தேவயானியின் தோழி சர்மிஷ்டை. இருவரும் சேடிகள் புடைசூழ நீராடச் செல்கிறார்கள். ஒருவர் உடையை ஒருவர் மாற்றி அணிந்து கொண்டதால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். சண்டை முற்றியதால், தேவயானியை சர்மிஷ்டை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டாள். அங்கு வேட்டைக்கு வந்த யயாதி மன்னன் தேவயானியைக் காப்பாற்றினான். பின்னாளில் யயாதி தேவயானியைத் திருமணம் செய்து கொண்டான். சர்மிஷ்டை தன் சேடிகள் புடைசூழ யயாதியின் நாட்டிற்குச் சென்று தேவயானிக்குச் சேவை செய்து வந்தாள். யயாதி – தேவயானி இணைக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. யயாதி சர்மிஷ்டையையும் இரகசியமாகத் திருமணம் செய்துகொண்டான். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.. தேவயானி இவர்களுடைய இரகசியத் திருமணம் பற்றித் தெரிந்து மிகவும் கோபம் அடைந்தாள். தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டாள். சுக்கிராச்சாரியாரும் யயாதி தன் இளமையை இழந்து தொண்டுக் கிழவனாக ஆகும்படி சாபமிட்டார் யயாதியின் வேண்டுகோளை ஏற்று, சுக்கிராச்சாரியார் தான் இட்ட சாபத்திற்குப் பரிகாரமும் சொன்னார். யயாதி தான் இழந்த வாலிபத்தை மீண்டும் பெற்றாரா? இழந்த அரச பதவியும், இல்லற சுகமும் யாதியை எப்படி மாற்றின. இந்தக் கதையின் முடிவை அறிந்து கொள்ள இந்தப் பதிவை ஆழ்ந்து படியுங்கள். கருத்துக்களைப் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
பிரகஸ்பதியின் மகனான கசன், அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகளான தேவயானி ஒரு சத்திரியனையே திருமணம் செய்துகொள்வாள் என்று சபித்த கதையைச் சென்ற பதிவில் பார்த்தோம். தேவயானியின் நெருங்கிய தோழியின் பெயர் சர்மிஷ்டை ஆவாள். இவள் அசுரகுல மன்னன் விருசபர்வாவின் மகள் ஆவாள். இந்த அசுரகுல மன்னனுக்குச் சுக்கிராச்சாரியார் அரசகுருவாக விளங்கினார். தேவயானியும் சர்மிஷ்டையும் எப்போதும் ஒன்றாக சேர்ந்தே இருந்தனர்; எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்றனர். சர்மிஷ்டை செல்வச் செழிப்பில் வளர்ந்து வந்தாள். ஆனால் அசுரகுருவின் மகளான தேவயானியால் எளிய வாழ்க்கை மட்டுமே வாழ முடிந்தது.
ஒரு நாள் தேவயானியும் சர்மிஷ்டையும் ஆயிரம் சேடியர் துணைவர, ஆற்றில் குளிக்கச் சென்றனர். ஆற்றங்கரையில் தங்கள் உடைகளைக் களைந்து வைத்த பின்னர் ஆற்றில் இறங்கி குளித்தனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் நீரை வாரி அடித்தவாறு விளையாடினர். இன்னும் சில நீர் விளையாட்டுக்களையும் விளையாடினர். குளித்துக் களைத்தபின் கரைமேலிருந்த உடைகளை எடுத்து அணிந்துகொண்டனர். அப்போது சர்மிஷ்டை தற்செயலாகத் தேவயானியின் உடைகளை அணிந்து கொண்டாள். இதைப்பார்த்த தேவயானி ஆத்திரம் கொண்டாள். சர்மிஷ்டை பேராசையுடன் தேவயானியின் ஆடைகளை உடுத்திக்கொண்டதாகக் குற்றம் சாட்டினாள்.
“என் ஆடைகளை உடுத்திக் கொண்டாளே! சர்மிஷ்டைக்கு எவ்வளவு ஆணவம்? யாகத்தில் இடவேண்டிய பாயாச பாத்திரத்தை நாய் தூக்கிக்கொண்டு போனது போல அல்லவா இது இருக்கிறது. நாங்கள் அந்தண குலத்தவர்கள். என் தந்தை போன்ற ரிஷிகளின் தவ வலிமையால் மட்டுமே இந்த உலகம் நலமாக இருக்கிறது. மக்கள் நெறி தவறாமல் வாழ்வதற்காகவே ரிஷிகள் வேதங்களை வெளிப்படுத்தினார்கள்.” என்று கோபத்துடன் பேசினாள்.
சர்மிஷ்டை தேவயானியின் கோபத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக “தேவயானியே! உன் தந்தை என்னுடைய தந்தையாகிய அசுரகுல மன்னனிடம் ஊழியம் செய்பவர் தானே,” என்று கிண்டல் செய்தாள்.
இதற்குத் தேவயானியும் ஆத்திரத்துடன் பதிலடி கொடுத்தாள். “நான் ஒரு அரச குருவின் மகள். ஆனால் உன் தந்தையோ அசுர குலத்து அரசன். ஒரு அசுரகுல அரசன், அசுரகுருவைக் காட்டிலும் சமூகரீதியாக எல்லா விதத்திலும் மதிப்புக் குறைவானவர்தானே.” வாய் வார்த்தை கைகலப்பில் முடிந்தது. ஆத்திரம் அடைந்த சர்மிஷ்டை தேவயானி அணிந்திருந்த அரசகுமாரியின் உடைகளைப் பலவந்தமாகக் களைந்தாள்..அவளை நிர்வாணமாக்கியது மட்டுமின்றி ஒரு பாழும் கிணற்றில் பிடித்துத் தள்ளிவிட்டாள்.
“கிணற்று நீரிலேயே கிடந்து விரைத்துப் போ” என்று சொல்லியபடி தேவயானியைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் தன் ஆயிரம் சேடியர்களுடன் அரண்மனைக்குச் சென்றுவிட்டாள். தேவயானி, “யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்..” என்று கிணற்றுக்குள் இருந்தவாறு குரல் கொடுத்தாள். நேரம் செல்லச் செல்ல சூரிய வெளிச்சம் குறைந்து இருட்டத் தொடங்கியது.
OOO OOO OOO
சந்திர குல மன்னன் யயாதி குரு நாட்டை ஆண்டு வந்தான். இந்தக் குரு நாடு வேதகாலத்து இந்தியாவில் இடம்பெற்று இருந்த ஜனபத (ஆரிய) நாடுகளில் ஒன்றாகும். இதை நிறுவிய குரு மன்னரின பெயரால் குரு தேசம் அல்லது குரு நாடு என்று அழைக்கப்பட்டது. ஹஸ்தினாபுரம் இவனுடைய தலைநகராகும். நகுசன் இவனுடைய தந்தை ஆவான். நகுசன் நூறு அஸ்வமேத வேள்விகளைச் செய்தவன் ஆவான். இதனால் தேவலோகத்தில் இந்திரப் பதவியையும் பெற்றவன் ஆவான்.

Yayathi Wikipedia
யயாதி மன்னன் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அப்போது தாகத்திற்குத் தண்ணீர் குடிப்பதற்காகத் தேவயானி விழுந்து கிடந்த கிணற்றுக்கு அருகே வந்தான். கிணற்றுக்குள் இருந்து வந்த அபயக்குரல் வருவது கேட்டு அங்கு சென்று பார்த்தான். கிணற்றில் மார்பளவு நீரில் நனைந்தவாறு தேவயானி நிர்வாணமாக நின்றதைப் பார்த்தான். தன் அங்கவஸ்த்திரத்தைக் கொடுத்து அணிந்துகொள்ளச் செய்தான். பிறகு சிறிதும் யோசிக்காமல் அவளைக் கைதூக்கி விட்டுக் காப்பாற்றினான்.
“நான் குருநாட்டு மன்னன் யயாதி” என்று அவளிடம் அறிமுகப்படுத்திக்கொண்டான்.
“குரு நாட்டு மன்னரே, என் பெயர் தேவயானி. நான் அசுரகுரு சுக்கிராச்சரியாரின் மகள். இந்தப் பாழுங் கிணற்றில் விழுந்து கிடந்தேன், நீங்கள் வந்து என்னைத் தொட்டு கையைப்பற்றித் தூக்கிவிட்டு என் உயிரையும் மானத்தையும் காப்பற்றி விட்டீர்கள்.” என்று தேவயாணி நன்றியுடன் சொல்லி வணங்கினாள்.
தொடர்ந்து “நீங்கள் என்னுடைய கையைப் பிடித்த காரணத்தால் நான் வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள இயலாது” என்றும் தேவயானி கூறினாள். அவள் சொல்வதைக் கேட்ட யயாதிக்கு வியப்பு ஏற்பட்டது.
தேவயானி தொடர்ந்து பேசினாள், “அரசரே! தங்கள் உதவி கிடைத்து நான் உயிர் பிழைத்தது நான் செய்த பெரும் புண்ணியம் அல்லவா! இது கடவுளின் விருப்பம் போலும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்று வியப்பாகப் பார்க்கிறீர்கள். காரணம் இருக்கறது. ஆமாம் நான் ஒரு ரிஷியின் மகள். அந்தணர் குலத்தில் பிறந்தவள். பிரகஸ்பதியின் குமாரனான கசன் எனக்கு ஒரு சமயம் சாபம் இட்டார். இந்தச் சாபம் என்னவென்றால் நான் அந்தண குலத்தில் பிறந்த எந்த ஆண்மகனையும் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது. நான் ஒரு சத்திரியனைத்தான் திருமணம் செய்து கொள்ள முடியும் .” தேவயானியின் முகத்தில் ஒரு விதமான பதற்றமும் பதைபதைப்பும் தென்பட்டது. பேசி முடித்தபின் யாதியை வணங்கி நின்றாள்.
ரிஷி புத்திரியான தேவயானியை ஒரு சத்திரிய குலத்தில் பிறந்த அரசன் திருமணம் செய்து கொள்வது என்பது நடைமுறையில் இல்லாத வழக்கம். இருப்பினும், யயாதி – தேவயானி திருமணம் கடவுள் அருளால் நடக்க வேண்டிய ஒன்றுதானோ என்னவோ என்றும் யயாதிக்குத் தோன்றியது. தேவயானியின் கொள்ளை அழகில் அவன் மனதைப் பறிகொடுத்தான். அவளைத் திருமணம் செய்துகொள்வதற்குச் சம்மதம் தெரிவித்த பின்பு, யயாதி அங்கிருந்து ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பினான்.
OOO OOO OOO
தேவயானி நடந்ததை நினைத்து, ஆத்திரமும் வியப்பும் கலந்த மன நிலையில், கலங்கி அழுதவாறு ஆசிரமம் திரும்பினாள். அவள் தந்தை அவளைப் பார்த்து பதைபதைத்தார். “என்ன நடந்தது?” என்று வற்புறுத்திக் கேட்டார். தேவயானியும் தன் தந்தையிடம் நடந்தது அனைத்தையும் விவரமாக எடுத்துச் சொன்னாள். சர்மிஷ்டியால் தனக்கு நேர்ந்த அவமானத்தை மிகுந்த கோபத்துடன் சொன்னாள். இது கேட்டு சுக்கிராச்சாரியார் மனம் வெதும்பினார். பிறரை அண்டி வாழ்வது மோசமான அனுபவம் என்று நினைத்து வருந்தினார். இதற்குப் பதிலாக வயலில் சிதறிக் கிடக்கும் தானியத்தைக் கொத்தித் தின்னும் புறாவையைப் போல வாழ்க்கை நடத்திவதே மேல் என்றும் நினைத்து நொந்து போனார். அசுரமன்னன் அமைத்துக் கொடுத்த ஆசிரமத்தையும் நாட்டையும் விட்டு வெளியேறிப் போய்விடுவது மேல் என்றும் கனத்த மனதுடன் முடிவெடுத்தார்.
அசுர மன்னன் விருஷபர்வா தன்னுடைய அரச குருவின் முடிவு கேட்டு அதிர்ந்தான். அசுரகுரு தங்களுடைய நாட்டைவிட்டுச் செல்வது அசுரகுலத்திற்கே நல்லதல்ல என்று உணர்ந்துகொண்டான். எனவே தன் அரச்குருவைச் சமாதானப்படுத்துவதற்காக அவருடைய ஆசிரமத்திற்குச் சென்றான். அவர் காலடியில் விழுந்து வணங்கிப் பணிந்தான். அசுரகுரு தன் கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி மன்றாடினான்.
“விருஷபர்வ மன்னனே! நான் என் மகளின் முடிவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். சர்மிஷ்டையின் நடவடிக்கையால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் என் மகளைச் சமாதானப்படுத்த என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன். என்னுடைய சமாதானத்தை ஏற்று என் மகள் தேவயானி இந்த ஆஸ்ரமத்தில் தங்குவதற்குச் சம்மதிப்பாளா என்று தெரியவில்லை! அவள் முழுமனதுடன் இதற்குச் சம்மதித்தால் மட்டுமே நான் இந்த ஆஸ்ரமத்தில் தொடர்ந்து தங்கமுடியும்.” என்று அசுரகுரு பதில் சொன்னார். மன்னனும் வேறு வழியின்றித் தன் மாளிகைக்குத் திரும்பினான்.
அசுரகுருவும் தேவயானியிடம் சமாதானம் பேசினார். ஆனால், தேவயானியோ, இந்தச் சமாதானத்தை ஏற்பதற்காக, அசுரகுருவிடம் பெரிய நிபந்தனை ஒன்றை விதித்தாள். அந்த நிபந்தனை என்ன தெரியுமா? “அசுரகுரு விருஷபர்வ மன்னனுக்கு ஆதரவாக இந்த நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்றால், நான் யயாதி மன்னனை மணந்து கொண்டு குரு நாட்டிற்குச் செல்லும்போது சர்மிஷ்டா தன்னுடைய ஆயிரம் பணிப்பெண்களையும் அழைத்துக்கொண்டு குரு நாட்டிற்குச் சென்று தேவயானிக்குச் சேவை செய்து வரவேண்டும்.” என்பது அந்த நிபந்தனை ஆகும். தன் தந்தை விருஷபர்வ மன்னனின் இக்கட்டான நிலையை அறிந்துகொண்ட சர்மிஷ்டை தேவயானியின் நிபந்தனையை ஏற்று குரு நாட்டிற்குச் சென்றாள்.
OOO OOO OOO
ஆண்டுகள் பல கடந்து சென்றன. தேவயானி யயாதி இணைக்கு யது, துர்வசு என்ற பெயர்களுடன் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. தேவயானிக்குப் பணிவிடை செய்துவந்த சர்மிஷ்டையும் யயாதியின் பால் மனதைப் பறிகொடுத்தாள். யயாதியைத் திருமணம் செய்து கொண்டு அவன் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பினாள். சர்மிஷ்டை சத்திரிய குலப்பெண் என்பதால் யயாதி அவளைத் திருமணம் செய்துகொள்வது தர்மத்திற்கு ஏற்றதுதான் என்று முடிவெடுத்தான். அவளை இரகசியமாகத் திருமணமும் செய்து கொண்டான். சர்மிஷ்டை யயாதி இணைக்கு த்ருஹ்யு, அனு, புரு என்று மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன.
சர்மிஷ்டை யயாதி ஆகிய இரண்டு பேருடைய இரகசியத் திருமணத்தை அறிந்த தேவயானி மிகுந்த கோபம் கொண்டாள். சர்மிஷ்டை தன் கணவனை மயக்கி, முறையற்ற திருமணம் செய்து கொண்டது அநியாயம் என்று நினைத்து ஆத்திரம் அடைந்தாள். யயாதி பலமுறை சமாதானப்படுத்தினான். இதில் சமாதானமாகாமல் சுக்கிராச்சாரியாரிடம் சென்றாள். நடந்ததை நடந்தபடியே தன் தந்தையிடம் சொல்லி மனம் வெதும்பி அழுதாள்.
அசுரகுரு சுக்கிராசாரியாரும் இந்த இரகசியத் திருமணம் பற்றிக் கேட்டு ஆத்திரம் அடைந்தார். யயாதியைப் பார்த்து, :”காமுகனாகிய யயாதியே! நீ பெண் மோகம் கொண்டு என் மகளுக்குத் துரோகம் செய்துவிட்டாய் அல்லவா! இதற்கான தண்டனையை நீ அனுபவிக்கவேண்டும். நீ இப்போதே உன் இளமைப் பருவத்தை இழந்து தொண்டுக் கிழவனாக மாறவேண்டும் என்று சபிக்கிறேன்” என்று சாபமிட்டார்.
யயாதி மன்னன் தனக்கு இட்ட சாபத்தைக் கேட்டு அதிர்ச்சியுற்றான். “அசுரகுருவே தொண்டுக் கிழவனாக இருந்து கொண்டு நான் எப்படி அரசாங்கம் நடத்த இயலும்? எதைச் சாதிக்க முடியும்? தங்கள் மகள் தேவயானி கூட இதை விரும்பமாட்டாள் அல்லவா?” என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார்.
இது கேட்டு மனமுருகிய அசுரகுரு, “யயாதியே! நீ உன் கிழப்பருவத்தை விட்டு வாலிபப் பருவம் அடைவதற்கு ஒரு வழி உள்ளது. யாராவது ஒருவர் உன்னுடைய கிழப்பருவத்தைத் தான் ஏற்றுக்கொண்டு, தன்னுடைய இளமைப் பருவத்தை உனக்குக் கொடுப்பதாக இருந்தால், நீ மீண்டும் உன்னுடைய பழைய இளமைப் பருவத்தை அடைவாய்” என்று மாற்றுவழி சொன்னார்.
அசுரகுருவின் சாபத்தால் தொண்டுக் கிழவனாக மாறிய யயாதி, தன் இரு மனைவிகளுடனும், ஐந்து மகன்களுடனும் வாழ்ந்துவந்தான். ஆண்டுகள் பல சென்றன. யயாதியின் மகன்கள் ஐவரும் வாலிப வயதை அடைந்தனர்.
யயாதி தன் மூத்த மகன் யதுவிடம் தன்னுடைய முதுமையை ஏற்றுக்கொண்டு அவனுடைய முதுமையைத் தனக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டான். யது தன் தந்தையிடம் “தந்தையே! காலம் கடந்து வரும் கிழப்பருவத்தை நான் ஏன் இப்போதே ஏற்க வேண்டும்? புலன் இன்பங்களை அனுபவிக்கும் முன்னரே நான் ஏன் தொண்டுக் கிழவனாக மாற வேண்டும்? என்று கேட்டான்.
இதே போல தேவயானியின் மற்றொரு மகன் துர்வசுவிடம் யயாதி அதே கோரிக்கையினை வைத்தான் தன் அண்ணன் யதுவைப்போலவே துர்வசுவும் மறுத்துவிட்டான்.
தன் மனைவி சர்மிஷ்டையின் இரண்டு மூத்த மகன்களான த்ருஹ்யுவும், அனுவும் தொண்டுக் கிழப்பருவத்தை ஏற்க உறுதியுடன் மறுத்து விட்டார்கள். என்றாலும் சர்மிஷ்டையின் கடைசி மகன் புரு தன் தந்தையின் தொண்டுக் கிழப் பருவத்தை ஏற்றுக் கொண்டு தன் இளமைப் பருவத்தைத் தன் தந்தைக்குத் தருவதற்கு முன் வந்தான்.
OOO OOO OOO
புருவிடம் இளமைப் பருவத்தையும் உடல் வலிமையையும் திரும்பப் பெற்ற யயாதி உத்வேகம் அடைந்தான். பல அரசர்களைப் போரில் வென்று ஏழு தீவுகள் கொண்ட தன் அரசாங்கத்தை திறம்பட நிர்வாகம் செய்து நல்லாட்சி நடத்தினான். விஷ்ணுவை வேண்டிப் பல வேள்விகளை நடத்தினான். தேவயானியுடனும் சர்மிஷ்டையுடனும் மனம் ஒருமித்து வாழ்ந்தான். அரச போக வாழ்க்கை வாழ்ந்த யயாதியின் ஆயுளின் கணிசமான பகுதி கழிந்துவிட்டது.
பல ஆண்டுகள் கடந்தாலும் யயாதி தான் வேண்டி விரும்பி பெற்ற இளமையிலும், ஆசைப்பட்ட அரச வாழ்க்கையிலும், இல்லறத்திலும் நிறைவு அடையவில்லை. மனிதனுக்கு ஆசைகள் ஒருபோதும் அடங்குவதே இல்லை. ஆசையை அடக்க வைராக்கியம் வேண்டும். வாழ்க்கையின் எல்லா சுகங்களை அனுபவித்து விட்டேன். இனி நிதானம் பெற வேண்டும், பற்றை அறவே ஒழித்துவிட்டு சம நோக்குடைய நிலையை அடைய வேண்டும்.
தன்னுடைய இளமையைத் தன் மகன் புருவிற்குத் தந்துவிட்டு அவனிடம் இருந்த கிழப்பருவத்தை ஏற்றுக் கானகம் சென்று தவமியற்ற முடிவெடுத்தான். புருவிற்கு முடி சூட்டி ஹஸ்தினாபுரத்தின் பேரரசனாக அறிவித்தான். மற்ற மகன்களுக்கும் தன் அரசினைப் பங்கிட்டு அளித்தான்.
இளமை பொய்! இந்த உலகத்தில் அனுபவிக்கும் இன்பங்கள் பொய்! இந்த இளமையும் உலக இன்பங்களும் நிலைத்து நிற்காது. தவ வாழ்க்கையும் ஆத்மஞானமும் பெற்றுவிட்டால் இறைவனடி சேர்ந்துவிடலாம் என்று முடிவெடுத்து அதன்படியே வாழ்ந்து பரமகதி சேர்ந்தான்.

Yayaati Reaching Heaven, PC: Wikipedia
தேவயானியின் மகனாகிய யதுவின் மூலம் யாதவக் குலம் தோன்றியது. கம்சன், பலராமன், ஸ்ரீ கிருஷ்ணன், சிசுபாலன், ஜராசந்தன், குந்தி, கிருதவர்மன், சாத்தியகி, உத்தவர் ஆகியோர் யது குலத்தில் தோன்றினர். சர்மிஷ்டையின் மகன் புருவின் மூலம் சந்திர குலம் தோன்றியது. சந்திர குலத்தில் கௌரவர்களும், பாண்டவர்களும் தோன்றினர்.
குறிப்புநூற்பட்டி
- மகாபாரதம் – 3 http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=6677&cat=3
- யயாதி விக்கிபீடியா
- யயாதி மன்னன் http://yalarivanjackson.blogspot.com/2014/11/blog-post_50.html
- யயாதி வரலாறு! | ஆதிபர்வம் – பகுதி 75 https://mahabharatham.arasan.info/2013/04/Mahabharatha-Adiparva-Section75.html
அறிந்த கதை என்றாலும் சுவாரஸ்யம். ஏகப்பட்ட படிப்பினைகளை இதன் மூலம் பெறமுடியும்.
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா…
LikeLike
நன்றி ஐயா
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா…
LikeLike
அற்ப்புபுதம் ஐயா. மகாபாரதத்தை எளிமையான முறையில் கூறி இன்றைய இளைய தலைமுறையினற்க்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது என்னுடைய நெடுனாள் கனவு. அதை நீங்கள் நிறைவேற்ற்றுறுகிறீர்கள்
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா…
LikeLike
கதையை அறிவேன். இருப்பினும் இப்பதிவு மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். இக்காலகட்டத்திற்கு, வளரும் தலைமுறையினருக்கு இதுபோன்ற பதிவுகள் அவசியம் தேவை.
LikeLike
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா…
LikeLike
அருமையான மற்றும் அனைவரும் படித்து அறிந்துகொள்ள வேண்டிய பதிவு இது.
நன்றிகள் பல ஐயா…..
LikeLike