வெறுப்பதும் உண்டு.

இட்லியில் பல வகைகள் உண்டு: வழக்கமான மாவு இட்லி, ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, ஓட்ஸ் இட்லி, கோதுமை இட்லி, ராகி இட்லி, வரகு இட்லி, தினை இட்லி, சாமை இட்லி, குதிரைவாலி இட்லி, முட்டை இட்லி, ஆட்டுக்கறி இட்லி, வெஜிடபிள் இட்லி, பீட்ரூட் இட்லி, கீரை இட்லி, புதினா இட்லி, மிளகு இட்லி, 14 இட்லி, குஷ்பு இட்லி, தட்டு இட்லி, கப் இட்லி, குடலை இட்லி, இட்லி பிட்சா இட்லி, மஞ்சூரியன், மிளகாய்ப்பொடி (தடவிய) இட்லி, இட்லி உப்புமா, காஞ்சிபுரம் இட்லி, செட்டிநாடு இட்லி, ராமசேரி இட்லி. அடடா! எத்தனை இட்லி வகைகள் உள்ளன பாருங்களேன்?

 

சாலையோரக் கடைகளில் ஐந்து அல்லது ஆறு வகைச் சட்டினிகள், சாம்பார், மற்றும் மிளகாய்ப் பொடியுடனும் பரிமாறப்படும் “மதுரை மல்லிகைப் பூ” இட்லி உலகப் புகழ் பெற்றது. இது பஞ்சு பஞ்சாய் மெத்தென்று இருக்கும். சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். முட்டை இட்லி, ஆட்டுக்கறி இட்லி வகைகள் இந்தத் தூங்கா நகரில் பிரசித்தம், மதுரை மேல மாசி வீதியில் 1991 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முருகன் இட்லிக்கடை சென்னையிலும் சிங்கப்பூரிலும் பல கிளைகளைத் தொடங்கி உள்ளார்கள். இட்லியைப் பிரதானமாக வைத்துத் தொடங்கப்பட்ட இந்த உணவ்கத்தில் மக்கள்  வரிசையில் நின்று, காத்திருந்து இடம்பிடித்துச் சாப்பிடுவது வாடிக்கை.

சென்னையில் ஐந்து நட்சத்திர உணவு விடுதி முதல் கையேந்தி பவன்கள் வரை இந்த இட்லிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. திருவல்லிக்கேணி ரத்னா கபேயின் இட்லி சாம்பார் மிகவும் பிரபலம். வடைகறியும் இட்லியும் நல்ல காம்பினேஷன். சில்லி இட்லி, இட்லி மஞ்சூரியன், சிறு தானிய இட்லி போன்றவை புதிய கண்டுபிடிப்புகள் எனலாம்.

கேரளாவில், பலா இலைகளைச் சுற்றி வேகவைத்துச் சமைக்கப்படும் இட்லி பல நாட்களுக்குக் கெடாமல் இருக்குமாம். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ராமசேரி என்ற கிராமத்தில் தயாரிக்கப்படும் இட்லியும் புகழ் பெற்றதுதான். பெங்களூருவில் உள்ள மாவல்லி டிபன் ரூம் (MTR) என்ற உணவகத்தின் ரவா இட்லி உலகப் புகழ்பெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி உலகப் பிரசித்தி பெற்றது.  மிளகையும் நெய்யையும் சேர்த்துச் சமைத்த காஞ்சிபுரம் இட்லி சுவை மிக்கது.

குஜராத் மாநிலத்தில் புளிக்காத மாவில் செய்யப்படும் சிற்றுண்டிக்கு தோக்ளா என்று பெயர்.  அரிசி, கடலை மாவு போன்ற மாவு வகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தோக்ளா நீராவியில் வேகவைத்துச் சமைக்கும் சிற்றுண்டி வகையாகும். கேரளாவில் ஈரமாவில் கள் சேர்த்து நீராவியில் வேகவைத்துசமைத்த சிற்றுண்டிக்கு வட்டப்பம் என்று பெயர். மங்களூர் பகுதியில் இந்த வகை உணவுக்குச் சன்னாஸ் என்று பெயர்.

தமிழ்நாட்டிற்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகள் விரும்பிச் சாப்பிடுவது இட்லியைத்தான். இங்கிலாந்து நாட்டின் தேசிய உணவுத் திட்டத்தின் கீழ் இட்லி தோசை கொண்டுவரப்பட்டுள்ளது  இட்லி மீது நூற்றுக்கணக்கான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் நோயின்றி வாழச் சிறந்த உணவு இட்லி தான் என்று மருத்துவ உணவுமுறை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உலகச் சுகாதார நிறுவனம் (WHO), காலை உணவாக நாம் சாப்பிடும் இட்லி, சாம்பார், சட்னி ஆகியவற்றில் புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட் ஆகிய முழுமையான ஊட்டச்சத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. ஒரு இட்டிலியில் 85 கலோரிகள் உள்ளது. 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

உலகில் பல்வேறு நோக்கங்களுக்காக உலக தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி, ஆண்டுதோறும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி அன்று உலக இட்லி தினம் விமரிசையாகக்  கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையைச் சேர்ந்த இனியவன் என்பவர்தான் உலக இட்லி தினத்தைக் கொண்டாடக் காரணமானவர். மல்லிகைப் பூ இட்லி நிறுவனரான இவர் 124 கிலோவில் இட்லி செய்து கின்னஸ் சாதனை படைத்தவர். 2000 வகை இட்லிக்களை உருவாக்கியவரும் இவர்தான்.

மும்பை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌதிகப் பேராசிரியை வைஷாலி பம்போல் என்பவர் இட்லி, வெள்ளை தோக்ளா போன்றவற்றை, எந்தவிதமான பாதுகாப்புப் பொருட்களும் இல்லாமல் 3 ஆண்டுகள் வரை கெடாமல் வைக்க புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்.

உளுந்து என்னும் உளுத்தம் பருப்பு 

இட்லியில் இந்த அளவிற்கு மருத்துவக் குணங்கள் உள்ளதற்கு என்ன காரணம் தெரியுமா? உளுந்துதான்.(உளுத்தம் பருப்பு = Urad dhal) காரணம். உளுந்தின் வெளித் தோல் கருப்பாகவும், உள்ளேயுள்ள பருப்பு வெண்மை நிறமாகவும் இருக்கும். உளுந்தில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்து உள்ளன. குறிப்பாகத் தோலில் தான் சத்துக்கள் நிறைந்து உள்ளன.

வெறுமுளுந்திற் செய்வடைக்கு மேன்மேலும் -வாதம்
உறும்பித்தம் சற்றே யொடுங்கும்-நறுந்தீ
பனம்போம் புசிப்பியு பருகநன்றாம் வாலி
யனம்போ னடையாயறி
(அகத்தியர் குணபாடம்)

உளுந்தின் பயன்கள் பற்றி அகத்தியர் பாடிய செய்யுள் இது. கடும் நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுத் தேறி வரும் நோயாளிகளின் உடல்நிலை மிகவும் பலகீனமாகக்  காணப்படும். நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட்டாலும் தேகத்தில் வலுக் குறைந்து இருக்கும். இவர்களைத் தேற்றி உடலை வலுப்படுத்த உளுந்தே சிறந்த மருந்தாகும் என்பது அகத்தியர் வாதம்.

வெறுமுளுந்திற் செய்வடைக்கு மேன்மேலும் -வாதம்
உறும்பித்தம் சற்றே யொடுங்கும்-நறுந்தீ
பனம்போம் புசிப்பியு பருகநன்றாம் வாலி
யனம்போ னடையாயறி
(அகத்தியர் குணபாடம்)

உளுந்து வடையைப் பிடிக்காதவர்களே கிடையாது எனலாம். உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும் என்று இந்தச் செய்யுளில் அகத்தியர் விவரிக்கிறார்.  இட்லியுடன் உளுந்து வடை நல்ல காம்பினேஷன் என்பது இப்போது உலக மக்கள் எல்லோருக்குமே தெரிந்துவிட்டது..

இட்லியின் வரலாறு 

இட்லியின் தாயகம் இந்தியா இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆச்சர்யம்! ஆனால் உண்மை!! ஆமாம்!!! நம்முடைய இட்லியின் தாயகம் இந்தோனேஷியா என்கிறார் கே.டி.அச்சய்யா (K.T.Achaya). இவர் சிறந்த உணவு விஞ்ஞானியும், ஊட்டச்சத்து மற்றும் உணவு வரலாற்றாளரும் ஆவார், இவர் கர்நாடக மாநிலத்தின் சாமரஜ்நகர் மாவட்டம் கொள்ளேகலில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் இட்லி இந்தோனேஷியாவில் இருந்து வந்த உணவு என்று தம்முடைய  “இந்திய உணவு ஒரு வரலாற்று அகராதி” (A Historical Dictionary of Indian Food) என்ற ஆங்கில நூலில் பதிவு செய்துள்ளார்.

 

உளுந்தைத் தயிரில் ஊற வைத்து நன்கு அரைத்து நெய்யில் சமைத்த உணவுதான் இந்தக் கெட்லி. இந்தோனேஷியா விவசாயிகள் காலையில் இந்தக் கெட்லியை ஒரு பிடிபிடித்துவிட்டு வயலுக்குச் சென்றுவிடுவார்களாம். நீண்ட நேரம் பசிதாங்கவும், சோர்வில்லாமல் விவசாய வேலைகளில் ஈடுபடவும் இந்தக் கெட்லி இவர்களுக்கு உதவியிருக்கிறது. புரோட்டின், கார்போஹைட்ரேட், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த இந்தக் கெட்லியை ஒரு முழுநிறைவான உணவு என்று இன்றைய உணவு வல்லுனர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தக் கெட்லிதான் பரிணாம வளர்ச்சிபெற்று இட்லியாக இந்தியாவிற்குள் புகுந்துள்ளது என்று  பெரும்பாலான உணவு வரலாற்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

வரலாற்றுச் சான்றுகள் இல்லை!

சரி.. இந்தியாவின் உணவு வரலாற்றில் இட்லி பற்றிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளனவா? அதுகூட வேண்டாம் குறைந்தபட்சம் நீராவியில் வேகவைத்துச் சமைத்த உணவு வகைகளைப் பற்றி ஏதேனும்  சான்றுகள் உள்ளனவா? இல்லை என்பதுதான் உண்மை. கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை இந்திய உணவு வரலாற்றில் இட்லி பற்றியோ அல்லது நீராவியில் வேகவைத்துச் சமைத்த உணவு பற்றியோ எந்தச் சான்றுகளும் இல்லை. இது எப்படி சாத்தியம்?

யுவான் சுவாங் குறிப்புகள் என்ன சொல்கின்றன?

யுவான் சுவாங் (கி.பி. 602 – 664) சீன நாட்டிலிருந்து இந்தியாவில் பயணம் செய்த புகழ்பெற்ற பெளத்த மதகுரு, துறவி, சிறந்த கல்வியாளர், மொழிகளைக் கற்பதில் ஆர்வம் மிக்கவர். இவர் நல்ல மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளரும், ஆவார்.

இவருக்குப் பயணம் செய்வதில் மிகுந்த விருப்பம் இருந்துள்ளது. புத்தர் பிறந்த இடங்களைக் காணவும், புத்தரின் கொள்கைகளையும் போதனைகளையும் நேரில் பார்த்து ஆராய்ச்சி செய்வதற்காக கி.பி. 629 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து இந்தியாவை நோக்கித் தன்னுடைய நீண்ட நெடும்பயணத்தை மேற்கொண்டார்.

இவர் முதலில் சென்றடைந்த இடம் ஆஃப்கானிஸ்தானம் ஆகும். தொடர்ந்து கோபி பாலைவனங்கள், எரிதழல் மலைகள் (Flamming Mountains), பிடல் கனவாய் (Bedal Pass), பட்டுப்பாதையில் இருந்த நகரங்கள், பம்யான் மலைகள் (Bamyan Hills), சைபர் கணவாய் (Ciber Pass) வழியாகப் பயணித்து அன்றைய காந்தார (இன்றைய ஆஃப்கானிஸ்தான்) நாட்டில் இருந்த ஆதினப்பூர் என்ற நகருக்கு வந்துள்ளார். பின்னர் காந்தரத்தின் தலைநகரான புருஷபுரா (இன்றைய பெஷாவர்) வழியாக) மலைகளும் காடுகளும் நிறைந்த பிரதேசங்களையும் சிந்து நதியையும்  கடந்து கி.பி. 633 ஆம் ஆண்டில் இந்தியாவின் காஷ்மீரத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.

இந்தியாவில் நாளந்தாப் பல்கலைக்கழகத்தில் தங்கிப் பயின்றுள்ளார். காஷ்மீரம், பாடலி புத்திரம்,  ஆகிய இடங்களில் இருந்த பெளத்த மடாலயங்களுக்குச் சென்று புத்த மதம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். தன்னுடைய 17 ஆண்டு (கி.பி. 629 – 645) பயணத்தில் தான் கண்ட மலைகள், நதிகள், காடுகள், அங்கேயிருந்த மரங்கள், செடிகொடிகள், விலங்குகள், பல்வேறு மொழிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மன்னர்கள், அவர்களுடைய செயல்பாடுகள், மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகிய எல்லாவற்றையும் பயணக் குறிப்புகளாகப் பதிவு செய்துள்ளார். இவருடைய பயணக் குறிப்புகள் பற்றிய புத்தககங்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

xuan_zang_statue

Yuvan Suvang Wikipedia

யுவான் சுவாங் எழுதிய பயணக் குறிப்புகளில் இட்லி பற்றி என்ன எழுதியுள்ளார் தெரியுமா? நீராவியில் வேகவைத்துச் சமைக்கும்படியான உணவோ அல்லது நீராவியில் வேகவைத்துச் சமைப்பதற்கேற்ற பாத்திரங்களோ இந்தியாவில் இல்லை  என்று பதிவு செய்துள்ளார். இதுவே நீராவியில் வேகவைத்து உணவு சமைத்தல்  பற்றிய முதல் குறிப்பு என்று கருதப்படுகிறது.

சரி.. இவர் ஏன் இதைப் பற்றி  எழுத வேண்டும்? இவர் கி.பி. 7 ஆம் நூற்றண்டில் சீனாவில் வாழ்ந்தவர்.  சீன நாட்டில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே நீராவியில் வேகவைத்துச் சமைக்கும் முறை தெரிந்திருந்தது. இதற்கான தொல்லியல் சான்றுகள் சீனாவின்  யுன்னான் (Province of Yunnan) மாகாணத்தில் கிடைத்துள்ளன. கல்லினால் செய்யப்பட்ட இந்த நீராவிப் பாத்திரம் (Yunnan Stone Steam Pot) சீனாவின் தொன்மைமிக்க சமையல் முறைக்குச் சான்றாகத் திகழ்கிறது. கி.பி. 8 ஆம் நூற்றண்டில் சீனர்கள் ஒருவிதமான ஊசி இலையின் மெல்லிய தண்டைப் பயன்படுத்தி நீராவிப் பாத்திரம் செய்தார்கள். அதில் வைத்துச் சமையலும் செய்தார்கள். இந்தியாவில் இது போன்ற உணவையோ அல்லது பண்ட பாத்திரங்களையோ அவரால் இந்தியாவில் பார்க்க முடியவில்லை என்ற பொருளிலேயே இப்பதிவினைச் செய்துள்ளார். இதே முறையில், மூங்கில் குழாயைப் பயன்படுத்தி, கேரளாவில் குழாய்ப் புட்டு செய்துவருகின்றனர்.

வட்டராதனே (பழைய கன்னட நூல்) சிவகோட்டியாச்சார்யர்

கி.பி. 920 ஆம் ஆண்டளவில் சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே (Sivakotiacharya’s Vaddaradhane) என்னும் பழமையான கன்னட நூலில் முதல் முறையாக இட்லியைப் பற்றி ஒரு சிறு குறிப்புக் கிடைத்துள்ளது. இது கன்னட மொழியில் எழுதப்பட்ட முதல் உரைநடை நூலாகும். இந்த நூலில்  19 கதைகள் உள்ளன. இப்படி எழுதப்பட்ட ஒரு கதையில் குருகுலம் முடிந்து வீடு திரும்பும் அந்தணச் சிறுவர்களுக்கு 18 வகையான உணவுப் பொருட்களைப் பரிமாறி உள்ளார்கள். அவற்றுள் ஒன்றுதான் இந்த இட்லி. இந்த நூலில் இட்டளிகே (Iddalige) என்று குறிப்பிட்டுள்ளார். கருப்பு முழு உளுந்தை அரைத்துத் தயாரித்த மாவில் தயாரிக்கப்பட்ட இட்டளிகே பற்றி இந்த நூல் குறிப்பிடுகிறது.

 

லோகோபகாரா  (Lokopakara) (கி.பி..1025) என்பவர் முழுக் கறுப்பு உளுந்தை மோரில் ஊற வைத்து மை போல அரைத்துத் தயிரும் மசாலாவும் கலந்து செய்த உணவு பற்றி விவரித்துள்ளார். மூன்றாம் சோமேஸ்வரன்  (கி.பி 1122 – 1133) என்ற மேலைசாளுக்கிய மன்னன் ஆண்டுவந்த கர்நாடகத்தின் பகுதியை ஆண்டு வந்தான். இவன்  மானசொல்லாசா (Manasollasa) என்ற கலைக்களஞ்சியத்தை இயற்றியுள்ளான். இந்தக் கலைக்களஞ்சியம் இந்தியாவில் முதலில் எழுதப்பட்ட உணவு செய்முறை நூல்களில் ஒன்றாகும். கி.பி. 1130 ஆம் ஆண்டில் இந்த நூலில் மூன்றாம் சோமேஸ்வரன் தன்னுடைய அரண்மனையின் சமையலறையில் செய்யப்பட்ட உணவு வகைகளைப் பற்றி விவரித்துள்ளார். உளுந்தைப் பயன்படுத்திச் சமைக்கப்பட்ட இட்டரிகாவின்  (Iḍḍarikā) செய்முறையை தன் கலைக்களஞ்சியத்தில் விவரித்துள்ளார்.. இந்த இட்டரிகாதான் இன்றைய கர்நாடகத்தில் தயாரிக்கப்படும் இட்லியின் மூலம் எனலாம்.

Manasollasa க்கான பட முடிவு

Someswara III Manasollasa

திருவிளையாடல் புராணம் 16 ஆம் நூற்றண்டில் எழுதப்பட்ட புராண இலக்கியம் ஆகும். இது பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டது. இந்தப் புராணத்தின் 63 ஆம் படலத்தில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விவரிக்கப்பட்டுள்ளது. பிட்டு நீராவியில் வேகவைத்துச் செய்யப்பட்ட உணவாகும். சிவபெருமான் பிட்டை கூலியாய்ப் பெற்றுக்கொண்டு வந்தி என்ற மூதாட்டிக்காக மதுரையில் மண் சுமந்த கதையை விவரிக்கிறது.

மங்கராசா  (Mangarasa) என்பவர் கர்நாடகத்தின் கல்லலில் (Kallalil) என்ற பகுதியை ஆண்டுவந்தார். கி பி 1508 ஆண்டில் இவருடைய நாட்டின் பகுதிகளில் சமைக்கப்பட்ட உணவு வகைகளின் உணவுக் குறிப்புகளைத் தான் இயற்றிய   சூப சாஸ்திரம் (Soopa Shastra) என்ற செய்யுள் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் ஒரு உணவுக் குறிப்பு நீராவியில் வேகவைத்துச் சமைப்பதைப் பற்றி  விவரிக்கிறது. இம்முறையில் இந்த மாவை நீராவியில் வேகவைப்பதற்காக ஒரு மெல்லிய துணியால் சுற்றிக் கட்டிச் சமைத்துள்ளார்கள். இதே மாவை ஒரு நாணற் கூடை அல்லது கொடிக் கூடையில் (wicker baskets) இட்டு வாயகன்ற பாத்திரத்தில் கொதிக்கும் நீரின் மீது வைத்து வேக வைத்துள்ளதாக இந்தக் குறிப்பு விவரிக்கிறது.

கி பி 1250 ஆம் ஆண்டிற்குப் பின்புதான், தற்காலத்தில் நாம்  நீராவியில் வேகவைத்துச் சமைப்பது போன்ற சமையல் நடைமுறைக்கு வந்திருக்கலாம் என்று கே.டி.ஆசயா கருதுகிறார்.  இதனைத் தொடர்ந்து இடியப்பம், பிட்டு, கொழுக்கட்டை  போன்ற சிற்றுண்டிகள் நீராவியில் வேகவைத்துச் சமைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்புநூற்பட்டி

  1. கருவூலம் யுவான் சுவாங் தினமணி சிறுவர் மலர் அக்டோபர் 1, 2017
  2. நம்ம மண்ணு நம்ம உளுந்து தினகரன் 20.01.2001 http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=260
  3. A Historical Dictionary of Indian food (Oxford University Press, 1998)
  4. Idli Wikipedia

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in உணவு, குழந்தைகள், சிறுவர் கதைகள், வரலாறு and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to இட்லியின் கதை: குழந்தைகளுக்குச் சின்னச் சின்ன வரலாறு

  1. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஐயா
    இட்லி நம் நாட்டு உணவு என்றே இதுநாள் வரை நினைத்திருந்தேன்

    Like

  2. ஸ்ரீராம் சொல்கிறார்:

    சுவையான குறிப்புகள். சுவாரஸ்யமான ஆராய்ச்சி. இப்போதுதான் வெங்கட் பதிவில் வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத உணவு இட்லி என்று வடநாட்டவரும் அதைப் பயன்படுத்துகின்றனர் என்று படித்து வந்தேன்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.