அமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி?

ஒரு புத்தகத்தை, வெளியிடும் தருவாயில்  வைத்துக்கொண்டுள்ள நூலாசிரியர், இரண்டு வழிகளில் வெளியிடலாம்: 1. மரபு வழியில் அச்சிட்டு ஒரு பதிப்பாளர் (publishing house) வாயிலாக வெளியிடுவது; 2. ஆசிரியரே தன் புத்தகத்தைச் சுயமாக அச்சிட்டு வெளியிடுதல் (self-publishing). சில காலத்திற்கு முன்பு வரை சிறந்த எழுத்தாளர்கள் கூட தங்கள் நூல்களை வெளியிட பதிப்பகங்களைத் தேடி அலைய வேண்டியிருந்தது. தற்போது புத்தகத்தை சுயமாக அச்சிட்டு வெளியிடும் முறையே பரவலாகி வருகிறது. சுயமாகப் புத்தகம் வெளியிடுவது பற்றி ஆய்வு மேற்கொண்டோர் அமேசான் கே.டி.பி (Kindle Direct Publishing (K.D.P.) பற்றி எளிதாகத் தெரிந்து கொண்டிருப்பார்கள். கிண்டில் நேரடி வெளியீடு கே.டி.பி. என்றால் என்ன?  தமிழ் நூலாசிரியர்கள் இதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்? கிண்டில் நேரடி வெளியீடு பற்றிய நிறை குறைகளையும் கே.டி.பி. செலெக்ட் பற்றியும் இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

புத்தகம்: மனிதனின் அடையாளம்

ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு அடையாளமாக அவனது குழந்தைகளையும் அவன் எழுதிய நூல்களையும் சொல்வதுண்டு. தொடர்ந்து படிக்கும் பழக்கம் கொண்ட நம்மில் பலருக்குப் புத்தகம் எழுதும் ஆவலும் இருக்கும். வலைத்தளங்கள் (Blogs), எழுத்தாளர் மன்றங்கள் (Writers’ Forum), குழுக்கள், மின்பத்திரிகைகள், மின்பருவ இதழ்கள் போன்ற சமூக ஊடகங்கள் பலருக்கு எழுத வாய்ப்பளித்து வருகின்றன.

தமிழ் புத்தகம்: அச்சிடுதல் மற்றும் வெளியீட்டுத் துறை

பலருக்குக்  கணிசமான அளவிற்குக் கட்டுரைகளோ அல்லது கதை / கவிதைகளோ சேர்ந்துவிடும். ஆர்வக்கோளாறு காரணமாகத் தாங்கள் எழுதிய தொகுப்பை புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி விடுவதும் உண்டு. ஏதாவது பதிப்பகத்தை அணுகினால் அவர்கள் நம்முடைய செலவில் அச்சடித்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இப்போதெல்லாம் யாரும் விற்றுத்தர முன் வருவதில்லை.

சில பதிப்பாளர்கள் அவர்களே அச்சடித்துக் கொடுப்பதுடன் விற்பனை செய்யும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதுண்டு. எழுத்தளர்களுக்கு 10 பிரதிகள் கொடுப்பார்கள். புத்தக விற்பனையில் ஈட்டும் வருவாயில் 7.5 முதல் 12 சதவிகிதம் வரை ராயல்டி (Royalty) தொகையை வருடா வருடம் கணக்குப் பார்த்துக் கொடுப்பதாகச் சொல்வார்கள். பெரும்பாலான பதிப்பாளர்கள் எத்தனை பிரதி அச்சிடுகிறார்கள் என்றும் எவ்வளவு விற்றது என்றும் சொல்வதில்லை. சொற்பத் தொகையான ராயல்டியை எழுத்தாளர்களுக்குக் கொடுப்பதில் பதிப்பாளர்கள் எந்த அளவிற்கு நியாயமாக நடந்து கொள்கிறார்கள்?  ராயல்டி சரிவரக் கிடைப்பதில்லை என்பதே பல எழுத்தாளர்களின் மனக்குறை ஆகும்.

வேறொரு நடைமுறையையும் பதிப்பாளர்கள் முன்வைப்பதுண்டு. எழுத்தாளரே புத்தகத் தயாரிப்புச் செலவு முழுவதையுமோ அல்லது தயாரிப்புச் செலவில் கணிசமான சதவிகிதத்தையோ ஏற்றுக்கொள்ள வேண்டும். பதிப்பாளர்கள் அச்சடித்த புத்தகங்களில் ஒரு பகுதியை எழுத்தாளரிடமே கொடுத்துவிடுவார்கள். எழுத்தாளர் இவற்றை விற்று தான் முதலீடு செய்த பணத்தை மீட்டுக்கொள்ளலாம்.   எழுத்தாளர்கள் புத்தகங்களை விற்பது என்பது மிகவும் சவாலான நடைமுறை ஆகும். ஐந்நூறு பிரதிகள் அச்சடித்தால் நானூறு பிரதிகளை எழுத்தாளரே விற்றுக்கொள்ள வேண்டும். பல எழுத்தாளர்கள் நூல்களைத் தங்கள் நண்பர்களுக்கு அன்பளிப்பாகவோ, தள்ளுபடி விலையிலோ கொடுப்பதுதான் வாடிக்கை.

தற்போது தேவைக்கேற்ப அச்சிடுதல் (Print On Demand) என்ற நடைமுறை பலராலும் விரும்பி மேற்கொள்ளப்படுகிறது. இந்த முறையில் தேவைக்கேற்ப மிகக் குறைந்த எண்ணிக்கையில் (10 முதல் 25 வரை) புத்தகங்களை அச்சிட்டுப் பதிப்பிக்கலாம். முதலீடு மிகவும் குறைவு.

புத்தகம் வாசிக்கும் வழக்கம் குறைந்து வருவதாலும், புத்தகம் சரிவர விற்காததாலும் தாங்கள் நஷ்டப் படுவதாகப் பதிப்பாளர்கள் புலம்புகிறார்கள். ஆண்டுதோறும் புத்தக வெளியீடுகளும் விற்பனையும் அதிகரித்து வருவது உண்மை. என்றாலும் ராயல்டியே சரிவரக் கிடைப்பதில்லை என்று எழுத்தாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.  எந்த நம்பிக்கையில் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்? எந்த எதிர்பார்ப்புடன் பதிப்பாளர்கள் அச்சடித்துப் பதிப்பிக்கிறார்கள்? இது விடை தெரியாத புதிர் அல்லவா!

புத்தகப் புரட்சி: அச்சு வடிவத்தில் இருந்து மின்னூல் வடிவத்திற்கு மாற்றம்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அச்சடித்த புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருவது உண்மைதான். புத்தகங்கள் சிறிது சிறிதாகப் பல டிஜிட்டல் அவதாரங்கள் எடுத்து வருகின்றன. கணினியில் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஸ்கேன் செய்யப்பட்ட நூல்கள் (Raster Computer Graphis) (தொடக்கம்: 1960 களில்), அடோபின் பி.டி.எஃப் வடிவக் கோப்புகள் (Adobe’s PDF Format Files) (தொடக்கம்: 1990 களில்) எல்லாம் வந்துவிட்டன. புத்தகங்களும் மின்வடிவம் பெற்று வரத்தொடங்கிப் பல நாட்கள் கடந்துவிட்டன.

மின்னூல்கள் (eBooks) என்பது எண்ணிம வடிவத்தில் அமைந்த ஓர் உரை அடிப்படையிலான வெளியீடு (A text-based publication in digital form). இவற்றில் சில வகையான படங்கள் அல்லது வரைபடங்கள் இடம்பெற்றிருக்கக் கூடும். மின்னூல்கள், ஒரு மின்னணு இணக்க சாதனத்தின் (Electronically Compatible Device) வாயிலாக வாசிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது

மின்னணு இணக்க சாதனம் என்பது ஐ-ரீடர் (I-Reader), இ-ரீடர் (E-Reader), டேப்லெட் (Tablet),, லேப்டாப் (Laptop) மற்றும் டெஸ்க் டாப் பி.சி (P.C ) போன்ற அனைத்து மின்னணுக் கருவிகள் வழியாகப் படிக்கக்கூடிய புத்தகங்களாகும். இன்று ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.  ஆன்ட்ராய்டு  இயக்க முறைமையில் செயல்படும் டேப்லெட் பி.சி. ஐ-பேட் (I-Pad) மற்றும் ஆப்பிள் ஐ-ஃபோன் (I-Phone) போன்ற ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்தி மின்னூல்களைப் படிக்கும் வழக்கமும் நடைமுறைக்கு வந்தது.

மின்னூல்களைப் படிப்பதற்காகப் பல செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இது மட்டுமின்றி, தற்போது மின்னூல்களைப் படிப்பதற்கென்று பிரத்யேகமாக அமேசான்.காம் (Amazon.com) – கிண்டில் (Kindle), பார்னெஸ் ஆண்டு நோபிள் (Barnes & Noble) – நூக் (Nook), புக்கீன் (Bookeen) – சைபுக் (Cybook), கோபோ (Kobo) _ கோபோ (Kobo), ஓனிக்ஸ் Onyx – ஓனிக்ஸ் (Onyx), பாக்கெட் புக் (PocketBook) – பாக்கெட் புக் (PocketBook), சோனி (Sony) – சோனி ரீடர் (Sony Reader), மற்றும் டோலினோ (Tolino) போன்ற இ-மின்னணுக் கருவிகளும் (ரீடர் அல்லது இ-புக் ரீடர்) கிடைக்கின்றன. மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்றவற்றில் இல்லாத கண்களைப் பாதுகாக்கும் பிரத்யேக திரை கொண்டது என்பதால் இந்த இ-புக் ரீடர்கள் வாசிப்புக்கு மிகவும் ஏற்றது. பி.டி.எஃப் வடிவக் கோப்புகளைப் போலவே இபப் (epub) மற்றும் மொபி (mobi) வடிவக் கோப்புகள் உருவாக்கப்பட்டன.

அமேசான் இணைய விற்பனை அங்காடி

அமேசான்.காம் (amazon.com, நாஸ்டாக்: AMZN), சியாட்டல், வாசிங்டன் நகரில் அமைந்துள்ள ஓர் அமெரிக்கப் பன்னாட்டு இணைய வணிக நிறுவனம். ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) என்பவரால் 1994 ஆம் ஆண்டு ஜூலை 5 நாள் தொடங்கப்பட்டு, 1995 ஆம் ஆண்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்ட அமேசான்.காம் இன்று மிகப்பெரிய இணைய விற்பனை அங்காடியாக வளர்ந்து உலகம் முழுதும் தனது சேவையினை அளித்து வருகிறது. ஆன்லைன் சேவை மூலம் மின்னூல்களை வழங்கி கிண்டில் எனும் இ.ரீடரில் (மின்னணு இணக்க சாதனம்) படிக்கும் வசதியினை மேம்படுத்துவதில் அமேசான்.காம் முன்நிலையில் வகித்து வருகிறது. இப்போது வரை, கின்டெல் 4 மில்லியன் புத்தகங்களையுடைய‌ ஒரு நூலகத்தைக் கொண்டுள்ளது (library of 4 million books) என‌ அமேசான் கூறுகின்றது.

அமேசான் மின்னூல்கள் 

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து, அமேசான் நிறு­வனம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் மின்னூல்களின் விற்பனையைத் துவக்கியுள்ளது. பார்வை: இந்திய மின்னூல்கள் தமிழ் மின்னூல்கள். இந்திய மொழிகளில் மொத்தம் உள்ள 3,896 மின்னூல்களில் தமிழில் மட்டும் 1374 மின்னூல்கள் உள்ளன என்று ஒரு கணக்குச் சொல்கிறது.

அமேசானில் உங்கள் கணக்கு 

கிண்டிலில் புத்தகங்களை வாங்குவதற்கு அமேசான்.காம் இல் ஒரு கணக்கினை இங்கு துவக்கிக் கொள்ளலாம். இங்கு புகுபதிகை செய்து உள்-நுழையலாம். குறிப்பிட்ட புத்தகத்தை வாங்குவதற்கு உங்கள் கணினியின் பிரவுசர் (browser) அல்லது உங்கள் கிண்டில் ரீடர் (kindle reader) அல்லது கிண்டில் ஆப் (kindle app) இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கிண்டில் டேப்லெட் (tablet) வகைகளோடு இல்லாமல் ஆண்ட்ராய்டு  (android) மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் (iOS operating system) கிடைக்கும் கிண்டில் ஆப்ஸ்களையும் பயன்படுத்தி இந்த மின்னூல்களை வாசிக்கலாம்.

அமேசான் கிண்டில் நேரடி வெளியீடு

உலகளாவிய மின்னூல் வெளியீட்டில் அமேசான் கிண்டில் நேரடி வெளியீடு (கே.டி.பி) (Amazon Kindle Direct Publishing (KDP) முன்னணித் தளமாகத் திகழ்கிறது. அமேசானில் சுயமாக மின்னூல் வெளியிடுதல் (Self-publishing in Amazon) எப்போதுமே ஒரு நல்ல முடிவாகும். அமேசானின் இந்த நேரடி வெளியீட்டுத் திட்டம் ஏராளமான மின்னூல் வெளியீட்டாளர்களை ஆதரிக்கிறது. கிண்டில் நேரடி வெளியீட்டின் மூலம் பிரசுரிக்கும்போது, நீங்கள் எதிர்பார்க்கும் வாசகர் வட்டம் இந்தியாவிற்கு வெளியே கூட அமைந்துவிடுவது உண்டு .

அமேசான் கே.டி.பி வலைத்தளத்திற்குச் kdp.amazon.com செல்லவும். இங்கு ஒரு கணக்கைத் துவக்கவும் (Sign up). உங்களுக்கு ஏற்கனவே அமேசானில் ஒரு கணக்கு இருந்தால் உங்கள் பயனர் பெயரையும் (Username) மற்றும் கடவுச் சொல்லையும் (Password) உள்ளிடுக.

உங்களுக்கான அமேசான் கே.டி.பி. கணக்கு விவரங்களை நிரப்பவும். எழுத்தாளர் பெயர் (Author Name), உங்கள் வருமான வரி (Income Tax) பற்றிய தகவலையும் நிரப்ப வேண்டும். உங்கள் முதல் மற்றும் குடும்பப் பெயர் அல்லது உங்கள் வெளியீட்டு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும். புனைபெயரை உள்ளிட வேண்டாம். அமேசான் நீங்கள் உள்ளிடும் பெயரிலேயே உங்களுக்கான பணத்தை வழங்குகிறார்கள். வருமான வரிப்படிவங்களும் இதே பெயரிலேயே அனுப்புகிறார்கள். புனைபெயரைக் குறிப்பிட வேண்டும் என்றால் உங்கள் புத்தகம் குறித்த செய்திகளுடன் சேர்த்துவிடலாம்.

உங்கள் கணக்கைத் தொடங்கும்போதே உங்கள் ராயல்டி பணத்தைப் பெறுவதற்கான தகவலை அளிக்கவேண்டும். நேரடியாக உங்கள் கணக்கில் பணம் செலுத்துதல் (Direct Deposit) அல்லது மின்னணு நிதி பரிமாற்றம் (EFT), கம்பி வலைப்பின்னல் பரிமாற்றம் (Wire Transfer) மற்றும் காசோலை ஆகிய பணம் வழங்கல் முறைகள் அமேசானில் உண்டு. நீங்கள் வசிக்கும் இடத்திற்கேற்ப கிடைக்கும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் மின்னூல்களுக்கான ராயல்டி தொகை, 60 நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் சேரும் (எவ்வளவு சிறிய தொகை என்றாலும்) தொகை உங்கள் நாட்டு நாணயச் செலாவணியில் (Local Currency of your Country) வழங்கப்படும். இது குறித்த மேலதிகத் தகவல் இங்கு கிடைக்கும்.

யு.எஸ் வரி ஒழுங்குமுறை கட்டுப்பாட்டாளர்கள் (U.S. tax regulations) யு.எஸ் வருமான வரி சட்டதிட்டங்களுக்கேற்ப உங்கள் கே.டிபி. கணக்குப் பக்கத்தில் வரி செலுத்தும் நிகழ்நிலை தகவல்களை (your tax status under U.S. law on your KDP account page) நிகழ்நிலை வரி நேர்காணல் மூலம் (online tax interview) சேகரிக்கும்படி அமேசானுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். உங்கள் கே.டி.பி. கணக்குப் பக்கத்திற்குச் செல்லுங்கள். உங்கள் வருமானவரித் தகவலை வரித் தகவல் (Tax Information) என்ற பகுதியில் உள்ளிடுக. நீங்கள் நிரப்பிய தகவலின் அடிப்படையில் அமெரிக்கர் அல்லாத வெளியீட்டர்களுக்கான படிவம் W.8  (Form W.8 non-U.S. publishers) உருவாகிறது. மேலதிக உதவிக்கு இங்கு செல்க. Tax Talk Webinar Recording 2019 (YouTube) KDP Jumpstart Publishing Essentials Webinar Recording (YouTube)

உங்கள் நூல்களின் விற்பனைக்கான ராயல்டித் தொகையை (royalty payment) பெற ஏற்ற ஒரு வங்கிக் கணக்கை உங்கள் கிண்டில் கணக்கோடு இணைக்க வேண்டும். இந்தியர்கள் தங்கள் நிரந்தரக் கணக்கு எண் (Permanent Account Number (PAN), வங்கிக் கணக்கு எண் (Bank Account Number), இந்திய நிதி அமைப்புக் குறியீடு (Indian Financial System Code (IFSC) ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும். இந்த IFSC விவரத்தை உங்கள் செக் புத்தகத்திலோ, உங்கள் வங்கி பாஸ் புத்தகதிலோ (Bank Pass Book) பெற்றுக்கொள்ளலாம்.

அமேசான் இந்தத் தகவலை உங்களிடம் இருந்து பெற்றதும் சரி பார்த்து உறுதி செய்வது வழக்கம். தற்போது வெளியிட்டுள்ள மின்னூலை மேம்படுத்தும்போதோ அல்லது கிண்டில் ஸ்டோரில் புது மின்னூலை வெளியிடும்போதோ இந்தத தகவல்கள் சரிபார்த்து உறுதி செய்வார்கள்.

அமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் மின்னூலை வெளியிடுவது எளிது. உங்கள் மின்னூலுக்கான கையெழுத்து நகல் தயாராக இருக்க வேண்டும். இது தயாராக இருந்தால், நீங்கள் தொடரலாம். கையெழுத்து நகல் தயாராக உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது எம்.எஸ். வேர்டு (MS Word) வடிவில் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது என்றும் எடுத்துக்கொள்ளலாமா?

எம்.எஸ். வேர்டு தவிர லிபர் ஆஃபிஸ்.ரைட்டர் (Libre Office Writer) ($ 45.00), யுலிசிஸ் (Ulysis) ($ 44.99), ஸ்ரிவெனர் (Scrivener) ($ 28.00), செல்டெக்ஸ் (Celtx) ($ 15.00), ஃப்ரீடம் (Freedom) ($2.42/month), ஒப்பன் ஆஃபீஸ் (Open Office) (இலவசம்), கூகுள் டாக்ஸ் (Google Docs) (இலவசம்), எவர்நோட் (Evernote) (இலவசம்), ஃபோகஸ் ரைட்டர் (Focuswriter) (இலவசம்), ஃபாஸ்ட்பென்சில் (Fastpencil) (இலவசம்), ஒய்ரைட்டர் (yWriter) (இலவசம்), ட்ராப்பாக்ஸ் (Dropbox) (இலவசம்), ஹெமிங்வே (Hemingway) (இலவசம்) போன்ற வேர்டு பிராஸஸர்களையும் பயன்படுத்தலாம்.

amazon kdp க்கான பட முடிவு

நீங்கள் புகுபதிவு (Sign In) செய்த பின்பு கிண்டில் புக்செல்ஃபை (Kindle Bookshelf) பார்த்துக் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் கிண்டில் புக்செல்ஃப் இப்போது காலியாக இருக்கும். இங்கு உங்கள் மின்னூலின் தலைப்பு, ஆசிரியர் பெயர்(கள்), பட்டியல் விலை (List Price), சமர்ப்பித்த தேதி (Date submitted), தற்போதைய நிலை (Status) ஆகிய செய்திகளை நீங்கள் உள்ளிட வேண்டும்.

உங்கள் மின்னூலிற்கு கவர்சிகரமான தலைப்பைச் சூட்ட வேண்டும். விருப்பபட்டால் துணைத்தலைப்பையும் சூட்டலாம். இணையதளத்தில் தேடுவோர் எளிதில் கண்டறியத் தக்கதாக இருத்தல் நலம்.

amazon kdp ebook author title க்கான பட முடிவு

மின்னூல்கள் (eBooks) உருவாக்கம்

  1. உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ளுங்கள் (Do it yourself (DIY) – பார்க்க: மின்னூல் கையெழுத்து வடிவமைப்பு வழிகாட்டி (eBook Manuscript Formatting Guide) அட்டையை உருவாக்குங்கள் (Create a Cover)
  2. கிண்டில் கிரியேட் (Kindle Create) ஐப் பயன்டுத்தி உங்கள் கையெழுத்து நகலை வடிவமைக்கப்பட்ட மின்னூலாக மாற்றுக
  3. அட்டை வடிவமைப்பு மென்பொருளை (Cover Creator) பயன்படுத்தி கண்ணைக்கவரும் அட்டையை வடிவமைத்துக் கொள்க.
  4. கிண்டில் முன்னோட்டம் / முன்தோற்றம் மென்பொருளை (Kindle Previewer) பயன்படுத்தி உங்கள் மின்னூல் எவ்வாறு இருக்கும் என்பதை முன்னோட்டமாகக் காண்க.

பேப்பர்பேக் (Paperback)

  1. இலவசக் கருவிகள் மற்றும் சாதனங்கள் (Free tools and resources)
  2. கையெழுத்து நகல் மற்றும் அட்டைக்கான வார்ப்புருக்களை முயற்சி செய்து பார்க்க. (Try our manuscript and cover templates)
  3. கண்கவர் அட்டையை வடிவமைக்க அட்டை வடிவமைப்பு மென்பொருளைப் பயன்படுத்துக.Design an eye-catching cover with Cover Creator.
  4. சிறந்த நடைமுறைகள் மற்றும் உதவிக்குறிப்புகளை அறிய ஒரு வலைநெறியில் கலந்துகொள்ளுங்கள். (Attend a webinar to learn best practices and tips)
  5. உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ளுங்கள் (Do it yourself (DIY) – பார்க்க: மின்னூல் கையெழுத்து வடிவமைப்பு வழிகாட்டி மற்றும் அட்டையை உருவாக்கம் (See our guides for formatting your manuscript and creating a cover.)
  6. உங்கள் பேப்பர்பேக்கை முன்னோட்டம் / முன்தோற்றமாகக் காணுதல்: உங்கள் மின்னூல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் முன் மெய்ப்பு நகல்களுக்குக் கட்டளை இடுக. (Preview your paperback. Order proof copies before making your book available to customers)

உங்கள் நூலை கே.டி.பி. இல் சமர்ப்பிக்கும் முன்னர் அமேசான் தரநிலைகளுக்கேற்ப வடிவமைக்க வேண்டும் (Format your manuscript to meet Amazon meet quality standards). அமேசான் மென்பொருள் கருவிகளை (Software Tools) இங்கே காணலாம்.

எம்.எஸ். வேர்டு கோப்பு (MS Word Format (.docx) வடிவத்தில் இருந்து இபப் (.epub) அல்லது மொபி (.mobi) கோப்பு வடிவிற்கு மாற்றுவது எப்படி?

உங்கள் மின்னூல் கையெழுத்து நகலைப் பதிவேற்றி வடிவமைத்த கோப்பை கிண்டில் கிரியேட்டைப் (Kindle Create) பயன்படுத்தி  மைக்ரோசாஃபட் வேர்டு (Microsoft Word (.doc/.docx), கிண்டில் கிரியேட் (Kindle Create (KPF), எச்.டி.எம்.எல். (.html (.zip, .htm, or .html), மொபி (.mobi), இபப் (.epub), ரிச் டெக்ஸ்ட் வடிவம் (Rich Text Format (.rtx), பிளைன் டெக்ஸ்ட் வடிவம் (Plain Text (.txt), அடோப் பி.டி.எஃப் (Adobe PDF (.pdf) ஆகிய கோப்பு வடிவங்களாக மாற்றியமைக்கலாம். (பார்க்க: How to Self-Publish Your eBook in Indian Languages on Amazon KDP: Indic Language Publishing on Kindle for Tamil, Hindi, Marathi, Gujarati, and Malayalam. (In English) by Arun Sarathy Kindle Edition. 122 pages ).

ட்ராப்ட் டு டிஜிட்டல் (Draft2Digital), ஆன்லைன் கன்வெர்ட் (Online Convert), சம்சார் (Zamzar) என்னும் மென்பொருளைப் பயன்படுத்தி .docx கோப்பை .epub கோப்பாக மாற்றிவிடலாம். காலிபர் (Calibre),   சிகில் (Sigil) ஆகிய திறந்த மூல மென்பொருட்கள் .epub கோப்பை செப்பனிட (edit) உதவும்.

  1. இப்போது உங்கள் மின்னூல் பற்றி எளிமையான, கட்டாயம் படிக்கத் தூண்டும் வண்ணம் அமைந்த தொழில் முறை விளக்கத்தை (Professional Description) எழுதுங்கள்.
  2. உங்கள் விளக்கம் உங்கள் மின்னூல் குறித்த அமேசானின் விவரங்கள் அடங்கிய பக்கத்தில் தோன்றும். இந்த விளக்கம் உங்கள் மின்னூலின்  வாசகர்களுக்கு முதல் அபிப்பிராயமாக (first impression) அமையும்.
  3. உங்கள் மின்னூல் அமேசான் மற்றும் கூகுள் தேடுதல் பொறிகளில் (Google search engines) தோன்ற வேண்டுமென்றால் நீங்கள் சரிவிகிதத்தில் அமேசான் திறவுச் சொற்களை (Amazon Keywords) இணைக்கவேண்டும். அமேசான் ஏழே ஏழு திறவுச் சொற்களை மட்டுமே அனுமதிக்கிறது. எனவே திறவுச் சொற்களைத் தேர்வு செய்வதில் நல்ல வியூகம் (Strategy) தேவை.
  4. அமேசான் உங்களுக்கு வழங்கும் பிரிவுகள் மற்றும் துணைப் பிரிவுகளின் தொகுப்பில் (collection of categories and subcategories) இருந்து பொருத்தமான ஒரு பிரிவையும் துணைப் பிரிவையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஒரு பிரிவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் மின்னூல் உங்கள் வாசகர்களைச் சென்றடையும்.
  5. தொடக்க வெளியீட்டிற்குப் பின்னர் என்னுடைய மின்னூலுக்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கலாம்? இந்தக் கேள்வி அடிக்கடி கேட்கப்படுவது வாடிக்கை. இது நூலாசிரியரின் முடிவிற்கு உட்பட்டதுதான். என்றாலும் $2.99 முதல் $9.99 வரையிலான விலை வரம்பு மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ராயல்டி பணம் அந்தந்த நாட்டைப் பொருத்து வேறுபடும். இது பற்றி மேலும் தெரிந்துகொள்ள கே.டி.பி. தேர்ந்தெடுக்கப்பட்ட விலை பக்கத்தை (KDP Select pricing page) பார்க்கவும்.
  6. உங்களுடைய வெளியீட்டு உரிமைகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் மின்னூல் பொது வெளியைச் (Public Domain) சேர்ந்ததா? இல்லையா? என்று தீர்மானிக்க வேண்டும். நான் வெளியீட்டு உரிமைகளை வைத்திருக்கிறேன் என்று உறுதியளிக்க வேண்டும்.
  7. உங்கள் ராயல்டி தொகையை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். 35% மற்றும் 70% ஆகிய இரண்டு விருப்பத்தேர்வுகள் உண்டு. நீங்கள் 70% ராயல்டியைத் தேர்ந்தெடுத்தால் ரூபாய் 210 மதிப்புள்ள உங்கள் மின்னூல் ஒவ்வொரு முறை விற்பனையாகும்போதும் உங்களுக்கு ரூபாய் 147 ராயல்டியாகக் கிடைக்கும். அமேசான் கிண்டில் மட்டுமின்றி பிற தளங்களிலும் பதிப்பிக்கலாம். ஆனால் இம்முறையில் 35% மட்டுமே ராயல்டியாகக் கிடைக்கும். இம்முறையில் நூலாசிரியருக்கு ரூபாய் 73.50 மட்டும் கிடைக்கும்.
  8. கிண்டில் மின்னூலை இரவல் கொடுக்கலாமா? கூடாதா? ஆம் அல்லது இல்லை என்ற பதில் தேவை.
  9. மேற்கண்ட அனைத்துப் படிக்கட்டுகளையும் நிரப்பிய பின்னர் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் மின்னூலை  சேமித்து (Save) பதிவேற்றம் (Upload) செய்து வெளியிடலாம் (Publish). பதிவேற்றம் செய்த பின்னர் உங்கள் மின்னூல் அமேசான் மதிப்பாய்வு வரிசையில் (Amazon Review Queue) சேர்ந்து விடும்.
  10. மதிப்பாய்விற்குப் பின்னர் உங்கள் மின்னூல் வெளியிடப்பட்டு அமேசான் புக்செல்ஃபில் காட்டப்படும்.  உங்கள் மின்னூல் விற்பனைக்கு வந்து விட்டால் புக்செல்ஃபில் தற்போதைய நிலையில் (Status) நடப்பு  மின்னூல் (Live) என்று காட்டப்படும்.
  11. உங்கள் மின்னூல் விற்பனைக்கு வந்துவிட்டால் கே.டி.பி. பக்கத்தின் மேலே காணப்படும் விற்பனை அறிக்கையை (Report) சொடுக்கி மாதம் – தேதி மற்றும் விற்பனை அலகு (Unit Sales) போன்ற தரவுகளை உள்ளிடலாம். உங்கள் மின்னூலின் விற்பனையையும் கண்டறியலாம்.
  12. கிண்டில் செலக்ட் (KDP Select): இந்த முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் மின்னூலை (eBook) உங்கள் கிண்டில் தளத்திலும் செயலியிலும் மட்டுமே கிடைக்கும்படி செய்யலாம். உங்கள் மின்னூல் (eBook) உள்ளடக்கம் வேறெந்த வலைப்பூத் தளத்திலும் இருக்கக் கூடாது. உங்கள் பேப்பர்பேக்கிற்கு (Paperback) இதுபோன்ற வரையறை கிடையாது.
  13. கிண்டில் விற்பனை பிரசாரங்களுக்கான பட்டியலில் உங்கள் மின்னூலும் சேர்க்கப்படலாம். இந்த முறையில் உங்கள் மின்னூலுக்குப் போதிய விளம்பரம் கிடைக்கும்.
  14. நூலாசிரியரே அவர் மின்னூல்களுக்கான சலுகைகளை உருவாக்கலாம். குறிப்பிட்ட நாட்களில் (உங்கள் பிறந்த நாள், திருமண நாள்) அல்லது வாரங்களில் (தேசிய புத்தக வாரம்) உங்கள் மின்னூலை விலையின்றி (இலவசமாக) வாசகர்கள் தரவிறக்கிக் கொள்ள அனுமதிக்கலாம்.
  15. கிண்டல் அன்லிமிட்டட் என்ற தனிச்சலுகை பெற்ற வாசகர்கள் உங்கள் மின்னூல்களை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். இதனால் உங்கள் மின்னூலுக்கான வாசகர் வட்டம் விரிவடையும்.
  16. தகுதியான அறிஞர்களிடம் உங்கள் மின்னூலை இலவசமாக வழங்கி மதிப்புரை வழங்கும்படி கோரலாம்.
  17. அமேசான் தமிழ் மொழியில் மின்னூல் (ePub) பதிப்பை அனுமதிக்கிறது.
  18. தமிழ் பேப்பர்பேக் (Paperback) நூலை அமேசானில் விற்பதற்கு நூலாசிரியரே தன் சொந்தப் பொறுப்பில் பதிப்பித்து விற்கவேண்டும்.

தொடர்புடைய படம்

உங்கள் கே.டி.பி. கணக்கு மூலம் நீங்கள் நூலைப் பதிவேற்றிய பின், கிண்டலின் தேர்வுக்குப் பிறகு நூல் அமேசான் தளத்திலும் கிண்டல் செயலியிலும் கிடைக்கத் தொடங்கும்.

குறிப்புநூற்பட்டி

  1. அமேசான் கிண்டில் ( KINDLE) தமிழ் புத்தகம்
  2. அமேசான் கிண்டில்: மின்னூல்களை வாசிக்கும் கருவி மாடல்கள் (அறிமுகம்) அகரம் டிசம்பர் 23, 2017
  3. இ புத்தகமும் அச்சுப் புத்தகமும் – ஆறு மனமே ஆறு ஹரன்பிரசன்னா பிப்ரவரி 28, 2018
  4. கின்டெலில் என் முதல் புதினத்தை எழுதுவது எப்படி? விசயநரசிம்மன் கார்த்திகேயன் கோரா
  5. சுரண்டப்படுகிறார்களா எழுத்தாளர்கள். எஸ்.ஆர்.எஸ். தமிழ் இந்து. ஜனவரி 14, 2014
  6. புத்தகங்களின் விலை பத்ரி சேஷாத்ரி டிசம்பர் 18, 2013
  7. மின்கவி https://www.minekavi.com/bio
  8. வீட்டிலிருந்தே இணையத்தில் கலக்கும் ‘ஹோம்ப்ரூனர்’ https://yourstory.com/tamil/899e36076c-mixing-on-the-internet-from-home-39-homprunar-39-
  9. வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்: நீங்களும் பதிப்பாளராகலாம். காம்கேர் கே.புவனேஸ்வரி தமிழ் இந்து டிசம்பர் 17, 2016
  10. Content Guidelines in Kindle Direct Publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G200672390
  11. Create an Account in Kindle Direct Publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G200620010
  12. Create an eBook Cover in Kindle Direct Publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G200645690
  13. eBook Distribution Rights in Kindle Direct Publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G200652410
  14. eBook Manuscript Resources in Kindle Direct Publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G201723130
  15. eBook Royalty Options in Kindle Direct Publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G200644210
  16. Enter eBook Details in Kindle Direct Publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G200644080
  17. Enter Pricing Information in Kindle Direct Publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G200641280
  18. Format a Book in Word: Kindle Formatting February 4, 2015 https://formatbookinword.com/2015/02/04/format-a-book-in-word-kindle-formatting/
  19. Guide to Kindle Content Quality in Kindle Direct Publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G200952510
  20. How do you publish a book on Amazon? https://www.quora.com/How-do-you-publish-a-book-on-Amazon
  21. How to Write a Book in 2019: A Definitive Guide for Writers Bryan Become a Writer Today https://becomeawritertoday.com/how-to-write-a-book/
  22. How to Format eBooks for Kindle using Google Docs https://tamilvarigal.com/how-to-format-ebooks-for-kindle-using-google-docs/
  23. KDP Tools and Resources in Kindle Direct publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G200735480
  24. Prepare Your Book in Kindle Direct publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G201723070#prepare_ebook
  25. Upload and Preview Book Content in Kindle Direct Publishing https://kdp.amazon.com/en_US/help/topic/G200641240

 

About முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.
This entry was posted in இணைய நூலகம், தமிழ் and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to அமேசான் கிண்டில் நேரடி வெளியீட்டில் உங்கள் புத்தகத்தை மின்னூலாக வெளியிடுவது எப்படி?

  1. கரந்தை ஜெயக்குமார் சொல்கிறார்:

    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
    நன்றி

    Like

  2. Dr B Jambulingam சொல்கிறார்:

    இப்பதிவைப் படிப்பவர்கள் எப்படியும் ஒரு நூலை எழுதி, வெளியிட்டு விடுவார்கள் போலுள்ளது. எனக்கும் அந்த ஆர்வம் வந்துவிட்டது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.