சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி சாகச விளையாட்டு மற்றும் இயற்கை முகாம்: கர்நாடகாவில் காவிரிக்கரை சுற்றுலா

காவிரியை அதன் கரையோரமாகவே சென்று முழுவதும் பார்த்துவிட வேண்டும் என்ற அவாவில் உந்தப்பட்டு, தி ஜானகிராமன், சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) ஆகிய இரண்டு எழுத்தாளர்கள் தலைக்காவிரி நோக்கிக் காரில் பயணம் மேற்கொண்டனர். இவர்களுடைய பயண அனுபவங்களைக் கட்டுரை நூலாகத் தொகுத்து “நடந்தாய்; வாழி, காவேரி!” என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை வாசித்த பின்னர் எப்படியாவது இந்த சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சியைப் பார்த்துவிடவேண்டும் என்ற வேட்கையில் ஒருநாள் பயணமாகச் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி காவிரி வனவிலங்கு சரணாலயம் மற்றும் மீன்பிடி முகாம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தோம். இந்தப் பயணம் பற்றிய பதிவு இதுவாகும்.

சலிப்பும் குழப்பமும் நிறைந்த நகரத்து வாழ்க்கை நடைமுறைகளிலிருந்து விலகி, வார இறுதி நாட்களில் ஒரு நாள் சுற்றுலா சென்றுவர பெங்களூரு நகருக்கு அருகில் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. வொண்டர்லா பொழுதுபோக்குப் பூங்கா (Wonderla Amusement Park Bangalore) (34.2 கி.மீ), இன்னோவேடிவ் திரைப்பட நகரம் பிட்டி (The Innovative Film City, Bengaluru) (39.7 கி.மீ), நந்தி ஹில்ஸ் (Nandi Hills) (61.2 கி.மீ), சன்னப்பட்டனா (Channapattana) (66.7 கி.மீ), அந்தர்கங்கே (கோலார்) (Anthargange (Kolar) (67.5 கி.மீ), சிவகங்கே சிகரம் (Shivagange Betta (Shivaganga Hills) (52.3 கி.மீ), பீமேஸ்வரி (Bheemeshwari) (100 கி.மீ), மதுகிரி ஹில் ஆஃப் ஹனி (Madhugiri – Hill of Honey) (104.9 கி.மீ), ஸ்ரீ நிமிஷாம்பா கோவில் (Sri Nimishamba Temple) (130.7 கி.மீ), ஸ்ரீரங்கப்பட்டினா (Srirangapatna) (130.2 கி.மீ), தலக்காடு Talakadu) (134 கி.மீ), சிவசமுத்திரம் (ககனசுக்கி – பராசுக்கி நீர்வீழ்ச்சிகள்) (Sivasamudra Gaganachuki – Barachuki Falls) (136.3 கி.மீ.), டி. நரசிபுரா (T Narasipura) (141.7 கி.மீ), ஷ்ரவனபெலகோலா (Shravanabelagola) (143 கி.மீ), மேல்கோட்டே (Melkote) (148 கி.மீ), மைசூரு (Mysore) (150 கி.மீ) ஆகிய சுற்றுலாத் தலங்கள் ஒரு நாள் சுற்றுலா சென்று வருவதற்கு ஏற்றவை ஆகும்.

இந்த வாய்ப்பு நண்பர் வீட்டுத் திருமணத்திற்காகப் பெங்களூரு சென்றபோது, யதேச்சையாகத் திட்டமிடப்பட்டது. நான் உட்பட மூன்று நண்பர்கள், ஒரு ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6:30 மணிக்கு இப்பயணத்தை மேற்கொண்டோம்.

சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சிக்குச் செல்வதற்கு இரண்டு வழித்தடங்கள் உள்ளதாகச் சொன்னார்கள். பிட்டி, ராமநகரா, சன்னப்பட்டனா, மட்டுறு, மலவல்லி வழியாகச் செல்லும் மைசூர் துரித சாலை (Mysore Expressway) வழியாகச் செல்வது ஒரு வழித்தடம். கனகபுரா, மலவல்லி வழியாகச் செல்வது மற்றொரு வழித்தடம். மைசூர் துரித சாலை வழியாகச் சென்றால் 10 – 15 கி.மீ. அதிகம் சுற்ற வேண்டும். மைசூர் சாலையின் நல்ல நிலை, வழியில் நின்று சாப்பிடுவதற்கு வசதியாகச் சிறு தாபா உணவகங்கள் போன்ற காரணங்களுக்காக முதல் மார்க்கத்தையே தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள்.

எங்கள் கார் Nandi Infrastructure Corridor Enterprises (NICE) என்னும் BMIC சாலை வழியாகச் சென்று NH 209 தேசிய நெடுஞ்சாலையைத் தொட்டது. பெங்களூருவில் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் பலத்த மழை பெய்யும். அன்று மழை இல்லை. போகும் வழியில் பல இடங்களில் வானம் தெளிவாக இருந்தது. சில பகுதிகளில் சிறு தூறலுடன், ஜில்லென்று குளிர் காற்று வீசியது. இயற்கைக் காட்சிகளை இரசித்தவாறு மெதுவாகப் பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் மலவல்லி என்ற இடத்தில் இருந்த சாலையோரக் கடையில் மசால் தோசையையும் உத்தின வடாவையும் விழுங்கி வைத்தோம். ஒருவழியாக காலை 10:30 மணிக்கு சிவசமுத்திரம் வந்து சேர்ந்தோம்.

அமைவிடம்

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மலவல்லி வட்டத்தில் சிவசமுத்திரம் கிராமம் (பின் கோடு 571440) என்னும் ஊர் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 12.294°N அட்சரேகை 77.168°E தீர்க்கரேகை ஆகும். இவ்வூர் கடல் மட்டத்திலிருந்து 736 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் மக்கள் தொகை 12503 (ஆண்கள் 6518; பெண்கள் 5,985; மொத்த வீடுகள் 2638) ஆகும். ஊரின் பரப்பளவு 8135 ஹெக்டேர் ஆகும்.

சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி 

சிவசமுத்திரம் (Shivanasamudra (ಶಿವನಸಮುದ್ರ) அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு தீவு. சிவசமுத்திரம்  என்னும் சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சி ஆகும். உலகின் பதினாறாவது பெரிய நீர்வீழ்ச்சியும் இதுவே. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, விழும் இடத்தில் இரண்டாகப் பிரிந்து ககனசுக்கி (Gaganachukki), பரசுக்கி (Bharachukki) என இரண்டு அருவிகளாகப் பிரிந்து விழுகின்றன. இந்த இரண்டு அருவிகளும் இருநூறு அடி ஆழத்தில் பாய்ந்து மீண்டும் ஒன்று சேர்கின்றன.

ககனசுக்கி மாண்டியா மாவட்டம் (Mandya district), மலவல்லி வட்டத்தில் (Malavalli taluk) அமைந்துள்ளது. பரசுக்கி சாம்ராஜ்நகர் மாவட்டம் (Chamarajanagar district), கொள்ளேகல் வட்டத்தில் (Kollegal taluk) அமைந்துள்ளது. அதாவது ககனசுக்கிக்குத் தென்கிழக்குத் திசையில் பரசுக்கி அமைந்துள்ளது. இந்த இரண்டு நீர்வீழ்சிகளும் 5 அல்லது 10 கி.மீ. தொலைவு இடைவெளியில் அமைந்துள்ளன. ஆசியாவின் முதல் நீர்-மின்நிலையம் (Hydro-electric Power station) சிவசமுத்திரத்தில் 1902 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்றார்கள். வியப்பாயிருந்து!

பெங்களூருவிலிருந்து செல்லும்போது ககனசுக்கி (Gaganachukki) நீர்வீழ்ச்சியையே முதலில் பார்க்கலாம். ஊரை அடைவதற்கு முன்பு சாலை இரண்டாகப் பிரிகிறது. இடது பக்கம் பிரியும் சாலை பரசுக்கி நீர்வீழ்ச்சிக்குச் செல்கிறது. காவிரியின் மேற்குக் கரையில் பரசுக்கி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நேராகச் செல்லும் சாலை தலக்காடு செல்கிறது. சிவசமுத்திரம் அடர்ந்த காடு நிறைந்த தீவு. இந்தத் தீவை அடையக் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட குறுகிய கல்பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும். இந்தக் குறுகிய  கல்பாலத்தைக் காவிரிப் படுகையில் பாறைகளின் மீது நிற்கும் கல்தூண்களின் மீது அமைக்கப்பட்ட விட்டங்கள் தாங்கி நிற்கின்றன. இதில் ஒரு சிறு கார்கூட எளிதாகச் சென்றுவர முடியாது. சீசன் சமயத்தில் இதனால் இங்கு கடும் டிராஃபிக் ஜாம் ஏற்படுவது சகஜம் தானே. இந்தப் பாலத்தை 1818 ஆம் ஆண்டு பழுது பார்த்துத் திருத்தி அமைத்துள்ளார்கள். அவ்வளவு பழமையானது. இந்தப் பாலத்தை ஒட்டி அருகிலேயே ஒரு ஓடைப் பாலம் காணப்பட்டது. கல்பாலத்தில் இப்போதும் போக்குவரத்து இருப்பது வியப்பாக இருந்தது.

தொடர்புடைய படம்

பாலத்தைக் கடந்து தீவுக்குள் நுழைந்தவுடன் சிவசமுத்திரம் கிராமம் அமைந்துள்ளதைக் காணலாம்.  பாலத்தைத் தாண்டியவுடன் பரசுக்கி நீர்வீழ்ச்சியை அடைவதற்கு அடர்ந்த காட்டின் வழியாக ஒரு குறுகிய சாலை செல்வதையும் காணலாம். பரசுக்கி செல்லும் சாலையில் சில கி.மீ. வரை காரில் செல்லலாம்.

பரசுக்கி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் ஆயிரம் ஆண்டு பழமையான ஹஸ்ரத் மார்டன் இ கைப் தர்கா (Dargah of Hazrath Mardan-e-Gaib) அமைந்துள்ளது. தர்காவிலிருந்து சில கி.மீ. தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்குச் சிறிது நேரத்தில் சென்றுவிடலாம். இந்தத் தர்க்காவின் காட்சிக் கோணத்திலிருந்து ககன்சுக்கி நீர்வீழ்ச்சியின் அற்புதமான காட்சியைக் காணலாம். ஆனால் தர்காவின் சுற்றுப்புறம் சுத்தமாக இல்லை என்பது சங்கடமாக இருந்தது.  இங்கு வரும் சுற்றுலாப் பயணியர் சிவசமுத்திரத்தின் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான குப்பைகளை வீசியெறிந்து குப்பை மேடாக மாற்றி வருகின்றனர்.

தர்காவிலிருந்து பரசுக்கி நீர்வீழ்ச்சி சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு வனத்துறையினர் ரூ. 30/- கட்டணம் வசூலித்தார்கள். பரசுக்கிப் பகுதியில் ஏராளமான கார் நிறுத்துமிடங்கள் உள்ளன. கழிவறை வசதியும் உண்டு. பாதுகாப்பு வசதிக்காக வனத்துறைக் காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பாறைப் பரப்பில் சற்றுத் தூரம் நடந்து சென்றால், செங்குத்தாகக் கீழே செல்லும் மலைப்பாதையைச் சென்றடையலாம். இங்கிருந்து கரடுமுரடான பாறைகள் வழியாக 100 படிகள் இறங்கிச் சென்றால் பரசுக்கி நீர்வீழ்ச்சியின் அருகே செல்லலாம்..

கீழே நதிப்படுகையைச் சென்றடைந்ததும் நிமிர்ந்து பார்த்தல் பராசுக்கி நீர்வீழ்ச்சி. இரண்டு படிகளாக ஆர்ப்பரித்துக் கொட்டுவதைக் காணலாம். இந்த நீர்வீழ்ச்சி கடினமான பாறைகளுக்கு இடையே குதித்து, வழிந்து நுரைகளுடன் குதிரையின் லாடம் போன்று அமைந்த பள்ளத்தில் ஹோவென்ற பெரும் ஒலியுடன் கொட்டிக் கொண்டிருக்கிறது. நீண்ட தூரத்திற்கு நீர்த் திவலைகள் தெரித்து வீழ்கிறது, அடர்த்தியான நீர்திவலைகள் மெல்லிய திரையாக உருவாகி பராசுக்கியை மறைத்து நின்றது போல தோன்றியது. நீர்வீழ்ச்சி இங்கிருந்து தொடர்ந்து சுமார் முப்பதடி ஆழத்தில் மிகுந்த வேகத்துடன் மற்றொரு அருவியாக வீழ்வது கண்கொள்ளாக் காட்சியாகும். பிறகு இரண்டு கிளைகளாகப் பிரிந்து சென்று, உயர்ந்த பாறைகளுக்கிடையே ஊடுருவி, வடக்குத் திசை நோக்கிப் பாய்ந்த பின்னர் சிவசமுத்திரத் தீவின் வடகிழக்குத் திசையில் ஒன்றாக இணைகிறது. இங்கிருந்து இந்த அற்புதமான காட்சியைக் காண்பது இனிமையான அனுபவம்.

இங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால்  அங்கே பொங்கி எழும் குளிர்ந்த ஆற்று நீரில் முங்கிக் குளிக்கலாம். பரிசல் (Coracle) என்னும் வட்டமான படகில் ஏறி படகு சவாரி போகலாம். ஆனால் எச்சரிக்கையை மதித்து இவை அனைத்தையும் செய்யவேண்டும். அருவிகளைச் சுற்றி ஓங்கி உயர்ந்த மலைச் சிகரங்கள், பச்சைப் பசேல் என்று மரம் செடி கொடிகள், செழித்து நுரைத்து ஓடும் வெள்ளம் எல்லாம் பிரம்மிப்பூட்டுகின்றன.

sivasamudram waterfall coracle க்கான பட முடிவு

பரசுக்கியை ஆசைதீரப் பார்த்து முடித்துவிட்டு தீவின் வடபுறம் அமைந்திருந்த ககனசுக்கியைப் பார்க்கச் சென்றோம். கார் நிறுத்துவதற்கு இங்கே ஏராளமாக இடம் இருந்தது. கார் நிறுத்திய இடத்திலிருந்து நீர்வீழ்ச்சி செல்ல நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. செல்லும் வழி அவ்வளவு சுத்தமாக இல்லை. வழியில் இருந்த சிறு கடைகளில் இறைச்சி வறுத்துக் கொண்டிருந்தார்கள். காவிரித் தென்றலில் இறைச்சி வாடை கலந்து வீசியது. சில பயணிகள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள்.

இந்தச் சிறிது தூரத்தையும் கடந்து சென்று ககன்சுக்கி நீர்வீழ்ச்சி அருகில் அவசியம் சென்று பார்க்க வேண்டும். இந்த இடத்தைச் ககன்சுக்கி நீர்வீழ்ச்சிக் கோணம் (Gaganchukki Viewpoint) என்று பெயரிட்டுள்ளார்கள். ககன்சுக்கி பரசுக்கியை விட மிகப்பெரிய நீர்வீழ்ச்சி எனலாம். சுமார் 300 அடி உயரத்திலிருந்து ஹோவென்ற காதைப் பிளக்கும் சப்தத்துடன் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ககன்சுக்கியும் இரண்டு கிளைகளாகப் பிரிந்து மீண்டும் இணைகிறது. இரண்டு கிளைகளுமே பாறைகளினூடே பொங்கி வழிந்தவாறு ஒரு பள்ளத்தில் வீழ்கின்றன. இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளால் தோன்றுகின்ற அடர்ந்த திவலைப் படலத்தை வெகுதொலைவிலிருந்தே  பார்த்து ரசிக்கலாம்.

நீர்வீழ்ச்சியின் அருகே செல்வதற்கு கரடு முரடானா பாறைகளைக் கடந்து போக வேண்டிஇருந்தது. அருவிக்குச் சென்றதும் இதெல்லாம் மறந்து போயிற்று. நாங்கள் சென்ற போது அருவி பெரும் சப்தத்துடன் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வீழ்ச்சியை அருகில் காணவேண்டும் என்ற ஆவலில், பயணிகள் பாறைகளின் சரிவுகளில் இறங்கிச் செல்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இது குறித்த எச்சரிக்கைப் பலகையும் இங்கே வைக்கப்பட்டுள்ளது.

நடந்தாய் வாழி காவேரி க்கான பட முடிவு

நன்றி

காவிரி வனவிலங்கு சரணாலயம், பீமேஸ்வரி மீன்பிடி முகாம், பீமேஸ்வரி

சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியின் அழகை அள்ளிப் பருகிய பின்னர் பிற்பகல் 2.00 மணி அளவில் மலவல்லி, ஹலகுரு வழியாக நாங்கள் பீமேஸ்வரி என்னும் சிறு நகரத்திற்குப் புறப்பட்டோம். மாலை சுமார் 03.30 மணியளவில் பீமேஸ்வரி சென்றடைந்தோம்

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், மலவல்லி வட்டம், பீமேஸ்வரி (பின் கோடு 571421) கிராமத்தில் ஒரு காவிரி வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம் மற்றும் பீமேஸ்வரி மீன்பிடி முகாம், மேகதாது நீர்வீழ்ச்சிக்கும் சிவசமுத்ரா நீர்வீழ்ச்சிக்கும் இடையில், காவிரி நதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் அட்சரேகை 12.170°N தீர்க்கரேகை 77.543°E ஆகும். கடல் மட்டத்திலிருந்து 125–1,514 மீ (410–4,967 அடி) உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியின் பரப்பளவு 1,027.53 சதுர கி.மீ. ஆகும்.

சொக்கவைக்கும் அழகு மிகுந்த இந்த வனவிலங்குச் சரணாலயம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதில் சிறிதும் வியப்பில்லை. இந்தப் பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றில் மகாசீர் என்ற அரியவகை மீன் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த மீன்பிடி முகாம் தூண்டிலில் மீன் பிடிப்பவர்களின் சுவர்க்க பூமியாக மாறி வருவது கண்கூடு. காவிரி ஆற்றைச் சுற்றி ஏராளமான மீன்பிடி முகாம்கள் பெருகி வருகின்றன. கட்டுமரங்களில் ஏறி மீன்பிடிக்கலாம். ஒரு நிபந்தனை பிடித்த மீனை மீண்டும் ஆற்றில் விட்டுவிட வேண்டும்.

இது போல நிறைய இயற்கை முகாம்களும் பெருகி வருகின்றன. பசுமைக் காடுகள் மற்றும் உயர்ந்த மலைச் சிகரங்கள் சூழ்ந்த இப்பகுதியை நோக்கிப் பயணம் செல்லும் வழியில் மான், கரடி, முதலை போன்ற வனவிலங்குகளைக் காண முடிகிறது. யானை முகாம்களும் உண்டு. நடைபயணம் செய்வதற்கு தொட்டம்கலி போன்ற இடங்கள் இங்கு ஏராளம்.

மாலை சுமார் 07.30 மணியளவில் பீமேஸ்வரியிலிருந்து புறப்பட்டு பெங்களூர் திரும்பினோம்.

குறிப்புநூற்பட்டி

 1. நடந்தாய்; வாழி,காவேரி! சிட்டி, தி. ஜானகிராமன். காலச்சுவடு பதிப்பகம். 2 ஆம் பதிப்பு, 2016. பக். 288. ரூ. 350.00.

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in சுற்றுலா and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, பீமேஸ்வரி சாகச விளையாட்டு மற்றும் இயற்கை முகாம்: கர்நாடகாவில் காவிரிக்கரை சுற்றுலா

 1. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

  சிவசமுத்திர நீர்வீழ்ச்சியைப் பார்த்தே ஆக வேண்டும் ஐயா
  நன்றி

  Like

 2. Dr B Jambulingam சொல்கிறார்:

  பல ஆண்டுகளாக நான் பார்க்க ஆசைப்படுகின்ற இடத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டீர்கள் உங்கள் பதிவு மூலமாக. நேரில் காணும் ஆவலை மேம்படுத்திய பதிவு.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.