இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதும் திறன் (Ambidextrous Writing Skills): அசத்தும் மத்தியப்பிரதேசத்துப் பள்ளி மாணவர்கள்.

நம்மில் பெரும்பாலோனோர் வலது கையைப் பயன்படுத்தி எழுதி வருகிறோம். இது மிகவும் பொதுவானது தானே. இதில் என்ன புதுமை இருக்கிறது? என்றுதானே கேட்க வருகிறீர்கள். உலகின் மொத்த மக்கள் தொகையில், 13 சதவீதம் பேர், இடது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது.  இவர்கள் இடது கையை மட்டும் பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். இடது கைப்பழக்கம் உள்ளவர்களுடைய மூளை விரைவாகச் செயல்படுமாம். இது சற்று வியப்பான செய்தி இல்லையா? ஐ.க்யூ லெவல் 140 க்கும் மேலே உள்ளவர்கள் எல்லோரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள்தான் என்று ஒரு ஆய்வு பதிவு செய்துள்ளது.  லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein), பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin), பில் கேட்ஸ் (Bill Gates), பில் கிளிண்டன் (Bill Clinton) முதல் பாரக் ஹுசேன் ஒபாமா (Barack Hussein Obama) வரை பலரும் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள்தான். அப்படியா! புள்ளி விபரம் சரிதான்.

1976 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிலும் ஆகஸ்டு மாதம் 13 தேதி சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல செய்திதான். எல்லாத் துறைகளிலும் சர்வதேச தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன. இதில் என்ன வியப்பு? நம்மில்  பெரும்பாலனவர்களுக்கு இது பற்றி ஓரளவுதெரியும் அல்லவா? அட கொஞ்சம் பொறுங்கள் சார்… இப்போது வழக்கத்துக்கு மாறுபட்ட வினோதமான குழந்தைகளைப் பற்றிச் சொல்லப்போகிறேன். கொஞ்சம் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் கட்டாயம் பதிவு செய்யுங்கள்.

உலகில் சில குழந்தைகள் வலது கை மற்றும் இடது கை ஆகிய இரு கைகளையும் பயன்படுத்தி ஒரே சமயத்தில் எழுதுகிறார்களாம். நம்பமுடியவில்லை தானே. ஆனால் உண்மை.

இந்தக் குழந்தைகள் இந்தியாவில் வசிக்கிறார்கள் என்பது மற்றொரு வியக்கவைக்கும் தகவல்.

ஆமாம் இந்தக் குழந்தைகள் இந்தியாவில் எங்குதான் இருக்கிறார்கள்?

மத்திய பிரதேச மாநிலம், சிங்க்ருளி மாவட்டம் (English: Singrauli District; Hindi: सिंगरौली डिस्ट्रिक्ट), விதான் வட்டம் (English: Waidhan Taluk; Hindi: विधान तहसील), புதேல (English: Budhela; Hindi: बुढला) (PIN Code; பின்கோடு 486886), (28° 38′ N அட்சரேகை 77° 4′ E தீர்கரேகை) என்னும் கிராமத்தில் உள்ள வீணாவாதினி பள்ளியில் (Veenavadini School; Hindi: वीणावादिनी स्कूल) பயிலும் மாணவ மாணவியர் அனைவரும் இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதுகிறார்கள் என்பது தான் வியப்பான செய்தி. இந்த ஊர் ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆகும். இவ்வூரின் மக்கள் தொகை 977 (ஆண்கள் 468; பெண்கள் 449; மொத்த வீடுகள் 213) இந்த கிராமத்து மக்களின் கல்வியறிவு 48.1% (பொது); இவ்வூரில் வாழும் பெண்களின் கல்வியறிவு 18.4% மட்டுமே.

கலப்புக் கைப்பழக்கம் (Mixed Handedness)

சில வேலைகளுக்கு ஒரு கையையும் வேறு சில வேலைகளுக்கு மற்றொரு கையையும் மாறி மாறி பயன்படுத்துவது சிலருடைய இயல்பாகும். இவர்களைக் கலப்புக் கைப்பழக்கம் (Mixed Handedness) அல்லது கலப்பு ஆதிக்கம் (Cross-Dominance) உடையவர்கள் என்று நடத்தையியலார்கள் (Behaviorists) குறிப்பிடுகிறார்கள். இவர்களுடைய இயங்கு தசைகளை இயக்கும் வெளிப்பாடு (பாங்கு) ஒரு வித ஒழுங்கில் அமைந்திருக்கும். இவர்கள் எழுதுவது வலது கை என்றாலும் பொருட்களை வாங்கவும் கொடுக்கவும் இடது கையையே பயன்படுத்துவர். ஃபில் மைக்கல்சன் (Phil Mickelson), மைக் வேர் (Mike Weir) (கோல்ஃப் விளையாட்டு), ஷான் மைக்கல்ஸ் (Shawn Michaels) (மல்யுத்தம்) ஆகியோர் கலப்புக் கைப்பழக்கம் உள்ளவர்கள்.

டாக்டர் இராஜேந்திர பிரசாத், லியனார்டோ டா வின்சி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பிரபலங்கள் இரு கைப்பழக்கம் (Ambidexterity) இருந்துள்ளது.

இருகைப்பழக்கம் (Ambidexterity)

கலப்புக் கைப்பழக்கத்தின் (Mixed Handedness) ஒரு வகை தான் இருகைப்பழக்கம் (Ambidexterity) ஆகும்.  வலது மற்றும் இடது கைகளை நல்லமுறையில் சமமாகப் பயன்படுத்தக்கூடிய திறனுக்கு  இரு கைப்பழக்கம் (English: Ambidexterity; Hindi: उभयहस्त-कौशल) என்று பெயர். இரு கை பழக்கமுடையோர் தனது இரு கைகளையும் சரிசமமாகப் பயன்படுத்துவர். Ambidexterity என்ற சொல் ஆங்கில மொழியில் 1593 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருக்கிறதாம்.

veena vadini school in budhela க்கான பட முடிவு

இந்தியாவில் செயல்படும் இருகைப்பழக்கமுடையை மாணவர்கள் பயிலும் பள்ளி (‘Ambidextrous’ Students School) வீணாவாதினி பள்ளி ஒன்றுதான்., திரு.பி.வீரங்கட் ஷர்மா (B. Virangat Sharma) இந்தப் பள்ளியின் ஆசிரியரும் முதல்வரும் ஆவார். இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரரும் கூட.  இப்பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள்.

சிறு வயது முதலே இவர்கள் அனைவருமே இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே சமயத்தில் எழுதுவதற்குப் பயற்சி பெற்று வருகிறார்கள். இந்தப் பயிற்சி, இப்பள்ளியில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாம். இன்று இந்த அரிய பயிற்சியில் முழுமை அடைந்துள்ளார்கள். இவர்களைப் பற்றிய வியப்பான மற்றொரு செய்தி என்னவென்றால் ஆங்கிலம், அரபிக், ரோமன், ஹிந்தி, சம்ஸ்கிருதம், உருது ஆகிய ஆறு மொழிகளிலும் இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே சமயத்தில் எழுதும் திறனைப் பெற்றுள்ளார்கள். ஒரு கையால் ஆங்கில மொழியையும் மற்றொரு கையால் ஹிந்தி மொழியையும் இவர்களால் ஒரே சமயத்தில் எழுத முடியுமாம். மூன்று மணி நேரம் எழுதக் கூடிய எழுத்துத் தேர்வை இவர்களால் ஒன்றரை மணி நேரத்திலேயே முடித்துவிட முடிகிறதாம்.

veena vadini school in budhela க்கான பட முடிவு

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர். இராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு இரு மொழிகளில் ஒரே சமயம் எழுதுவதற்கான இரு கைப்பழக்கம் (Ambidexterity) இருந்ததாம். வீணாவாதினி பள்ளியின் ஆசிரியரான திரு.ஷர்மா, டாக்டர். இராஜேந்திர பிரசாத்தின் இரு கைப்பழக்கத்தைப் பற்றி எங்கோ படித்திருக்கிறார். இந்தச் செய்தியால் ஈர்க்கப்பட்டு இவர் இந்த இருகைப் பழக்கத்தைக் கற்றுக் கொண்டாராம். இதனைக் குழந்தைகளுக்கும் கற்பிக்க முடிவெடுத்தாராம். இப்பள்ளியில் படிக்கும் எல்லாக் குழந்தைகளுமே இரு கைப்பழக்கத்தில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  உலகநாட்டின் தலைநகர்களை எல்லாம் நினைவில் வைத்துள்ளனர். இவர்களால் இரண்டு பாடங்களை (Subjects) இரண்டு மொழிகளில் (languages) ஒரே நேரத்தில் இரு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுத முடியும்.

புதிதாக ஒரு குழந்தை இப்பள்ளியில் சேர்கையில் இக்குழந்தை ஒரு கையால் மட்டுமே பேனா அல்லது பென்சிலைப் பிடித்து எழுதுகிறது. ஒரு மாதம் கழித்து இதே குழந்தை மற்றொரு கையைப் பயன்படுத்தி எழுதக் கற்றுக் கொள்கிறது. இதன் பிறகு இந்தக் குழந்தை இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதுவதற்கும் கற்றுக்கொள்கிறது. ஒரு வகுப்பு 0.45 நிமிடம் நடைபெற்றால், அதில் 0.15 நிமிடம் இரண்டு கைகளால் ஒரே நேரத்தில் எழுதுவதற்குப் பயிற்சி பெறுகிறார்கள்.

இடது மற்றும் வலது பக்க மூளையைப் பற்றிய வியக்க வைக்கும் குணாதிசயங்கள்

நமது மூளையை முன் மூளை (Forebrain), நடு மூளை (Midbrain) மற்றும் பின் மூளை (Hindbrain) மூன்று பகுதிகளாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை என்னும் பெருமூளை, மொத்த மூளையின் 85 சதவிகித இடத்தை அடைத்துக் கொண்டுள்ளது. இது தலாமஸ் (Thalamus) மற்றும் ஹைப்போ தலாமஸ் ஆகிய இரண்டு பகுதிகளால் ஆனது. நடு மூளை என்பது தண்டுவடத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. பின் மூளை என்பது நடு மூளையின் கீழே அமைந்துள்ள உறுப்புகள்.

முன் மூளை என்பது இரண்டு பெருமூளை அரைக்கோளங்கள் (Cerebral Hemisphere) ஆகும்.  மனிதனின் பெருமூளையை நடுப்பகுதியிலிருந்து இரண்டு சமசீரான பகுதிகளாகப் பகுத்தால், வலது மற்றும் இடது அரைக்கோளப் பகுதிகளைக் காண்பீர்கள். ஒவ்வொரு பெருமூளை அரைக்கோளமும் முன் மடல் (Frontal lobe), பின் மடல் (Occipital lobe), பக்க மடல் (Parietal lobe) மற்றும் பொட்டு மடல் (Parietal lobe) ஆகிய நான்கு சுளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அரைக்கோளப் பகுதிகளை நடுமூளையில் உள்ள ஒரு நரம்புப் பட்டை (Corpus Collosum) இணைக்கிறது.

வலது மற்றும் இடது அரைக்கோளங்கள் பார்ப்பதற்குச் சமமானதாகவே தோன்றும். ஆனால் இவை இரண்டும் ஒரே மாதிரியானவை அல்ல. இவை இரண்டும் வேறு வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளுகின்றன.

நம் இடதுபக்க மூளை நம்முடைய ஐம்புலன்களோடு மிகவும் தொடர்புடையது. நாம் விழிதிருக்கும்போதோ அல்லது உணர்வோடு இருக்கும்போதோ ஐம்புலன்கள் வழியே வரும் செய்திகளைத் தொகுத்து, பகுத்து ஆய்கையில் ஏற்படும் அனுபவங்கள், மற்றும் முடிவுகளை அப்படியே வலது பக்க மூளைக்கு அனுப்பி விடுகிறது.

இதுமட்டுமின்றி இடப்பக்க மூளை, அறிவியல், கணிதம் போன்ற பாடங்களைத் தர்க்க ரீதியாகப் புரிந்துகொள்வதற்கான பணிகளையும் செய்கிறது. மொழித்திறன் (Language Skills), பகுப்பாய்வு சிந்தனை (Analytical Thinking), எண் திறன் (Numerical Ability), பக்கவாட்டுச் சிந்தனை (Lateral Thinking) ஆகிய பண்புகள் இந்த இடது பக்க மூளையின் செயலாக்கதால் மட்டுமே சாத்தியமாகிறது. இடது மூளைக்கு எப்பொதுமே திட்டமிட்டு செயலாற்றும் திறன் உள்ளது.

இது போல நம் வலது பக்க மூளைதான் நம் உடம்பின் இடது பக்கச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. படைப்பாற்றல் (Creativity) மற்றும் கலை தொடர்புடைய பணிகளை வலப்பக்க மூளை செய்கிறது. வெளிப்படுத்தும் திறன் (Expression), உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence), கற்பனை (Imagination) ஆகிய பண்புகள் நம் வலது பக்க மூளையின் செயலாக்கதால் மட்டுமே சாத்தியமாகிறது. வலது மூளைக்குத் அவ்வளவாகத் திட்டமிட்டுச் செயல்படாது. கலை ஆர்வலர்கள் எப்போதும் திட்டமிடுவதில்லை. ஆனால் இவர்கள் தங்கள் கலைப்பணிகளில் ஈடுபட்டால், தங்கள் முழுக்கவனத்தையும் செலுத்தி அப்பணியைச் செய்து முடிக்கும்  படைப்பற்றல் பெற்றவர்கள்.

மனிதனின் வலது மற்றும் இடது பக்க மூளையின் செயல் திறனை எப்படி அதிகரிக்கலாம்? நமது நடுபக்க மூளை பார்த்தல், கேட்டல், தூக்கம், உடல் சூடு, உடல் இயக்கு விசை, உடல் இயங்கு விசை போன்ற  செயல்களை நடத்த உதவுகிறது. இந்த நடு மூளைப் பகுதியைத் தூண்டுவதன் மூலம் மிகவும் பயன் தரும் அளவில் மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. நடு மூளையைத் தூண்டுவதற்குப் பயிற்சி தேவை. இரு கைப்பழக்கம் (Ambidexterity) நடு மூளையைத் தூண்டுவதற்கான ஒருவகைப் பயிற்சி என்றே சொல்லலாம். இந்தப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைகிறது; உணர்சிகள் சமநிலையை அடைகின்றன; எதிர்மறை எண்ணங்கள் மறைகின்றன; மேற்கொள்ளும் செயலில் ஈடுபாடு தோன்றுகிறது;  மன ஒருமைப்பாடு (Concentration), தன்னம்பிக்கை (Confidence), படைப்பாற்றல் (Creativity) போன்ற பண்புகள் மேம்படுகின்றன; நினைவாற்றல் அதிகரிக்கிறது;  வேகமாக வாசிக்கும் திறன் கைகூடுகிறது.

குறிப்புநூற்பட்டி

  1. உடல் எனும் இயந்திரம் 38: அறிவு தரும் அமைச்சகம் தமிழ் இந்து ஆகஸ்டு 24, 2018 https://tamil.thehindu.com/society/kids/article24802055.ece
  2. என்ன முழுசா யூஸ் பண்ணுங்கப்பா தினமலர் அக்டோபர் 21, 2016 என்ன https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34072&cat=3&Print=1
  3. மனித மூளை விக்கிபீடியா
  4. Bizarre! Students from this ‘ambidextrous’ school can write using both hands together and finish exams in half the time India Today April 5, 2018 https://www.indiatoday.in/education-today/news/story/bizarre-students-from-this-ambidextrous-school-can-write-using-both-hands-together-can-finish-exam-in-halftime-1205207-2018-04-05
  5. கலப்பு கை பழக்கம் விக்கிபீடியா
  6. கலப்பு கை பழக்கம்

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in அறிவுத்திறன், கற்பிக்கும் கலை, கல்வி, குழந்தைகள், மூளை வளர்ச்சி and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to இரண்டு கைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் எழுதும் திறன் (Ambidextrous Writing Skills): அசத்தும் மத்தியப்பிரதேசத்துப் பள்ளி மாணவர்கள்.

  1. அதிசய தகவல் களஞ்சியம்.
    மஹாத்மா காந்தி அவர்கள் இரண்டு கைகளிலும் எழுதும் பழக்கம் உடையவரே…

    Like

  2. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    ஒரு கையால் ஆங்கில மொழியையும் மற்றொரு கையால் ஹிந்தி மொழியையும் இவர்களால் ஒரே சமயத்தில் எழுத முடியுமாம்.

    வியப்பினும் வியப்பாக இருக்கிறது ஐயா

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.