முற்பிறவியில் பிரம்மலோகத்தில் பிரம்மாவிடம் பெற்ற சாபத்தின் விளைவாக மகாபிஷக் பூவுலகில் சந்தனுவாகவும், கங்காதேவி மானுடப் பெண்ணாகவும் குரு தேசத்தில் பிறப்பெடுத்தனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. கங்காதேவி ஒவ்வொன்றாக அக்குழந்தைகளைக் கங்கை நீரில் மூழ்கடித்தாள். இதன் மூலம் ஏழு அஷ்ட வசுக்கள் சாபவிமோசனம் பெற்றனர். சந்தனு எதுவும் கேட்கக் கூடாது என்பது கங்காதேவி விதித்த நிபந்தனை. எட்டாவது அஷ்ட வசுவான பிரபாசன் குழந்தையாகப் பிறப்பெடுத்தான். அந்த எட்டாவது குழந்தையையும் இவள் மூழ்கடிக்க முயற்சிக்கையில் சந்தனு தடுத்துக் கேள்வி கேட்டான். அதனால் அக்குழந்தை உயிர் தப்பியது. இக்குழந்தைக்குத் தேவவிரதன் என்று பெயர் சூட்டினர். பின்னாளில் இவர் மேற்கொண்ட சாபதத்தின் காரணமாக இவர் பீஷ்மர் என்று பெயர் பெற்றார்.
இந்தப் பதிவில் பீஷ்மரின் பிறப்பு பற்றித் தெரிந்துகொள்வோமா? அதற்கு முன்பு குரு தேசத்தைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்
வேதகால இந்தியாவில் குரு தேசம், காந்தார தேசம், பாஞ்சால தேசம், காம்போஜ தேசம், சூரசேன தேசம், மத்ஸய தேசம், சிந்து தேசம், விதேக தேசம், கோசல தேசம், அங்கதேசம், மகத தேசம் போன்ற 22 ஜனபத தேசங்கள் இருந்துள்ளதாகப் புராணங்களும் இதிகாசங்களும் குறிப்பிடுகின்றன.
மகரிஷி வேத வியாசர் எழுதின மகாபாரதத்திலே குரு தேசம் பற்றியும், குரு பரம்பரையைச் சேர்ந்த அரசர்கள் (Rulers Kuru Dynasty) பற்றியும் விரிவாகக் கதை சொல்லியிருக்காரு. இந்தக் குரு பரம்பரை எப்படி வந்தது? என்பது பற்றிச் சிறிய முன்னோட்டம்.
மகாபாரதத்தில் யயாதியின் கதை சுவாரஸ்யமானது. சுக்கிராச்சாரியார் இட்ட சாபத்தால் முதுமையை அடைந்தவர். ஐந்து மகன்களில் ஒரு மகனான புருவின் வழியாக இழந்த இளமையைத் திரும்பப் பெற்றவர். முதுமை பற்றிய பயம், இளமை பற்றிய விழிப்புணர்வு ஆகியன பற்றி யயாதியின் வாழ்க்கை மூலம் நாம் உணரலாம். யயாதியும் புருவும் குரு குலத்திற்கும், யாதவக் குலத்திற்கும் பொதுவான முன்னோர்கள் ஆவர். பாகவத புராணம், வாயு புராணம், பிரமாண்ட புராணம், சிவ புராணம், ஹரிவம்ச புராணம் ஆகிய புராணங்களிலும் யயாதியின் கதை இடம்பெறுகிறது.
பூருவிற்குப் பின்னர் பரதன் (भरत) அரசாண்டான். “ஜம்பூத்வீபே பரத வர்ஷே பரதக் கண்டே மேரோர் தக்ஷணே பார்ச்வே” என்ற ஸ்லோகத்தில் இந்தப் பரதன் ஆட்சி செய்த தேசம் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. அதாவது பரதக் குலத்தைச் சேர்ந்த பரதன் பரத வர்ஷத்தில் இருந்த பரதக் கண்டதை ஆண்டுவந்தான். இவன் குலத்தில் தோன்றியவன் குரு இவனுக்குப் பின்னர் இவன் பெயராலேயே குரு வம்சம் என்று அழைக்கப்பட்டது.
மகாபாரதம், வேதகால இந்தியாவின் குரு தேசத்தில் (कुरु राज्य) நடைபெற்ற கதை. தற்காலத்து இந்தியவோட மாநிலங்களாகிய ஹரியானா, தில்லி, உத்திரகாண்ட் மற்றும் உத்திரப் பிரதேச மாநிலங்களின் பகுதிகள் எல்லாம் ஒன்னாச் சேர்ந்து வேத காலம் தொட்டே குரு தேசம்ங்கற பேரோட இருந்துருக்கு. இந்தத் தேசத்தைக் குருன்னு பேருள்ள மன்னர் நிருவினதாலே இதுக்கு குரு தேசம்னு பேரு. இதன் தலைநகர் ஹஸ்தினாபுரம் (हस्तिनापुर).
சரி இனி கதைக்குள் நுழையலாமா?
இஷ்வகுவின் மகன் ஆகிய மகாபிஷக் சூரிய வம்சத்தில் உதித்தவன் ஆவான். ஆயிரம் அஸ்வமேக யாகங்களை நடத்தியவன் என்பதால் இந்திரனுக்கு நிகராக பெயர் பெற்றிருந்தான். மகாபிஷக் ஒரு சமயம் பிரம்மலோகத்தைச் சென்றடைந்தான். பிரம்மனின் சபையில் பல ரிஷிகளும், தேவர்களும் இருந்தனர். அங்கே மகாபிஷக்கும் இருந்தான். கங்காதேவியும் அங்கே இருந்தாள். திடீரென வீசிய காற்றால் கங்காதேவியின் மேலாடை விலகிப் பறந்தது. மகாபிஷக் கங்காதேவியின் அழகில் மதிமயங்கி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். கங்காதேவியும் மகாபிஷக்கின் அழகில் மயங்கினாள்.
பிரம்ம சபையில் காம உணர்வுகளுக்கு இடமில்லை. காமவயப்பட்ட மகாபிஷக் கங்காதேவியின் ஆகிய இருவர் மீதும் பிரம்மா கோபம் கொண்டார். “அற்ப ஆயுள்கொண்ட மனிதர்களைப் போல காமவயப்பட்டீர்கள். எனவே நீங்கள் இருவரும் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறப்பீர்கள். பின்பு கணவன் மனைவியாக இணைந்து சுக துக்கங்களில் உழல்வீர்களாக. பூவுலகில் கங்காதேவி மகாபிஷக்குக்கு விருப்பம் இல்லாததைச் செயல்களைச் செய்வாள்’” என்று சபித்தார்.
பிரம்மலோகத்தில் காமவயப்பட்டது தவறு என்று மகாபிஷக்கும் கங்காதேவியும் உணர்ந்தனர். தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டனர். பிரமனும் பெருங்கருணை கொண்டு “பூவுலகில் சிறிது காலம் கழித்த பின்னர் திரும்பவும் பிரம்மலோகம் வருவீர்களாக” என்று சாபவிமோச்சனம் தந்தார்.
OOO OOO OOO
அஷ்டவசுக்கள் சாபம் பெற்ற கதை
ஒரு சமயம் அனலன், அனிலன், ஆபன், சோமன், தரன், துருவன், பிரத்தியூடன், பிரபாசன் என்ற பெயருடைய அஷ்ட வசுக்கள் (அரச அந்தஸ்தையுடைய தேவர்கள்) தங்கள் மனைவியருடன் இமயமலை அடிவாரத்தில் இருந்த காட்டிற்குச் சென்றனர். அங்கிருந்த வசிஷ்ட முனிவரின் ஆஸ்ரமத்தில் நந்தினி என்ற தெய்வீகப் பசு ஒன்று இருந்தது. இந்தப் பசுவின் பால் இளமையைக் கொடுக்கும். அஷ்ட வசுக்களில் எட்டாவது வசுவான பிரபாசன் மனைவி இவர்களை நச்சரித்து இந்தப் பசுவைத் திருடித்தரச் சொல்கிறாள்.
பிரபாசனும் மற்ற ஏழு வசுக்களின் உதவியுடன் நந்தினி பசுவைத் திருடி வேறொரு முனிவரின் மகளிடம் கொடுத்துவிடுகிறார்கள். இதுபற்றி அறிந்த வசிஷ்ட மகரிஷி அஷ்ட வசுக்களுக்கும் சாபமிடுகிறார். “ஏழு வசுக்கள் பூவுலகில் கங்காதேவிக்கும் சந்தனுவிற்கும் மகன்களாகப் பிறந்து சிலகாலம் வாழ்ந்த பின் சாப விமோசனம் பெறுவார்கள். எட்டவதாகப் பிறக்கும் பிரபாசன் மட்டும் பூவுலகில் பிறந்து தர்ம சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்த பிரம்மச்சாரியாகவும் தர்மாத்மாவாகவும் நீண்ட காலம் வாழ்வான்” என்பது சாபம்.
கங்காதேவி பிரம்மாவிடம் சாபம் பெற்ற பின்னர் பூலோகத்துக் சென்று மனிதப் பிறப்பெடுக்கத் தயாரானாள். அப்போது அஷ்ட வசுக்கள் கங்காதேவியிடம் வந்தனர். தாங்கள் வசிஷ்டரின் சாபத்துக்கு ஆளான செய்தியைக் கூறினர். பூவுலகில் மகாபிஷக்கும் கங்காதேவியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் அஷ்ட வசுக்கள் எட்டுப் பேரும் இவர்களுக்குக் குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என்பது சாபம். கங்காதேவி ஏழு குழந்தைகள் பிறந்த உடனே அவர்களைக் கங்கை நதியில் மூழ்கடிக்கவேண்டும். எட்டாவது குழந்தை, “த்யென” என்ற பெயருடன், பூவுலகில் நீண்டகாலம் வாழ்வதற்கான வரத்துடன் பிறக்கும். இந்த எட்டாவது குழந்தையைக் கங்கை நதியில் மூழ்கடிக்க வேண்டிய தேவையில்லை. கங்காதேவி இந்த வேண்டுகோளை ஏற்றால் தங்களுக்குச் சாபவிமோசனம் கிடைக்கும் என்றும் கூறினர். கங்காதேவியும் அஷ்ட வசுக்களுக்கு உதவுவதாக வாக்களித்தாள்.
OOO OOO OOO
மகாபாரதம் குரு வம்ச மன்னன் பிரதீபனிலிருந்து தொடங்குது. மகாபிஷக் இந்தப் பிரதீபனுக்கும் சுனந்தாவிற்கும் ஆண் குழந்தையாக வந்து பிறந்தான். இந்த ஆண் குழந்தைக்குச் சந்தனுன்னு பேர் வைச்சாங்க. இது போல கங்காதேவியும் கங்கைநதிக் கரையில் மானிடப் பெண்ணாகப் பிறந்தாள்.
ஒரு சமயம் பிரதீபன் வனத்தில் அமர்ந்து தவம் செய்தான். பிரதீபன் தவம் செய்வதைப் பார்த்துக் கங்காதேவி அங்கே வந்தாள். அவன் மேல் மோகம் கொண்டாள். அவனுடைய வலது தொடையில் உட்கார்ந்தாள். தன்னைத் திருமணம் செய்து மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள்.
பிரதீபன் அவள் செய்கையைக் கண்டு பதறிப்போனார். மனைவி எப்போதும் இடது தொடையில் உட்கார வேண்டும். மகன், மருமகள் ஆகியோர் வலது தொடையில் உட்கார வேண்டும். தன் வலது தொடையில் உட்கார்ந்த கங்காதேவியை மருமகளாக மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று சொன்னார். இதைக் கேட்டு கங்காதேவியும் அங்கிருந்து விரக்தியுடன் மறைந்தாள்.
தன் மாளிகைக்குத் திரும்பிச் சென்ற பிரதீபன் தன் மகன் சந்தனுவிடம் “பிற்காலத்தில் கங்கைநதிக் கரையில் சுந்தரி ஒருத்தியைப் பார்த்தால் அவளையே திருமணம் செய்துகொள்” என்று சொன்னான்.
பின்னாளில் வாலிபனாக வளர்ந்த சந்தனு குரு நாட்டின் அரசனாக முடிசூட்டிக்கொண்டான். ஒரு சமயம் இம்மன்னன் கங்கைக் கரையில் உலாவினபோது கங்காதேவியைப் பார்த்து அவள் மேல் காதல் கொண்டான். “நான் என்ன செஞ்சாலும் என்ன எதுன்னு கேட்கலேன்னா உன்னை நான் கட்டிகிறேன்னு” கங்காதேவி நிபந்தனை போட்டாள். நிபந்தனைக்குச் சம்மதம் சொல்லி சந்தனு கங்காதேவியைக் கல்யாணம் கட்டிக்கிட்டான். சந்தனுவின் மூலம் கங்காதேவி ஏழு குழந்தைகள் பிறந்தன. குழந்தை பிறந்ததும், ஒவ்வொன்றாக அந்த ஏழு குழந்தைகளையும், கங்காதேவி கங்கை நதியிலே மூழ்கடிச்சாளாம். எவ்வளவு கல்நெஞ்சம் பாருங்க! சந்தனுவாலே அவளைக் கேள்வி கேட்க முடியலை.

கங்கை, அவர்களது எட்டாவது குழந்தையை நீருள் அமிழ்த்திக் கொல்வதைச் சந்தனு தடுப்பதைக் காட்டும் ஓவியம் PC: விக்கிபீடியா
எட்டாவது குழந்தை பிறந்தப்ப அதையும் கங்கை நதிலே மூழ்கடிக்கக் கங்காதேவி போயிருக்கா. அப்போ சந்தனு ஏன் இப்படிக் குழந்தைகளை நீரில் மூழ்கடிக்கிறாய் என்று கங்கா தேவியைக் கேள்வி கேட்டான். கங்காதேவியும் சந்தனு கேள்வி கேட்டு தன் நிபந்தனையை மீறியதாகச் சொல்லி அவனை விட்டுப் பிரிந்து போனாள். ஆனால் எட்டாவது குழந்தையை மூழ்கடிக்கலே. இந்த எட்டாவது குழந்தையின் பேர் தேவவிரதன் ஆகும்.

கங்கைக்கும், சந்தனுவுக்கும் பிறந்த மகன் பீஷ்மரைக் கங்கை சந்தனுவிடம் கையளிக்கும் காட்சி.
மோகம் நீங்கிய கணவன் எப்போது கங்காதேவியைக் கேள்வி கேட்கிறானோ அப்போது சாபம் நீங்கிவிடுமாம். இப்ப சந்தனு கேட்ட கேள்வியாலே சாபம் நீங்கிருச்சு. இது வரை கங்காதேவி மூழ்கடித்த ஏழு குழந்தைகளுமே அஷ்டவசுக்கள் என்ற தேவர்கள் ஆவர். முற்பிறவியில் கங்காதேவி இவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி தான் பெற்ற குழந்தைகளைக் கங்கையில் மூழ்கடித்த செயலால் அஷ்ட வசுக்களின் சாபமும் நீங்கியது.
நன்றி ஐயா
LikeLiked by 1 person
தொடர்ந்து வாசிக்கிறேன். படங்களைத்தேர்ந்தெடுத்து அமைக்கும் விதம் அருமை.
LikeLiked by 1 person
மகிழ்ச்சி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
LikeLiked by 1 person
அருமை.பீஷ்மர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்று கூறுங்கள்
LikeLike
மகாபாரதப் போர் முடிந்த பின்னர், 35 ஆண்டுகள் கழித்து கிருஷ்ணர் இறந்ததாக ஒரு பாரம்பரிய நம்பிக்கை நிலவுகிறது. இந்தக் காலகட்டத்தில் கலியுகம் கி.மு. 3102 ஆம் ஆண்டு தொடங்கியதாக ஆரியப்பட்டா குறிப்பிட்டுள்ளார். சாளுக்கியர்களின் நகரான ஐஹொளேயில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் 3735 கலி (கி.பி. 634) என்ற குறிப்பு உள்ளது. பாணினி இயற்றிய இலக்கண நூலில் மகாபாரதம் குறித்த குறிப்புகள் உள்ளன. இதனை இந்தக் (https://www.ece.lsu.edu/kak/MahabharataII.pdf) குறிப்பில் படித்தேன்.
ஸ்ரீமத் பாகவதத்தில் (9-22-45) பரிக்ஷித் முதல் க்ஷேமகா வரையிலான .28 கௌரவ அரசர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. கலியுகத்தில் பாண்டவ வம்சத்தின் ஆட்சி முடிந்து மகத வம்சத்தின் ஆட்சி துவங்கும் என்றும் குறிப்பிடுகிறது. இதன் மூலம் கலியுகம் பிறப்பதற்கு முன்பு வரை பாண்டவ வம்சம் ஆட்சி புரிந்தது.
சரி உங்கள் கேள்விக்கு விக்கிபுராணா ஊகத்தின் அடிப்படையில் பீஷ்மரின் வயதை 118 என்று கணக்கிட்டுள்ளது (https://wikipurana.wordpress.com/2018/06/21/age-of-pandavas-during-kurukshetra-war/)
மகாபாரதத்தின் காலம் கிமு 3500 முதல் கிமு 2000 வரை என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தக் காலம் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முந்தைய காலம் என்றும் கருதப்பட்டுகிறது. பருவம் – எஸ்.எல்.பைரப்பா (https://www.commonfolks.in/bookreviews/paruvam-sl-bhyrappa) என்ற கட்டுரையில் மகாபாரதக் கதைமாந்தர்களின் வயதைப் பற்றிப் பேசுகிறார். தங்கள் கருத்திற்கு நன்றி.
LikeLike